Tuesday 31 October 2023

மாலத்தீவு

பிஎட் முடித்து, எம்எஸ்ஸியில் சில அரியர்கள் வைத்திருந்தேன். வேலை இல்லை, தேடிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். தினமும் தோப்புக்கு சென்று குளித்து தென்னைகளை பார்த்து விட்டு வருவது அன்றாடம். வேலை இல்லாததால் வீட்டில் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. எதை செய்தாலும் திட்டு. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியவில்லை. 

சொந்தகாரர் ஒருத்தர் வந்து வேலை இருப்பதாக சொன்னார். ஹாஸ்டல் வார்டன் வேலை, நானும் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். வார்டன் வேலை, ஏதாவது கணக்கு வாத்தியார் மெடிக்கல் லீவு எடுத்தால் அங்கு வகுப்பு எடுக்க செல்ல வேண்டும். மற்றபடி பெரிய வேலை கிடையாது என நினைத்து சம்மதித்தேன்.
5000 சம்பளம். காத்திருப்பில் இருந்தால் அதே பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கும். எனக்கும் சரியென பட்டது. 

இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வார்டன் வேலை எவ்வளவு கஷ்டம் என்று. ஊரில் ஏதாவது பிரச்சினை கைமீறிப் போனால் கெட்டவார்த்தை பேசி எந்த பிரச்சனையும் சமாளித்துவிடுவேன்.

ஆனால் மாணவர்களை என்னால் மேய்க்கவே முடியவில்லை. கிள்ளிட்டான், அடிச்சிட்டான் என்று சிலர். சார் அவன் சேட்டை பண்றான் என்று சிலர். வீட்டுக்கு போறேன் என்று அழும் சிலர்.

சமையல் பணியாளர்களை பற்றி சொல்லவே வேண்டாம், நான் சொல்வது எதையும் கேட்கவே மாட்டார்கள். குளிச்சிட்டு வேலை பாருங்க என்று சொன்னால் ஈரம் சொட்ட சொட்ட நின்று பரிமாறுவான்.

பள்ளியோடு இணைந்த விடுதி என்பதால் இரவு 9.30 வரை ஸ்டடி, அதற்கு பிறகு ப்ரையர், ப்ரையர் முடிச்சு தூங்க வேண்டும். சின்ன பையன்களுக்கு சீக்கிரமே தூக்கம் வரும். காலையில் 5 மணிக்கே எழுந்து குளிக்க வேண்டும். 5-6 தான் குளியல் நேரம்.

5 மணிக்கு பெல் அடித்துவிட்டு எல்லாரையும் எழுப்பி விட்டு நானும் குளித்து 6 மணி ப்ரேயருக்கு தயாராகி விடுவேன்‌. கிணற்றில் குளித்து பழகிய எனக்கு பாத்ரூம் குளியலில் திருப்தி இல்லை. ஆனால் ப்ரேயர் மனதிற்கு அமைதி தரும், புதிய நாளை துவக்க உந்துதல் தரும். மாணவர்களுக்கும் அதுபோல இருக்கும் என நம்பினேன்.

விடுதியில் மாபெரும் பிரச்சினை கழிவறை தான். போதுமான கழிவறை கிடையாது. நிறைய மாணவர்களுக்கு பயன்படுத்த தெரியாது. நான் தலைமை ஆசிரியரிடம் திரும்ப திரும்ப சொன்னதால் புதிதாக 5 கழிவறை கட்ட வேலை ஆரம்பித்துவிட்டது.

அடுத்த பிரச்சினை, மாணவர்களிடம் ஓரின சேர்க்கை. சின்ன பையன்கள் பலிகடா ஆவது பெரும் பிரச்சினை. அடுத்த பிரச்சினை சிரங்கு, யாருக்கு சிரங்கு பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விடுவேன். விடுதி மாணவர்களுக்கு குறைந்த கட்டண மருத்துவமனை அருகில் உள்ளது.

மாணவர்களின் உடல் மொழி ஓரளவு புரிந்து ஓராண்டை ஓட்டி விட்டேன். மே மாத பாதியிலே அட்மிஷன் துவங்கும் என்பதால் மே பாதி வரை மட்டுமே லீவு.

மே மாத கடைசியில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பேரன்கள் இருவரை விடுதியில் சேர்க்க வந்தார். மூத்தவன் 5ம் வகுப்பு, சின்னவன் 3ம் வகுப்பு. எங்கள் பள்ளியோடு இணைந்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து விட்டாராம். 

விடுதியில் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே சேர்ப்போம், இவர்கள் சிறுவர்கள் என்றேன். தலைமை ஆசிரியரிடம் பேசி அனுமதி பெற்று விட்டதாக கூறினார் பெரிசு. ஹெட் மாஸ்டர் ஒரு கிறுக்கு **, என்று மனதில் தோன்றியது. வெளியில் வார்த்தைகளை கொட்டிவிடவில்லை.

பேப்பர் வெயிட்டை கையில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் சின்னவன். இவங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்க என்றேன். அவங்க ரெண்டு பேரும் டீச்சர்ஸ் மாலத்தீவுல இருக்காங்க. அங்க இருந்தா நல்லா சம்பாதிக்க முடியும்.

என்னோட மகன் வழி பேரன்கள் என்றார். சொத்து பிரச்சினை கோர்ட்டில் நடைபெறுகிறது, நான் விவசாயத்தை பார்த்து கொண்டு இவர்களை பார்த்து கொள்வது சிரமம். அதனால் தான் விடுதியில் விடுகிறேன் என்றார்.

எனது இருக்கை எதிரே இருந்த சுவரில், சிலுவையில் அறையப்பட்ட இயேசு சாந்தமான முகத்தோடு இருந்தார்.

நான் எதிர்பார்த்தது போல் அவர்கள் இருவரும் அதிகம் அழவில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தாத்தா வந்து பார்த்து போவார். வாரம் ஒருமுறை அப்பாவும் அம்மாவும் போனில் பேசுவார்கள். அம்மா பேசி முடித்ததும் சிறுவர்கள் கலங்கிவிடுவார்கள்.

குளியலறை தொட்டி அவர்களுக்கு எட்டுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் பெரிய பையன்கள் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். புதன்கிழமை மாலை ஒரு மணி நேரமும், ஞாயிறு மாலை 3 மணி நேரமும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்று வர அனுமதி உண்டு.

ஆனால் இவர்கள் இருவரும் வெளியே சொல்வதில்லை. நான் எனது சைக்கிளில் இருவரையும் வெளியே அழைத்து சென்றேன்.
ஸ்டேஷனரி கடையில் ஏதோ வாங்கினர். டீ குடிக்க சரி என்றனர். டீக்கடையில் டீ வாங்கி தந்த பிறகு தான் அவர்களுக்கு சூடான டீ கிளாஸை பிடிக்க தெரியாது என்பதை உணர்ந்தேன்.

அவர்களுக்கு துவைக்க தெரியவில்லை, மற்றவர்கள் சட்டையை விட மங்கலாகதான் அவர்கள் ஆடை இருக்கும். அவர்கள் மட்டும் தனி பள்ளியில் படித்ததால் பெரிய அளவில் மற்ற மாணவர்களோட ஒட்ட முடியவில்லை. வயது வித்தியாசமும் கூட.

காலாண்டு விடுமுறைக்கு வந்த தாத்தா, அவர்களை இங்கேயே தங்க வைக்க முடியுமா என்று கேட்டார். விடுதியை மூடிவிடுவோம் யாரும் இருக்க மாட்டோம் என்றேன். ஒரு வழியாக கூட்டி சென்றார்.

பத்து மாதங்கள் கடந்துவிட்டது. சிறுவர்கள் உற்சாகமாக இருந்தனர். அப்பா வருவதாகவும்,  வந்து அவர்களை மாலத்தீவுக்கு கூட்டி செல்வதாகவும் சொன்னார்கள்.

தேர்வுகள் முடித்த தினத்தில் அவர்களின் அப்பா வந்திருந்தார். அவரையும் சிறுவர்களையும் அழைத்து கொண்டு மைதானத்துக்கு சென்றேன். 

ஏன் சார், பசங்கள இங்க விட்டுட்டு மாலத்தீவுல போய் இருக்கீங்க என்றேன். 

அவங்க நல்லா இருக்கனுமங்கிறதுக்காக தான் அங்க நல்ல சம்பளம். ஒரு 5 வருசம் இருந்து சம்பாதிச்சுட்டு இங்க வரலாம்னு. நாளைக்கு அவங்க ஹையர் ஸ்டடிஸ்க்கு பணம் வேணுமே. இங்க இருந்தா சம்பளம் கைக்கும் வாய்க்கும் தான் சரியா வரும் என்றார்.

சார் நானும் பிஎட் முடிச்சு இருக்கேன், என் சம்பளம் 5000 ரூபாய். எங்க அப்பா சொத்து, வாழை தோட்டமும், தென்னந்தோப்பும் இருக்கு. அதை ஒழுங்கா பார்த்தா இதைவிட வருமானம் ஜாஸ்தி. எங்க அப்பா, என்ன சொந்த கால்ல நிற்க சொல்லி அனுப்பினார். எப்போ கஷ்டம்னாலும் வந்துடுனு சொன்னார். எனக்கு முதல்ல இந்த சின்ன பசங்கள மேய்கிறது கஷ்டமா இருந்துச்சு.

இப்போ இவனுக படுற கஷ்டத்த விடவா நம்ம கஷ்டம்னு தோணுது என்றேன்.

கீழ்வானத்தை பாரத்து கொண்டு நின்றார்.

நீங்க வேலை முடிச்சு வீட்டுக்கு போய் டீ குடிக்கும் போது, நம்ம பசங்க டீ டம்ளர் சூட்ட எப்படி தாங்கி டீ குடிப்பாங்கனு யோசிச்சு இருக்கீங்களா?

மூணு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு போகும் எல்லா பசங்களும் சந்தோசமா இருப்பாங்க, உங்க பசங்கள தவிர. ஏன்னா அவனுக இங்க இருந்து கிளம்பி வேற ஒரு ஹாஸ்டலுக்கு போறாங்க.

இங்க இருக்கிறதுல சின்ன பசங்க அவங்க ரெண்டு பேர் தான். எத்தனையோ வருசத்துக்கு பிறகு சந்தோசமா இருக்க இப்போ கஷ்டப்படுத்தறது நியாயம் இல்லை சார். பணம் தேவை தான் பணத்தை தாண்டி சந்தோசம் வேணும் சார். 

தாத்தா வந்துட்டு போன சில நாட்களுக்கு மட்டும் உங்க பசங்க கூடவே சில பசங்க இருப்பாங்க, அப்புறம் இருக்க மாட்டாங்க. திண்பண்டம் தீர்ந்து போகிற வரைக்கும் தான் அந்த பாசம்.

3ம் வகுப்பு படிக்கிற பையன 5 மணிக்கு எழுப்புறது எனக்கே கஷ்டமா தான் இருக்கும். ஆனா இங்க ரூல் அப்படி.

தலை குனிந்து நின்றாள் மாலத்தீவுகாரர்.

விடுதிக்கு வந்து பெட்டிகளை எடுத்து செல்லும் போது சின்னவனிடம் சொன்னார், நாம மாலத்தீவு போகல, அப்பா மட்டும் போய் அம்மாவ கூட்டிட்டு வந்துடுறேன். நாம ஊர்லயே இருக்க போறோம் என்றார்.

மே மாத கடைசியில் விடுதிக்கு வந்தேன். மீண்டும் அந்த சிறுவர்கள் விடுதிக்கு வரவில்லை. எனக்கு எதிரே இருந்த போட்டோவில் இயேசு உயிர்த்தெழுந்திருந்தார்.






Monday 30 October 2023

நாங்கள் கத்துத்குட்டி அல்ல

இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வென்று நாங்கள் கத்துத்குட்டி அல்ல என்று நிரூபித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்திய அணியும் தனது மூன்றாவது உலகக் கோப்பையில் இதை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை பொறுத்தவரை இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் தோற்றுள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ரன் ரேட்டுக்காக விளையாடி தோற்றது.

ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது ஆச்சரியம், ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சு தான். ஆனால் பனிப்பொழிவு தான் காரணம் என்றார் ஷாகிதி.



சென்ற போட்டியில் நன்றாக பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்திய நூர் அகமது நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணிக்கு திரும்பினார். அவர் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியது, அதிர்ஷ்ட தேவதை ஆப்கானிஸ்தான் வசம் வந்ததை காட்டியது.

முதல் பத்து ஓவர்களை முஜீப்பும், பரூக்கியும் சிறப்பாக வீசினர். பந்துவீச்சில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஒரு விக்கெட் மேல் முறையீட்டால் கிடைத்தது.

ஆனால் ஆப்கானிஸ்தான் சோர்ந்து போகாமல் தொடர்ந்து போராடி சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தியது. அதே சமயம் இலங்கை வீரர்கள் அடித்து ஆடி ரன்கள் குவிக்க முயற்சி செய்யவில்லை. சீனியர் வீரர் மாத்யூஸ் கூட சிங்கிள் எடுப்பதில் தான் கவனம் செலுத்தினார்.

இரண்டாவது ஓவரில் இக்ரம் அலிஹில் கையில் காயம் ஏற்பட, குர்பாஸ் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றார்.

ஷாகிதி பந்து வீச்சாளர்களை திறம்பட மாற்றி இலங்கை ரன் குவிக்க விடாமல் கட்டுக்குள் வைத்தார். நவீன், நபி பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. மற்றவர்கள் சமாளித்தனர்.

100வது போட்டியில் விளையாடிய ரஷீத் கான் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஒரு கேட்ச் பிடித்தார். இப்ராஹிம் டைரக்ட் ஹிட்டும் குறிப்பிடத்தக்கது.

242 என்ற இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானின் பேட்டிங் முதுகெலும்பு குர்பாஸ் முதல் ஓவரில் மிடில் ஸ்டம்பை தவறவிட்டார். ஆனால் ஆப்கானிஸ்தான் கலங்கவில்லை, நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தனர் இப்ராஹிம் - ரஹ்மத் ஷா.

மீண்டும் பந்து வீச வந்த மதுசங்க, இப்ராஹிம் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் களத்திற்கு வந்தார். ரஹ்மத் ஷா - ஷாகிதி, வலது கை - இடதுகை பார்ட்னர்ஷிப் கொடுக்க இலங்கைக்கு தலைவலி ஆரம்பித்தது. இலங்கை போல பந்துகளை வீணடிக்காமல் முன்னேறினர். 

சதீரா , ரஹ்மத் ஷா கேட்சை விட சேதாரம் இல்லாமல் அடுத்த பந்தில் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கியவர் ஓமர்சாய். உலகக் கோப்பை அணியில் குல்பதீன் நயீப்க்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டவர். குல்பதீன் நயீப் யார் என்றால் 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்.

ஆசியக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். ஆசிய விளையாட்டு போட்டியில் கேப்டனாக இருந்து அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றவர்.

நேற்று ஓமர்சாய் ஆடிய ஆட்டம், அவரது தேர்வு குறித்து இருந்த கருத்து வேறுபாடுகளுக்கு பதில் கூறியது போல இருந்தது. ஆட்டம் தொய்வடைந்த நேரத்தில் சிக்ஸ் அடித்து நிமிர்த்தியவர். உலகக் கோப்பை போட்டிகளில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார்.

நேற்றைய போட்டியில் ஆப்கானித்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இருந்த வித்தியாசம். இலங்கை அணி ரன் குவிப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை, பார்ட்னர்ஷிப் எதுவும் சரியாக அமையவில்லை. இலங்கை அணி முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி களம் இறங்கி இருந்தது. விக்கெட் வீழ்த்த ஸ்பின்னர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் அணி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தியது இக்ரம் காயமோ, குர்பாஸ் டக் அவுட்டோ அணியை பாதிக்கவில்லை.

இலங்கை அணி 19 போர்கள் 2 சிக்ஸர்கள் 
ஆப்கானிஸ்தான் அணி 19 போர்கள் 5 சிக்ஸர்கள்.

Saturday 28 October 2023

2023 உலகக் கோப்பை அணிகள்

ஆப்கானிஸ்தான்

சுழற்பந்து தான் எங்கள்

சூத்திரம் என்று

சொல்லியே வந்தார்கள் !

ஆடுகளம் பற்றிய 

அறிந்துகொள்ள ஆலோசகரை

நியமித்தனர் !!

பேட்டிங்கும் நிமிர்ந்து கொள்ள

இதுவரை இரண்டு

போட்டிகளை வசமாக்கி உள்ளனர் !!!



ஆஸ்திரேலியா

உதட்டில் இரத்தத்தை பார்த்ததும்

பொங்கி எழும் வாத்தியார்

டெக்னிக்கோடு ஆரம்பித்தது

கங்காரு கூட்டம் !

வார்னரும் ஸ்டார்க்கும்

தராசின் சமநிலை காக்க

கங்காரு மீண்டும்

ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் !

பங்களாதேஷ் 

அணித்தேர்விலே ஆயிரத்தெட்டு

பஞ்சாயத்துகளை கடந்து

வந்தது பங்களாதேஷ் !

நன்றாக தொடங்கி 

வழக்கமான பாதையில்

பயணிக்கிறது வங்கம் !!!

இங்கிலாந்து

நடப்பு சாம்பியன்

நடக்கவே இயலாமல்

இருக்கிறது !

இருபது ஓவர் காய்ச்சலில்

இருந்து மீள்வதற்குள்

பாதி போட்டிகள்

முடிந்துவிட்டது !!

வெள்ளையர்கள் வெறுங்கையுடன்

திரும்புவார்கள் !!!

இந்தியா

கொம்பு சீவிய உள்ளூர்

காளை ஜல்லிக்கட்டில்

சாய்க்கிறது எதிர்படும்

ஆளை !

காளை பிடி வீரர்களும் 

காளையின் பலவீனத்தை

எதிர் நோக்கி

காத்திருக்கிறார்கள் !!

காளையின் மூர்க்கம்

வெற்றியை நோக்கி

நகர்கிறது !!!

நெதர்லாந்து

இருமுறை சாம்பியனை

வெளியேற்றிவிட்டு

உள்ளே வந்தது 

டச்சுப்படை !

தென்னாப்பிரிக்காவை

திணறவிட்டு

வங்கத்தை வறுத்ததெடுத்து

பாய்கிறது ஆரஞ்ச் ஆர்மி !!!

நியூசிலாந்து

கேப்டனே காயத்தில்

இருந்து மீளாத நிலையில்

களம் இறங்கியது

கருந்தொப்பிகள் !

ஆரம்பமே அமர்க்களமாக

தொடங்கி அட்டகாசமாக

ஆடி வருகிறது

கிவி பறவை !!!

பாகிஸ்தான்

பழகாத களத்தில்

மூன்று வேக குதிரை 

என்ற நம்பிக்கையில்

ரேஸ்க்கு தயாரானது !

ஒரு குதிரை கால் ஒடிய

மாற்று குதிரை போட்டு

ஓட்ட நினைத்தார் சாரதி !!

சாரதியின் வியூகங்கள்

சரியில்லாததால் ரேஸ்

வெல்லும் வாய்ப்பு

குறைந்துவிட்டது !!!

தென்னாப்பிரிக்கா 

ஆப்பிரிக்க கண்டத்தில்

இருந்து வந்த ஒற்றை

யானை !

ஆல்ரவுண்டர் என்ற விழுதுகள்

இல்லாத ஆலமரம் !

முதல் முறையாக அதிர்ஷ்ட

தேவதையின் பார்வையில் !!!

இலங்கை 

துவங்குவதற்கு முன்

சிலர் காயம்

தொடங்கிய பின் சிலர் காயம் 

என களத்தில் இலங்கை !

பழகிய களம்

பலத்தை காட்டினால்

அறுவடை செய்யலாம் !!!


Friday 27 October 2023

உலகக் கோப்பை - நாக்அவுட் போட்டிகள் - இந்தியா

இந்தியாவில் கிரிக்கெட் என்பது உணர்வு பூர்வமான ஒன்று. நவீன கால கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுகளால் ரசனை குறைந்து இருக்கலாம். ஆனால் 1983ல் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு இந்தியாவில் கிரிக்கெட் எல்லா தெருக்களிலும் பிரபலம். என்ன தான் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவது வழக்கம். உலகக் கோப்பையில் இந்திய அணியின் நாக் அவுட் போட்டிகள் பற்றிய பார்வை.

1. 1983 அரை இறுதி - இங்கிலாந்து

மான்செஸ்டர் - வெற்றி 

1983 உலகக் கோப்பையில் லீக் சுற்று, அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளோடு இரு முறை மோத வேண்டும் என்று இருந்தது. பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இருந்தது. இந்தியா ஜிம்பாப்வே உடன் இரு வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உடன் ஒரு வெற்றியும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து - 213

க்ரீம் ஃபவுலர் - 33

கிறிஸ் தவரே - 32

கபில்தேவ் - 3/35

இந்தியா - 217/4

யாஷ்பால் ஷர்மா - 61

சந்தீப் பாட்டீல் - 51*

இயான் போத்தம் - 1/40

ஆட்டநாயகன் - மொகந்தீர் அமர்நாத் 

2. 1983 இறுதிப் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் 

லார்ட்ஸ் - வெற்றி 

கத்துத்குட்டி அணி இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்ததால், கத்துக்குட்டியாகவே  நினைத்து விளையாடியது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இன்றைய கிரிக்கெட் 183 ஒரு வீரரே அடிக்கும் ரன். அதை வைத்து கொண்டு இந்தியா சமாளித்தது வெற்றியும் பெற்றது.



இந்தியா - 183

ஸ்ரீகாந்த் - 38

சந்தீப் பாட்டீல் - 27

ஆன்டி ராபர்ட்ஸ் - 3/32

வெஸ்ட் இண்டீஸ் - 140

விவியன் ரிச்சர்ட்ஸ் -33

டூஜான் - 25

மதன்லால் - 3/31

ஆட்டநாயகன் - மொகந்தீர் அமர்நாத் 

3. 1987 அரை இறுதி - இங்கிலாந்து

மும்பை - தோல்வி 

1983 உலகக் கோப்பை போல 1987லிலும் லீக் சுற்று, அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளோடு இரு முறை மோத வேண்டும் என்று இருந்தது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இருந்தது. இந்தியா ஜிம்பாப்வே, நியூசிலாந்து உடன் இரு வெற்றியும், ஆஸ்திரேலியா உடன் ஒரு வெற்றியும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பையை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தியது.

நாக்அவுட்டில் சேசிங் இந்திய அணியின் பலவீனம் என்று தொடங்கி வைத்த நாக் அவுட்

இங்கிலாந்து - 254/6

கிரகாம் கூச் - 115

மைக் கட்டிங் - 56

மன்னிந்தர் சிங் - 3/54

இந்தியா -219

முகமது அசாருதீன் - 64

ஸ்ரீகாந்த் - 31

ஹெம்மிங்கஸ் - 4/52

ஆட்டநாயகன் - கிரகாம் கூச்

4. 1996 காலிறுதி - பாகிஸ்தான்

பெங்களூரு - வெற்றி 

மீண்டும் உலகக் கோப்பை இந்தியாவில், முதல் பேட்டிங் பிடித்து காலிறுதியில் வென்றது இந்தியா. அமீர் சோகைல் ஹீரோயிசம் காட்ட, வெங்கடேஷ் பிரசாத் தான் லோக்கல் ஆளு என்று நிரூபித்தார்.

இந்தியா - 287/8

சித்து - 93

அஜய் ஜடேஜா - 45

முஸ்டக் அகமது - 2/56

பாகிஸ்தான் - 248/9

அமீர் சோகைல் - 55

சயீத் அன்வர் - 48

பிரசாத் - 3/45

ஆட்டநாயகன் - நவ்ஜோத் சித்து

5. 1996 அரை இறுதி - இலங்கை

கொல்கத்தா - தோல்வி

சேசிங்ல் யாரும் பெரிய அளவில் ஆடாமல் போக, ரசிகர்கள் கொத்தளிக்க ஆட்டம் கைவிடப்பட்டது. இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



இலங்கை - 251/8

டி சில்வா -66

மகானமா- 58

ஸ்ரீநாத் - 3/34

இந்தியா - 120/8

சச்சின் - 65

மஞ்சரேக்கர் - 25

ஜெயசூர்யா - 3/12

ஆட்டநாயகன் - அரவிந்த டி சில்வா 

6. 2003 அரை இறுதி - கென்யா

டர்பன் - வெற்றி 

சூப்பர் 8ல் கென்யா மற்றும் நியூசிலாந்தை கஷ்டப்பட்டு சேஸ் செய்து அரை இறுதிக்கு வந்தது. அரை இறுதியில் கென்யா தான் என்றாலும் முதல் பேட்டிங் தான் தேர்வு செய்தது.

இந்தியா - 270/4

கங்குலி - 111

சச்சின் - 83

தாமஸ் ஒடோயோ - 1/45

கென்யா - 179

ஸ்டீவ் டிக்கோலோ - 56

காலின்ஸ் ஒபுயா - 29

ஜாகீர் கான் - 3/14

ஆட்ட நாயகன் - கங்குலி 

7. 2003 இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா

ஜோகன்னஸ்பர்க் - தோல்வி 

சச்சினின் எழுச்சிக்கு பின் இந்திய அணி பேட்டிங்ல் வலுவான அணி என்று பேசப்பட்டது ஆனால் உண்மை அதுவல்ல. எவ்வளவு ரன் அடித்திருந்தாலும் இந்திய பவுலர் எதிரணியை எளிதில் சேஸ் செய்ய விடுவதில்லை நாக் அவுட்டில். பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா சேசிங்ல் சொதப்பும்.

360 என்ற கடின இலக்கை துரத்தியது இந்தியா. எப்போதும் நான் ஸ்ட்ரைக்கராக இறங்கும் சச்சின் ஸ்ட்ரைக்கராகி முதல் ஓவரில் அவுட்டாக முற்றிலும் கோணலாக்கியது‌. டாஸ் வென்று கங்குலி பீல்டிங் தேர்வு செய்தார். பிட்ச் ரிப்போர்ட் அடிப்படையில்.



ஆஸ்திரேலியா - 359/2

பாண்டிங் - 140*

மார்ட்டின் - 88*

ஹர்பஜன் - 2/49

இந்தியா - 234

சேவாக் - 82

டிராவிட் - 47

மெக்ராத் - 3/52

ஆட்டநாயகன் - ரிக்கி பாண்டிங் 

8. 2011 காலிறுதி - ஆஸ்திரேலியா

அகமதாபாத் - வெற்றி 

நாக் அவுட்டில் ஒரு சேசிங்கை எளிதாக மாற்றிய கதாநாயகன் யுவராஜ் சிங். அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்தது சிறப்பான சம்பவம். ரெய்னா - யுவராஜ் பார்ட்னெர்ஷிப் குறிப்பிடத்தக்கது 

ஆஸ்திரேலியா - 260/6

பாண்டிங் - 104

ஹாடின் - 53

யுவராஜ் - 2/44

இந்தியா - 261/5

யுவராஜ் -  57

சச்சின் - 53

டேவிட் ஹசி - 1/19

ஆட்டநாயகன் - யுவராஜ் 

9. 2011 அரை இறுதி - பாகிஸ்தான்

மொகாலி - வெற்றி 

அரை இறுதியில் பாகிஸ்தானோடு மோதியது. பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்றதில்லை என்ற அழுத்தத்தில் விளையாடியது. இந்திய பந்து வீச்சாளர்கள் 5 பேரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்தியா - 260/9

சச்சின் - 85

சேவாக் - 38

வகாப் ரியாஸ் - 5/46

பாகிஸ்தான் - 231

மிஸ்பா -56

ஹபீஸ் - 44

நெக்ரா - 2/33

ஆட்டநாயகன் - சச்சின் 

10. 2011 இறுதிப் போட்டி - இலங்கை

மும்பை - வெற்றி 

இறுதிப் போட்டியில் மீண்டும் சேஸ், சேவாக், சச்சின் சீக்கிரம் அவுட் ஆக, கம்பீர் நங்கூரத்தை போட்டார். கோலி அவுட்டானதும் களத்திற்கு வந்தார் கேப்டன் தோனி. கம்பீர் - தோனி பார்ட்னர்ஷிப் சேசிங்கை எளிதாக்கியது. யுவராஜ் இன்னும் களம் இறங்கவில்லை என்ற நிலை நல்ல தன்னம்பிக்கை கொடுத்திருக்கும்.



இலங்கை 274/6

ஜெயவர்தனே- 103*

சங்கக்காரா - 48

யுவராஜ் - 2/49

இந்தியா - 277/4

கம்பீர் - 97

தோனி - 91*

ஆட்டநாயகன் - தோனி

11. 2015 காலிறுதி - பங்களாதேஷ்

மெல்போர்ன் - வெற்றி 

லீக் போட்டி அனைத்தையும் வென்று இந்தியா காலிறுதிக்கு சென்றது. காலிறுதியில் கத்துத்குட்டி பங்களாதேஷ், ரோகித் வெற்றியை எளிதாக்கினார்.

இந்தியா - 302/6

ரோகித் - 137

ரெய்னா - 65

தஸ்கின் அகமது - 3/69

பங்களாதேஷ் - 193

நசீர் ஹோசைன் - 35

ஷபீர் ரஹ்மான் - 30

உமேஷ் - 4/31

ஆட்டநாயகன் - ரோகித் சர்மா 

12. 2015 அரை இறுதி - ஆஸ்திரேலியா

சிட்னி - தோல்வி 

மீண்டும் நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவில் வைத்து. தோனியை தவிர யாரும் அரைசதம் அடிக்கவில்லை. வழக்கமான சேசிங் அழுத்ததால் பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை. கடின இலக்கு என்றாலும் நாக் அவுட் என்ற அழுத்ததால் தான் இந்தியா கோட்டை விட்டது.



ஆஸ்திரேலியா - 328/7

ஸ்மித் - 105

பிஞ்ச் - 81

உமேஷ் யாதவ் 4/72

இந்தியா 233

எம் எஸ் தோனி - 65

தவான் -45

பல்க்னர் - 3/59

ஆட்டநாயகன் - ஸ்மித்

13. 2019 அரை இறுதி - நியூசிலாந்து

மான்செஸ்டர் - தோல்வி

குறைந்த இலக்கை சேஸ் செய்தது இந்தியா. முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலாஒரு ரன் மட்டுமே எடுத்தனர்.

தோனி கடைசி ஓவர் வரை இழுக்கும் தனது டெக்னிக்கை உபயோக படுத்தினார். ஆனால் ஐபிஎல் போல் கடைசிகட்ட ஓவர் பதான், அக்சர், சைனி போன்றோர் பந்து வீசவில்லை.



நியூசிலாந்து 239/8

ரோஸ் டெய்லர் 74

வில்லியம்சன் 67

புவனேஸ்வர் 3/43

இந்தியா 221

ரவீந்திர ஜடேஜா 77

எம் எஸ் தோனி 50

ஹென்றி 3/37

ஆட்டநாயகன் - ஹென்றி 

2023

நாக் அவுட்டில் முதல் பேட்டிங் செய்வது நல்லது. பனிப்பொழிவு பற்றி யோசிக்க தேவையில்லை. அப்படியே சேசிவ் வந்தாலும் ரோகித், கோலி கையில் ஆட்டம் இருக்க வேண்டும். ஹில், ஸ்ரேயாஸ் அனுபவமில்லாதவர்கள். பாண்ட்யா, ஜடேஜா சேசிங்கிற்கு செட்டாக மாட்டார்கள். ராகுல் யுவராஜ் போல நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

Wednesday 25 October 2023

பாகிஸ்தான் சறுக்கியது எதனால்

உலகக் கோப்பையை நன்றாக துவக்கிய பாகிஸ்தான் அணி மூன்று தொடர் தோல்விகளால் தத்தளிக்கிறது. காரணம் என்ன ?



துவக்கம் :

நெதர்லாந்து அணியுடான போட்டியில் மோசமாக தான் ஆடியது டாப் ஆர்டர், அதற்கு பின்பும் அது சரி செய்யப்படவில்லை. ஸமானுக்கு பதிலாக அப்துல்லா ஷபீக் களம் இறக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் அணியில் அடித்து ஆட கூடிய துவக்க ஆட்டக்காரர் இல்லை. ஆசியக் கோப்பையில் இப்திகாரை துவக்க ஆட்டக்காரராக இறக்கி முயற்சித்து பார்த்திருக்கலாம். அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் அவர் தான். 
ரிஸ்வானை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாம், ஆனால் பேக்அப் விக்கெட் கீப்பர் யாரும் 15 பேர் அணியில் இல்லை. பங்களாதேஷ் மிராஸை பரீட்ச்சித்தது போல சதாப்க்கு முழு சுதந்திரம் கொடுத்து டாப் ஆர்டரில் முயற்சித்து இருக்கலாம்.

வேகப்பந்து:

மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள். நசீம் ஷா காயத்தினால் விலக, அவரை போன்று வேகம் வீசக் கூடிய ஸமான் கான் அணியில் இடம் பெறவில்லை. மாறாக மித வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி இடம் பெற்றார். அவர் தான் தற்போது நன்றாக பந்து வீசுகிறார்.
ஷாகீன் அப்ரிடி ஏதோ பந்து வீசுகிறார். சுத்தமாக டெக்னிக் இல்லை. அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் என்றார்கள், அது ஆஸ்திரேலியர்களே தானாக அவுட்டாகி சென்றது குறிப்பிடத்தக்கது.(ஒரு லெக் பிபோர், மற்றவை கேட்ச்கள்). ஹரிஸ் ரப் வேகமாக பந்து வீசுகிறார் அவ்வளவு தான். ஒரு ஸ்பின்னரை குறைத்து விட்டு முகமது வாசிம்மை களம் இறக்கலாம்.


சுழற்பந்து: 

சுழற்பந்தை பொறுத்தவரை பாகிஸ்தானில் எப்போதும் ஒரு தரமான பவுலர் மற்றும் இரண்டு பகுதி நேர பவுலர்கள் இருப்பார்கள். தற்போதைய அணியில் உருப்படியான சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவே லெக் ஸ்பின்னர்களை தேர்வு செய்யவில்லை, ஆனால் பாக் அணி ரெண்டு லெக் ஸ்பின்னர்களுடன் வந்துள்ளது. இப்திகார் மட்டும் சூழலை சமாளிக்கிறார். சதாப்கான் மற்றும் நவாஸ் சூழலுக்கு தகுந்தவாறு பந்து வீசவில்லை.

பாபர்:

பாபர் ஒரு பேட்ஸ்மேனாக நெதர்லாந்து போட்டியில் திணறினார். பிறகு வந்த போட்டிகளில் 100 அல்லது அதற்கு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதுவே அணியின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். தற்போதைய கிரிக்கெட்டில் 11-40 ஓவர் அடித்து ஆடலாம் என்ற நிலையில் உள்ளது. பேட்ஸ்மேனாக பாபர் அணுகுமுறை தவறு.
கேப்டனாக செயல்பாடு, கடிவாளம் போட்ட குதிரை போல செயல்படுகிறார். ஹரிஸ் ரப்பை புது பந்தில் பந்து வீச அழைப்பதில்லை ஏனோ?
அடிக்கடி பீல்டிங்கின் போது வெளியே செல்கிறார். அவரே களத்தில் நிற்கும் போது பந்து வீச்சாளர்களிடம் பேசுவது போல் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்கோயர் லெக்கில் பீல்டிங் செய்தார். அணியின் ஒவ்வொருவரின் பணி என்ன என்பது பற்றிய புரிதல் இருப்பது போல் தெரியவில்லை.

ரிஸ்வான்:

அணியில் உருப்படியாக பேட்டிங் ஆடுவது ரிஸ்வானும் ஒருவர். இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த ஓவர் ஆக்டிங்கை குறைத்திருக்கலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட லெக் சைடில் போகும் பந்துக்கு ரிவ்யூ கேட்ட சொன்னது தவறான செயல். தனது கடமை என்ன என்பதை பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றியது. 



ஷகீல்:

அனுபவமில்லாத வீரர் என்றாலும் தனது பணியை உணர்ந்து விளையாடும் ஒரே பாகிஸ்தான் வீரர் இவர் தான். 

ஆர்தரின் பணி என்ன? தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் பாட்டு போடாததால் தோற்றது என்ற ஆராய்ச்சி எதற்காக.

இந்தியாவில் அதிகம் விளையாடிய அனுபவமிக்க வாசிம் அக்ரம், வக்கார் போன்றோரை மெண்டராக நியமித்து இருக்கலாம். வாக்கார் கவலையோடு டிவி ஷோவில் சொல்கிறார் இந்த தோல்வி டிரஸ்ஸிங் ரூம்மில் எதுவும் கலவரத்தை ஏற்படுத்திவிட கூடாது என்று.

பாகிஸ்தான் தனது பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என மொத்த குறைகளையும் மாற்றினால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு.

Monday 23 October 2023

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்

2012 முதல் ஏழு முறை விளையாடி பாகிஸ்தானை வெல்ல முடியவில்லை என்ற நிலையில் தான் களம் இறங்கியது. ஏழில் மூன்று முறை கிட்ட நெருங்கி வந்து கடைசி ஓவரில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஏற்கனவே நியூசிலாந்தின் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற ஆப்கானிஸ்தானை சேஸ் செய்ய சொன்னது டாஸ் வென்ற பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு மாற்றம், அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கிக்கு பதிலாக இளம் வீரர் நூர் அகமது. நாலு ஸ்பின்னர். குல்தீப்பை போன்ற இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது.

ஆப்கானிஸ்தான் சார்பாக முதல் ஓவரை நவீன் சிறப்பாக வீசினார். மற்றொரு முனையில் முஜீப்பும் சிறப்பாக ஆரம்பித்தார்.

பாகிஸ்தான் அடித்து ஆட ஆப்கானிஸ்தான் பவுலிங் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம். எழாவது ஓவர் நபி சிறப்பாக வீசினார். பாகிஸ்தான் முஜீப்பை விளாச ஓமர்சாயை பந்து வீச அழைத்தார். ஓமர்சாய் வீசிய 11 ஓவரில் முதல் விக்கெட். அதற்கு பிறகு முழுக்க ஸ்பின் ஆயுதம்.

ஆனால் 22 வது ஓவரில் அடுத்த விக்கெட் வீழ்த்தது, அதுவும் மேல் முறையீட்டால். அரைசதமடித்த அப்துல்லா ஷபீக் வடிவில். ஆனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அடித்து ஆட விடவில்லை. ரிஸ்வானை விரைவாக வீழ்த்தி, அடுத்த பந்தில் ஷகிலுக்கு ரிவ்யூ கேட்டு மிரட்டியது.

பாகிஸ்தான் கேப்டன் களத்தில் நின்றாலும் 250 சவாலான ஸ்கோர். அதற்கு மேல் அடிப்பதெல்லாம் நெட் ரன் ரேட்டை உயர்த்த உதவும் என்று பாகிஸ்தானை நம்ப வைத்தது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் பெரிய அதிரடி காட்டவில்லை. இப்திகார் இறங்க வேண்டிய இடத்தில் சதாப்பை இறங்கியது.

இப்திகாரின் கடைசிக் கட்ட அதிரடியில் பாக் 282 ரன் குவித்தது. வாக்கார் சொன்னார், இறுதிக்கட்ட ஓவர்களை வீச ஆப்கானிஸ்தானில் திறன்மிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று. அது உண்மை தான். கடைசி ஓவரில் நவீன் 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தது சிறப்பு.

இங்கிலாந்து எதிராக போட்டியில் பீல்டிங்கின் போது ஆப்கானிஸ்தான் வீரர்களை கோபத்தை சக வீரர்களோடு வெளிப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. நேற்றைய போட்டியில் சக வீரர்களோடு பேசிக்கொண்டனர்.

நாம் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற உறுதியோடு களம் இறங்கினர் குர்பாஸ் - இப்ராஹிம். குர்பாஸ்க்கு அடிக்க ஒரு நல்ல பந்தை போட்டு துவக்கினார் அப்ரிடி. அதே ஓவரில் இப்ராஹிமும் போர் அடித்தார்.

குர்பாஸ் - இப்ராஹிம் அடிக்கடி பேசிக்கொண்டனர். குர்பாஸை தூக்கி அடிக்க வேண்டாம் என்று இப்ராஹிம் சொன்னது போல் இருந்தது உடல்மொழி. குர்பாஸ் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நன்றாக ஓடி ரன் எடுத்து பாகிஸ்தான் பீல்டர்களை மனதளவில் தாக்கினர். 130 ரன்களை கடந்த போது ஷாட் பாலில் தூக்கி அடித்ததால் அவுட் ஆனார் குர்பாஸ். அதற்கு முன் ஒரே ஒரு பந்தை மட்டுமே தூக்கி அடித்திருந்தார்.

அடுத்து வந்த ரஹ்மத் ஷா, தன் அனுபவத்தை காட்டினார். பொறுமையாக ஆடினார். எந்த நிலையிலும் நிதானம் தவறவில்லை. அந்த 90 மீட்டர் சிக்ஸ் யாரும் எதிர்பாராதது.

ஆப்கானிஸ்தானுக்கு ஸ்பின் நல்லா வந்துச்சு. நமக்கு வரலையே என்று பாபரை குழப்பத்தில் ஆழ்த்தினர் இப்ராஹிம் - ரஹ்மத். 85 ரன்களுக்கு பிறகு இப்ராஹிம் ரன் 
அடிக்க திணறி அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ஷாகிதி ஆட்டத்தின் வேகத்தை குறைக்கவில்லை. பாகிஸ்தானும் பெரிதாக முயற்சிக்கவில்லை. கடைசிக் கட்ட ஓவர்களில் ஸ்பின் வேண்டாம் என்று நினைத்த பாபர், வேகப்பந்து வீச வேண்டிய நேரத்தில் கூட ஸ்பின்னர்களை உபயோகித்தார்.

தொடர்ச்சியாக 11 டாட் பால்கள் என்ற நிலையில் ஷாகிதி சற்றே சொதப்பினாலும் மீண்டுவிட்டார். ஹசன் அலியின் மெய்டன் ஓவருக்கு பிறகு சதாப்பை வீச வைத்தது பாபர் செய்த மடத்தனம்.

பாகிஸ்தான் பீல்டர்கள் பவுண்டரி லைனில் பந்தை தடுக்க நினைத்தார்களே தவிர பந்தை நிறுத்த முயற்சிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பான அணி என்பது தெரியும். 282 ரன்னை சேஸ் செய்ய முடிந்த அணி என்று உலகுக்கு காட்டிவிட்டது. ஆப்கானிஸ்தானின் கூட்டு முயற்சிக்கு, தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஆலோசகர் அஜய் ஜடேஜாவின் பங்களிப்பு நிச்சயம் உதவி இருக்கும்.

Saturday 21 October 2023

உலகக் கோப்பை தொடரில் ஜொலித்த விக்கெட் கீப்பர்கள்


உலக கோப்பை வென்ற ஒரே விக்கெட் கீப்பர் கேப்டன்  - மகேந்திர சிங் தோனி 

1975

ராட் மார்ஷ் - ஆஸ்திரேலியா - 10 (9 கேட்ச் +1 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - யாரும் இல்லை 

விக்கெட் கீப்பர் சதங்கள் - இல்லை 

1979

டெரிக் முர்ரே - வெஸ்ட் இண்டீஸ் - 7 (7 கேட்ச் + 0 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - பிரையன் மௌரிசேட் - கனடா - உலகக் கோப்பையில் முதல் விக்கெட் கீப்பர் கேப்டன்.

விக்கெட் கீப்பர் சதங்கள் - இல்லை

1983

ஜெஃப் டூஜான் - வெஸ்ட் இண்டீஸ் - 16 (15 கேட்ச் + 1 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - யாரும் இல்லை

விக்கெட் கீப்பர் சதங்கள் - இல்லை

1987

கிரண் மோரே - இந்தியா - 11 (6 கேட்ச் + 5 ஸ்டம்பிங்)



கிரேக் டையர் - ஆஸ்திரேலியா - 11 (9 கேட்ச் + 2 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - யாரும் இல்லை

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. டேவிட் ஹௌடன் (ஜிம்பாப்வே) - 142 எதிர் நியூசிலாந்து - உலகக் கோப்பையில் முதல் விக்கெட் கீப்பர் சதம்.

1992

டேவ் ரிச்சர்ட்சன் - தென்னாப்பிரிக்கா - 15 (12 கேட்ச் + 3 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - அலெக் ஸ்டீவர்ட் - இங்கிலாந்து 

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே) - 115* எதிர் இலங்கை 

1996

இயன் ஹீலி - ஆஸ்திரேலியா - 12 (9 கேட்ச் + 3 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - லீ கெர்மோன் - நியூசிலாந்து, ஆன்டி பிளவர் - ஜிம்பாப்வே 

விக்கெட் கீப்பர் சதங்கள் - இல்லை

1999

மோயின் கான் - பாகிஸ்தான் - 16 (12 கேட்ச் + 4 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - அலெக் ஸ்டீவர்ட் - இங்கிலாந்து 

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. ராகுல் டிராவிட் (இந்தியா) - 145 - எதிர் இலங்கை - உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் அதிகபட்ச ஸ்கோர் 



2003

ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா - 21 (21 கேட்ச் + 1 ஸ்டம்பிங்) - விக்கெட் கீப்பர் அதிகபட்ச டிஸ்மிஸ்ஸல்.



விக்கெட் கீப்பர் கேப்டன் - காலேத் மசூத் - பங்களாதேஷ் 

விக்கெட் கீப்பர் சதங்கள் - இல்லை

2007

ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா - 17 (12 கேட்ச் + 5 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - ஜெரான் ஸ்மிட்ஸ் - நெதர்லாந்து 

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) -149 எதிர் இலங்கை - உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் அதிகபட்ச ஸ்கோர் என்ற டிராவிட் சாதனை முடிக்கப்பட்டது.

2011

குமார் சங்கக்காரா - இலங்கை - 14 (10 கேட்ச் + 4 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - மகேந்திர சிங் தோனி - இந்தியா, குமார் சங்கக்காரா - இலங்கை, ஆசிஸ் பகாய் - கனடா

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. டீ வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)- 134 எதிர் நெதர்லாந்து 

2. குமார் சங்கக்காரா (இலங்கை) - 111 எதிர் நியூசிலாந்து 

3. டீ வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 107 எதிர் வெஸ்ட் இண்டீஸ் 

4. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 101 எதிர் கனடா

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல் முறையாக இரு அணிக்கும் விக்கெட் கீப்பர் கேப்டன்.

2015 

பிராட் ஹாடின் - ஆஸ்திரேலியா - 16 (16 கேட்ச் + 0 ஸ்டம்பிங்)

விக்கெட் கீப்பர் கேப்டன் - மகேந்திர சிங் தோனி - இந்தியா, ப்ரண்ட்டன் டெய்லர் - ஜிம்பாப்வே 

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. பிரண்டன் டெய்லர் ( ஜிம்பாப்வே) - 138 எதிர் இந்தியா 



2. குமார் சங்கக்காரா (இலங்கை) -124 எதிர் ஸ்காட்லாந்து 

3. பிரண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே) - 121 எதிர் அயர்லாந்து 

4. குமார் சங்கக்காரா (இலங்கை) - 117* எதிர் இங்கிலாந்து 

5. குமார் சங்கக்காரா (இலங்கை) - 105* எதிர் பங்களாதேஷ் 

6. குமார் சங்கக்காரா (இலங்கை) - 104 எதிர் ஆஸ்திரேலியா 

7. சர்ப்ராஸ் அகமது (பாகிஸ்தான்) - 101* எதிர் அயர்லாந்து 

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கீப்பர் சதங்கள் நிகழந்தது.

2019 

டாம் லாத்தம் - நியூசிலாந்து - 21 (21 கேட்ச் + 0 ஸ்டம்பிங்) - உலகக் கோப்பையில் அதிகப்பட்ச விக்கெட் கீப்பர் டிஸ்மிஸ்ஸல் என்ற சாதனையை சமன் செய்தார் .

விக்கெட் கீப்பர் கேப்டன் - சர்ப்ராஸ் அகமது - பாகிஸ்தான்

விக்கெட் கீப்பர் சதங்கள்

1. ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) - 103 எதிர் பாகிஸ்தான் 

2. முஸ்பிகூர் ரஹீம் (பங்களாதேஷ்) - 102* எதிர் ஆஸ்திரேலியா 

2023



விக்கெட் கீப்பர் கேப்டன் - ஸ்காட் எட்வர்ட்ஸ் - நெதர்லாந்து, ஜாஸ் பட்லர் - நியூசிலாந்து, டாம் லாத்தம் - நியூசிலாந்து, குஷல் மென்டிஸ் - இலங்கை.

விக்கெட் கீப்பர் சதங்கள்#

1. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 131* எதிர் இலங்கை 

2. சதீர சமரவிக்ரம (இலங்கை) - 108 எதிர் பாகிஸ்தான்

3. குவின்டன் டீகாக் (தென்னாப்பிரிக்கா) - 109 எதிர்

#குவின்டன் டீகாக் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்தார், ஆனால் பீல்டிங் செய்ய வரவில்லை, கிளாஸன் கீப்பிங் செய்தார்.

அதேபோல் மெண்டிஸ் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்தார், சமரவிக்ரமா கீப்பிங் செய்தார். மெண்டிஸ் பீல்டிங் செய்யவில்லை.

கிரிக்இன்போ தளத்தில் டீகாக், மெண்டிஸ் சதங்கள் விக்கெட் கீப்பர் சதமாக கணக்கில் உள்ளது. சமரவிக்ரம சதம் இடம் பெறவில்லை.

Thursday 19 October 2023

ராகுலின் மீட்சி

கண்ணனூர் லோகேஷ் ராகுல், சர்வதேச கிரிக்கெட் ஆட துவங்கியதில் இருந்து அணியில் இடம் பிடிப்பது காயம் காரணமாக வெளியேறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. தற்போதைய அவரது ஆட்டம் மூன்றாம் நாளில் உயிர்தெழுதல் போன்ற சிறப்பான நிகழ்வு. அதனால் தான் தலைப்பு ராகுலின் மீட்சி.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான பின்பு 2016ல் ஜிம்பாப்வே சென்ற இரண்டாம் கட்ட அணியில் தோனியோடு சென்றவர். முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடித்து சதம் போட்டாலும் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருந்தது.



ஒருநாள் போட்டிகள் அதிகம் விளையாடாவிட்டாலும் 2019 உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2019 உலகக் கோப்பையில் 4 வது வீரராக யார் களமிறங்க என்ற குளறுபடி நிலவியது. ராகுல் தான் முதல் போட்டியில் நாலாவது இறங்கினார். தவான் காயம் காரணமாக வெளியேற துவக்க வீரர் ஆனார். 2 அரைசதமும் ஒரு சதமும் அடித்தார்.

துணைக் கேப்டனாகி, கேப்டனாகி(பகுதி நேர) ஜொலித்து கொண்டிருக்கையில் மீண்டும் காயம். 2023 உலகக் கோப்பையில் இடம் பெறுவாரா என்று சந்தேகம் நிலவியது.

ஆசியக் கோப்பையில் இடம் பெற்றாலும் முதல் இரு போட்டியில் ஆடவில்லை. சக கன்னடரான ராகுல் டிராவிட்டின் சகாயம் காரணமாக இருக்கலாம்.  உலகக் கோப்பை அணிக்கு நாலாவது வீரர் தட்டுப்பாடு என்ற நிலை. பகுதி நேர விக்கெட் கீப்பரான ராகுலுக்கு நிலையான இடத்த தர முழு நேர விக்கெட் கீப்பர் என்று மாற வேண்டிய கட்டாயம். அவர் கேப்டனாக இருந்த போட்டிகளில் கூட சாம்சனை கீப்பராக ஆக்கியவர் ராகுல். ஐபிஎல்லிலும் வேறு கீப்பர்களை பயன்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் நாலாவது வீரராக களம் இறங்கி சதமடித்து பேட்டை உயர்த்திய போது அருள் வந்து ஆடிய சாமி போல இருந்தது. நேர்த்தியான ஆட்டம்.

அடுத்த போட்டியில் விக்கெட் கீப்பர் ஆனார். ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் கேப்டன். ராகுல் டிராவிட் அரசியல் இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். பிரதீஸ் கிருஷ்ணாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை முதல் போட்டியில் மும்பை வீரரான ஸ்ரேயாஸ்க்கு நாலாவது இடம் தரப்பட்டது அரசியல் என்றாலும் 5 வது இடத்தில் இறங்கி சதமடிக்காவிட்டாலும் 97*, சேசிங்ல் சிறப்பானது.

பாகிஸ்தான் எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் அரை சதமடிக்க உதவியது. நேற்றைய போட்டியில் கோலி சதமடிக்க உதவியது என ராகுல் வேற லெவலில் பயணிக்கிறார். விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாக உள்ளது.

இந்திய அணியின் தலையாய பிரச்சினை நாக்அவுட் போட்டிகளில் தன்னம்பிக்கை இழப்பது. இந்த முறை ராகுல் நாக்அவுட் போட்டிகளில் தன்னம்பிக்கையோடு ஆடினால் மூன்றாம் உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கும்.


Wednesday 18 October 2023

உலகக் கோப்பை - பந்துவீச்சாளர்கள்

கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விளையாட்டு, பேட்ஸ்மேன்கள் பேட்டிங் மட்டும் செய்தால் போதும். ஆனால் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை தேவைப்பட்டால் பேட்டிங்க்கும் செய்ய வேண்டியது கட்டாயம்.

பந்துவீச்சாளர்களுக்கு அங்கீகாரம் மிக மிக குறைவே. ஆட்டநாயகன் விருது மிக அரிது. உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆண்டும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்.

1975 - கேரி ஹில்மோர் (ஆஸ்திரேலியா) - 11

முதல் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கேரி ஹில்மோர். அரை இறுதி போட்டியில் 6 விக்கெட்டும், இறுதி போட்டியில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014ல் காலமானார்.



1979 - மைக் ஹெண்ட்ரிக் (இங்கிலாந்து) -10

1979ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இங்கிலாந்து நாட்டின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹெண்ட்ரிக். பாகிஸ்தான் அணியுடான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

இவர் 2021ல் காலமானார்.



1983 - ரோஜர் பின்னி (இந்தியா) -18

83ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. இவர் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர்

ஆஸ்திரேலியா உடனான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். இவர் தான் முதல் அதிக விக்கெட் வீழ்த்திய, உலகக் கோப்பை வென்ற அணியை சார்ந்தவர்.



1987 - கிரேக் மெக்டெர்மாட் (ஆஸ்திரேலியா) -18

87ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மெக்டெர்மாட்.

அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். இந்தியா உடனான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.



1992 - வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) -18

1992ல் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.



1996 - அனில் கும்ளே (இந்தியா) -15

ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இடம் பெற்ற முதல் சுழற்பந்து வீச்சாளர் கும்ளே.

இந்திய லெக் ஸ்பின்னரான கும்ளே ஒரு போட்டியில் கூட 4 விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால் கென்யா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



1999 - ஜெப் அல்லாட் (நியூசிலாந்து) & ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 20

99 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெப் அல்லாட் தான் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னரான வார்னேவுக்கு 4 விக்கெட் தாரை வார்த்து கொடுக்க, வார்னேவும் 20 விக்கெட் வீழ்த்தி முதலிடத்திற்கு வந்தார்.



அல்லாட்

எதிர் ஆஸ்திரேலியா - 4/37

எதிர் பாகிஸ்தான் - 4/64

வார்ன்

எதிர் தென்னாப்பிரிக்கா (அரை இறுதி)- 4/29 - ஆட்டநாயகன் 

எதிர் பாகிஸ்தான் (இறுதிப் போட்டி)- 4/33 - ஆட்டநாயகன் 

2003 - சமீந்தா வாஸ் ( இலங்கை) - 23

2003ல் இலங்கையின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பங்களாதேஷ்க்கு எதிரான லீக் போட்டியில் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் எடுத்த போட்டி அது.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார் வாஸ்.

2007 - கிளன் மெக்ராத் (ஆஸ்திரேலியா ) - 26

2007ல் ஆஸ்திரேலிய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

4 உலகக் கோப்பைகளுக்கு(1987) பின் ஒரு வலதுகை வேகப்பந்து வீச்சாளர் விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் வந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர் பங்களாதேஷ் - 3/16 - ஆட்டநாயகன்

எதிர் அயர்லாந்து - 3/17 - ஆட்டநாயகன்

எதிர் தென்னாப்பிரிக்கா (அரைஇறுதி) - 3/18 - ஆட்டநாயகன் 

2011 - ஜாகீர் கான் (இந்தியா) & சாகித் அப்ரிடி (பாகிஸ்தான்) - 21

2011ல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரடியும் தலா 21 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்‌.

ஜாகீர் கான்

எதிர் இங்கிலாந்து - 3/64

எதிர் நெதர்லாந்து - 3/20


அப்ரிடி

எதிர் கென்யா - 5/16

எதிர் இலங்கை - 4/34 - ஆட்டநாயகன்

எதிர் கனடா - 5/23 - ஆட்டநாயகன் 

எதிர் வெஸ்ட் இண்டீஸ் - 4/30


2015 -  மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) & டிரன்ட் பவுல்ட் ( நியூசிலாந்து) -22

2015 உலகக் கோப்பையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் ட்ரன்ட் பவுல்ட் தலா 22 விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து லீக் போட்டியில் ஸ்டார்க் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பவுல்ட் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார் ஸ்டார்க்.


2019 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) -27

2019ல் மிட்செல் ஸ்டார்க்கே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் ஒருமுறை கூட ஆட்டநாயகன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







Tuesday 17 October 2023

2023 உலகக் கோப்பை - 3ம் சுற்று

காலில் சுளுக்கோடு

இலங்கையை சுளுக்கெடுத்த

ரிஸ்வான் !

மந்திரம் போட்டு தந்திரம்

செய்த ஹர்திக் பாண்ட்யா !

தொடர்கதையான

காயமும் கனேவும் !

வாடிக்கையான டீ காக்கும்

சதங்களும் !

விராட்டின் கவர் டிரைவ் !

ரோகித்தின் சிக்ஸர்கள் !

வள்ளலாக மாறிய

பதிரான !

கேப்டனாக மாறிய

குஷால் மெண்டிஸ் !

முகமது ரிஸ்வானும்

ஜெய் ஸ்ரீராமும் !

பத்தாம் இடத்துக்கு

பாய்ந்த கங்காரு !

இங்கிலீஷ் டெஸ்டில்

தேர்வான ஆப்கானிஸ்தான் !

தென்னாப்பிரிக்காவை கைப்பற்றிய

டச்சுக்காரர்கள் !

Sunday 15 October 2023

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து

டெல்லியில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டி. டெல்லி மைதானம் பந்துவீச்சுக்கு சுத்தமாக உதவவில்லை முந்தைய போட்டிகளில். (ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெளியேறியதற்கு காரணம் இது போன்ற மைதானமே). இலங்கை - தென்னாப்பிரிக்கா போட்டியில் கிட்டத்தட்ட 750 ரன்கள் வந்தது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் 270 ரன்களை சேஸ் செய்ய ரோகித் வானவேடிக்கை காட்டினார். எவ்வளவு ரன்களையும் சேஸ் செய்ய முடியும் என்று நினைத்து தான் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஷர்தானுக்கு பதிலாக இக்ரம் அலிஹில் அணிக்கு வந்தார். குர்பாஸ்க்கு பதிலாக விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.



குர்பாஸ் - இப்ராஹிம் வழக்கமான தொடக்கம் தந்தனர். குர்பாஸ் உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்து அடித்தளம் அமைத்தார்.  இப்ராஹிம் அவுட்டாக பெரிய இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் 100 ரன்களுக்கு மேலாக பார்ட்னர்ஷிப் கொடுத்துவிட்டார்.

100வது போட்டியில் ஆடிய ரஹ்மத் ஷா 3 ரன்களில் ஸ்டம்பிங் ஆக, அடுத்த பந்தில் கேப்டன் அழைக்கிறார், முதல் பந்தில் ஒரு ரன் அடித்தால் கேப்டனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் என நினைத்து ரன்அவுட் ஆனார் பார்ம்ல் இருந்த குர்பாஸ். இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் சதம் கூட அடித்து இருக்கலாம்.

ஓமர்சாய் 19 ரன்களில் அவுட்டாக களத்திற்கு வந்தார் இடதுகை பேட்ஸ்மேனான இக்ரம் அலிஹில். நிதானமாக ஆடினார். சென்ற உலகக் கோப்பையில் 8வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டவர். ஷாகிதி, நபி என்று சீனியர்கள் அவுட்டானாலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது அரைசதம் அடித்தார் இக்ரம்.

கடைசியில் ரஷீத்கான், முஜீப் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சில் சிறிய மாற்றம் செய்தார் ஷாகிதி. முதல் ஓவரை முஜீப் வீசினார். இரண்டாவது ஓவரை பரூக்கி வீசினார், பலனும் கிடைத்தது பேர்ஸ்டோ விக்கெட் வடிவில். அனுபவ ரூட்டை முஜீப் காலி செய்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட் விழுந்திருந்தாலும் வலுவான இடத்தில் தான் இருந்தது இங்கிலாந்து.

150 வது ஒருநாள் போட்டியில் ஆடிய நபி மாலன் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் சூடு பிடித்தது. ரன் எடுக்க திணறிய பட்லர் நவீன் பந்தில் போல்டானது முதல் திருப்புமுனை.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் 20 ஓவர் போட்டிகளுக்கு சிறப்பானவர்கள். நாலு ஓவர்கள் என்றால் சிறப்பாக வீசுவார்கள். பத்து ஓவர்கள் என்றால் சிரமமே. இருக்கும் ரிசோர்ஸை சரியாக பயன்படுத்தினார் ஷாகிதி.

ஸ்லிப்ல் பீல்டரை நிறுத்தி இரண்டு விக்கெட்டுகளை காலி செய்தார். ப்ரூக் விக்கெட் தான் இரண்டாம் திருப்புமுனை. குர்பாஸ் கீப்பராக நின்றால் அந்த கேட்ச்சை பிடித்திருப்பாரா என்பது சந்தேகமே. அசல் ஆட்டநாயகன் இக்ரம் அலிஹில் தான்.

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் களத்தில் வீரர்கள் திட்டி கொள்வது, கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும்.

18 உலகக் கோப்பை போட்டியில் 2 வது வெற்றியை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான். நடப்பு சாம்பியனை வென்றது சிறப்பு.

இந்த ஆண்டின் தொடர்ச்சியாக எட்டு தோல்விகளுக்கு பிறகு கிடைத்திருக்கும் வெற்றி அணியின் தன்னம்பிக்கையை கூட்டும். அதே சமயம் இப்ராஹிம், ரஹ்மத் ஷா, நபி ஆகியோரின் பேட்டிங் வலுவைடைய வேண்டும்.


Saturday 14 October 2023

கட்டணமில்லா பேருந்து

1. வேப்பங்கொட்டை

மே மாதத்து வெயிலில்

சிறுநகரத்து வேப்பமரத்தடியில்

கொட்டை பொறுக்கும்

பாட்டியோடு அலைகிறான்

ஒரு சிறுவன்

வேலை முடித்து ஏதாவது

வாங்கி தருவாள் என்ற எண்ணத்தில் !

சிறுவனின் கைவைத்த

பனியனில்

சிரித்து கொண்டிருந்தார்

சாதி கட்சி தலைவர் !!!


2. ஆசிரியை

விடுமுறைக்கு வந்த

சித்தியை தனது

பள்ளியில் ஆசிரியையாக

சேர சொல்கிறாள் சிறுமி !

பாட்டியின் நகைகளை

பங்கு கேட்க

வந்திருக்கிறாள் சித்தி

என்று தெரியாமல் !!!


3. கட்டணமில்லா பேருந்து

கட்டணமில்லா கடைசிப் பேருந்து

வரும் என்பதால்

கையில் வைத்திருந்த இருபது

ரூபாய்க்கு அழும் குழந்தைக்கு

வடை வாங்கி தந்தாள் 

அடுத்த வாரத்தில் உரிமைத் தொகை

வங்கி கணக்கில் வரவு

வைக்கப்படும் !

பெயர்ப்பலகை விளக்கு 

அணைக்கப்பட்டு

பணிமனைக்கு விரைந்தது

கடைசிப் பேருந்து !!!


4. பால் கறப்பவன்

முச்சந்தி வீட்டில் கழனீர்

குடித்துவிட்டு

தெருமுனையில் அமாவாசைக்கு

தந்த அகத்திய கீரையை

சாப்பிட்டு விட்டு

சிறுவர் பூங்கா முன்பு

சாணி போட்டுவிட்டு

நெடுஞ்சாலை மரத்தடியில்

படுத்து அசைபோடும்

பசு மாட்டுக்கு

தெரியும் பால் கறப்பவன்

எப்போது வருவான் என்று !!!


5. நண்பனின் அழைப்பு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நண்பனிடம் இருந்து

அலைபேசி அழைப்பு

எடுத்தவுடன் எனது 

கஷ்டங்களை விடாமல்

சொன்னேன் !

கடன் கேட்க தான்

அழைத்திருப்பான் 

என்ற கணிப்பில் !!!



Wednesday 11 October 2023

சதங்கள்

உலகக் கோப்பையில் இந்திய கேப்டன்களின் சதம் மிக அரிதானது. 20 ஆண்டுகளுக்கு பிறகே நிகழ்கிறது. ஆம், 1983 கபில் முதல் சதமடித்தார். பிறகு 2003ல் கங்குலி மூன்று சதங்கள் அடித்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதமடித்துள்ளார்.

இந்திய கேப்டன்களின் உலகக் கோப்பை சதங்கள்

1. கபில்தேவ் -175* - ஜிம்பாப்வே - 1983

1983ல் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் லீக் சுற்றில் இருமுறை மோதின. அதில் இந்தியா இரண்டாவது முறை ஜிம்பாப்வே அணியுடன் மோதிய போது 9 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தத்தளித்தது. அப்போது கேப்டன் கபில் களம் இறங்கி 138 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். அன்று அது தனிநபர் அதிகபட்ச ரன் என்று உலக சாதனை.


2. சவுரவ் கங்குலி - 112* - நமீபியா - 2023

2003 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் - கங்குலி 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்க்கு 244 ரன்கள் குவித்தனர். அதில் கேப்டன் கங்குலி 119 பந்துகளில் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

3. சவுரவ் கங்குலி - 107* - கென்யா - 2023

2003 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியா அணி சேசிங்ல் 24 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. கேப்டன் கங்குலி 120 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அணியை கரை சேர்த்தார்.



4. சவுரவ் கங்குலி - 111* - கென்யா - 2023

2003 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் கென்யாவுக்கு எதிராக கேப்டன் கங்குலி 114 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா கென்யாவுக்கு 271 என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.

5. ரோகித் சர்மா - 131 - ஆப்கானிஸ்தான் - 2023 

2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணியை துவம்சம் செய்து 84 பந்துகளில் 131 ரன்கள் அடித்து சேசிங்கை எளிதாக்கினார்.



இதுவரை அடித்த 5 சதங்களும் கத்துக்குட்டி அணிக்களுக்கு எதிராகவே அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பந்துவீச்சுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத ஆடுகளங்கள், பேட்டிங்கு சாதகமான புதிய விதிமுறைகள், சிறிய தூர பவுண்டரி லைன்கள் இருப்பதால் நிச்சயம் ரோகித் பெரிய அணியுடன் சதமடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Tuesday 10 October 2023

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவை. அதிக வெற்றி பெற்ற அணி பாகிஸ்தான் என்றாலும் உலகக் கோப்பையில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. 1975, 1979ல் இந்தியா முதல் ரவுண்டிலே வெளியேறியது. அப்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் வேறு வேறு குழுவில் இருந்தன. 1983லிலும் அதே கதை தான். ஆனால் அரை இறுதியில் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. 1987லிலும் அரை இறுதியில் வேறு அணிகளுடனே மோதிக்கொண்டன.

1992

1992ல் தான் முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி அமைந்தது.

பாக் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், மியான்டட் நட்சத்திர வீரர்கள்.

இந்திய அணியில் கபில்தேவ், அசாருதீன் இருந்தனர். மற்றவர்கள் கிட்டத்தட்ட புது முகங்கள் 

கேப்டன்கள் -முகமது அசாருதீன் - இம்ரான் கான்

இந்தியா - 216/7

சச்சின் - 54*

ஜடேஜா - 46

பாகிஸ்தான் 173

கபில்தேவ் - 30/2

பிரபாகர் - 22/2

ஸ்ரீநாத் - 37/2

இந்திய பெரிய ரன்கள் குவிக்கவில்லை. ஆனாலும் அணியாக இணைந்து செயல்பட்டு பாகிஸ்தானை ஆல்அவுட் ஆக்கினர்.

1996

கேப்டன்கள் - முகமது அசாருதீன் - அமீர் சோகைல்

இந்தியாவில் சித்து, சச்சின், அசாருதீன், கும்ளே, ஸ்ரீநாத் நட்சத்திர வீரர்கள்

பாக்கில் அமீர் சொகைல், வாக்கார், மியான்டட், இன்சமாம், அன்வர் நட்சத்திர வீரர்கள் 

இந்தியா - 287/8

சித்து 93

ஜடேஜா 45



பாகிஸ்தான் 248/9

பிரசாத் - 45/3

கும்ளே - 48/3

இந்த போட்டியில் தான் அமீர் சோகைல் வம்பளக்க, பிரசாத் பதிலடி கொடுத்த சம்பவம் நடந்தது.

1999

கேப்டன்கள் - முகமது அசாருதீன் - வாசீம் அக்ரம்

1999ல் இந்தியா பாகிஸ்தான் போட்டி சூப்பர் சிக்ஸ்ல் அமைந்தது.

இந்தியாவில் சச்சின், அசாருதீன், டிராவிட், கும்ளே, ஸ்ரீநாத் நட்சத்திர வீரர்கள்

பாகிஸ்தானில் அன்வர், அப்ரிடி, இன்சமாம், அக்ரம், அக்தர் நட்சத்திர வீரர்கள்.

இந்தியா - 227/6

டிராவிட் - 61

அசார் - 59

பாகிஸ்தான் - 180

பிரசாத் - 27/5

ஸ்ரீநாத் - 37/3

2003

கேப்டன்கள் - சவுரவ் கங்குலி - வக்கார் யூனிஸ்

லீக் போட்டியில் மோதின. இந்த முறை பரபரப்பு காரணமாக திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தியா முதல் பாகிஸ்தான் விக்கெட்டை 11 ஓவரில் தான் எடுத்தது. ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 11 பேரும் சேர்ந்து நின்றது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. அதே சமயம் அன்வர் சதம் பயத்தை வர வைத்தது.

சேவாக் - சச்சின் பாகிஸ்தான் பவுலர்களை வந்து பார் என்றார்கள். சேவாக்கும் கங்குலியும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக இந்தியாவுக்கு இக்கட்டு ஆரம்பித்தது.

ஆனால் கைப் 4 வது வீரராக களம் இறங்கி நிதானமாக விளையாடினார்.

பாகிஸ்தான் 273/7

ஜாகீர்கான் - 46/2

நெக்ரா - 74/2

இந்தியா 276/4

சச்சின் 98

யுவராஜ் 50

2011

கேப்டன்கள் - மகேந்திர சிங் தோனி - சாகித் அப்ரிடி

2011ல் அரை இறுதி போட்டி, முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் அரை இறுதி போட்டி. இதிலும் சச்சின் சாதனை படைத்தார். 

அப்ரடியை ஹர்பஜன் முடிக்க ஆட்டம் இந்தியா வசம் வந்தது. பந்து வீசிய 5 பேரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா - 260/9

சச்சின் - 85

சேவாக் - 38



பாகிஸ்தான் - 231

ஜாகீர்கான் - 58/2

நெக்ரா - 33/2

முனாப் - 40/2

ஹர்பஜன் - 43/2

யுவராஜ் - 57/2

2015

கேப்டன்கள் - மகேந்திர சிங் தோனி - மிஸ்பா உல் ஹக்

இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியே இந்தியாவுக்கு பாகிஸ்தானோடு. முதல் பேட்டிங் முடிந்த உடனே இந்தியா வசம் வெற்றி வந்து விட்டது.

பச்சை சட்டை போட்ட அணிகளை இந்தியா லெப்ட் ஹேண்டில் டீல் செய்வதாக மீம்கள் வந்தது.

இந்தியா - 300/7

கோலி - 107

ரெய்னா - 74

பாகிஸ்தான் - 224

ஷமி - 35/4

உமேஷ் - 50/2

மோகித் - 35/2

2019

கேப்டன்கள் - விராட் கோலி - சர்ப்ராஸ் அகமது 

இந்த முறையும் இந்தியா ஒன் சைடு கேமாக மாற்றிவிட்டது. ரோகித் சதம், ராகுல், கோலி அரைசதம் என பட்டையை கிளப்பினர்.

பாகிஸ்தான் சேசிங்ல் இந்தியாவுக்கு சோதனை ஆரம்பித்தது. 5 வது ஓவரிலே புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறினார். விஜய் சங்கர் பந்து வீச முதல் பந்திலே விக்கெட். மழையும் வந்து பாகிஸ்தானுக்கு பால் ஊற்றியது.

இந்தியா - 336/5

ரோகித் - 140

கோலி -77

பாகிஸ்தான் - 212/6

விஜய் சங்கர் - 22/2

பாண்ட்யா - 43/2

குல்தீப் - 32/2

Sunday 8 October 2023

முதல் போட்டிகள்

உலகக் கோப்பையில் இந்திய கேப்டன்களின் முதல் போட்டிகள்

1. வெங்கட் ராகவன் - 1975 - தோல்வி

ஜுன் 7, 1975ல் நடைபெற்ற போட்டியில் கேப்டன் வெங்கட்ராகவன் டாஸ் வெல்லவில்லை. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் பிடித்தது.

இங்கிலாந்து 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களை குவித்தது. சேசிங்ல் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. கவாஸ்கர் 36* விஸ்வநாத் 37. கேப்டன் வெங்கட்ராகவன் 12 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

2. கபில்தேவ் - 1983 - வெற்றி 

ஜுன் 9, 1983ல் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் கபில் தேவ் டாஸ் வெல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பீல்டிங் செய்தது.

இந்தியா 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. யஷ்பால் சர்மா 89, சந்தீப் பாட்டீல் 36. வெஸ்ட் இண்டீஸ் 54.1:ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் கபில் தேவ் 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார்.10 ஓவர்கள் பந்துவீசி 34 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

3. முகமது அசாருதீன் - 1992 - தோல்வி

பிப்ரவரி 22, 1992ல் பெர்த்ல் நடைபெற்ற போட்டியில் கேப்டன் அசாருதீன் டாஸ் வெல்லவில்லை. இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. சேசிங்ல் இந்தியா 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் அசாருதீன் முதல் பாலில் டக்அவுட் ஆனார்.

4. சவுரவ் கங்குலி - 2003 - வெற்றி

பிப்ரவரி 12, 2003ல் தென்னாப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் கங்குலி டாஸ் வென்று பேட்டிங் செய்தார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் கங்குலி 32 பந்துகளில் 8 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்தியா 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சச்சின் 52 ரன்களும், தினேஷ் மோங்கியா 42 ரன்களும் அடித்தனர்.

ஸ்ரீநாத், கும்ளே தலா 4 விக்கெட் எடுத்து நெதர்லாந்தை 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினர்.

5. ராகுல் டிராவிட் - 2007 - தோல்வி

மார்ச் 17, 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் டிராவிட் டாஸ் வென்று பேட்டிங் செய்தார் ‌

பங்களாதேஷ்க்கு எதிரான அந்த போட்டியில் டிராவிட் 28 பந்துகளில் 14 ரன்கள் அடித்தார். இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. கங்குலி 66 ரன்னும் யுவராஜ் 47 ரன்னும் அடித்தனர்.

பங்களாதேஷ் 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

6. மகேந்திர சிங் தோனி - 2011 - வெற்றி

பிப்ரவரி 19, 2011ல் மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் தோனி டாஸ் வெல்லவில்லை. பங்களாதேஷ் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய சொன்னது.

சேவாக் (175) மற்றும் கோலி (100) சதத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 283 ரன்கள் எடுத்தது . இந்தியா வெற்றி பெற்றது.

7. விராட் கோலி - 2019 - வெற்றி 

ஜூன் 5, 2019ல் சவுத்தம்டனில் நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வெல்லவில்லை. தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.

50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களு எடுத்தது தென்னாப்பிரிக்கா. ரோகித் சர்மா சதமடிக்க(122*) இந்தியா 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. கேப்டன் கோலி 34 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார்.

8. ரோகித் சர்மா - 2023 - வெற்றி 

அக்டோபர் 8, 2023ல் சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் டாஸ் வெல்லவில்லை. ஆஸ்திரேலிய டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சேசிங்ல் 2 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தத்தளிக்க கோலி (85) ராகுல் (97*) இந்திய அணியை கரை சேர்த்தனர். கேப்டன் ரோகித் 6 பந்துகள் பிடித்து டக் அவுட் ஆனார்.

Friday 6 October 2023

நெதர்லாந்து அணி ஆடிய விதம்

நெதர்லாந்து அணியை பொறுத்தவரை அது உலகக் கோப்பை வெல்லும் அளவுக்கு பெரிய அணி கிடையாது. வாய்ப்பு கிடைத்த இந்த உலகக் கோப்பையில் ஏதாவது ஒரு பெரிய அணியை வென்றால் அது நெதர்லாந்து வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் துவக்க வீரர்கள் இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆப் ஸ்பின்னரை முதல் ஓவர் பந்து வீச வைத்தது. பெரிய அணியே இதை செய்ய தயங்கும்.



பக்கர் ஸமான் பந்தை லெக் சைடில் அடிக்க அது எட்ஜ் வாங்கி ஆப் சைடில் போர் போனது. அவரது அவசரத்தை புரிந்து கொண்ட வான்பீக், ஸமான் விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார்.

பாகிஸ்தான் கேப்டனை ரன் எடுக்க விடாமல் அணை கட்டினர் நெதர்லாந்து. நன்றாக பந்து வீசிக் கொண்டு இருந்த ஆர்யன் தத்க்கு பதிலாக ஆக்கர்மேனை பந்து வீச அழைத்தார் நெதர்லாந்து கேப்டன். ஆக்கர்மேன் பந்துவீச்சை யோசிக்கக்கூட நேரம் கிடைக்காமல் வீழ்ந்தார் பாபர்.

அடுத்த ஓவருக்கு அணியின் அதி வேக பந்து வீச்சாளரான மாக்கீரனை அழைத்தார். அவரது முதல் பந்தை, 5வது பந்து வீச்சாளர் என நினைத்து தூக்கி அடித்தார் இமாம். பீல்டர் நகரவே இல்லை, பந்து அவர் கைகளில் இறங்கியது.

220 - 240 என்ற டார்க்கெட் இருந்திருந்தால் ஒரு வேளை நெதர்லாந்து ஜெயித்திருக்கும். ரிஸ்வானுக்கு ஷகிலுக்கும் சில க்ளோஸ் சான்ஸ் மிஸ் ஆனது. ஷகிலின் கேட்சை ஸ்லிப்பில் விக்ரம்ஜித் சிங் பிடித்திருந்தால் டார்க்கெட் குறைவாக இருந்திருக்கும்.

நன்றாக சென்ற ஷகில் - ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை எளிதாக கலைத்தனர். அதுவரை குட் லென்த்தில் பந்து வீசிய ஸ்பின்னர், ஷகில் அவுட் ஆன பந்தை புல் லென்த் ஆக வீசியதாக டிவியில் காட்டினர்‌

ஷகில் அவுட் ஆனதும் மீண்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது நெதர்லாந்து.
ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டது நெதர்லாந்து.

ஹாரிஸ் ராப் வாயை கொடுக்க, டீ லீடே சிக்ஸ் அடித்துவிட்டு ராப்பை பார்த்து கண்ணை சிமிட்டியது வேற லெவல் ரிவென்ஞ்.

மீதமுள்ள போட்டியில் நெதர்லாந்தை எதிர்பார்க்கலாம்.

Monday 2 October 2023

ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி

ஆப்கானிஸ்தான் அணி 2007ல் தான் முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது. 2011 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆடி, தகுதி பெறாமல் போனது. அசோசியேட் அணிகளுடனே ஒரு நாள் போட்டி வாய்ப்பு கிடைத்தது. 2014ல் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி வாய்ப்பு அமைந்தது. 2015 உலகக் கோப்பையில் ஒரு வெற்றி ஸ்காட்லாந்து அணியுடன் கிடைத்தது. 2019ல் தகுதி சுற்று இறுதிப் போட்டியில் வென்றது. உலகக் கோப்பையில் ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை. இந்த உலகக் கோப்பையில் நேரடியாக தகுதி பெற்று வந்துள்ளது. 

ஆப்கான் அணிக்கு சொந்த மைதானங்கள் கிடையாது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட எந்த அணியும் முன் வராது. துபாய், ஷார்ஜா, அபுதாபியை சொந்த மைதானமாக வைத்து ஆடியது. பிறகு பிசிசிஐ நொய்டா மைதானத்தை வழங்கியது, டேராடூனில் சில போட்டிகள் ஆடியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் லக்னோ மைதானத்தை வழங்கியது பிசிசிஐ. இப்போது லக்னோ உலகக் கோப்பை மைதானம், ஐபிஎல் மைதானமும் கூட.

கடைசியாக பாகிஸ்தானுடன் நடந்த தொடரை இலங்கையின் ஹம்பன்டோட்டாவில் ஆடியது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்று ஐசிசியின் ப்யூச்சர் டூர் ப்ரோகிராமில் இடம்பெற்றிருந்தாலும் பிற அணிகள் ஆப்கான் போட்டியை தவிர்க்கின்றன. இந்த செப்டம்பரில் நடைபெற வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறவில்லை. 

இந்த உலகக் கோப்பை பற்றி

பங்களாதேஷ் - அக்டோபர் 7 - தரம்சாலா

இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன் ஆட இருக்கிறது. பங்களாதேஷ் கூட சரியான போட்டி கொடுக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஒரு தொடரை வென்றுள்ளது. 


இந்தியா - அக்டோபர் 11 -டெல்லி

இந்திய அணியுடன் இதுவரை மூன்று போட்டிகள் ஆடியுள்ளது. 2014 ஆசியக் கோப்பை. 2018ல் ஆசிய கோப்பை டையில் முடிந்தது. 2019 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகே சென்று தோற்றது. அதிக ரன்கள் குவித்து விட்டு இந்தியாவை சேஸ் செய்ய வைத்து மடக்குவது தான் ஒரே வழி.


இங்கிலாந்து - அக்டோபர் 15 - டெல்லி

இங்கிலாந்து அணியுடன் இருமுறை உலகக் கோப்பையில் தோற்றுள்ளது. இந்த முறை ஆப்கானுக்கு சாதகமான ஆடுகளம், தவறேதும் செய்யாமல் ஆடினால் நிச்சயம் வெற்றி. ஸ்பின் தான் ஆயுதம்.

நியூசிலாந்து - அக்டோபர் 18 - சென்னை

நியூசிலாந்து அணியுடனும் இருமுறை உலகக் கோப்பையில் மட்டுமே ஆடி தோற்றுள்ளது. இந்தமுறை முயன்று பார்க்கலாம். நியூஸி சற்றே பலம் குறைந்த நிலையில் இந்த ஆண்டு உள்ளது.


பாகிஸ்தான் - அக்டோபர் 23 - சென்னை

பாகிஸ்தான் அணியுடன் 7 முறை தோற்றுள்ளது. அதில் ஆசியக் கோப்பையில் ஒருமுறை, சமீபத்தில் நடந்த தொடரில் ஒருமுறை க்ளோஸ் மேட்ச்கள். பாகிஸ்தான் அணியை ஸேஸ் செய்ய வைத்து மடக்குவது எளிதானது.



ஸ்ரீலங்கா - அக்டோபர் 30 - புனே

ஸ்ரீலங்கா அணியுடன் இதுவரை மூன்று போட்டிகளை வென்றுள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் கூட ரன்ரேட் குழப்பத்தில் தான் தோல்வி அடைந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணியுடன் நிறைய போட்டிகள் ஆடியுள்ளதால் அதன் பலவீனம் தெரியும். அதை வைத்தே மடக்கினால் வெற்றி நிச்சயம்.


நெதர்லாந்து - நவம்பர் 3 -லக்னோ

நெதர்லாந்து அணியுடன் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளது. 7ல் வெற்றி, இரண்டில் வெற்றி என்று. பிற அணிகளை வென்றால் நெதர்லாந்து அணி மனதளவில் வீழ்ந்துவிடும். பிறகு நிச்சயம் வெற்றி தான்.


ஆஸ்திரேலியா - நவம்பர் 7 - மும்பை

ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று பேட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை குறைந்த ரன்னில் மடக்கி அவர்களது பந்துவீச்சுக்கு பயப்படாமல் பார்ட்னர்ஷிப் வைத்தால் சேசிங் எளிது. முதல் வெற்றியை பெறலாம்.


தென்னாப்பிரிக்கா - நவம்பர் 10 - அகமதாபாத் 

2019 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியுடன் ஆடி தோல்வி அடைந்துள்ளது. பயிற்சி போட்டி ஆட்டமும் மழையால் நடைபெறவில்லை. மில்லர், கிளாஸன் இருவரை சமாளித்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.




மற்ற அணிகள் எல்லாம் பயிற்சி ஆட்டத்தில் பகுதி நேர ஸ்பின்னர்களை சோதித்து பார்க்கும் வேளையில் ஆப்கானிஸ்தான் அணி 30 ஓவர் ஸ்பின் மட்டுமே என களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜாவை உலகக் கோப்பைக்கு மென்டராக நியமித்துள்ளது ஆப்கான்.