Friday 29 July 2022

பயணம்

பொதுவாக தமிழர்களுக்கு பயணங்கள் என்பது கோவிலுக்கு செல்வது தான். அந்த பயணங்கள் செலவு வைத்தாலும் புத்துணர்வு தரக் கூடியவை.

மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டை தாண்டி பத்து நாட்கள் வரை விடுமுறை உண்டு. அதனால் அவர்களுக்கு பெரிய பயணங்கள் சாத்தியம்.
நமக்கு தொடர்ச்சியாக மூணு நாள் விடுமுறை என்பதே பொங்கலுக்கு மட்டும் தான்.

குழந்தை இல்லாதவர்களை அந்த கோவிலுக்கு / இந்த கோவிலுக்கு போய்ட்டு வா, குழந்தை பிறக்கும் என்பார்கள். நிச்சயம் நடக்கும். காரணம் புது இடம் இறுக்கமான சூழலை தளர்த்தி நல்ல புத்துணர்வு தரும். வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் பெண்களை கேள்விகளால் குடைய சொந்தங்கள் உண்டு. ஆண்களுக்கும் ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்கும் கும்பல் உண்டு. இதனால் ஏற்படும் மன இறுக்கம் மனைவியோடு புதிய இடத்திற்கு செல்வதால் குறையும்.

வாழ்க்கை பிடிப்பில்லாமல் போய் விரக்தி அடைந்தவர்கள் கூட வள்ளலார் சன்மார்க்க நிலையமோ, பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமமோ சென்று தெளிவு பெற்றதாக கேள்வி பட்டுள்ளேன்.

ஆட்டோகிராப், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இதுவே காட்சி படுத்தப்பட்டுள்ளது. (கற்றது தமிழில் எதிர்மறை காட்சிகள்).

தமிழகத்தை தாண்டி தமிழர்கள் பயணம் செல்ல பெரிதும் விரும்புவதில்லை. காரணம் மொழி பிரச்சினை. கல்லூரி காலத்தில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். கோவா பயணம். பெரிய திட்டமிடல் இருந்தாலும் கனவாகவே போய் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் மொழி பிரச்சினை இல்லை. வசதிக்கு தகுந்தவாறு பிற மாநிலங்களுக்கு பயணிக்கலாம். அதே சமயம் தமிழ்நாட்டில் நிறைய பார்க்காத அருவிகள், மலைகள், காடுகள், கடற்கரைகள் இருக்கும்.

ஆண்டுகளுக்கு மூன்று நான்கு நாட்கள் என ஒதுக்கி அதுக்காக பணமும் ஒதுக்கினால் நிச்சயம் பலன் இருக்கும்.

Wednesday 20 July 2022

2022 கல்லூரி நண்பர்கள் சந்திப்பு

 2022 கல்லூரி நண்பர்கள் சந்திப்பு - கிரிக்கெட் கண்ணோட்டத்தில்.

ஆடிய 11 (அகர வரிசையில்)

1.அஜு

2. செல்லத்துரை 

3. டேனியல் விவின்ராஜ் அம்புரோஸ் ✈️

4. தர்மேந்திரன் 

5. நந்தகுமார்

6. பழனி செல்வகுமார்

7. பிரதீப் 

8. விஜய் சேகர் 

9. ஜென்னர் வி ராயன் ✈️

10. ஷிபு 

11. விஜய்யின் நண்பர் ✈️

மழையின் காரணமாக போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் நிலவியது.

கேப்டன் விஜய் அனைத்து வீரர்களுக்கும் சாதகமான ஆடுகளத்தை தேர்வு செய்தார்.

ஆடுகளத்திற்கு அனைத்து வீரர்களும் வந்த பின் நான், செல்லா, நந்தா கடைசியாக இணைந்து கொண்டோம்.

சிவந்த கண்களோடு வந்திருந்தார் நட்சத்திர வீரர் ஷிபு.

சிரித்த முகத்தோடு செல்லத்துரை.

எப்போதும் இளமையாக அஜு. 

வருவாரா மாட்டாரா என்ற நிலையில் வந்த பிரதீப்.

சுருள் முடி குறைந்து போன நந்தா.

தலைமுடியில் பாதியை தானமாக கொடுத்த டேனி.

ப்ரெஞ்ச் தாடி முட்டை கண்ணுடன் தர்மா.

ரவுண்ட் நெக் டீசர்ட், ஜிம் பாடி ஜென்னர்.

நரைத்த தலை, கண்ணாடி பழனி.

பூப்போட்ட சட்டை விஜய்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக் புன்னகை முகத்தோடு விஜய் நண்பர்.

டாஸில் வென்ற கேப்டன் முதலில் சூப் ஆர்டர் செய்தார். சூப்பின் சூட்டில் சாம், ஷ்யாம் பற்றி பேச்சுகள் வந்தது.

அடுத்து ஆடுகளத்தில் தன்மையை அறிந்து சிஸ்லர்ஸ் ஆர்டர் செய்தார்.

அப்போது வெளிநாட்டு உணவுகளை பற்றி பேசினார்கள் நட்சத்திர வீரர்கள் டேனி மற்றும் ஜென்னர்.

கடைசியில் அதிரடி ஆட்டமாக பழச்சாறுகள், அந்தாக்சரி மாதிரி விட்ட இடத்தில் தொடங்கி எல்லாரும் ரசித்தோம். 

முடி பற்றிய பேச்சுகள் ப்ரீஸிடம் வந்து முடிந்தது.

நடுவில் பையா கரம் பாணி, கரம் பாணி என்ற செல்லத்துரையின் சிங்கிள்கள்.

அதிரடியாக, விளையாட்டாக கழிந்தது அந்த இரண்டரை மணி நேரம். 2022ல் பொறிக்கப்பட வேண்டியது.

வெளியே வந்து வெற்றி கோப்பைக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள்.

கடைசியாக ஓரணியில் இருந்து ஐபிஎல்க்கு பிரிவது போல அவரவர் வீட்டுக்கு திரும்பினோம்.

இயந்திர வாழ்க்கை நடுவே 

இயந்திர பொறியாளர்கள் 

சந்திப்பு !

கல்லூரி நண்பர்கள்

குடும்ப விசாரிப்புகள் 

பேராசிரியர் பற்றிய பேச்சுகள் 

சினிமா இல்லை 

அரசியல் இல்லை 

அரட்டை இருந்தது !

அழகாய் அமைந்தது 

அந்த நிமிடங்கள் !

நிறைய பேச நேரம் 

இல்லை என்றாலும் 

முகம் பார்த்து 

சிரித்தது நிறைவாக 

இருந்தது !!!















Saturday 16 July 2022

டேனி - ஜென்னர் - செல்வக்குமார்

செல்வகுமார் தான் முதலில் தெரியும். ஜான்ஸ் பள்ளியில் ஆங்கில மீடியம் படித்தவன். 

ஜான்ஸ்ல் அவனை பார்த்திருக்கிறேன். கல்லூரியில் அவன் முதல் பெஞ்ச். 

கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்தால் ஏதாவது உளருவான். அதை வைத்தே அவனை ஓட்டலாம் அது தான் செல்வகுமார் ஸ்பெஷல்.

முதல் செமஸ்டரில் நிறைய பேர் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ்ல் திணற செல்வகுமார் மட்டும் அதில் தேறி இங்கிலீஷ்ல் கோட்டை விட்டவன்.

ஜென்னர் ரெண்டாவது பெஞ்ச். ஆள் பார்க்க முரட்டு ஆசாமி ஆனால் அவனின் திறமைகள் பெரியது. குறிப்பாக அந்த செர்னோபில் ப்ரசண்டேசனில் அசத்தி விட்டான். ஜென்னர் இப்படி பேசுவானா என்று வியந்த நாள். நல்ல ப்ரசண்டேஷன்.

ஜென்னர் பற்றிய அத்தியாயத்தில் என்எஸ்எஸ் கேம்ப் இல்லாமல் எழுத முடியாது. எந்த பங்ஷன் என்றாலும் ஜென்னர் தான் மெஸ் கமிட்டி ஆள். என்எஸ்எஸ் கேம்பில் சற்றே வெயில் வரவும் கிளம்பி விடுவான் ஜூஸ் போட. ரெண்டு ஜுனியர்களை அழைத்து கொண்டு. ஜூஸ் பாத்திரத்தை ஜுனியர்கள் தூக்கி வருவார்கள். அழகேசன் கண்ணெதிரே படும் போது ஜூஸ் பாத்திரத்தை தோளில் வைத்து கொள்வான் பாகுபலி போல.

ஜென்னர் ரூமில் தான் எனது பிரசன்டேஷன் சாப்ட் டிரிங்க்ஸ் சைட் எபட்ஸ் தயாரித்தேன். நிறைய உதவினான்.

ஜென்னர் ரத்த தான ஸ்பெஷலிஸ்ட். அவன் காய்ச்சல் தலைவலி என்று லீவு எடுப்பதும் அபூர்வம்.

இன்று கப்பலேறி உலகம் சுற்றுகிறான். அங்கும் மெஸ் கமிட்டியை நிச்சயம் கைக்குள் போட்டிருப்பான்.

டேனி பாளையங்கோட்டை பணக்காரன். ரோஸ்மேரி புராடக்ட். இன்று கனடா வாழ் இந்தியன். 

விடுதியில் இருந்து சனி ஞாயிறு வீட்டுக்கு சென்றுவிடுவான். ஹாஸ்டலில் அதிகம் பார்க்க முடியாது. ஆனால் கல்லூரியில் எனது பெஞ்ச். ஒருபக்கம் சாகுல் என்றால் இன்னொரு பக்கம் தர்மா, டேனி மாறி மாறி உட்காருவார்கள். 

முதல் இரண்டு வருடங்கள் நான் செய்யும் சேட்டைகள் டேனி கணக்கில் எழுதப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்கள் எனது கணக்கானது. தர்மா மாட்டுவதே இல்லை.

டேனி ஒரு முறை, அமுக்கினால் ஷாக் அடிக்கும் பேனா கொண்டு வந்து எழுதி பார்க்க சொன்னான். 200 ரூபாய் குடுத்து பேனா வாங்கி இருக்கான் லூசுப்பய என்று எழுதி பார்க்க தூண்டில் போட்டனர் சிலர். அப்போது எழுதாமல் வகுப்பு நடக்கும் போது அமுக்கி ஷாக்கில் மாட்டி கத்தினேன். துரை பாபு வகுப்பு என்பதால் சிக்கலில்லாமல் முடிந்தது.

அதே பேனாவால் எங்களுக்கு பின் பென்ஞ்ல் இருந்து டேனி முதுகில் குத்தி பழி தீர்த்தனர்.

மதுரையில் கேம்பஸ் இண்டர்வியூ முடித்து நள்ளிரவில் திருநெல்வேலி வந்து டேனி வீட்டில் ஓர் இரவு தங்கினேன். மதுரை திருநெல்வேலி பஸ்ஸில் கண்களால் கைது செய் படம் ஓடியது. 

டேனி கண்களால் கைது செய்தது அவனது திருமணத்தின் போது தான் தெரியும். டேனி சீக்ரட் மிஷன் காதல்.

டேனி - ஜென்னர் - செல்வகுமார் மூவரையும் இணைக்கும் புள்ளி எது?

என் வாழ்வில் இணைத்த புள்ளி, 2006ல் அம்மா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்த போது மூவரும் வந்து பார்த்தனர். நேரம் தவறாமல் மூன்று வேளையும் சாப்பாடு கொண்டு வந்தனர். 

இன்றும் போன் பண்ணினால் என்னை விசாரிக்கும் முன் அம்மா எப்படி இருக்காங்க என்ற விசாரிப்பே முதலில் இருக்கும்.

அதற்கு பின் ஊருக்கு வந்த போது டேனி போன் மட்டுமே டவர் இருந்தது. அதனால் தான் ஊரை கண்டுபிடிக்க முடிந்தது.

டேனியின் ரிலையன்ஸ் போனில் இன்னொரு விசேஷம் யாரையாவது வெறுப்பேத்த நினைத்தால் ஒரே மெஜேஜ்ஜே பத்து முறை அனுப்ப முடியும். டேனி இறுதி ஆண்டில் அதை செய்தான்.

ஜென்னர் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. டேனி செல்வகுமார் திருமணங்களுக்கு சென்றேன்.

போன வாரம் நடந்த சந்திப்பில் உன் பொண்ணு எப்படி இருக்கா? உன் பையன் நல்லா இருக்கானா என்ற பேச்சுகள்.

எங்களுக்கு வயதாகிறது. நட்பு மட்டும் இளமையாக உள்ளது !!!


Wednesday 6 July 2022

தோனி 41

சாதாரண போட்டியில்
சாதாரண அணியுடன்
அறிமுகமாகி
முக்கிய போட்டியில்
முன்னணி அணியுடன்
முடித்து கொண்டான்
சர்வதேச கிரிக்கெட்டை!

ஸ்ட்ம்புக்கு பின்னால்
இருப்பவனின் கிரிக்கெட்
ரன்அவுட்டில் ஆரம்பித்து
ரன்அவுட்டில் முடிந்துவிட்டது!

ஏழாம் தேதி ஏழாம் மாதம் பிறந்த
ஏழாம் நம்பர் ஜெர்சிகாரன்
ஏழு கேப்டனுக்கு கீழ்
சர்வதேச கிரிக்கெட்டில்
ஆடியவன் ! 

சர்வதேச கிரிக்கெட் மைதானம்
இல்லா ஊரில் இருந்து
கிரிக்கெட்டுக்கு வந்தவன்
நாடு முழுக்க எல்லா 
மைதானத்திலும் ரசிகர்களை
குவித்தவன் ராஞ்சி 
நாயகன் !

இரண்டே ஆண்டுகளில்
கேப்டனாக ஆனவன்
இரண்டு உலகக்கோப்பை 
வென்றவன் !!!