Saturday 21 May 2022

ஓய்வறியா உழைப்பாளி



நாவல் பழ நிறத்துகாரர்

கோவணமும் துண்டும்

முழு நேர உடை

வேட்டி பகுதி நேர ஆடை !


ஊரே பயிர்செய்ய

ஆறை நம்பி இருந்த போது

கிணறை வெட்டி விவசாயம்

செய்தவர் !


ஆடும், மாடும் அவரது

அணிகலன்கள் !

மகனை ஆசிரியராக்கிய

பின்பும் ஆட்டாம்புழுக்கை

வாசத்தில் தொழுவத்தில்

தூங்குவது அவரது வழக்கம் !


விவசாயத்திலும் கால்நடை துறையிலும்

முனைவர் பட்டம் வாங்கும்

முனைப்பு உண்டு

படிப்பில்லா முதியவருக்கு !


காசநோய் தாக்கத்தால்

அரசு மருத்துவமனையில்

இருந்த நாளில்

வயலில்லா வாழ்க்கை,

ஓய்வறியா உழைப்பாளியின்

மனதை பாதித்தது!


மரணத்தருவாயில்

'மாட்டை பிடித்து கட்டு' 

'கடலைச்செடி வாடி கிடக்கு' என

மருவிய அந்தக் கிழவன்

"மாடசாமி"

எங்கள் தாத்தா !!!

சமையலறையில் நான்


கொடிய நோய்

கோரத்தாண்டவம் ஆடி

ஊரடங்கால் வீடடங்கி

இருந்த நாளில்

உணர்ந்தேன் சமையலறையின்

வெப்பநிலையை !


மனைவியின் பணியை

சமநிலைப்படுத்த

சமையலறையின் பாலபாடம்

கற்றேன் !


சமையலும் வில்லில்

இருந்து கிளம்பி செல்லும்

அம்பு போலத்தான்

யாரும் எய்தலாம்

ருசி எனும் இலக்கை

அடைய பயிற்சி தேவை !


சர்க்கரை பொங்கல்,

அதன் சுவையில்

என் அம்பு இலக்கை

அடைந்த நாளில்

உணர்ந்தேன்

சமையல் கலை என்று !!!

Friday 6 May 2022

ஜிம்பாப்வே டாலர்

ஜிம்பாம்வே நாட்டை இந்தியர்கள் அதிகம் கேள்விபட்டிருப்பார்கள். கிரிக்கெட்டை வைத்து. கபில்தேவ் 175 ஜிம்பாப்வே உடனான போட்டியில். 1999 உலக கோப்பையில் ஜிம்பாப்வே உடனான போட்டியில் 3 ரன்களில் தோற்றதும் நினைவை விட்டு நீங்காதவை.

ஜிம்பாப்வே ஆப்பிரிக்க கண்டத்தில் தென் பகுதியில் உள்ள நாடு.

பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் ஜிம்பாப்வேவை படுத்தும் பாட்டை பார்ப்போம்.


1980ல் ரொடிஸியா ஜிம்பாப்வே என பெயர் மாறிய போது ரொடிஸிய டாலர் ஜிம்பாப்வே டாலராக மாறியது.

ஜிம்பாப்வே டாலர் நோட்டுகளில் தலைவர் படங்கள் இடம் பெறுவதில்லை.

பொதுவாக அந்த நாட்டில் இயற்கையாய் அமைந்த அடுக்கு பாறை, கரிபா அணை, யானை ஆகியவை இடம் பெற்றுள்ளது.


முதல் ஜிம்பாப்வே டாலர் 2,5,10,20 மதிப்பில் 1980ல் வெளியிடப்பட்டது.

கவர்னர் மாறிய பின் அதே மதிப்புள்ள நோட்டுகள் 1983லும் வெளியிடப்பட்டது.

90 களில் சில மாற்றங்களுடன் 5,10,20,50,100,500,100 நோட்டுகள் வெளியிடப்பட்டது.


2003ல் பணவீக்கத்தை சமாளிக்க ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் Standard chartered bank ஆறு மாத வேலிடிட்டி உள்ள bearer cheque வெளியிடப்பட்டது. 5000, 10000,20000, 50000 & 100000 மதிப்பில்.



அதற்கு பின் ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி 5000, 10000 & 20000 மதிப்பில் bearer cheque 2003லும் (உலகக்கோப்பை நடந்த அதே ஆண்டில்) 50000, 100000 மதிப்பில் 2005-2006ல் வெளியிட்டது. 


அதற்கு பின் அதிரடியாக 1000 டாலர் (ZWD)= 1 புதிய டாலர் (ZWN) என 2006ல் மாற்றினார்கள்.

2ம் ஜிம்பாப்வே டாலர்.

1 சென்ட் (100 சென்ட் = 1 டாலர்), 5 சென்ட், 10 சென்ட் & 50 சென்ட். 1$, 5$,10$,20$,50$,100$,500$,1000$,10000$ & 100000$ என்ற மதிப்பில் bearer cheque 2006ல் வெளியிடப்பட்டது.



2007ல் 5000, 50000,200000,250000,500000 & 750000 மதிப்பில் bearer cheque வெளியிடப்பட்டது. இதில் 750000 நோட்டில் மட்டும் மின்னும் பட்டைகள் இருந்தன. (பாதாளத்தில் இருந்தாலும் கண்டுபிடிக்க கூடிய மேக்கனடிக் ஸ்டிரிப் அல்ல.)


2008 ல் 1 மில்லியன், 5 மில்லியன், 10 மில்லியன், 25 மில்லியன்,50 மில்லியன், 100 மில்லியன், 250 மில்லியன்,500 மில்லியன் என bearer cheque வெளியிடப்பட்டது.

5 பில்லியன், 25 பில்லியன்,50 பில்லியன் & 100 பில்லியன் என special agro cheque நோட்டுகளும் வெளியிடப்பட்டது. (1 பில்லியன் = 1000 மில்லியன்).


அதற்கு பின் cheque முறையை கைவிட்டு நோட்டுகளாக வெளியிடப்பட்டது. 

10^10 ZWN=1 ZWR 

3ம் ஜிம்பாப்வே டாலர்

1, 5,10,20,100,500,1000,10000, 20000,50000,100000, 500000, 1 மில்லியன்,10 மில்லியன்,50 மில்லியன்,100 மில்லியன்,200 மில்லியன்,500 மில்லியன்,1 பில்லியன்,5 பில்லியன்,10 பில்லியன்,20 பில்லியன்,50 பில்லியன்,10 ட்ரில்லியன்,20 ட்ரில்லியன்,50 ட்ரில்லியன் &100 ட்ரில்லியன். நோட்டுகள் 2008ல் தொடங்கி 2009 வரை வெளியிடப்பட்டது. (ட்ரில்லியன் = 1000 பில்லியன்)


2 பிப்ரவரி 2009ல் 4ம் ஜிம்பாப்வே டாலர் உதயமானது.

10^12 ZWR = 1 ZWL

1, 5,10,20,50,100 &500 மதிப்பில் வெளியிடப்பட்டது. இதுவும் ஏப்ரல் 2009ல் கைவிடப்பட்டது.


அதற்கு பின் ஜிம்பாப்வேயில் அமெரிக்க டாலர் பரவலாகவும் தென்னாப்பிரிக்கா ரான்ட், சீன யுவான், இந்திய ரூபாய், ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர், போட்ஸ்வானா புலா ஆகியவை குறைந்த அளவிலும் பயன்படுத்த பட்டது.



ஆனால் ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி சும்மா இருக்கவில்லை.

2016 ல் 1 அமெரிக்க டாலர் = 1 ஜிம்பாப்வே பாண்ட் நோட் என 2 டாலர் மற்றும் 5 டாலர் நோட்டுகளை வெளியிட்டது.


2019 ல் பாண்ட் நோட் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு ஜிம்பாப்வே டாலர் என்ற பெயரில் 2 மற்றும் 5 டாலர் நோட்டுகளை வெளியிட்டது.

2020ல் 10 மற்றும் 20 டாலர் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

2021ல் 50 டாலர் மற்றும் 2022ல் 100 டாலர் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.


இதன் சந்தை மதிப்பு கேள்விகுறியே...




Monday 2 May 2022

திருடன் மணியன் பிள்ளை

தன் வரலாறு என்றாலும் மொழிபெயர்ப்பில் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த புத்தகம்.

கேரளாவில் பிறந்த மணியன்பிள்ளை வாய்மொழி கூற்று போலவே எழுதியுள்ளார்.

சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் மனதை கனக்க வைக்கிறார்.

மணியன் பிள்ளையின் புத்தி சாதுர்யம் வியக்க வைக்கிறது. குறிப்பாக இரட்டை நாய்கள் காவலுக்கு இருக்கும் அமெரிக்கர் வீட்டில் நிகழ்த்தும் திருட்டு. 

மைசூரில் தொழிலதிபராகிவிட்ட அவரது வீழ்ச்சி பல்கலையில் பாடமாக வைக்கலாம்.

மலையாள மூலத்தில் சுவாரஸ்யம் இருக்குமா என்று தெரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் கவர்ந்து இழுக்கிறார் குளச்சல் யூசுப்.

தன் வரலாறு என்பதால் கோர்வையாக இல்லை. ஒரே நிகழ்வு திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதால் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பக்கங்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். வாசிக்க சிறப்பான புத்தகம்.