Monday 18 March 2024

தேர்தல் கூத்து

தேர்தல் அவசரத்தில்

தோண்டப்பட்ட மழைநீர்

வடிகால் குழியில் விழுந்த

நாய் மூன்றாம் முயற்சியில்

வெளியே வந்துவிட்டது !

பிரபல தலைவரின்

பிரசாரத்திற்கு வரும்

ஹெலிகாப்டர் சத்தத்தை

கேட்டுவிட்டு அசை போட

தொடங்கிய பசு மாட்டுக்கு 

தெரியாது அரசியலில்

அதன் பங்கு குறித்து !

பங்குனி மாத வெக்கை 

தாங்காமல் வெளியே

வந்து வேப்பமரத்தடியில்

நின்றால் தார் போடாமல்

விடப்பட்ட சாலை புழுதியை

பரிசளிக்கிறது !

மழையால் சேதமாகி விட்ட வீட்டை

முடிந்த அளவு பேணி வைத்திருக்கிறாள்

மூதாட்டி ஒருத்தி 

தகவல் தொழில்நுட்ப அணி

தரும் அளவுக்கு அவள் வீட்டுக்கு

முட்டு கொடுக்க எதுவும்

யாரும் இல்லை !

வீட்டை கட்டி தர அரசிடம்

பணம் இல்லை.

13000 கோடியோ, 500 கோடியோ

அது கட்சிக்கு வந்த பணம்

அரசாங்கத்துக்கு பணம் இல்லை !

அவள் வாங்கும் அரிசி பருப்புக்கும்

ஜிஎஸ்டி உண்டு !

ஓட்டு கேட்டு வருபவர்கள்

நூறோ இருநூறோ தருவார்கள்

என காத்திருக்கும் தாத்தாவுக்கு

தெரியாது

அவர்கள் தருவது இங்கிருந்தே

ஆட்டைய போட்டது என்று !

சூரியன் ஒளிர்கிறது

தாமரை மலர்கிறது

இலை துளிர்க்கிறது

ஏழையின் வாழ்வில்

எந்த மாற்றமும் செய்யாமல்

ஒளிர்ந்து, துளிர்த்து, மலர்வது

என்ன மயித்துக்கு !!!

Saturday 9 March 2024

திருநெல்வேலி - 3

திருநெல்வேலி விவசாயம் சார்ந்த மாநிலம். அதே சமயம் பெண்களுக்கு கைத்தொழில் என்றால் பீடி சுற்றுதல். பீடி சுற்றுவதில் பெரிய வருமானம் இருக்காது என்றாலும், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பீடி சுற்றி சின்ன சின்ன குடும்பத் தேவைகள் முதல் குழந்தைகளின் படிப்பு செலவுகள் வரை பூர்த்தி செய்ய பயன்படும்.

பீடி கடை உரிமையாளர்கள் 100 கிராம் பீடித்தூள் + 1/4 கிலோ பீடி இலை என்ற விகிதத்தில் வழங்குவார்கள். பீடி சுற்றும் நபர் 25 பீடிகள் கொண்ட 23 கட்டுகளை கொடுக்க வேண்டும். அதில் 22 கட்டுகள் வரவு வைக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். குறைவான கட்டுகள் கொடுத்தால் மீதி கட்டுகள் பாக்கியாக எழுதப்படும். பாக்கி கட்டுகளுக்கு காசு கொடுத்து இலை மற்றும் தூள் வாங்கி கட்டி கொடுத்து கழிக்க வேண்டும்.

பீடித் தொழிலாளர் நல வாரியம் உள்ளது. அது 1000 பீடிக்கு நிர்ணயித்த கூலியை (40x25) பீடிக்கடை உரிமையாளர்கள் (46x25) 1150 பீடிகளுக்கு வழங்குகிறார்கள். பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கு பள்ளியில் உதவித்தொகை உண்டு. இது அரசு உதவித்தொகையைவிட அதிகம். பீடி உதவித்தொகை வாங்கினால் அரசு உதவித்தொகை கிடைக்காது.

பீடி சுற்றும் முறைக்கு வருவோம். பீடி இலை பார்க்க தேக்கு இலை போல் இருக்கும். இலையை தண்ணீர் தெளித்து நனையவிட்டு விடுவார்கள். அதற்கு பிறகு ஈரத்தை உதறி அளவுக்கு வெட்டுவார்கள். பழுப்பு நிற இலைகளில் பீடி சுற்றக்கூடாது. ஒவ்வொரு கட்டிலும் மேலும் கீழும் இரண்டு அல்லது மூன்று பழுப்பு நிற இலைகள் இருக்கும். 

வெட்டிய இலைகளை கவரில் வைத்து பீடி சுற்ற துவங்குவார்கள். இதற்கு இடையில் பீடியை கட்டுவதற்கான நூலை பிரித்து எடுக்கும் வேலை உள்ளது. வெட்டிய இலைகளில் சிறிய கத்தி கொண்டு நரம்புகளை சீவி விட்டு, பீடித்தூளை வைத்து சுருட்டுவார்கள். 

பீடியின் தலைப்பகுதியில் வால்பகுதி வரை பீடித்தூளை சீராக குறைத்து வர வேண்டும். தலைப்பகுதியில் தூள் அதிகம் இருந்தால் பீடி ஏற்றுக்கொள்ளபடாது. வால் பகுதியில் தூள் இல்லை என்றாலும் கட்டமுடியாது.

அடுத்த வேலை தலைப்பகுதியை மடக்குவது. இதற்கென அளவுபார்க்க ஒரு கட்டை உண்டு, அளவு பார்த்து கூடுதல் நீளத்தை வெட்டி, ஸ்குரு டிரைவர்(மடக்குச்சி) போன்ற கருவி கொண்டு மடக்குவார்கள் மடக்குவதற்கு ஏதுவாக பீடியின் தலை பகுதியை ஈரத்துணியால் மூடி வைத்திருப்பார்கள். இதற்கு பெயர் பதியம். அதிக நேரம் மூடி வைத்திருந்தால் பீடி கருத்துவிடும்.

மடக்கிய பீடிகளை 25 எண்ணம் (கடைக்கு கடை எண்ணிக்கை மாறலாம்) கொண்ட கட்டுகளாக கட்டவேண்டும். கட்டிய பின் சைஸ் பார்த்து செக்பண்ணி கடையில் கொடுக்க வேண்டும்.

பீடிக்கடை வைத்திருக்கும் நபர் பீடியின் தரத்தை வைத்து பீடியை கழிப்பார்கள். தரம் இல்லை என முழுக்கட்டையும் திருகி எறியவும் வாய்ப்பு உள்ளது.

சமையல் முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ஓய்வு நேரத்தின் உழைப்பை பீடியாக மாற்றுவார்கள். பீடித்தூள் நெடியுடையுது, சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உடையது. ஆனாலும் எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே போட்டி போட்டு பீடி சுற்றுவார்கள்.

திருநெல்வேலியும் பீடித்தொழிலும் பிரிக்க முடியாதவை.


Saturday 2 March 2024

திருக்கார்த்தியல் - சிறுகதை தொகுப்பு பற்றி

தேசிய அளவில் விருது பெற்றிருந்தாலும், நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியுள்ளார் என்பதற்காக வாங்கினேன். நாஞ்சில் நாடன் தனது கருத்தை பொட்டில் அடித்தது போல சொல்வதில் வல்லவர்.

பொதுவாக சிறுகதை தொகுப்பில் புத்தக தலைப்பில் உள்ள கதை முதல் கதையாக இருக்காது. ஆனால் ராம் தங்கம் திருக்கார்த்தியல் கதையை முதல் கதையாக வைத்திருக்கிறார். நானும் (கொஞ்சம் பெரிய பையன் ஆன பின்) விடுதியில் தங்கி படித்தவன் என்பதால் எளிதாக மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது திருக்கார்த்தியல்.

தக்கலையில் கல்லூரி படிப்பை முடித்தவன் என்பதால் நாகர்கோவில் வட்டார வழக்கும் எனக்கு எளிது.

கதையில் வரும் எள்ளல் தொனி நாஞ்சில் நாடனை நினைவுபடுத்துகிறது. ஊழிற் பெரு வலி கதை மட்டும் சாரு நிவேதிதாவிடம் கற்றிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது.

காணி வாத்தியார் கதையில் நம்மை பெருஞ்சாணி அணைக்கு அழைத்து செல்லும் ராம் தங்கம், பாணி கதையில் நாம் வடக்கன்/ஹிந்திகாரன் என்று ஒதுக்கும் ஒருவனின் மனிதத்தை பேசியுள்ளார்.

கடந்து போகும் கதையை வாசித்துவிட்டு எளிதில் கடக்க முடியாது. வலிகளை சொல்லும் கதைகள் மத்தியில் வெளிச்சம் கதை மயிலிறகு வருடல். டாக்டர் அக்காவும் மனதை பிசைகிறது.

ராம் தங்கம் தேசிய அளவில் விருது வாங்கிவிட்டார் என்றதும் X தளத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாகர்கோவில்காரர்களும் வாழ்த்தியுள்ளனர்.

ராம் தங்கம் தமிழ் நாடு முழுக்க கொண்டாடப்பட வேண்டியவர்.


Sunday 11 February 2024

திருநெல்வேலி - 2

திருநெல்வேலியின் சிறப்புகளில் ஒன்று தனியார் பேருந்துகள். வெளிப்புற தகரங்கள் பளபளக்க பட்டையாக ஒரு வண்ணம் அடித்த நகர பேருந்துகள் கண்களை கவரும். இரண்டு அல்லது மூன்று ஆங்கில எழுத்துகள் தான் பேருந்து பெயர்கள். 

பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவது மேட்டுத்திடல் - நெல்லை நகரம் தடத்தில் தான். அதே சமயம் சுற்று வட்டார கிராமங்களுக்கும் தனியார் பேருந்துகள் உண்டு. 

பேட்டை, சுத்தமல்லி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், வெள்ளாளன்குளம், கோபால சமுத்திரம், நரசிங்க நல்லூர், கருங்காடு, காந்தி நகர், மேலப்பாளையம், கொங்கராயங்குறிச்சி, ஆழ்வார் கற்குளம், முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், கருங்குளம், சேரகுளம், கலியாவூர், பாறைகுளம், அனவரதநல்லூர், ஆழிக்குடி, அய்யனார்குளம் பட்டி, சிவந்திப்பட்டி, திருமலை கொழுந்துபுரம், மேலப்பாட்டம், கீழப்பாட்டம், நடுவக்குறிச்சி, மணப்படை வீடு, நாரணம்மாள்புரம், பாப்பையாபுரம், பாலாமடை, ராஜவில்லிபுரம், சங்கர் நகர், அணைத்தலையூர், வடக்கு செழியநல்லூர், ராஜா புதுக்குடி, தெற்கு செழியநல்லூர், தென்கலம், நாஞ்சான்குளம், மதவக்குறிச்சி, மானூர், பள்ளமடை, கீழப்பிள்ளையார்குளம், பாப்பாக்குடி, என்ஜிஓ காலனி, மருதகுளம், கோவை குளம், தெய்வநாயகப்பேரி ஆகிய பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.



90களில் இருந்த பேருந்துகள் 

ஆண்டனி கம்பெனி - Antony, SSR, SST, SRS, SK

ஞானமணி கம்பெனி - MGG, GMT, ADJ

மயில் வாகனம் கம்பெனி - MPR

SGKR கம்பெனி - SGKR

ARG கம்பெனி - ARG

தனபால் கம்பெனி - DPT, DPR, DSR, DHANAPAUL, DHANAPERINBAM, DANIEL, IMPERIAL

வேணி கம்பெனி - KRISHNA VENI

TPC ராஜா கம்பெனி - TPC ராஜா

லயன் கம்பெனி - Lion

ஆண்ட்ரூஸ் கம்பெனி - SPM, SPR, ST. ANDREWS

சீதாபதி கம்பெனி - ABC, SBC, SSMS

ஜெயராம் கம்பெனி - JRT

விஸ்வம் கம்பெனி - KVV



தனியார் பேருந்துகள் வேகமாக செல்லக்கூடியவை. குறிப்பாக SPM 4 பேருந்தில் ஏற வாய்ப்பு கிடைக்காதா என மனம் ஏங்கும். 9B - ARG பேருந்து வேறொரு சிறப்பம்சம் உள்ளது.

தனியார் பேருந்துகள் கை காட்டினால் நிற்பவை. வயதானோர் இயலாதவர்களுக்கு நடத்துனர்கள் உதவுவார்கள், பால் கேன்கள், காய்கறிகள் மூட்டைகள், சைக்கிள், ஆட்டுக்குட்டி என எல்லாவிதமான லக்கேஜ்ம் ஏற்றிக்கொள்வார்கள். நடத்துனர்கள் தேடி வந்து டிக்கெட் கொடுத்து செல்வார்கள். வழக்கமான நடத்துநர்கள் என்றால் டிக்கெட்டை கொடுத்து விட்டு பணத்தை மெதுவாக (சேரும் இடத்திற்கு முன்பாக) வாங்கி கொள்வார்கள்.தற்போது அந்த நிலை இல்லை.

நடத்துனர்களின் இன்வாய்ஸ் பேப்பரில் எத்தனை ஆட்கள், எத்தனை பாஸ், எத்தனை லக்கேஜ் என்று இடம் பெற வேண்டும். எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்ற விவரமும் வேண்டும்.

செக்கிங் / சூப்பர்வைசர் வந்தால் பயணிகளை எண்ணிவிட்டு இன்வாய்ஸ் பார்ப்பார். எண்ணிக்கையில் மாற்றம் இருந்தால் நடத்துநரிடம் விசாரிப்பார், பயணிகளிடம் டிக்கெட் டிக்கெட் என்று கேட்பதில்லை.

தற்போது உள்ள தனியார் பேருந்துகள் 

பாலமிதுஷா, கிருஷ்ண வேணி, நாகூர் ஆண்டவர், PKT, சுந்தரி, VSP அகிலா, SMC, சரவண பாலாஜி, CTR, GOOD SAMARITAN SGKR, MPR, LION, ஆனந், ரேகோபாத்,SSR, ANTONY, SKS, SSMS, SREEMATHI, GNR, St. Andrews, SPR 

Saturday 3 February 2024

திருநெல்வேலி - 1

திருநெல்வேலிகாரர்களுக்கு திரைப்படம் பார்ப்பது உயிரானது. 90களில், ஒரு மத்திய நகரமான திருநெல்வேலியில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததற்கு காரணம் திருநெல்வேலிகாரர்களின் திரைப்பட ஆர்வம் தான்.

கிராமங்களில் இருந்து நெல்லைக்கு வந்து படம் பார்த்து செல்பவர்கள் ஏராளம் உண்டு. ரத்னா தியேட்டரில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எதிரில் இருக்கும் பார்வதி தியேட்டரில் படம் பார்த்து செல்வர்.

பேருந்தை தவற விட்டால் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் பூர்ணகலாவில் படம் பார்த்து வந்து விடுவார்கள். 

அன்றைக்கு திரையரங்க கட்டணம் ₹3 மகளிர் மற்றும் சிறார்களுக்கானது. திரைக்கு முன்னால் இருக்கும் சில வரிசை இருக்கைகள். அதற்கு அடுத்தது ₹6-8, அடுத்தது ₹15. கடைசி இருக்கைகள் ₹20.

பீடி சுற்றும் பெண்கள் தங்கள் தோழிகளுடன் பார்க்க வசதியானது ₹3 கட்டண இருக்கைகள்.

தனியாக படம் பார்ப்பவர்கள் மிக குறைவே. செல்வம் தியேட்டர் வண்ணார்பேட்டை தாண்டி உள்ளது என்று சலித்து கொண்டாலும் அங்கே போய் படம் பார்ப்பார்கள்.

திருநெல்வேலியில் இரண்டு பாக்ஸ் ஏசி தியேட்டர்கள் உண்டு. செல்வம் மற்றும் கலைவாணி. இதில் கலைவாணி ஆபாச படங்கள் திரையிடும் தியேட்டர். பணக்காரர்கள் பாக்ஸ் ஏசியில் செல்வம் தியேட்டரில் பார்ப்பார்கள்.



ஏல ஒடையார்பட்டில ரெண்டு தியேட்டர் கட்டுதான், கீழ ஒண்ணு மேல ஒண்ணு என்று ஊரெல்லாம் பரபரப்பை கிளப்பி உதயமானது தான் ராம், முத்துராம் தியேட்டர்.

பாப்புலர் தியேட்டர், கணேஷ் தியேட்டர் என்று பெயர் மாறினாலும் பெரியவர்கள் பாப்புலர் தியேட்டர் என்றே கூறுவார்கள். முழுக்க ஏசி, பேமிலி தியேட்டர் என அரசு மருத்துவமனை அருகில் தொடங்கப்பட்ட பாம்பே தியேட்டர் தற்போது இயங்கவில்லை.

மாலைமுரசு பேப்பரில் இன்றைய சினிமாவில் நெல்லை தியேட்டர்களுக்கு அடுத்து நாலு தியேட்டர் பெயர்கள் இருக்கும். பாளையங்கோட்டை செந்தில்வேல் மற்றும் அசோக், பேட்டை மீனாட்சி, மேலப்பாளையம் அலங்கார். இந்த தியேட்டர்கள் ஓடிய பழைய படங்களை திரையிடுபவை. அன்றைய தேதியில் நன்றாகவே இயங்கியவை. தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்ட அலங்கார் மற்றும் செந்தில்வேல் தியேட்டர்கள் இயங்குகின்றன.

நெல்லைகாரர்கள் நல்ல படங்களை தவறவிடுவதில்லை. டப்பிங் படமான 'இது தாண்டா போலீஸ்' நெல்லையில் சிறப்பாக ஓடியது.

ஊர்களில் டிவி உள்ளோர் வீடுகளில், பஞ்சாயத்து டிவிகளில் கரண்ட் போய்விடக்கூடாது என்ற வேண்டுதலோடு வெறித்தனமாக பார்ப்பார்கள் ஞாயிறு திரைப்படங்களை. லேட்டாக வருபவர்கள் சிரிப்பு நடிகர் யாரு என்று விசாரித்து தான் உட்காருவார்கள்.

கல்யாணம் மற்றும் சடங்கு என்றால் வசதியானவர்கள் திரைகட்டி படம் போடுவார்கள். மற்றவர்கள் கலர் டிவி டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவார்கள். ஓர் இரவில் நான்கு படங்கள் என்பது தான் கணக்கு. நான்கையும் பார்த்துவிட்டு மறுநாள் சளைக்காமல் பீடி மடக்கும் தாய்மார்கள் ஏராளம்.

கால மாற்றத்தில் கேடிவியில் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் பார்த்தார்கள். இன்றும் யூடியூப்ல் படம் பார்க்கும் மூத்த தலைமுறையினர் ஏராளம். 

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் டிவி வைக்கப்பட்டு திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. மெய் மறந்து படம் பார்க்கும் திருடர்கள் கைவரிசையை காட்டி சென்றதால் அந்த டிவிக்கள் குறுகிய காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.

பராமரிப்பு இன்றி சென்ட்ரல் என்ற பெயர் பலகையே மங்கி உருக்குலைந்து போய் இருக்கும் சென்ட்ரல் தியேட்டர் சொல்லும் உண்மை, திருநெல்வேலிகாரர்களின் வாழ்வியல் முறை மாறிவிட்டது ஆனால் சினிமா ரசனை மாறவில்லை என்பதை.

Monday 15 January 2024

கோரை நாவல் பற்றி

நடுநாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி நான் எப்போதும் எழுதுவேன் என்கிறார் கண்மணி குணசேகரன். இவரின் அஞ்சலை நாவல் வாசித்த பின், வேறு நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பே.

உத்தண்டி, பூரணி இந்த தம்பதியர் நிலம் வாங்கி படும்பாடு தான் நாவல். அந்த எளிய மக்களின் வாழ்க்கையை கோரை எனும் புல்வகை என்ன பாடுபடுத்துகிறது என்று எழுதியுள்ளார்.

அவர்களின் வாழ்வியலில் இணைந்துவிட்ட பேருந்து தடம் எண் 33, முந்திரி காடு வெட்டுதல், பன்றிக்கறி, நிலம் வாங்கிவிட்ட வயித்தெயிரிச்சலில் இருக்கும் ஊர்காரர்கள் என ஒரு கிராமத்து அனுபவம்.

விவசாய அனுபவம் இல்லாதவன் விவசாயம் செய்ய முனைந்தால் என்னவாகும், விவசாய நிலம் இருந்தாலும் சொந்தமாக பம்ப் செட், கிணறு இல்லை என்றால் என்னாகும் என்பதை அனுபவபூர்வமாக எழுதியுள்ளார் கண்மணி குணசேகரன்.

ஒரு திரைப்படம் பார்ப்பது போல காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறது இவரது எழுத்து. அதே சமயம் வட்டார சொல் வழக்கில் எழுதியுள்ளார். மல்லாட்டை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வாசிக்க சிரமமாக இருக்கும்.

முன்னுரை எதுவும் இல்லாமல் அட்டை - அட்டை நாவலே நிறைந்துள்ளது. எழுத்தாளரின் ஊரான மணக்கொல்லை தான் கதைக்களம். கண்ணில் பட்டதை மண்வாசத்தோடு படைத்துள்ளார் கண்மணி குணசேகரன்.

Friday 12 January 2024

நிவாரணம்

பேரனை வரிசையில்
நிறுத்திவிட்டு அங்கும்
இங்குமாக அலைந்து
வியாபாரத்தை பார்த்துக்கொண்டார்
மளிகை கடைக்காரர் !

சேலை மாற்றிவிட்டு
வந்தால் பின்தங்கி விடுவோம்
என நைட்டியில் வந்திருந்தார் மண்டபத்துக்காரர் மனைவி !

காலை மாத்திரை போடாததால்
தலை சுற்றி தரையில்
உட்கார்ந்து கொண்டார்
ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவி !

சித்தப்பாவிற்கு சீக்கிரம்
கிடைக்க சரிபார்ப்புகளை
துரிதப்படுத்தினார்
கவுன்சிலர் !

போட்டோ எடுக்க பொக்கைவாய்
கிழவிகளைத் தேடிக்
கொண்டிருந்தது
தகவல் தொழில்நுட்ப அணி !

நிவாரணத்தால் நிமிர்ந்தோம்
என ஆரம்பித்து எதுகை மோனைகளை
சரிபார்த்து கொண்டிருந்தது
இணைய அணி !

யாருக்கு தேவை என்ற
தரவு அரசிடம் இல்லை
யாருக்கு தந்தால் பலன்
என்ற முழுத்தரவு இருக்கிறது !

நேரில் வந்து உதவியவர்களுக்கு
இருகரம் கூப்பியதை தவிர
வேறொன்றும் செய்யமுடியவில்லை
ஏழை குடியானவனால் !

வடிந்து போன ஆற்றங்கரையில்
செங்கல் ஏதாவது கிடைக்குமா
என்று தேடுகிறான்
சிதிலமடைந்த வீட்டை
சரிசெய்ய !!!