Thursday 17 March 2022

விக்கெட் கீப்பர்


விக்கெட் கீப்பர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் எல்லா நாட்டு விக்கெட் கீப்பர்களும் ஓரளவு பேட்டிங் ஆட கூடியவர்கள்.

கில்கிறிஸ்ட், ஜேக்கப்ஸ், கலுவிதாரனா ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். பவுச்சர், மொயின் கான் அதிரடி ஆட்டம் ஆடுபவர்கள். ஸ்டூவர்ட் கேப்டன் கீப்பர். ஆண்டி பிளவர் நட்சத்திர ஆட்டகாரர். இந்தியாவில் நயன் மோங்கியா என்றாவது நல்லா பேட்டிங் ஆடுவார். அவரை விட ஸ்ரீநாத் காட்டும் அதிரடி ஆறுதலாக இருக்கும்.

மோங்கியா இல்லாத போட்டிகளில் வந்து போகும் சபா கரீம், எம்எஸ்கே பிரசாத் ரொம்ப சுமார் ரகம்.

மோங்கியாவுக்கு காயம் ஏற்பட இந்தியா சமீர் டீகே, தீப் தாஸ் குப்தா, விஜய் தாகியா, அஜய் ரத்ரா, பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் என பல விக்கெட் கீப்பர்களை முயற்சித்து பார்த்தது. வெற்றி பெற்றவர் டிராவிட் மட்டுமே.

அவருக்கும் சுமை அதிகரிக்க அணியில் நுழைந்தவர் தோனி.

இதுவரை ஒருநாள் போட்டியில் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் மூவர் மட்டுமே. டிராவிட், தோனி, ராகுல்.

சில நாடுகள் பேட்ஸ்மேன்களை விக்கெட் கீப்பராக்கி வெற்றி கண்டன. உதாரணம் மேட் பிரையர்.

விக்கெட் கீப்பர் கேப்டன் அபூர்வமான ஒன்று அக்காலத்தில். ஸ்டூவர்ட, ஆண்டி பிளவர், காலேத் மசூத், தைபூ என விரல் விட்டு எண்ணி விடலாம்.

இதில் தைபூ என்னை மிகவும் கவர்ந்தவர். அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது கேப்டன் ஆனவர். போராடினார் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதே தான் பிரண்டன் டெய்லருக்கும்.

தோனி உலகக் கோப்பை வென்ற பின், டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் கேப்டன் என்பது பேஸனாக மாறியது. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் முயற்சித்துவிட்டன. தில்ஷான் ஒருபடி மேலே போய் கேப்டனான போது விக்கெட் கீப்பராக மாறினார்.

தற்போது விக்கெட் கீப்பர் யார் வேண்டுமானாலும் ஆகலாம் போல. சில போட்டிகளில் பீல்டராக விளையாடுபவர் சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடுகிறார்.  பயிற்சியின் போது என்ன பீல்டிங் பயிற்சி செய்வார்களோ?

இதை துவங்கி வைத்தவர் சங்ககாரா என்றே தோன்றுகிறது. டெஸ்டில் அவர் பேட்ஸ்மேன் மட்டுமே. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர்.

எனக்கு தெரிந்த வரையில் கஸன் திலகரத்னே, ஜிம்மி ஆடம்ஸ் ஆகியோர் பெரிய அளவில் பவுலிங்கும் விக்கெட் கீப்பிங்கும் செய்துள்ளனர்.

ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பில் 11 வீரர்களும் பந்து வீசினார்கள். அதில் அஜய் ரத்ராவும் பந்து வீசினார்.


Saturday 5 March 2022

சென்னை முருகன் கோவில்கள்

அழகென்றால் முருகன், தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள திருத்தலங்கள்.

1. வடபழனி ஆண்டவர் 

நகரின் மைய பகுதியான வடபழனியில் உள்ளது இந்த கோவில். திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் நிதி வழங்கிய கோவில்.

கொஞ்சம் செயற்கை தன்மையோடு இருக்கும் கோவில்.

2. குன்றத்தூர் 

புறநகர் பகுதியான குன்றத்தூர் பகுதியில் சிறிய குன்றில் உள்ளது இந்த முருகன் கோவில். வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார் முருகன்.

வடபழனி, தாம்பரம், பூந்தமல்லி பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளே செல்ல வேண்டும்.

3. வெங்கட சுப்பிரமணிய சுவாமி, வளசரவாக்கம் 

நகர மைய பகுதியில் உள்ளது. உயரமான சிலை வடிவில் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து ஆறு வாரம் எலுமிச்சம் பழம் வைத்து இந்த முருகனை வணங்கினால் நினைத்ததை அருள்கிறார். 

சந்தோஷி மாதா சன்னதியும் உண்டு.

காதல் கோட்டை படத்தில் ஒரு காட்சியை இந்த கோவிலில் எடுத்துள்ளார்கள்.

4. மச்சக்கார பாலமுருகன், வானகரம் 

சென்னை போரூர் டோல்கேட் அருகே மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாலிக்கிறார் மச்சக்கார பாலமுருகன். கேட்ட வரம் தருபவர் மச்சக்கார பாலமுருகன்.

பிச்சைக்காரன் படம் இந்த கோவிலில் எடுத்துள்ளார்கள்.

5. அறுபடை வீடு, பெசன்ட் நகர்

அறுபடை வீடுகளில் முருகன் எப்படி உள்ளாரே அதே போல் ஒரே இடத்தில் பார்க்க பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில் செல்லலாம். கடற்கரை அருகில் அழகான கோவில்.

6. குமரன் குன்றம், குரோம்பேட்டை

குரோம்பேட்டை அருகே இயற்கைச் சூழலில் குன்றின் மீது உள்ளது குமரன் குன்றம் கோவில்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.

7. வல்லக்கோட்டை முருகன் 

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஓரகடம் செல்லும் சாலையில் உள்ளது வல்லக்கோட்டை.

1200 ஆண்டுகள் பழமையான கோவில். இந்தியாவில் உயரமான முருகன் சிலை உள்ள கோவில்.

தென்மாவட்டங்களில் திருச்செந்தூர் என்றால் வடமாவட்டங்களில் வல்லக்கோட்டை.

இருசக்கர வாகன பயண பிரியர்களுக்கு சிறப்பாக இருக்கும் கோவில்.

சைதாப்பேட்டை மற்றும் தாம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

8. திருப்போரூர் கந்தசாமி

சுயம்புவாக உருவாகிய முருகன் அருள்பாலிக்கும் கோயில் திருப்போரூர் கந்தசாமி கோயில்.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர்.

வெளிநாடு செல்ல நினைப்போர் அவசியம் செல்ல வேண்டிய கோவில்.


கந்தகோட்டம் நான் சென்றதில்லை.



Thursday 3 March 2022

இனிப்பு

விடுதியில் இருந்து 

வீட்டுக்கு வரும் போதெல்லாம்

தவிட்டு மிட்டாய் 

வாங்கி வருவாள் 

பெரிய அக்கா !

எல்லா புதிய 

மிட்டாய்களையும் எனக்கு 

அறிமுக படுத்துவது 

சின்ன அக்கா !

தாழையூத்தில் இருந்து 

பால்பன் வாங்கி 

வருவார் தாத்தா !

பழைய இரும்பு 

சாமான்களை வைத்து 

கொய்யாப்பழம் வாங்கி 

தருவது ஆச்சி !

நான் விடுதியில் 

இருக்கும் போது 

ஞாயிற்றுக்கிழமை பார்க்க 

வரும் அம்மாவின் 

கூடையில் தவறாமல் 

இருக்கும் கடலை மிட்டாய் !

மாமாவின் பங்கு 

மாறாந்தை மாம்பழங்கள் 

சொடக்கு தக்காளி 

இலந்தைப்பழம் என்று 

நீளமானது !

ரசகுல்லாவை அறிமுகபடுத்தியது 

கார்த்தி அண்ணன் 

அதன் தித்திப்பில் 

அதற்கு பிறகு சாப்பிடவே 

இல்லை !

இனிப்பே பிடிக்காத 

மனைவி எப்போதாவது 

கேட்கும் டயரி மில்க்கில் 

பங்கு கிடைக்கும் !

மகள் வேண்டாமென்றோ 

பிடிக்காமலோ தூக்கி 

எறியும் பிஸ்கட்கள் 

சுவையானவை !!!