Saturday 22 December 2012

மக்கள் பணியில் ஸ்டேட் பேங்க் ????? !!!!!!!




சமிபத்தில் ஊருக்கு சென்று திரும்பும்  போது  பேருந்தில் "படியில் பயணம் செய்யாதீர்கள்" என்று ஒரு விளம்பரம் ஒட்டி இருந்தார்கள்
விளம்பரதாரர் யார்னா நம்ம பாரத ஸ்டேட் பேங்க். பாரத ஸ்டேட் பேங்க் மக்கள் சேவையில் நல்ல விஷயம் தானே!

ஜன்னல் இருக்கையும் வறண்ட காற்றும் பாரத ஸ்டேட் வங்கியின், வங்கி சேவையை நினைக்க வைத்தது.
ஸ்டேட் பேங்க் பெரிய வங்கி , எல்லா (பெரிய ஊர்) இடத்துலயும் குறைஞ்சது நாலு கவுண்டராவது இருக்கும் (சிங்கள் விண்டோ சிஸ்டம்).
டோக்கனுக்கு மிஷின் உண்டு. டோக்கன் நம்பர் கூப்பிட்டதும் நாம போய் பணம் கட்டவோ, வாங்கவோ வேண்டியது தான்.

பேங்க் திறந்த உடன் உள்ளே சென்றால், சாமர்த்தியசாலி என்றால் எண் 30க்குள் டோக்கன் வாங்கலாம். அசடுகள் எண் ஐம்பதை தொடுவார்கள்.
அப்புறம் நாம எழுதிய செல்லானோடு காத்திருக்கணும். நம்ம முறை வருவதற்கு சற்று முன்பாகவே ஓட்ட பந்தய வீரர் போல் நம்மை தயார்
செய்து கொள்ள வேண்டும்.
கவுண்டர்களில் கண்டிப்பாக ஓன்று சற்று தள்ளி இருக்கும். எந்த கவுண்டரில் இருந்து அழைப்பு வந்தாலும் அடுத்த அரை நிமிடத்தில் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அழைப்பு அடுத்த எண்ணுக்கு செல்லும் அவர் முந்திகொள்வார். நமக்கு திட்டு விழும். கூப்பிட்டா உடனே வர மாட்டீங்களா? என்று
சரி, ஒரு வழியா கவுண்டருக்கு போனா '5', 's 'மாதிரி இருக்கு என்பார்கள். இனிசியல் உங்க தாத்தாவா போடுவார்? என்பார்கள்.


தாத்தா என்றதும் ரைமிங்கா, டைமிங்கா நமக்கும் வார்த்தை வரும், ஆனா பேச முடியாது. ஏன்னா அவர்கள் அதிகாரிகள்.

தேதி ரெண்டுலயும் எழுதணும். தேதி தப்பா இருக்குது என்று குறைபட்டு கொள்வார்கள். ஆனா நம்ம டோக்கன்ல தேதி, நேரம் எல்லாம் போட்டு வரும்.
அதுக்கெல்லாம் தொழில்நுட்பத்தை உபயோகிப்பவர்கள், தேவையான விசயத்துக்கு தொழில்நுட்பத்தை உபயோகிக்காமல் நம்மை திட்டுவார்கள்.

சரி,வேற செல்லான் எடுத்து சரியான தேதி இனிசியல் எழுதி வந்தால் டோக்கன் நூத்தி சொச்சம் நம் கையில் இருக்கும். வேலை முடிஞ்சு வரும் போது கவனமாக வர வேண்டும். ஏன்னா நமக்கு அடுத்த டோக்கன்காரர் சிறுத்தை வேகத்தில் சீறி பாய்ந்து கவுண்டர் தேடி சென்று கொண்டிருப்பார்.
படிச்சவங்களே இப்படி கஷ்டப்படும் போது படிக்காதவர்கள் நிலைமை?. செக்கிருட்டி கிட்ட கூட கேக்க முடியாது. இங்க செக்கிருட்டி எல்லாருமே வட இந்தியர்கள் .

வேலையை முடித்து நாம் நம் அலுவலகம் திரும்பும் போது ஒரு மணி நேர பெர்மிஷன் முடிந்து அரை நாள் விடுப்பாகி நாம் கடுப்பாவது தான் மிச்சம்.
இது பொதுவான அன்றாட சம்பவம்.
என்னை பாதித்த சம்பவம் இதோ
நண்பன் ஒருவன் குஜராத்தில் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து போன் பண்ணினான். மாப்ள சுத்தமா காசு இல்ல. என் அக்கவுண்ட்ல போட்டு விடு. நான் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன் நீ பணம் போட்டதற்கு அப்புறம் தான் நகர முடியும் என்றான்.

மொழி தெரியாத ஊரில் ATM வாசலில் என் நண்பன் பரிதாபமாக உட்கார்திருப்பானே என்று, ஸ்டேட் பேங்க்கு ஓடினேன்.
திறக்காத வாசலில் நீண்ட கியூ நின்றது. 37வது டோக்கன். 33 வரும் போதே தயாரானேன். ஒரு தடகள வீரனுக்குள்ள தகுதி எனக்கு வந்தது. சற்றே தள்ளி இருக்கும் கவுண்டர் தான். ஆனாலும் வெற்றி கிட்டியது 20 நொடியில் அடைந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
அந்த அதிகாரி மேடம் பணம் போட முடியாது என்று சொல்லிவிட்டு அடுத்த எண்ணை அழைத்தது.
“ஏன் மேடம்” என்றேன்
“அக்கவுண்ட்ல பணம் இல்ல” என்றது மேடம்
“அக்கவுண்ட்ல பணம் இல்லைன்னு தான் பணம் போட  வந்தேன்” என்றேன்
மினிமம் பாலன்ஸ் இருந்தாதான் பணம் போட முடியும் மினிமம் பாலன்ஸ் இல்லை என்றது மேடம்

எனக்கு பயங்கர கோபம் வங்கியின் மேல் என்பதை விட நண்பனின் மேல் தான் அதிகம்.
ரயில் நிலையத்தில் நண்பன் பிச்சை எடுக்கும் காட்சி கண்முன்னே வந்தது.
கண நேரத்தில் ஒரு யோசனையும் வந்தது.
மச்சி உன் போன யார்டையாவது வித்துடு வேற வழி இல்ல என்றேன்.
உனக்கு போன் பண்றதுக்கு முன்னாடியே அத யோசிச்சிட்டேன் இது 200 ரூபாய்க்கு கூட போகாது என்றான்.

இன்னொரு நண்பன் வந்து நெட் பேங்க்கிங்கில் ட்ரான்ஸ்பர் பண்ணலாம்னு ஐடியா கொடுத்தான். இந்த நண்பனின் அக்கவுண்டில் பணம் போட உள்ளே நுழைந்தேன். டோக்கன் 121

மக்கள் சேவையில் இறங்கி விட்ட இவர்களின் வங்கி சேவை இதுதான்.
நீ மயிரு நெட் பேங்க்கிங் வாங்க வேண்டியது தானே என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அது ஒரு பெரிய கதை ...

ஸ்டேட் பாங்க் அக்கவுண்டோட வந்தாதான் கம்பெனியில் சேர்த்து கொள்வோம் என்று சொன்ன மொன்னதனமான கம்பெனியில் சேரும் போது, ஸ்டேட் பேங்க் அக்கவுன்ட்டுக்கு சென்னையில் கேட்ட போது உங்களுக்கு அட்ரஸ் திருநெல்வேலி னு இருக்கு. திருநெல்வேலில ஒப்பன் பண்ணுங்க என்றார்கள்.
திருநெல்வேலி போய் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணனும் என்றேன்
எதுக்கு? என்றார்கள்
கம்பெனில ஸ்டேட் பேங்க் அக்கவுண்ட் கேட்டார்கள் என்றேன்
என்ன கம்பெனி? என்றார்கள்
xxx, சென்னை என்றேன்
அப்போ சென்னைல ஒப்பன் பண்ண வேண்டியது தான? என்றார்கள்
அப்ப தான் புரிஞ்சிது வருத்த படாத வாலிபர் சங்க கோரிக்கை ( பேங்க் ஒன்னு வச்சு குடுங்க நடத்துறோம்)

என்ன சார் இப்படி பண்றீங்க. அவங்க தான் இங்க வர சொன்னாங்க என்று கோபமாய் கத்தினேன்.
 introducer இல்லாம பார்ம் தர மாட்டேன் என்றார்கள் .அப்புறம் introducer புடிச்சி அக்கவுண்ட் ஒப்பன் பண்றதுக்குள்ள  நாக்கு தள்ளி போச்சு

மூணு நாள் லீவுக்கு ஊருக்கு போன போது ஒரு அரை நாள் ஸ்டேட் பேங்க்கில் செலவிட்டு நெட் பேங்க்கிங் கிட் வாங்கினேன்.
நீங்க சென்னை போறதுக்குள்ள அக்டிவேட் ஆயிரும் என்றார்.
சென்னை வந்து கண்கள் விரிய பார்த்தால் அது டம்மி கிட் என்பது தெரிய வந்தது. சரி பாஸ் புக்ல உள்ள நம்பருக்கு போன் பண்ணலாம்னு பண்ணினேன்
முதல் நம்பர் எடுத்த நபர் ஹல்லோ yyy ஹோட்டல் என்றார்.
அடுத்த நம்பருக்கு போன் பண்ணினேன் "சார் ஸ்டேட் பேங்க் கா ?"என்றேன்
ஸ்டேட் பேங்க் இனிமே தான் தம்பி கட்டனும் என்றார்.
சாரி சார் என்று வைத்து விட்டேன்.

நெட்டில் தேடி பார்த்தேன். அதே எண்கள். ஒரு குறைதீர் மெயில் ஐடி தேடி மெயில் அனுப்பினேன். அந்த மெயில் ஐடியில் இருந்து எனது கோரிக்கையை திருநெல்வேலி கிளைக்கு அனுப்பி விட்டதாக ரிப்ளை மட்டும் வந்தது.

உங்க பொங்க சோறும் வேண்டாம், உங்க பூசாரிதனமும் வேண்டாம் என்று விலகி கொண்டேன்.

Friday 21 December 2012

பதிமூனாவது காக்கா



காதலை சொல்வதுதான்
உலகில் கஷ்டமானது என்பதை
தெரிந்து கொண்ட நாள் அது !

ஒரு சாதாரண நாள்
சம்பவ நாளாகியது!

காதலை சொல்ல முயன்று
காலையிலே கோவிலுக்கு போய்
கடவுளை வேண்டி கொண்டேன்
வேண்டுகோள் விடுத்தேன்
எனக்கு அவள் வேண்டும் என்று !

ஒற்றை ரோஜா வாங்கும் போதே
வாழ்த்து கூறினாள் பூக்காரி
இனியவளுக்காக காத்திருந்தேன்
தூரத்தில் அவள் முகம்
தோன்றியதும் என் முகம்
வியர்க்க ஆரம்பித்தது
அடி வயிற்றிலும் சில பல
மாற்றங்கள் !

தெருவில் மண்டியிட்டேன்
ரோஜாவை நீட்டினேன்
என் காதல் ரோஜாவிடம் ,
அவள் என்னை விலக்கி,
விலகி சென்றாள்

மறுத்து விட்டாள்
என்பது என் மண்டையில்
உரைக்க ,
ரோஜாவை குப்பை தொட்டியில்
எறிந்தேன்
உனக்கு தெரியாது என்
காதலின்  ஆழம் என்று
குப்பை தொட்டியை
எட்டி உதைத்துவிட்டு
பெட்டி கடையை அணுகினேன் !

சிரித்துகொண்டே சிகரெட்
தந்தான் கடைக்காரன் !

கண்மணி அவள் வந்த
பாதை மலர் தோட்டம்
அவள் சென்ற பாதை
கல்லறை தோட்டம் போல்
தெரிந்தது
என் கண்களுக்கு!

அலுவலகம் சென்ற போது
என்ன மச்சி ஊத்திகிச்சா
என்றது நட்பு
எனக்கு மட்டும் வருத்தம்
தந்த விஷயம்
நிறைய நண்பர்களுக்கு
சந்தோசம் தருகிறது!

சுவர் மேல சோறு எறிஞ்சா
ஆயிரம் காக்கா
விடு மச்சி என்றது நட்பு !

மச்சான் பறந்தது
பதிமூனாவது காக்கா டா !!!