Monday 27 November 2023

ஆவின்

ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது ஆவின் பற்றி. ஆவின் பற்றி எனக்கு தெரிந்தது.

நான் சென்னையில் இருக்கும் போது எனது வீட்டிற்கு எதிரில் புதிதாக ஆவின் பூத் வைக்கப்பட்டது. ஏற்கனவே அருகில் இருந்த முக்கிய சாலையில் ஒரு பூத் இருந்தது. இது உள்ளடங்கிய சாலையில் ஆரம்பிக்கப்பட்ட பூத். ஆனால் ஒரே மாதத்தில் நல்ல வியாபாரம், முழுக்க ஆவின் பொருட்கள் இதர பொருட்கள் சிறிதளவில்.

ஆவினில் பெரிய அளவில் விற்பனையாவது பால்.

1. நீல நிற பாக்கெட் ₹20 (கொழுப்பு 3%)

2. பச்சை நிற பாக்கெட் ₹22 (கொழுப்பு 4.5%)

3. ஆரஞ்சு நிற பாக்கெட் ₹25 (கொழுப்பு 6 - 6.5%)

பூத்களில் இந்த விலை கடைகளில் வேறு விலை இருக்கும்.

சென்ற ஆட்சியில் இருந்ததை விட 1.5 ₹ குறைக்கப்பட்டது இந்த ஆட்சியில். 

அரசு விலை ஏற்றினால் மக்கள் ஓட்டில் கை வைப்பார்கள் என நினைத்து பசும் பால் என பெயரிட்டு 3.5% கொழுப்பு பாலை 22.5₹ க்கு அறிமுகம் செய்தது. 50 காசு செல்லாத நிலையில் 22.5 என்பது எவ்வளவு பெரிய அபத்தம். 

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பச்சை பால் முழுதும் நிறுத்தப்பட்டு இந்த 22.5 ₹ பால் 23 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் பச்சை பால் அளவுக்கு திக்காக இல்லை.

விலை ஏற்றத்தை நேரடியாக சொல்லாமல் முதுகில் குத்தியுள்ளது அரசு. சென்னையில் பிரச்சினை என்றதும் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆவினின் பிற பொருட்கள் - ஐந்து ரூபாய்க்கு சின்ன தயிர் டப்பா கிடைக்கும். இரண்டு பேர் ஒரு நேரம் சாப்பிட போதுமானது. மற்ற தனியார் தயிர் நிறுவனங்கள் 10-20 ரூபாய்க்கு தயிர் டப்பா கிடைக்கும் (எடையும் மாறுபடும்). ஆனால் இந்த ஆவின் சிறிய தயிர் பூத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. சற்றே பெரிய டப்பா என்பது பெரிய அளவில் 25₹ க்கு மேல் கிடைக்கிறது.

பால்கோவாவை பொறுத்தவரை கடைகளில் உள்ளது போல் வெள்ளை நிறமாக இருக்காது. பழுப்பு நிறத்தில் இருக்கும். சுவையும் தரமும் நிறைந்தது. ஆனால் இரண்டு மூன்று நாட்களில் காலாவதி ஆகிவிடும்.

ஆவின் மோர் 14₹க்கு பிளாஸ்டிக் பாட்டிலில் கிடைக்கிறது. இது போக இனிப்புகள், வெண்ணெய், பிஸ்கட் ஆவின் தயாரிப்புகள்.

நெய்யை பொறுத்தவரை ஆவின் நெய் விலை குறைவு. நல்ல தரமானது. ஆனால் சிறிய அளவில் கிடையாது. குறைந்தது கால் லிட்டர் என்ற அளவில். தனியார் நெய் நிறுவனங்களின் டப்பா வாடிக்கையாளர்களை கவரும் வடிவமைப்பு உள்ளது. 

ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் ஆவின் பூத்களில் மட்டுமே கிடைக்கும். பாலை தவிர இதர தயாரிப்புகள் வேறு கடைகளில் கிடைப்பது அரிது.

அமுலுக்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் அமுல் பால் பவுடர் வாங்கி கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. ஆனால் அமுலின் வளர்ச்சி பயங்கரமாக உள்ளது. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு ஸ்பான்ஸர் அமுல் நிறுவனம்.

அமுல் நிறுவனத்தின் குக்கீஸ் தமிழ்நாட்டில் நிறைய சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆவினின் குக்கீஸ் பற்றி தமிழக மக்களுக்கே தெரியாது.

அரசு பால் விலை ஏற்ற வேண்டும் என்றால் மக்களிடம் நேரடியாக சொல்வது நல்லது. மக்களுக்கு தெரியும், தனியார் பால் விலை பற்றி. கவரின் கலரை மாற்றி கொழுப்பு சத்து விகிதத்தை மாற்றி மோசடி செய்வது அயோக்கியத்தனம்.

Saturday 25 November 2023

தோரணமலை முருகன் கோவில்

தோரணமலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது. தென்காசியில் இருந்து 18 கிமீ, திருநெல்வேலியில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது.

தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள் வழிபட்டதலம். தேரையர் அறுவைச் சிகிச்சை செய்த மலையில் தான் இந்த கோவில் உள்ளது. 



ஆன்மிக ஆர்வமும், மலையேறும் ஆர்வமும் உள்ளோர் தாராளமாக செல்லலாம். செங்குத்தான படிகள் என்பதால் மூச்சு வாங்கும். படிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு எடுத்து செல்ல நிழற்குடை போன்ற மண்டபங்கள் உள்ளது.

மலையடிவாரத்தில் வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது. குளியலறை, கழிப்பறை வசதி உள்ளது. ஒரு சிறிய கடையில் பழம், பூ கிடைக்கும்.

கீழே இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு விட்டு மலையேற துவங்கும் இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் மண்டபம். மலையேற துவங்கியதும் மூச்சு வாங்கும், நின்று நின்று மலையை, மரங்களை ரசித்து சென்றால் நன்றாக இருக்கும்.

அருணகிரிநாதர் மண்டபத்தில் இருந்து 249 படிகள் (படிகள் நான் எண்ணியது, ஒன்றோ இரண்டோ கூட குறைய இருக்கலாம்) ஏறினால் நக்கீரர் மண்டபம் உள்ளது.

நக்கீரர் மண்டபத்தில் இருந்து 187 படிகள் ஏறினால் தேரையர் மண்டபம் வரும். தேரையர் மண்டபத்தில் இருந்து 207 படிகள் ஏறினால் அகத்தியர் மண்டபம் வரும். இதற்கு பிறகு மலை ஏறிவது எளிதாக தோன்றும் (பழகிவிடும்).



அகத்தியர் மண்டபத்தில் இருந்து 175 படிகள் ஏறினால் பாலன் தேவராயர் மண்டபம் வரும். பாலன் தேவராயர் மண்டபத்தில் இருந்து 157 படிகள் ஏறினால் ஔவையார் மண்டபம் வரும். ஔவையார் மண்டபத்தில் இருந்து பார்த்தாலே கோவில் தெரியும்.
ஔவையார் மண்டபம் அருகில் குடி தண்ணீர் வசதி உள்ளது. ஆனால் முழுமையாக செயல்படுகிறதா என்று தெரியவில்லை. குடிதண்ணீர் கொண்டு செல்வது சிறந்தது.
ஒளவையார் மண்டபத்தின் அருகில் ஒரு லிங்கம் உள்ளது. அதிலிருந்து 100 அடி தூரத்தில் தேரையர் ஜீவ சமாதி அடைந்த இடம் உள்ளதாக சொன்னார்கள். ஆனால் அங்கு செல்ல சரியான பாதை இல்லை.

ஔவையார் மண்டபத்தில் இருந்து 117 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். சிறிய கோவிலில் முருகன் அருள் பாலிக்கிறார். முருகன் கோவிலுக்கு அருகில் சிறிய காளியம்மன் கோவிலும் உள்ளது. அழகான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தேரையர் மருந்து அரைத்த பாறை பள்ளங்கள் உள்ளது. ஒரு சுனை உள்ளது, சுனை தண்ணீரில் மூலிகைகள் கலந்திருப்பதாக சொன்னார் கோவில் பூசாரி.



சுனையில் இருந்து தண்ணீர் இறைக்க வாளியும், கயிறும் உள்ளது. பாலன் தேவராயர் மண்டபத்தின் அருகில் இன்னொரு சுனை உள்ளது.

தவறாமல் கொண்டு செல்ல வேண்டியது வியர்வையை துடைக்க துண்டு, கர்சீப் போன்றவை மற்றும் குடி தண்ணீர்.

Friday 24 November 2023

ரஹ்மானுல்லா குர்பாஸ்

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சதமடித்த ஒரே ஆப்கானியர். 

2019ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2021ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.



2019ல் லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் 52 பந்துகளில் 79 ரன்கள் (6x4 5x6) அடித்து ஆட்டநாயகன் ஆனார்.

2021ல் அபுதாபியில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டியில் 45 பந்துகளில் 87 ரன்கள் (6x4 7x6) குவித்து ஆட்டநாயகன் ஆனார்.

2022ல் பெல்பாஸ்ட்ல் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டியில் 35 பந்துகளில் 53 ரன்கள் (8x4 1x6) குவித்து ஆட்டநாயகன் ஆனார்.

2022ல் சார்ஜாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக 45 பந்துகளில் 84 ரன்கள் (4x4 6x6) குவித்து ஆட்டநாயகன் ஆனார். இந்த போட்டியில் இலங்கை அணியே வெற்றி பெற்றது.

2021ல் அபுதாபியில் தான் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 127 பந்துகளில் 127 ரன்கள் (8x4 9x6) குவித்து ஆட்டநாயகன் ஆனார்.

2022ல் தோகாவில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 127 பந்துகளில் 103 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் ஆனார்.

2022ல் சட்டோகிராமில் நடைபெற்ற பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 110 பந்துகளில் 106* ரன்கள் அடித்து ஆட்டநாயகன் ஆனார்.

2023ல் சட்டோகிராமில் நடைபெற்ற பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 125 பந்துகளில் 145 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் ஆனார்.

ஒருநாள் போட்டி சதங்கள்

1. எதிர் அயர்லாந்து, 2021, 127, அபுதாபி 
2. எதிர் நெதர்லாந்து, 2022, 103, தோகா
3. எதிர் பங்களாதேஷ் 2022, 106*, சட்டோகிராம் 
4. எதிர் பங்களாதேஷ் 2022, 145, சட்டோகிராம் 
5. எதிர் பாகிஸ்தான் 2023, 151, ஹம்பன்டோட்டா

டி20 போட்டி அரை சதங்கள் 

1. எதிர் ஜிம்பாப்வே, 2019, 61, சட்டோகிராம்
2. எதிர் வெஸ்ட் இண்டீஸ், 2019. 79, லக்னோ 
3. எதிர் ஜிம்பாப்வே, 2021, 87, அபுதாபி
4. எதிர் அயர்லாந்து, 2022, 53, பெல்பாஸ்ட் 
5. எதிர் இலங்கை, 2022, 84, சார்ஜா

குர்பாஸ் 2022 ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 2023ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இரண்டு அரைசதங்களை அடித்தார்.

2023 உலகக் கோப்பையிலும் எல்லா போட்டிகளிலும் துவக்கம் கொடுத்தார். இரண்டு அரைசதங்களை அடித்தார்.



சிறிய அணியில் இருந்து பெரிய சாதனைகள் செய்ய காத்திருக்கும் ரஹ்மானுல்லா குர்பாஸ்க்கு இன்று வயசு 22 ஆகிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குர்பாஸ் !!!





Sunday 19 November 2023

ஆசிய கிரிக்கெட்டில் அரசியல்

இந்தியா தோற்றதும் அரசியல் தான் காரணம் என்று நிறைய பேர் சொல்லி வருகிறார்கள். அரசியலும் காரணம் தான்.

இந்த உலகக் கோப்பையில் ஆசிய கிரிக்கெட்டில் நடந்த அரசியல் பற்றி

பங்களாதேஷ்:

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே பங்களாதேஷ் கேப்டன் தமீம் இக்பால், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு பிறகு பங்களாதேஷ் பிரதமர் தமீமை அழைத்து பேசிய பின் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்று அணியில் தொடர்வதாக சொன்னார்.

பங்களாதேஷ் ஷகீப்பை கேப்டனாக அறிவித்தது. ரொம்ப நாளைக்கு பிறகு தான் பங்களாதேஷ் உலகக் கோப்பை அணியை அறிவித்தது. தமீம் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவரை அணியில் சேர்க்க ஷகீப் விரும்பவில்லை. கோச் வற்புறுத்த அவர் மிடில் ஆர்டரில் ஆட வந்தால் சரி என்று சொன்னார் ஷகீப்.

தமீம் மறுக்க, தமீம் அணியில் சேர்க்கப்படவில்லை. 

உலகக் கோப்பையின் போது கொல்கத்தாவில் இருந்து ஷகீப் விதிமுறைகளை மீறி வீட்டிற்கு சென்று வந்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.


பாகிஸ்தான்:

உலகக் கோப்பை அணி தேர்வு செய்த பின் தேர்வு குழுத் தலைவர் இன்சமாம், இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதில் ரிஸ்வானும் ஒரு பங்குதாரர். இன்சமாம் தனது மருமகன் இமாமை அணியில் தேர்வு செய்தார்.

உலகக் கோப்பை போட்டிகளின் போது இன்சமாம் தன் மீதான குற்றம் நிரூபிக்கபட்டால் பதிவு விலகுவதாக சொன்னார்.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு குழு தலைவராக வகாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை:

இலங்கை வீரர்களுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பழைய வீரரான மேத்யூஸை அணிக்கு கொண்டு வந்தனர். டேப் ரிக்காரில் சிக்கும் கேசட்டை ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் போட்டால் கொஞ்ச நேரம் பாடிவிட்டு டேப்பை அறுத்துவிடுமே, அதுபோல் ஆனது மேத்யூஸை சேர்த்தது.

இலங்கையின் அணியின் செயல்பாட்டை பார்த்து இலங்கை அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்டு செய்தது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியில் சீனியர் வீரர், சென்ற உலகக் கோப்பை கேப்டன் குல்பதீன் நயீப்பை அணியில் சேர்க்கவில்லை. டிராவலிங் ரிசர்வ் ஆக இருந்தார். நடுவில் ஆசிய போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று ரன்னர் அப் ஆக்கினார்.

வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற போவதாக அறிவித்தார். உலகக் கோப்பைக்கு முன் 7 போட்டிகளிலும் உலகக் கோப்பையில் 8 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 24 ‌வயதான நவீன்.

இந்தியா :

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக அரசியல் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருப்பது வாடிக்கை. உதாரணமாக சரத் பவார்.

ஆனால் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய பதவி ஏற்ற பின் பேரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜெட்லி மைதானம் ஆனது. சர்தார் பட்டேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் ஆனது.

மும்பை கோட்டா, ராகுல் டிராவிட் சிபாரிசு என அணித்தேர்வு இருந்தாலும் அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. 

100 கோடி பேர் உள்ள நாட்டில் 150 கிமீ வேகத்தில் பந்துவீச ஆள் கிடையாது. இடதுகை துவக்க ஆட்டக்காரர் கிடையாது. பகுதி நேர பந்து வீச்சாளர் கிடையாது என்பதே மாபெரும் அரசியல். 

வெற்றி பெற்றால் அரசியல் வெளியே தெரியாது. தோல்வி அடைந்ததால் அரசியல் தெரிகிறது.

Friday 17 November 2023

ஆர் ஆர் கார்த்திக்

தூசான் குழாய் வடிவமைப்பு துறையில் கடைசியாக உடைந்த / உடைக்கப்பட்ட தூண் ஆர் ஆர் கார்த்திக்கிற்கு ஒரு மடல்.

இவரை முதன்முதலாக பார்த்தது, சேத்துப்பட்டு எங்களின் தீவில் நாலாவதாக இணைந்தார். அணிக்கு புது வரவு, அலுவலகத்திற்கு பழைய ஆள். பங்க் தலை முடி, குளிர் மூக்கு கண்ணாடி, மதுரை மொழி பேசாத மதுரைக்காரன். அசல் வடக்கனாக கண்களுக்கு தெரிந்தார்.

பூந்தமல்லி அலுவலகத்தில் முப்பரிமாண வரைகலையில் பட்டைய உரிக்க தொடங்கிய காலத்தில் ஒளிர துவங்கினார் கார்த்திக்.

ஹிந்தி, சவுராஷ்டிரா என்று பல மொழிகள் தெரிந்த வித்தகன். பார்ட்னரோடு நெருக்கம், பாலா சாரோடு முட்டல்கள் என்று பயணித்தார். சக்கர வியூகங்களுக்கு சிக்காமல் பயணித்தார்.

முப்பரிமாண வரைகலையை தாண்டி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பண பதிவில் இவர் தான் முன்னோடி. ஆண்டுதோறும் பங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி என்று துறைத்தலைவர் இவரிடம் தான் எத்தனை சதவீதம் எதில் என்று விளக்கம் அளிப்பார்.

பணியின் போது சோர்வு ஏற்பட்டால் இவர் இருக்கும் பக்கம் சென்று வந்தால் புத்துணர்வு கிடைக்கும்.

எப்போது சென்றாலும் நொறுக்கி தீனி இவரிடம் கிடைக்கும். அதுவும் வெவ்வேறு வகையில்.

முப்பரிமாண வரைகலையில் இவர் மட்டும் எப்படி இப்படி வேகமாக செயல்படுகிறார் என்று பிறர் வியப்பது உண்டு. மேலிடத்தை கையாள்வதிலும் வல்லவர்.

இவரின் சிறப்பியல்புகளில் ஒன்று பட்டப்பேர் வைப்பது. குறிப்பாக பீகாரி, பிச்சை போன்ற பெயர்கள்.

அணி சிதைந்து, அலுவலகம் உருக்குலைந்து போன நிலையிலும் பிடித்து தொங்கினார். ஆலமரம் வீழந்துவிட்ட பிறகு அடுத்த மரம் தேடி போகிறார். வாழ்த்துக்களும் வணக்கங்களும்.


Thursday 16 November 2023

வருத்தம்

குர்பாஸ் சதமடிக்கவில்லை
என்பது வருத்தமில்லை
ஆப்கான் ஆஸ்திரேலியாவிடம்
அடி பணிந்தது
வருத்தமே !

பாகிஸ்தான் வெளியேறியது
வருத்தமில்லை
பாபர் கேப்டன்சி போனது
வருத்தமே !

நியூசிலாந்து அரை இறுதியில்
தோற்றது வருத்தமில்லை
வில்லியன்சனின்
வறட்டு புன்னகை
வருத்தமே !

தென்னாப்பிரிக்கா அடி
வாங்கியது வருத்தமில்லை
ஆஸ்திரேலியாவை
நம் தலையில்
கட்டிவிட்டான் என்பது
வருத்தமே !!!




Sunday 12 November 2023

ஆப்கானிஸ்தான் - உலகக் கோப்பை

ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் சிறப்பான பயணித்துள்ளது. 4 வெற்றி 5 தோல்வி என முடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் பலம், பலவீனம் பற்றி ஒரு ரசிகனின் பார்வை.



ஆப்கானிஸ்தான் அணி எந்த அணியுடனும் 300+ ரன்கள் அடிக்கவில்லை. அதே சமயம் எந்த அணியையும் 300+ அடிக்கவிடவில்லை.

இந்தியாவுடன் அதிகபட்ச ரன் அடித்த அணி நியூசிலாந்து 273. ஆப்கானிஸ்தான் அடித்தது 272.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இப்ராஹிம் ஷர்தான் முதல் ஓவரில் இருந்து 50வது ஓவர் வரை பேட்டிங் செய்தார்.

9 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மொத்தமாக ஸ்பின் 266.5 ஓவர்களை வீசியுள்ளது ( 1601 பந்துகள்)

அஸ்மத்துல்லா ஓமர்சாய்: ஒரு ஆல்ரவுண்டராக ஓமர்சாய் எழுச்சி சிறப்பானது. பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டால் முகமது நபியின் ஓய்வுக்கு பின் அவரது இடத்தை நிரப்ப அருமையான வாய்ப்பு.

ரஷீத் கான்:

ரஷீத்கான் பல கிளப் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவரது பந்து வீச்சை எளிதாக கணித்துவிட்டனர் பேட்ஸ்மேன்கள். நிறைய விக்கெட் எடுக்காவிட்டாலும் கட்டுக்கோப்பாக பந்து வீசினார். பேட்டிங்கில் இன்னும் முன்னேறினால் முழுமையான ஆல்ரவுண்டராக மாறலாம்.

ஹஸ்மத்துல்லா ஷாகிதி: 

ஷாகிதி பேட்ஸ்மேனாக நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆசியக் கோப்பையில் பெரிய அளவில் ஆடவில்லை. உலகக் கோப்பை சேசிங்ல் சிறப்பான பங்களிப்பை தந்தார்.

பீல்டராக ஷாகிதி, நிறைய கேட்ச்களை தவறவிட்டார். பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும்.

கேப்டனாக ஷாகிதி இன்னும் முன்னேற வேண்டும். பந்துவீச்சு மாற்றத்தை சிறப்பாக கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தற்போது நபி உதவினாலும் நபியின் ஓய்வுபின் இவர் தான்.

இப்ராஹிம் ஷர்தான்:

துவக்க ஆட்டக்காரராக சிறப்பாக ஆடினார் இப்ராஹிம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சதம், பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் என பட்டைய கிளம்பினார். குர்பாஸ் உடன் விளையாடும் போது ஓடி ரன் எடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். குர்பாஸ் அவுட் ஆனால் இவர் தான் அடித்து ஆட வேண்டும், மெதுவாக ஆடுவது இறுதியில் பெரிய ஸ்கோரை தராது.

கம்மின்ஸ் பந்தில் அடித்த சிக்ஸ் கண் கொள்ளா காட்சி.

ரஹ்மத் ஷா:

உலகக் கோப்பையில் பார்மக்கு வந்துவிட்டார். பொறுமையாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னையில் அடித்த சிக்ஸ் ஹைலைட். அனுபவத்தோடு தனது பார்மையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பந்து வீச்சில் பயிற்சி செய்தால் பகுதி நேர பந்து வீச்சாளராக மிளிரலாம்.

நூர் அகமது :

இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். விக்கெட் எடுக்கும் திறனை முன்னேற்ற வேண்டும். வைடு பந்துகளை குறைக்க வேண்டும்.

இக்ரம் அலிஹில்: 

முதல் போட்டியில் சப்ஸ்டியூட் விக்கெட் கீப்பராக இறங்கிய, இக்ரமுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்து எதிரான போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட் கீப்பிங்கில் கலக்கினார். குறிப்பாக நெதர்லாந்து போட்டியில் கீப்பர் கீப்பர்னு கத்தி ரன்அவுட் செய்தார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ்:

துவக்க ஆட்டக்காரர், அதிரடி ஆட்டக்காரர். இரண்டு போட்டியில் அரைசதம் அடித்தார் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி. ஓடி ரன் எடுப்பதில் சிறப்பானவர். விக்கெட் கீப்பர் என்ற சுமை இல்லை. விரைவாக அவுட் ஆவது தான் பலவீனம்.

முஜீப் உர் ரஹ்மான் :

எல்லா போட்டிகளிலும் துவக்க பந்து வீச்சாளர். பந்து வீச்சுக்கு கை கொடுக்காத களங்களில் கூட சமாளித்தார். பீல்டிங்கில் முன்னேற வேண்டும். குறிப்பாக மேக்ஸ்வெல்க்கு இவர் விட்ட கேட்ச் வரலாற்று தவறு.

நவீன் உல் ஹக் & பஸல்ஹக் பரூக்கி

வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் ஓரளவுக்கு சிறப்பாக துவக்கினாலும், இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக வீசவில்லை. நவீன் ஓய்வு பெற்று விட்டார். பரூக்கி தான் இனி வேகப்பந்து வீச்சை தலைமை ஏற்று நடத்த வேண்டும்.

முகமது நபி : ஆல்ரவுண்டரான நபியின் பந்துவீச்சு ஓரளவுக்கு எடுப்பட்டது. பேட்டிங் முற்றிலும் சொதப்பல். வயதும் காரணமாக இருக்கலாம்.

நஜிபுல்லா ஷர்தான் : இரண்டு போட்டிகளில் பேட்டிங் சொதப்பியதால் நீக்கப்பட்டார். சப்ஸ்டியூட் பீல்டிங் செய்தார். சீனியர் என்பதால் பார்ம்க்கு கூடிய விரைவில் திரும்ப வேண்டும்.




Friday 10 November 2023

ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடியது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு போட்டியில் கூட ஆடாத ரியாஸ் ஹசன் மற்றும் அப்துல் ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
(முன்னதாக ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம் மழையால் நடைபெறவில்லை )



ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இதுதான். ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய தொடங்கியது.

மெதுவாக ஆட தொடங்கி, வழக்கம் போல இருபதுகளில் முதல் விக்கெட்டாக வீழந்தார் குர்பாஸ். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது.

நம்பிக்கையான பார்ட்னர்ஷிப் ஓமர்சாய் - ரஷீத்கான் மற்றும் ஓமர்சாய் - நூர் அகமது பார்ட்னர்ஷிப். ஓமர்சாய் நேர்த்தியாக விளையாடினார் சதத்தை தவறவிட்டார். ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரிடம் அடிப்பது சிரமம் என்ற பாடத்தை பயின்றிருப்பார் ஓமர்சாய்.

ஓமர்சாய்காக இரண்டு சிங்கிள் எடுத்து தந்த நவீன் உல் ஹக் பாராட்டப்பட வேண்டியவர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பெரிய அளவில் சாதிக்கவில்லை இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அதே சமயம் தென்னாப்பிரிக்காவை எளிதாக வெல்லவிடவில்லை.

11 ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தினாலும் ஆட்டத்தை தன் வசம் இழுத்தது ஆப்கானிஸ்தான். முதல் முறையாக ஏழாவது பந்து வீச்சாளராக ரஹ்மத் ஷா பந்துவீசிய ரஹ்மத் ஷா பந்துவீச்சு எடுபடவில்லை.

தோற்று போனாலும் நல்ல முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டிய அணி ஆப்கானிஸ்தான்.

Tuesday 7 November 2023

ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா

அரை இறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இருந்த ஒரு வாய்ப்பு என்று அமைந்த போட்டி. 5 முறை சாம்பியன் ஆன அணிக்கும், உலகக் கோப்பையில் மொத்தமாக 5 போட்டிகள் வென்ற அணிக்குமான போட்டி.

ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பரூக்கிக்கு பதிலாக நவீன் அணிக்கு திரும்பினார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்மித் அணியில் இல்லை.

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ரன் 300க்கும் மேல். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி மெதுவாகவே ஆட்டத்தை தொடங்கியது. குர்பாஸ் 21 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் இப்ராஹிம் பொறுமையாக விளையாடி 50 ஓவர்களும் களத்திற்கு நின்று 291 ரன்கள் எடுக்க உதவினார். ரஷீத்கானின் கடைசிகட்ட அதிரடி குறிப்பிடத்தக்கது.

291 இந்த மைதானத்தில் குறைந்த ஸ்கோர் தான். ஆனால் ஆப்கானிஸ்தான் சிறப்பாக தொடங்கியது. நவீன் உல் ஹக் பந்து வீச்சு எடுத்ததும், இன்னொரு வேகப்பந்து வீச்சாளரான ஓமர்சாயை பந்து வீச அழைத்தார் ஷாகிதி கை மேல் பலன் கிடைத்தது. ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்தது.

அதற்கு பிறகு ரஷீத்கான் இன்னும் 2 விக்கெட் எடுக்க ஆட்டம் ஆப்கானிஸ்தான் வசம் வந்தது. ஸ்டார்க் பேட்டில் படாமல் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் அவுட்டில் இருந்து தப்பித்தார். ஷாகிதி, ரஷீத்கான் தவற விட்ட மேக்ஸ்வெல் கேட்ச் ஸ்டார்க் விக்கெட்டுக்கு சரியாக போச்சு என்றாலும், முஜீப் விட்ட கேட்ச் ஆட்டத்தை முடித்து விடும் வல்லமை பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் போட்டியை தோற்க்கடித்த கேட்ச் என்ற லிஸ்டில் இருந்த உசாமா மிர்க்கு பெரிய ஆறுதல் முஜீப்.

ஒரு ஆஸ்திரேலியனை சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார் மேக்ஸ்வெல். போட்டி ஆப்கானிஸ்தான் - மேக்ஸ்வெல் எதிரான போட்டி. 

202 ரன் பார்ட்னர்ஷிப்பில் 12 ரன்கள் மட்டுமே கம்மின்ஸ் பங்கு. கம்மின்ஸ்ன் பொறுமை குறிப்பிடத்தக்கது என்றால் மேக்ஸ்வெல் வரலாற்றில் எழுத பட வேண்டியவர், எழுதியும் விட்டார்.

முகமது நபியை கொஞ்சம் முன்னதாகவே பந்து வீச அழைத்திருக்கலாம். மேக்ஸ்வெல் அதிரடியை தொடங்கிய போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சில ஓவர்கள் கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஒற்றை காலில் வலியோடு அணியை தூக்கி மேக்ஸ்வெல் முன்னால் வியூகங்கள் வென்றிருப்பது சந்தேகமே. ஆப்கானிஸ்தான் அணியின் தரத்திற்கு ரஷீத்கான் அடித்த 35 என்றால், ஆஸ்திரேலியாவின் தரத்திற்கு மேக்ஸ்வெல்லின் 201.

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சாம்பின்ஸ் டிராபி அல்லது அடுத்த உலக் கோப்பையில் அமையலாம். அது வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் வெற்றிக்கு காத்திருக்க வேண்டும் ‌

Monday 6 November 2023

ஏஞ்சலோ மேத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக களத்திற்கு நேரத்திற்கு வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகி உள்ளார்.



கிரிக்கெட் விதிமுறைகளின்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி அல்லது காயம் காரணமாக வெளியேறினால் அடுத்த பேட்ஸ்மேன் இரண்டு நிமிடங்களுக்கு பந்தை எதிர் கொள்ள வேண்டும்.

மாத்யூஸ் இரண்டு நிமிடங்களுக்குள் களத்திற்கு வந்துவிட்டார். ஆனால் ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் வேறு ஹெல்மெட் எடுத்து வர சொன்னார். அதற்குள் பங்களாதேஷ் கேப்டன் கால தாமதம் குறித்து அப்பீல் செய்தார். மாற்று வீரர் ஹெல்மெட் கொண்டு வருவதற்குள் காலம் கடந்ததால் அவுட் அறிவிக்கப்பட்டது.

மேத்யூஸ், ஷகீப்பிடம் பேசிய பின்பும் அவர் வாபஸ் பெறவில்லை.

ஷகிப் செய்தது அறமா ? என்றால் அறமே. இங்கு மேத்யூஸ் ஹெல்மேட்டை செக் பண்ணாமல் வந்தது சோம்பேறித்தனத்தின் உச்சம் அல்லவா. ஒரு கிரிக்கெட் வீரர் தனக்கான உபகரணங்களை கூட சரியாக சோதித்து பார்க்காமல் இருப்பது மடத்தனம் அல்லவா. மாற்று வீரர் கொண்டு வரும் ஹெல்மெல்டிலும் பிரச்சினை இருந்தால்...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் களத்திற்கு வந்து தான் தலையில் துணி கட்டுவார். சந்தர்பால் பெயில்ஸை எடுத்து தரையில் குத்தி தான் ஆட்டத்தை தொடங்குவார். அதெல்லாம் பிரச்சினை ஆனதில்லை. இங்கே ஒரு வீரரின் அலட்சியமே ஆப்பு வைத்துள்ளது.

மேத்யூஸ் அவுட் இளம்வீரர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.

Saturday 4 November 2023

ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து

ஆப்கானிஸ்தானுக்கு லக்னோ ஒரு காலத்தில் ஹோம் கிரவுண்ட். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி விளையாடி மூன்றிலும் தோற்றிருந்தது. இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து போட்டி லக்னோவில், ஒப்பிட்டு அளவில் ஆப்கானிஸ்தானை விட பலம் குறைந்த அணி நெதர்லாந்து. டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணியும் கூட.

நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எதிரணியை மடக்குவது தான் அவர்களது பலம். ஆப்கானிஸ்தான் முதல் ஓவரிலே ஒரு விக்கெட் எடுத்தது. அதற்கு பிறகு தவுத் மற்றும் ஆக்கர்மேன் சிறப்பாக ஆடினர். தொடர்ந்து ரன் குவிக்கவும் செய்தனர்.



12வது ஓமர்சாய் 19 டைரக்ட் ஹிட் அடிக்க அவுட் ஆனார் தவுத். எல்லா புகழும் கீப்பர் இக்ரமுக்கு. அவர் ஸ்டம்பை விட்டு விலகி நின்றது தான் காரணம். இக்ரம் சென்ற போட்டியில் காயம் காரணமாக பீல்டிங் செய்யாததால் இந்த போட்டியில் தாறுமாறு பர்பாமென்ஸ் காட்டினார்.

குறிப்பாக நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் பந்து எங்கு சென்றது என்று பார்ப்பதற்குள் ரன்அவுட்டாக்கினார். அதே போல் ஏங்கல்பிரசெட் ரன்அவுட்டிலும் கீப்பர், கீப்பர் என்று கத்தி பந்தை வாங்கினார். கீப்பரிடம் பந்து வந்தால் பந்து கை நழுவி போகாது, எவ்வளவு வேகமாக வந்தாலும் பிடித்துவிடலாம்.

இக்ரம் ரெண்டு கேட்ச் ஒரு ஸ்டம்பிங் செய்தார். நாலு ரன்அவுட்களால் நெதர்லாந்து அணி 179க்கு ஆல்அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் வழக்கம் போல் ஆடியது. அம்பயர் வைட் கொடுத்தாலும் கையுறையை உரசியதை கவனித்த எட்வர்ட்ஸ் உடனடியாக ரிவ்யூ சென்றார். குர்பாஸ் விக்கெட் முக்கியமானது என்பதால்.

இப்ராஹிம் விக்கெட்டை வீழ்த்தினாலும் இலக்கு சிறியது என்பதால் ஆப்கானிஸ்தான் மெதுவாக முன்னேறியது. ரஹ்மத் ஷா இன்னொரு அரைசதத்தை தன்வசம் ஆக்கினார். ஆட்டமிழக்காமல் இன்னொரு வெற்றி தன்வசம் ஆக்கினார் கேப்டன் ஷாகிதி.

இன்னும் தன்னம்பிக்கையோடு பயணித்தால் ஆப்கானிஸ்தான் உச்சத்தை அடையலாம்.

Friday 3 November 2023

உலகக் கோப்பை - சுவாரஸ்ய தகவல்கள்

1. அதிக வயதான வீரர் - வெஸ்லி பரேஸி - நெதர்லாந்து - 39 வயது

2. இதுவரை ஆல்அவுட் ஆகாத அணி - இந்தியா

3. அதிக உயரமான வீரர் - மேக்ரோ யென்சன் - தென்னாப்பிரிக்கா - 206 செமீ

4. மாற்று வீரராக களம் இறங்கியவர் - உஸாமா மிர் (சதாப் கானுக்கு பதிலாக)

5. துவக்க ஆட்டக்காரர்களை மாற்றாத அணிகள் ஆப்கானிஸ்தான் (குர்பாஸ்* - இப்ராஹிம்), பங்களாதேஷ் (டான்ஸிட் ஹசன் - லிட்டன் தாஸ்), இங்கிலாந்து (போர்டஸ்டோ - மாலன்)

6. குறைவான ஸ்பின்னர்களை பயன்படுத்திய அணி - ஆஸ்திரேலியா (ஸாம்பா மற்றும் மேக்ஸ்வெல்)

7. உயரம் குறைந்த வீரர் - முஸ்பிகூர் ரஹீம் - பங்களாதேஷ் - 162 செமீ

8. எல்லா போட்டிகளிலும் முதல் ஓவர் வீசிய பந்து வீச்சாளர்கள் - ஜஸ்பிரீட் பும்ரா - இந்தியா, மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா, ஆர்யன் தத் - நெதர்லாந்து

9. பந்து வீசிய கேப்டன்கள் - ஷகிப் அல் ஹசன் - பங்களாதேஷ், பேட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா, துசன் ஸானக - இலங்கை.

10.  குறைவான வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய அணி - ஆப்கானிஸ்தான் - பரூக்கி, நவீன் உல் ஹக், ஓமர்சாய்

11. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியின் 11 பேட்ஸ்மேன்களும் வலது கை பேட்ஸ்மேன்கள்.

12. உலகக் கோப்பை போட்டிகளில், சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமா வீரர் - சைபிராண்ட் எங்கல்ப்ரட் - நெதர்லாந்து

13. அதிக வீரர்களை பயன்படுத்திய அணி - இலங்கை - 18 வீரர்கள்

14. ஆஸ்திரேலியா (மிட்செல் ஸ்டார்க்) , நெதர்லாந்து ( வாண்டர்மெர்வ்) - ஒரே ஒரு இடதுகை பந்து வீச்சாளரை பயன்படுத்திய அணிகள்.

15. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளில் யாரும் இன்னும் சதம் அடிக்கவில்லை.

16. குறைவான வீரர்களை பயன்படுத்திய அணி - ஆப்கானிஸ்தான் - 13 வீரர்கள்

17. சதமடித்த ஒரே கேப்டன் - ரோகித் சர்மா - இந்தியா

18. தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் மட்டும் 6 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. மற்ற போட்டிகளில் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே.

19. லோயர் மிடில் ஆர்டரில் இறங்கி சதமடித்த வீரர் - மகமதுல்லா - பங்களாதேஷ். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 வது வீரராக களம் இறங்கி 111 ரன்கள் அடித்தார்.

20. பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியில் பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் வலதுகை பந்து வீச்சாளர்கள்.

21. வெற்றி பெற்ற சேசிங்ல் அதிகபட்ச ரன் குவித்த வீரர் - டிவோன் கான்வே - நியூசிலாந்து - 152*

22. அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனுபவமுள்ள வீரர் - விராட் கோலி - (281 போட்டிகள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்)

23. குயின்டன் டீ காக், 7 போட்டியில் 4 சதங்கள் அடித்துள்ளார். அதிக பட்ச ரன் - 174. இரண்டு போட்டிகளில் பீல்டிங் செய்ய வரவில்லை 

24. நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி உள்ளது.

25. பத்து ஓவர்கள் பந்துவீசி குறைந்த ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர் மார்க்வுட் 10-0-29-1. பங்களாதேஷ்க்கு எதிராக.



Wednesday 1 November 2023

நானும் உலகக் கோப்பையும்

கிரிக்கெட் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்த பின்பு, நான் முதன் முதலாக பார்த்த உலகக் கோப்பை 1999 உலகக் கோப்பை. தூர்தர்ஷனில் இந்தியா விளையாடும் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டி ஒளிபரப்பப்பட்டது.



இரவு 8 மணிக்கு மேல் டிவி பார்க்க அம்மா அனுமதி தருவதில்லை. அம்மா தூங்கிய பிறகு சத்தத்தை குறைத்து வைத்து பார்ப்போம். பகலை பொறுத்தவரை யார் வீட்டில் பார்ப்பது என்ற போட்டியே நடக்கும், பெரும்பாலும் எங்க வீட்டில் வந்து பாண்டியும் பார்ப்பான்.

இந்தியாவின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடியது. 250 என்பது கடினமான டார்கெட் சேஸ் செய்ய அன்றைய தேதியில் இந்தியா வென்று விடும் என்ற நினைத்த நேரத்தில், யார்டா இவன் இந்த அடி அடிக்கிறான் என்று நினைக்க வைத்து எளிதாக வென்று சென்றார் குளூஸ்னர்.

2வது போட்டியில் டெண்டுல்கர் ஆடவில்லை, அவரது தந்தை இறந்துவிட இந்தியா திரும்பி இருந்தார். ஜிம்பாப்வே 3 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெங்கடேஷ் பிரசாத்தை திட்டினோம். அடுத்த போட்டியில் டெண்டுல்கர் வந்து சதம் அடித்து வென்றோம். அதற்கடுத்த போட்டி கங்குலி டிராவிட் உலக சாதனை படைத்தார்கள்.

கடைசி லீக் போட்டி இங்கிலாந்து அணியுடன். பிரிட்டானியா ப்ரீ டிக்கெட் கொடுத்த போட்டி. மழையால் பாதியில் நிறுத்தப்பட்டு, அடுத்த நாளில் தொடர்ந்தது. இந்தியாவுக்கு வெற்றியும் கிடைத்தது.

சூப்பர் 6ல் மூன்று போட்டியும் வெல்ல வேண்டும் என்ற சூழல். ஆனால் அந்த விதிமுறை புரிய பல ஆண்டுகள் ஆனது. ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் மெக்ராத் இந்தியாவை நசுக்கினார். பாகிஸ்தான் போட்டியில் வென்றது ஆறுதல். நியூசிலாந்து போட்டியில் தோற்று வெளியேறியது இந்தியா. அரை இறுதி போட்டியும் இறுதி போட்டியும் பார்த்தேன்.

2003 உலகக் கோப்பை, 12ம் வகுப்பு தேர்வுகளின் போது. நல்ல அணி எப்படியும் வென்றுவிடும் என்று நம்பினோம். விடுதியில் சாயங்காலம் ஹாலில் வைத்து மேட்ச் போடுவார் வார்டன். ஸ்டடி ஆரம்பித்த பிறகு டிவி அணைத்து வைக்கப்படும்.



முதல் போட்டியில் ஹாலந்து (அன்று நெதர்லாந்து அணி ஹாலந்து என்ற பெயரில் ஆடியது) அணியுடன் சொதப்பி ஒரு மாதிரி வென்றது. அடுத்த போட்டியில் ஆஸியுடன் படுதோல்வி. அதற்கு பிறகு நமீபியா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் என தொடர் வெற்றிகளை பெற்றது இந்தியா.

ஹாஸ்டலில் டிவி ஓடாத நேரத்தில் பாளையங்கோட்டை பகுதியில் எந்தெந்த கடைகளில் கிரிக்கெட் பார்க்க வசதி உள்ளது என்ற டேட்டா பேஸ் எங்கள் வசம் இருந்தது. அடுத்த காலையில் தந்தி பேப்பரில் வாசிப்பது ஒரு சுகானுபவம். மேட்ச்களை பற்றி கூட்டமாக உட்கார்ந்து பேசி பரவசம் அடைவோம். அந்தக் கூட்டத்தின் உறுப்பினர்களில் பிளசிங் மற்றும் சங்கர் மட்டும் நினைவில் நிற்கும் பெயர்கள்.

சூப்பர் 6 போட்டிகளில் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்தியா மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது. ஷேன் பாண்ட்க்கு இன்னும் 8 ஓவர்கள் இருந்ததால் ஆட்டம் கையை விட்டு போச்சு என்று பார்க்கவில்லை. கைப்பும், டிராவிட்டும் கரை சேர்த்தனர். 

இறுதிப் போட்டி மார்ச் 23 ல், பயாலஜி க்ரூப்புக்கு தேர்வுகள் முடிந்து விட்டது 20ல். அவர்கள் நுழைவு தேர்வுக்கு படித்தார்கள். எங்களுக்கு 25ம் தேதி கம்யூட்டர் சயின்ஸ் தேர்வு. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெளுக்க, சச்சின் முதல் ஓவரில் அவுட்டாக, நாம் பார்க்க விட்டால் வெற்றி பெறும் என்ற பேராசையில் 5ம் ரூமில் அடைக்கலம் ஆனேன். காதில் கங்குலி அவுட் ஆனது கேட்டது.

கல்லூரி காலத்தில் 2007 உலகக் கோப்பை. இதில் பிரச்சினை என்னவென்றால் போட்டிகள் நடுஇரவு 1 அல்லது 2 வரை செல்லும். விடுதியில் டிவி கிடையாது. எங்கு பார்ப்பது என்ற கேள்வி. முதல் போட்டி தூத்துக்குடி நண்பன் கார்த்தி வீட்டில், கார்த்தி தூங்கி விட்டான், அவனது அப்பாவும் தூங்கிவிட்டார். பங்களாதேஷ் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தவித்தேன். அடுத்த போட்டி எங்கள் வீட்டில் முதல் பேட்டிங் மட்டும் பார்த்தேன். சச்சின் 6வது பேட்ஸ்மேனாக, டிராவிட் 7வது பேட்ஸ்மேனாக களம் கண்ட போட்டி.

மூன்றாவது போட்டி இலங்கையோடு, க்ளாஸ் மேட் வெஸ்லி வீட்டில் பார்த்தேன். அதுவும் சுவாஹா.

2011 உலகக் கோப்பை வேலைக்கு சென்ற பின், சைதாப்பேட்டை மேன்சனில், அருண் ரூமில் டிவி இருந்தது. அனைத்து போட்டிகளும் அதில் தான். இங்கிலாந்து உடனான போட்டி டை ஆக, பியூஸ் சாவ்லாவை திட்டினோம்.

சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி, தோல்வியை நோக்கி செல்வது போல இருந்தது. விரக்தியில் நான், ராஜ்குமார், வசந்த் மூணு பேரும் சைதை ராஜ்ஜில் நாடோடி மன்னன் படத்துக்கு போனோம். சினிமாஸ்கோப் இல்லாத படம் என்பதால் திரையின் நடுவில் மட்டுமே தெரிந்தது. இடைவேளைக்கு பிறகும்  கருப்பு வெள்ளையில் ஓடியதால் வெளியே வந்தோம். அறைக்கு வந்தபின் இந்தியா ஜெயித்தது தெரிந்தது.

இறுதி போட்டியில் கடைசி வரை பார்த்து மகிழ்ந்திருந்தோம். நள்ளிரவு 12க்கு பிறகே நாங்கள் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.

2015 உலகக் கோப்பை, தூஸானில் பணிபுரிந்த போது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளில் சொதப்பிய இந்திய அணி உலகக் கோப்பையை சிறப்பாக தொடங்கியது. 

குறிப்பாக முதல் போட்டி, நான் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன். எனது மனைவி ஸ்கோர் அனுப்பி அப்டேட் செய்தது ஆச்சர்யங்களின் அணிவகுப்பு.

இந்த உலகக் கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டியில் சிரமமே என்ற நிலை இருந்தது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நானும் பார்ட்னர் ராஜாவும் பேசிக்கொண்டோம். பெரிசு (2011 உலகக் கோப்பையில் பெரிசு - சச்சின், 2015ல் தோனி) நின்றால் ஆட்டம் நமக்கு என்று. ஆட்டத்தில் இந்தியா வெற்றி. பெரிசு - 45*

நண்பர் கோபியோடு 2015 உலகக்கோப்பை கழிந்தது. அரை இறுதி போட்டியை அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். நான் எனது கணிணியில் கிரிக் இன்ஃபோ மூலம் தொடர்ந்து கொண்டு இருந்தேன். இந்திய அணி தான் அந்த போட்டிக்கு பிறகு தொடரவில்லை.

2019 உலகக் கோப்பை, கையில் இருக்கும் அலைபேசியில் எப்போதும் ஸ்கோர் பார்த்து கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. நன்றாக சென்றது இந்திய அணியின் ஆட்டம். மீண்டும் அரை இறுதி, ரன் அவுட்டில் தொடங்கி ரன் அவுட்டில் சர்வதேச கிரிக்கெட்டை முடித்து கொண்ட பெரிசு. (அன்று தெரியாது அது தான் கடைசி போட்டி என்று). இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் இன்னும் மனதளவில் பெரிய தன்னம்பிக்கையோடு தயாராக வேண்டும் என்று தோன்றியது.

2023 உலகக் கோப்பை, இந்தியாவோடு ஆப்கானிஸ்தானும் என் மனதில் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரு அணிகளின் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது. 

"இந்த நிகழ்காலம் இப்படியே தொடராதா..."