Wednesday 30 June 2021

12/100. ஆச்சியும் வில்லுபாட்டும்

கோவில் கொடை என்றால்

ஒரு வாரம் முன்னதாகவே

பாம்படத்தை சோப்பு போட்டு

பளபளக்க வைத்து விடுவாள் !

மடியில் வெற்றிலை,

சுருக்கு பையில் பணம் என

வில்லுப்பாட்டு கேட்க

விரைந்து விடுவாள் கோவிலுக்கு !

ஆறு மணல் பரப்பப்பட்ட

இடத்தில் சாக்கை விரித்து

உட்கார்ந்து கொள்வாள் !

ஆண்டுதோறும் கேட்ட 

கதைதான் என்றாலும்

வில்லிசை கலைஞரின் 

புலமையை ரசிப்பதும்

பக்க வாத்திய கலைஞரின் 

உடல்மொழியை கண்டு 

சிரிப்பதும் அவளின் 

ஆகச் சிறந்த கேளிக்கை !

நாங்கள் தூங்க தினமும்

கதை சொல்லும் ஆச்சி

தூங்காமல் கதை கேட்பது

வில்லு பாட்டில் !!!











Monday 28 June 2021

ராபின் சிங்

ராபின் சிங் பெயர் கிறிஸ்தவர் பெயர் போல் இருந்தாலும் இவரின் முழுப்பெயர் ராபிந்திர ராம்நரைன் சிங்.

இவர் கரிபிய நாடான டிரினிடாட்டில் இந்திய - டிரினிடாடிய பெற்றோருக்கு பிறந்தவர்.

1984ல் சென்னைக்கு வந்தார்.சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார். தமிழக ரஞ்சி அணியில் கிரிக்கெட் விளையாடினார்.

தனது ஆல்ரவுண்டர் திறமையால் கலக்கினார். இந்திய குடியுரிமை பெற்றதால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 1989ல் வெங்கசர்க்கார் தலைமையில் இந்திய அணியில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில்.

போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழக அணியில் இருந்து இந்திய அணிக்கு தேர்வான முதல் தமிழ் பிராமின் அல்லாதவர்.

ஏழு ஆண்டுகளுக்கு பின் 1996 ல் மீண்டும் இந்திய அணிக்கு வந்தார்.

இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் மிலிட்டரி மீடியம் பந்துவீச்சு என கலக்கினார்.

ஆடையின் மடிப்பு கலையாமல் பீல்டிங் செய்தவர்கள் மத்தியில் கீழே விழுந்து பீல்டிங் செய்து காட்டினார்.

இவர் 1996 முதல் 2001 வரை அணியில் தொடர்ந்தார்.

136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2336 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதமும் 9 அரை சதமும் அடித்துள்ளார்.

பந்து வீச்சில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இருமுறை ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இவருக்கு பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சரியான பார்ட்னர் அஜய் ஜடேஜா தான். கவர், பாயிண்ட் தான் இவர்களின் பீல்டிங் போசிசன்.

பேட்டிங்கில் துவக்க விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டால் நங்கூரத்தை போட்டு கவுரமான ஸ்கோர் வர உதவுவார்கள்.

ஜிம்பாப்வே உடனான ஒரு போட்டியில் 8 வது வீரராக களமிறங்கினார். 10 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும்.அடித்து ஆடினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை. பவுலர் வைடாக வீச எதிரிலிருந்த பிரசாத் ஓடி வர ரன்அவுட் ஆனார். அதற்குள் ரசிகர்கள் களத்தினுள் ஓடி வந்ததால் ஆட்டம் டை.சிங் ஆட்டநாயகன்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இறுதி போட்டியில் 314 ரன்களை சேஸ் செய்தது இந்தியா. ஒன்டவுன் இறங்கி 82 ரன்கள் அடித்தார். கங்குலியுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்தார். கடைசியாக கனிட்கர் போர் அடிக்க இந்தியா வென்றது.

இவர் சதமடித்த போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டது. ரொம்ப களைப்பாக களத்தில் காணப்பட்டார். போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ராபின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியுள்ளார்.

1999 ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா ஜிம்பாப்வேவுடன் மூன்று ரன்களில் தோற்றது. அந்த போட்டியில் சிங் எட்டாவது விக்கெட்டாக அவுட் ஆனார். நாலு ஓவர்களில் 7 ரன்கள் என்று தான் இலக்கு. அந்த போட்டியில் வென்றிருந்தால் அந்த உலக கோப்பையே மாறி இருக்கும்.

1999 உலக கோப்பையில் இலங்கை உடனான போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

ரன் குவிப்பை கட்டுபடுத்த அசாருதீனின் ஆயுதம் ராபின்.

ஆஸியுடனான போட்டியில் மார்க் வாவ், பாண்டிங் விக்கெட்டை வீழ்த்தினார்.‌ பேட்டிங்கிலும் 75.

ராபின் தனி சிறப்பு ரன் அவுட் ஆகாமல் தரையில் விழுவது. சிறப்பான பீல்டிங்.

தவறவிட்டால் ஸ்டம்பை பதம் பார்க்கும் பவுலிங்.

1996 உலக கோப்பையில் மும்பை லாபியில் மஞ்சரேக்கர், காம்ளி, அங்கோலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

திறமையான ராபின் இடம் பெற்றிருந்தால் ஒரு வேளை இந்தியா வென்றிருக்கலாம்.

2001 ல் யுவராஜ் சிங் வந்துவிட அந்த இடத்திற்கு யுவராஜ் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து 2004ல் ஓய்வு பெற்றார்.

அதற்கு பின் பயிற்சியாளராக இன்றும் களத்தில் உள்ளார்.

Wednesday 16 June 2021

கார்த்திக்

 கார்த்திக் என்ற பெயரில் எத்தனையோ பேர் பழகி கடந்து சென்றவர்கள் உண்டு.

அண்ணனின் பெயர் கார்த்திகேயன் அங்கு தான் ஆரம்பிக்கிறது கார்த்திக். பள்ளியில் கார்த்தீசன் என்று ஒரு நண்பன் இருந்தான்.

கல்லூரி வகுப்புத் தோழன், ப்ராஜெக்ட் மேட் என்றொரு கார்த்திகேயன். கூடவே சுத்திய ஜூனியர் கார்த்தியும் உண்டு.

சென்னைக்கு வந்த பின் பக்கத்து அறையில் ஆக்சிஸ் பேங்கில் வேலை பார்த்த கார்த்திக் உண்டு. அவரோடு நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.

தூசான் அலுவலகத்தில் ஒரு ஆல் இன் ஆல் கார்த்திக் உண்டு ஆர் ஆர் கார்த்திக். ட்ரீம் 11ல் கூட வெற்றிகளை பெற்றவர்.

பத்து மாதங்கள் பழகினாலும் நண்பனாக, ஆசானாக வழி நடத்திய யுஎஸ். கார்த்திகேயன் தான் கடைசி கார்த்திக்.

எத்தனையோ கார்த்திக் இருந்தாலும் என் பிறந்த நாளில் ஓராண்டு முன்பு பிறந்த கார்த்திக் கொஞ்சம் ஸ்பெஷல்.

கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டுகளில் பழக்கம் இல்லை. மூன்றாம் ஆண்டும் இறுதி ஆண்டும் நல்ல பழக்கம்.

சீனியர்கள் பேர்வெல் பார்ட்டியில் தீர்ந்து போன சரக்கு பாட்டிலை கழுவி தண்ணீர் குடிக்க உபயோகிக்கலாம் என்று நினைத்து, எங்கள் அறை கட்டிலுக்கு அடியில் வைத்து எங்களை மாட்டி விட்ட உத்தமன்.

இறுதி ஆண்டில் அவன்‌ போட்டோவை வைத்து போஸ்டர் அடித்து அதகளம் செய்தோம். பிறந்த நாளன்று கேக் வெட்டி முட்டையை தலையில் அடிப்பது வழக்கம். நம் பிறந்த நாளில் மற்றவர்களுக்கும் நாம் முட்டை அடிப்போம் என்று பத்து முட்டை வாங்கி ஒளித்து வைக்க நினைத்த இடங்களில் ஏற்கனவே முட்டைகள் இருந்தன.

அன்று கேக் வெட்டியது தான் நான் வெட்டிய முதல் கேக். கடைசி முட்டை உடைக்கப்பட்டு குளித்து முடிக்கையில் மணி இரண்டரை.

கடைசி செமஸ்டரில் விடுதியை காலி செய்து விட்டு தக்கலையில் வீடு எடுத்து தங்கிய போது அவனும் கூட வந்தான். அந்த வீட்டு பக்கத்தில் இருக்கும் குளத்திற்கு குளிக்க எப்போதாவது தான் வருவான்.

என் அலைபேசியில் அவன் எண்ணை கார்த்திக் என்று பதிவு செய்ததில்லை. அவன் எண் மனப்பாடமாக தெரியும் 99***28*** என்று.

எளங்காத்து வீசுதே அவனுக்கு பிடித்த பாட்டு. எப்போது கேட்டாலும் அவன் நினைவில் வந்து போவான்.

சென்னைக்கு வந்த பின் போன் பண்ணுவான். குஜராத்தில் இருக்கிறேன். உபியில் இருக்கிறேன். சத்திஸ்கரில் இருக்கிறேன் என்று. சுத்தி கொண்டே இருந்தவன் கல்பாக்கத்தில் கொஞ்ச நாள் நிலை கொண்டான்.

கல்பாக்கத்தில் இருந்து வாரந்தோறும் சைதாப்பேட்டை மேன்சனுக்கு வருவான். ஒருநாள் காலையில் மீன், நண்டு வாங்கி வந்தான். ரூமிலிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ரெடி செய்தோம். மண்ணெண்ணெய் வாங்க அடையாற்று கரையோர குடிசை பகுதிக்குள் சென்றோம். அன்று தான் சைதாப்பேட்டையின் இன்னொரு பக்கத்தை பார்த்தோம். நண்டு குழம்பு மீன் பொறியல் என்று அந்த நாள் சுவையான நாள்.

நானும் தினேஷ்ம் தடா சென்று, கார்த்திக் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அடுத்த நாளே பிரியாணியோடு தடா சென்று அருவியில் குளித்து களித்து வந்தோம்.

திருமணத்துக்கு பிறகு மூவரும் சந்தித்த நாளில் தினேஷ் காரில் தி.நகர் சென்றோம். நீண்ட நாள்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களோடு மகிழ்ந்த தினம். அன்று தினேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், நான் பைப்பிங் இன்ஜினியர், கார்த்திக் குவைத்தில் டெஸ்டிங் இன்ஜினியர். கல்லூரியில் நாங்கள் நினைத்து கூட பார்க்காத நாள். கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்த நாள்.

வழுக்கை விழுந்து வயோதிகம் வந்த நாளில் நாங்கள் சந்தித்து கொண்டால் அன்று வாலிபர்கள் ஆகிவிடுவோம்.



Tuesday 8 June 2021

11/100. மழை நாட்கள்

 பால்யத்தில் பள்ளி விடுமுறை

என்று மகிழ்ந்தாலும் 

புயல் கொணர்ந்த அந்த 

பெருமழையில் சிறுநீர் 

கழிக்கவே சிரமமாக இருந்தது !

பல்கலை தேர்வுகளை 

ரத்து செய்ய வைத்தது

தள்ளி தள்ளி போகும் தேர்வுகளால்

மீண்டும் மீண்டும் புத்தகத்தை 

புரட்ட வைத்தது 

கல்லூரி நாளின் கடும்மழை !

வேளச்சேரி அறையில்

இருந்த போது பரணில் 

ஏறி படுக்க வைத்தது

பலத்த மழை !

ஓர் இரவு திருச்சிக்கும் 

அடுத்த இரவு நெல்லைக்கும் 

பயணித்தபோது 

கூடவே தாலாட்டியது 

பருவ மழை !

தொலைதொடர்பை தொலைத்து 

மனிதர்களை அலையவிட்டு 

மனிதத்தின் அவசியத்தை 

கற்று தந்தது 

மாநகரில் பெய்த மாமழை !

காலை முதல் காற்றோடு 

கொட்டி தீர்த்து 

மாலையில் தேநீர் இடைவேளை

விட்டு மீண்டும் கொட்டி 

தீர்த்தது  வர்தா வரவழைத்த 

கொடூர மழை ! 

பருவ மழை காலத்தில் 

எங்கள் ஊரை கழுவி 

செந்நீராய் ஓடையில் 

ஓடும் அந்த மழை 

அழகான கவிதை !!!





















Wednesday 2 June 2021

10/100. மழை நனைந்த...

ஒதுங்கி நின்றாலும் 

நன்றாக நனைந்துவிட்டேன்.

வலுவாக கொட்டுகிறது வானம் !

எட்டு பிள்ளைகள் பெற்று 

ரெண்டை பறிகொடுத்த அம்மா

என்னை தேடுவாள் !

அறுவரையும் ஒருபோதும்

நனைய விட்டதில்லை !

அப்பா எங்களை

கண்டுகொள்வதில்லை 

மழை விட்டால் 

கூத்தடிக்க கிளம்பிவிடுவார் !

குளிரால் நடுங்குகிறேன் 

அம்மா எப்போதும் குளிர் 

தெரியாமல் அணைத்து 

கொள்வாள் ! 

இப்போது சென்றால் 

என்னை திட்டுவாளா 

என்னை கண்டு மகிழ்வாளா ?

- மழையில் நனைந்த கோழிக்குஞ்சு !!!