Friday 22 October 2021

நாட்குறிப்பு

நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை

கைவிட்ட நான் நீண்ட

நாள்களுக்கு பிறகு எழுதுகிறேன் !

ஊருக்கு கிளம்ப வீட்டிலிருந்து

ரயில் நிலையம் செல்ல 

மகிழுந்தை அழைத்திருந்தேன் !

அவர் வரும் வந்த சாலை மோசமாக 

இருந்ததால் மகிழுந்து ஓட்டுனருக்கு 

மகிழ்ச்சி இல்லை ! 

அடுத்த தெருவில் ஒரு 

அடுக்கு மாடிக் குடியிருப்பின் 

வாகன நிறுத்துமிடத்தில் 

குளிர்சாதன பெட்டியில் 

ஒரு உடலை வைத்திருந்தார்கள் !

உடலை சுற்றி மூவர் மட்டுமே !

இறந்த மனிதர் என்ன சம்பாதித்தாரோ 

மனிதர்களை கூட சம்பாதிக்கவில்லையே 

என்று மனம் வருந்தியது !

ரயில் நிலையத்தில் மின்னேனியில் 

பாட்டியை ஏற்ற பல கதைகள் 

சொல்லி பேத்திகள் கூட்டி 

சென்றனர் 

பேத்திகள் கதை சொல்லும் காலம் !

ரயிலில் எதிர் இருக்கையில் 

உயவு செய்யப்படாத 

கனரக வாகனத்தின் 

இயக்கத்தை போல 

இடைவிடாது குரட்டை 

விட்டுக்கொண்டு இருந்தார் ஒருவர்.

எப்போது தூங்கினேன் என்று

தெரியவில்லை. 

அடுத்த நாள் விடியலிலே 

விழித்தேன் !!!




Sunday 17 October 2021

பணத்தாள் சேகரிப்பில் பத்தாண்டுகள்

1. எப்போது இந்த பழக்கம் துவங்கியது ? 

2012 முதல் நான் சேகரிக்க துவங்கினேன். அப்போது தான் கம்பெனியில் எனக்கு இன்டர்நெட் கிடைத்தது. ஈபேவில் குறைந்த விலையில் கிடைத்த நோட்டுகளை வாங்கினேன். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி வைக்க துவங்கினேன். ஈபே இந்தியா நிறுத்தப்பட்டபின் வாட்சப், பேஸ்புக் க்ரூப்கள் மூலம் தொடர்கிறது. 

2. நண்பர்கள் உதவினார்களா?

நன்றாக உதவினார்கள். அவர்கள் கிளம்பும் சூழல் பணியிட சிக்கல் காரணமாக எல்லாராலும் கொண்டு வர முடியாது. கிட்டதட்ட நாற்பது நோட்டுகள் நண்பர்கள் தந்தது. டெல்லி நண்பர்கள் கூட என் கையில் கிடைக்கும்படி செய்தார்கள்.

3. நண்பர்கள் கொடுத்ததில் காஸ்ட்லியான நோட்டு எது? 

நண்பர்கள் கொடுத்தது எல்லாமே உயர்வானது தான். நண்பர்கள் யார் யார் என்னென்ன நோட்டுகள் கொடுத்தார்கள் என்பதை பற்றிய வீடியோவை யுடியூப் தளத்தில் விரைவில் வெளியிடுகிறேன்.

நண்பர்கள் கொடுத்ததில் அரிதான நோட்டு என்றால் நண்பர் மோகித் தந்த ரொடிஷியா நாட்டு நோட்டு.

4. உங்கள் சேகரிப்பு பற்றி தகவல்கள்  

என்னிடம் 650க்கு மேற்பட்ட நோட்டுகள் உள்ளன.

200க்கும் மேற்பட்ட நாட்டு நோட்டுகளை சேகரித்துள்ளேன்.

40க்கும் மேற்பட்ட பாலிமர் நோட்டுகள் உள்ளன. 

ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட இரு நோட்டுகள் உள்ளது.

அதிகபட்சமாக ஜிம்பாப்வே நாட்டின் நோட்டுகள் 50க்கும் அதிகமாக உள்ளது. 

இலக்கம் ஒன்று என்ற மதிப்புள்ள நோட்டுகள் 80க்கும் அதிகமாக உள்ளது. 

ஒரு நோட்டு போல்டருடன் உள்ளது.

5. ரொம்ப நாட்களாக வாங்க நினைக்கும் நோட்டுகள் ? 

'கடங்கா'னு ஒரு நாடு 1960 - 1963 வரை இருந்துச்சு.  அங்கீகரிக்கப்படாத நாடு. 1963ல காங்கோவோட இணைந்து விட்டது. மொத்தமே 9 வகையான நோட்டுகள் வெளியிட்டுள்ளனர். நோட்டின் தன்மையை பொறுத்து 10000 முதல் 32000 வரை விற்கப்படுகிறது. அதை வாங்க லக்கி ப்ரைஸ் அடித்தால் தான் உண்டு.

தஞ்சை பெரிய கோயில் படத்தோடு வெளியிடப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டு 16000க்கு கிடைக்கிறது.

அப்புறம் பர்படாஸ் 5 டாலர் நோட்டு. கிரிக்கெட் வீரர் இடம்பெற்ற ஒரே நோட்டு என்பதால்.

6. நம்மூரிலே கள்ள நோட்டு வருகிறது, வெளிநாட்டு நோட்டுகளில் கள்ள நோட்டை எப்படி கண்டுபிடிப்பது? 

சற்றே சிரமம் தான். குறைந்த விலையில் விற்கப்படும் நோட்டுகளில் கள்ள நோட்டு வர வாய்ப்பில்லை. வாட்டர் மார்க், செக்யூரிட்டி த்ரெட் இவற்றை வைத்து நம்பலாம். 

பெரிய விலை கொடுத்து வாங்கும் போது நம்பகமான டீலர்களிடம் வாங்குவது நல்லது.

பேங்க் நோட்டு சொசைட்டிகள் உள்ளன. அங்கு அனுப்பி நோட்டின் நம்பகத்தன்மையை அறியலாம். ஆனால் அதற்காகும் கட்டணம் மற்றும் தபால் செலவு 15000 வரை ஆகும். சில சேகரிப்பாளர்கள் இதை செய்து சான்றிதழ் வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

7. இந்த பழக்கத்திற்கு எதிர்ப்புகள் / கேலிகள் ஏதாவது உண்டா? 

எதிர்ப்புகள் என்று எதுவும் இல்லை. என் மனைவி என் ஆசைகளை தடுப்பதில்லை. நண்பர்களும் அப்படி தான். 

ஒரு சிலர் பணம் கொடுத்து பணத்தை வாங்குகிறீர்கள் என்று கிண்டல் செய்வதுண்டு.

சிலர் வருங்காலத்தில் பெரிய விலைக்கு விற்க இதை வாங்குகிறீர்களா என்று கேட்பதுண்டு. நான் இதை ஹாபியாகவே செய்கிறேன். என்னிடம் கூடுதலாக உள்ள நோட்டுகளை விற்க ஆசை உண்டு. ஆனால் விற்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் வாங்குபவர் கையில் கிடைக்கும் வரை பொறுப்பு நம்முடையது. அதற்கான பேக் செய்து போஸ்ட் ஆபிஸ் வரை செல்ல நேரம் கிடையாது.

8. பழைய நோட்டுகள் லட்சக்கணக்கில் விற்கப்படுவது உண்மையா? 

இது பற்றி ஒரு சின்ன புரிதல் வேண்டும். சேகரிப்பாளர்களும் சாதாரண மனிதர்களே.

அவர்களுக்கு வாங்கும் சக்தி என்று ஒன்று இருக்கிறதே.

எல்லா நோட்டுகளுக்கு கேட்டாக்கில் (Catalogue) தற்போதைய சந்தை மதிப்பு உள்ளது. இந்தியாவில் 1949-1957 ல் 10000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அந்த காலகட்டத்தில் 10000 ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் மிகக் குறைவே. இவ்வளவு அரிதான அந்த நோட்டின் விலை கேட்டலாக்படி நல்ல கண்டிசன் நோட்டு 5000 டாலர் (3.75 லட்சம்) மிக நல்ல கண்டிசன் நோட்டு 10000 டாலர்(7 லட்சம்).

சில சந்தை வியாபாரிகள் சில நோட்டுகளை அரிதாக்கி உயர்ந்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது. உதாரணமாக 2016 செப்டம்பரில் உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆனார். அவர் கையெழுத்தில் 2016ம் ஆண்டு வந்த 10 ரூபாய் நோட்டுகள் மிக குறைவு. அவை இப்போது 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏதாவது கவர்னர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறுகிய காலம் பதவி வகித்தால் அந்த நோட்டுகளை பதுக்கும் போக்கு உள்ளது.

ஆக பழைய நோட்டுகள் லட்சக்கணக்கில் போகும் என்பது டுபாக்கூர் வேலை.

9. இந்த சேகரிப்பு மூலம் தெரிந்து கொண்டது என்ன? 

நிறைய அறிவுசார் விசயங்களை தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாடும் எங்கே இருக்கிறது. ஒவ்வொரு நோட்டின் சின்ன சின்ன விவரணைகள் மூலமாக அந்த நாட்டின் வரலாறு, பண்பாடு, தொழில்வளம் பற்றி தெரிந்து கொண்டேன். இன்னும் கற்று கொண்டே இருக்கிறேன்.

சர்வாதிகாரிகளாக நாம் செய்தி மூலம் அறிந்து கொண்ட இடி அமீன், சதாம் உசேன், ராஜபச்சே இவர்கள் படங்கள் போட்டு கூட நோட்டுகள் வந்துள்ளது.

10. புதிதாக இந்த ஹாபிக்கு வருபவர்களுக்கு நீங்கள் சொல்வது?

சின்ன வயதிலேயே தபால் தலை, நாணயங்கள், பேங்க் நோட்டுகள் சேகரிக்க தொடங்கினால் நிறைய தெரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றையும் சேர்த்து செய்யாதீர்கள் அது மிக கடினம். எப்படி சேகரிப்பது, எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தெரிந்து களம் இறங்குங்கள்.

தெரியாமல் களத்தில் இறங்கி பணத்தை விரயம் செய்ய வேண்டாம்.



Saturday 16 October 2021

சென்னை சூப்பர் கிங்ஸ் 2021

மகேந்திர சிங் தோனி

தோனி ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு கீப்பராகவும் பெரிதாக சாதிக்கவில்லை இந்த முறை. ஆனால் கேப்டனாக வழக்கம் போல் சாதித்துள்ளார். ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்துக் கொள்வது, குறிப்பாக பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தோனியின் நம்பர் ஒன் சாய்ஸ்.

ஆறு பேராவது பந்து வீச தெரிந்திருக்க வேண்டும். ஏழு பேராவது பேட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற அணுகுமுறை.

ரெய்னாவுக்கு பதிலாக உத்தப்பாவை களம் இறங்கி வெற்றி கண்டது தோனியின் மேஜிக்கல் டச்.

ஆடும் 11 ல் கிட்டத்தட்ட 10 அல்லது 11 பேருமே சர்வதேச கிரிக்கெட்டர்களை வைத்து ஆடுவது தோனி தந்திரம் மந்திரம்.

ரிதுராஜ் 

தனது அதிரடி ஆட்டத்தால் ஆரஞ்சு கேப் வாங்கியவர். அணியில் (11) தன்னை தவிர எல்லோரும் குறைந்த பட்சம் 4 வயது மூத்தவர்கள் என்ற கடின சூழலில் இப்படி ஒரு ஆட்டம் வியக்க வைக்கிறது. 

அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலி ஆகும் என காத்திருந்து வாட்சன் இடத்தை பிடித்து கொண்டார். 

டூ பிளஸிஸ் 

துவக்க ஆட்டக்காரராக அதிரடி. பீல்டிங்கில் சூறாவளி. கூட விளையாடும் சின்ன பையனுக்கு நுணுக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. எல்லா இடத்திலும் அடித்து ஆடியுள்ளார். 

சுரேஷ் ரெய்னா

சென்றமுறை தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அணியும் சொதப்பியது. இந்த முறை இவர் வந்ததால் அணியும் முதல் இடம் வந்தது. ரசிகர்கள் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்றனர். ஆனால் இறுதி ஆட்டம் அதையும் மாற்றியுள்ளது.

மொயின் அலி 

வலிமை அப்டேட் ரசிகர்கள் கேட்ட போதே சென்னைக்கு நெருங்கிய வீரர் ஆகிவிட்டார்.

தேவையான அளவு பேட்டிங், தேவையான அளவு பவுலிங் என கமர்ஷியல் ஹீரோவாகிவிட்டார்.

அம்பதி ராயுடு 

எவ்வளவு சொதப்பினாலும் தோனி வாய்ப்பு கொடுத்தார். இந்த முறை மிடில் ஆர்டர் வேறு தனது பணியை சிறப்பாக செய்துவிட்டார்.

ரவிந்திர ஜடேஜா 

ஒரு பர்பெக்ட் ஆல்ரவுண்டர். இந்த முறை பேட்டிங் பவுலிங்கில் இவருக்கான களம் அமையவில்லை. ஆனாலும் திறமையான வீரர். 

வெயின் பிராவோ 

இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை மறந்து முழு நேர பவுலராகவே மாறிவிட்டார். சிஎஸ்கேவின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். 

தீபக் சகார் 

முதல் ஓவர் வீச தோனியின் முதல் சாய்ஸ். பவர்ப்ளே ஓவர்களை தவிர மற்ற ஓவர்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

சதுருல் தாகூர் 

இவரது வளர்ச்சி ஜாவா சுந்தரேசன் போன்ற வளர்ச்சி. எப்போது விக்கெட் வேண்டும் என்றாலும் இவரை கூப்பிடுவது வழக்கம். பேட்டிங் நாலாவது இடத்தில் விளையாடியது சிறப்பு. 

ஜோஸ் ஹேசல்வுட் 

ஹில்பனாஸ், பொலிஞ்சர் போன்ற ஆஸ்திரேலியர் சிஎஸ்கேவுக்கு செய்த அதே செயல். பிசிறில்லாமல் செய்துள்ளார். 

ராபின் உத்தப்பா 

இவரை எதற்கு எடுத்தார்கள். இவர் பெஞ்சில் இருந்தாலே நலம் என ரசிகர்கள் பேசினார்கள். அணைய போற விளக்கு பிரகாசமாக எரியும் என நிருபித்துள்ளார். 

ஆசிப்

ஒரு போட்டியில் தான் வாய்ப்பு கிடைத்தது. தீபக் சகாருக்கு தசை பிடித்தால் இவர் அணியில் இடம் பிடிக்கலாம் என்ற சூழல்.

சாம் கரண் 

யுஏஈயில் சரியாக விளையாடவில்லை. காயம் வேறு தேசிய அணியில் இடம் பெற விடாமல் செய்துள்ளது. கற்று கொள்ள நல்ல தளம்.

நிகிடி, சாண்ட்னர், ஜெகதீசன், தாகீர், ரெட்டி, கிஷோர், கவுதம் இவர்கள் மானே தேனே பொன்மானே வகையறா. சிஎஸ்கே அணி வீரர் என சொல்லி சென்னையில் நடக்கும் போட்டியில் சொந்தகாரர்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுக்கும் வாய்ப்பை கூட கொரோனா பறித்துவிட்டது.

மீண்டும் ஒரு முறை தோனி பற்றி, அணியில் ஆரேழு பேரால் முட்டி மடங்காமல் கால் கட்டை விரலை தொட முடியாத அளவு தொப்பை இருந்த நிலையிலும் வெற்றி வாகை சூடிய கேப்டன்.








Saturday 2 October 2021

நியூ கலிடோனியா



அலுவலகத்தில் எனக்கு வழங்கப்பட்ட முதல் ப்ராஜெக்ட் கோனியம்போ. அது என் அதிர்ஷ்டமும் கூட.

ஒருநாள் இளங்கோவன் சார் வந்து கோனியம்போ ப்ராஜெக்ட்ல வேலை பார்க்குற, அது எங்க இருக்குனு தெரியுமா என்றார்.

தெரியாது என்பதே எனது பதில். டாக்குமெண்ட்ல தேடு இல்லைன்னா என்னோட சிஸ்டத்தில் நெட்ட யூஸ் பண்ணி தேடி பாரு என்றார்.

தேடிப் பார்த்தேன் பாரின் சரக்கில் மிதக்கும் ஐஸ் கட்டி போல கடலுக்குள் மிதந்தது அந்த சிறு தீவு நியூ கலிடோனியா. அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து எனது சிஸ்டம் பேக்கிரவுண்டா வைத்திருந்தேன். கொஞ்ச நாள் எனது பாஸ்வேர்டும் கோனியம்போ தான். 
அங்கே கோனியம்போ நிக்கல் ப்ளான்ட்.
நிக்கல் ப்ளான்ட் பக்கத்தில் எங்க ப்ராஜெக்ட் பவர் ப்ளாண்ட்.

நியூ கலிடோனியா ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் சிறு தீவு. ப்ரெஞ்ச் காலனி. அவர்களது பணத்தின் பெயர் CFP franc. CFP என்பது பசிபிக் ப்ரெஞ்ச் காலனி என்பதன் சுருக்கமே.

உலகில் நிக்கல் தாதுவில் 25% நியூ கலிடோனியாவில் உள்ளது. ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பாரீஸ், மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், ஆக்லாந்து, டோக்கியோ, ஒசாகா, போர்ட் விலா, பிஜி, வாலிஸ் & பாபிட்டி ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து மாதம் ஒருமுறை வனுவாட்டு நாட்டுக்கு இயக்கப்படுகிறது.

ஜேம்ஸ் குக் என்ற பிரிட்டிஷ்காரர் தான் நியூ கலிடோனியா சென்ற முதல் வெளிநாட்டவர். அவர் சென்ற ஆண்டு 1774. அவருக்கு அந்த நாடு ஸ்காட்லாந்தை நினைவூட்டியதால் நியூ கலிடோனியா என்று பெயரிட்டார்.

நியூ கலிடோனியாவின் தலைநகர் நவ்மியா (Noumea). மக்கள் தொகை சுமாராக 270000.
அவர்களின் பூர்வகுடிகள் கணங்குகள் ஆவார்கள்.
பொருளாதாரம் இரும்பு தாது மற்றும் நிக்கல் தாது.

நியூ கலிடோனியாவின் பழைய நோட்டும் புதிய நோட்டும் எனது சேகரிப்பில் உள்ளது.