Tuesday 26 January 2021

நா-ஏ-ஒ சுற்றுலா

சித்தாரில் இருந்து நண்பர்கள் புடைசூழ போன பயணம் தான். நாமக்கல் - ஏற்காடு - ஒகேனக்கல் சுற்றுலா.
இந்த சுற்றுலா தொடக்க புள்ளியில் இருந்தே ஒரு வித்தியாசமான பயணம்.

பலருக்கும் கோபம் வெளிப்பட்ட ஒரு பயணம்.
சுற்றுலா செல்லும் போது நான் தூசான்வாசியாகி விட்டேன்.
நாமக்கலில் சரவணகுமார் அக்கா திருமண ரிசப்ஷன். அங்கேயே உணவு தங்குமிடம் கிடைத்ததால் நாமக்கல் சென்றோம்.

ஏசி இல்லாமல் இருந்தால் வேன் வாடகை குறையும் என்று நான்-ஏசி வேன் புக் செய்தோம். ஏசி வேலை செய்யாத ஒரு வேனை அனுப்பியது டிராவல்ஸ்.
ஜன்னல்களை திறக்க முடியாது. காற்றும் உள்ளே வராது போன்ற வேன்.
சென்னையை விட்டு கிளம்பும் போதே மூச்சு முட்டுவது போல் இருந்தது. திறக்க முடிந்த ஒரு ஜன்னலை திறந்தால் மழை பெய்கிறது.
சென்னைக்கு வெளியே ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அங்கே இருந்த நாயோடு சில பல போட்டோக்கள் எடுத்தார்கள் முத்துக்குமார் வகையறா.
கொஞ்ச நேரத்தில் வரதன் டிரைவரை திட்டுவது கேட்டது விசாரித்தால் டிரைவர் படம் பார்த்து கொண்டே வண்டி  ஓட்டினான்.
மீண்டும் கொஞ்ச நேரத்தில் டிரைவர் தூங்கி கொண்டே ஓட்டுவதாய் தகவல்.
நாமக்கல்ல நெருங்கும் நேரத்தில் வேன் நின்றது டீசல் இல்லாமல். டிரைவர் ரொம்ப நாட்களுக்கு பிறகு வண்டி ஓட்டுவதாக சொன்னான்.
இம்முறை திட்டியது ரிஸ்வான். நெடுஞ்சாலையில் ஒரு பேருந்தை கைகாட்டி நிறுத்தி டீசல் வாங்க டிரைவரை அனுப்பினோம். பஸ்ஸில் ஏறும் நேரத்தில் காசில்லை என்றான் . மீண்டும் திட்டி காசு கொடுத்து அனுப்பினோம்.
ரிஸ்வானும் டிரைவரும் சேர்த்து ஏர்லாக்கை சரி செய்தனர்.
டிரைவரை வேனில் தூங்க சொல்லிவிட்டு நாங்கள் மண்டபத்துக்கு சென்றோம்.
காலையில் குளித்து சாப்பிட்டுவிட்டு ஏற்காடு செல்ல கிளம்பினோம். கிளம்பும் முன் மண்டபத்து மாடியில் போட்டோக்கள்.
ஏற்காடு கிளம்பி வேன் கொஞ்ச தூரம் செல்லும் போதே மனோஜிடம் இருந்து அர்ச்சனை டிரைவருக்கு.
தூங்காமல் சிடி போட்டு படம் பார்த்ததன் விளைவு வேனை லைட்டாக அசைத்து பார்த்தது.
ஓரங்கட்டி எல்லாரும் டீ குடித்து கிளம்பினோம்.
ஏற்காடு மலை அடிவாரத்தில் புகைப்படம் எடுத்து கொண்டோம். கொண்டை ஊசிகளில் வளைய வளைய வாந்தி வருவது போல் தோன்றியது.
ஏற்காட்டில் வகைவகையாய் புகைப்படங்கள் எடுத்து திரும்பினோம்.

இறங்கும் போது பாய் வண்டிய நிறுத்தி வாந்தி எடுத்து கொண்டார். (பிரகாஷ்க்கு ஒரே சந்தோஷம்).
சேலத்தில் ரிஸ்வான் வீட்டுக்கு சென்றோம். அங்கு பிரியாணி, டீ.
அடுத்த நாள் காலையில் கிளம்பி ஒகேனக்கல் போனோம். போன உடனே மீன் குழம்பு சமைத்து தருவதாக சொன்னார்கள். மீன் வாங்குதில் எக்ஸ்பர்ட் ரெண்டு பேர் மீனும் அரிசியும் வாங்கி கொடுத்து விட்டு வந்தார்கள்.
நாலு பேர் காசு கொடுத்து அடி வாங்க (மசாஜ்) சென்றார்கள். 
பரிசல் கட்டணம் ரொம்ப அதிகமாக இருந்தது. அதனால் பரிசலில் சின்ன தூரம் மட்டுமே சென்றோம்.

சுவையான மீன் குழம்பு, ரசம் என சாப்பிட்டு கிளம்பினோம். 
வேன் டிரைவரை நினைத்தால் மட்டும் பயமாக இருந்தது.
நெடுஞ்சாலையில் புகைப்படம் எடுத்து கொள்ள நினைத்தோம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் வயல் என ஒரு மாலை மங்கும் நேரம் மாட்டியது. எல்லாவற்றையும் கேமராவுக்குள் திணித்து கிளம்பினோம்.

இரவு உணவுக்காக வேலூர் உள்ளே செல்ல சொன்னால் வேலூர் பைபாஸில் ஏறிவிட்டான் டிரைவர். 
ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு சென்னைக்கு திரும்பினோம்.
அது ஒரு அழகிய காலம்.
டீம்:
நான்
முத்து குமார்
வசந்த குமார்
ரிஸ்வான்
மனோஜ்
இளவரசன்
உபயதுல்லா
பிரகாஷ்
ஆண்டர்சன்
அருண் பிரசாத்
பழனிக்குமார்
தங்கராஜ்

Tuesday 19 January 2021

சித்தார் ஹைலைட்ஸ்

Day 1 - Session 1
சித்தாரில் வேலை கிடைத்தது அளவில்லா ஆனந்தம். அதே சமயம் சக நண்பர்களுக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் இருந்தது. 

சித்தாரில் ஜாயின் பண்ண திருச்சி போக வேண்டி இருந்தது. பிரகதீஸ் ரயிலில் டிக்கெட் எடுத்து விட்டான். தங்குவதற்கு நல்ல ஹோட்டல் கேட்டதற்கு, தமிழ்நாடு ஹோட்டலை பரிந்துரைத்தான் ஜனா.

ஹோட்டலில் படுத்த பத்தாம் நிமிடத்தில் பிரகதீஸ் விழித்து விட்டான். மூட்டை பூச்சி துயில் கொள்ளும் அறை அது. கட்டிலில் படுக்காமல் நாற்காலியில் ஒருக்களித்து அந்த இரவை கழித்தோம்.

1-04-09 காலையில் ஆபிஸில் காலடி எடுத்து வைத்தோம். மதியம் குருவாயூர் ட்ரெயினை பிடிக்க முடியவில்லை. ஒரு தனியார் பேருந்தில் சென்னை திரும்பினோம். அடுத்த நாள் சென்னையில் பணியை துவக்க.

இயக்குனர் சங்கருக்கு பிடித்தமான டெம்பிள் டவர் இரண்டாவது மாடியில் அலுவலகம். நான், பிரகதீஸ், பிரகாஷ், உபயத்துல்லா, பிரகாஷ், முத்து குமார், ஜஸ்டின் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் ஆரம்பித்தோம்.

முதலில் இரு சிஸ்டம் மட்டுமே இருந்தது. அதில் ஒன்றை சுரேஷ் எடுத்து கொள்ள மற்றொன்றை முத்து எடுத்துகொண்டான். அங்கு தான் அதிர்ஷ்ட தேவதை என் கரம் பிடித்து கோனியம்போ ப்ராஜெக்டில் தள்ளினாள்.

Day 1 - Lunch
முதலில் நாங்கள் மதிய உணவுக்கு செல்வது ஜனதாவுக்கு தான். டிப்ஸ்காக சுழன்று சுழன்று வேலை செய்யும் பேரர்கள், நாங்கள் டிப்ஸ் தருவதில்லை என்று தெரிந்த பின் முத்து படத்தில் ரஜினிக்கு பரிமாறுவது போல் தான் பரிமாறுவார்கள். நந்தனத்தில் வேறு ஹோட்டல்கள் இல்லை. எங்களுக்கு வேறு வழியும் இல்லை.

Day 1 - Session 2
திருச்சி பாலிடெக்னிக்கில் இருந்து கேம்பஸில் தேர்வானவர்களில் ஆறு பேரை சென்னைக்கு அனுப்பினார்கள்.
வந்தவர்கள் வசந்தகுமார், முத்துகுமார், ராஜ்குமார், மணிகண்டன், தங்கராஜ் மற்றும் தாஸ். இவர்கள் வந்த பின் ஓரளவுக்கு கூட்டம் சேர்ந்தது போல் ஆனது அலுவலகம். ஆனாலும் பெரிசாய் சுவாரஸ்யம் எதுவுமில்லை.

Day - 1 - Tea
எங்களுக்கு டீ போட்டுத் தரும் பலாய் கொஞ்சம் கொஞ்சமாக எஙகளுடன் பழக ஆரம்பித்தான்.
பலாயின் காஃபியை விட டீ சுவை நிறைந்தது.

Day - 1 - Session 3
எங்களோடு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி பத்து மாதங்களுக்குப் பிறகு வேலை கிடைத்து ரிஸ்வான் சென்னையிலே  எனது டீம்லையே சேர்ந்துகொண்டது ஆனந்தமாய் இருந்தது. ரிஸ்வான் வந்தபின் மொக்கை ஜோக்குகள், சூர மொக்கை காமெடிகள் என கலகலப்பானது சித்தார்.

Day -1 Stumps.
எல்லாரும் வேலை நிமித்தமாய் பல புதிய விஷயங்கள் கற்கத் தொடங்கியிருந்த காலம் அது.

Day -2 Session -1
பிரவீன்குமார், சரவணக்குமார் என மேலும் பல குமார்கள் இணைந்து கொண்ட காலம் அது.

Day -2 - Lunch
மணிகண்டனின் பெருமுயற்சியால் எங்களுக்கு சாப்பாடு செய்து தர ஒரு ஆளை பிடித்தான். அவர்களே கொண்டு வந்து அலுவலகத்தில் தரும்படியும் செய்தான், சுவையான சாப்பாடு கிடைத்தது. வாரம் ஒருமுறை மணிகண்டனே கலெக்சன் போட்டு அவர்களிடம் கொடுத்து கொண்டிருந்தான். குறிப்பாக மீன் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது.

Day -2 - Session 2
அலுவலக அலுப்பு மற்றும் மாதவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் முத்துக்குமார் ராஜினாமா செய்தான். டெல்லியில் வேறு வேலை கிடைத்து சென்றுவிட்டான்.

First Wicket
Muthu Kumar Ravanan b. Madhavan

Day -2 - Tea
மாலைத் தேநீரின் போது எப்பொழுதாவது இளங்கோவன் சார் அவர் சொந்த செலவில் சமோசா வாங்கி தருவார். பசித்திருக்கும் அந்த தருணத்தில் அது மிகவும் சுவையாக இருக்கும்.

Day -2 - Session 3
திருச்சி ஆபிஸில் வேலை பார்க்கும் மகேஸ் சார், பழனிராஜா சார், நந்தகுமார் சார் மற்றும் சங்கர் சார் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள். குறிப்பாக மகேஸ் சார் பேனாவைக் கையில் வைத்து சுழற்றுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும்.

Day -2 - Stumps
நிறைய பேர் மேன்ஷனில் தஞ்சம் ஆனார்கள். நாங்கள் டீமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்தோம். அப்படி ஒருநாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பாஸ்கரின் அப்பா இறந்து விட்டதாக தகவல் வந்தது. முதல் முறையாக ஒரு துக்க நிகழ்வுக்கு நீண்டதூரப் பயணம் போனோம் வேளாங்கண்ணி எடுத்த வெள்ளபள்ளத்துக்கு.

Day - 3 Session 1
எனது கல்லூரி ஜூனியரான ஆண்டர்சன் சேர்ந்த பிறகு சித்தார் கலகலக்க துவங்கியது, சரவணக்குமார் ப்ளான் போட ஒவ்வொரு ட்ரிப்பாக போக ஆரம்பித்தோம்.
முதல் ட்ரிப் பாஸ்கரின் திருமணம். 
அதுவரை அட்வென்சரஸ் ட்ரிப். சென்னையில் இருந்து கிளம்பியதும் பஸ்ஸின் டிரான்ஸ்மிஷன் ஷாப்ட் உடைந்தது.
போட்டில் கடலுக்குள் சென்று டீசல் இல்லாமல் தத்தளித்தோம்.
வரும் வழியில் சிதம்பரம் கோவிலுக்கு சென்று சென்னைக்கு திரும்பினோம்.

Day 3 Lunch
எல்லாரும் சேர்ந்தபின்
 அரசப்பரில் ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. அரசப்பரில் மீன் குழம்புதான் சிறப்பு. இரண்டு பேர் சேர்ந்து ஒரு மீல்ஸ் வாங்கி சாப்பிடுவது வழக்கம்.அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருப்பது தான் அரசப்பரின் சிறப்பு.

Day 3 Session 2
திருச்சி பைப்பிங் டீமில் போதுமானவர்கள் இல்லாததால் 2 பேரை திருச்சிக்கு கூப்பிட்டார்கள். இன்ஜினியர்களில் சுரேஷும் டிசைனர்களில் மணிகண்டனும் திருச்சிக்கு டிரான்ஸ்பர் ஆனார்கள்.

S Suresh retired hurt
Mani kandan retired hurt

Day 3 Tea
சாயங்காலம் டீ குடிக்க, பக்கத்து டீ கடைக்கு சென்றால் எத்தனை பேருக்கு டீ கொடுத்தாலும் எங்களுக்கு மட்டும் கடைசியாக தான் தருவான். வின்சென்ட் என்கிற அந்த பையன். அவன் எங்கள் மனதை புரிந்து கொண்டவன். 6 மணி முதல் 6.30 மணி வரை அந்த டீக்கடை முன்பு தான் நிற்போம். நாங்கள் ஸ்பெஷல் டீ குடிப்பது இல்லை, ஆனால் அங்கு நின்று குடித்த எல்லா டீயுமே ஸ்பெஷல் டீ தான்.


Day 3 Stumps
நாலாவது நாள் ஆரம்பிப்பதற்கு முன்னரே சரசரவென விக்கெட்டுகள் விழுவது போல அடுத்தடுத்து ராஜினாமா விழுந்தது.

Day 4 - Session 1
முதலில் ஜஸ்டின் பேப்பர் போட்டான். பிறகு பிரகதீஷ், அடுத்து பாஸ்கரன் அதற்கு பிறகு நானும் பேப்பர் போட்டேன்.
பேப்பர் போட்டு நோட்டீஸ் பீரியடில் வேலை பார்ப்பது ரொம்ப ஜாலியான விஷயம் எனக்கு இரண்டு மாதங்கள் கிடைத்தது.

Day 4 - Session 2
விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்துவிட்டு ஆலப்புழா போக முடிவு செய்தோம். சரவணகுமார் ஏற்பாடுகளை பார்த்தான், ட்ரெயின் டிக்கெட் புக் செய்தோம்.
ஒரு நாள் ஆலப்புழா, இன்னொரு நாள்
 வீகாலாண்டு என்று முடிவானது.
கொண்டாட்டமாய் போனது அந்த 2 நாட்கள்.


நான் தூசான் வந்த பிறகு சரவணகுமார் அக்கா திருமணத்துக்காக நாமக்கல் செல்ல முடிவு செய்தோம். அதோடு சேர்த்து ஏற்காடு ஒகேனக்கல் என சுற்றுலா போய்விட்டு வந்தோம். (நாமக்கல் பயணத்தை தனியாக பதிவிட முடிவு செய்துள்ளேன்).

Presentation:
எனக்காக ஒரு டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்தார்கள். எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரு அழகான டைட்டன் வாட்ச் பரிசளித்தார்கள். அது இன்றும் என்னோடு இருக்கிறது. நான் அவர்களுக்கு அளித்த போட்டோ எல்லாரிடமும் இருக்கும் என்று நம்புகிறேன்.


ஹாபா டெஸ்ட் - சாதனை சுவடு

 3 வது டெஸ்ட் முடிவில் காயமில்லா இருந்த வீரர்கள் 11 பேர் தேறுவார்களா என்ற சந்தேகமமே இருந்தது. ஆஸ்திரேலியா வேறு பிரிஸ்பேன் வந்து பாரு என்று சீண்டி இருந்தார்கள்.

அணித் தேர்வில் ரகானேவை பாராட்ட வேண்டும். காயத்தில் இருந்து மீண்டாரா என தெரியாத பண்ட்டை கீப்பராக தொடர செய்தார். ஏற்கனவே டெஸ்ட போட்டிகளில் விளையாடிய குல்தீப்பை தேர்வு செய்யாமல் வாசிங்டன் சுந்தரை களம் இறங்கினார். நாலு வேக பந்து வீச்சாளருடன் களம் இறங்கினார்.

முதல் இன்னிங்சில் வார்னரை தொடக்கத்திலே வீழ்த்திய மகிழ்ச்சி ஒரு பக்கம் எனில் சைனி பந்து வீச முடியாமல் வெளியேறியது மறுபக்கம். 

லபுசேன் சதம் மற்றும் மானே, தேனே என 369 அடித்தது ஆஸி. நம் புரட்சி படையில் நட்டி, தாகூர், சுந்தர் தலா 3 பேரே சாய்த்தார்கள்.

186/6 என தத்தளித்தது இந்தியா. 7 வது விக்கெட்டுக்கு சுந்தரும் தாகூரும் 123 ரன்கள் குவிப்பார்கள் என்பது ஆஸி எதிர்பாராத முரட்டு சம்பவம். பதட்டமில்லாமல் பந்தை பார்க்காமல் ஆடி 336 வரை சேர்த்தனர் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள்.

பேட்டிங் செய்து விட்டு வந்த களைப்போ என்னவோ 2ம் இன்னிங்சில் முதல் விக்கெட் 84 ரன்களுக்கு பிறகே எடுத்தனர் நமது பந்துவீச்சாளர்கள்.

4வது நாளில் மழை பெய்ய ஆட்டம் டிராவை நோக்கி சென்றது. தேனீர் குடித்து மழையை ரசித்து ஆஸியை முடித்துவிட்டனர் நம்மவர்கள். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்த சிராஜ் 5 விக்கெட் எடுத்தார். தாகூர் தன் பங்கிற்கு 4 விக்கெட்.

5ம் நாள் காலையில் ரோகித் அவுட் ஆனதும் ஆட்டம் தோல்வியை நோக்கி பயணித்தது. கில்லும் புஜாராவும் அவர்களின் தனித்துவமான ஆட்டத்தை ஆடினார். கில் சதமடிக்காமல் அவுட் ஆனார். 

பண்ட்டும் புஜாராவும் ஆடிய சமயத்தில் ஆஸிக்கு புது பந்து கிடைத்தது. புது பந்தில் புஜாராவை சாய்க்க, புஜாராவின் ரிவியுவை பார்த்து யாரு சாமி இவன் என்று அரண்டார்கள் ஆஸ்திரேலியர்.

புது பந்தை இளம் ரத்தங்கள் துவம்சம் செய்ய இந்தியா வென்றது. பண்ட் அடித்த வெற்றிக்கான ஷாட், இந்தியர்களின் இதயம் தொட்டது.

கும்ப்ளே தலைமையில் பெர்த்ல் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றி பெருமிதம் கொள்ள வைக்கிறது.

நன்றி: ரோகித், கில், புஜாரா, ரகானே, பண்ட், அகர்வால், சுந்தர், தாகூர், சைனி, நடராஜன் & சிராஜ்.




Sunday 17 January 2021

போபால் பயணம்

 கல்லூரி நாட்களில் ஒருநாள் முத்து சங்கர் வந்து நேவிக்கு இன்டர்வியூ நடப்பதாய் சொன்னான். ஹாஸ்டலில் இருந்த ஒரு சிலர் கிளம்பி சுங்கான்கடை சேவியர் கல்லூரியில் நடந்த இன்டர்வியூக்கு போனோம். அது ஒரு ஆரம்ப நிலை என்று என்பதால் GK மட்டுமே கேட்டார்கள்.

முக்கியமாய் துணை குடியரசுத்தலைவர் பெயரைக் கேட்டனர். எனக்கு முன்னால் போன முத்து சங்கர் அந்த கேள்வி கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டான்.

ஒரு சில நாட்களில் நானும் முத்து சங்கரும் தேர்வு பெற்றதாக அறிவித்தனர். டேஸ் ஸ்காலரில் அஜுவும், சீனிவாசனும் தேர்வு பெற்றனர்.

அடுத்த கட்ட இன்டர்வியூ போபாலில் நடைபெறும் என்று சொன்னார்கள். நோட்டீஸ் போர்டில் எங்கள் பெயர் ஓட்டியதால் பெருமிதத்தோடு அலைந்தோம்.

போபால் செல்ல முத்து சங்கரே டிக்கெட் புக் பண்ணினான். அவன் ஏற்கனவே இதுபோன்ற SSB இன்டர்வியூக்கு போய் இருக்கிறான்.

போபால் செல்ல திருநெல்வேலியிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தோம். எழும்பூர் ரயில் நிலையத்தில் குளித்துவிட்டு எங்களுக்கு project சமயத்தில் ஏற்கனவே பரிச்சயமான அயனாவரம் செல்ல முடிவு செய்தோம். காலையில் அபிராமியில் போக்கிரி படம் பார்த்தோம். அதன்பிறகு அயனாவரம் ராதா தியேட்டரில் ஒரு படம் பார்த்தோம்.

சாயங்காலமே சென்ட்ரலுக்கு வந்து விட்டோம், இரவு 12 மணிக்கு போபால் ரயில். கொஞ்ச நேரம் எங்கள் பக்கத்தில் இருந்த நேபாளியுடன் பேசிக்கொண்டிருந்தோம். 12 மணிக்கு ரயில் ஏறி படுத்து விட்டோம். காலை 6 மணிக்கு ரயில் விஜயவாடா ஆற்று பாலத்தை கடக்கையில் எழுந்து கொண்டோம்.

அரவாணிகள் வந்து காசு கேட்டு செல்கையில் ரொம்ப பயந்து விட்டோம். அடுத்து எப்போ வருவாங்களோ என்று பயமாயிருந்தது. வாரங்கல்லில் அடுத்து வந்து காசு கேட்டார்கள்.

அன்று கிரிக்கெட் போட்டி, நிற்கும் ஸ்டேஷனில் எல்லாம் இறங்கி ஏதாவது டிவி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றோம்.

மாலை 6 மணிக்கு நாக்பூர் சென்றது. அப்போதுதான் குளிர ஆரம்பித்தது. அது வரையில் அது போன்ற குளிரை இருவரும் பார்த்ததில்லை. பகலில் விதவிதமான மனிதர்கள், விதவிதமான வியாபாரிகள் என வேடிக்கை பார்த்தே கழித்துவிட்டோம். இரவு படற எதைத் தொட்டாலும் குளிர்ந்தது.

12 30 க்கு போபால் போய்விட்டோம். இறங்கி நடக்கும்போது பின்னால் பரிச்சயமான குரல். அஜுவும், சீனியும், அவர்கள்கூட சேவியர் கல்லூரி மாணவர்கள் 2 பேர். அதில் ஒருவனுக்கு கொஞ்சம் இந்தி தெரியும்.

குளிர் தாங்க முடியலடா ஏதாவது லாட்ஜில் தங்கலாம் என்றேன்.அவர்கள் நால்வரும் ஒத்துக்கொள்ளவில்லை. ரயில் நிலைய வெயிட்டிங் ஹாலில் போய் செய்தித்தாள் விரித்துப் படுத்தோம். அரை மணி நேரத்தில் செய்தித்தாள் நனைந்தது போல குளிர்ச்சி.

பின்பு ஒரு வழியாய் லாட்ஜ்க்கு போக சம்மதித்து விட்டார்கள். ஹிந்தி தெரிந்த தற்காலிக நண்பன் ஆட்டோ பேசினான். ஆட்டோகாரன் தஸ் ருப்பியா என்றான்.

பத்து ரூபாய் தான் கேட்கிறான் நம்ம ஊர்ல குறைஞ்சதே இருபது ரூபாய் என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவில் ஏறினோம். ஒரு பாலம் ஏறி தண்டவாளத்தை கடந்து ரயில்வே ஸ்டேஷன் மறு பக்கத்தில் ஒரு லாட்ஜில் நிறுத்தினார்.

10 ரூபாய் கொடுத்த போதே, ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் என்று சண்டை போட்டு பிடுங்கிக் கொண்டான். அதற்குப்பின் யாரைப் பார்த்தாலும் ஏமாற்றுக்காரர் போலவே தெரிந்தது.

லாட்ஜில் வேலை செய்த பெரியவர் ஒருவர், காலை எழுந்தவுடன் டீ வாங்கி வரட்டுமா என்று கேட்டார். டீ எவ்வளவு என்று வியப்பாய் கேட்டோம். டீ ரெண்டு ரூபா,  2.50 குடுத்தா நாலு பேரு டீ காசுல நான் ஒரு டீ குடிப்பேன் என்றார் இந்தியில். அவர் அப்பாவி தான்.

காலை 10 மணிக்குத்தான் குளிர் விலகியது. மதியம் 2 மணிக்கு பஸ்ஸில் வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள்.

போன இடத்தில் முந்தின நாளே வந்த பசங்க எங்களை (என்னையும் முத்து சங்கரையும்) ராகிங் செய்வது போல் மிரட்டினார்கள். நாங்கள் ஹிந்தி தெரியாது என்று சொன்னபோது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுவிட்டு எங்கள் பதிலைக் கேட்டு ஹிந்தியில் அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டனர். நான் கொஞ்சம் கோபப்பட்டேன். முத்து சங்கர் ரொம்பவே கோபப்பட்டான். கோபம், பயம், ஆத்திரம் ஒருசேர இருந்தது.

மாலையில் வெரிஃபிகேஷன்க்கு கூப்பிட்டார்கள், பெயரைச் சொல்லி (சத்தமாக) இனிஷியலை சொல்லி 'எஸ்' என்றும் சொல்ல சொன்னார்கள். எனக்கு இனிஷியலும் 'எஸ்' என்பதால் இரண்டு எஸ்க்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டேன். என்னை திட்டி விட்டார் அந்த அதிகாரி. ஹிந்தி தெரியாதவர்களை கடிந்து கொண்டார்கள். ஹிந்தி தெரியாமல் கப்பல் படையில் வேலை பார்க்க இயலாது என்று முன்பே சொல்லியிருந்தால், நான் போபால் வரை போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இரவு சீனியர்கள் (ஒருநாள் சீனியர்) ராகிங் பண்ணுவார்கள் என்ற பயம் வேறு, அப்போதே ஊருக்கு கிளம்பலாம் என்று நினைக்க வைத்தது.

இரவு சீனியர்கள் இல்லாத வேறு அறைக்கு சென்று விட்டோம். மறுநாள் காலையில் முதல் கட்ட இன்டர்வியூ குரூப் டிஸ்கஷன். எனது குரூப்பில் இரண்டு பேரைத் தவிர 18 பேரும் தமிழர்கள் சந்தோசமாய் இருந்தது. இரண்டு கர்நாடக பையன்கள் அழகாய் படித்துவிட்டு வந்து இருந்தார்கள்.

நானும் ஆங்கிலத்தில் படம் பார்த்தும் கதை சொன்னேன். ஒரு வழியாக தேர்வாகவில்லை. தேர்வாகதவர்கள் ரயில் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்ற போது முத்து சங்கரும் நண்பேண்டா என்று சேர்ந்து கொண்டான்.

ரயில் நிலையத்திற்கு சென்றால் இரவு கேரளா எக்ஸ்பிரஸ்ஸில் RAC 1 டிக்கெட் மட்டுமே இருந்தது. நாங்கள் ஆறு பேர் தமிழ் பசங்க இருந்தோம்.

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டோடு ரயில் ஏறினோம், இரவு ஒரு மணிக்கு. மற்ற நாலு பேரும் எங்களுக்கு ஒத்துப் போனார்கள். நீங்க நாலு பேரு நேற்று என்கூட இருந்தா அந்த இந்திகாரனுகள அழவிட்டிருக்கலாம் என்றேன்.

ரயிலேறி டிடிஆர் இடம் கெஞ்சி, காலை 6 மணிக்கு நாக்பூரில் சீட் கிடைத்தது. அப்புறம் அரட்டையை ஆரம்பித்தோம்.

அவர்களில் 2 பேர் நாகர்கோயில், ஒருவன் சேலம், மற்றொருவன் கோயம்புத்தூர். வட இந்திய பயணம் இரண்டு நாட்களில் இட்லி தோசை மேல் காதல் கொள்ள வைத்தது. 

இரவு உணவுக்காக ரேணிகுண்டாவில் தோசை வாங்கி ஆறு பேரும் அவசர அவசரமாய் ரயிலேறி சுவைத்தால் தோசையில் ஒரே சுவை புளிப்பு சுவை. தோசை தூக்கிப் போட்டுவிட்டு பிஸ்கட் சாப்பிட்டு தூங்கினோம்.

சேலம், கோயம்புத்தூர் நண்பர்கள் இறங்கிவிட காலையில் கேரளாவில் முத்து சங்கர் டிபன் வாங்கி வைத்திருந்தான்.

 எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் அறிவிப்பு ரயில் 'நிக்கினு' என்று சொன்னதைக் கேட்டு முத்து சங்கர் விழுந்து விழுந்து சிரித்தான்.

திருவனந்தபுரத்தில் இறங்கி பஸ் பிடித்து கல்லூரி வரும்போது நானும் முத்து சங்கரும் பேசிக்கொண்டோம்.

இன்டர்வியூ நல்ல படியா போச்சு, மே மாசத்துல ரிசல்ட் சொல்வார்கள் என்று எல்லோரிடமும் சொல்லி விடுவது என்று.

அஜுவும் ஸ்ரீனிவாசனும் போபாலில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து.

Thursday 14 January 2021

சைதை மேன்சன்

 எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியாத சுவாரசியம் சைதை மேன்சன்.

சைதாப்பேட்டையில் பனகல் மாளிகைக்கு பின்னால் ராஜ் தியேட்டர்  பக்கத்து தெருவில் (விநாயகம் பேட்டை தெரு) இருக்கிறது எங்கள் மேன்ஷன்.

மேன்ஷனை எனக்கு அறிமுகப்படுத்தியது சங்கர் தான். சங்கருக்கு அறிமுகப்படுத்தியது அருண். அருண் தான் சீனியர்.


 நான், ரிஸ்வான், ஜனா மூணு பேரும் ரூம் எடுத்து தங்குவதாய் பிளான். ஜனா கடைசி நேரத்தில் கழண்டு கொள்ள தினேஷ் வந்து சேர்ந்து கொண்டான்.

அதற்குப்பின் சன் குமார் வந்தான். குரு, வரதன், ஜாஹிர் ( தினேஷ்) மாப்பிள்ளை மார்த்தாண்டன், ராஜ்குமார், தாஸ் ப்ரொபசர் பாலு, ராஜ பார்த்திபன், பகவான், சின்ன பகவான், அம்பத்தி ராயுடு என சகலரும் புழங்கிய இடம். கார்த்தி மட்டும் வேடந்தாங்கல் பறவை போல் வாரக்கடைசியில் வந்து செல்வான்.

 சாப்பிட நானும் தினேஷ் அதிகம் விரும்புவது பிளாட்பார கடை பிரியாணி. நானும் ராஜ்குமாரும் கூட்டணி என்றால் ராயல் பிரியாணி. அருண், ஜாகிர்,மாப்பிள மார்த்தாண்டம் என எல்லாரும் சேர்ந்து சென்றால் ராவுத்தர் தலப்பாக்கட்டு அல்லது மாமிஸ்.

 காலை உணவு பொதுவாக மேன்ஷனுக்கு கீழிருக்கும் மரண விலாஸ் ஹோட்டலில் தான். நினைத்த நேரத்தில் படம் பார்க்க சைதை ராஜ் எனக்கு பக்கத்தில்.

நான் ஒருநாள் விரக்தியில இருந்த சமயத்தில் தான் ராஜ்குமார் என்னிடம் வந்து பேசி பழகினான். எனக்கும் ஆறுதலாய் இருந்தது. அன்று அவனும் விரக்தியில் இருந்தான். அவன் விரக்திக்கு காரணம் அவன் ரூம் மேட் பகவான் ஒரு பாக்கெட் டேட்ஸ் (பேரிச்சை) வாங்கி ராஜ்க்கு கொடுக்காமல் சாப்பிட்டது தான். ராஜ் டேட்ஸ் வாங்கி மொட்டை மாடிக்கு வந்து என்னிடம் மனம்விட்டு பேசினான்.

 அடுத்ததாய் அம்பத்தி ராயுடு கதைக்கு வருவோம். மேன்ஷனில் எங்கள் ரூமுக்கு பின்பக்க ரூமில் இருந்தான் அணிமேஷ். அனிமேஷின் தாடியிலும் நரை முடிகள் வந்து விட்டதால் தினமும் காலையில் சவரம் செய்து கொள்வான். மேன்ஷன் காமன் பாத்ரூம்ல் இரண்டில் ஒன்றை பிடித்துக் கொள்வான். அனிமேஷ் ஒரு வட இந்தியன் கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுவான்.

ஒருநாள் சன் குமார் என்னிடம் யாருனல அவன் டெய்லி காலையில உயிர வாங்குறான். அவன் பேரு என்ன என்றான் அனிமேஷை காட்டி. அந்த நாளில் எனக்கும் அவன் பெயர் தெரியாது. ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாய் நடந்த சமயம் என் வாயில் வந்த பெயரான அம்பத்தி ராயுடுவை அவன் பெயர் என்றேன். அம்பதி ராயுடு பாப்புலராக காலம் என்பதால் சன்குமாரும் நம்பி விட்டான்.

அதற்குப்பின்னால் அனிமேஷை எங்கு பார்த்தாலும் அம்பத்தி ராயுடு என்று கூப்பிட்டான். அவன் அந்தப் பெயரை தமிழில் கொச்சையான பெயர் என்று நினைத்துக்கொண்டான்.

 கொஞ்ச நாள் கழித்து நண்பர்கள் குழாமோடு சேர்ந்து அம்பத்தி ராயுடு பீர் அடித்தான். அரை பீரில் போதையான ராயுடு சன் குமாரை நோக்கி வந்து "இப்போ சொல்லுடா அம்பதி ராயுடு சொல்லு, அம்பத்தி ராயுடு சொல்லு" என்றான். 

எனக்கும் தினேஷ்க்கும் மட்டும் விவரம் தெரிய விழுந்து விழுந்து சிரித்து அம்பத்தி ராயுடுவை சமாதானம் செய்து துணி துவைக்க அனுப்பிவைத்தோம். 

இரவு 11மணிக்கு அம்பத்தி ராயுடு பனியனை விட்டுவிட்டு தரையில் சோப்பு தோய்தான் .போதையில் அன்று சிரித்து வயிறு வலித்து விட்டது.

 மார்க்கெட் பக்கத்தில் மேன்ஷன் இருந்தாலும் மார்க்கெட்டுக்கு அதிகம் யாரும் போனதில்லை.

 வ குவாட்டர் கட்டிங் பட சூட்டிங் நடந்தது கூட காலையில் தான் எங்களுக்குத் தெரியும்.

 ஒரு நண்பர்கள் தின இரவில் தினேஷும் பழனி சங்கரும் மார்க்கெட் சப்வே பக்கத்தில் போய் போலீசிடம் அடிவாங்கி திரும்பி வந்தனர். காரணம் தினேஷ் போலீஸிடம் சொன்ன வாக்கிங் வந்தோம் என்ற பொய்.

 மற்றொரு நாள் இரவில் நான், மார்த்தாண்டம், தினேஷ் மற்றும் ஜாகிர் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்ய போனது சுவாரஸ்ய சம்பவம்.

 வாராவாரம் கிரிக்கெட் விளையாட ஏர்போர்ட் எதிரில் உள்ள மைதானத்துக்கு சென்று வருவது ஆனந்தம். மேன்ஷனில் தான் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தோம். 2011 உலக கோப்பை போட்டிகளை கொண்டாடினோம்.

 குறிப்பாக இறுதிப் போட்டி முடிந்து கூத்தாடி விட்டு இரவு உணவுக்காக அலைந்து இரவு ஒரு மணிக்கு உணவு கிடைத்ததை விட இந்திய ஜெயிச்சது தான் சந்தோஷம்.

 காலையில் நந்தனம் செல்ல 23c காக அண்ணா ஆர்ச் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பது ஒரு தனி சுகம்.

சேத்துப்பட்டு அலுவலகத்துக்கு ரயிலில் சென்று வந்தது இன்னும் இன்பம். விடுமுறை நாட்களில் இரவுகள் மட்டும் நீண்டு கொண்டே இருக்கும்.

வியாழக்கிழமை ஆனந்த விகடன் எனக்காக எடுத்து வைக்கும் பெட்டி கடைகாரர், காலையில் நாங்கள் சென்றால் மூணு இட்லி வடை வைத்து நீட்டும் மரண விலாஸ் 2 ஓனர், மற்றவர்களுக்கு மதிய புளி சாதத்தை ப்ரைடு ரைஸில் கலந்தாலும் எங்களுக்கு கலக்காத மரண விலாஸ் 1 ஓனர், காலையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் முதலில் எனக்கு டீ தரும் டீக்கடைகாரர், விளையாடிவிட்டு வரும் போது வாஞ்சையாக லெமன் சோடா போட்டு தரும் பாட்டி மறக்க முடியாதவர்கள்.

விடுமுறை நாட்களில் பகலில் பேப்பர் பந்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது/ சண்டை போடுவது வழக்கம். மாப்பிள்ளை மார்த்தாண்டம் வந்த பின் வாக்குவாதங்களளே அதிகம் நடக்கும்.

 தினேஷ் இருக்கும் வரை ரூமில் அதிகம் ஹிந்தி படங்களை கம்ப்யூட்டரில் ஓடும். குறிப்பாய் 3 இடியட்ஸ் லகான் தாரே ஜமீன் பர்.

மேன்ஷனில் ஒரு வெறிநாய் திரிந்த போது கிரிக்கெட் பேட்டுகள் மற்றும் ஸ்டம்புகளே எங்களை காப்பாற்றியவை. 

அருண் விசாகப்பட்டினத்தில் இருந்த மூன்று மாதம் அருண் ரூமுக்கு நானும் ரிஸ்வானும் தான் ஓனர். ஆண்டு அனுபவித்தோம். அருண் தான் வாடகையும் கேபிள் பில்லும் கட்டியது.

மேன்ஷனில் ஓனரை வருத்தி எடுப்பது இன்னொரு பொழுதுபோக்கு‌. அதில் தினேஷ் கைதேர்ந்தவன், 'ராஜா அவன் காசு கேட்டால் சிரிக்கிறான் ராஜா' என்பார் ஓனர்‌.

சைதை மேன்ஷனில் துணி துவைப்பது தவிர மற்ற எல்லா விஷயங்களும் சந்தோசத்தை கொடுத்தது.

 மேன்ஷனை சுற்றி என்னவெல்லாம் மாறினாலும் மேன்ஷன் மாறவே இல்லை. மொட்டை மாடி ரூம் ரொம்ப வசதி‌. 

விடுமுறை நாட்களில் காலையில் காக்காகளுக்கு நடுவே நண்பர்கள் குழாமில் யாராவது மொட்டை மாடியில் படுத்து இருப்பர் போதையில்.

 ரிஸ்வானின் சங்கீத மேகம், சங்கரின் தூளியிலே ஆட வந்த பாடலில் விழித்த காலைகள், தினேஷ் வந்தபின் ஏதாவது ஒரு எஸ்பிபி பாடலில் தான் விடிந்தது. என் செல்போன் மூங்கில் காடுகளே பாடலை இசைக்க மறந்த அன்று களவு போய் இருந்தது.

அந்த செல்போன் திருடனை கடைசி நாள் வரை தேடினேன் கையில் சிக்கவில்லை.

 குடியும் குடித்தனமுமாக இருந்த மேன்ஷனில் குடியாதவர்களும் குடிகாரனின் உடல் மொழியை கற்றுக் கொண்டோம்.

நதிக்கரையில்தான் நாகரிகங்களின் தோன்றுகின்றன. அடையாறு நதிக்கரையில் இருந்த மேன்சன் தான் சந்தோஷமான நினைவுகளை தந்தது.

Monday 11 January 2021

ஜெபவீர சிங்

ஒரு பரபரப்பான கிரிக்கெட் போட்டி, 2 பாலுக்கு பதினொரு ரன்கள் தேவை. அசால்டாக ரெண்டு சிக்ஸ் அடித்து மேட்சை முடித்தான். அவன் அடித்தது குருட்டாம் போக்கு அடியல்ல. திறமையான ஷார்ட்ஸ். அதற்கு முன் அவன் விளையாடி யாரும் பார்த்ததில்லை. அதனால் தான் எல்லாருக்கும் வியப்பு. இந்த காட்சி தான் சிங்கிற்கு சரியான அறிமுக காட்சியாக இருக்கும்.

கல்லூரி ஆரம்பித்த புதிதில் சீக்கிரமாக தூங்கிவிடும் அவனை பார்த்து என்னடா இவன் சீக்கிரமா தூங்குறானே செட் ஆக மாட்டான் போல என்று நினைத்துண்டு.

ஆனால் கிட்டத்தட்ட எல்லாருக்கும் செட் ஆன ஒரு நபர் சிங். கல்லூரியில் எங்கள்  செட்டில் கம்யூட்டர் சயின்ஸ் க்ரூப் அரிதான வகை. அந்த வகையை சார்ந்த சிங் கேம்பஸில் தேர்வானது யாருக்குமே வயிற்றெரிச்சலை கிளப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் செமஸ்டர் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் தேர்வுக்கு முந்திய நாள், கொஸ்டின் பேப்பர் அவுட்டான வதந்தி வர விடை கண்டு பிடிக்கும் குழுவில் சிங் இணைந்து அன்றிரவு சிங் அதிக நேரம் விழித்திருந்தான்.

முதல் செமஸ்டர் ரிசல்ட் பார்க்க கும்பலாக சென்றோம். எனக்கு மூணு அரியர் இருக்குமோ என‌ மனசு படபடத்தது. சிங்கின் ரிசல்ட்டை முதலில் பார்த்தோம். அவன் ஆல் கிளியர். அடுத்து எனக்கு பார்த்தோம் ஒரே ஒரு அரியரோடு தப்பித்தேன். இரண்டாவது செமஸ்டரிலும் அதுவே தொடர்ந்தது.

மூன்றாவது செமஸ்டரில் இருந்து முதலில் சிங் ரிசல்ட்டை பார்த்து விட்டு எனது ரிசல்ட்டை பார்ப்பது சென்டிமென்ட் ஆகியது.

சிங் அடிக்கடி ஊருக்கு செல்வான். ஊருக்கு சென்று திரும்பி வரும் போது கொண்டு வரும் பொடி தோசை அவ்வளவு சிறப்பு. நாட்கள் செல்ல செல்ல அந்த தோசையை பங்கிட்டு கொள்ள கூட்டம் அதிகரித்து விட்டது.

நானும் இருமுறை சிங்கின் ஊரான கீழப்பத்தைக்கு சென்றிருக்கிறேன். நான் ஆசிரியரின் மகன் என்றால் அவன் ஆசிரியர்களின் மகன்.

நான் அன்று எழுதும் கதைகளை படித்து விட்டு முதல் விமர்சனம் தருவது சிங்கே.

தேர்வுக்கு முந்திய நாளில் சாதாரண நாள் போல் சீக்கிரம் தூங்கி விடும் அவனை கண்டு வியக்காதோர் யாரும் இல்லை.

என் மீது சிங் கோபப்பட்டது ஒருமுறை தான். லிம்கா குளிர்பான பாட்டிலின் ஸ்டிக்கரை கிழித்ததற்காக. அந்த லிம்கா பேப்பர் எனது டைரிக்குள் உள்ளது.

கல்லூரி முடிந்த காலம், செல் போன்கள் பிறந்த காலம். அளந்தளந்து அவுட் கோயிங் கால்கள் செய்வோம். அன்று அனைவருக்கும் போன் செய்து பேசியவன் சிங்.

"பள்ளிக்கூட நண்பன் டாக்டராகி விட்டான்.கல்லூரி நண்பர்கள் யாரும் டாக்டராகவில்லை" என்று ஒரு முறை முகநூலில் பதிவிட்டேன். நான் ஆகிறேன் மச்சி என்று சிங்கிடம் இருந்து கமெண்ட்.

ஆம், இப்போது சிங் முனைவர். ஜெப வீர சிங்.


Sunday 10 January 2021

ஆங்கிலம் ஆளுமையல்ல

 ஆங்கில ஒரு மொழி தான் அது ஆளுமை அல்ல என்பதை பற்றிய பதிவு.

நான் எனது கிராம தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு நகர பள்ளியில் சேர சென்ற போது எனக்கு ஆங்கிலத்தில் எனக்கு எழுத தெரிஞ்ச ரெண்டு வார்த்தை  எனது பெயரும் எங்கள் ஊர் பேருமே.

நகர பள்ளியில் நுழைவு தேர்வு ஆங்கிலம் மற்றும் கணக்குக்கு நடந்தது. ஆங்கிலத்தில் முதல் கேள்வி உனது பெயர் என்ன? பதிலளித்தேன்.

அடுத்த கேள்வி உனது ஊரின் பெயர் என்ன? பதிலளித்தேன்.

அடுத்தடுத்த கேள்விகள் என்ன என்று தெரியவில்லை, எனது பெயரையும் ஊரின் பெயரையும் பதிலாக அளித்தேன்.

அதே பள்ளியில் சேர்ந்து முதல் இடை தேர்வில் ஆங்கிலத்தில் 42 மதிப்பெண் பெற்றேன்.

அந்த இடை தேர்வின் விடை எழுதும் போதும் தான் ட்ராண்ஸ்லேசன் கேள்விகளுக்கு தமிழில் எழுத வேண்டும் என்பதே தெரியும்.

ஒன்பதாம் வகுப்பில் எங்களின் சமூக அறிவியல் ஆசிரியர் ஆங்கிலம் பற்றி குறிப்புகள் வழங்குவார். அவர் கூறியது தான் ஆங்கில மொழியை எளிதாக்க உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட், கமெண்டரியை கூர்ந்து கவனியுங்கள். கிரிக்கெட் செய்திகளை வாசிக்க முனையுங்கள் என்று.

அதற்கு பிறகு இந்து பேப்பர் எங்காவது இருந்தால் கடைசி பக்கத்துக்கு முந்தைய பக்கம் செல்வது வழக்கம்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் குளுஸ்னர் அடுத்தடுத்து இரண்டு போர்கள் அடித்தார். இரண்டாவது போருக்கு ட்ரிமெண்டஸ் ஷாட் என்ற கமெண்டரி வைத்து ட்ரிமெண்டஸ் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

பலருக்கும் இருக்கும் ஒரு ஐயம், ஒரு மேடையில் பலர் முன்னிலையில் ஆங்கிலம் தவறாக பேசினால் அசிங்கம் என்று. ஒரு மேடையில் பலர் முன்னிலையில் எந்த மொழியில் பேச வேண்டும் என்றாலும் தன்னம்பிக்கை வேண்டும்.

பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு அது உண்டு. காரணம் சிறு வயதிலேயே பலர் முன்னிலையில் சர்ச்சில் பைபிள் வாசிக்க வைத்து பயிற்றுவிக்கின்றனர். 

வட இந்திய அலுவல மீட்டிங்கில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் இந்தியில் அல்லது வட்டார மொழியில் இருக்கும். ஆனால் தமிழக அலுவலக மீட்டிங்கில் 100% ஆங்கிலம் பேச அறிவுறுத்தப்படுகிறது.

ஆங்கிலம் பேச வேண்டும் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது விவேகானந்தா ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸோ அல்லது ரெபிடெக்ஸோ தான்.

நீங்கள் ஆங்கிலம் பேச வேண்டும் என நினைத்தால் கொஞ்சம் ஆங்கிலத்தில் சிந்திக்க தொடங்குங்கள். சிந்தனை எப்போதும் தாய் மொழியில் தான் இருக்கும்.

ஆங்கிலம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தால் கூச்சப்படாமல் பேசுங்கள். வட இந்திய ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள் எண்களை கூட ஆங்கிலத்தில் சொல்ல தெரியாதவர்கள். ஆனால் தமிழகத்தில் ஆட்டோ கார் டிரைவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவார்கள் காரணம் கூச்சமில்லாமல் பேச தொடங்குவது தான்.

12ம் வகுப்பு வரை தமிழில் கற்று திடீரென ஆங்கிலம் பேச வேண்டும் என்றால் இயலாத காரியம் தான். ஆங்கிலம் பேசுபவனுக்கு எளிதில் வேலை என்ற போக்கை நிறுவனங்கள் கைவிட போவதில்லை. அதுதான் ஆங்கிலத்தை உச்சாணிக் கொம்பில் வைத்துள்ளது.

எனது நண்பன் சன் குமார் ஆங்கிலம் வளர்க்க சொன்ன ஐடியா. அன்றாட நிகழ்வுகளை டைரியில் ஆங்கிலத்தில் எழுதுவது. நானும அவனும் சில மாதங்கள் எழுதினோம்.

அலுவலகத்தில் தவிர்க்க முடியாத சூழலில் வட இந்தியரோடு கலந்து பேச நேர்ந்ததால் எனக்கு ஆங்கிலம் சமாளிக்கிற அளவு தெரியும்.

நண்பன் கணபதி ஒரு ரயில் பயணத்தில் 2 ஸ்டேட்ஸ் நாவல் பற்றி சொன்னான். வாசிக்க துவங்கினேன் வாசிக்க எளிதான நாவல்கள் சேட்டன் பகத் நாவல்கள்.

இங்கு நடக்கும் மொழி அரசியலில் ஆங்கிலம் ஆளுமையாக போற்றப்படுகிறது. நிஜத்தில் அது ஒரு மொழி, நமது அணுகுமுறையை மாற்றினால் எளிதில் வசப்படும் மொழி என்பது எனது அனுபவம்.


Saturday 9 January 2021

புயலிலே ஒரு தோணி

 முதல் முறையாக ஒரு புத்தகத்தை பத்தி எழுதுறேன். புயலிலே ஒரு தோணி நாவலை எழுதியவர் ப. சிங்காரம் அவர்கள்.

கமல் பிக்பாஸில் பரிந்துரைத்ததன் பேரிலும்,  டுவிட்டரில் வாசிக்க வேண்டிய 100 புத்தகங்கள் வரிசையில் இடம் பெற்ற புத்தகம் என்பதாலும் வாசிக்க துவங்கினேன்.

கதையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டில் நடப்பது போல் எழுதியுள்ளார். அவர் இதை எழுதிய ஆண்டு 1962, கதை வாசிக்கும் போது ப. சிங்காரம் இத்தனை இடங்களுக்கு சென்றுள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

அவர் காட்டியிருக்கும் மேற்கோள்கள் அவர் எவ்வளவு வாசித்திருப்பார் என்பதை காட்டுகிறது. ஆனால் இந்த நாவலுக்கு போதுமான வரவேற்பு இல்லாததால் அவர் இதற்கு பிறகு நாவல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கதை நாயகன் பாண்டியன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிகிறார். உலகப்போர் நடக்கும் சமயத்தில் நடப்பது போல் கதை.

நேதாஜியும் கதையில் வந்து போகிறார். பாண்டியன், எதையும் செய்யும் சாகசகாரன். நேதாஜிக்காக கடிதத்தை பெற்று வருவதில், யாமசாக்கியை திட்டம் போட்டு கொல்வதில், சுந்தரத்தை கொல்வதற்கு முன் அவனுக்கு அறிவுரை வழங்குவதில் பாண்டியன் மிளர்கிறான்.

கதை ஓட்டத்தில் நாமும் குதிரை வண்டியில் பயணிக்கிறோம். பாய்மர கப்பலில் கடல் கடக்கிறோம். இந்தோனேசிய வீதிகளில் நடக்கிறோம்.அதுதான் நாவலில் சிறப்பே.

நண்பர்கள் ஒரு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை ரசிக்க வைக்கிறது.

நாவலில் மலாய் உட்பட பிற மொழிகளிலும் பேசிக்கொள்கிறார்கள். (விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது). பாண்டியன் என்று பெயரை ஒவ்வொரு நாட்டினரும் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதிலே தெரிகிறது.

நாவல் முழுக்க "புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கனாது" என்று வைக்க வேண்டியுள்ளது.

கதையில் வரும் உரையாடலில் பல இடங்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். மறு வாசிப்புக்கும் சிறந்த நாவல்.