Saturday 30 September 2023

இலங்கை அணித்தேர்வு - 2023

இலங்கை அணி சங்ககாரா, ஜெயவர்த்தனேவுக்கு பிறகு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. புதிய வீரர்கள் திறம்பட விளையாடினாலும் அனுபவம் இல்லாதது பிரச்சனை. நீண்ட நாட்களாக மேத்யூஸ், சண்டிமால் போன்றோரை கட்டி அலைந்தது மாபெரும் தவறு. தகுதிச் சுற்றில் வென்று மீண்டு வந்ததாலும், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சொதப்பியது.

1. துஷன் ஷானகா

ஷானகா பொறுப்பாக ஆடவில்லை, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று வதந்திகள் வந்த நிலையில் ஷானகாவே கேப்டனாக நீடிப்பது நல்ல விசயம். கேப்டன்சி விசயத்தில் சூப்பர் தான் ஷானகா. பந்துவீச்சிலும் ஒகே. பேட்டிங்கில் சொதப்புகிறார்.

ஒருவேளை தனது பொசிஷனை மாற்றி ஆடி முயற்சித்துப் பார்க்கலாம். பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்லோ பேஸ் இந்திய ஆடுகளங்களில் நிச்சயம் கை கொடுக்கும்.

2. பாதும் நிஷாங்கா

துவக்க ஆட்டக்காரர், இளம் வீரர் அவசரப்பட்டு அவுட் ஆவது தான் பிரச்சினை. 50 ரன் பார்ட்னர்ஷிப் என்று இலக்கு வைத்து ஆடினால் பலன் கிடைக்க வாய்ப்பு.

3. குஷால் பெரீரா

இடது கை துவக்க ஆட்டக்காரர். அதிரடி ஆட்டக்காரர். சமீபகாலமாக சொதப்பி வருகிறார். இறுதிக்கட்ட ஓவர்களில் இறங்கி அதிரடி காட்டினால் நிச்சயம் அணிக்கு பலம்.

4. குஷால் மெண்டிஸ்

இந்த முறை விக்கெட் கீப்பராகவும் மாறியுள்ளார். சமீபத்திய பார்ம் ஒகே. அரைசதங்களை, சதங்களாக மாற்றினால் அணிக்கு பலம்.

5. சரித் அசலங்கா

பொறுமையாக ஆட வேண்டும், அதே சமயம் ரன் ரேட்டை குறையவிடக்கூடாது என்ற சூழலில் ஆட வேண்டிய கட்டாயம். ஓரளவுக்கு சிறப்பாக ஆடுகிறார். அதே தன்னம்பிக்கையை தொடர வேண்டும். ஸ்பின் எடுத்தால் பகுதி நேர பந்துவீச்சும் தேவை.

6. தனஞ்ஜயா டி சில்வா

முழுநேர பேடஸ்மேன், பகுதிநேர பந்துவீச்சாளர் என்பதை மறந்து முழுநேர பந்து வீச்சாளர் பகுதி நேர பேட்ஸ்மேன் என மாறிவிட்டார். பீல்டிங், பவுலிங்கை வைத்து அணியில் இருக்கிறார். பேட்டிங் பொஷிசனை மாற்றியும் பலனில்லை என்பது தொடரும் சோகம்.

7. திமூத் கருணரத்னே

டெஸ்ட் வீரர் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் செட்டாகி விட்டார். அணியில் இருப்பாரா என்று தெரியவில்லை. ஓப்பனிங் இறங்கி நிசாங்காவை ஆடவிட்டு பொறுமையாக ஆடினால் போதும்.

8. சதீரா சமரவிக்ரமா

இளம் வீரர். பேக்அப் விக்கெட் கீப்பர். பார்ட்னர்ஷிப் கொடுத்து பொறுமையாக ஆட வேண்டும். அனுபவமில்லாதது பெரிய குறை.

9. துணித் வெல்லலாகே

இடதுகை சுழற்பந்து வீச்சாளர், ஆசியக் கோப்பையில் இந்திய அணியை மிரளவிட்டவர். இந்திய ஆடுகளங்கள் காத்திருக்கின்றன இவரது சுழலுக்கு. பேட்டிங்கும் பரவாயில்லை.

10. துஷன் ஹேமந்தா

லெக் பிரேக் பவுலர், ஆல்ரவுண்டர். ஆசியக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தனஞ்ஜயாவுக்கு பதிலாக முயற்சித்து பார்க்கலாம்.

11. மகேஷ் தீக்ஷானா

ஓப்பனிங் பந்துவீசக்கூடிய ஸ்பின்னர். தனது சுழல்ஜாலம் மூலம் பவர்ப்ளேவை திறம்பட கொண்டு செல்ல வேண்டும்.

12. கஸுன் ரஜித்தா

ரஜித்தா ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். தீக்ஷானாவோடு சேர்ந்து குறைவாக ரன்களை கொடுத்தால் விக்கெட் தானாக விழும்.

13. லாகிரு குமாரா

வேகப்பந்து வீச்சாளர். காயம் காரணமாக சமீரா ஆடவில்லை என்பதால் தேர்வாகி உள்ளார். பெரிய அளவில் எதுவும் இவர் செய்வதில்லை. 

14. தில்சன் மதுசங்கா

இடதுகை வேகப்பந்து வீச்சாளர். அணியில் இருந்தால் துவக்க வீரராக பந்து வீசவார். வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தால் மற்றொரு புறம் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு தீக்ஷானா இருக்கிறார்.

15. மதீஷா பதிரானா

இளம் வேகப்பந்து வீச்சாளர். இவரது ஆக்ஷனில் பந்தை கணிப்பது கடினம். வேகத்தை குறைத்து வீசவதிலும் தேறிவிட்டார். முதல் பவர்பிளேவுக்கு பிறகே பந்துவீச போவதால் நல்ல களம். சொதப்பாமல் இருந்தால் நலம்.


காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா இல்லை. இளம் அணியை ஷானகா ஒழுங்காக வழி நடத்தினால் சிறப்பாக இருக்கும். பிற அணிகள் இலங்கை அணியை குறைத்து மதிப்பிடுவதே இலங்கை அணிக்கு பலம் சேர்க்கும்.

ஷானகா இன்னொரு கபில்தேவ் ஆவாரா காலம் பதில் சொல்லும்.


நிலவில் கழிவுகள்

[சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்]

நிலவில் கிட்டத்தட்ட 225 டன்களுக்கு(500,000 பவுண்டுகள்) மேலாக கழிவுகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. எப்படி இந்த கழிவுகள் வந்தது, என்னென்ன கழிவுகள்?

நிலவில் இறங்கியவர்கள்: 

[ஹே நிலவே ஹே நிலவே, நான் உன்னைத் தொட 

உன்னைத் தொட உன்னைத் தொட விண்ணை அடைந்தேன்]

நீல் ஆம்ஸ்ட்ராங் போல நிலவில் காலடி பதித்தவர்கள் 

1. நீல் ஆம்ஸ்ட்ராங் - அப்போலோ11, 1969

2. பஷ் ஆல்ட்ரின் - அப்போலோ11, 1969

3. பீட்டே கான்ராட் - அப்போலோ12, 1969

4. ஏலன் பீன் - அப்போலோ12, 1969

5. ஏலன் ஷெப்பர்ட் - அப்போலோ14, 1971

6. எட்கர் மிட்சல் - அப்போலோ14, 1971

7. டேவிட் ஸ்காட் - அப்போலோ15, 1971

8. ஜேம்ஸ் இர்வின் -அப்போலோ15, 1971

9. ஜான் யங்- அப்போலோ16, 1972

10. சார்லஸ் டுயூக் - அப்போலோ16, 1972

11. ஜீன் செர்னான் - அப்போலோ17, 1972

12. ஹாரிசன் ஸ்மிட் - அப்போலோ17, 1972

1969 முதல் 1972 வரை இந்த 12 அமெரிக்கர்களும் நிலவில் காலடி வைத்துள்ளனர். நிலவில் இருந்து பாறைத்துண்டுகள், மண் ஆகியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்து வரும் போது விண்கலத்தில் எடையை குறைக்க அவர்கள் பயன்படுத்திய டயப்பர், மலம், சிறுநீர், எச்சில் என 96 பாக்கெட்டுகளை நிலவில் விட்டு விட்டு வந்துள்ளனர். இவற்றை மீண்டும் எடுத்து ஆராய்ச்சி பண்ணலாமா என்று யோசித்து வருகிறது நாசா.

{திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் தேனிலவுக்கே திருச்செந்தூர் கோவிலுக்கு தான் போவோம். நிலவுக்கு எங்க போக}

லேண்டர்ஸ் & ரோவர்ஸ்

[நிலவுக்கும் போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு]

லேண்டர் என்பது நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் விண்கலம், ரோவர் என்பது நிலவின் பரப்பில் பயணிக்க கூடிய கலம்.

கிட்டத்தட்ட 70 விண்கலங்கள் நிலவில் இருக்கிறது. இதில் நிலவில் மோதி உடைந்து போன லேண்டர்களும் அடக்கம்.

{கல்லூரி காலத்திலே ராக்கெட் விட்டு பழகினால் தான் இதெல்லாம் சாத்தியம்}

அஸ்தி

[வான்மதியே வான்மதியே தூது சொல்லு வான்மதியே...]

ஜெனி ஷூமேக்கர் என்ற அமெரிக்க புவியியலாளரின் அஸ்தி ஒரு சிறிய பாட்டிலில் நிலவின் பரப்பில் போடப்பட்டுள்ளது.

{தங்கப்பேழையில் வைத்திருப்பார்களோ}

புகைப்படம்

[நிலவிடம் வாடகை வாங்கி…விழி வீட்டினில் குடி வைக்கலாமா…]

அப்பல்லோ 16, விண்கலத்தின் மூலம் நிலவுக்கு சென்ற சார்லஸ் டியூக் தனது குடும்ப புகைப்படத்தை நிலவில் விட்டுவிட்டு வந்தார். சூரிய வெளிச்சத்தில் அந்த புகைப்படம் இந்நேரம் வெளரி போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

{இப்போ போனா, வடை சுடுற பாட்டி கூட செல்பி கண்பார்ம்}

கோல்ஃப் பந்து

[வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?.. 

விளையாட.. ஜோடி தேவை..]

அப்பல்லோ 14, விண்கலத்தின் மூலம் நிலவுக்கு சென்ற ஏலன் ஷெப்பர்ட், நிலவின் நிலப்பரப்பில் இரண்டு கோல்ப் பந்துகளை வைத்துவிட்டு வந்தார்.

{அடுத்த முறை சென்றால் விளையாடலாம் என்று நினைத்தாரோ என்னவோ}

இறகும் சுத்தியலும்

[நிலவை  உரசும் மேகம் அந்த நினைத்தே உருகாதா ...]

16ம் நூற்றாண்டில் கலிலியோ, பைசா கோபுரத்தில் இருந்து வெவ்வேறு எடை கொண்ட பொருள்களை சோதனைக்காக ஒரே நேரத்தில் கீழே போட்டார். அதிக எடை கொண்ட பொருள் விரைவாக புவிப்பரப்பை அடையும் என்பதை நிரூபிக்க.

அதே சோதனையை, டேவிட் ஸ்காட் இறகு மற்றும் சுத்தியல் கொண்டு நிலவில் செய்தார். இரண்டும் ஒரே நேரத்தில் நிலவின் நிலப்பரப்பை தொட்டது.

{காது குடைய கொண்டு போன கோழி இறகா இருக்குமோ}

அறிவிப்பு பலகைகள் & பைபிள்

[நிலா காயும் நேரம் சரணம்...]

அப்பல்லோ 11 மூலம் விண்வெளிக்கு சென்றவர்கள் வைத்த அறிவிப்பு பலகை "நாங்கள் முதல் முதலாக நிலவில் காலடி வைத்தவர்கள், மனித இனத்தின் சமாதானத்திற்காக வந்தோம்".

டேவிட் ஸ்காட் ஒரு பைபிளை நிலவில் வைத்து விட்டு வந்தார்.

{நம்மாளு போயிருந்தா இந்த சாதிக்கு பாத்தியப்பட்டதுன்னு எழுதி இருப்பார்கள்}

கைவினைப் பொருட்கள்

[நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க...]

வானியல் நிபுணர்கள் நினைவுகூறலுக்காக சில கைவினைப் பொருட்களையும் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

கொடிகள்

(வானில் காயுதே வெண்ணிலா...)

அமெரிக்க கொடிகளை நிறைய கொண்டு சென்றாலும், ஒரு பைப்பில் அடைத்து ஒரு கொடியை நிலவின் மீது வைத்துள்ளனர்.

{நிலவில் கொடி நட்டி சல்யூட் அடிச்சாங்களான்னு தெரியல}

பூட்ஸ்

[நிலா காய்கிறது...]

நிலவில் நடக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 12 பூட்ஸ்கள், கேமரா மற்றும் பிலிம் ரோல்களை விட்டு விட்டு வந்துள்ளனர்.

{மரியாதை நிமித்தமாக செருப்பை கழற்ட்டிருப்பாங்களோ}


நன்றி

தி வீக்

டைம்ஸ் ஆப் இந்தியா

இதர இணைய தளங்கள் 



Thursday 28 September 2023

ஆஸ்திரேலிய அணி தேர்வு - 2023

1. பேட் கம்மின்ஸ்

இந்த உலகக் கோப்பையில் ஒரு பவுலர் கேப்டன். வேகப்பந்து வீச்சாளர் அதே சமயம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்தின் வேகத்தை குறைத்து வீசவது, லைன், லென்த் மாற்றுவது என்று சிறப்பாக செயல்பட கூடியவர். (ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் அது தானே).

2. டேவிட் வார்னர்

அதிரடி பேட்ஸமேன், அத்லடிக் பீல்டர். தற்போது இவரின் சுமை அதிகரித்து உள்ளது. இவருக்கு பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் அதிக அனுபவம் இல்லாதவர்கள்.

3. கேமரான் க்ரீன்

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். 5 வது பந்து வீச்சாளராக பந்து வீச வேண்டும். 6வது பேட்ஸ்மேனான இறங்கி ரன் அடிக்க வேண்டும். தற்போது இரண்டையும் சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

4. மிட்செல் மார்ஷ்

கொஞ்ச காலமாக பந்து வீசுவதில்லை. துவக்க வீரராக மாறியுள்ளார். தவறேதும் செய்யாமல் வார்னருக்கு துணையாக களத்தில் நின்றால் போதும்.

5. ஸ்டீவ் ஸ்மித்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அவுட் ஆக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. ரன் குவிப்பதே தெரியாது. ஆனால் மளமளவென ஸ்கோரை ஏற்றிவிடுவார். சிறந்த பீல்டரும் கூட.தேவைப்பட்டால் லெக் ஸ்பின் வீசுவார்.

6. க்ளன் மேக்ஸ்வெல்

மிடில் ஆர்டர் அதிரடி இதை தான் ஆஸ்திரேலிய இவரிடம் எதிர் பார்க்கிறது. அணியில் இவர் தான் இரண்டாவது ஸ்பின்னர் என்பதால் பந்து வீச்சு சுமை இருக்கும்.

7. மார்கஸ் ஸ்டோனிஸ்

மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்.  க்ரீன் இவரை விட பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சற்று உயர்வாக உள்ளதால் அணியில் இடம் கிடைப்பது கடினம். 

8. டிராவிஸ் ஹெட்

காயத்தில் இருந்து மீண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் இறுதிக்கட்ட அணியில் இருக்கிறார். துவக்க ஆட்டக்காரர். பகுதி நேர ஆப் ஸ்பின்னர்.

9. அலெக் கேரி

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இடதுகை ஆட்டக்காரர். பேட்டிங்கில் பெரிதாக எதுவும் செய்யத் தேவை இருக்காது. நாலு வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் கீப்பிங்கில் வேலை இருக்கும்.

10. மிட்செல் ஸ்டார்க்

துவக்க பந்து வீச்சாளர். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம். யார்க்கர் இவரது சிறப்பு.

11. ஜோஸ் ஹேசல்வுட்

வலதுகை வேகப்பந்து வீச்சாளர். கம்மின்ஸ், ஸ்டார்க் போல அதி வேகம் இல்லை என்றாலும் வேகப்பந்து வீச்சில் இலக்கணத்திற்கு இணங்கி நடப்பவர்.

12. ஆடம் ஸாம்பா

அணியில் இருக்கும் ஒரு ஸ்பின்னர். இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் எடுக்கும் என்பதால் இவரது பந்துவீச்சு சிறப்பாக எடுக்கும். டே நைட் போட்டியில் டியூ தான் எதிரியாக இருக்கும்.

13. மார்னஸ் லபுஷேன்

சின்ன ஸ்மித், நிதானமான ஆட்டம். எளிதில் அவுட் ஆக மாட்டார் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் இந்திய ஆடுகளங்கள் இவருக்கு சவாலை நிரப்பி வைத்திருக்கிறது.

14. ஸீன் அப்பாட்

பந்தில் வேகம் மட்டும் இருந்தால் இந்தியாவில் சாதிக்த முடியாது. இவர் அணியில் இடம் பெறுவது கடினம்.

15. ஜோஸ் இங்லிஸ் 

பேக்அப் விக்கெட் கீப்பர். ஏதாவது பேட்ஸ்மேனுக்கு காயம் என்றால் பந்து வீச தெரிந்த இருவருக்குமே முன்னுரிமை வழங்கப்படும். இவர் கடைசி வரை பெஞ்சில் இருக்க வாய்ப்பு.


வார்னரின் பேட்டிங், ஸாம்பா பவுலிங் தான் திருப்பு சீட்டு.

Wednesday 27 September 2023

உலகக் கோப்பை டை மேட்ச்கள்

உலகக் கோப்பையில் இதுவரை 5 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. அவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

1. தென்னாப்பிரிக்கா / ஆஸ்திரேலியா - 1999

1999ம் ஆண்டு உலகக் கோப்பை இரண்டாவது அரை இறுதி போட்டி தான், உலகக் கோப்பையில் டையான முதல் போட்டி.

17 ஜூன் 1999ல் பிர்மிங்கம்ல் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 213 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. 

(காலிஸ் வீசிய 19வது ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டது, அம்பயர் - டேவிட் ஷெப்பர்ட்)

சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றானது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்றானது.

டேமியன் பிளமிங் பந்து வீச குளூஸ்னர் ஸ்ட்ரைக்கர், டோனால்ட் நான் ஸ்ட்ரைக்கர்.


முதல் பந்து - நான்கு ரன்கள்

2வது பந்து - நான்கு ரன்கள்

3வது பந்து - 1 ரன் அடித்தால் வெற்றி என்பதால் ஆஸ்திரேலியா எல்லா பீல்டர்களையும் 30 யார்டுக்குள் நிறுத்தியது.

குளுஸ்னர் மிட் ஆன் திசையில் அடிக்க டோனால்ட் பாதி தூரம் ஓடினார், குளுஸ்னர் ஓடவில்லை. டோனால்ட் பின் வாங்கி விட்டார். டைரக்ட் ஹிட் ஆகி இருந்தால் டோனால்ட் அவுட்டாகி இருப்பார்.

4வது பந்து - குளுஸ்னர் ஸ்டரைட்டாக அடித்து விட்டு ஓடி வந்து விட்டார். டோனால்ட் நகரவில்லை. டோனால்ட் பேட்டை விட்டுவிட்டு ஓட குளுஸ்னர் கிரவுண்டை விட்டு ஓடினார். டோனால்ட் ஸ்ட்ரைக்கர் என்டில் ரன் அவுட்.

குளுஸ்னரின் மடத்தனத்தால் ஆட்டம் டை ஆனது.

டை ப்ரேக்கர்

டை ப்ரேக்கர் என்று எதுவும் நடக்கவில்லை. ஆனால் சூப்பர் 6 போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வென்றிருந்ததால் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2. தென்னாப்பிரிக்கா / இலங்கை - 2003

03 மார்ச் 2003 டர்பனில் நடைபெற்ற போட்டி இரண்டாவது டை போட்டி.

இந்த போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி லீக் போட்டி, வென்றால் சூப்பர் சிக்ஸ் செல்லலாம் என்ற நிலை. 

டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 268 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி 45 ஓவரில் 229/6 என்ற நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. டக்வொர்த் லீவிஸ்படி 45 ஓவர்களில் இலக்கு 230. 

44.5 ல் டக் வொர்த் லீவிஸ் படி ஸ்கோர்ஸ் லெவல், களத்தில் நின்ற பேட்ஸ்மேனான பவுச்சருக்கு இது தெரியாததால் கடைசி பந்தில் அடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் 45 ஓவர் துவக்கத்திலே மழைக்கான அறிகுறி தெரிந்தது.

ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிக்களுக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்பட்டது.


தென்னாப்பிரிக்கா வெற்றி பெறாததால் சூப்பர் சிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை.

3. ஜிம்பாப்வே / அயர்லாந்து - 2007

15 மார்ச் 2007ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற லீக் போட்டியில் அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 221 ரன்களை அடித்தது.

(ஜிம்பாப்வே வீசிய 13வது ஓவரில் 5 பந்துகளே வீசப்பட்டது. பவுலர் - சிங்கும்புறா, அம்பயர் - ஜெர்லிங்)

சேஸ் செய்த ஜிம்பாப்வே அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.

(அயர்லாந்து வீசிய 42வது ஓவரில் 5 பந்துகளே வீசப்பட்டது. பவுலர் - மெக்கல்லன், அம்பயர் - இயன் கோல்டு)

ஆண்டுரு ஒயிட் பந்துவீசினார். ஸ்டூவர்ட் மாடஸ்கேன்னேரி ஸ்ட்ரைக்கர், ரெயின்ஸ்போர்டு நான் ஸ்ட்ரைக்கர்.


முதல் பந்து - 2 ரன்கள்

2ம் பந்து - 2 ரன்கள்

3ம் பந்து - 1 ரன்

4ம் பந்து - ரெயின்ஸ்போர்டு 1 ரன்

5ம் பந்து - 2 ரன்கள்

6ம் பந்து - பந்து பேட்டில் படவில்லை, பை ரன் ஓட நினைத்து ஸ்ட்ரைக்கர் என்டில் ரெயின்ஸ்போர்டு ரன் அவுட், ஆட்டம் டை.

இதற்கு அடுத்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றது அயர்லாந்து. இந்த போட்டி டை என்பதால் அயர்லாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

4. இந்தியா / இங்கிலாந்து - 2011

27 பிப்ரவரி 2011 பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணியுடனான லீக் போட்டி டையில் முடிந்தது.

டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 338 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தது. ஸ்ட்ரைக்கர் கீரீம் ஸ்வான், நான் ஸ்ட்ரைக்கர் அஜ்மல் ஷெஷாத்.

முனாப் படேல் பந்து வீசினார்.


முதல் பந்து - ஸ்வான் 2 ரன்கள்

2ம் பந்து - ஸ்வான் 1 ரன்

3ம் பந்து - ஷெஸாத் சிக்ஸ்

4ம் பந்து - 1 ரன் - பை

5ம் பந்து - ஸ்வான் 2 ரன்

6ம் பந்து - ஸ்வான் 1 ரன்

முனாப் குறைந்த தூரமே ஓடி வந்து கடைசி பந்தை வீசினார்.

5. இங்கிலாந்து / நியூசிலாந்து - 2019

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டி டையில் முடிந்தது.

14 ஜூலை 2019 லார்டஸ்ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது.

சேஸ் செய்த இங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. பென் ஸ்டோக்ஸ் ஸ்ட்ரைக்கர், ரஷீத் நான் ஸ்ட்ரைக்கர்.

பவுல்ட் பந்து வீசினார்.


முதல் பந்து - ஸ்டோக்ஸ்  - டாட் பால்

2ம் பந்து - ஸ்டோக்ஸ் - டாட் பால்

3ம் பந்து - ஸ்டோக்ஸ் - சிக்ஸ் மிட்விக்கெட் திசையில்

4ம் பந்து - ஸ்டோக்ஸ் - இரண்டாவது ரன் ஓட, கப்தில் டைரக்ட் ஹிட் முயற்சிக்க ஓவர் த்ரோ போர். மொத்தமாக 6 ரன்கள்.

5ம் பந்து - ஸ்டோக்ஸ் - இரண்டாவது ரன் ஓட முயற்சிக்க நான் ஸ்ட்ரைக்கர் என்டில் ரஷீத் ரன் அவுட். ஒரு ரன் கிடைத்தது.

6ம் பந்து - ஸ்டோக்ஸ் - இரண்டாவது ரன் ஓட முயற்சிக்க நான் ஸ்ட்ரைக்கர் என்டில் உட் ரன் அவுட். ஆட்டம் டை.

டை பிரேக்கர்

டை பிரேக்கராக சூப்பர் ஓவர் நடந்தது. இதில் இங்கிலாந்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன் அடித்தது.

நியூசிலாந்து 1 சிக்ஸ் அடித்து 15 ரன்களை எட்டியது. சூப்பர் ஓவரும் டை என்பதால், போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றது.


நன்றி

ESPNcricinfo.com


Saturday 23 September 2023

உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்

இதுவரை நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்.

1. 1975

கிளைவ் லாய்டு - ஜூன் 21, 1975ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிளைவ் லாய்டு ஆட்டநாயகன் விருது பெற்றார். 


ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனான லாய்டு 85 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார். வலதுகை மித வேகப் பந்து 12 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் ஓவருடன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

2. 1979

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் - ஜூன் 23, 1979ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இங்கிலாந்து அணியுடனான போட்டியில் போட்டியில் 157 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

3. 1983

மொகந்தீர் அமர்நாத் - ஜூன் 25, 1983ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மொகந்தீர் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



மேற்கத்திய தீவுகள் அணியுடனான இறுதி போட்டியில் அமர்நாத் 80 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 7 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் மிக குறைந்த ரன்கள் டிபெண்ட் செய்த அணி இந்திய அணி. இன்றுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

4. 1987

டேவிட் பூன் - நவம்பர் 8, 1987 ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பூன் 125 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் துவக்க ஆட்டக்காரர் டேவிட் பூன்.

5. 1992

வாசிம் அக்ரம் - மார்ச் 22, 1992ல் நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வாசிம் அக்ரம் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

6. 1996

அரவிந்த டி சில்வா - மார்ச் 17, 1996ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் டி சில்வா 9 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 கேட்ச்களை பிடித்தார்.



பேட்டிங்கில் 124 பந்துகளில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சேஸ் செய்து வெற்றி பெற்ற முதல் அணி இலங்கை.

7. 1999

ஷேன் வார்ன் - ஜூன் 20, 1999ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வார்ன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வார்ன் 9 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் ஓவருடன் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்யாமல் பந்து வீச்சுக்காக ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் வாரன்.

8. 2003

ரிக்கி பாண்டிங் - மார்ச் 23, 2003ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இந்திய அணியுடனான போட்டியில் பாண்டிங் 121 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 359 என்ற சாதனையை நிகழ்த்தியது ஆஸ்திரேலியா.

9. 2007

ஆடம் கில்கிறிஸ்ட் - ஏப்ரல் 28, 2007ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இலங்கை அணியுடனான போட்டியில் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 149 ரன்கள் குவித்தார். 2 கேட்ச்களையும் பிடித்தார்.



உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட். அதே போல் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரரும் (149) இவரே.

10. 2011

மகேந்திர சிங் தோனி - ஏப்ரல் 2, 2011ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய கேப்டன் தோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.



இலங்கை அணியுடனான இறுதி போட்டியில் 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 1 கேட்ச்ம் பிடித்தார்.

ஆடும் 11 தேர்வு, முன்னதாக களம் இறங்கியது ஆகிய காரணங்களால் கேப்டன்சி பாயிண்ட்கள் பெற்று ஆட்டநாயகன் விருது பெற்றவர் தோனி.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக பட்ச ரன்னை (274) சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்தது இந்தியா.

11. 2015

ஜேம்ஸ் பல்க்னர் - மார்ச் 29, 2015ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜேம்ஸ் பல்க்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் ஓவருடன் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

12. 2019

பென் ஸ்டோக்ஸ் - ஜூலை 14, 2019ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



நியூசிலாந்து அணியுடனான இறுதி போட்டியில் 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பென் ஸ்டோக்ஸ்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டை முடிந்தது இதுவே முதல்முறை. சூப்பர் ஓவரும் டையில் முடிய, அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

Friday 22 September 2023

2019 - 2023 கேப்டன்கள்

2023 உலகக் கோப்பைக்கு பத்து அணிகள் தயாராகி வருகிறது. எட்டு அணிகள் நேரடியாக தேர்வாகியது. இரு அணிகள் தகுதிச் சுற்று விளையாடி வந்துள்ளது. 2019 உலகக் கோப்பைக்கு பின் எத்தனை முறை கேப்டன்களை மாற்றியுள்ளார்கள் என்ற விவரம் இதோ.

ஆப்கானிஸ்தான்

சென்ற உலகக் கோப்பைக்கு தகுதிச் சுற்று ஆடி வந்த ஆப்கானிஸ்தான் இந்த முறை நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால் கேப்டன் குல்பதீன் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு 

ரஷீத்கான் - ஒரு தொடரில் மூன்று போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார்.

அஸ்கர் ஆப்கான் - முன்னாள் கேப்டன் அஸ்கர் மூன்று போட்டியில் கேப்டனாக இருந்தார்.

ஷாகிதி - ஷாகிதி கடந்த 23 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இந்த உலகக்கோப்பைக்கும் இவர் தான் கேப்டன்.

ஆஸ்திரேலியா

ஆரோன் பிஞ்ச் - 2019ல் கேப்டனாக இருந்த பிஞ்ச் அதற்கு பிறகு 27 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

அலெக் கேரி -துணை கேப்டனான கேரி ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

கேஸல்வுட் -கேஸ்ல்வுட் ஒரு போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

ஸ்மித் - 2015 உலகக் கோப்பை முக்கிய வீரர், ஸ்மித் கடந்த நான்கு ஆண்டுகளில் 3 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

மிட்செல் மார்ஷ் -தற்போது முடிந்துள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் 5 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார் மார்ஷ்.

கம்மின்ஸ் -இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ள கம்மின்ஸ் தான் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன். இந்த உலகக் கோப்பையில் ஒரே பவுலர் கேப்டனும் இவர் தான்.

பங்களாதேஷ்

தமீம் இக்பால் - பங்களாதேஷ் அணியின் ஒருநாள் கேப்டனாக தமீம் 37 போட்டியில் ஆடிய நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமாதானப்படுத்தி மீண்டும் அணிக்கு அழைத்துள்ளனர்.

மோர்டாசா - 2019 உலகக் கோப்பை கேப்டனான மோர்டாசா 3 போட்டியில் கேப்டனாக இருந்தார்.

லிட்டன் தாஸ் - பகுதி நேர கேப்டனான லிட்டன் தாஸ் 5 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். தற்போதைய நியூசி தொடரிலும் லிட்டனே கேப்டன்.

ஷகிப் - இந்த உலகக் கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷகீப் கடந்த நாலு வருடத்தில் 5 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

இங்கிலாந்து 

மோர்கன் -2019 உலகக் கோப்பை வெற்றி கேப்டன் அதற்கு பிறகு 15 போட்டியில் கேப்டனாக இருந்தார்.

ஸ்டோக்ஸ் - ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

மொயின் அலி -  மொயின் அலி ஒரு போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார் 

பட்லர் -  தற்போதைய கேப்டன் பட்லர் 15 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார் . இந்த உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பர் கேப்டன்களில்  இவரும் ஒருவர் . (இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை)

இந்தியா 

இந்திய அணி உலகக் கோப்பைக்கு பின் சோதனை எலியாக மாறிவிட்டது. காயம், ஓய்வு என கேப்டனை மாற்றிக்கொண்டே இருந்தது. (இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய ஒரு ரன் எடுத்து ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று மட்டும் தான் சொல்லவில்லை)

கோலி - உலகக் கோப்பைக்கு பின் கோலி 18 போட்டிகளில் கேப்டனாக ஆடினார். கோலியை நீக்கிவிட்டு பிசிசிஐ தலைவர் கங்குலி சொன்னது மூன்று வகை கிரிக்கெட்க்கும் ஒரே கேப்டன் வேண்டும் என்பதால் ரோகித் நியமிக்கப்படுகிறார் என்று. ஆனால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் பல பேரை கேப்டாக்கிவிட்டனர்.

ராகுல் - கோச் ஊர்காரர் என்ற ஆசியோடு ஏழு போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் ராகுல். காயம் காரணமாக ஓய்வில் கணிசமாக இருந்துள்ளார்.

பாண்ட்யா - ராகுல் ஓய்வில் இருக்க பாண்ட்யாவுக்கு அதிர்ஷ்டம், மூன்று போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் ‌

தவான் - இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் என்றால் தவானை கேப்டாக்கியது இந்திய அணி. தவான் 12 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

ரோகித் - காயம், ஓய்வு என கழித்து, ரெகுலர் கேப்டனான பிறகு 23 போட்டிகளில் விளையாடி உள்ளார் ரோகித்.

நெதர்லாந்து

பீட்டர் சீலர் - சென்ற உலகக் கோப்பையில் நெதர்லாந்து பங்கு பெறவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் பீட்டர் சீலர் 16 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் 

ஸ்காட் எட்வர்ட்ஸ் - தற்போதைய கேப்டன் எட்வர்ட்ஸ் 18 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். தகுதி சுற்றில் வென்று உலகக் கோப்பையில் நுழைந்துள்ளது நெதர்லாந்து அணி. விக்கெட் கீப்பர் கேப்டன்.

நியூசிலாந்து

லாத்தம்- கடந்த உலகக் கோப்பையில் வீழந்த பின் காயம் காரணமாக பல போட்டிகளில் வில்லியன்சன் விளையாடவில்லை. பகுதி நேர கேப்டனான லாத்தம் முழு நேர கேப்டன் ஆனார். 27 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

பெர்குசன் - தற்போது நடந்து வரும் பங்களாதேஷ் எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார் பெர்குசன்.

சாண்ட்னர் - லாத்தம், வில்லியம்சன் இல்லாத ஒரு போட்டியில் கேப்டனாக இருந்தார் சாண்ட்னர்.

வில்லியம்சன் - சென்ற உலகக் கோப்பை, இந்த உலகக் கோப்பை என ரெண்டிலும் கேப்டனாக இருக்கும் ஒரே நபர் வில்லியம்சன். காயம் காரணமாக கடந்த நாலு ஆண்டுகளில் 12 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

பாகிஸ்தான்

சர்ப்ராஸ் அகமது - 2019 உலகக் கோப்பைக்கு பின் 2 போட்டியில்(ஒரு தொடருக்கு மட்டும்) சர்ப்ராஸ் கேப்டனாக இருந்தார். பிறகு நீக்கிவிட்டனர்.

பாபர் அசாம் - கேப்டனான பின் எல்லா போட்டிகளிலும் ஆடிக்கொண்டு இருக்கும் ஒரே கேப்டன் பாபர். இதுவரை 34 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

இலங்கை

திரிமன்னே -2 2019 உலகக் கோப்பைக்கு பின் ஒணு ஒரு தொடரில் (2 போட்டிகள்) கேப்டனாக இருந்துள்ளார் திரிமன்னே.

குசால் பெரீரா - இலங்கை அணியின் கேப்டன் மாற்றும் வியூகம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் 6 போட்டியில் கேப்டனாக இருந்தார் குசால் பெரீரா.

கருணரத்னே - 2019 உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்த கருணரத்னே அதற்கு பிறகும் 9 போட்டியில் கேப்டனாக இருந்தார்.

ஷானகா -தற்போதைய கேப்டன் (இவரையும் நீக்க போவதாக செய்திகள் வருகிறது) இலங்கையை திறம்பட கொண்டு செல்லும் ஷானகா 37 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். மோசமான நிலையில் இருந்த அணியை ஓரளவு நிமிர்த்தியவர் ஷானகா என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா 

டீ காக் - 2019 உலகக் கோப்பைக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி கேப்டனை தேடி அலைந்தது. டீ காக் 6 போட்டியில் கேப்டனாக இருந்தார்.

கேசவ் மகாராஜ் -கேசவ் மகாராஜா பவுமாவா என்ற குழப்பத்தில் இருந்தது தென்னாப்பிரிக்கா அணி. மகாராஜ் 7 போட்டியில் கேப்டனாக இருந்தார்.

மில்லர் - மில்லர் ஒரு போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.

மார்க்ரம் - 2 கேசவ் மகாராஜ் அல்லது பவுமா இல்லாத சூழலில் இரண்டு போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் மாரக்ரம்

பவுமா - பவுமா நிரந்தர கேப்டனான பின் காயத்தில் இருந்து மீண்டு 24 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார்.


Tuesday 19 September 2023

இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்

2023 உலகக் கோப்பைக்கு கிட்டத்தட்ட எல்லா அணிகளும் குறைந்தபட்சம் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி

1. பஸல்ஹக் பருக்கி - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க பந்து வீச்சாளர். ஆசிய கோப்பையில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஆக்கியவர். முந்தைய போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.

2. மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர், துல்லியமான யார்க்கர் இவரது ஸ்பெஷல். பந்துவீச்சுக்கு சாதகமில்லா ஆடுகளம் என்றால் இவர் பாடு திண்டாட்டம்.

3. முஸ்டாபிஷூர் ரஹ்மான் - பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியில் ஒரு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். பந்தின் வேகத்தை குறைத்து நூதனமாக பந்து வீசுவதில் சிறந்தவர்.

4. சாம் கர்ரன் - இங்கிலாந்து

ஐபிஎல் போட்டிகளில் ஆடி பிரபலமானவர். அதிக வேகம் கிடையாது. ஆனால் சிறப்பான ஸ்விங் பவுலர்.

5. டேவிட் வில்லி - இங்கிலாந்து

இங்கிலாந்து அணி சுழற்சி முறையில் வேகப்பந்து வீச்சாளர்களை மாற்றினால் அணியில் இடம் கிடைக்கும். இவரது பந்துவீச்சும் அதிக வேகம் கிடையாது.

6. ரீஸ் டாப்லீ - இங்கிலாந்து 

இங்கிலாந்து அணியின் இன்னொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் நல்ல உயரம் என்பதால் சிறப்பாக பவுண்ஸ் வீச கூடியவர். அணியின் தொடர்ச்சியாக இடம் கிடைப்பது கடினமே.

7. ட்ரன்ட் பவுல்ட் - நியூசிலாந்து

நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பவுலர். புது பந்தில் பல மாயாஜாலங்கள் காட்டக்கூடிய வீரர்.

8. ஷாகின் அப்ரிடி - பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் துவக்க பந்து வீச்சாளர். ஸ்விங் + வேகம் இவரது சிறப்பு. இவர் நன்றாக பந்து வீசினால் மட்டுமே மற்றொரு முனையில் பந்து வீசுபவர் சிறப்பாக பந்து வீச முடியும். இவர் சொதப்பினால் பாகிஸ்தான் அணியின் மொத்த வேகப்பந்து வீச்சும் வீழ்ந்து விடும்.

9. மேக்ரோ யென்சன் - தென்னாப்பிரிக்கா

நல்ல உயரமான மித வேகப் பந்து வீச்சாளர். உயரம் இருப்பதால் நன்றால் பவுண்ஸ் வீச முடியும்.

10. தில்ஷன் மதுஷங்கா - இலங்கை 

இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்தால் அணியில் சேர்க்கப்படுவார். இவரும் தீக்ஷனாவும் சேர்ந்து பந்து வீசினால் எதிரணி ரன் குவிப்பது கடினம்‌.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது பின்னடைவாக இருக்குமா என்பது உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளிலே தெரிந்துவிடும்.

Monday 18 September 2023

2023 - ஆப்கானிஸ்தான் அணித்தேர்வு

ஆப்கானிஸ்தான் அணிக்கு இது மூன்றாவது உலகக் கோப்பை. ஆனால் இதுவரை ஸ்காட்லாந்து அணியுடனான ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளது, உலகக்கோப்பையில். இந்த உலகக் கோப்பை அணி தேர்வு பற்றி

1. ஹஸ்மத்துல்லா ஷாகிதி - கேப்டன்

ஷாகிதி இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். வலது கை ஆஃப் ஸ்பின்னர், பகுதி நேர பந்து வீச்சாளர். மெதுவாக ஆடுவது தான் இவரது பலவீனம்.

2. ரஹ்மானுல்லா குர்பாஸ் - விக்கெட் கீப்பர் & துவக்க ஆட்டக்காரர்

குர்பாஸ் வலதுகை பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர். அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். நிலைத்து நின்று ஆடினால் ரன் குவிப்பு நிச்சயம். சீக்கிரமாக அவுட் ஆவது இவரது பலவீனம்.

3. இப்ராஹிம் ஷர்தான்

இப்ராஹிம் ஷர்தான் மற்றொரு துவக்க ஆட்டக்காரர். வலது கை பேட்ஸ்மேன். ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக பட்ச ரன் அடித்த வீரர் 162. இவரும் குர்பாஸ்ம் பார்ட்னர்ஷிப் போட்டால் பெரிய ரன் குவிப்பு நிச்சயம். 

4. ரஹ்மத் ஷா

ரஹ்மத் ஷா, ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர். அனுபவமிக்க வீரர். குர்பாஸ், ஷர்தான் போல் அதிரடியாக ஆடமாட்டார். பகுதி நேர லெக் ஸ்பின்னர்.

5. நஜிபுல்லா ஷர்தான் 

இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அனுபவமிக்க ஆட்டக்காரர். இவரது பேட்டிங் தான் மிடில் ஆர்டர் பலம்.

6. முகமது நபி

வலது கை பேட்ஸ்மேன், ஆப் ஸ்பின்னர். ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடிய அனுபவமிக்க வீரர். ஆப்கானிஸ்தான் அணிக்கு பேட்டிங் பந்துவீச்சு என முதுகெலும்பே இவர் தான்.

7. ரியாஸ் ஹசன்

இளம் வலது கை பேட்ஸ்மேன். 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. 

8. இக்ரம் அலிஹில்



பேக்அப் விக்கெட் கீப்பர். இடது கை பேட்ஸ்மேன்.சென்ற உலகக் கோப்பையில் கீப்பராக ஆடினார். 8வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இந்த உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது அரிது.

9. ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலம். லெக் ஸ்பின்னரான இவர் உலகம் முழுதும் ப்ரிமியர் லீக் போட்டிகளில் ஆடுகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர். பேட்டிங்கில் அதிரடி காட்டுவார். ஆனால் நம்ப முடியாது. பந்துவீச்சில் இறுதிக்கட்ட ஓவர்களை கூட வீசுவார்.

10. அஸ்மத்துல்லா ஓமர்சாய்

ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வலது கை பேட்ஸ்மேன், வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை பெரிதாக சாதித்தது இல்லை. ஆனால் இவர் தான் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருக்க வாய்ப்பு.

11. முஜீப் உர் ரஹ்மான்

முஜீப் ஆப் ஸ்பின்னர். எதிரணி எதுவாக இருந்தாலும் துவக்க பந்துவீச்சு வீசக் கூடிய திறன் படைத்தவர். இவரது பந்துவீச்சு அணிக்கு பலம்.

12. நவீன் உல் ஹக்

வலதுகை வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் லக்னோ அணியில் விளையாடி, கோலியுடன் சர்ச்சையில் சிக்கியவர். பெரிய அளவில் அனுபவம் இல்லாததால் ஆடும் லெவனில் இடம் பெறுவது கடினம்.

13. பஷல்ஹக் பரூக்கி

இடது கை வேகப்பந்து வீச்சாளர். ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் ஓவர் வீசக் கூடிய பவுலர். சமீப காலமாக சொதப்பி வருகிறார். இவரை அடித்தால் ஆப்கானிஸ்தானின் அடிப்படையை தகர்க்கலாம் என்பது எதிரணிகளின் வியூகமாக இருக்கும்.

14. நூர் அகமது

இடது கை மணிக்கட்டு (ரிஸ்ட்டு) சுழற்பந்து வீச்சாளர். ஏற்கனவே மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அணியில் இடம் பெறுவது கடினம்.

15. அப்துல் ரஹ்மான் 

வலதுகை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அணியில் இடம் பெறுவது கடினம் தான்.


Saturday 16 September 2023

ஆஸ்திரேலிய அணியின் ராஜ்ஜியம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிறகு ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய அணி ஆஸ்திரேலியா. இதை எப்படி கட்டமைத்தார்கள்? எப்படி பராமரிக்கிறார்கள்?


ஆஸ்திரேலிய அணியை எடுத்து கொண்டால் பேட்ஸ்மேன்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவத்தை பந்து வீச்சாளர்களுக்கு வழங்குவார்கள். மூன்று தரமான வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஒரு மித வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இது போக ஒன்று அல்லது இரண்டு பகுதி நேர பந்து வீச்சாளர்கள்.

1999 - மெக்ராத், டேமியன் பிளமிங், பால் ரீபல், வார்னே, டாம் மூடி (ஸ்டீவ், மார்க், லீமன்)

2003 - மெக்ராத், ப்ரட் லீ, ஆண்டி பிக்கல், பிரட் காக், இயன் ஹார்வி (சைமன்ட்ஸ், லீமன்)

2007 - பிரக்கன், மெக்ராத், டைட், காக், வாட்சன் (சைமன்ட்ஸ், கிளார்க்)

2011 - பிரட் லீ, டைட், ஜான்சன், கெரேஸா, வாட்சன் (டேவிட் ஹசி, கிளார்க்)

2015 - ஸ்டார்க், ஹேசல்வுட், ஜான்சன், மேக்ஸ்வெல், பல்க்னர் (வாட்சன், ஸ்மித்).

வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாக பந்துவீச, எதிரணி நிலை குலைந்த நேரத்தில் பூவோடு சேர்ந்த நாராக மற்ற இரு பந்து வீச்சாளர்களை பயன்படுத்திவிடுவது ஆஸ்திரேலிய டெக்னிக்.

அணுகுமுறை:

அணுகுமுறை என்று பார்த்தால் ஆஸ்திரேலியா ஒரு போதும் ஜெண்டில்மேன் கிரிக்கெட் ஆடுவது இல்லை. முதலில் சிரித்து கொண்டே எதிரணி பேட்ஸ்மேன திட்டி உசுப்பேத்துவார்கள். அது வேலைக்கு ஆகவில்லை என்றால் முறைப்பார்கள். அதற்கு பிறகு உடல் உரசல் என்கிற ரீதியில் இறங்கி விடுவார்கள்.

ஆஸ்திரேலியர்கள் அப்பீல் செய்தால் நிச்சயம் அவுட்டாக இருக்கும் என்று அம்பயர்கள் மத்தியில் விதை விதைத்தவர்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய் ஆஸ்திரேலிய கேப்டனிடம் கேட்டு அவுட் கொடுக்கும் அளவுக்கு அம்பயரை (ஸ்டீவ் பக்னர்) ட்யூன் பண்ணி வைத்தவர்கள்.

ஒரு தொடர் ஆரம்பிக்க போகும் முன் நாங்கள் எதிரணியை வீழ்த்துவோம் என்று சூளுரை எல்லாம் கொடுக்க மாட்டார்கள். "இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்". "சச்சின் டெண்டுல்கர் விக்கெட் மிகவும் சிரமமானது" என்று கூறி எதிரணிக்கு அதீத நம்பிக்கை தந்து எளிதாக வீழ்த்திவிடுவார்கள்.

செயல்படுத்தும் விதம் :

1979ல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் டிசம்பர்/ ஜனவரியில் ஆடும். நவம்பர் டிசம்பரில் டெஸ்ட் ஆட வந்த அணி, பிப்ரவரியில் டெஸ்ட் ஆட போகும் அணி இவர்களை வைத்து முத்தரப்பு தொடர்.

இதில் விசேசம் என்னவென்றால் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு நாலு முறை மோதும். கிட்டத்தட்ட ஒவ்வொரு அணிக்கும் எட்டு போட்டிகள் முடிந்த பிறகு பைனல்.

பைனல் மூன்று போட்டிகள் கொண்டது. முதல் இரு போட்டிகளில் ஒரே அணி வென்றால் மூன்றாவது பைனல் கிடையாது. 

இந்த மூன்று பைனல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சம். ஆண்டுதோறும் எதிரணிகள் மாறும். கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவே வெல்லும். இந்த முத்தரப்பு போட்டிகளில் வென்ற பிற அணிகள் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மட்டுமே.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் :

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் முழுக்க புல் போர்த்திய பசுமையான ஆடுகளங்கள். பேட்டிங் சாதனமான ஆடுகளங்கள், பவுலிங் சாதனமான ஆடுகளங்கள் என்று எதுவும் கிடையாது. வேகப் பந்து வீச்சுக்கு கை கொடுக்கும் ஆடுகளங்கள் அவ்வளவு தான்.

எல்லா ஆடுகளங்களின் பராமரிப்பும் சிறப்பாக இருக்கும். மற்ற ஆடுகளங்களில் இருந்து நேர வித்தியாசம் உள்ள பெர்த் ஆடுகளம் உலகின் அதி சிறந்த வேகப்பந்து வீச்சு மைதானம்.

அணித்தேர்வு:

அணித்தேர்வில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்படும். 140+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினால் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர் என்று அங்கீகரிப்பார்கள்.  உடற்தகுதி விசயத்திலும் ரொம்ப கடுமை காட்டுவார்கள். என்றோ ஒருநாள் 100 அடித்து ஒரு ஆண்டுக்கு அணியில் தேய்க்க முடியாது.

இது தான் ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தின் சிறப்பு.

Wednesday 13 September 2023

2023 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்கள்

2023 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்கள் பற்றிய பார்வை.

1. ஆப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ்


இதுவரை எல்லா போட்டிகளிலும் விக்கெட் கீப்பராகவே ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளதால் இந்திய ஆடுகளம் பற்றிய புரிதல் இருக்கும். இதுவரை இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் ஒருநாள் போட்டி ஆடியதில்லை.

துவக்க ஆட்டகாரர் என்பதால் ஆப்கான் அணியின் 50% பேட்டிங் பலம் இவரிடம் தான் உள்ளது.

இந்த உலகக்கோப்பையில் 1000 ரன்களை கடக்க வாய்ப்பு உள்ளது.

அவசர ஆட்டம் தான் இவரது பலவீனம். மூன்று ஸ்பின்னர்கள் இருந்தும் இதுவரை 2 ஸ்டம்பிங் மட்டுமே செய்துள்ளார்.

இவருக்கு முதல் உலகக் கோப்பை தொடர் இது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 26

மொத்த ரன்கள்: 958

கேட்ச் : 19

ஸ்டம்பிங் : 2

அதிகபட்ச ரன்: 151

பேக் அப் : இக்ரம் அலி கில்

2. ஆஸ்திரேலியா - அலெக் கேரி


2019 உலகக் கோப்பையில் ஆடியுள்ளார். பலமான பேட்டிங் உள்ள அணி என்பதால் பேட்டிங் செய்ய வாய்ப்பு குறைவாக கிடைக்கும்.

இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக 75 போட்டி ஆட வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 65

மொத்த ரன்கள்: 1638

கேட்ச் : 77

ஸ்டம்பிங் : 8

அதிகபட்ச ரன்: 106

பேக் அப் : ஜோஸ் இங்லிஸ்

3. இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்


2015, 2019 உலகக் கோப்பைகளில் ஆடியுள்ளார். இந்த முறை கேப்டனாகவும் களம் இறங்குகிறார்.

முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் விக்கெட் கீப்பராக ஆடியுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் 5000 ரன்களை எட்ட வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 168

மொத்த ரன்கள்: 4787

கேட்ச் : 210

ஸ்டம்பிங் : 35

அதிகபட்ச ரன்: 162*

பேக் அப் : ஜானி போர்ஸ்டோ

4. இந்தியா - லோகேஷ் ராகுல்


2019 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார். இந்த முறை விக்கெட் கீப்பராக ஆட உள்ளார்.

சில போட்டிகளில் கீப்பர், சில போட்டிகளில் பீல்டர் என ஆடி வருகிறார்.

இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக 1000 ரன்கள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 18

மொத்த ரன்கள்:779

கேட்ச் : 21

ஸ்டம்பிங் : 2+1#

#கடைசியாக ஆடிய போட்டியில் கிஷானை கீப்பராக எடுத்துள்ளது கிரிக் இன்ஃபோ. அதற்கு முந்தைய போட்டியில் 6 வது ஓவரில் இருந்து தான் கீப்பிங் செய்தார்

பேக் அப் : இஷான் கிஷான் 

அதிகபட்ச ரன்: 112

5. இலங்கை - குஷால் மெண்டிஸ்


2019 உலகக் கோப்பையில் ஆடியுள்ளார். ஆனால் இந்த முறை விக்கெட் கீப்பராக ஆடவுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் இவர் அதிகப்பட்ச ரன் (தற்போது 92) அடிக்க வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 32

மொத்த ரன்கள்: 921

கேட்ச் : 35

ஸ்டம்பிங் : 3

அதிகபட்ச ரன்: 92

பேக் அப் : சதீரா சமரவிக்ரமா & குஷால் பெரீரா#

#அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை 

6. தென்னாப்பிரிக்கா - குவிண்டன் டீ காக்


2015 & 2019 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர் அதிரடி ஆட்டக்காரர், இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் இவர் 200வது கேட்ச்சை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த உலகக்கோப்பையோடு ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 142

மொத்த ரன்கள்: 6104

கேட்ச் : 185

ஸ்டம்பிங் : 16

அதிகபட்ச ரன்: 178

பேக் அப்: ஹென்ரிச் கிளாஸன்

7. நியூசிலாந்து - டாம் லாத்தம்


2019 உலகக் கோப்பையில் ஆடியுள்ளார். ஸ்பின் நன்றாக ஆடக்கூடிய நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 79

மொத்த ரன்கள்: 2045

கேட்ச் : 83

ஸ்டம்பிங் : 15

அதிகபட்ச ரன்: 145*

பேக் அப் : கான்வே & பிலிப்ஸ்

8. நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளுடன் நெதர்லாந்து ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டனாக எட்வர்ட்ஸ் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த உலகக் கோப்பை இவருக்கு முதல் உலகக் கோப்பை தொடர்.

இந்த உலகக் கோப்பையில் இவர் தனது முதல் சதத்தை அடிக்க வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 38

மொத்த ரன்கள்: 1212

கேட்ச் : 36

ஸ்டம்பிங் : 6

அதிகபட்ச ரன்: 86

பேக் அப் : யாரும் இல்லை

9. பங்களாதேஷ் - முஷ்பிகூர் ரஹீம்

இந்த உலகக் கோப்பையில் ஆடும் சீனியர் விக்கெட் கீப்பர். 2007, 2011, 2015, 2019 உலகக் கோப்பையில் ஆடியுள்ளார். இது அவருக்கு 5 வது உலகக் கோப்பை தொடர். 

இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக 7000 ரன்களை கடக்க வாய்ப்பு உள்ளது.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 241

மொத்த ரன்கள்: 6847

கேட்ச் : 220

ஸ்டம்பிங் : 55

அதிகபட்ச ரன்: 144

பேக் அப் : லிட்டன் தாஸ்#

#அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

10. பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடப் போகிறார். இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் இவர் தனது அதிக பட்ச ரன்னை அடிக்க வாய்ப்பு உள்ளது.

எதற்கெடுத்தாலும் அப்பீல் செய்வது இவரது பலவீனம்.

விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகள்: 44

மொத்த ரன்கள்: 1200

கேட்ச் : 52

ஸ்டம்பிங் : 2

அதிகபட்ச ரன்: 115

பேக் அப் : முகமது ஹாரிஸ்#

#அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Friday 8 September 2023

2003 -2011- 2023

2003 / 2011 / 2023 மூன்று உலகக் கோப்பை அணி வீரர்கள் பற்றி (கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் இருப்பவர்கள்) ஒரு ரசிகனின் பார்வை

கங்குலி / சேவாக் / ரோகித்

2003 கங்குலி - டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், அணியின் தேவையை பொறுத்து அதிரடியாகவோ அல்லது நின்று ஆடவோ செய்வார். துவக்க வீரராக களம் இறங்குவதா அல்லது ஒன்டவுண் இறங்குவதா என்ற குழப்பத்தில் இருந்தார். முக்கிய போட்டிகளில் ரன் குவித்தார். தேவைபட்டால் பந்தும் வீசுவார்.

2011 சேவாக் - 2003 கங்குலி போல இவருக்கு அழுத்தம் எதுவும் கிடையாது. முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவார். இவர் அவுட் ஆனாலும் பின்னால் வருபவர்கள் சமாளிப்பார்கள். இவர் ஆடினால் ரன்கள் எளிதாக வரும். இவர் கூட ஆடுபவர் அனுபவமிக்க சீனியர் வீரர் சச்சின். தேவைபட்டால் பந்து வீசுவார்.

2023 - ரோகித்: 2003ன் கங்குலி, 2011 ன் சேவாக் வேலையை செய்ய வேண்டிய நெருக்கடி ரோகித்துக்கு. முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட கூடிய வீரர். ஆனால் இவர் கூட ஆடப் போகும் வீரர் அனுபவமில்லாத கில். அவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்க வேண்டும். ரோகித் கேப்டன் ஆன பின் பந்து வீச தயங்குகிறார். இது மிகப் பெரிய பின்னடைவு.

சச்சின் / சச்சின் / கோலி

2003 சச்சின் - புதுப்பிக்கப்பட்ட இளம் அணியில் அதிக அனுபவம் மிக்க வீரர். இவர் தான் வழி நடத்த வேண்டும் இளம் வீரர்களை. நல்ல பார்ம், கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் முத்திரை பதித்தார் சச்சின்.

2011 சச்சின் - கூடுதல் அனுபவத்தோடு சச்சின். இம்முறை சேவாக்கை அடிக்கவிட்டு மெதுவாக ஆடினால் போதும் என்ற நிலை. சச்சின் - சேவாக் இருவரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதே பந்து வீச்சாளர்களை கலங்கடிக்கும்.

2023 கோலி - அதிக உலகக் கோப்பை போட்டிகள் ஆடிய சீனியர் வீரர். சச்சினின் ரோல் இவரது தோள்களில் உள்ளது என்பதை உணர்ந்து ஆடினால் போதும். சச்சினின் ரிவென்ஞ் அமைதியானது. கோலியின் ரிவென்ஞ் ஆக்ரோசமானது.

சேவாக் / யுவராஜ் / கில்

2003 சேவாக் - இளம் வீரர், டாப் ஆர்டரில் இறங்கி எந்த கவலையும் இல்லாமல் ரன் குவிப்பில் ஈடுபட்டால் போதும். குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சில ஓவர்களே களத்தில் நின்றார். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்.

2011 யுவராஜ் - அனுபவமிக்க ஆல்ரவுண்டர். மிடில் ஆர்டரில் தேவையை பொறுத்து அடித்து ஆடவோ அல்லது நின்று ஆடவோ வேண்டும். இவரது பந்துவீச்சு யாரும் எதிர்பாராத அளவுக்கு கை கொடுத்து கோப்பையை வென்று தந்தது.

2023 கில் - துவக்க வீரராக களம் இறங்க போகிறார். அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோகித் மற்றும் கோலியுடன் பேட் செய்ய இருப்பதால் அதிக அழுத்தம் இருக்காது. அதே சமயம் அவர்கள் அவுட் ஆகிவிட்டால் நிதானமாக ஆட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச முடியாதது பெரிய மைனஸ்.

கைப் / கம்பீர் / ஸ்ரேயாஸ்

2003 - கைப் - பேட்டிங்கில் அதிரடி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நின்று நிதானமாக ஆடினால் போதும். பீல்டிங்கில் கலக்க வேண்டும். குறிப்பாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கைப்பின் பங்களிப்பு சிறப்பானது.

2011 - கம்பீர் - துவக்க வீரரை ஒன்டவுண் வீரராக களம் இறங்கினார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ப்யூர் பேட்ஸ்மேன் ரோல்.

2023 - ஸ்ரேயாஸ் - காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். மிக முக்கியமான இடத்தில் பேட்டிங் ஆட வேண்டும். பகுதி நேர பந்துவீச்சு என்றதும் இவரை நோக்கி தான் கைகள் நீளும். பொறுமையாக ஆடினால் சாதிக்கலாம். 

யுவராஜ் / ரெய்னா / பாண்ட்யா

2003 யுவராஜ் - மிடில் ஆர்டர் பேட்டிங், சில ஓவர்கள் பந்துவீச்சு. இதை சிறப்பாக செய்தால் போதும். வெகு சிறப்பாக செய்தார் யுவராஜ்.

2011 ரெய்னா - 2003ல் யுவராஜ் செய்த ரோலை 2011 ரெய்னா செய்தார், வாய்ப்பு கிடைத்த போட்டிகளில்.

2023 பாண்ட்யா - அத்திப்பூ போல இந்தியாவுக்கு அரிதாக அமையும் வேகப்பந்து ஆல்ரவுண்டர். யுவராஜ், ரெய்னா போல் ஸ்பின்னரோ இடது கை பேட்ஸ்மேனோ கிடையாது. ஆனாலும் சவாலான ரோலை சமாளிக்க வேண்டும். பேட்டிங்கில் கூடுதல் சுமை இருக்காது. பந்துவீச்சில் நிச்சயம் கூடுதல் சுமை இருக்கும். ஓவர் காண்பிடனன்ஸ் தான் இவரின் பலவீனம்.

டிராவிட் / தோனி / ஜடேஜா 

2003 டிராவிட் - பேட்ஸ்மேனான டிராவிட்க்கு கீப்பர் ரோலும் கொடுக்க பட்டதால் கூடுதல் சுமை. அது அவரது பேட்டிங்கை பாதிக்கும் சூழல். ஆனாலும் சிறப்பாக செயல்பட்டார்.

2011 தோனி - பேக்அப் விக்கெட் கீப்பர் கிடையாது. காயம் ஏற்படாமல் ஆட வேண்டும். அதே சமயம் பின்னால் வருபவர்கள் பந்துவீச்சாளர்கள், ஆக விக்கெட்டை எளிதில் விட்டுவிட கூடாது. பலமான அணி என்பதால் பேட்டிங்கில் பெரிய சுமை இல்லை.

2023 ஜடேஜா - பந்துவீச்சு ஆல்ரவுண்டர். பந்துவீச்சில் 2011 யுவராஜ் போல் செயல்பட வேண்டும். பேட்டிங் 2011 தோனி போல் செயல்பட வேண்டும். பீல்டிங்கில் பங்களிப்பு வேண்டும். ஸ்லோ ஓவர் ரேட் வராமல் பாதுகாப்பது இவர் கையில் தான் உள்ளது.

தினேஷ் மோங்கியா / கோலி / ராகுல்

2003 தினேஷ் மோங்கியா - பேட்டிங் பந்துவீச்சு இரண்டுமே செய்தார். வெற்றி பெற்ற அணி வீரர் என்பதால் ஒட்டி கொண்டு இருந்தார்.

2011 கோலி - சீனியர் வீரர்களுக்கு மத்தியில் ஒரு இளம் வீரர். முதல் போட்டியிலே சதமடித்து இளம் கன்று பயம் அறியாது என்று நிரூபித்தவர்.

2023 ராகுல் - இஷான் கிஷான் இடது கை பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர். ஆனாலும் சீனியர் என்ற முறையில் கீப்பராக ஆட உள்ளார். துவக்க வீரராக ஆடியவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய சூழல். 2003 தினேஷ் மோங்கியா ஆக போகிறாரா அல்லது 2011 கோலி ஆக போகிறாரா?

ஹர்பஜன்/ அஸ்வின் / குல்தீப்

2003 - ஹர்பஜன்: இளம் சுழற்பந்து வீச்சாளர். சீனியர் கும்ளேவை விட சிறப்பாக பந்து வீசி எல்லா போட்டிகளிலும் முத்திரை பதித்தவர்.

2011 - அஸ்வின்: சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் இருந்ததால் அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆடிய போட்டிகளில் சிறப்பாக ஆடினார்.

2023 - குல்தீப்: அனைத்து போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பு உள்ளது. சீனியர் ஜடேஜா பந்துவீச்சில் சொதப்பினால் முழுச்சுமையையும் தாங்க வேண்டும். பவர் ப்ளேவில் பந்து வீசக் கூடிய திறமை இல்லாதது பலவீனம்.

ஸ்ரீநாத் / ஜாகீர்கான் / பும்ரா

2003 ஸ்ரீநாத்: சீனியர் வேகப்பந்து வீச்சாளர். முடிந்த அளவு திறமையை வெளிப்படுத்தினார். ஆனாலும் ஜாகீர் அளவுக்கு இல்லை. இறுதி போட்டியில் சொதப்பல்.

2011  ஜாகீர் : சீனியர் வேகப்பந்து வீச்சாளர். பிற வேகப்பந்து வீச்சாளர்களால் சிறிய அளவில் உதவி கிடைத்த போதும், தனது பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். வெற்றியை வசப்படுத்தினார்.

2023 பும்ரா : காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். வேகப்பந்து வீச்சை தலைமை ஏற்று நடத்த வேண்டும். துவக்க ஓவர்களில் சிராஜ் மற்றும் பாண்ட்யா கை கொடுத்தாலும் இறுதிக்கட்ட ஓவர்களில் முழுப் பொறுப்பையும் பும்ராவை சார்ந்து உள்ளது.

நெக்ரா / ஸ்ரீசாந்த் / சிராஜ்

2003 நெக்ரா : ஒரு போட்டியில் ஆறு விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 

2011 ஸ்ரீசாந்த் : பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் ஜாகீருக்கு துணையாக இருந்தார்.

2023 சிராஜ் : பும்ரா பந்துவீசும் போது இன்னொரு எண்டில் சொதப்பாமல், நோபால் போடாமல் பந்து வீசினாலே போதும்.

ஜாகீர் / நெக்ரா / ஷமி

2003 - ஜாகீர் : சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஜாகீர் நம்பிக்கை தந்தார். இறுதி போட்டி முதல் ஓவர், முற்றிலும் கோணலாக்கியது. 

2011 நெக்ரா : இறுதி போட்டியில் காயம் என்றதும் இந்தியர்கள் மகிழ்ச்சி கொண்டனர். அந்தளவுக்கு நெக்ரா தடம் பதித்தவர்.

2023 ஷமி : அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. பும்ரா, சிராஜ், தாகூர் தான் முதல் தேர்வாக இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் இறுதிக்கட்ட ஓவர்கள் கவனமாக பந்து வீச வேண்டும்.

கும்ளே / ஹர்பஜன் / அக்சர்

2003 கும்ளே : சீனியர் ஸ்பின்னர். ஹர்பஜன் அளவுக்கு பந்து வீசாததால் சில போட்டிகளுக்கு பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை. கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதால் அணியில் இடம் இல்லை.

2011 ஹர்பஜன்: சீனியர் ஸ்பின்னர். தனது பணியை சிறப்பாக செய்தவர். அஸ்வின், சாவ்லா அணியில் இருந்தும் கேப்டனுக்கு நம்பிக்கை ஊட்டி பைனலில் ஆடிய ஸ்பின்னர்.

2023 அக்சர் : ரவிந்திர ஜடேஜாவை போல் பேட்டிங், பவுலிங், பீல்டிங் செய்ய கூடியவர். ஆனால் எல்லாவற்றிலும் ஜடேஜாவைவிட குறைவான திறனுடையவர். ஜடேஜாவுக்கு காயம் என்றால் அணியில் இடம் கிடைக்கலாம். இவரையும் ஜடேஜாவையும் ஆடும் லெவனில் ஆட வைப்பது மடத்தனம்.

பார்தீவ் / யூசுப் பதான் / இஷான் கிஷான்

2003 பார்தீவ் : ஒரு போட்டியில் கூட விளையாடமல் பெஞ்சில் இருந்தவர். பேக் அப் விக்கெட் கீப்பர் என்பதால். பேட்ஸ்மேன் யாருக்காவது காயம் ஏற்பட்டிருந்தால் நிச்சயம் ஆடி இருப்பார்.

2011 யூசுப் பதான்: சில போட்டிகளில் ஆட வாய்ப்பு வந்தது. பகுதி நேர பந்து வீச்சாளர் என்ற கூடுதல் தகுதியும் இருந்தது. ஆனாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2023 கிஷான் : விக்கெட் கீப்பர் யார் என்ற தெளிவு இன்னும் அணி மேலாண்மைக்கு வரவில்லை. ராகுல் நேரடியாக வந்து விக்கெட் கீப்பராக இருப்பார் என்றார்கள். காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் கிஷான் கீப்பராக இருந்து ராகுலின் சுமையை குறைப்பார் என்கிறார்கள். கீப்பர் கிஷான் என்றால் ராகுலுக்கு அணியில் என்ன வேலை? . சமீபத்திய பார்ம் காரணமாக கிஷான் அணியில் இடம் பிடிக்கலாம். இடது கை பேட்ஸ்மேன் என்பது கூடுதல் தகுதி. கேப்டன் மற்றும் தேர்வு குழு தலைவரின் ஆதரவு மும்பை வீரர்கள் ஸ்ரேயாஸ், சூர்யகுமார். பயிற்சியாளரின் மாநில வீரர் ராகுல் என்ற சிபாரிசுகளை தனது திறமையால் உடைக்க வேண்டிய கட்டாய சூழல் கிஷானுக்கு.

அகர்கர் / முனாப் / சூர்யகுமார்

2003 அகர்கர் : பெஞ்சில் இருந்த வேகப்பந்து வீச்சாளர். கேப்டனின் நம்பிக்கை வளையத்தில் வரவில்லை.

2011 முனாப்: அணியில் இருந்தார். சில போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்தோடு கோவிந்தா போட்டார். ஆனால் கோப்பை வாங்கிய அணியில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 சூர்யகுமார்: சமீப காலமாக பார்ம்ல் இல்லை. மும்பை கோட்டாவில் பேக்அப் பேட்ஸ்மேனாக அணியில் உள்ளார். எத்தனை போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

சஞ்சய் பங்கார் / பியூஸ் சாவ்லா / தாகூர்

2003 பங்கார் : கூடுதலாக பேட்டிங் செய்வார் என்ற கணக்கில் தேர்வு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர். ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

2011 சாவ்லா: சில போட்டியில் ஆடினார். கூடுதலாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர். சொதப்பிவிட்டார்.

2023 தாகூர் : இவருக்கு எங்கேயோ மச்சம் என்று தான் சொல்ல வேண்டும். கூடுதலாக பேட்டிங் செய்வார் என்று தேர்வு செய்து உள்ளார்கள். பந்துவீச்சில் என்ன செய்ய போகிறாரோ. பேட்டிங்க்கும்...

Tuesday 5 September 2023

ஆப்கானிஸ்தான் - இலங்கை

ஆசிய கோப்பை அட்டவணைபடி லீக் சுற்றில் இந்தியா ஆடும் போட்டிகள் இலங்கையிலும், ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்ற அணிகளுக்கு குறைந்தபட்சம் ரெண்டு நாள் ஓய்வு இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒருநாள் மட்டுமே ஓய்வு.

பாகிஸ்தான் ஆடுகளம், பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி. ஆப்கானிஸ்தான் அணியின் பலம் பந்துவீச்சு. பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் டாஸ் வெல்ல முடியாமல் போனதால் ஓரளவு போராடியது. பந்துவீச்சுக்கு உதவாத ஆடுகளத்தில் சில ரன்அவுட்களே கிடைத்தது.

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற 35 ஓவர்களை இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இந்த போட்டியிலும் பரூக்கி சிறப்பாக பந்து வீச முடியவில்லை. பத்து ஓவர் முடிந்த பின் 11-20 ஓவர்களை சிறப்பாக வீசியது ஆப்கானிஸ்தான்.

தொடர்ச்சியாக நயீப்பை 7 ஓவர்களும், நபியை 8 ஓவர்களும் பந்து வீச வைத்தார் சாகிதி. ரஷீத் கான் முதல் ஸ்பெல்லில் சொதப்ப, இரண்டாவது ஸ்பெல்லில் அசலங்காவை காட் அண்ட் பவுல்ட் செய்தார். அது தான் அந்த இன்னிங்ஸ்ல் திருப்புமுனை.

ஆனாலும் கடைசியில் வெல்லலேஜ், தீக்ஷானா விக்கெட்டை எடுக்க முடிவில்லை. 292 ரன்னை 37 ஓவர் + 1 பாலில் எடுத்தால் தகுதிபெற வாய்ப்பு.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை பொறுத்தவரை துவக்க ஆட்டகாரர்கள் குர்பாஸ், இப்ராஹிம் சர்தான் அடித்தால் இலக்கு எளிதே. மூன்றாவது ஓவருக்குள்ளாக இருவரும் அவுட் ஆக சிக்கல் ஆரம்பித்தது. ஆனாலும் ஆப்கான் நயீமை 4 வது இறக்கி ஆட்டத்தை திறமையாக கொண்டு சென்றது. இலங்கையின் நாலாவது மற்றும் ஐந்தாவது பந்து வீச்சாளர்களை குறி வைத்து அடித்தது ஆப்கான்.

நபியின் அதிரடியில் வெற்றி வாய்ப்பு கை அருகில் வந்தது. நபியின் உடல்மொழியே நான் ஆப் சைடில் ஆட போகிறேன் என்று காட்டி கொடுத்தாலும், ஆடுகளத்தின் தன்மையால் பந்து வீச்சாளர்கள் எதுவும் செய்ய முடிவில்லை.

நபி அவுட் ஆனது திருப்புமுனையா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நபி தூக்கி அடித்து தான் ஆடினார். எப்போது வேண்டுமானாலும் அவுட் ஆகலாம் என்ற நிலையில் தான் ஆடினார்.

ஆட்டத்தின் திருப்புமுனை, அதுவரை பொறுமையாக தூக்கி அடிக்காத கேப்டன் சாகிதி தூக்கி அடித்து ஆடியது தான். கடைசி கட்ட ஆட்டத்துக்கு நஜிபுல்லா இருக்கும் நிலையில் அந்த ஷாட் தேவையில்லாதது. 

கடைசி நேர அழுத்தத்தில் தகுதி பெற முடியாமல் போனது சோகம் என்றால் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பெருஞ்சோகம்.

30 ஓவர்கள் ஸ்பின் தான் முடிந்தால் சமாளியுங்கள் என்ற தில்லோடு களம் இறங்குவது தான் ஆப்கானின் பலம். பேட்டிங் இன்னும் மேம்பட வேண்டும். குறிப்பாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சர்தான்.

Sunday 3 September 2023

இந்தியா - நேபாளம்

இந்திய அணி இதுவரை 19 வெவ்வேறு அணிகளுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளது. இன்று விளையாட முதல் முறையாக நேபாள அணியுடன் விளையாட போகிறது. நேபாளம் அணி 20 அணியாகும்.

19 அணிகளுடன் ஆடிய முதல் போட்டி விவரம்.

1. இங்கிலாந்து

13 - ஜூலை - 1974ல் இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் ஆடியது. அஜித் வடேகர் கேப்டனாக இருந்த இந்த போட்டி 55 ஓவர் போட்டி. இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் ஜான் எட்ரிச்.

2. கிழக்கு ஆப்பிரிக்கா

போட்டி நடைபெற்ற நாள் 11- ஜூன் - 1975 (உலகக் கோப்பை)

கேப்டன் : ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன்

மைதானம் : லீட்ஸ்

முடிவு : இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்டநாயகன்: பரூக் இஞ்சினியர் 

3. நியூசிலாந்து

போட்டி நடைபெற்ற நாள் 14- ஜூன்-1975 (உலகக் கோப்பை)

கேப்டன் : ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் 

மைதானம் : மான்செஸ்டர் 

முடிவு : நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : கிளன் டர்னர்

4. பாகிஸ்தான்

போட்டி நடைபெற்ற நாள் 01- அக்டோபர் -1978

கேப்டன் : பிஷன் பேடி

மைதானம் : குயிட்டா

முடிவு : இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்டநாயகன்: மொகந்தீர் அமர்நாத்

5. வெஸ்ட் இண்டீஸ்

போட்டி நடைபெற்ற நாள் 09- ஜூன் -1979 (உலகக் கோப்பை)

கேப்டன்: ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் 

மைதானம் : பிர்மிங்கம்

முடிவு : வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : க்ரீனிட்ஜ்

6. இலங்கை

போட்டி நடைபெற்ற நாள் 16-18 ஜூன் 1979 (உலகக் கோப்பை)

கேப்டன் :  ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் 

மைதானம் : மான்செஸ்டர் 

முடிவு : இலங்கை 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : துலிப் மெண்டிஸ்

7. ஆஸ்திரேலியா

போட்டி நடைபெற்ற நாள் 06- டிசம்பர் -1980 ( உலக சீரிஸ் போட்டி)

கேப்டன் : சுனில் கவாஸ்கர் 

மைதானம் : மெல்போர்ன் 

முடிவு : இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : சந்தீப் பாட்டீல் 

8. ஜிம்பாப்வே

போட்டி நடைபெற்ற நாள் 11- ஜூன் - 1983 (உலகக் கோப்பை)

மைதானம் : லைஸெஸ்டர்

கேப்டன் : கபில் தேவ் 

முடிவு : இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : மதன் லால் 

9. பங்களாதேஷ்

போட்டி நடைபெற்ற நாள் 27 அக்டோபர் 1988 (ஆசிய கோப்பை)

கேப்டன் : திலீப் வெங்க்சர்கார்

மைதானம் : சட்டோகிராம்

முடிவு : இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : நவ்ஜோத் சித்

10. தென்னாப்பிரிக்கா

போட்டி நடைபெற்ற நாள் 10 நவம்பர் 1991

கேப்டன் : முகமது அசாருதீன் 

மைதானம் : கொல்கத்தா 

முடிவு : இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : சச்சின் டெண்டுல்கர் &ஆலன் டொனால்ட் 

11. எமிரேட்ஸ் UAE

போட்டி நடைபெற்ற நாள் 13- ஏப்ரல் - 1994 ( ஆஸ்ரல் - ஆசிய கோப்பை)

கேப்டன் : முகமது அசாருதீன் 

மைதானம் : ஷார்ஜா

முடிவு : இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : வினோத் காம்ளி

12. கென்யா

போட்டி நடைபெற்ற நாள் 18 பிப்ரவரி 1996 (உலகக் கோப்பை)

கேப்டன்: முகமது அசாருதீன் 

மைதானம் : கட்டாக்

முடிவு : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : சச்சின் டெண்டுல்கர் 

13. நெதர்லாந்து

போட்டி நடைபெற்ற நாள் 12 பிப்ரவரி 2003 (உலகக் கோப்பை)

கேப்டன் : சவுரவ் கங்குலி 

மைதானம் : பார்ல்

முடிவு : இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : டிம் டீ லீட்

14. நமீபியா

போட்டி நடைபெற்ற நாள் 23 பிப்ரவரி 2003 (உலகக் கோப்பை)

கேப்டன்: சவுரவ் கங்குலி 

மைதானம் : பீட்டர் மாட்டிஸ்பர்க்

முடிவு : இந்தியா 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : சச்சின் டெண்டுல்கர் 

15. பெர்முடா

போட்டி நடைபெற்ற நாள் 19 மார்ச் 2007 (உலகக் கோப்பை)

கேப்டன் : ராகுல் டிராவிட் 

மைதானம் : போர்ட் ஆப் ஸ்பெயின் 

முடிவு : இந்தியா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : வீரேந்திர ஷேவாக் 

16. அயர்லாந்து

போட்டி நடைபெற்ற நாள் 23- ஜூன் 2007

கேப்டன் : ராகுல் டிராவிட் 

மைதானம் : பெல்பாஸ்ட் 

முடிவு : இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : கௌதம் கம்பீர்

17. ஸ்காட்லாந்து

போட்டி நடைபெற்ற நாள் 16 ஆகஸ்ட் 2007

கேப்டன் : ராகுல் டிராவிட் 

மைதானம் : க்ளாஸ்கோ

முடிவு : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : கௌதம் கம்பீர்

18. ஹாங்காங்

போட்டி நடைபெற்ற நாள் 25 ஜூன் 2008 (ஆசிய கோப்பை)

கேப்டன் : மகேந்திர சிங் தோனி 

மைதானம் : கராச்சி 

முடிவு : இந்தியா 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : சுரேஷ் ரெய்னா 

19. ஆப்கானிஸ்தான்

போட்டி நடைபெற்ற நாள் 5 மார்ச் 2014 (ஆசிய கோப்பை)

மைதானம்: மிர்பூர்

கேப்டன் : விராட் கோலி 

முடிவு : இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன் : ரவீந்திர ஜடேஜா 


Saturday 2 September 2023

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரு ஒப்பீடு

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் அனல் பறப்பவை. ஆசிய கண்டத்தில் எப்போதும் வலிமையான அணிகள். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எப்போதும் ஆசிய அணிகளில் முதலிடத்தில் இருக்கும். இந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் இரு அணிகளுக்கும் சாதகமான சூழ்நிலை.

அணிகளை பற்றிய ஒப்பீடை பார்ப்போம்.

டாப் 5

இரு அணிகளின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் பகுதி நேர பந்து வீச மாட்டார்கள். பந்து வீச தெரிந்தாலும், அவர்களை (ரோகித், கோலி, ஷமான், இப்திகார்) பந்துவீச வைக்க கேப்டனுக்கு தன்னம்பிக்கை கிடையாது. ஐந்து பேரும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள்.

இஷான் கிஷான்/ முகமது ரிஸ்வான்

கிஷான் துவக்க ஆட்டக்காரராக ஓரளவு விளையாட கூடியவர். துவக்க வீரராக களம் இறங்கினால் இடது கை வலது கை துவக்க ஆட்டம் இருக்கும். (உலகக் கோப்பை அணியில் இருப்பாரா என்பது சந்தேகமே) ஆனால் அணி நிர்வாகம் அதை விரும்பவில்லை.

ரிஸ்வானும் துவக்க வீரராக சாதித்து காட்டியவர். துவக்க வீரராக களம் இறங்கினால் இடது கை வலது கை காம்பினேஷன் கிடைக்கும். ஆனால் அணி நிர்வாகம் விரும்பவில்லை.

ரவீந்திர ஜடேஜா / சதாப் கான்

இருவரும் பவுலிங் ஆல்ரவுண்டர், பேட்டிங்கில் பெருசாக ஆட தேவை இருக்காது. ஆனால் பந்துவீச்சிலும் பீல்டிங்களிலும் 100% கொடுத்தால் அணி வெற்றி பாதையில் செல்லும்.

தாகூர் / முகமது நவாஸ்

ஒரு பந்து வீச்சாளரை மாற்ற வேண்டும் என்றால் முதல் தேர்வு இவர்கள் தான். முழுதாக பத்து ஓவர்கள் போடுவது கடினமே. கூடுதல் பேட்டிங் என்று காரணம் சொல்லி அணியில் ஒட்டிக் கொண்டு இருப்பவர்கள்.

ரோகித் சர்மா/ பாபர் அசாம்

கேப்டன்சியை பொறுத்தவரை பாபர் கடிவாளம் போட்ட குதிரை. முதல் பவர்ப்ளே வேகப்பந்து வீச்சாளர்கள். கடைசியிலும் அவர்களே. நடுவில் முழுக்க ஸ்பின்னர்கள் என்ற கடிவாள அணுகுமுறை. எல்லா நேரமும் பலனளிக்காது.

ரோகித் சர்மா பந்து வீச்சு மாற்றத்தை சிறப்பாக கையாள்பவர். ஆனால் கொஞ்ச காலமாக கேப்டன்சியில் சொதப்பி வருகிறார்.