Saturday 28 April 2018

AK 47 தல 47

தல அஜித்தின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு தல பற்றிய 47 தகவல்கள்.

1. தலயுடன் இணைந்து நடித்துள்ள நடிகர்கள்
அரவிந்த்சாமி, விஜய், பிரசாந்த், சத்யராஜ், விக்ரம், கார்த்திக், பார்த்திபன், சுரேஷ் கோபி, மம்முட்டி, அப்பாஸ், ஆர்யா , ரானா, விதார்த், அர்ஜூன், அருண்விஜய், விவேக் ஓபராய், ஷாருக்கான்.

2.அஜித் படத்தில் அறிமுகமான இயக்குனர்கள்
முரளி அப்பாஸ், ஜேடி -ஜெர்டி, சரண், சுஷ்மா, SJ சூர்யா, ரமேஷ்கண்ணா, VZ துரை, ராஜகுமாரன், கவி காளிதாஸ், சரவண சுப்பையா, முருகதாஸ், செல்லா, AL விஜய் மற்றும் ராஜு சுந்தரம்.

3. அஜித் நடித்துள்ள பிற மொழி திரைப்படங்கள்
ப்ரேம புஸ்தகம் (தெலுங்கு)  அசோகா (இந்தி).

4.அஜித் நடிப்பதாக சொல்லி கைவிடப்பட்ட படங்கள்
நியூ, மிரட்டல், மகா, இதிகாசம், நான் கடவுள்.

5. அஜித் நடித்துள்ள ரீமேக் படங்கள்
கிரீடம்,  பில்லா, ஏகன், இங்கிலீஷ் விங்கிலீஷ் (தமிழ்).

6.தல படங்களில் அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் தேவா (13 படங்கள்)

7. தல இரட்டை வேடங்களில் நடித்த படங்கள்
வாலி, சிட்டிசன், அட்டகாசம்,  வில்லன், அசல்,  பில்லா, வரலாறு (3 வேடங்கள்)

8.முகவரியும் கிரீடமும் பெரிய வெற்றி பெறாத யதார்த்த படங்கள் அஜித்தின் மனதுக்கு நெருக்கமான படங்கள்.

9.அஜித்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் சரண் (4 படம்) சிவா (4 வது படத்தை இயக்க போகிறார்).

10.அஜித்துடன் அதிக படங்கள் நடித்த நடிகைகள்
சிம்ரன், ஜோதிகா, தேவயானி  , நயன்தாரா*

11.கமலஹாசன் அஜித்துக்கு பின்னணி பாடிய பாடல் "முத்தே முத்தம்மா " உல்லாசம் படப்பாடல்.

12.தந்தையை பற்றிய மகன் பாடும் பாடல் தமிழ் சினிமாவில் குறைவு. அசல் பட "சிங்கம் என்றால் " அதில் ஒன்று.

13.அஜித் பிறந்த நாளில் வெளியான படங்கள் வாலி மற்றும் ஜனா.

14.அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட "அட்டகாசம் ".

15. இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மூவரும் அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.

16. கமல் ரஜினிக்கு பின் சிவாஜி புரோடக்க்ஷன் தயாரிப்பில் நடித்த (சிவாஜி குடும்பத்தை சாராத) தமிழ் நடிகர்.

17. ஒரே வேடத்தில் நடித்த படங்களில் அஜித் இறந்து விடுவது போன்று எடுக்கப்பட்ட படங்கள் பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, உயிரோடு உயிராக, சாம்ராட் அசோகா.

18. அஜித்துக்கு குறைந்தது இரு படங்களை இயக்கிய இயக்குனர்கள் K.சுபாஷ், அகத்தியன், ராஜ்கபூர், சரண், KS ரவிக்குமார், எழில்விஷ்ணுவர்தன் மற்றும் சிவா.

19. அதிக அஜித் படங்களை தயாரித்த நிறுவனம் "நிக் ஆர்ட்ஸ்".

20. பிரபல ஹீரோ ஆனபின் தன் குடும்பத்தினரையோ உறவினர்களையோ வலிந்து சினிமாவில் தினிக்காத ஓரே தமிழ் சினிமா நாயகன்.

21. மிகப் பிரபலமான பில்லா படத்தை ரீமேக் செய்து வெற்றி பெற்ற நாயகன்.

22. அஜித்துக்கு சிம்பு பின்னணி பாடிய பாடல் "டில் டில் டில் இத்தாலி" - ரெட்.

23. அதிக படங்களில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் "சிவா ".

24. அஜித்துக்கு பிள்ளையார் சென்டிமென்ட். பிள்ளையார் பட்டி - வான்மதி, மகா கணபதி - அமர்க்களம், வீர விநாயகா - வேதாளம். விநாயக் - மங்காத்தா, விநாயகம் - வீரம்.

25. சினிமா தவிர அஜித்துக்கு போட்டோகிராபி, சமையல், ரேஸ் கார், ரேஸ் பைக் ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு.

26.அஜித் படங்களின் மிகச் சிறிய பெயர் கொண்ட படம் "ஜி ". பெரிய பெயர் "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

27.தலயின் 50வது படம் மங்காத்தா. ரசிகர்கள் கொண்டாடும் படம்.

28.வெண்ணிலா என்ற பெயரில் அஜித் பாதி நடித்த படத்தை "என்னை தாலாட்ட வருவாளா" என்ற பெயரில் பல ஆண்டுகள் கழித்து வெளியிட்டனர்.

29.அஜித் மொட்டை போட்டு நடித்த படம் "ரெட் " . மதுரையை மையமாக கொண்ட படம். மதுரை அஜித் ரசிகர்களின் கோட்டை.

30.அஜித்தும் விஜய்யும் நேரடியாக மோதி கொண்டுள்ளனர்.

31.அஜித் படத்தில் அறிமுகமான பரத்வாஜ் விஜய் படத்துக்கு இசையமைத்ததில்லை.

32. திருடா என்று பெயரிடப்பட்ட படம் ஜனா என்று மாறியது. காட்பாதர், வரலாறு என மாறியது.

33. கிட்டதட்ட படப்பிடிப்பு முடியும் வரை பெயரிட படாமல் பரபரப்பை கிளப்பிய படம் "ஆரம்பம்".

34.அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்த படம் "அமர்க்களம் ". அஜித்தின் 25வது படம்.

35. அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்த படம் "ராஜாவின் பார்வையிலே".

36.அஜித் படங்களில் இடம் பெற்ற அம்மா பாடல்கள்
தாய் மடியே- ரெட், கொஞ்சம் கனவையும்- ஜனா, தீயில் விழுந்த- வரலாறு.

37.அஜித் வித்தியாசமான தோற்றங்களில் நடித்த படம் "சிட்டிசன்".

38. 1999ல் அதிகபட்சமாக 7 அஜித் படங்கள் வெளியாகி உள்ளது.

39. அஜித்தின் உல்லாசம் படத்தின் தயாரிப்பாளர் அமிதாப்பச்சன்.

40. அஜித் முதன்முறையாக மீசையில்லாமல் நடித்த படம் "தீனா".

41. அஜித் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த வாலியில் வில்லன் அஜித் நடிப்பில் ஜொலித்தார்.

42. வியாழக்கிழமை படங்கள் வெளியிடும் ட்ரெண்டை தொடங்கி வைத்தது அஜித் படங்களே.

43. கதாநாயகன் சால்ட் அண்டு பெப்பரில் நடிக்கலாம் என்று நிரூபித்தவர் தல.

44. அஜித் நடிப்பில் வந்த ஒரே காதல் தோல்வி திரைப்படம் "ராஜாவின் பார்வையிலே".

45. அஜித் போலீசாக நடித்த படங்கள் ஆஞ்சநேயா, கிரீடம், ஏகன், மங்காத்தா, என்னை அறிந்தால்.

46.அஜித் படங்களில் ஊர் சொன்ன படங்கள் ரெட் - மதுரை, அட்டகாசம் - தூத்துகுடி, பில்லா 2-இலங்கை,  வீரம்- ஒட்டன்சத்திரம்.

47. முதலில் ஆசை நாயகன், அடுத்து காதல் மன்னன் பிறகு அல்டிமேட் ஸ்டார். என்றென்றும் "தல "



Tuesday 17 April 2018

சன்டிவி

25 ஆண்டுகளை கடந்து விட்ட சன்டிவி பற்றிய பார்வை.

90களில் உங்க வீட்டில் சன்டிவி இருக்கா என்று விழி விரிய கேட்பார்கள். கேபிள் கனெக்சன் என்ற சொல் அவ்வளவு பரிச்சயம் இல்லை. அப்போதய சன்டிவியின் போட்டியாளர் ராஜ்டிவி. ராஜ் டிவியை தற்போது சிபிசிஐடி வைத்து தேட வேண்டியுள்ளது.

96ல் சொத்துக் குவிப்பு காட்சிகளை காட்டிய போது சன்டிவி செய்தி தரமானது என பேசப்பட்டது. கைக்கடிகாரங்களில் சன்டிவி நேரத்தை பதிவு செய்து கொண்டார்கள் மக்கள். வானொலி நேரம் வழக்கொழிந்து போனது.

சின்ன சின்ன தொடர்கள் பார்த்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் சித்திதான் முதல் நெடுந்தொடர்.
சித்தியின் தாக்கத்தால் சன்டிவிக்கு அடிமை ஆனார்கள். அதன் தொடர்ச்சியே மெட்டி ஒலி, திருமதி செல்வம், அண்ணாமலை, நாதஸ்வரம்,  தெய்வமகள் எல்லாம்.

பெப்ஸி உங்கள் சாய்ஸ்,  நிம்மதி உங்கள் சாய்ஸ் மிக பிரபலம். அதாவது சார் என்று ஆரம்பித்து மூச்சு விடாமல் பேசும் அரட்டை அரங்கம், பாப்பையா பட்டிமன்றம் சன்டிவியின் பலம்.

டாப் டென் மூவிஸ் சன்டிவி குழுவின் திரை ரசணைக்கு சான்று. கலைஞரின் கண்ணம்மா முதலிடம் பிடித்த நாளில் டாப் டென் மூவிஸ் சறுக்க தொடங்கியது.

சனி ஞாயிறு புதிய படங்கள் சன்டிவியின் சிறப்பு. தூரன் கந்தசாமியின் குரல் மெகா ஹிட் சூப்பர் ஹிட் என்று நிஜத்தை சொன்னது அந்த காலமே. இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று இருந்த வசனம் சங்கமம் படத்தின் போது திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்று மாறிப்போனது.

சன்டிவி குழுமத்தில் கேடிவி வந்தபின் சன்டிவி படங்கள் டல்.
சன் பிக்சர்ஸ் தொடங்கி மோசமான படங்களுக்கு சன்டிவி செய்த விளம்பரம் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. புதுசு கண்ணா புதுசு குங்குமம் விளம்பரம் போல் ஆனது சன் பிக்சர்ஸ் படங்கள்.

சன்டிவி புதியதாய் புதுமைகள் எதுவும் நிகழ்த்தவில்லை.பிற டிவிக்களின் பார்முலாக்களையே காப்பி அடித்தார்கள்.

சனிக்கிழமையும் நெடுந்தொடரை ஒளிபரப்பியது சன்டிவியின் மாபெரும் சறுக்கல்.

கலைஞர் டிவி வருகையின் போது சற்றே ஆட்டம் கண்ட சன்டிவி, விஜய்டிவி ஜீ தமிழ் வளர்ச்சியால் பத்தோடு பதினொற்றாகிவிட்டது. மக்களே முடிக்க சொன்ன தெய்வமகள் சீரியல் உதாரணம். 

சன்டிவியின் மாபெரும் சாதனை: அன்றும் இன்றும் பிக்சர் கிளாரிட்டி.
சன்டிவியின் சமீபத்திய சாதனை: ஒரு கபடி போட்டி மூலம் பிரபலமான கனெக்ஷன் ஸோவை காலி செய்தது.

Thursday 12 April 2018

காக்கையின் கவலை

மாநகர் ரயில் நிலையத்தில்
கூடு கட்டி கொண்ட
காக்கையின் கவலைகள்!

ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும்
அறிவிப்புகளால் தன் குஞ்சு
டிங் டிங் டிங் என்று கரைய
ஆரம்பித்துவிடுமோ
என்றொரு கவலை!

சைவ அசைவ உணவுகள்
கொட்டிக்கிடக்கும் குப்பைத்தொட்டியில்
மக்காத நெகிழியை தன் குஞ்சு
எப்படி பிரித்துண்ணும்
 என்றொரு கவலை!

அலட்சியத்தால் மூடாமல்
விட்ட தண்ணீர் குழாயில்
 தன் குஞ்சு நீரறுந்தும் காட்சியை
யாராவது புகைப்படம்
எடுத்து வதனப் புத்தகத்தில்
பதிவிட்டால் திருஷ்டி பட்டுவிடுமே
 என்றொரு கவலை!

தன் குஞ்சு எச்சமிடும் இடத்தில்
சொச் பாரத்தில் குறை என்று
கூட்டை கலைத்து விடுவார்களோ
என்றொரு கவலை!

மாறிவிட்ட மனிதர்களை
பார்த்து தன் குஞ்சு கூடி
உண்ணும் இயல்பை தொலைத்து விடுமோ
என்றொரு கவலை!!!

Wednesday 4 April 2018

திருநெல்வேலி திரையரங்குகள்

திருநெல்வேலி மக்களோடு இரண்டற கலந்தவை திரையரங்குகள். திரையரங்கு தான் திருநெல்வேலி மக்களின் பொழுதுபோக்கு.  நெல்லையில் இருந்த இருக்கும் திரையரங்குகளை பற்றிய ஒரு பார்வை.

1. அசோக் தியேட்டர்
தற்போது அசோக் தியேட்டர் இல்லை. பாளை நகரில் அசோக்/அன்னபூர்ணா என்று ஒரு பேருந்து நிறுத்தமே உண்டு. ஓடி முடித்த படங்களையே திரையிட்டார்கள்.

2. அருணகிரி தியேட்டர்
நெல்லை இன்றும் இயங்கும் தியேட்டர்களில் இதுவும் ஒன்று. டவுணில் பஸ் ஸ்டாப்பில் இருந்து சற்றே தூரத்தில் இருக்கும் தியேட்டர். நெல்லையின் முதல் DTS தியேட்டர்.

3. கலைவாணி தியேட்டர்
முருகன் குறிச்சியில் இருந்த தியேட்டர். ஆபாச படத்துக்கு பேர் போன தியேட்டர்.

4. கணேஷ் தியேட்டர்
டவுணில் சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டர். இதன் பழைய பெயர் பாப்புலர் தியேட்டர். வயதானவர்களுக்கு பாப்புலர் தியேட்டர் என்று சொன்னால் தான் தெரியும்.

5. சிவசக்தி தியேட்டர்
ஸ்ரீபுரத்தில் வயல்வெளிகளுக்குள் இருந்த
தியேட்டர்.  ஒரு கட்டத்தில் ஆபாச படம் மட்டும் காட்டிய தியேட்டர். பின்பு மூடப்பட்டுவிட்டது.

6. செந்திவேல் தியேட்டர்
பாளை மார்க்கெட் பக்கத்தில் இருக்கும் தியேட்டர். ஏதாவது படத்தை பார்க்க தவறிவிட்டால் செந்தில்வேலில் பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை தந்த தியேட்டர். தற்போது புதுப்பட தியேட்டர்.

7. செல்வம் தியேட்டர்
வண்ணார்பேட்டைக்கும் முருகன்குறிச்சிக்கும் இடையில் தற்போதய ஆரெம்கேவிக்கு அருகில் இருந்த தியேட்டர்.  பல வெள்ளி விழா படங்கள் கண்ட தியேட்டர் இருந்த சுவடுகூட இல்லை இப்போது.

8. சென்ட்ரல் தியேட்டர்
பேருந்தில் செல்லும் போது வரிசையாய் இருக்கும் தியேட்டர்களில் என்னென்ன படம் என்று பார்ப்பது ஒரு சுகாஅனுபவம்.இன்று உருக்குலைந்து போய் இருக்கிறது நெல்லையின் முக்கிய தியேட்டர். இன்றும் கண்டக்டர்கள் கத்துகிறார்கள் சென்ட்ரல் யாராவது இறங்கனுமா என்று.

9. பாம்பே தியேட்டர்
நெல்லையின் பேமிலி தியேட்டர் . முதல் புல் ஏசி தியேட்டர். பாளை மேட்டுதிடலில் உள்ள இந்த தியேட்டருக்கு வாடிக்கையாளர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள்.

10. நியூராயல் தியேட்டர்
தற்போதைய போத்தீஸ் தான் நியூராயல் தியேட்டர். வடக்கு ரத வீதியில் வசதியான இடத்தில் இருந்த தியேட்டர். எதற்காக மூடப்பட்டது என்றே தெரியவில்லை.

11. பார்வதி தியேட்டர்
நெல்லை சந்திப்பும் நகரமும் இணையும் இடத்தில் இருக்கும் வளைவுக்கு பக்கத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹால் தான் பார்வதி தியேட்டர். ரத்னா தியேட்டருக்கு எதிரில் இருந்ததால் டிக்கெட் கிடைக்காமல் போனால் வேறு தியேட்டரில் படம் பார்த்து கொள்ளலாம்.

12. பூர்ணகலா தியேட்டர்
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஈரடுக்கு மேம்பால பக்கத்தில் இருக்கும் தியேட்டர். கடைசி பஸ்ஸை தவறவிட்டவர்களுக்கு வரப்பிரசாதம்.

13. பேரின்பவிலாஸ் தியேட்டர்
நெல்லையில் மியூசிக்குடன்  ஸ்கிரினை தூக்கிய முதல் தியேட்டர். PVT நெல்லையின் பாரம்பரியமிக்க தியேட்டர். பூர்ணகலா தியேட்டர் பின்புறம் உள்ளது.

14. ரத்னா தியேட்டர்
தாலுகா அலுவலகம் எதிரில் இருக்கும் முக்கிய தியேட்டர்.  முன்ணனி நாயகர்கள் படத்துக்கு எப்போதும் போட்டி போடுபவை ரத்னாவும் PVTயும்.

15.&16. ராம் முத்துராம் தியேட்டர்
நெல்லையில் புதிதாய் உதயமான தியேட்டர்கள் (பாம்பேக்கு முன்னால்) . ஒரே வளாகத்தில் இரண்டு தியேட்டர். கீழே ராம் மாடியில் முத்துராம். உடையார்பட்டியில் இருக்கும் முன்னணி தியேட்டர்கள். ராமின் முதல் படம் "மோனிஷா என் மோனலிசா ". முத்துராமின் முதல் படம் "பெரியண்ணா ".

17. லட்சுமி தியேட்டர்
டவுண் வாகையடி முக்கு பக்கத்தில் இருந்த தியேட்டர். எம்ஜிஆர் சிவாஜி படங்கள்போட்டு கொண்டு இருந்தார்கள். பின்பு ஆபாச படம். அப்புறம் மூடிவிட்டார்கள்.

நெல்லை மக்களின் திரைப்பட ரசனை அலாதியானது. திரைத்துறையில் நெல்லை மக்களின் பங்கு அதிகம். இவ்வளவு ரசனையுள்ள மக்கள் வாழும் ஊரில் ஒரு மல்டிபிளக்ஸ் கூட அடி எடுத்து வைக்கவில்லை.

Monday 2 April 2018

பயணங்கள் பற்றிய ஆசை

வெள்ளை கோடுகள்
இல்லாத சாலையில்
கூட்டமில்லாத தனியார்
பேருந்தில் தனியாய் பயணம்
செய்ய வேண்டும்!

கூட்ஸ் ரயிலில்
கடைசி பெட்டியில்
புதிதாய் ஒரு இடத்துக்கு
மனைவியுடன் போய் வர வேண்டும்!

குன்றின் மீதிருக்கும்
கோவிலுக்கு குடும்பத்துடன்
போய் வர வேண்டும்!

திறந்த ஜீப்பில்
மேகம் முட்டும்
மலைப்பிரதேசத்துக்கு
மனைவி மகளுடன் போய்
வர வேண்டும்!

கற்றது தமிழில் வரும்
மகாராஷ்டிரா பொட்டல்வெளிகளுக்கு
கல்லூரி நண்பர்களுடன்
போய் வர வேண்டும்!

அடர்ந்த வனத்தில்
சிற்றோடையாய் தவழும்
ஆற்றில் குளிக்க பள்ளி
நண்பர்களுடன் போய்
வர வேண்டும்!

பெரிய பேருந்தில்
ராஜஸ்தான் 'தோ கிமீ ' பகுதிக்கு அலுவலக
நண்பர்களுடன் போய் வர வேண்டும்!!!