Wednesday 31 August 2022

மது

இப்போதெல்லாம் சந்தோசம் என்றால் குடி. துக்கம் என்றால் குடி. தனிமையில் இருந்தால் குடி. நண்பர்கள்/சொந்தகாரர்களோடு சேர்ந்து இருந்தால் குடி. பயணம் செய்தால் குடி என சகலமும் மதுமயமாகி விட்டது.

பொதுவாக எப்போது இந்த குடிப்பழக்கம் தொடங்குகிறது. பதின்ம வயதில் பீர் குடிக்கலாம். பீர் அதிகம் போதை தராது, முகப்பொலிவு தரும் என ஆரம்பிப்பவர்கள் ஏராளம். பீர் கசந்து குமட்டினாலும் பழக பழக அடிமையாக்குகிறது.

அடுத்தது, கல்லூரி இறுதி ஆண்டில் பிரிவு உபச்சார விழாவில் குடியை தொடங்குபவர்கள் ஏராளம். இவர்களின் தொடக்கமே ஹாட் ட்ரிங்க்ஸ்ல் தான். கல்லூரி முடிந்து வேலை என தொடரும் நாட்களில் பெரும் குடியர்களாக மாறுவார்கள்.

அடுத்தது, அலுவலங்களில் ப்ராஜெக்ட் டார்கெட்டை அடைந்ததும் பார்ட்டி, ப்ராஜெக்ட் நிறைவடைந்தால் பார்ட்டி, புதிய ப்ராஜெக்ட் கிடைத்தால் பார்ட்டி என நிறைய பார்ட்டிகள் நடக்கிறது. இதில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் மதுவின் பிடியில் சிக்குகிறார்கள். அலுவல் சார்ந்து வெளிநாடு சென்று அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப குடிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

அடுத்தது, உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலைக்கு செல்பவர்கள் அலுப்பு தீர குடியை ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளது.

மது பிரியர்களின் வகைகளை பார்ப்போம்.

தினமும்/ வாரந்தோறும் சிறிய அளவில் வீட்டில் வைத்தே குடித்துவிட்டு தூங்கிவிடுபவர்கள்.

வார இறுதிக்கு காத்திருந்து கடமை தவறாமல் மொடாக்குடி குடிப்பவர்கள். 

கல்யாணம், காதுகுத்து, எழவு வீடு என குடிப்பவர்கள்.

அலுவலக பார்ட்டிகளில் மட்டும் குடிப்பவர்கள்.

குடியை நேசித்து ரசித்து ஆத்மார்த்தமாக குடிப்பவர்கள் கடைசி வகையறா. இவர்கள் மெதுவாக குடிப்பார்கள். ஓர் இரவு முழுக்க அல்லது இறங்க இறங்க இரண்டு மூன்று நாட்கள் திருவிழா போல் குடித்து கொண்டாடுவார்கள்.

போதையில் பொதுவாக செய்யும் விசயங்கள்.

சிலர் போதையாகி விட்டால் படுத்து தூங்கி விடுவார்கள். பஸ்/ ரயிலில் பயணம் செய்ய குடித்துவிட்டு பயணிப்பார்கள்.

சிலர் போதையாக ஆன யாரைவது திட்டுவது வழக்கம். அப்போது பேசுவது எல்லாம், சாதாரணமாக அவர்களால் பேச தைரியமில்லாத வார்த்தைகளாக இருக்கும். அதை போதையின் கணக்கில் ஏற்றிவிடலாம் என்பது அவர்களது கணக்கு. பொண்டாட்டி திட்டுபவர்களும், போன் பண்ணி யாரைவது திட்டுபவர்களும் உண்டு.

சிலர் போதையாகி விட்டால் அட்வெண்சரஸ் ஏதாவது செய்ய ஆரம்பிப்பார்கள். வாகனம் ஓட்டுவது, கிணற்று விளிம்பில் நடப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்றவை.

சிலர் ஆராய்ச்சி கூட செய்வார்கள், சரியாக எத்தனையாவது பெக்கில் போதை ஏற துவங்குகிறது போன்ற ஆராய்ச்சிகள் உண்டு.

போதையில் தன்னை மறந்து இருந்த இடத்திலே மட்டையாகி விடுபவர்கள் சிலர்.

அரசே மதுவிலக்கு துறையின் கீழ் மது விற்பனை செய்கிறது. கூடிய விரைவில் ரேசனில் கூட மது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குடி குறைவது எப்போது

சிலர் கோவிலுக்கு மாலை போட்டால் குடிக்க மாட்டார்கள். சிலர் பொண்டாட்டிக்கு பயந்து குடியை நிறுத்தி விடுவது உண்டு.

மேற்கத்திய நாடுகளில் குளிரை வெல்ல தினமும் குடிப்பார்கள். இங்கே அப்படி செய்தால் குடி அழிந்து போகும்.

மது புட்டியில் குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் விழிப்புணர்வு வாசகம் என்பதை நம்ப வேண்டும். அரசு நம்புகிறது.


Friday 26 August 2022

புதிய ஏழு உலக அதிசயங்கள்

 1. தாஜ்மகால்

இந்தியாவில் ஆக்ராவில் உள்ளது.

ஷாஜகான் என்னும் மன்னரால் 1631 - 1654ல் கட்டப்பட்டது.

பளிங்கு கற்கள் மற்றும் வேலைப்பாடுகள் தான் இதன் சிறப்பு.


பாரசீக கட்டடக்கலை வகையை சார்ந்தது.

2. சீனப் பெருஞ்சுவர் 

ஆசியாவில் உள்ள மற்றொரு உலக அதிசயம்.

மங்கோலியர்கள் மற்றும் மஞ்சூரியர்களிடன் இருந்து சீனாவை காப்பற்ற கட்டப்பட்ட பாதுகாப்பு அரண் தான் இந்த சுவர்.

6400 கிமீ நீளமுடையது. கிமு 200ல் கட்டப்பட்டது.



இதன் கட்டுமானத்தின் போது 20 முதல் 30 லட்சம் பேர் இறந்திருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.

3. சிச்சென் இட்சா 

சிச்சென் இட்சா தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் யுகட்டான் என்ற பகுதியில் உள்ளது. மாயன் நாகரிக காலத்தை சார்ந்தது.


கிபி 600ஆம் ஆண்டுகளின் தொல்பொருள் எச்சங்கள் சிச்சென் இட்சா.

4. மச்சு பிச்சு 

மச்சு பிச்சு என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.



தென் அமெரிக்கா நாடான பெரு நாட்டில் உள்ளது. 1450ல் கட்டப்பட்ட இந்த நகரம்.

5. பெட்ரா 

பெட்ரா, ஜோர்டான் நாட்டில் உள்ள தொல்பொருள் நகரம்.  கிமு ஆறாம் நூற்றாண்டை சார்ந்தது.



6. கொலோசியம் 

கொலோசியம் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் உள்ள நீள்வட்ட வடிவ கட்டிடம். கிபி 72ல் தொடங்கி கிபி 80 வரை கட்டப்பட்டது.  கிபி 96 வரை கட்டிடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.



7. கிறிஸ்து சிலை

மீட்பர் கிறிஸ்து சிலை, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். 

இந்த சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர்கள் உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர்கள் உயரமும், 30 மீட்டர்கள் அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். 



1922 - 1931 வரை கட்டப்பட்டது.


Thursday 18 August 2022

தேனி ~ மகரந்தக் கருவூலம் தேடி

தேனி என்றதும் முதலில் எனக்கு தெரிந்தது, நெடுஞ்சாலையில் இருக்கும் எங்கள் ஊர் பக்கத்து ஊரான மானூரில் நிற்காமல் செல்லும் பேருந்து, தேனி செல்லும் பேருந்து என்பதே.

பிறகு எங்கள் பக்கத்து ஊரான மானூரின் பெயரில் இன்னொரு ஊரான சின்னமனூர். 

கொஞ்சம் வளர்ந்த பின் கள்ளிக்காட்டு இதிகாசம் மூலம் வைகை அணை தெரியும்.

தேனி மாவட்டத்தின் சிறப்புகளை / வரலாற்றை அழகு தமிழில் விஜயானந்தலட்சுமி எழுதியுள்ள இந்த புத்தகம் மூலம் தெரிந்து கொண்டேன்.

சமீப காலமாக முல்லை பெரியாறு பிரச்சனையால் பென்னிகுவிக் பற்றி தெரியும்.  மற்ற விசயங்கள் எல்லாமே எனக்கு புதிது. 

ஆய்ந்தறிந்து 44 தலைப்புகளில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகம் பற்றி கீச்சகத்தில் வந்ததும் ஆசிரியரிடமே வினவினேன் எந்த மாதிரியான புத்தகம் என்று. அவர் அளித்த பதிலே இந்த புத்தகத்தை வாங்க வைத்தது.

சுந்தர பாண்டியன் படத்தில் வரும் கருத்த ராவுத்தர் என்ற பெயரை சாதாரணமாக கடந்திருப்போம். ஆனால் கருத்த ராவுத்தர் பற்றி இவர் தரும் தகவல்கள் வியக்க வைக்கிறது.

ஒவ்வொரு தலைப்பையும் முடிக்கும் இடத்தில் அடுத்த தலைப்பை இணைத்திருக்கும் இவரது எழுத்தாழுமை சிறப்பு.

சங்க கால நடுகல் முதல் சமகால நியூட்ரினோ வரை எல்லாவற்றையும் எழுதியுள்ளார். 

ஒரு பெண்ணாக இந்த நூலுக்கு இவர் எவ்வளவு பேரை சந்தித்திருப்பார், எவ்வளவு நூல்களை ஆய்ந்து இருப்பார் என்று நினைக்கும் போதே இவரை பாராட்ட தோன்றுகிறது.

சிறிய அளவிலே உள்ள முன்னுரை சொல்கிறது இது இவரது இரண்டாவது நூல் என்று. இவர் இன்னும் நிறைய படைப்புகளை தமிழுக்கு தர வேண்டும்.

பசுமை நிறைந்த தேனி மாவட்டத்தை மண் மணம் மாறாமல் எழுதியுள்ளார். பொதுவாக வரலாற்றை வாசிப்பது எரிச்சல் தரும். மதனின் வந்தார்கள் வென்றார்கள் வித்தியாசமான அனுபவத்தை தரும். அதுபோல மனிதர்களை வைத்து வரலாற்றையும் சிறப்புகளையும் சொல்லி இருப்பது நல்ல சுவராஸ்யமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

Saturday 13 August 2022

சதுரங்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு
நண்பனோடு சதுரங்கம் !

எனக்கு குதிரைகளை லாவகமாக
பயன்படுத்த தெரியாது !

அடுத்தடுத்த ஐந்து காய்
நகர்த்தலை யோசித்து 
அவன் குதிரையை 
தாக்கினேன்
அவன் என் மந்திரியை
முடித்தான் !

பழிக்கு பழியாக
நான் அவன் மந்திரியை
குறிவைத்த போது
என்‌ யானையை கொன்று
விட்டான் !

என் ஆத்திரத்தை பயன்படுத்தி
ராணியையும் கொன்றான்.
அடுத்து என் ராஜாவுக்கு
கிடுக்கிப்பிடி போடுவான்
என்ற நொடியில்
காய்களை கலைத்துவிட்டு
எழுந்தேன் !

ஆட்டம் சமனில் முடிந்தது!

எனக்கு குதிரைகளை லாவகமாக
பயன்படுத்த தெரியாது!!!


Wednesday 10 August 2022

சீனு

சீனுவை உள் அறைகளுக்கு கூட்டி வருவது அப்பாவுக்கு பிடிக்காது. அதத அந்தெந்த எடத்துல தான் வைக்கனும் என்பார் அப்பா.

ஆனால் சாப்பிட உட்காரும்போது சீனு சாப்பிட்டானா என்று கேட்டுவிட்டு தான் உட்காருவார்.

ஆற்றில் இறங்க பயப்படுவான், படித்துறையில் நின்றே குளித்துவிடுவான். யாரையாவது பயமுறுத்த வேண்டும் சீனுவை வைத்து சாதிக்கலாம்.

அம்மாவை பஸ் ஏற்றிவிட தினமும் பஸ் ஸ்டாப் வரை சென்று வீட்டுக்கு திரும்பி விடுவான் சீனு. ஒருநாள் அவனும் பஸ்ஸில் ஏற முயற்சிக்க எல்லாரும் துறத்த பின்னால் வந்த பஸ் அடித்து விட்டான்.

காயங்கள் கட்டுகளோடு, எங்களோடே பத்து நாட்கள் படுத்திருந்த சீனு மரணித்து விட்டான்.

அதற்கு பின் எத்தனையோ பேர் வந்தார்கள், வீட்டு காவலர்களாக இருந்தார்களே தவிர, சீனு போல் வீட்டில் ஒருவனாக மாற முடியவில்லை.

Tuesday 2 August 2022

அஜித் குமார் 30 ஆண்டு - சினிமா

அஜித் குமாருக்கு மைல்கல்லாக அமைந்த 30 படங்கள்.

1. ஆசை 

அமராவதி, பவித்ராவின் பாடல்கள் ஹிட் ஆனாலும் முதல் வெற்றிப் படம் ஆசை தான். இந்த படத்திற்கு பிறகு ஆசை நாயகன் என்ற அடைமொழியும் வந்தது.

2. சிட்டிசன் 

அஜித் வித்தியாசமான தோற்றங்களில் நடித்த படம். குறிப்பாக மீனவர் கதாபாத்திரம் மூலம் இளம் நடிகர்கள் யாரும் தொடாத இடத்தை தொட்டார்.

3. அட்டகாசம் 

முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக நடித்த படம். எதிரியாக நினைத்தவர்களை வச்சு செய்த படம். வேட்டி சட்டை கெட்டப் தான் சிறப்பே. 

டைட்டில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என போட சொன்னார் அஜித்.

4. என் வீடு என் கணவர் 

அஜித் திரையில் தோன்றிய முதல் படம். ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் இந்த படம் வெளியானதே தெரியும். இப்போது யூடியூப்ல் இந்த படத்தின் அஜித் நடித்த காட்சிக்கு டிமாண்ட்.

5. நேர் கொண்ட பார்வை 

பாரதியின் வரிகள் தலைப்பு. பெண்களுக்கென குரல் கொடுத்த படம். அஜித் முதல்முறையாக வக்கீலாக நடித்தார்.

6. தீனா 

அஜித் எனும் நடிகர் தல யான படம். முதல் முறையாக மீசையை ட்ரிம் செய்து நடித்த படம். அஜித்தை முதல் முறையாக தல என கூப்பிட்டவர் மகாநதி சங்கர்.

7. ஆரம்பம் 

முதல் முறையாக தமிழ் சினிமாவில் டைட்டில் வைக்காமல் டீசர் வெளியான படம். 

8. முகவரி 

ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனாக அஜித் வாழ்ந்த படம். அஜித்துக்கும் ரசிகர்களுக்கும் மனதுக்கு நெருக்கமான படம்.

9. வாலி 

அஜித்க்குள் ஒளிந்திருந்த நடிகன் வெளிப்பட்ட படம். மாற்று திறனாளி தேவாவாக பட்டையை உரித்து இருந்தார். முதல் இரட்டை வேட படம்.

10. பில்லா 

மற்றவர்கள் பிற மொழி படங்களை ரீமேக் செய்து கொண்டு இருந்த காலத்தில் ஏற்கனவே ஹிட்டான கதை தெரிந்த படத்தை ரீமேக் செய்து மாபெரும் வெற்றியும் பெற்றவர் அஜித்.

11. விஸ்வாசம் 

குடும்பங்கள், குழந்தைகள் என காதல் கோட்டைக்கு பிறகு அஜித்தை கொண்டாடிய படம்.

12. அமர்க்களம் 

மனைவி ஷாலினியோடு சேர்ந்து நடித்த ஒரே படம். 25 வந்து படமும் கூட.

13. காதல் மன்னன் 

தொடர்ந்து நாலு தோல்வி படங்களுக்கு பின் மீண்டு வந்த படம். இந்த படத்தின் அறிமுக காட்சியில் அஜித் சொல்வார். ஜெயிக்கிறதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.

14. மங்காத்தா 

தமிழ் சினிமாவில் கதாநாயகன் நரைத்த தலையோடு நடிக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்த படம். 50வது படம்.

15. உன்னை கொடு என்னைத் தருவேன் 

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் என்று இடம்பெற்ற முதல் படம்.

16. வரலாறு 

மூன்று தோற்றங்களில் நடித்த படம். நடிப்பு, நடனம் என எல்லா பக்கமும் ஸ்கோர் செய்த படம்.

17. ஆனந்த பூங்காற்றே 

மெல்லிசான தாடியோடு நடித்த படம். பெண்களுக்கு மிகவும் பிடித்தது என்பதை தாண்டி ஆண்களுக்கும் அது போல் தாடி வைக்க ஆசை வந்தது.

18. அசோகா 

ஹிந்தியில் கௌரவ தோற்றத்தில் நடித்த படம். அந்த நேரத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்.

19. பில்லா 2 

 சென்னை மாயாஜால் திரை அரங்கில் ஒரே நாளில் அதிக காட்சிகள் ஓடி சாதனை புரிந்த படம்.

20. காதல் கோட்டை 

வித்தியாசமான காதல் கதை கொண்ட படம். அஜித்தை எல்லா வீடுகளுக்குள்ளும் கொண்டு சென்ற மாபெரும் வெற்றி படம்.

21. இங்கிலீஷ் விங்கிலீஷ் 

அஜித் அஜித்தாகவே வந்த படம். ஹிந்தியில் அபிதாப் நடித்தது. தமிழில் தன்னம்பிக்கை கொடுக்கும் கதாபாத்திரம் என்றதும் ஸ்ரீதேவியின் சாய்ஸ் அஜித்.

22. கிரீடம் 

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் சுஜாதா கிரியேஷன்ஸ் மீண்டும் தயாரித்த படம். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் வசனம் எழுதிய படம்.

23. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 

நிறைய கதாபாத்திரங்கள், எல்லாருக்கும் சமமான வேடம். குறிப்பாக கதாநாயகியை மையப்படுத்தி கதை. அஜித்தின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட முந்தைய படத்தின் சாயல். ஆனாலும் வெற்றி படம்.

24. ரெட் 

அஜித் முதல் முறையாக மொட்டை தலையோடு நடித்த படம். இன்றும் மதுரை அஜித்தின் கோட்டை காரணம் ரெட்.

25. பரமசிவன் 

போட்டி என்பதை தாண்டி பொறாமையோடு தமிழ் சினிமாவில் உருவகேலி நடந்தது. அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் உடல் எடையை குறைத்து வந்தார் அஜித். அது அவர் தொழில் மீது கொண்ட பக்தியை காட்டியது. உடல் எடையை வெகுவாக குறைத்த பின் நடித்த படம். 

26. நீ வருவாய் என 

கௌரவ தோற்றம் என்றாலும் எல்லாருக்கும் பிடித்தமான படம்.

27. உல்லாசம் 

இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில் அபிதாப் பச்சன் தயாரிப்பில், விக்ரமோடு சேர்ந்து நடித்த படம். பாடல்கள் பாடியவர்கள் பெயரில் அஜித்தும் இடம் பெற்றது - வாலிபம் வாழ சொல்லும் பாடலில்.

ஜாம்பவான் எஸ்பிபியோடு சேர்ந்து நடித்த படம்.

28. திருப்பதி 

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் அஜித் நடித்த படம்.

29. ராசி 

முதல் முறையாக அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்த படம். முதல் கிராமத்து கதையும் கூட.

30. வலிமை 

கோரோனா தாக்கத்தால் படப்பிடிப்பு தள்ளி போய், பட தகவல் பற்றி ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து உலக முழுக்க சேதி பரவிய படம்.

படம் வந்த பிறகு இணைய ரசிகர்களின் கோரமுகத்தை வெளி கொண்டு வந்த படம். இசையமைப்பாளரை திட்டி, இயக்குநரை திட்டி கடைசியில் அஜித்துக்கு அட்வைஸ் செய்தனர் சில இணைய ரசிகர்கள்.