Wednesday 26 August 2020

சத்திஸ்கர் அனுபவங்கள்

கி.பி 2016

திடீரென சத்திஸ்கர் சைட்க்கு போகச் சொல்லி அலுவலக நெருக்கடி. ஏற்கனவே போய் இருந்த சதிஸ் சார் ஏற்பாடுகளை செய்ய சத்திஸ்கருக்கு பயணித்தேன்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்தில் தரை இறங்கி ராய்ப்பூர் செல்லும் விமானம்.

ராய்ப்பூர் சென்ற போது மணி காலை 10.30. அங்கிருந்து ராய்காருக்கு ஆறு மணி நேர கார் பயணம். ஹிந்தி தெரியாததால் காரை கண்டுபிடிக்கவே சிரமமாயிருந்தது.

எதிர்பார்த்ததைவிட பெரிய காரை அனுப்பி இருந்தார்கள். விமானத்தில் கொடுத்த காலை உணவு போதாதால் ஏதாவது ஹோட்டலில் நிறுத்த சொன்னேன். ஹோட்டல் இருக்காது தாபா தான் இருக்கும் என்று டிரைவர் சொன்னது புரிந்தது.

அடுத்த அரைமணி வனப்பகுதியில் கார் பயணித்தது. நான் என்னன்னவோ பேசி பார்த்தேன் டிரைவர் பதில் ஏதும் பேசவில்லை. திமிர் பிடித்தவர் என நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் வாயிலிருந்த மொத்த பாக்கையும் துப்பிவிட்டு பேசினார். ஓரிடத்தில் நிறுத்தி சிறுநீர் கழித்தார். நானும் இறங்கி சிறுநீர் கழித்தேன்.

ஹோட்டலை எப்போ கண்ல காட்ட போறானோ தெரியலையே என்று நினைத்து கொண்டேன்.

மதியம் ஒரு மணிக்கு ஒரு தாபாவில் நிறுத்தினார்.

அவரையே சாப்பாடு ஆர்டர் பண்ண சொன்னேன். மசாலா பரோட்டாவும் பன்னீர் மசாலாவும் ஆர்டர் செய்தார். எனக்கு பன்னீர் பிடிக்காததால் சென்னாவும் ஆர்டர் செய்தேன்.
சாப்பிட்டு காரை கிளம்பியதும் என்னை தூங்க சொன்னார். எனக்கு தூங்க மனம் வரவில்லை.

காடு, மலை என கார் செம்மண் சாலையில் கூட பயணித்தது. பாதி இடங்களில் அலைபேசி நெட்வொர்க் கூட இல்லை.

மகாநதியை கடக்கையில் எட்டி பார்த்தேன், செம்மண்ணை கரைத்து ஓடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில் பார்த்த கிருஷ்ணா நதியின் வனப்பு இல்லை மகாநதியிடம்.
பாலத்தை கடந்ததும் பாலத்தை கடந்தற்காக சுங்க கட்டணம் வசூலித்தார்கள்.

கடைசியாய் 4மணிக்கு ராய்காரில் கார் நுழைந்தது. தண்டவாளத்தை கடக்க சப்வை போன்ற இடம் அழகாய் இருக்கும்.
நான் தங்க வேண்டிய நட்சத்திர ஹோட்டலில் விட்டார்.

நட்சத்திர ஹோட்டல் என்றாலும் ரிசப்ஷனில் இருப்பவர்களை தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. காலை உணவும் இரவு உணவும் ஹோட்டலின் அன்பளிப்பு.

தினமும் காலையில் கார் டிரைவர் (வேறு ஒருவர்) வந்து சைட்க்கு கூட்டி செல்வார். அரை மணி நேர பயணம். காரில் ஆல் இந்தியா ரேடியோ ஓடும். அமாரா சத்திஸ்கர் என பாடும்.
போகும் வழியில் ஒரு பேருந்து நிலையம் உண்டு. பேருந்துகள் நிற்பதை வைத்தே அடையாளம் காண முடியும். எந்த வசதியும் இல்லாத குண்டும் குழியுமான இடம்.
ஒரிசா செல்லும் சாலையில் சில கிராமங்களை கடந்து செல்ல வேண்டும்.
ஒரு ஓடை பாலத்தைக் கடந்தால் சைட் வந்துவிடும்.

மாலையில் ஒரிசா மாநிலத்தில் புகுந்து ஒரு காட்டுப் பாதையில்
ஹோட்டலுக்கு திரும்பி வருவோம்.
சனிக்கிழமைகளில். 
தலையைச் சொரிந்து கொண்டு நிற்கும் டிரைவரிடம் நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் அவர் தண்ணியடிக்க.

தினமும் காலையில் வந்து காரை நிறுத்தி விட்டு போன் செய்வார். காலை முதல் மாலை சைட்டிலே இருப்பார். மாலை ஆறு மணிக்கு என்னை பார்த்தவுடன் அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிரும்.

ஒரு விடுமுறை நாளில் காலையில் போன் செய்து சந்திராப்பூர் போகலாமா என்றார். வேறு யாரும் கம்பெனிக்கு இல்லை என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
உண்மையில் நான் அந்த தருணத்தை தவறவிட்டு விட்டேன். மொழி தெரியாத ஊர், மொழி தெரியாத மனிதர்கள் புதுமையான இடம் ரசித்திருக்கலாம்.

நட்சத்திர ஹோட்டல் என்றாலும் அதிகம் பேர் தங்குவதில்லை. அதனால் தங்கி இருப்பவர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஃசெப் நேரில் வந்து புதிய உணவு பற்றி விசாரிப்பார். எல்லாமே இந்தியில் தான். ஒரு எளவும் புரியாததால் அச்சா அச்சா என சொல்லி வைப்பேன். ஆங்கிலத்தில் பேச ஒருவர் மட்டுமே உண்டு.

தமிழ் கண்ணில் படாதா என ஏங்கிய தருணத்தில் ஒரு தமிழ் குடும்பம் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட வந்து பால் வார்த்தது.

ஒருநாள் பணம் எடுக்க பத்து பதினைந்து ஏடிஎம் கூட்டி சென்றார் டிரைவர். கிருஷ்ண ஜெயந்தி முந்தைய நாள் மாலையில் ராய்கார் நகரில் பயணித்தேன். வண்ணமயமாய் இருந்தது.

21 நாளை முடித்து மீண்டும் சென்னைக்கு வர 6 மணி நேர கார் பயணம். விமான தாமதம் என இன்னல்களோடு இரவு 1 மணிக்கு வீடு வந்தேன்.