Friday 27 March 2020

கொரோணா

சென்னைக்கு வந்த புதிதில்
ஒரு அடைமழை நாளில்
வேளச்சேரி எங்கும்
இடுப்புளவு தண்ணீர்
இரு நாள் விடுமுறை
நன்றாக மகிழ்ந்தோம்
நானும் நண்பனும்.

சேத்துபட்டு அலுவலகத்தில்
ஓரே நாளில் இருமுறை
பூமி அதிர்ந்தது.
அரைநாள் விடுமுறை
ஆட்டம் போட்டோம்.

நீலம் புயல் கரை ஒதுக்கிய
நாளில் கால் நேரம் முன்னதாக
கிளம்ப சொன்னார்கள்.
மின்சாரமில்லா முன்னிரவில்
காற்றின் கோரதாண்டவத்தை
கண் முன் கண்டேன்.

சென்னை பெருமழையின் போது
வெள்ளம் வீட்டை தொட்டபோது
ஊருக்கு கிளம்பிவிட்டேன்.
உதவிக்கரம் நீட்டும்
உண்மையான உள்ளங்களையும்
புரளி கிளப்பும் கொடூரர்களையும்
காட்டியது அந்த மழை.

இப்போது 21 நாள் விடுமுறை
வீட்டினுள் அடைந்து கிடந்தால்
நலம்.
இந்த நேரத்திலும் அத்தியாவசிய
பணி புரியும் அனைவரையும்
தலை வணங்குகிறேன்!!!

Monday 9 March 2020

சோளக்காட்டு பொம்மை

பழைய சட்டை, கால் சட்டைக்குள்
வைக்கோலைத் திணித்து
சோளகாட்டுப் பொம்மை
செய்தார் தாத்தா.

மண் சட்டியை
கரித்துண்டால் கீச்சி
முகமாக மாற்றியிருந்தார்.

காக்கா குருவிகளிடமிருந்து
சோளகாட்டை காவல் காத்தது
பொம்மை.

காட்டை காற்றாலைகாரனிடம்
விற்றபின் அவன் வீசி எறிந்த
வெற்று தண்ணீர் பாட்டிலை
வெறித்து பார்த்து
கொண்டிருந்தது
சோளக்காட்டு பொம்மை!!!