Thursday 28 December 2023

அந்த வானத்தைப் போல

கேப்டன் விஜயகாந்த், தவசி, ரமணா படங்கள் வரும்போது எனக்கு அவரை படித்ததில்லை. சொக்க தங்கம் படம் வரும் போது பிடித்து போனது.

சினிமாவில் அவர் காமெடியாக நடிக்கிறார் என்று குற்றச்சாட்டு உண்டு. தவசி, சொக்கதங்கம் வெற்றி கமல், விஜய் படங்களோடு போட்டியிட்டு, ரமணா வெற்றி அஜித், விஜய் படங்களோடு போட்டியிட்டு. இந்த வெற்றி அவர் வயதான பிறகு தந்த வெற்றி.

நடிகர் சங்கத் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் கேப்டன்.

அரசியலுக்கு வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்கு என்ன பேர் வைப்பார் என்று பெரிய எதிர்பார்ப்பு. தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயர் சாதாரண பெயராக ஏமாற்றத்தை தந்தது.

அப்பா, அம்மாவின் பெயரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆரம்பித்த கேப்டன் கட்சி பெயரில் சொதப்பிவிட்டாரோ என தோன்றியது. 

தேர்தலில் போட்டியிட்ட போது கூட அவரது பலமான மதுரையை விட்டு ஏன் விருத்தாச்சலம் செல்கிறார் என்று தோன்றியது. ஆனால் அந்த வெற்றி தமிழக அரசியல் களத்தில் மாபெரும் வெற்றி.

அதற்கு பிறகு சன்டிவி குடும்ப பிரச்சனைகளால் தனித்திருந்த போது விஜய்காந்த் பக்கம் நகர்ந்தது. அப்போது விகடனும் சன்டிவியோடு பயணித்தது. ஆனால் அது நிகழ்வதில்லை. அது நிகழ்ந்திருந்தால் தமிழக முதல்வராக கேப்டன் ஆகி இருக்க வாய்ப்பு.

குடிகாரன் என்று எதிர்கட்சிகள் ஆரம்பித்தன, மீடியாக்கள் துணை போக, மனைவி மைத்துனர் காலை வார விஜய்காந்த் அரசியல் கோமாளியாக சித்தரிக்கப்பட்டார்.

தேமுதிக பெயரை குழப்ப தேதிமுக என்று கட்சிகளை ஆரம்பிக்க வைத்தது எதிரி கட்சிகள்.

அவர் செய்த நல்லதை சொல்ல சமூக வலைதளங்கள் பெரிய அளவில் வரவில்லை. பெரிய அளவில் அவரது செயல்களை சொல்லும் போது அவர் உடல்நலம் ஒத்துழைக்காமல் போய்விட்டது.

நான் போட்ட முதல் ஓட்டு முரசு சின்னத்தில் என்ற பெருமிதத்தோடு கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி.

Wednesday 13 December 2023

பேக் Back புத்தகம் பற்றி

பொதுவாக எனக்கு பயணங்கள் செல்ல பிடிக்கும். ஆனால் பயணங்கள் அமைவதில்லை. அமைத்து கொள்ளுதலும் குறைந்துவிட்டது.
தனியாக பயணிப்பது எனக்கு பெருங்கஷ்டம்.
ஆனால் திலீபன், வடகிழக்கு மாநிலங்களுக்கு தனியாக பயணித்து, பயண அனுபவங்களை எழுத்தில் காட்சிபடுத்தியுள்ளார்.

பெரம்பூரில் இருந்து ஆர்ஏசியில் பயணித்ததாக சொல்கிறார். அதன் கஷ்டங்களையும் சொல்லி இருக்கிறார். (அடிக்கடி பயணிக்கும் திலீபன் ஆட்டோ அப்கிரேட் பற்றியோ, டிடிஆரை க்ரெக்ட் பண்ணுவது பற்றியே தெரியாமலா இருந்திருப்பார்).

ரயில்வே விட்டு இறங்கி கோஹிமாவுக்கு பயணிக்கும் போதே புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறார். யூடியூப் வீடியோக்கள் போல இங்கே இது விலை குறைவு, இது விலை அதிகம் என்ற பரிந்துரைகள் இல்லை.முழுக்க முழுக்க அவரது அனுபவங்கள்.


ஸூகு பள்ளத்தாக்கில் தனியாளாக சென்று நிறைய பேருடன் பழகி ஒரு இரவை கழித்துவிட்டு அடுத்த பயண திட்டத்தை மாற்றியது, சிறப்பான சம்பவம்.

இவரது எழுத்து ஈர்க்கிறது, அதே சமயம் மனிதர்களை இவர் பேச்சால் ஈர்த்தாரா, உடல் மொழியால் ஈர்த்தாரா என்று தெரியவில்லை.
சிறுகதை தொகுப்பின் கடைசி பிரதியை கேட்ட பெண், மது அருந்தாத சைவ நண்பர், பைக் டாக்ஸி ஓட்டும் நண்பர், ரஞ்சன், வீட்டிற்கு கூப்பிட்டு சாப்பாடும் போடும் நண்பர் என எல்லாரையும் ஈர்க்கிறார்.

பிரம்மபுத்திரா நடுவில் இருக்கும் தீவு கிராமம் மஜூலி, உயரமான புத்த கோவில் உள்ள தவாங், பனி பொழியும் சீலா பாஸ் என எல்லா இடங்களையும் இவரது வார்த்தையால் சுற்றிப் பார்ப்பது சுகானுபவம்.

இவர் நிறைய எழுத வேண்டும்.