Thursday 31 August 2023

கிரிக்கெட் 12 - சார்லஸ் கண்வண்ட்ரி

பிக் பன் கிரிக்கெட் கார்டு சமயத்தில் சையது அன்வர் என்றாலே அதிக பட்ச ரன் 194 என்று காட்டும். 1997ல் அன்வர் வைத்த சாதனையை 12 ஆண்டுகளாக எந்த ஜாம்பவான்களும் முறியடிக்கவில்லை. 



2009ல் அந்த சாதனையை முறியடித்தவர் ஜிம்பாப்வே நாட்டை சார்ந்த சார்லஸ் கண்வண்ட்ரி. இவரும் 194 ரன்கள் தான் அடித்தார், ஆனால் அவுட் ஆகவில்லை. 2 வது ஓவரில் களமிறங்கி 50வது ஓவர் வரை களத்தில் நின்றார். அவருக்கு ரன்னர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

44வது முடிவில் 140 ரன்கள் அடித்து இருந்தார்.45 மற்றும் 46 வது ஓவரில் தலா 16 ரன்கள் அடித்தார். 47 வது அதிகபட்ச ரன் அடித்த ஜிம்பாப்வே வீரர் ஆனார். 49வது ஓவர் முடிவில் 191 ரன்கள் அடித்திருந்தார்.

50வது முதல் பந்தில் ஒரு ரன் அடித்து நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் போனார். 2வது பந்தில் விக்கெட், மூன்றாவது பந்தில் கேப்டன் உட்சேயா பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன் அடித்தார். முட்டு கட்டை சொந்த கேப்டன் மூலமாக வந்தது. 5 வது பந்தில் உட்சேயா சிங்கிள் எடுக்க கடைசி பந்துக்கு ஸ்ட்ரைக் வந்தார். பங்களாதேஷ் கீப்பர் ஸ்டம்புக்கு அருகில் வந்தார். 
கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தார், அவுட் ஆகாதததால் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் முதலிடம் வந்தார்.

அன்றைய போட்டி முடிவில் அவர் வசம் மூன்று உலக சாதனை இருந்தது.
1. ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். [அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சச்சின் 200 ரன் அடித்த இந்த சாதனையை முறித்தார். தற்போது ரோகித் சர்மா வசம் உள்ளது].
2. முதல் (கன்னி) சதத்தில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். [தற்போது இஷான் கிஷான் 210 ரன்கள் அடித்து முறியடித்து விட்டார்].
3. தோல்வியுற்ற போட்டியில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். இந்த சாதனை தற்போது இவர் வசமே உள்ளது. ஆம் அந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி தோற்றுவிட்டது.

கண்வண்ட்ரியின் தந்தை கிரிக்கெட்டில் அம்பயர். கண்வண்ட்ரி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். பகுதி நேர விக்கெட் கீப்பர். கண்ணாடி அணிந்து ஆடும் வீரர். பெரிதாக கிரிக்கெட் கேரியர் கிடையாது என்றாலும் நினைவில் நிற்கும் வீரர்.


Tuesday 29 August 2023

கிரிக்கெட் 11 - டேனிஷ் கனேரியா

டேனிஷ் கனேரியா

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற இந்து மதத்தை சார்ந்த இரண்டாவது வீரர். முதல் வீரர் இவரின் சொந்தகாரரான அனில் தால்பட்.

சக்லைன் முஸ்டக்கிற்கு பிறகு பாகிஸ்தான் அணியில் நிரந்தர சுழல்பந்து வீச்சாளர்களே இல்லை. அப்ரிடியோடு வேறு சில பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீசினார்கள்.

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வீரர்களில் இஸ்லாமியர் அல்லாத ஏழாவது வீரர். பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சில் எப்போதும் பலமாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம்.

2000ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆறடி உயரமான கனேரியா. 2010 வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சாகித் அப்ரிடி இருந்ததால் ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பையும் தக்கவைக்கவில்லை. 18 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 4 முறை ஆட்டநாயகன் விருது பெற்று உள்ளார். பங்களாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒருமுறை. இதில் இலங்கை எதிராக 2004ல் கையில் ரத்தம் வடிந்த போதும் 60 ஓவர்கள் பந்துவீசி 7விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் படுமோசம் கனேரியா. தொடர்ந்து 4 இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனவர் என்ற பெருமை அவர் வசம் உள்ளது.

குஜராத்தியான கனேரியாவின் முழுப்பெயர் டேனிஷ் பிரபாசங்கர் கனேரியா.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானிய ஸ்பின்னரான கனேரியா, தனது உயரத்தால் அதிக பவுண்ஸ் வீச கூடியவர். கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

கனேரியா கிரிக்கெட்டில் சாதித்த இன்னொரு விசயம், சூதாட்டம். சூதாட்டத்தில் சிக்கியதால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (கவுண்டியில் ஆடியவர்) ஆயுள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


Sunday 27 August 2023

சூடு சிறுகதை தொகுப்பு பற்றி

டுவிட்டர் அறிமுகத்துக்கு பிறகு நான், எழுத்தாளர் நர்சிம்மின் எழுத்துக்கு அடிமையாகி விட்டேன். அவர் எழுத்துக்களின் வனப்பு அப்படி.

மதுரை கதைகளில் பிடிகயிறையும், லாடம் கட்டுதலையும் விவரித்தவர், சூடு கதையில், சூடடித்தல் பற்றி விவரித்துள்ளார். சூடடித்தல் என்றதும் முதலில் ஞாபகம் வந்தது சூடடித்து குளித்து, குடித்துவிட்டு வரும் சேது மாமா தான். 

மீட்சி கதையில் வரும் குரங்கு கூட்டமும், அச்சு கதையில் வரும் வட இந்திய கூட்டமும் நர்சிம் ஸ்பெஷல்.

அத்தை, அப்பா, அம்மா, தாத்தா, மகன், மகள் என குடும்ப உறவுகளை பின்பற்றியே கதைகள். புத்தகத்தில் வைத்திருக்கும் புது ரூபாய் நோட்டுகளாக காதல்.

கதையில் துவக்கத்தில் ஒரு முடிச்சிட்டு கடைசியில் அவிழ்த்து விடுகிறார். நெல்லிக்காய் சாப்பிட்டு முடித்தபின் வாய்க்குள் வரும் இனிப்பு போல இருக்கிறது.

கல் கதையின் முடிவில் வாசகர் வசம் ஒப்படைக்கிறார். நீங்கள் உங்கள் புரிதலை புகுத்தி கொள்ளுங்கள் என.

யதார்த்தம், மதுரை, மண்மணம் நர்சிம்மின் சிறப்புகள். இன்றைய தலைமுறையும் விருப்பத்தோடு வாசிக்க ஏதுவான கதைகளின் தொகுப்பு "சூடு".


Thursday 24 August 2023

இந்தியன் டிரைவிங் ஸ்கூல்

2023ம் ஆண்டின் சபதமாக கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

நாட்கள் நகர்ந்து ஊருக்கு வந்து, ஆகஸ்ட் வந்துவிட்டது. திருநெல்வேலியில் டிரைவிங் ஸ்கூல்களை விசாரித்தேன். நான் விசாரித்த ரெண்டாவது டிரைவிங் ஸ்கூல் இந்தியன் டிரைவிங் ஸ்கூல். அலைபேசியில் பேசியவர் நாங்கள் கற்றுக் கொடுப்பது ஆயுசுக்கும் மறக்காது என்றார். அந்த வார்த்தையே தன்னம்பிக்கை அளித்தது.

வீடியோக்களை (இந்தியன் டிரைவிங் ஸ்கூல் யூடியூப் சேனல்- https://youtube.com/@Indiandrivingschooltvl?si=9yVNNXkuox8i832d) பார்த்து விட்டு வந்தால் தான் எளிதாக இருக்கும் என்றார்.

வீடியோ பார்த்துவிட்டு வகுப்பில் சேர்ந்தேன். தினமும் என்னென்ன பயிற்சி, அதற்கான இடங்களை தெளிவாக தேர்வு செய்து வைத்துள்ளார்கள். 

இந்த படிப்படியான பயிற்சி பதட்டமில்லாமல் எளிதாக வாகனம் இயக்க உதவி செய்கிறது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றி ஒரு சிறிய விளக்கம் அளித்த பின் தான் பயிற்சிக்குள் அழைப்பார்கள். 




நிறைய வீடியோக்கள் யூடியூப் சேனலில் உள்ளது பலரும் பயனடையலாம்.

புதிதாக கார் ஓட்ட வருபவர்கள் செய்யும் தவறுகளின் அடிப்படையில் சில விதிமுறைகள்/பயிற்சி முறைகள் வைத்துள்ளார்கள். ஸ்டிரிங்கை கடிகாரத்தோடு இணைத்து சொல்லப்படும் முறை, ஸ்டிரிங் லாவகத்தை எளிதாக்குகிறது. இது போல் எல்லாவற்றையும் பாடத்திட்டம் போல் செய்து வைத்துள்ளார்கள்.

நானும் கார் ஓட்ட கற்று கொண்டேன். இந்தியன் டிரைவிங் ஸ்கூல் திரு. லட்சுமணன் அவர்களுக்கும் மற்றும் அவரது மகன் திரு. சூர்யா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

Saturday 5 August 2023

குட்டி மாமா

குட்டி மாமா எங்கள் ஊரில் பலருக்கும் மாமா தான். பஸ் ஸ்டாண்டில் சட்டை இல்லாமல் உட்கார்ந்து இருப்பார். அவர் சட்டை அணிவதே கோவில் கொடைகளுக்கு மட்டுமே. அதுவும் மஞ்சள் நிற சட்டையை அணிந்து கைகளை மடித்து விட்டு வாடாமல்லி கலர் சால்வையை தோளில் போட்டு தான் வருவார்.

நிறைய கதை சொல்வார். தெனாலிராமன் கதைகளை மாற்றி கச்சிதமாக சொல்வார். நிறைய விடுகதைகள் சொல்வார்.

ஊரில் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் இருப்பார். பெரிதாக எந்த வேலையையும் செய்யவிட்டாலும் அவரது குரல் மட்டும் கேட்டு கொண்டே இருக்கும். 

எங்கள் ஊர் சிறிய கிராமம் என்பதால் கல்யாணம், சடங்கு போன்ற விசேஷங்களுக்கு முந்தைய நாள் இரவில் ஊரே சேர்ந்து காய்கறி வெட்டுவது தேங்காய் துருவுவது என வேலை பார்க்கும். குட்டி மாமா முட்டைகோஸ் அரிவாளால் கொத்துவார்.  மற்றவர்கள் முழு கோஸை வெட்டி முடிக்கும் போது முக்கால் கோஸ் தான் வெட்டி இருப்பார். பெரிசுகள் குட்டிகிட்ட சத்தம் மட்டும் தான், வேலை நடக்கல என்பார்கள்.

அதே விசேச நாளின் இரவில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவார்கள். டிவிகாரோடு சேர்ந்தே சுற்றுவார் மாமா, ஆனால் முதல் படம் முடிவதற்குள் தூங்கிவிடுவார். முழிப்பு வரும் போது எழுந்து மண்ண தட்டிக்கொண்டே படம் சரியில்லடே என்று வீட்டிற்கு செல்வார்.

அவரிடம் கதை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருவன். குட்டி மாமாவுக்கு ஒரே மகன். அவனுக்கு நிறைய கதை சொல்வார் என்று வயித்தெறிச்சல் எங்களுக்கு உண்டு. அவர் மகன் கிருஷ்ண மூர்த்தி எங்களை விட இளையவன்.

மாமா தினமும் டீக்கடையில் செய்திதாள் படித்து விடுவார். அதுமட்டுமில்லாமல் எங்களையும் வித்தியாசமான பேர்களில் யாசிர் அரபாத், சதாம் உசேன், இடி அமீன் என்றெல்லாம் கூப்பிடுவார்.

எங்கள் ஊரில் கணேஷ் (புகையிலை) அறிமுகமான போது சிறுவர்கள் பலரும் பழகி விட்டனர். குட்டி மாமா தான் அதை எதிர்த்தவர். ஊர் கூட்டத்தில் கடைக்காரர்கள் யாரும் சிறுவர்களுக்கு விற்கக்கூடாது என்று ஆணித்தரமாக பேசினார்.

கடைக்காரர்கள் வேறு வழியில் சிந்தித்தனர். வலையில் வீழ்ந்தது கிருஷ்ண மூர்த்தி. கிருஷ்ண மூர்த்தி தான் கடையில் கணேஷ் வாங்கி குறிப்பிட்ட இடத்தில் கல்லுக்கு அடியில், சுவர் விரிசலில், மர பிளவுகளில் என்று வைத்து விடுவான். அதற்கான நெட்வொர்க்கில் தேவைப்படுவோர் அந்த இடங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தி கொண்டனர். கிருஷ்ண மூர்த்தியும் பயன்படுத்த தொடங்கினான்.

மாமா ஒருநாள், ஏ, சதாமுசேன் நீயும் அந்த கூட்டத்தில் உண்டு தான மாப்பிள்ளை என்றார். அன்று தான் மாமாவின் முகத்தில் பதட்டம் தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியை பெல்டால் அடி பின்னி எடுத்து விட்டார்.

மாமாவிடம் கதை கேட்கும் கூட்டம் சுருங்கி போனது. மாமாவும் என் கதையே மோசமா போய்கிட்டு இருக்கு என்று கதை சொல்ல மறுத்தார். ஆனாலும் எங்கள் திருப்திக்காக சொன்னார்.

கிருஷ்ண மூர்த்தி, மாமாவிடம் பேசுவதில்லை. சிகரெட் பிடிக்க தொடங்கி இருந்தான். நானும் இன்னும் சில நண்பர்களும் அவனுக்கு அட்வைஸ் பண்ணிணோம். அவன் அதை காதிலே வாங்கி கொள்ளவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று எங்கள் ஊரில் இருந்து நாலு சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் அதில் ஒருவன். உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் மாமா சொன்னார், அவன் என் புள்ளையே இல்லைடே, நானும் அத்தையும் செத்து போன நீங்க யாராச்சும் கொள்ளி வச்சிருங்கடே என்றார். நாங்கள் மாமாவை திட்டி விட்டு நகர்ந்தோம்.

இரண்டு சிறுவர்கள் திருப்பூரில் இருந்து திரும்பி விட, கிருஷ்ண மூர்த்தியும் இன்னொருவனும் பாம்பே சென்றிருப்பதாக தெரிந்தது.

காலம் உருண்டோடியது. கதை கேட்ட எங்களுக்கு வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டோம். ஊருக்கு போனால் மாமாவை பார்க்காமல் வருவதில்லை. மாமா அதிக நேரம் பஸ் ஸ்டாண்டில் தான் இருப்பார்.

அவனே பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சிதாடே கபில் சிபல் என்றார். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. 

அத்தை இறந்துவிட அதற்கும் கிருஷ்ண மூர்த்தி வரவில்லை. மாமா காலையில் ஹோட்டலில் சாப்பிடுவதாகவும், மதியம் சாப்பிடுவதில்லை, இரவில் யாராவது வீடு தேடி வந்து சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவதாகவும் கேள்விப்பட்டேன்.

நான் ஊருக்கு போன நேரத்தில் எனக்கு ஒரு போன் வந்தது. கிருஷ்ண மூர்த்தி தான் பேசினான், யாருக்கும் தெரியாமல் பெரியாஸ்பத்திரி வா மச்சான் என்றான்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். மச்சான் எனக்கு எய்ட்ஸ் வந்துட்டு என்றான், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இன்னும் வாரமோ, ஒரு மாசமோ தான் மச்சான். எங்க அப்பாவுக்கு தெரிய வேண்டாம், எங்க அப்பாவ நல்லா படியா பார்த்துக்கோங்க. என்ன அனாதை பொனமா விட்டாராதீங்க என்றான்.

எனது முகவரியை ஆஸ்பத்திரி பதிவேட்டில் சேர்த்து இருந்தனர். பதினேழாம் நாள் கிருஷ்ண மூர்த்தி இறந்துவிட்டதாக தகவல் வந்தது. நானும் சில நண்பர்களும் சேர்ந்து பெரியாஸ்பத்திரி பக்கத்தில் இருந்த சுடுகாட்டில் எரியூட்டினோம்.

மாமா பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறார். அவருக்கு கொள்ளி போட வருவான் என்று.


Friday 4 August 2023

04-08-2003

இருபது ஆண்டுகளுக்கு முன்
பழைய புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
போல உள்ளது.
கல்லூரியின் முதல்நாள்
நினைவு !

முதல் தலைமுறை
பட்டப்படிப்பு
தமிழ் வழி கல்வியில்
பயின்று பொறியியல்
கல்லூரியில்,
பயமும் பதட்டமுமான
முதல்நாள் !

ஐந்தாம் வகுப்பிற்கு
பிறகு இருபாலர்
வகுப்பு
தயக்கமும் சந்தோசமுமான
மனநிலை !

மலையடிவாரத்தில்
இயற்கையும் வனப்பும்
மிக்க கல்லூரி !
விடுதியில் இருந்து 
கல்லூரிக்கு
அழைத்து செல்ல
சிறப்பு காவலர்கள் !

இயந்திர பொறியியல்
துறைத்தலைவர்
சிறப்புரை ஆற்றிய பின்
அடுத்த ஆறு மாதத்திற்கு
ஈ செக்சன் என்றார்கள் !

பொறியியல் படிப்பு
நிறைய நட்புகள்
அழகான நாட்கள்
ஆத்மார்த்தமான அனுபவங்கள் 
ஆங்கிலத்தில் தேர்வுகள் 
எல்லாவற்றிற்கும் துவக்க
நாள் அது !!!