Tuesday 24 January 2023

ஆக்காண்டி - நூல் விமர்சனம்


எழுத்தாளர் வாசு முருகவேலின் நூல்களில் நான் வாசித்த நாலாவது நூல். வழக்கம் போல வேறு களத்தை எடுத்து எழுதியுள்ளார். இந்த முறை இலங்கையின் கிழக்கு பகுதி தான் களம்.

ஈழ இலக்கியத்தின் போக்கு பற்றி முன்னுரையில் பேசும் வாசு, ஈழ இலக்கியத்திற்கு தனது மனதில் பட்டதை எழுதிக் கொண்டே இருப்பேன் என்கிறார்.

134 பக்கங்கள் மட்டுமே கொண்டது தான் ஆக்காண்டி நாவல். ஆக்காண்டி என்றால் ஆள்காட்டி பறவை. [ஆக்காண்டி - ஆக்காட்டி - ஆள்காட்டி]

தொடர்ந்து எழுதியிருக்க வாய்ப்பில்லை, கொஞ்சம் எழுதி கண்ணீர் வடித்து, கொஞ்சம் இடைவெளி விட்டு, என்று தான் எழுதி இருக்க முடியும்.

வார்த்தைகளாக கடக்க முடியவில்லை, வலிகளாக மனதில் ஒட்டி கொள்கிறது.

"இலங்கையில் கொழும்பு செட்டி தெருவில் மட்டும்தான் புத்தர் சிரிப்பார். அவர் சீனாவில் இருந்து வந்த புத்தர்".

இவரின் தேர்ந்த எழுத்துக்கு ஒரு சோற்றுப்பதம் மேலே உள்ள வரிகள்.

"பல்லேகல்லவின் தீச்சாம்பலில் இருந்து எழும்பிய கரும்புகைகள் நீல மேகத்தில் உறைந்து ஸ்ரீ தலதா மாளிகையைக் கடந்து போன போது இன்னும் மக்காமல் தங்கத்தாலான பேழையில் பத்திரமாக இருக்கும் புத்தரின் புனித ஒற்றைப் பல் இளித்து கொண்டது."

இந்த வரிகள் எள்ளலலா? வலியா? என்பதை வாசிப்பவர் வசம் விட்டுவிட்டார்.

ஆக்காண்டி, ஆக்காண்டி 

எங்கே முட்டை வைத்தாய்...

என்ற நீண்ட கவிதையோடு முடித்திருக்கிறார். 

காத்திருப்பேன் இவரின் அடுத்த புத்தகத்துக்கு.





 

Friday 20 January 2023

83 - படம்

தற்போது தான் இந்த படம் பார்த்தேன். கண்களை கலங்க வைத்த படம்.

கண்கள் கலங்கியதற்கு காரணம் எனது கிரிக்கெட் ஆர்வம் என்பதை தாண்டி படமாக்கிய விதமும் உள்ளது. நான் பிறப்பதற்கு மூன்றாண்டு முன்னாடி நடந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன் ரன்வீர் சிங், நடித்த விளம்பரங்களை பார்த்த பின், அந்த முகத்தை கண்டாலே எரிச்சல் வரும் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் கபில்தேவ் பாத்திரத்திற்கு  சரியான தேர்வு. குறிப்பாக ஆங்கிலம் பேசும் காட்சிகளில் இயல்பான நடிப்பு.

கதாபாத்திரங்கள் தேர்வு தான் படத்தின் முதல் பலம். கிட்டத்தட்ட எல்லா வீரர்களின் முகத்தை ஒத்த முகங்களை தேர்வு செய்துள்ளார்.

ஜிம்பாப்வே உடனான போட்டியில் குளிப்பதற்குள்ளாக நிறைய பேர் அவுட் ஆகிறார்கள் என்ற காட்சி விளக்கம் அருமை. உலக சாதனை படைத்துவிட்டோம் என்ற விசயமே தெரியாமல் கபில் பேட்டிங் ஆடுவது தரம்.

இந்து - மூஸ்லிம் என பிரிந்திருக்கலாம், கிரிக்கெட் மூலம் இந்தியர் என இணைவர் என்ற இந்திரா காந்தியின் வியூகம்.

சீக்காவாக ஜீவா, சீக்கா கிரிக்கெட் கமெண்டரி மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் வாய் வார்த்தை மட்டும் தான் காட்டியுள்ளார் என்று விளங்குகிறது.

வெங்கசர்காரின் காயம், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் எது என்றே தெரியாத பவுலர்கள், சீனியர் கவாஸ்கர் ஆலோசனை என அந்தகால கிரிக்கெட் கண் முன்னே விரிகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கு கோப்பையை வென்ற கபில்தேவ்வின் கிரிக்கெட் பேசப்பட வேண்டிய உண்மை.

கிரிக்கெட் தாண்டி, கிரிக்கெட் வீரர்களின் உறவுகள், ரசிகர்களின் மனமாற்றம் என தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை.

மான்சிங்கின் அணுகுமுறையும் ரசிக்க வைக்கிறது.


Wednesday 4 January 2023

எப்பா போப்பா

அலுவல் முடித்து 

மெட்ரோ பணிகள் 

நடைபெறும் சாலையில்

'எப்பா போப்பா' என 

நெரிசலில் வாகனத்தை 

நகர்த்தி வீடு வந்து 

சேர்ந்தால் 

'எப்பா வாப்பா' என 

விளையாட அழைப்பாள் !

வெற்றி தோல்வி இல்லாத 

மகிழ்ச்சி மட்டும்

தரும் விளையாட்டுகள் 

மகளின் கண்டுபிடிப்பு !!!

           *** 

வெள்ளிக்கிழமைகள் என்றும் 

மகிழ்வை தரும் 

அடுத்த இரு நாட்கள் 

விடுமுறை என்பதால் !

அவளும் மகிழ்வாள் 

அவளின் வேலை விகிதத்தில் 

எந்த மாற்றமும் இல்லை 

என்றாலும் 

காலையில் எழுந்து கொள்ளும் 

கால அட்டவணை 

மாறுவதால் !!!

        *** 

திருமண அழைப்பிதழில் 

மணமக்களின் தாத்தா

பேரை பார்த்ததும் 

உதட்டோரம் ஒரு புன்னகை

உதயமானது

எனக்குள் இருக்கும்

சாதி பாசத்தால் !!!

    ***

எவ்வளவு போதையில்

இருந்தாலும் மனைவி 

சொன்ன காய்கறிகளை

வாங்குவான் ! 

மதுக்கடை அருகில்

தள்ளுவண்டி காய்கறி 

வியாபார தந்திரம் !!!

      ***

படித்த நாயே இங்கு 

குப்பை கொட்டாதே என்று 

எழுதியிருந்த இடத்தில் 

படித்த நாயே எங்கு 

குப்பை கொட்ட வேண்டும் ?

என்று எழுதி சென்றான் 

அந்த போராளி !!!

     ***

அகவை 58 ஆனபின்

அடிக்கடி மகனின்

மாநகர் வீட்டுக்கு வருவதாக 

சொன்னாள் அம்மா!

ரயில் கட்டணம் 

பாதி என்பதால் !

அம்மாவுக்கு 58 ஆகும் போது 

அரசியல்வாதிக்கும் 

வயதாகி இருந்தது !!!

   ***

பள்ளி வளாகம் 

சுத்தம் செய்யப்பட்டது !

சுவர்களில் வர்ணம் 

பூசப்பட்டது !

மைதானத்தில் இருந்த

காட்டு செடிகளும் 

கருவேலம் புதர்களும் 

அகற்றப்பட்டது !

சாலையில் இருந்த 

புழுதியின் சுவடு 

தெரியவில்லை !

முதல்வரின் திடீர் 

வருகைக்காக அரசுப்பள்ளி

ஆபரணங்கள் அணிந்து 

கொண்டது !!!

    ***