Monday 31 May 2021

முத்து குமார ராஜா

ஊருக்கு செல்ல ரயிலேறி இருந்தேன். தாம்பரத்தை தாண்டியதும் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக நண்பர்கள் யாராவது பகிர்ந்த புது படத்தை பார்த்து விட்டு தூங்குவது வழக்கம். கையில் விகடனை புரட்டி கொண்டிருந்தேன்.

கைதட்டல் சத்தம் கேட்டதும் திருநங்கைகள் வருகிறார்கள் என பத்து ரூபாய் எடுத்து வைத்து கொண்டேன். அந்த திருநங்கை என்னை பார்த்து என் பெயர் சொல்லி அழைத்ததும் எனக்கு ஆச்சரியம். எனது முழு பெயரை உச்சரிக்கவும் எனக்கு இன்னும் ஆச்சரியம்.

உற்று பார்த்தேன், முத்து குமார ராஜா தானே என்றேன். ஆமாம் என்பது போல் தலையசைத்தான். உட்காரு பேசலாம் என்றேன். ஏய் கலைக்ஷனுக்கு போகனும் என்றான். கலைக்ஷனை எல்லாரும் ஷேர் பண்ணிப்போம் போகனும் என்றான் பள்ளி தோழன்.

மொத்த கலைக்ஷனையும் நானே தாரேன். உட்காரு என்றேன்.அத்தனை கண்களும் வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தன. எழுந்து வாசல் பக்கம் கூட்டி சென்றேன்.

முத்து குமார ராஜா ஒன்பதாம் வகுப்பில் எனக்கு பின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன்.  பிடி பிரியட் அல்லது ஏதாவது ஆசிரியர் வரவில்லை என்றால் கூட சட்டையை கழற்றி விட்டு விளையாட செல்வோம். அவன் மட்டும் சட்டை கழற்றாமல் தயங்கி நிற்பான்.

அவனுக்கு தேவயானி ரொம்ப பிடிக்கும். அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகை பூ பாட்டை அழகாக பாடுவான். அவனை தேவயானி என்று கூப்பிட சொல்வான். கூப்பிட்டால் சந்தோச படுவான். ஒரு கையால் ஒரு கண்ணை மறைத்து வெட்க படுவான்.

அவன் பக்கத்தில் இருந்த சுந்தரேசன் தான், இது ஒம்போது தொடையில கை வச்சா எப்படி துள்ளுது பாரு என்று நோண்டி கொண்டே இருப்பான்.

பத்தாம் வகுப்பில் நான் வேறு வகுப்பில் இருந்தேன். எப்போதாவது பார்த்தால் சிரித்து கொள்வோம். பத்தாம் வகுப்பிற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.

எப்பிடி இருக்கு. இங்க எப்படி வந்த என்றேன்.ரெண்டும் கெட்டானா பொறந்துட்டேனு அம்மா ரொம்ப அழுதாங்க. தம்பி அடிச்சான். இனிமே அங்க இருக்க முடியாதுன்னு தோனிச்சு வந்துட்டேன் என்றான்.

கல்யாணம் ஆயிட்டுச்சா என்றான். ம் என்றேன். மனைவியின் போட்டோவை பார்க்க வேண்டும் என்றான். போனில் இருந்து காட்டினேன். அழகா இருக்காங்க என்றான்.

எவ்வளவு கலைக்ஷன் ஆகும் என்றேன். குடைஞ்சு குடைஞ்சு கேட்டா 250 ரூபா வரும் என்றான்.  500 ரூபாய் கொடுத்தேன் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டேன்.சென்னையில் ரூமில் தங்கி இருப்பதாக சொன்னான். செல்போன் நம்பர் மாற்றிக் கொண்டோம்‌. 

விழுப்புரத்தில் இறங்கி கொண்டான். நானும் அதற்கு பிறகு அவனை பற்றி யோசிக்கவில்லை. ஒருநாள் டிவியில் கும்மிபாட்டு படம் போட்டான். அவன் நியாபகம் வரவே அலைபேசியில் அழைத்தேன்.

ஏன் போன் பண்ணவே இல்லை என்றேன். பேசலாம்னு ஆசையா இருந்துச்சு போன் பேசற எடத்துல நான் இல்ல. நீ பேசினா பேசலாம்னு விட்டுட்டேன் என்றான். ரொம்ப நேரம்  பேசிய பின் சொன்னான் பெரிய ஹோட்டல்ல போய் சாப்பிடனும் போல இருக்கு. என்ன கூட்டிட்டு போவயா என்றான் தயங்கி கொண்டே.

சரி என்றேன். நிச்சயம் சந்தோச பட்டிருப்பான். நீ யார கூட்டிட்டு வருவ என்றேன். நான் யார கூட்டி வர, என்ன மாதிரி ஒருத்தர தான் கூட்டி வருவேன் என்றான். நீ என்றான். நான் ப்ரெண்ட் ஒருத்தன கூட்டி வாரேன் என்றேன்.

நண்பன் ஜெயகுமாரிடம் சொன்னேன். போகலாம் மாப்ள என்றான். ஹோட்டல் முன்பதிவு செய்து போனோம். செக்யுரிட்டியிடம் எனது கெஸ்ட் என சொல்லி கூட்டி சென்று சாப்பிட்டோம்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போவயா என்றான்.

சரி என்றேன் மறுநாள் கோவிலுக்கு சென்றோம். சாமி கும்பிட்டு உட்கார்ந்தோம் அவர் என்ன டல்லா வரார் எங்க கூட வர்றது பிடிக்கலயா என்று கேட்டு சிரித்தான். அவன் கிறிஸ்டியன் அவனுக்கு கோவிலே புதிது என்றேன்.

அவனும் எதாவது பேச வேண்டும் என்று வேற எதாவது ஆசை இருக்கா என்றான் ஜெய்.

டூர் போணும் என்றான் முத்து. கார் எடுத்துட்டு ஜாலியா போய்ட்டு வருவோம் என்றான் ஜெய்.

ட்ரெயின்ல போணும். நாங்க பிச்சை எடுக்கிற அதே ட்ரெயின்ல உட்கார்ந்து படுத்துட்டு போணும் என்றான் முத்து.

எனக்கு கண்கள் கலங்கி விட்டது. ஜெய் தலையை குனிந்திருந்தான். நிச்சயம் அவனும்...

Sunday 30 May 2021

9/100 கல்வி தடங்கள்

கருவேலமர காட்டு 

ஒத்தையடி பாதையில்

நடந்து சென்றது 

இந்து தொடக்கப் பள்ளிக்கு !

குளத்தின் கரையிலும் 

வற்றினால் குளத்தினுள்ளும் 

நடந்து சென்றது 

காந்தி வித்தியாலயா 

இந்து தொடக்கப் பள்ளிக்கு !

அடுத்தது புனித யோவான்

உயர்நிலை பள்ளி, 

சீருடைகள் அணிந்து 

புத்தகமூட்டை சுமந்து செல்லும்

பலரோடு வாகன இரைச்சல்மிக்க 

தெற்கு பஜாரில் நடந்தது !

கதீட்ரல் முன்பு கடக்க கடினமான

சாலையை கடந்து சென்றது !

3A பேருந்தில் ஏறி செல்ல 

வேண்டும் எனக்கும்,

என்னை சாலையை கடந்து விட 

வேண்டும் என்று அண்ணனுக்கும் 

விதிக்கப்பட்ட நிபந்தனைகள் !

அவன் அதிகம் சாலையை 

கடந்துவிடுவதில்லை 

என்னையொத்த சிறுவனின் 

விபத்தை கேள்விபட்டதிலிருந்து 

தினமும் சாலையை கடந்து விட்டான் !

பெருமாள் புரத்தில் இருந்து 

காலையில் ஒரே பேருந்து 

கிடைத்துவிடும். 

மாலையில் பஸ் பாஸோடு 

பாளை பேருந்து நிலையத்தில் 

5 S/V பஸ் ஏறிவிடுவது !

மகாராஜநகர் தடங்கலில்லா

பேருந்து வழித்தடம் 

நான் ஒன்பதாம் வகுப்பு

வந்திருந்தது !

பள்ளிக்குள்ளே இருக்கும்

விடுதியில் சேர்ந்த பின் 

மதிய உணவுக்கு பின்

பவுடர் பூசி வரக்கூட 

நேரமிருந்தது !

நூருல் இஸ்லாம்

பொறியியல் கல்லூரி

மலையடிவாரத்தில்

சீவி விடப்பட்ட ரப்பர் மரங்கள் 

பூத்து குலுங்கும் தொட்டி  

செடிகளுக்கு நடுவே 

மேலேறி செல்லும் தார் சாலை 

சைட் அடித்து கொண்டே

எல்லாத்துறைகளையும் கடந்தபின் 

உச்சாணியில் எங்கள் துறை 

எந்திர பொறியியல் !

மழைகாலத்தில் மலையில் 

இருந்து விழும் சின்ன 

அருவிகளை பார்த்து கொண்டே 

நடப்போம் மூச்சு வாங்க !!!


























Wednesday 26 May 2021

8/100 கல்லூரி வாழ்க்கை

இயற்கை எழில் கொஞ்சும்

இடத்தில் கல்லூரி அமைவது 

எல்லாருக்கும் வாய்ப்பதில்லை !

விடுதிக்கும் கல்லூரி

வளாகத்துக்குமான இடைவெளியில் 

ஒரு வாய்கால் 

அதில் நீச்சல் கற்றோர் ஏராளம் !

அருகில் இருக்கும் கோவிலுக்கு

அனைவரும் சென்றோம் 

மதங்களை கடந்து !

குளத்தை பார்த்து இருக்கைகள் 

போடப்பட்டிருக்கும் ஸ்வாதி

பூங்காவிற்கு காதலியோடு 

செல்ல எல்லாருக்கும்

கனவிருந்தது !

மேலிருக்கும் கேண்டீனின் 

தேநீருக்கும்

விடுதியிலிருக்கும் கேண்டீனின் 

ஹனி கேக்கிற்கும் மனம் 

ஏங்கி கிடக்கும் !

கிரிக்கெட் விளையாட 

சிமெண்ட் தரை 

கிரிக்கெட் பார்க்க 

தாத்தா கடை !

திங்கட்கிழமையின் புரோட்டாவும் 

ஞாயிற்றுக்கிழமையின் பூரியும் 

விடுதியில் ருசித்தவை !

கல்லூரி நாளும் 

கூடைப்பந்தாட்ட தொடரும் 

கல்லூரியில் ரசித்தவை !

வெல்கம் பார்ட்டிக்கு பிறகு

வித்தியாசமானவர்களாக மாறி 

லேப் விட்டு வெளிவரும் போதே 

யூனிபார்ம் சட்டையை 

வாங்கி போட்டு சென்ற 

அண்ணன்கள் அழகானவர்கள் !

நம்மையும் நம்பி 

புத்தகம் நோட்ஸ் விளக்கம் 

கேட்ட தம்பிகள் 

விவரமானவர்கள் !

ஆட்டோகிராப் என 

நாலு டைரிகளில் எழுதி 

வாங்கி கொண்டு

ஆளுக்கொரு திசையில் 

பயணித்தோம் !

சில திருமணங்களில் சந்தித்தோம் !

வாட்சப்பும் பேஸ்புக்கும் 

இருப்பை காட்டுகிறது !

என்றாவது சந்தித்தால் 

மாப்ள, மச்சான் என்று

பேசிக் கொள்வோம் 

மலரும் நினைவுகளை !!!





























Saturday 22 May 2021

7/100 தலைவன் தோனி

தோளை உரசும் 

முடியோடு தோன்றியவன் 

சென்னை அணி தலைவனான பின் 

எங்களில் ஒருவன் ஆனவன் !

கடைசி ஓவரை 

ஜோகிந்தரை பந்து வீச 

வைத்தது மேலாண்மை !   

பத்திரிக்கையாளரை 

பக்கத்தில் அழைத்து 

பதில் சொன்னது பேராண்மை ! 

விப்போடிய நிலத்தில் 

பெய்த மழையாக இருந்தது 

நீ வென்று தந்த கோப்பை !

நடு ஓவர்களில் மாணிக்கம்

கடைசி ஓவர்களில் பாட்ஷா !

நாட்டாமைகளின் தீர்ப்பை 

மாற்றவல்லது 

தோனி ரிவிவ்யூ சிஸ்டம் !

மகேந்திர சிங் தோனி

கம்ஸ் டு த மிடில் 

இனி கேட்க முடியாது !

தோனி பினிஷஸ் ஆப் 

இன் ஸ்டைல் 

எங்கள் காதுகளில் 

ஒலித்துக் கொண்டே

இருக்கும் !

ஆடுகளத்தில் அமைதியானவன் 

ஓட்டத்தில் புயலானவன் 

ஸ்டம்பிங்கில் பேரரசன் 

தொட்டதை எல்லாம் 

பொன்னாக்கிய மைதாஸ் 

மன்னன் 

ராஞ்சியின் ராஜா 

எங்கள் தலைவன் 

மகேந்திர சிங் தோனி !









Monday 17 May 2021

6/100. ரசனைமிகு பயணங்கள்

அப்பாவோடு கயத்தார் - செட்டிகுறிச்சி 

தனியார் பேருந்தில் 

சென்ற போது அந்த ஓட்டுனர் 

கையில் சிக்கி தவித்த

கியர் ராடு ரசிக்க வைத்தது 

கிறங்கடித்த பயணம் !


முத்து நகர் விரைவுவண்டியில் 

மாலை போட்ட இரு நண்பர்கள்,

இரு இளம் பெண்கள் 

எதிரிருக்கையில் என 

இரண்டாம் வகுப்பில் 

எழும்பூர் வந்தது 

ரசனைமிகு ரயில் பயணம் !


அலுவல் நிமித்தமாக

அலுவலக நண்பருடன் 

புனே சென்றது 

மனதில்  நீங்கா விமான பயணம் !


சத்திஸ்கர் மாநிலத்தில் காடு 

மேடாய் கிடக்கும் 

நெடுஞ்சாலையில் ஆறு 

மணி நேரம் காரில் 

பயணித்தது அழகான பயணம் !


நொய்டாவில் கடும்குளிரில் 

கைரிக்ஷாவில் பயணித்தது

குளிரான பயணம் !


பள்ளி நாட்களில் 

கடன் வாங்கிய மிதிவண்டியில்

காட்டு காளியம்மன் கோவில் 

சென்றது சுகமான பயணம் !


நண்பனின் இருசக்கர

வாகனத்தில் சென்று 

மலையேறி 

மகிழ்ந்த தடா அருவி 

மகத்தான பயணம் !


நீண்ட நேரம் பேருந்து

வரவில்லை என்றால்

தரமணி - வேளச்சேரி 

செல்லும் ஷேர் ஆட்டோ 

சலிப்பான பயணம் !


அதிக சத்தத்தில்

லச்சாவதியே பாடலை 

ஒலிக்க விட்டு குமாரகோயில் விலக்கு -

கல்லூரி வரை ஜீப்பில் தொங்கி 

சென்றது நினைவில்

நீங்கா பயணம் !


தக்கலை - கல்லூரி வரை 

தொங்கியது இல்லையென்றாலும்

அழகி சிற்றுந்தில் சென்றது

சிறப்பான பயணம் !


ரவுடி மணி அப்பாவோட 

தார்கம்பை கையில்

பிடித்தபடி சென்றது 

மாஸான மாட்டு வண்டி பயணம் !


இரவு பணி முடிந்து 

இருள் விலகா காலைகளில் 

ஏதாவது பேருந்து நிலையத்தில்

லாரியில் வந்து இறங்கியது 

இன்பமிகு பயணம் !


மயிலாப்பூர் கோவிலுக்கு 

மனைவியோடு ஆட்டோவில்

பயணித்தது

ஆனந்த பயணம் !


பால்யத்தில் பனங்காய் 

வண்டியில் இலக்கில்லாமல் 

கற்பனையில் பயணித்தது

திகட்டாத பயணம் !!!




























Tuesday 11 May 2021

5/100. சமூகம்

நெகிழிப் பைகள் பயன்பாட்டை

நிறுத்த மாட்டோம்.

நிலத்தடி நீர் சரியில்லை

என சலித்து கொள்வோம் !

மக்கும் மக்காத குப்பை என 

பிரித்து கொடுக்க மாட்டோம்.

நகராட்சி ஊழியர் நேரத்துக்கு 

வரவில்லை என்போம் !

மரங்கள் இல்லா மாநகரில் 

வீடு வாங்கி கொள்வோம்.

ஜன்னல் இருந்தும் காற்று 

வரவில்லை என்போம் !

தனி குடும்பமாய் இருப்போம்.

கூட்டு குடும்ப சீரியல் 

அவலத்தில் கவலை கொள்வோம் !

சமூக இடைவெளி விடமாட்டோம்.

இடைவெளிவிட்டு நிற்பவனை

முந்தி சென்று அவனை 

இளிச்சவாயன் போல் பார்ப்போம் !!!









Friday 7 May 2021

4/100. சென்னையில் கொடுமையான நாட்கள்

நேர்காணலுக்கு சென்று

நிராகரிக்கப்பட்ட நாட்கள் !

தேநீரை காலை உணவாக

 அருந்திய நாட்கள் !

நண்பர்கள் ஒவ்வொருவாய் 

மேன்ஷனை காலி 

செய்ய நாட்கள் !

ஹோட்டலையும் கோவிலையும்

தேடி அலைந்த 

வணிகர் தின மற்றும்

ஆயுத பூஜை நாட்கள் !

பலர் முன்னிலையில்

அலுவலகத்தில் திட்டு 

வாங்கிய நாட்கள் !

முந்தைய நாள் முன்பதிவில்லாமல் 

வந்ததால் கண் 

எரிச்சலான நாட்கள் !

அடுத்த என்ன நடக்கும் 

என்று தெரியாமல் தவித்த 

கனமழை நாட்கள் !

சோகத்தோடு இருந்த 

மனைவி தேற்ற 

வழியற்றிருந்த நாட்கள் !

இவையெல்லாம் சென்னையில் 

எனக்கு கொடிய நாட்கள் !


ஆனால் எதை தொடுவதற்கும் 

பயந்து யாரிடமும் பேச பயந்து 

முகக்கவசம், கையுறை 

கிருமி நாசினி என 

இருக்கும் இந்த நாட்கள் 

கொடூரமானவை !!!

















Thursday 6 May 2021

3/100. வதந்திகள்

 குளத்து மடையில் 

பேய் இருப்பதாக 

சொல்லப்பட்ட வதந்தி தான்

நான் முதலில் நம்பியது !


பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருக்கும்

இடம் ஒரு காலத்தில்

சுடுகாடு என்பது பள்ளி நாட்களில்!


விழுந்த பல்லை சாணிக்குள் 

வைத்து கூரை மேல் எறியாவிட்டால் 

மீண்டும் பல் முளைக்காது !


ஜெயசூர்யா பேட்டில் காந்த சுருள் 

உள்ளதென்றும்

முரளிதரன் கையில்

எந்திர தகடு பதித்துள்ளார்

என்பதும் கிரிக்கெட் வதந்தி !


தேர்வு முடிவுகள் வெளியாகி

விட்டது என்று அடிக்கடி

சொல்லப்படும் கல்லூரியில் !


போனஸ், ஊதிய உயர்வு

அலுவலகத்தில் ஆண்டுதோறும் 

பரப்படும் வதந்தி !


சென்னை மழைக்கு தப்பி 

ஊருக்கு சென்ற

பேருந்தில் பரப்பப்பட்டது 

சென்னையில் மீண்டும் மழை, 

பிழைத்தவர்கள் பஞ்சம் 

பிழைக்க எங்காவது செல்ல 

வேண்டும் சென்னை 

மூழ்கிவிடும் என்று !


கடைசியாக நான் நம்பியது 

வெயில் சுட்டெரிக்கும்

நம் நாட்டில் கோரோனோ 

வைரஸால் உயிர் வாழ முடியாது !!!















Wednesday 5 May 2021

2/100 ஆஸ்பத்திரி

 சிறு வயதில் என்னை 

கூட்டி செல்லும் ஆஸ்பத்திரி.

வாசலை கடக்கும் போதே 

பயம் கவ்வி கொள்ளும்.

உள்ளே நுழைந்ததும்

கனிவான இயேசு நாதர் 

படம் வரவேற்கும் !

அடுத்து தவழும் குழந்தை,

அதற்கடுத்து இயேசு முள் கிரீடம்

சூட்டப்பட்டு இதயத்தை திறந்து 

காட்டும் படம் பயத்தை கூட்டும் !

மருத்துவர் அறையில் 

வாயில் விரலை வைத்து

உஷ்ஷ் என சொல்லும்

குழந்தை படம்.

ஊசி போடும் அறையில்

கன்னத்தில் கண்ணீர் 

வழிந்தோடும் குழந்தை

படம் கண்ணீரை 

வர வைத்து விடும் !

புட்டத்தை தேய்த்து கொண்டே

வெளியே வரும் போது

இயேசு நாதர் படத்தை

கனிவாய் பார்க்க

தோன்றியதில்லை!!!











Tuesday 4 May 2021

1/100 தாத்தா

 குருவி கூட்டை 

கலைக்காமல் வெள்ளையடிக்க 

சொல்வார்.

ஒரு எலியை கூட விடாமல் 

கொன்று கோழிக்கு 

இரையாக்குவார் !


கோழி குஞ்சை தூக்கி 

செல்லும் காக்கையை 

விரட்டி காப்பாற்றுவார்.

கொஞ்சம் வளர்ந்ததும் 

இந்த சேவல் கசமாடனுக்கு 

என்று நேர்ந்து கொள்வார் !


மேய்ச்சலுக்கு செல்லும் போது 

மாட்டை அடித்து விரட்டுவார்.

கண்ணு போடும் தருணத்தில்

கண் விழித்தே கிடப்பார் 

தொழுவத்தில் !


விடிந்த பின் ஈன்ற கன்றின் 

வாசத்தை நுகர்நத பின் தான் 

காப்பி குடிப்பார்.

மற்ற நாட்களில் அதே நேரத்தில்

மூன்று காப்பி குடித்திருப்பார் !


பண்ணையில் விட்ட 

ஆட்டின் குட்டி இறந்துவிட்டால் 

பண்ணையாளோடு சண்டை இடுவார்.

காளை கன்றை கோவிலுக்கு

கொடுத்து விடுவார் !


மடியில் சொக்கலால் பீடியோடு 

சுற்றி வருபவர் 

மரண தருவாயில் கூட 

மருமகளிடம் பீடி பற்றவைத்து

கேட்டவர் !


இறந்த போது குழிக்குள் 

வைக்க சொக்கலால் பீடி 

கிடைக்கவில்லை.

வேறு ஒரு பீடி கட்டு வைத்து 

புதைத்தோம்.

நிச்சயம் திட்டி இருப்பார் 

பேரன்களை !!!