Wednesday 27 September 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 3 அபுதாஹீர் - பீச் ஸ்டேஷன்



எத்தனையோ நண்பர்கள் இருக்கும் போது ஏன் அபுதாஹிரை தேர்வு செய்தேன்.
அபு ஒரு ஜாலி பேர்வழி யாரை கிண்டல் செய்வதென்றாலும் அவனால் முடியும்.நொறுக்கு தீனி என்றால் அவனுக்கு உயிர்.

கல்லூரி காலங்களில் கிரிக்கெட் போட்டி என்றால் விடுதி பக்கத்தில் இருக்கும் தாத்தா கடைக்கு போய் கிரிக்கெட்பார்ப்போம்.என்னிடம் காசு இல்லை என்றால் நிதியுதவி செய்வதில் சிங்கும் அபுவும் முக்கியமானவர்கள்.

சீனியர்களையும் அபு கிண்டல்செய்வான். சீனியர்கள் தூரத்தில் வரும் போது
பேரை சொல்லி கூப்பிடுவான். பக்கத்தில் வர, வர பேரோடு அண்ணனையும் சேர்த்து கொள்வான்.

எல்லா கிண்டல்களுக்கும் சேர்த்து வைத்து சீனியர்கள் ஒரு நாள் அபுவை மொத்தி விட்டார்கள். அடி வாங்கி திரும்பும் போது " என்னா அடி அடிக்கிறானுங்க" என்று சொல்லி கொண்டே வந்தான். அதை பார்த்த ஒரு ஜூனியர் பையன் கேட்டான், தேர்டு இயர் வந்த பிறகும் ராகிங்கா ?. இது ராகிங் இல்ல வாய் கொழுப்பில் வாங்கி கட்டுவது என்றோம் கோரஸ்ஸாக.

இறுதியாண்டு project சமயத்தில் சென்னையில் இருந்து ஊருக்கு முன்பதிவில்லாத ரயில் பயணம் செய்தோம். எங்களுக்கு அது மூன்றாம் முறை அபுவுக்கு மட்டும் முதல் முறை. சரியாக தூங்க முடியாது என்று சொல்லி இருந்தோம். நான் தூங்க மாட்டேன் தூங்க மாட்டேன் என்று சொல்லி கொண்டே வந்தான்.

ரயிலில் வந்த அத்தனை தின்பண்டங்களையும் வாங்கி திங்கவும் செய்தான். கொய்யாக்கா விற்கும் பாட்டி நடு பெட்டி வரை வந்து விட்டது. ஒரு கொய்யாக்காய் கூட விற்கவில்லை. அபு தான் போணி செய்தான்.

அடுத்த 15 நிமிடத்தில் அத்தனையும் விற்றுவிட்டது. அபுவுக்கு கடைசியாய் இருந்த ரெண்டு கொய்யாக்காய்களையும் இலவசமாய் கொடுத்து சென்றாள் அந்த பாட்டி.
உண்ட மயக்கத்தில் தூங்கியும் விட்டான் அபு. ரயில் பயணங்களில் எல்லாருக்கும் இருக்கும் மனநிலை, யாராவது ஒருத்தர் ஒரு பொருளை வாங்கி பார்த்தால் நாமும் வாங்குவோம் என்ற மனநிலை.

வேலை கிடைத்து சென்னை வந்த பின் அபுவும் சென்னைக்கு வந்தான். "அலைபாயுதே" மாதவன் போல் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றான். மெரீனா பீச்சுக்கு போகலாம் என்று முடிவு செய்து பீச் ஸ்டேஷன்க்கு டிக்கட் எடுத்து மின்சார ரயிலில் பீச் ஸ்டேஷன் சென்றோம்.

பீச் ஸ்டேஷனுக்கு வெளியே நின்ற ஷேர் ஆட்டோ மெரீனாவுக்கு போக கூப்பிட்டான். பக்கத்துல இருக்குற பீச்க்கு ஷேர் ஆட்டோவா என்று நடக்க ஆரம்பித்தோம்.
ரொம்ப தூரம் நடந்த பின் நேப்பியர் பாலம் என் கண்ணில் பட்டது. பீச்சுக்கு இன்னும் ரொம்ப தூரம்டா, பீச் ஸ்டேஷன் சம்மந்தம் எடத்துல இருக்கு என்றேன். (நான் அதற்கு முன் ஒரு முறை வேளச்சேரியில் இருந்து பாரிஸ் போயிருக்கிறேன்).

கொஞ்ச நேரம் கழித்து, வழியில் வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினோம் மெரீனா செல்ல. ஷேர் ஆட்டோ டிரைவர், 15 நிமிசத்துக்கு முன்னாடி பீச் ஸ்டேஷன்ல வச்சு கூப்பிட்டேன் அப்பவே வந்திருக்கலாம் என்றார்.


எல்லார் முகத்திலும் நமுட்டு சிரிப்பு.நேப்பியர் பாலம் கடக்கும் போது அபு கேட்டான், இது தான "ஆயுத எழுத்து" பாலம் என்று.

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 2 ஜெயா டீச்சர்


ஜெயா டீச்சர் 4ம் வகுப்பு டீச்சர். ஜெயா டீச்சரின் வகுப்பு என்றுமே இனிமையானது.
புதுமையான முறையில் வகுப்பு நடத்துபவர்.

பள்ளிக்கூடத்தில் ஆண் பெண் என பிரித்து கேள்வி கேட்டு யார் அதிகம் விடை சொல்கிறார்கள் ஆணா ? பெண்ணா? என்று போட்டி முறையில் நடத்துபவர். சமயத்தில் ஆண்களை கூட குழுவாக பிரித்து மதிப்பு புள்ளிகள் வழங்குவது கற்றலில் இனிமை.

படிப்பு மட்டுமில்லாமல் விடுகதை போட்டிகளும் உண்டு. அதற்காக தங்க மலரையும் சிறுவர் மலரையும் தேடி அலைவோம். எங்கள் ஊர் டீக்கடைகள் தினத்தந்தி மட்டுமே வாங்குபவை.அத்தி பூத்தார் போல் சிறுவர் மலர் கிடைக்கும்.கிடைத்தால் வெற்றியும் பெறலாம்.

என்னை சுதந்திர தின விழாவில் சுதந்திரம் பற்றி பேசவைத்தவர். நான் மனப்பாடம் செய்து ஒப்பித்தித்தேன்.

நான்காம் வகுப்பில் எங்களை தபால்தலை சேகரிக்க சொல்லி ஊக்குவித்தவர்.இன்று நான் வெளி நாட்டு பணம் சேகரிக்க அவங்களும் ஒரு காரணம்.

ஊரில் அவங்க வீட்டில் மட்டுமே டிவி இருந்தது.ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் படம் பார்க்க ஊரே திரண்டு செல்வோம்.ஜங்கிள் புக் பார்க்க மாணவர்கள் எல்லார் வீட்டிலும் அனுமதி பெற்று பார்க்க வைத்தாங்க.புரிந்தும் புரியாமலும் அன்று ஜங்கிள் புக் பார்த்தோம்.

நான்காம் வகுப்பில் காலில் ஏற்பட்ட புண் காரணமாக கெட்வெல் மருத்துவமனையில் நான் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றேன்.மருத்துவமனையில் நான் இருந்த நாளில் "மீரா பாய் " பற்றிய புத்தகத்தை கொடுத்து வாசிக்க சொன்னாங்க.

ஜெயா டீச்சர் மறைவுக்கு பின் "மீரா பாய்" பற்றி எங்கு கேள்வி பட்டாலும் ஜெயா டீச்சர் ஞாபகம் வரும். நானும் மீரா பாய் பற்றிய ஒரு புத்தகம் வாங்கிவிட்டேன்.




ஜெயா டீச்சரின் முழு பெயர் "ஜெயலட்சுமி ".

Tuesday 26 September 2017

மீண்டும் வருமா

பெரிய மூட்டையுடன் விலையுயர்ந்த 
பொருளை கொண்டுவரும் 
தனியார் நிறுவன ஊழியரை விட
ஒரு கட்டு கடிதங்களுடன் சைக்கிளில் வரும் 
தபால்காரர் அழகு!!!

பொங்கல் முடித்த பின் 
வந்தாலும் அஞ்சலில் வந்த பொங்கல் 
வாழ்த்து தந்த சந்தோசத்தை 
பொங்கல் அன்றே அலைபேசியில் 
பகிர படும் ஒளிர்படங்கள் 
தருவதில்லை!!!

சிவப்பு வண்ணத்தில் விதவிதமான 
அளவுகளில் இருக்கும் அஞ்சல் 
பெட்டிகள் அஃறிணை இல்லை.
அருகி வரும் உயிரினம்.
எத்தனை மனங்களில் எண்ணங்களை,
ஏக்கங்களை, தவிப்புகளை,
ஆறுதல்களை அவை சுமந்திருக்கும்.

கடிதங்களில் இருந்த அன்பு 
அரவணைப்பு இப்போது இல்லை!!!

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 1

அப்பா

என் கையெழுத்தை நிறைய பேர் நன்றாக இருக்கிறது என்பார்கள். கையெழுத்தை இத்தனை நன்றாக மாற்றியது என் அப்பா.

மா.சுப்பையா, "மாசு" என்று கையெழுத்திடும்அவர் ஒரு மாசில்லா மனிதர்.
மூன்றாம் வகுப்பு வரை என் கையெழுத்து மோசமாகத்தான் இருந்தது. அப்பாவின்
அறிவுரைகளின்படி திருத்தி எழுதினேன். நல்ல கையெழுத்து கிடைத்தது. ஆனால் தலையெழுத்து சற்றே மாறியது. மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் அப்பா இல்லை.


அப்பாவை ஆசிரியராகவும் விவசாயியாகவும் பார்த்துள்ளேன்.அப்பாவுக்கு சினிமாவும் பிடிக்கும்.எங்க ஊருக்கு முதல் முறையாய் டேப் ரெக்கார்டர் வைத்த பஸ் விட்டபோது "வா முனிம்மா " பாடல் போட்டதாக அப்பா சொன்னது இன்றும் என் நினைவில்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது CD பிளேயர் வைத்த பஸ் விட்டபோது "ஐ லவ் யூடா" பட பாடல் போட்டார்கள். இரண்டுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

எங்கள் வீட்டில் இன்றும் ஓடும் உஷா பேன் நான் பிறந்த போது அப்பா வாங்கியது.
எனக்காக எத்தனையோ சிறப்பம்சங்கள்(அக்காகளுக்கு இல்லாத) வீட்டில் உண்டு. குட்டியாய் தலையணை, குட்டியாய் டேபிள் பேன்.நான் சாரம் கட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சாரத்தை (லுங்கி) இரண்டாய் வெட்டி தைத்து தந்தது அப்பா தான்.

அப்பாவுக்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தால் எதுவும் செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.எப்போது பெயர் எழுதினாலும் S பழனி செல்வகுமார் என்றே எழுதுவேன், எந்தையை முன்னிலை படுத்தி.
1994 மார்ச் 7ம் தேதி அரைகுறையாய் நினைவில் உள்ளது. அம்மா, அக்காவை (லவனக்கா) ஸ்கூலில் கொண்டு போய் விட்டு வர சேது மாமாவை கூட்டி வர சொன்னாள். நானும் சேது மாமாவும் சைக்கிளில் செழியநல்லூரில் இருந்து வந்து கொண்டிருந்தோம். எங்க வீட்டு முன்னால் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.பாப்பா ஆச்சி வாயை பொத்தி கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு" என்று சேது மாமா கேட்டதற்கு "கார் வந்து திரும்புறதுக்குள்ள சீவன் போயிருச்சியா" என்றாள்.சேது மாமா அதிர்ச்சியில் சைக்கிளை விட்டு இறங்கி விட்டார்.

எட்டு வயதான எனக்கு எந்த அதிர்ச்சியும் தாக்கவில்லை.அன்று போட்டு கொண்ட என் மொட்டை தலையை பார்த்து வெள்ளை புடவையில் இருந்த அம்மா அழுத அழுகை இன்றும் என் நெஞ்சில்.

அப்பா என்னை /எங்களை விட்டு எங்கும் சென்று விடவில்லை. என் கையை பிடித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் கூட்டி சென்றார்.எனது இண்டர்வீயூகளில் உடனிருந்தார்.என் திருமணத்தில் ஆசி வழங்கினார்.


என்றும் என் பயணத்தில் என் கையை பிடித்து உடன் வருவார்.நான் கும்பிடும் சாமியாய் .