Monday 21 February 2022

மதுரை கதைகளை பற்றி


எழுத்தாளர் நர்சிம் எனக்கு விகடன் மூலமாக அறிமுகம் ஆகி இருந்தவர். கீச்சகம் மூலம் அவரது சிறுகதையை வாசித்த போது அவர் எழுத்து பிடித்து போய்விட்டது.

கீச்சகத்தில் பிரபலமான சார்மினார் எக்ஸ்பிரஸ் நாவலை வாசிக்க நினைத்தேன். பிடிஎப் வடிவில் கிடைத்தாலும் புத்தக வடிவில் கிடைக்கவில்லை.

மதுரை கதைகளை வாசித்த போது தான் மதுரை, மாட்டுதாவணி தெரியப்படுத்திய ஏமாற்றுகாரர்களின் உலகம், அல்லது சினிமா தெரியப்படுத்திய ரவுடிகளின் கூடாரம் என்பதை தாண்டி மண் மணம் மாறாத மனிதர்களின் சொர்க்கம் என்று தெரிந்தது.

இந்த கதைகள் எல்லாமே மனித உறவுகள் பற்றி அதிகம் சொல்கிறது. நிறைய கதைகள் கதையின் நாயகன் சொல்லும் பாணியில் இருப்பதும் சிறப்பு. 

எல்லா கதையிலும் ஒரு சிறிய முடிச்சு. அதை அவிழ்க்கும் இடம் மனதுக்குள் ஏதோ செய்யும்.

பெரிய வர்ணனைகள் எல்லாம் கிடையாது. சொல்ல வருவதை பட்டென சொல்லிவிடுகிறார். பிடிகயிறு கதையின் முடிவை போல.

அதே சமயம் லாடம் கட்டும் லாவகம், மாட்டை கட்டும் சூட்சமம், பிரசவிக்கும் மாட்டை ஏமாற்றும் தந்திரம் என பல விசயங்களை சொல்கிறார். ஒரு எழுத்தாளன் நிறைய வாசிப்பதோடு உற்று நோக்கி பார்க்க வேண்டும் என்கிறது அவரது எழுத்து.

மொத்த தொகுப்பிலும் பெண்களுக்கு மிக குறைந்த அளவை பாத்திரங்கள் உள்ளன. ஆனாலும் பாத்திமாவும் பிரபாவும் மனதை பாதிக்கும். பாத்திமா சமூக அக்கறை என்றால் கௌரவம் சமூக சாடல்.

வாடிவாசலில் சி.சு.செல்லப்பா ஜல்லிக்கட்டின் நிகழ்வுகளை சொல்லி இருக்கிறார். நர்சிம் பிடிகயிறில் ஜல்லிக்கட்டிற்கு பிறகான நிகழ்வை விளக்குகிறார்.

காவல் கோட்டத்தில் பரந்த மதுரை மாநகரை பார்க்கலாம். மதுரை கதைகளில்  அழகான சின்ன தெருக்களை ரசிக்கலாம். 

மரணங்களை சொல்லி மனிதர்களை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக குன்னாங்குர்  மற்றும் வாழையடி.

மகிழம்பூவில் விழித்தேன் சிரித்தாள் என்றெழுதி அடுத்த புத்தகத்தை வாங்க வைத்துவிடுவார்.

எல்லா கதைகளுமே எளிமையாய் யாரையாவது நினைக்க வைத்து விடுகிறது. 

தீபாவளிக்கு முந்தைய இரவு மதுரையை பார்க்க வேண்டும் என்று நினைக்க வைப்பது இந்த கதைகளின் வெற்றி.

மொத்தத்தில் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட கடலை உருண்டைகள்.

Monday 14 February 2022

புத்தனாவது சுலபம்

எஸ்.‌ராவின் எழுத்து எவருக்கும் எளிதில் பிடித்துவிடும். வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களை கூட வசீகரித்துவிடும். 
அவரது எழுத்துக்கள் காட்சிகளாக கண் முன்னே விரியும்.

புத்தனாவது சுலபம் என்ற சிறுகதை தொகுப்பில் முதல் கதை இரண்டு குமிழ்கள் ஏற்கனவே விகடனில் வாசித்தது. பெண் என்ற ஒற்றை புள்ளியில் இணையும் போலீஸ் மற்றும் கைதி பற்றிய கதை.
நிறைய கதைகள் பெண்களின் வலி மிகுந்த வாழ்வை சொல்கின்றன.

ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை. சாதாரண கதை போல் தோன்றலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை ஏன் என்றால் எனது அம்மாவும் மாமியாரும் ஜெயந்தியே.

எல்லார் வாழ்விலும் ஒரு வைத்தி அண்ணன் அல்லது அஷ்ரப் வந்திருப்பார்கள். அது தான் எஸ்.ராவின் சிறப்பே.


கடல் பார்ப்பது சாதாரண விசயம். அதில் ரசனையை ஏற்றி கடல் மீது காதல் கொள்ள வைக்கிறார். 

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது கதை, கோகிலவாணியின் பின்னால் இருக்கும் கண்ணீர் பக்கங்களை சொல்கிறது. 

நடுவில் இருப்பவள் கதை அழகாக சொல்லி முடிவில் வைக்கும் யதார்த்தமும் அருமை.

புத்தனாவது சுலபம், இன்றைய தலைமுறை இளைஞர்களின் பழக்கங்கள் பற்றிய கதை.

Saturday 12 February 2022

வாசிப்பு

சிறுகதை

சிறுகதை வாசிப்பு

மழை பெய்து முடித்த

மாலையில் பருகும் 

தேநீர் போன்றது 

கடைசி துளியில்

இருக்கும் இனிப்பை 

போல இருக்கும் முடிவு !!!


புதினம் 

புதினங்கள் நெடுந்தூரம் 

பயணங்கள் போல 

அழகான காட்சிகளை 

ரசிக்கலாம் 

வெம்மையையும் குளிரையும் 

உணரலாம்.

சில நேரங்களில் எரிச்சல்

வரலாம்.

ரசித்து அனுபவிக்கலாம் !!!


கவிதைகள் 

கவிதைகள் வாசிப்பு 

கண்ணாடி முன் நின்று 

நம்மை நாமே 

அழகாய் பார்ப்பது போன்ற

உணர்வு 

எல்லாருக்கும் வாய்க்காது !!!








Wednesday 9 February 2022

முதல் கவிதை

பறவைகளை 
பிடிக்கவில்லை
என் காதல் புறா
உன்னை கண்டதிலிருந்து!

வானத்து நிலவை
பிடிக்கவில்லை
என் காதல் நிலா
உன்னை கண்டதிலிருந்து!

மலர்களை
பிடிக்கவில்லை 
என் காதல் ரோஜா
உன்னை கண்டதிலிருந்து!

எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை
என் காதல் தேவதை
உன்னை கண்டதிலிருந்து!!!

Friday 4 February 2022

ஆவாரம்பூ

1

பட்டாம்பூச்சிகளுக்கு கிடைத்த
அளவுக்கு  
தட்டான் பூச்சிகளுக்கு
இடமில்லை 
கவிதைகளில் !

2

மாடு தின்னாததால்
ஊரெங்கும் பூத்துக்
கிடக்கும்.
இன்று புகைப்படம் எடுக்க
தேடினால் கூட 
கிடைக்கவில்லை
ஆவாரம்பூ !!!

3

அம்மாவின் மருதாணி!
அக்காவின் கோலங்கள்!
மாட்டின் கொம்பில் மாமாவின்
வர்ணங்கள்!
தாத்தாவின் பூசை!
மாட்டு பொங்கல் விளையாட்டு
போட்டிகள்!
கிராமத்து அழகியல் !!!


தாத்தா பாட்டி
ஊருக்கு கிளம்பும்
நாளில் குழந்தை
படும் வேதனை எனக்கு
புரிகிறது !
பள்ளியில் விடுதியில்
தங்கி படித்தவன்
என்பதால்!!!


பழைய புகைப்படத்தில்
மாமா மகன்களின் 
சாயலில் மாமாக்கள் !
அக்காவின் சாயலில்
அம்மா !
முறுக்கிவிட்ட மீசையோடு
தாத்தா ! 
பாவமாய் ஆச்சி !
அவள் எடுத்துக் கொண்ட
ஒரே புகைப்படம் 
அதுவாக தான் இருக்கும் !!!

6

விடிகிற பொழுதில்
விழித்து கேட்டார்
ரயில் சிநேகிதர்
நல்லா தூங்கினேங்களா 
சார் என்று !
ரயில் சத்தத்தை 
மீறிய அவரது
குறட்டை என் காதுகளில்
ஒலித்துக் கொண்டே
இருந்ததால் பதிலேதும்
சொல்லவில்லை !!!

7

கை எட்டும் தூரம் வரை
சுவரில் வரைந்து விட்டாள் !
இப்போது கையில் 
பென்சில் கிடைத்தால்
தரையில் வரைகிறாள் !
எங்கள் இல்லத்து
இளவரசி !
அசந்த நேரம் என்
முகத்தில் கூட !
கலைகள் உறங்கலாம்
கலைஞன் உறங்குவதில்லை !!!