Wednesday 11 October 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 6 பாண்டிச்சேரியும் தடாவும்

சைதாப்பேட்டை மேன்ஷனில் இருந்து வேலை கிடைத்து பெங்களூரு சென்ற தினேஷ் ஒரு நாள் அப்பாச்சி வண்டியுடன் "ஜாவா சுந்தரேசன்" போல் மாப்ள புதுசா வண்டி வாங்கிருக்கேன் என்றான்.
வண்டிலயா பெங்களூர்ல இருந்து வந்த என்று ஆச்சர்யமாய் கேட்டேன். கீழே நின்ற வெள்ளை நிற வண்டி ஆமாம் என்றது.
அடுத்த நாளே ECRல கொஞ்ச தூரம் போயிடு வரலாம் என்றான். நானும் கிளம்பினேன் முட்டுக்காடு, மகாபலிபுரம் தாண்டி கொஞ்ச தூரம் பாண்டிச்சேரி வரை நீண்டு விட்டது.
பாண்டிச்சேரி பீச் மதியம் 1 மணிக்கு நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. அப்புறம் அக்கம் பக்கம் விசாரித்து சுண்ணாம்பார் பீச்சுக்கு போனோம். மதிய உணவில் எப்படியாவது மீன் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற தினேஷின் எண்ணம் நிறைவேறவில்லை..
சுண்ணாம்பார் /பாரடைஸ் பீச்க்கு படகில் போய் கடற்கரைக்கு செல்ல வேண்டி இருந்தது. தீவு போல் அழகு கொஞ்சும் இடம். மாலை 4 மணி வரை அங்கே இருந்தோம்.இன்னும் இரண்டு நண்பர்கள் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
7 மணிக்கு பாண்டிச்சேரி பீச் ரொம்ப அழகாக இருந்தது. 7.30கு பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பினோம்.
வண்டி ஓட்டுவதை தினேஷ் ஒரு தவம் போல் செய்வான். வேகமாய் சென்றாலும் மெதுவாய் சென்றாலும் எப்போதும் வண்டி அவனது கட்டுப்பாட்டில் இருக்கும்.
பின்பு ஒருநாள் மேன்சனுக்கு தினேஷ் வந்த நாளில் சன்குமாரும் வந்தான். மனசு கஷ்டமாக இருக்கிறது எங்காவது நீண்ட தூரம் போய் வரலாம் என்றான் சன் .
பாண்டிச்சேரி போலாமா என்றான் தினேஷ், பாண்டிச்சேரி என்றதும் முகம் நிறைய புன்னகையுடன் நானும் வாரேன் என்றான் மாப்ள மார்த்தாண்டம் (மனோஜ்).
நானும் பாண்டிச்சேரி போகும் வழியில் சுத்த வேண்டிய இடங்களை மேப்பில் பார்த்து கொண்டேன். இரவு தங்கி மறுநாள் வருவதாய் திட்டம், காலையில் கிளம்பினோம். நானும் சன்னும் ஒரு வண்டி, மாப்ள மார்த்தாண்டம் தினேஷ் இன்னொரு வண்டியிலும் கிளம்பினோம்.
முதலில் சட்ராசில் உள்ள பழைய கோட்டைக்கு போனோம். பெரிய அளவில் எதுவும் இல்லை. பின் ஆலம்பாறை கோட்டைக்கு சென்றோம். கோட்டை மதில் சுவரை தவிர எதுவும் இல்லை. 4 வருடங்களாக தூரத்தில் இருந்தே பத்மநாதபுரம் கோட்டையை பார்த்தோம். இங்கு சிவப்பு லோலாக்கு பாடலில் வருவது போல் மதில் சுவர் மீது ஏறி போட்டோ எடுத்து கொண்டோம். கோட்டையின் பின்புறம் அழகான கடல். பின்புறம் இருந்து பார்க்க கோட்டை செம அழகு. அங்கு நிறைய சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதாய் கடை வைத்திருக்கும் அக்கா சொன்னாங்க.
பாண்டிச்சேரியில் ஒரு சின்ன ஹோட்டலில் ரூம் எடுத்து வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு இரவு நடந்தே பீச்க்கு போனோம். பீச்சில் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விளையாடிவிட்டு ரூம்க்கு திரும்பும் போது வழி தெரியவில்லை. ரூம் சாவியையும் ரிசப்ஷனில் குடுத்து விட்டோம். ஹோட்டல் பெயர் கூட யாருக்கும் சரியாய் நினைவில் இல்லை.
நடுத்தெருவில் நின்று சுத்தி சுத்தி பார்த்து கொண்டிருந்தோம். எதாவது க்ளூ கிடைக்குமா என்று. தினேஷ் திடீரென கத்தினான் 'சத்யா மாப்ள' என்று. நாங்களும் ஹோட்டலை கண்டுபிடித்து விட்டான் என்று சந்தோச பட்டால் இந்த சத்யா கடை தூத்துகுடியிலும் இருக்கு என்றான்.
மூவரும் அவனை திட்டி தீர்த்தோம். ஒரு வழியாக சன்குமார் கண்ணில் பட்ட கோவிலால் ஹோட்டலை அடையாளம் கண்டுகொண்டோம்.
மறுநாள் காலையில் ஹோட்டல் வராண்டாவில் ஒரே சத்தம். நான் மாப்ள மார்த்தாண்டத்திடம் என்னனு பாரு மாப்ள என்றேன். அவனும் என்ன பாஸ் ஒரே சத்தமா இருக்கு என்று போய் கேட்டான்.
அவர்கள் நான்கு பேர் போதையில் பாண்டிச்சேரி வந்ததே சத்தம் போடத்தான். பாண்டிச்சேரின்னா என்ன ஸ்பெஷல் என்று மனோஜை திட்டி அனுப்பிவிட்டனர்.
சுண்ணாம்பார் கடற்கரைக்கு சென்றோம். தினேஷை மண்ணில் புதைத்து வைத்து விளையாடினான் மனோஜ்.
மாலை 4 மணி வரை இருந்து விட்டு கிளம்பினோம். நிறைய புகைப்படங்களோடும் சந்தோசத்தோடும்.
அடுத்த முறை தினேஷ் வந்த போது எங்கு செல்லலாம் என்று தேடிய போது சிக்கியது தடா அருவி.
மேப்பில் பார்த்த வழியை கேட்டு கேட்டு தடா அருவியை தேடி போனோம் நானும் தினேசும். முன்னால் சென்ற குழுவினர் வழிகாட்ட அருவிக்கு அருகில் சென்று விட்டோம்.
ஆனால் செல்போன், பர்ஸை கரையில் வைத்து விட்டு அருவிக்கு அருகில் இருக்கும் சுனையில் இருவரும் குளிக்கமுடியவில்லை. குரங்குகள் அட்டகாசம். தனி தனியே குளித்து விட்டு கிளம்பினோம்.. கல்லூரி காலத்தில் சென்ற நம்பி கோவில் போல் இருந்தது தடா அருவி. சுனையை கடந்து சென்றால் தான் அருவியில் குளிக்கமுடியும்..
ரூம்க்கு வந்தபிறகும் ஏதோ ஒரு குறை இருந்தது போல இருந்தது. அந்த இடத்துக்கு பிரியாணியுடனும் நண்பன் கார்த்தியுடனும் சென்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நண்பன் கார்த்தி நீச்சலில் பெரிய ஆள்.
கார்த்தியும் அன்றிரவு வந்தான். மறுநாள் இன்னொரு வண்டி கணேஷிடம் கடன் வாங்கி நான், மனோஜ், தினேஷ், கார்த்தி நாலு பேரும் தடா போனோம். என் வண்டி டிரைவர் மனோஜ்.
வழியில் பிரியாணி வாங்கிக்கொண்டோம். இந்த முறை அவர்கள் மூவரும் அருவிக்கே சென்றுவிட்டார்கள். நான் சுனையில் குளித்துவிட்டேன். சாப்பிட்டு மலை இறங்க ஆரம்பித்தோம், இறங்கும் போது செங்குத்து பாறையில் தினேஷ் கொஞ்சம் திணற கொஞ்சம் நேரம் ஆகியது. அதற்கு பின் வழி மறந்து சுத்தினோம், பின்பு எப்படியோ மலை பாதையில் வழி கண்டுபிடித்து திரும்பினோம்.
அதிகமாக அலைந்ததால் தாகம் அதிகமாய் இருந்தது. வரத்தை பாளையம் வந்ததும் 21/2 லிட்டர் குளிர் பானத்தை மாத்தி மாத்தி குடித்து காலிசெய்தோம்.

ட்ரெக்கிங். அருவி குளியல், பிரியாணி, நெடுஞசாலை பயணம் நண்பர்கள் சந்திப்பு ஒரு சேர அமைந்தது தடா(வும் பாண்டிச்சேரியும்) பயணம்.

Wednesday 4 October 2017

கருணை காட்டு கடவுளே!!!

வடிகால் வசதி இல்லாத
மாநகரத்தில் கொட்டி தீர்க்கிறது
மழை!
குளத்தை தூர்வாரிவிட்டு
வரத்து கால்களை
சரி செய்து காத்திருக்கும்
கிராமங்களை மழை
ஏமாற்றுகிறது!
தண்ணீரை நாங்கள்
பாசனத்துக்கே பயன்படுத்துகிறோம்
ஒரு போதும் பாழ்படுத்துவதில்லை!
குடிநீருக்காக பல மைல்
தூரம் அலையும் நாங்களா
வீணடிப்போம்!
நாங்கள் தண்ணீரை கலன்களில்
அடைத்து விற்கவில்லை.
கழனியை நனைக்கவே உபயோகிக்கிறோம்!
இந்த ஆண்டும் மழை
இல்லை என்றால்
பிறந்த ஊரில் பிழைக்க வழி இல்லை.!
அகவை ஐம்பதை கடந்தவன்
அயல் நாட்டிலும் அயலூரிலும்
என்ன செய்வான்!
கருணை காட்டு
வருண கடவுளே!!!

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 5 செழியநல்லூர்



தெற்கு செழியநல்லூர், எங்க வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள ஊர். அப்பா தலைமை ஆசிரியராக பணியாற்றியது செழியநல்லூரில் தான். அம்மா பிறந்த ஊர்.

என்னதான் செழியநல்லூரும் பிள்ளையார்குளமும் திருமண பந்தங்களால் இணைத்திருந்தாலும் இரு ஊர்களுக்கிடையே ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.பக்கத்து பக்கத்து ஊராய் இருந்தாலும் செழியநல்லூர் பஸ்ஸை கீழ்ப்பிள்ளையார்குளம் மக்களும் பிள்ளையார்குளம் பஸ்ஸை செழியநல்லூர் மக்களும் பொதுவாய் பயன்படுத்துவதில்லை.

நானும் சின்ன வயதில் மாடசாமியிடம் சொல்வேன், அந்தோணி பஸ்ஸை விட SBC தான் வேகமாக செல்லும் என்று.

செழியநல்லூரில் விவசாயம் பிரதானம் இல்லை.கல் குவாரிகள் இருந்ததால் பெரும்பாலானோர் ICL ல் வேலை செய்தனர்.செழியநல்லூரில் செல்வ செழிப்பு அதிகம்.

செழியநல்லூரில் நான் LKG முதல் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். LKG செல்லும் போது அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து பெரிய பையன்கள் நாலு பேர் என் கையை காலை பிடித்து குண்டுக்கட்டாக தூக்கி செல்வார்கள்.10 மணி ஆகிவிட்டால் ஊர் கிணற்று பக்கத்தில் ஒரு பறவை கத்தும்.அன்று LKG பள்ளிக்கூடம் செல்ல தேவை இல்லை. LKG மிஸ் அனுமதிப்பதில்லை.அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து கொள்வேன்.
மூன்றாம் வகுப்பில் துணைக்கு யாரும் வராததால் மாடசாமி கோவில் ஓடையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் ஒத்தையடி பாதையில் கருவை மரங்களுக்கு நடுவில் செல்ல பயமாய் இருக்கும். ரெட்டை பனைமரத்தை தாண்டியதும் தான் பயம் கொஞ்சம் விலகும்.
மூன்றாம் வகுப்புக்கு பின் பின் செழியநல்லூருக்கு செல்வது குறைந்து விட்டது. யாராவது வேலி போட்டு அடைத்து விடுவார்கள், அடிக்கடி பாதை மாறும். தற்போது யாரும் வெளியிட முடியாத மாதிரி தார் சாலை.

செழியநல்லூரில் தாய்மாமக்கள் தவிர, அம்மாவுக்கு அண்ணன் தம்பி முறையில் நிறைய பேர் (மாமா) உண்டு.எனது தலைமுறையில் நிறைய மச்சான், மாப்பிள்ளைகள் உண்டு. கல்லூரி தோழன் சுள்ளான் முதல் கல்யாணத்துக்கு முன் கடைசி அறை தோழனான குமார் வரை எல்லாரும் மச்சான்கள் தான் .இப்போது செழியநல்லூர் பஸ் ஸ்டாண்டில் என்னை மற்றவர்களிடம் அடையாள படுத்த "இது பிள்ளையார்குளம்
முப்பிடாதி அக்கா மவன் என்றோ, வாத்தியார் மாமா மவன் என்றோ தான் சொல்வார்கள்.

செழியநல்லூரில் படித்தவர்களில் பலர் அப்பாவின் மாணாக்கர்கள் எனக்கு முதல் வேலை வாங்கி தந்த அர்ஜுன் அண்ணன் முதல் பழனி எப்படி இருக்கேரு என்று வாய் நிறைய சிரிப்புடன் கேட்கும் சிகையலங்கார நிபுணர் மாயாண்டி வரை.

என் முதல் சிநேகிதன், பால்ய சிநேகிதன் மஹாராஜனுக்கு செழியநல்லூரே.இப்போது பார்த்து கொண்டால் பால்யத்தின் நினைவுகளோடு சிரித்து கொள்வோம், அதிகம் பேசுவதில்லை.

வேலை கிடைத்து வேளச்சேரி வந்து 15 நாட்கள் இருந்த அறை ஒரு வேடந்தாங்கல்.அங்கு தான் சுரேஷ், மாடசாமி, குமார்,சண்முகவேல் (2), பேச்சி லிங்கம் இன்னும் பலர் பழக்கம்.அவர்கள் தான் எனக்கு சென்னையை பழக வைத்தவர்கள்.

வதன புத்தகம் வந்தபின் இரு ஊர்களுக்கு இடையே உள்ள பூசல் கூடி குறைந்துவிட்டது. தம்பி லெனினை நான் நேரில் பார்த்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் அவன் (மொக்கை) பதிவுகளை கடக்காமல் (லைக் இடாமல்) வதன புத்தகத்தில் செல்ல முடியவில்லை.


குமார் ஏதோ ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டான், ஜங்சனில் வந்து அதை வாங்க வண்டியில் வந்த மணி கிழக்க கூடி போகலாமா மேற்கே கூடி போகலாமா என்ற கேள்வியில் ஒரு ஊர் பூசல் போய்விட்டது.

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 4 பங்குனி உத்திரம்



தென் மாவட்டங்களில் எல்லா குடும்பங்களுக்கும் ஒரு குல தெய்வ சாஸ்தா இருப்பார். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் ஆற்றோரம், குளத்தோரம், மலையடிவாரம் அடர்ந்த வனம் ஆகியவற்றில் தான் இருக்கும்.பங்குனி உத்திரம் தோறும் சாஸ்தா கோவிலுக்கு செல்வது வழக்கம்.

சாஸ்தா என்ற பெயர் மருவி "சாத்தா" ஆகி சாஸ்தா கோவில் "சாத்தாங்கோவில்" ஆகிவிட்டது. இதை பிற மதத்தவர் கிண்டல் கூட செய்வார்கள்.

சொக்காரர்கள் (பங்காளி) அனைவருக்கும் ஒரே சாஸ்தா தான். எங்க சாஸ்தா பசுங்கிளி ஐயன் சாஸ்தா. தாமிரபரணி கரையில் கருங்காட்டுக்கு நேரே தெற்கே கோபாலசமுத்திரத்தில் அருள் பாலிக்கிறார்.

எனது பெயர் கூட "பசுங்கிளி" என்ற பெயரில் உள்ள PSKயில் உருவானது என கேள்வி பட்டுள்ளேன்.

தாத்தா காலத்தில் பங்குனி உத்திரம் என்றால் வண்டி கட்டி இரண்டு நாள் முன்பாகவே சென்று விடுவார்களாம். கருங்காடு ஊரில் வண்டியை அவிழ்த்து விட்டு ஆற்றை கடந்து செல்வார்களாம். ஆற்றில் சுழல் அடிக்கடி உருவாகும், தண்ணீரும் அதிகமாய் செல்லும் இடம் அது.

அப்பா காலத்தில் கோபாலசமுத்திரம்- சுத்தமல்லி இடையே பாலம் போடப்பட்டு விட்டாலும் பேருந்து டவுன் வழியாக கருங்காட்டுக்கு மட்டுமே உண்டு. கருங்காடு பஸ் பஸ் அடிக்கடி வராமலும் நின்று விடும்.

ஒரு முறை ஜெயக்குமார் அண்ணன் தான் ஆற்றை கடந்து விட்டான். அன்று ஆற்றில் அதிகம் தண்ணீர் இல்லை.
திருமணத்துக்கு பின் ஒரு முறை தான் பங்குனி உத்திரத்துக்கு கோவிலுக்கு போக முடிந்தது. வாடகை வாகனத்தில் சென்றாலும் ஆத்து பாலத்தில் இருந்து கோவில் வரை நடக்க வேண்டி இருந்தது.

2007, ஏப்ரல் 1பங்குனி உத்திரம், எங்க ஊருக்கு கல்லூரி நண்பர்கள் எல்லாரும் வருவதாய் சொன்னார்கள். அப்போது என்னிடம் அலைபேசி கிடையாது. நண்பர்கள் குழாமில் டேனி மட்டுமே ரிலையன்ஸ் போன் வைத்திருந்தான். அதன் டவர் எங்க ஊர் வரை உண்டு. முருகனின் அலைபேசி எண்ணை டேனியிடம் கொடுத்து இருந்தேன், பங்குனி உத்திரம் என்பதால் அவர்கள் வருவதற்கு வேன் கிடைப்பதில் தாமதம். முத்து சங்கருக்கு மட்டுமே ஓரளவு வழி தெரியும்.

நண்பர்கள் வர லேட் ஆனதால் ஏப்ரல் 1 என்பதால் உன் நண்பர்கள் ஏமாற்றுவார்களோ? என்றாள் லவனக்கா.

ஒரு வழியாய் மதிய உணவுக்கு வந்து சேர்ந்தார்கள். தோட்டத்திற்கு போய் கிணற்றில் குதித்தோம் குளித்தோம். இளநீர் வெட்ட மாமா டைலர் சித்தப்பாவை கூட்டி வருவதற்குள் சன் குமாரும் ராஜாவும் இளநீர் பறித்து we are the boys என்று நிரூபித்தார்கள்.
அதற்கு பின் ஏதாவது அரட்டையில் எங்க ஊர்ல என்று நான் ஆரம்பித்தால் , டேனி முந்தி கொண்டு தம்பி உங்க ஊர் எனக்கு நல்லா தெரியும் என்பான்.

சென்னைக்கு வந்தபின் மற்றொரு பங்குனி உத்திர நாள் காலையில் ஊருக்கு சென்றேன். பிரபல ரவுடி கொலை காரணமாக எங்க ஊர் பஸ் ஓடவில்லை, சொற்ப பஸ்களே ஓடின. மானூர் வரை ஒரு பஸ்ஸில் சென்று அதற்கு பின் ஒரு குட்டியானையில் சாஸ்தா கோவில் செல்லும் குழுவோடு கிளம்பினேன். பள்ளமடை கால்வாய் பாலம் உடைந்து போயிருந்தது. கயிறு கட்டி இருந்தார்கள் கால்வாயை கடக்க.

கால்வாயை கடந்து ஊர் வரை நடந்தே சென்றேன். அம்மா தான் அதிகமாய் திட்டியது. போன் பண்ணி சொல்ல வேண்டியது தானா ? யாரையாவது வண்டி எடுத்துட்டு வர சொல்லிருப்பேன்லா ?

என் செல்போன் அதிகாலையிலே சுவிட்ச் ஆப் என்று நான் சொல்லவில்லை.