Thursday 25 November 2021

தேடல்

குட்டி மாமா என்றதும் வயதில் சின்னவர் என்று நினைக்க வேண்டாம். அவர் பெயர் குட்டித்துரை. 

காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிப்பதில் வல்லவர் குட்டிமாமா.

சங்கு தாத்தாவின் யானைப்பல் மோதிரத்தை ஆற்றுக்குள் தேடி கண்டுபிடித்ததை ஊரே வேடிக்கை பார்த்தது. அன்று முதல் நாங்கள் அவரின் ரசிகர்கள்.

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை சின்ன சிராய்ப்புகளோடு தூக்க யோசனை சொன்னது மாமா தான்.

ஆற்றோரத்தில் மேய சென்ற ஆட்டுக்குட்டி திரும்பி வரவில்லை. ஆத்தோடு போயிருக்கலாம் அல்லது யாராவது திருடி இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆட்டுக்காரர், வந்த பிறகு மாமா பாறை இடுக்கில் சிக்கி இருந்த குட்டியை மீட்டு வந்தார்.

ஊர் பெரிசுகள், அவன் அனுமார் மாதிரி மலய கூட தூக்கியாந்திருவான் என்பார்கள். ஆனால் மாமாவின் தேடல் எதுவும் அத்தைக்கு பிடிப்பது இல்லை.

ஊரில் ஒரு வீட்டில் நகை காணாமல் போனது. ஊர் கூடி சாணி உருண்டை நடத்த தீர்மானம் ஆனது. யோசனை குழுவில் மாமாவும் இருந்தார். கோவில் முன் வைத்திருக்கும் அண்டாவில் எல்லாரும் ஒரு சாணி உருண்டை போட வேண்டும். திருடியவர் திருந்தி யாருக்கும் தெரியாமல் சாணிக்குள் வைத்து போட ஒரு வாய்ப்பு.

கெடு முடிந்து அண்டாவை கலக்கி கொட்டியதில் நகை வரவில்லை. அன்று மாமா முகம் சுண்டிப் போனது.

சில வருடங்கள் கழிதது, அத்தைக்கு கொள்ளி வைத்து விட்டு, ஆற்றில் தலை முழுகி எழுந்த மாமா அழுது கொண்டே சொன்னார். அத்தை விதை நெல் வைத்திருக்கும் அடுக்கு பானையில் அந்த நகையை வைத்திருந்ததை அன்றிரவே, தேடாமலே தெரிந்து கொண்டதாக.

Thursday 11 November 2021

ஜெப்னா பேக்கரி - புத்தக விமர்சனம்

வாசு முருகவேல் எழுத்து என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. அதனால் தான் அவரது அடுத்த நாவலையும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

கலாதீபன் லொட்ஜ் நாவலை விட இதில் அவர் தொட்டிருக்கும் களம் வித்தியாசமானது. திருத்தப்பட்ட பதிப்பு தான் எனக்கு கிடைத்தது. இதிலிருந்தே உணரலாம் முதல் பதிப்பு எவ்வளவு உக்கிரமானது என்று.

ஷர்மியில் தொடங்கி புது புது கதாபாத்திரங்களாக விவரிக்கிறார். சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் மனதை கனக்க வைக்கிறார்கள் கொசுனாமணியர், அரை மண்டை போன்றோர்.

சாப்பாடு கொண்டு வரட்டா என்று கேட்பதும் அவர்களை அவமான படுத்துவதும் ஒன்று தான் என்று நினைக்கிறார் அரைமண்டை. நண்பனால் இந்த நிலைக்க வரமுடியுமா? அவருக்கு நேர்கிறது. அவரை எளிதில் கடக்கமுடியாது.

எழுத்து ஆளுமையில் ஈர்க்கிறார் வாசு. "மனமோ, மானமோ, மறதியோ தடுத்திருக்கும்". "ராணுவத்துக்கு தமிழ் சனங்கள் செத்தால் போதும்... குண்டு வீசும் இடம் பள்ளிக்கூடம் என்ன... பள்ளி அறை என்ன...".

தலைப்பு காரணமான ஜெப்னா பேக்கரி ஒன்பதாம் அத்தியாயத்தில் தான் வருகிறது. 

எக்சோறாப் பூக்கள் பற்றிய சொல்கிறார் வாசு. தமிழ் நாட்டில் சீர் பிரித்து எழுதுவதில் மட்டும் பயன்பட்ட தேமா பூவின் அழகை விவரிக்கிறார். அது இலங்கையில் நிறைய இருக்கும் போல.

கிழக்கு மாகாணம் அரபு நாடுகளை போல மாறிவருகிறது என்று எழுதியுள்ளார். புலிகளை பற்றியும் எழுதியுள்ளார். உண்மையை அப்படியே எழுதியுள்ள அவர் எத்தனை எதிர்ப்புகளை சந்தித்து இருப்பார்.

சீனியை பதுக்கி வைத்து விற்பது இன்றும் இலங்கையின் நிகழ்வு. பேட்டரியை உயிர்ப்பிக்க பயன்படுத்தும் உக்திகளை சிறப்பாக எழுதியுள்ளார்.

திருலிங்கத்தாரை எழுத்துகளாலேயே மரியாதை கொடுக்க வைக்கிறார். ஷர்மியில் ஆரம்பித்து ஷர்மியிலே முடித்து இருக்கிறார்.

இவர் எழுத்துகளை வாசித்த பின் பிற இலங்கை எழுத்தாளர்களையும் வாசிக்க தோன்றுகிறது.

(எழுத்து பிழைகள் ஆங்காங்கே கண்ணில் தென்பட்டது.)


Wednesday 10 November 2021

பால்யமும் பள்ளிகூடமும்

எனது சிறுவயது முதல் நண்பர்கள் முத்துவும் கணேசனும். நான்காம் வகுப்பு முதல் பாண்டியும் முருகனும் சேர்ந்து கொண்டனர்.

முத்து, கணேசன் அண்ணன் தம்பிகள். எங்கள் வீட்டிற்கு எதிர்வீடு. எதிர் வீடு என்றாலும் நடுவில் பெரிய காலி இடம் உண்டு. காலிஇடம் வழியாக ஒரு ஒத்தையடி பாதை. பகலில் பயமில்லாமல் போய் வருவேன். கொஞ்சம் இருட்டிவிட்டால் இரண்டு வீட்டுக்கு நடுவில் இருக்கும் பூவரசு மரம் பயமுறுத்தும்.

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை அப்பா தலைமை ஆசிரியராக இருந்த பள்ளி. அதனால் எனக்கு எப்போதும் சூப்பர் பவர் இருந்தது. P. மகாராஜன், கருப்பசாமி, லவக்குமார், M. மகாராஜன் இவர்கள் தான் வகுப்பு நண்பர்கள். இன்று வரை இணைப்பில் இருப்பது P. மகாராஜன் தான்.

இன்றும் அந்த பள்ளியில் பயின்றவர்களுக்கு நான் சுப்பையா சார் பையன். இப்போதும் அதே அன்பு காட்டுவார்கள்.

சின்னக்காவின் ஐந்தாம் வகுப்பு வரை அவளோடு பள்ளிக்கூடம் சென்றேன். அவள் ஆறாம் வகுப்புக்கு மானூர் சென்ற பின் நான் தனியாக பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது.

பள்ளி செல்லும் பாதை வீட்டில் இருந்து வண்டி தடமாக இருக்கும்.  ஒரு கரை போன்ற மேடு இருக்கும். அந்த மேடு தான் எங்கள் ஊருக்கும் செழியநல்லூர்க்கும் உள்ள எல்லை. மேட்டு பக்கத்தில் ஒரு கிணறு. மழை பெய்தால் தண்ணி கிடக்கும். மேட்டை தாண்டினால் இரு புறமும் புஞ்சை நிலம். மழை பெய்தால் எள்ளோ, உழுந்தோ பயிரிடுவார்கள்.

வண்டி தடம் வளைந்து மீண்டும் நேராக செல்லும். வளையும் இடத்தில் இரட்டை பனைமரங்கள் உண்டு. அதில் பேய் இருப்பதாக கதையும் உண்டு. அந்த வளைவு கருவேல மரங்களால் அடர்ந்து கிடக்கும். வெளிச்சம் குறைவாக இருக்கும்.

வளைவை தாண்டி வண்டித்தடம் உருமாறி வண்டி தடமா ஒத்தையடி தடமா என்று தெரியாமல் இருக்கும். வளைவை தாண்டிய பாதையில் வடக்கும் தெற்கும் கிணறுகள் உண்டு.

அதில் வடக்குப்பக்கம் உள்ள கிணற்றில் முனி இருப்பதாக சொன்னதால் நான் எட்டிக்கூட பார்த்ததில்லை. அதை தாண்டி கொஞ்சம் தூரம் சென்றால் ஓடை வரும். அது மேலோடை, மழைகாலத்தில் தண்ணீர் கிடக்கும். அந்த ஓடையை தாண்டியால் கருவேல மரங்கள் சூழ் ஒத்தையடி பாதை. சில இடங்களில் முள்ளை ஒதுக்கிவிட்டு நடக்க வேண்டும். 

அதை தாண்டினால் அடுத்த ஓடை அது கீழோடை. சின்ன‌ மழைக்கு கூட தண்ணி வரும். கீழோடையை அடுத்து மாடசாமி கோவில், அதற்கடுத்து பள்ளிக்கூடம் தான்.

அப்பா இறந்தபின் அந்த நாற்பது நாட்கள் பள்ளிக்கு செல்ல ரொம்ப பயமாக இருந்தது.

யாராவது சைக்கிளில் வந்தால் ஏற்றிவிடுவார்கள் அது அபூர்வம். ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் இருந்தார். அவர் எந்நேரமும் எதிரில் வரலாம் என்ற பயம் வேறு.

நான்காம் வகுப்பு எங்க ஊர் பள்ளியில் சேர்ந்து விட்டேன். எங்க ஊர் குளக்கரையில் நடந்து செல்வோம். காலையில் அதிகம் முருகாவுடன் தான் செல்வேன். ஒருநாள் முட்டும் ஆட்டுக்குட்டியுடன் மாட்டி படாதபடு பட்டுவிட்டோம் நானும் முருகாவும்.

மாலையில் நான், முருகன், முத்து, கணேசன் என எல்லாரும் சேர்ந்து தான் வருவோம்.

ஒருமுறை ஒரு வெறிநாய் சுற்றியது. அப்போது குளக்கரையில் செல்லாமல் தோட்டங்களில் வழியே சென்றோம். அந்த நாய் தோட்டத்தில் வேலை பார்த்த ஒருவரை கடித்த சேதி காதை எட்டியது. ஊரே திரண்டு விரட்டி அந்த நாயை கொன்ற பின் தான் நிம்மதி. 

மாலையில் அய்யர் வீட்டு டியூசனில் தான் நிறைய கற்றுக்கொண்டோம். ஜெயா டீச்சரும் ராஜீ டீச்சரும் நல்லாசிரியர்கள். டியூசனில் டிக்டேசன் (டீச்சர் சொல்லும் வார்த்தையை பிழையில்லாமல் எழுத வேண்டும்) தான் ரொம்ப ஸ்பெஷல். 

டியூசனுக்கு தினமும் நன்றாக படித்தான் என்று கையெழுத்து வாங்கி வர வேண்டும். அப்போது தான் இடது கையால் எழுதினால் தாத்தா கையெழுத்து என்ற யுக்தி உதயமானது. தினமும் திருநீறு வைத்து செல்ல வேண்டும், மறந்து விட்டால் யாராவது நெற்றியில் முட்டி ஒட்டி உதவி புரிவார்கள்.

ஆறாம் வகுப்பு பாளையங்கோட்டை வந்து விட்டேன். வெஸ்டன் ப்ளாக்கில் கடைக்கோடி வகுப்பு தான் ஆறாம் வகுப்பு டி பிரிவு. "நேரம் தவறாமை ரயில்களுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் தான்" என்று போர்டில் எழுதி இருக்கும். 

தனியாக இருந்து சாப்பிட்ட என்னை அருண்குமாரும் ஹரிஹர சுதனும் சேர்ந்து சாப்பிட அழைத்து கொண்டனர். 

பக்கத்தில் இருந்த பரமசிவனை கண்டு முதலில் பயந்தேன். அவன் ஆறாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு என்பதால். பரமசிவன் இன்று உயிரோடு இல்லை. அதற்கு பிறகு சீனிவாசன், குமார், அய்யம் பெருமாள் என்று பழக்கம் விரிந்தது.

பரமசிவனால் அறிமுகமான கண்ணையா உடனான நட்புறவு இன்றும் பயணிக்கிறது.

சீனி பத்தாம் வகுப்பிற்கு பிறகு பாலிடெக்னிக் சென்றுவிட்டாலும் செல்போன்கள் காலத்தில் மீண்டு வந்ததில் எப்போதாவது பேசி கொள்வோம்.

கண்ணா மற்றும் சீனி எழுதிய கடிதங்கள் வீட்டில் பத்திரமாக இருந்தது. இப்போது இருக்கா என்று தெரியவில்லை.

Thursday 4 November 2021

மாநகர பேருந்து பயணம்

சென்னைக்கு வந்த பின் நிறைய இடங்களுக்கு மாநகர் பேருந்தில் பயணித்திருக்கிறேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த வழித்தடத்தை பற்றி சொல்கிறேன்.

ஒரு முறை வல்லக்கோட்டை முருகன் கோவில் செல்வதற்கு காலையிலே 50 ரூபாய் டிக்கெட் (ஒருநாள் பாஸ்) எடுத்து கிளம்பினேன். ஸ்ரீபெரும்புதூர் போய் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் வல்லக்கோட்டை போய் சாமி கும்பிட்டு, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வந்தேன். வடபழனி பேருந்து நின்றது. வழி வளசரவாக்கம் என்றிருந்தது. ஏறி ஜன்னல் சீட் பார்த்து உட்கார்ந்து கொண்டேன்.

பேருந்து கிளம்பி சென்னையை நோக்கி வராமல் காஞ்சிபுரம் செல்லும் பாதையில் சென்றது. சந்தேகம் வரவே நடத்துநரிடம் வளசரவாக்கம் போகுமா என்றேன். போகும் என்றார்.

பேருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ராஜீவ் காந்தி நினைவகம் தாண்டி இடது பக்கம் திரும்பியது. அது மாநில நெடுஞ்சாலை போல. சாலை நன்றாக இருந்தது. அதிக குடியிருப்புகள் இல்லை. சின்ன சின்ன தொழிற்சாலைகள். இருபுறமுமே பசுமைக்கு பஞ்சமில்லை.

நடுவில் நெடுஞ்சாலையில் சிலர் ஏறினார்கள். பேருந்து நிறுத்தம் என்ற சுவடே இல்லை. நல்லூரில் இருந்து பிரிந்து ஒரு கிராம சாலையில் சென்றது. கிராம பேருந்து வரும் நேரத்தை வைத்து காத்திருக்கும் மக்கள் ஏறி கொண்டனர்.

நல்லூரை கடந்து சோமங்கலம் சென்றது. அங்கு பேருந்து திரும்ப பஸ் ஸ்டான்ட் போல வசதி உள்ளது. சோமங்கலத்தில் இருந்து கிளம்பி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேருந்து பயணித்தது. வனப்பகுதி அடர்ந்து காணப்படவில்லை. அந்த பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் பெயர்  பூந்தண்டலம்.

பேருந்து மீண்டும் மாநில நெடுஞ்சாலைக்கு வந்தது. நந்தம்பாக்கம், சரஸ்வதி நகர், சிறுகளத்தூர் பகுதிகளை கடந்தது. இந்த பகுதிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் வடிகால் பகுதிகள் என்பதால் வாத்து வளர்ப்பும் விற்பனையும் நடக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை வாத்து கறி வாங்க நிறைய கூட்டம் அலை மோதியது.

பேருந்துக்கு வருவோம். பேருந்து மாதா கல்லூரிக்கு அருகில் வெளிவட்ட சாலையை கடந்து குன்றத்தூர் வந்தது. குன்றத்தூர் வந்ததும் நகர நெரிசல் தொடங்கியது.

போரூர் வரும் போது மாநகர புழுதி, புகை, நெரிசலோடு சேர்ந்து கொண்டது.

ஒரு பேருந்து பயணத்தில் கிராம, நகர, மாநகர பகுதிகளை வேடிக்கை பார்த்தது சிறப்பாக இருந்தது.

Wednesday 3 November 2021

தீபாவளி

தீபாவளி என்றதும் நினைவில் வந்தவை பற்றிய தொகுப்பு.

தீபாவளி சனிக்கிழமை, வியாழக்கிழமை கருக்கல்ல நீ பொறந்த என்று அம்மா ஆண்டுதோறும் சொல்வது வழக்கம்.

தீபாவளி அன்று மழை பெய்யாவிட்டாலும் அம்மாவுக்கு வருத்தம் வரும்.

சிறு வயது முதல் தீபாவளிக்கு அம்மாவே எண்ணெய் தேய்த்து விடுவாங்க. எப்போதும் தேங்காய் எண்ணெய் தான். ஷாம்பூ கிடையாது, மாருதி மார்க் சீயக்காய் பொடி தான். பத்தாம் வகுப்புக்கு பிறகே ஷாம்பூ. திருமணத்திற்கு பிறகு மனைவி கையால் தேங்காய் எண்ணெய்.

பெரிய அக்காவின் தலை தீபாவளிக்கு மாமா எக்கச்சக்க வெடி வாங்கி வந்திருந்தார். கிட்டதட்ட மூன்று வருசம் அந்த வெடிகள் இருந்தது. தாத்தா தோட்டத்தில் கொக்கு கலைக்கவும் பயன்படுத்தி கொண்டார்.

அன்று இரவு எரிந்து போன சூரியகாந்தி வெடியில்( கம்பி மத்தாப்பு) காலை வைத்து சுட்டு கொண்டேன். 

இன்னொரு தீபாவளிக்கு கத்திரிப்பூ கலரில் சட்டை போட்டு வீட்டின் முன்னே ஒரு மிளகாய் வற்றல் வெடி வைத்தேன். அது வெடித்து பறந்து வந்து தன் சட்டையில் ரெண்டு சின்ன ஓட்டை போட்டது. அன்று முதல் வெடி வைப்பதில் விருப்பம் இல்லை. 

எப்போதும் கடையில் ஆர்டர் கொடுத்து தாத்தா வடை வாங்கி வந்துவிடுவார். காலையில் சாப்பிட்டு விட்டு விளையாட பாண்டி வீட்டிற்கு சென்றால் பாப்பா அத்தை தயாரித்த வடை காத்திருக்கும்.

சின்ன அக்காவின் தலை தீபாவளிக்கு தான் எங்கள் தோட்ட கிணற்றில் இறங்கி குளத்தேன். நீச்சல் கற்றபின் அன்று தான் முதல் முறை.

எங்கள் தலை தீபாவளிக்கு எனக்கு பிடித்தமான வயலெட் நிற சட்டை. மனைவிக்கு பச்சை நிற சுடிதார்.

சென்னைக்கு வந்த பின் முதல் தீபாவளி வெள்ளிக்கிழமை வந்தது. திங்கட்கிழமை சாயங்காலம் ஊருக்கு செல்ல நண்பன் ஜெகதீசிடம் டிக்கெட் இருந்தது. லீவு கேட்டால் சைட் மேனேஜர் தரவில்லை. அன்று முதல் நான் சைட் மேனேஜரிடம் கேட்டு விட்டு லீவு போடுவதில்லை. லீவு போட்டபின் சொல்வது என்ற நடைமுறைக்கு மாறினேன்.

சில ஆண்டுகளாக தீபாவளி முன்பதிவு என்ற குதிரை ரேஸில் இறங்குவதில்லை. சென்னையில் தான் தீபாவளி. வெளியில் இருந்து கேட்கும் வெடி சத்தங்கள், ஹேப்பி தீபாவளி வாட்சப் மேஸேக்கள், டிவியில் படங்கள் என செல்கிறது. 

கடந்த இரண்டு தீபாவளியும் மனைவியின் அக்கா வீட்டில் குட்டீஸ் மகிழ்ச்சியோடு.

Tuesday 2 November 2021

உலக நாட்டு பணங்களின்‌ பெயர்கள்

அபஹாஸியா - ரஷ்ய ருப்பிள்

ஆப்கானிஸ்தான் - ஆப்ஹானி

அல்பேனியா - லெக்

அல்டர்னி - பிரிட்டிஷ் பவுண்ட்

அல்ஜீரியா - திராம்

அன்டோரா - யூரோ

அர்ஜென்டினா - பெஸோ

அங்கோலா - கவன்ஸா

அங்கியுல்லா - கிழக்கு கரீபிய டாலர்

ஆண்டிகுவா & பர்புடா - கிழக்கு கரீபிய டாலர்

ஆர்மீனியா - திராம்

அரூபா - ப்ளோரின்

ஆஸ்திரியா - யூரோ

ஆஸ்திரேலியா - டாலர்

அஜர்பைஜான் -மானட்

பங்களாதேஷ் - டக்கா

பஹாமாஸ் - டாலர்

பர்படாஸ் - டாலர்

பஹ்ரைன் - தினார்

பெல்ஜியம் - யூரோ

பெலிஸ் - டாலர்

பெனின் - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

பெலாரஸ் - ருப்பிள்

பூட்டான் - குலட்ரம்

பொலிவியா - பொலிவியனோ

போனயர் - அமெரிக்க டாலர்

போஸ்னியா அண்ட் ஹெர்சிகோவினா - கன்வர்டிபில் மார்க்

போட்ஸ்வானா - புலா

பிரேசில் - ரீல்

பெர்முடா - டாலர்

புருனே - டாலர்

பல்கேரியா - லெவா

புர்கினோ பஸோ - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

புருண்டி - ப்ராங்க்

கம்போடியா - ரியால்

கேமரூன் - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க்

கோஸ்டா ரிக்கா - காலன்

கேப் வேர்ட் - எஸ்கூடோ

குக் தீவுகள் - டாலர்

கேமேன் தீவுகள் - டாலர்

காட் - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க்

சீனா - யுவான் ரெம்பினி

கொலம்பியா - பெஸோ

கோமோரஸ்  - ப்ராங்க்

காங்கோ - ப்ராங்க

ஐவரி கோஸ்ட் - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

குரோஷியா - குனா

கியூபா - பெஸோ

குரகுவா - நெதர்லாந்து ஆண்டிலீன் குல்டர்

சைப்ரஸ் - யூரோ

செக் குடியரசு - க்ரோன்

டென்மார்க் - க்ரோன்

ஜிபௌடி - ப்ராங்க்

டோமினிக்கானா - கிழக்கு கரீபிய டாலர்

டோமினிக்கன் குடியரசு - பெஸோ

கிழக்கு தைமூர் - அமெரிக்க டாலர்

ஈகுவெடார் - அமெரிக்க டாலர்

எகிப்து - பவுண்ட்

எல் சால்வடார் - அமெரிக்க டாலர்

ஈகுவெடாரல் கீனியா - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க்

எரிடீரியா - நக்பா

எஸ்டோனியா - யூரோ

எத்தியோப்பியா - பிர்

பால்க்லேண்ட் தீவுகள் - பவுண்ட்

பாரே தீவுகள் - க்ரோனா

பிஜி - டாலர்

பின்லாந்து - யூரோ

பிரான்ஸ் - யூரோ

ப்ரெஞ்ச் பாலினேசியா - பிரெஞ்சு காலனி ப்ராங்க்

கபான் - மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க்

காம்பியா - தாலாஸி

ஜார்ஜியா - லாரி

ஜெர்மனி - யூரோ

கானா - செடி

ஜிப்ரால்டர் - பவுண்ட்

க்ரீஸ் - யூரோ

க்ரினாடா - கிழக்கு கரீபிய டாலர்

கௌதமாலா  - குவட்ஷால்

குருன்சே - பவுண்ட்

கீனியா - ப்ராங்க்

கீனி பிஸாவ் - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

கயானா - டாலர்

ஹைத்தி - கார்டே

ஹோண்டுராஸ் - லெம்பிரா

ஹாங்காங்  - டாலர்

ஹங்கேரி - போரின்ட்

ஐஸ்லாந்து - க்ரோன்

இந்தியா - ரூபாய்

இந்தோனேஷியா - ருப்பியா

ஈரான் - ரியால்

ஈராக் - தினார்

அயர்லாந்து - யூரோ

இஸ்லி ஆப் மேன் - பவுண்ட்

இஸ்ரேல் - சேக்கல்

இத்தாலி - யூரோ

ஜமைக்கா - டாலர்

ஜப்பான் - யென்

ஜெர்சி - பவுண்ட்

ஜோர்டான் - தினார்

கஜகஸ்தான் - டெங்கி

கென்யா - ஷில்லிங்

கிரிபாட்டி - ஆஸ்திரேலிய டாலர்

வட கொரியா - வான்

தென் கொரியா - வான்

கொசோவோ - யூரோ

குவைத் - தினார்

கிர்கிஸ்தான் - சோம்

லாவோஸ் - கிப்

லாட்வியா - யூரோ

லெபனான் - லிவர்

லெசோதோ - மலோட்டி

லைபீரியா - டாலர்

லிபியா - தினார்

லிச்சஸ்டைன் - சுவிஸ் ப்ராங்க்

லிதுவேனியா - யூரோ

லக்சம்பர்க் - யூரோ

மக்காவ் - பட்டகா

மாஸிடோனியா - தெனார்

மடகாஸ்கர் - எரியரி

மலாவி - கவாச்சா

மலேஷியா - ரிங்கிட்

மாலத்தீவு - ருபியா

மாலி - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

மால்டா - யூரோ

மார்ஷல் தீவுகள் - அமெரிக்க டாலர்

மௌரிதானியா - ஒகுய்யா

மொரிசியசஸ் - ரூபாய்

மெக்சிகோ - பெஸோ

மைக்ரோனேசியா - அமெரிக்க டாலர்

மோல்டோவா - லெய்

மோனோகோ - யூரோ

மங்கோலியா - தக்ரிக்

மான்டிகேரோ - யூரோ

மான்ட்சரட் - கிழக்கு கரீபிய டாலர்

மோரேக்கோ - திராம்

மொசாம்பிக் - மெட்டிகல்

நமிபியா - டாலர்

நவ்ரு - ஆஸ்திரேலிய டாலர்

நேபாளம் - ரூபாய்

நெதர்லாந்து - யூரோ

நியூ கலிடோனியா - பிரெஞ்சு காலனி ப்ராங்க்

நியூசிலாந்து - டாலர்

நிக்காரகுவா - கார்படோ

நைஜர் - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

நைஜீரியா - நைரா

நிய்யு  - நியூசிலாந்து டாலர்

வட சைப்ரஸ் - துருக்கி லிரா

நார்வே - க்ரோன்

ஓமன் - ரியால்

பாகிஸ்தான் - ரூபாய்

பால்வ் - அமெரிக்க டாலர்

பாலஸ்தீன் - ஜோர்டானிய தினார் / இஸ்ரேலிய சேக்கல்

பனாமா - அமெரிக்க டாலர்

பப்புவா நியூ கினி - கினா

பராகுவே - குவாரனி

பெரு - ஸோல்

பிலிப்பைன்ஸ் - பெஸோ

போலந்து - ஸொல்டி

போர்ச்சுக்கல் - யூரோ

கத்தார் - ரியால்

ருமேனியா - லெய்

ரஷ்யா - ருபிள்

ருவாண்டா - ப்ராங்க்

செயிண்ட் ஹெலினா - பவுண்ட்

செயிண்ட் ஹீட்ஸ் & நெவிஸ் - கிழக்கு கரீபிய டாலர்

செயிண்ட் லூசியா - கிழக்கு கரீபிய டாலர்

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரினாடா - கிழக்கு கரீபிய டாலர்

சமோவ் - தலா

சான் மரினோ - யூரோ

சாதோம் & பிரின்சிபி - தோப்ரா

சவுதி அரேபியா - ரியால்

செனிகல் - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

செர்பியா - தினார்

செசல்ஸ் - ரூபாய்

சியர்ரா லியோன் - லியோன்

சிங்கப்பூர் - டாலர்

ஸ்லோவேனியா - யூரோ

ஸ்லாவகியா - யூரோ

சாலமன் தீவுகள் - டாலர்

சோமாலியா - ஷில்லிங்

சோமாலிலாந்து - ஷில்லிங்

தென்னாப்பிரிக்கா - ராண்ட்

ஸ்பெயின் - யூரோ

தெற்கு சூடான் - பவுண்ட்

ஸ்ரீ லங்கா - ரூபாய்

சூடான் - பவுண்ட்

சூரினாம் - டாலர்

ஈசுவாதினி (சுவாசிலாந்து) - லில்லாங்கெனி

ஸ்வீடன் - க்ரோன்

சுவிட்சர்லாந்து - ப்ராங்க்

சிரியா - பவுண்ட்

தைவான் - டாலர்

தஜிகிஸ்தான் - சோமானி

தான்சானியா - ஷில்லிங்

தாய்லாந்து - பாட்

டோகோ - மேற்கு ஆப்பிரிக்க ஃபிராங்க்

டோங்கா - பாங்கா

டிரானிஸ்டிரியா  - ருபிள்

டிரினிடாட் மற்றும் டொபாகோ - டாலர்

துனிசியா - தினார்

துருக்கி - லிரா

துர்க்மெனிஸ்தான் - மானட்

துவாலு - ஆஸ்திரேலிய டாலர்

உகாண்டா - ஷில்லிங்

உக்ரைன் - ஹெர்வ்னியா

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - திராம்

ஐக்கிய அரசு - பவுண்ட் ஸ்டெர்லிங்

அமெரிக்கா  - டாலர்

உருகுவே - பெஸோ

உஸ்பெகிஸ்தான் - சோம்

வனுவாட்டு - வாட்டு

வாட்டிகன் நகரம் - யூரோ

வெனிசுலா - பொலிவார்

வியட்நாம் - டாங்

வாலிஸ் மற்றும் ப்யுடானா - பிரெஞ்சு காலனி ப்ராங்க்

யேமன் - ரியால்

ஸாம்பியா - கவாச்சா

ஜிம்பாப்வே - டாலர்