Sunday 29 April 2012

கீழ பிள்ளையார் குளம்


கீழ பிள்ளையார் குளம்  
திருநெல்வேலி மாவட்ட  கிராமம். தொழில்  பெரும்பாலும்  விவசாயத்தை  அடிப்படையாய்  
கொண்டது . பெண்கள்  பீடி  சுற்றும்  தொழில்  செய்கிறார்கள் .

அருகில்  உள்ள  ரயில்  நிலையம்  தாழையூத்து  10kms திருநெல்வேலி  25kms
அருகில்  உள்ள  விமான  நிலையம்  தூத்துக்குடி  60-65 kms மதுரை  150 kms
அடிப்படை வசதிகள்
·         தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. நிடுநிலை பள்ளி 3 km தொலைவில் மேல பிள்ளையார் குளத்தில் உள்ளது.உயர் நிலை பள்ளி 9 km தொலைவில் மானூரில் உள்ளது.
·         மருத்துமனை 4.5km தொலைவில் அலவந்தான் குளத்திலும் 9 km தொலைவில் மானுரிலும் உள்ளது.
·         வங்கி உரக்கடை டாஸ்மாக் போன்ற வசதிகள் மானூரில் உள்ளன.
பேருந்து

திருநெல்வேலி  ஜங்ஷன்ல்  இருந்து  டவுன்  ரஸ்தா  மானூர்  வழியாக
  • சீதாபதி  8 முறை  (தடம்  எண் 46)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  37G)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  23B)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  – )
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  –) (சொகுசு  பேருந்து )

கல்வி

மூத்த  தலைமுறையினர்  கல்வி  கற்கவில்லை. அவர்களுக்கு  கேள்வி  ஞானமும், அனுபவ  அறிவும் அதிகம். இரண்டாம்  தலைமுறையினர்  கொஞ்சம்  பேர்  பாபநாசம்  செயின்ட்  மேரிஸ்  பள்ளியில்  படித்துள்ளனர். சிலர்  பட்டாளத்தில் (மிலிடரி ) வேலை  பார்த்துள்ளனர். பலர்  இந்தியா  சிமிண்ட்ஸ்  மற்றும்  கிருஷ்ணா  மைன்ஸ்ல்  நிரந்தர  தொழிலாளியாய்  வேலை  பார்த்து  ஓய்வு 
பெற்றுள்ளனர் . மூன்றாம் தலைமுறையினர்  கல்வி  100% இல்லை  என்றாலும்  பேஸ்புக்கு  வந்து  விட்டனர்.
நான்காம்  தலைமுறையினர்  100% கல்வி

விளையாட்டு

இன்றைய  சூழலில்  கிரிக்கெட்  மட்டுமே பிரதான விளையாட்டு. முன்  நாட்களில்  பாண்டி, பல்லாங்குழி, பம்பரம், சிலன்குச்சி , கோலிகாய், மரம்  ஏறி  குரங்கு, கள்ளன்  போலீஸ்  போன்ற  விளையாட்டுகள்  இருந்தன.
கோவில்கள்

கருப்பசாமி  கோவில்  ஓடக்கரை

மேல பிள்ளையார் குளம்  அருகில்  ஒரு  ஓடை  கரையில்  இருக்கிறது   இந்த  கோவில். முன்னோர்கள்  கருப்பசாமியை ஊர்க்கு  கொண்டு  வரும்  போது இந்த  ஓடை  கரையில்  வைத்து  விட்டு  இளைப்பாறினார். அதற்கு  பின்  அந்த  இடம்  பிடித்து  போய் 
விட்டதால் கருப்பசாமி  ஓடைகரையை  விட்டு  வரமறுத்து  விட்டதாக  தகவல்.

கருப்பசாமி  கோவில்

ஊரின்  மத்தியில்  அமைத்துள்ளது  இந்த கோவில். ஓடை  கரை  கருப்பசாமியில்  இருந்து  படி மண்  எடுத்து  வந்து  ஊருக்குள்  பிரதிஷ்டை  செய்யபட்டுள்ள கோவில்.

காட்டுமாடசாமி கோவில்

குறிச்சி  நகர்  அருகில்  ஒரு  ஓடை  கரையில்  இருக்கிறது  இந்த கோவில். இந்த  கோவிலில்  தளவாய்  மாடன் தளவாய்  மாடத்தி  மற்றும்  சங்கலி  பூதத்தார் அருள்  பாலிக்கிறார்கள் .

குறிச்சி  உடையார்  சாஸ்தா

குறிச்சி  நகரின்  மைய  பகுதியில்  அமைத்துள்ளது இந்த கோவில்.

அரிஹர  புத்தனார் சாஸ்தா

குளத்தின்  வடக்கு  கரையில்  வீற்றிருக்கிறார்  இந்த  சாஸ்தா . கரை  சாஸ்தா  என்று  பெரும்பாலும்  அறிய  படுகிறார். பணிகுனி  உத்திர  தினங்களில்  சாஸ்தா  வழிபாடு  பிரசித்தி  
பெற்றது.

முத்துவீரன்  கோவில்

குளத்தின்  கிழக்கு  கரையில்  மறுகால்  மடை  அருகில்  இருக்கிறது  இந்த  கோவில் .

உதிரமாடன்  கோவில்

ஊருக்கு கிழக்கே  செழிய  நல்லூர்  செல்லும்  வழியில்  இருந்து  விலகி  ஆரோரத்தில்  இருகிறார். இங்கு  உதிரமாடன் , சிவனார் , பேச்சி  அம்மாள் , முண்டன் , தளவாய் மாடன் , தூசி மாடன் , துளசி மாடன்  உள்பட  21 தெய்வங்கள்  இருப்பது சிறப்பு .

மாடசாமி  கோவில்

ஊரின் வடக்கு பகுதியில்  உள்ளது  மாடசாமி  கோவில். ஊர்  போது  கோவில்களில்  இதுவும்ஒன்று. மழை வேண்டி  மாடசாமிக்கு கொடை கொடுப்பது  வழக்கம் .

அம்மன்  கோவில்

ஊரின்  வடக்கு பகுதியில்  வயகாட்டினுள்  இருக்கிறது  அம்மன்  கோவில். இங்குள்ள  தான் தோன்றி  அம்மனுக்கு  மேள சத்தம்   மற்றும்  வில்லிசை  பிடிக்காது. எனவே  இந்த  கோவிலுக்கு  குரு  பூஜை  மட்டுமே  
உண்டு  கோவில்  கொடை  கிடையாது.

கோவில் கொடை

கோவில் கொடை பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும். 
வியாழகிழமை இரவு கரகாட்டம் நடை பெறும். இப்போதெல்லாம் கரகாட்டம் முகம் சுழிக்கும் 
வகையில் இருப்பதால் பாட்டு கச்சேரி வைக்க ஆரம்பித்து விட்டோம்.
வெள்ளி கிழமை மத்தியான கொடை.
வெள்ளி கிழமை அர்த்த ஜமாத்தில் நடை பெறும் சாம கொடை .
சனிகிழமை   காலை கிடா வெட்டு.
இப்போது கொடைகளில் சரக்கும் சண்டையும் சாதாரணமாகி விட்டது.  
சிறப்புகள்
ஐப்பசி மாத மழைக்கு பின் பச்சை பசேலென வயல் வெளிகளை பார்க்கலாம். குற்றால சீசனில் ஊரில் இருந்து கொண்டே சாரல் ரசிக்கலாம். மழை காலங்களில் ஓடைகளில் செம்மண் கலரில் நுரையுடன் கூடிய வெள்ளம் பார்க்கலாம். தவளை கத்தும் இரவுகள். பனி பெய்யும் காலைகள். பொங்கல் விழா போட்டிகள். இன்னும் மண் மணம் மாறாத நிறைய விஷயங்கள் உள்ளன.


அழிந்து  போன  அழியாத  நினைவுகள்

குத்துக்கல்

குளத்தின்  நடுவே  தூண்  போன்ற  செங்குத்து  கல்  இருந்தது. அது  தான்  குத்துக்கல். குளத்து  
தண்ணீர்  குத்துகல்லை மூழ்கடித்து விட்டால்  குளம்  நிறைந்ததாய்  அர்த்தம். கரை  சாஸ்தா 
கோவிலில்  இருந்து  நீந்தி  சென்று  குத்துகல்லை  தொட்டு  விட்டால்  தான்  நீச்சலில் பாஸ். முதலில்  குத்துக்கல்  உடைத்தது. தற்போது  குத்துக்கல்  இல்லாமலே  போய்விட்டது. 
ஆனாலும் நினைவுகளில்  நீங்காமல்  உள்ளது  குத்துக்கல்.

ஊர்  கிணறு

ஊரில்  புழக்கதிற்கான  தண்ணீருகென  ஒரே கிணறு மாடசாமி  கோவில் அருகில்  இருந்த 
ஊர்கிணறு. யார்  வேண்டுமானாலும்  தண்ணீர்  இறைத்து  கொள்ளலாம்.( தற்போது  உள்ள  
நல்லிகளில்  அடுத்த  தெரு  ஆட்கள்  தண்ணீர்  பிடிக்க  முடியாது!) மேல்நிலை  நீர்தேக்க  
தொட்டியும்  குழாய் இணைப்புகளும்  வந்தபின்  ஊர்கிணறு  நாரை கிணறாய் மாறிவிட்டது. 
ஊர்கிணறு  சமத்துவத்தை  நிலைநாட்டியது. ஆனால் குழாயடிகளோ  குடும்மிபிடி  சண்டைகளை   வளர்த்துவிட்டன

கமலை  கிணறு

உயர்  தொழில்  நுட்பத்தின்  உதவியால்  மின்  மோட்டார்  பம்ப்களும், நீர்  முழ்கி  பம்ப்களும்  
வந்து  கமலை  கட்டி  இறைப்பதை  ஓரங்கட்டிவிட்டன. சீரான  இடைவெளியில்  கூனையில்  
இருந்து  வழியும்  நீரை  மீண்டும்  ஒரு  முறை  காண  மனது  அலைபாய்கிறது. 
கமலைகினறுகளுக்கு சாட்சியாய் பெரிய  கற்கள்  மட்டுமே  இப்போது  உள்ளன.


பனங்காய்  வண்டிகள்

ஒவ்வொரு  வருட  பனங்காய்  சீசனிலும்  தின்று  முடித்த  பனங்காய் யை  சக்கரமாய்  பயன்படுத்தி  ஓட்டும்  வண்டி  இபோது  வழகொழிந்து  விட்டது. ஒரு  சக்கர  வண்டி  ஓட்டினால்  சிறுவன்  
என்றும் , இரு  சக்கர  வண்டி  ஓட்டினால்  பெரிய  சிறுவன்  என்றும்  கோட்பாடு  இருந்தது. செல்  போன்  கேம்களின்  முன்னே  சிதைந்துவிட்டன   பனங்காய்  வண்டிகள்.



கல்  திரட்டு  காடுகள்

கல்திரட்டு  காடுகள்  சிறந்த  விவசாய  நிலங்கள்  இல்லை  என்றலும்  உளுந்து, பாசி பயிறு 
போன்ற  மானாவாரி  பயிர்கள்  விளைய  ஏற்றவை . கல் திரட்டு  காடுகளில்  அடிக்கும்  கற்று  வீட்டை  விட்டு  வெகு  தூரம்  வந்து  விட்டதாய் 
சொல்லும். காற்றாலைகாரன் திருடி  விட்டான்  கல்  திரட்டு  காடுகளை  (காற்றை).

Wednesday 18 April 2012

சென்னையில் ஹைடெக் பிச்சைகாரர்கள்


சம்பவம்  1

நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் நின்று ஒருத்தர் என்கிட்ட எக்மோர்க்கு பஸ் 
வருமானு கேட்டார்.
நானும் ஆர்வ மிகுதில வரும்  23C ல  போங்கனு  சொன்னேன். அப்படியே பஸ்க்கு ஒரு  4 ருபாய்  கொடுங்கன்னு  கேட்டார்

சம்பவம்  2

நந்தனம்  பஸ்  ஸ்டாப்  அருகில்  ஒரு  பாட்டி, அண்ணா ஒரு  5 ருபாய்  இருந்தா குடு  என்று  டிமான்ட்  பண்ணி  கேட்கிறது. அந்த  பாட்டி  பிச்சை  கேட்டது  கூட  ok. ஆனா  அண்ணா னு சொல்றது  எவ்வளவு  பெரிய  கொடுமை

சம்பவம்  3

சைதாபேட்டை  பஸ்  ஸ்டாப்  (போலீஸ்  ஸ்டேஷன் ), ஒரு  பிச்சைக்காரன்  பிச்சை  கேட்டான், நானும்  என்  நண்பனும்  கையில்  இருத்தசில்லறை  எல்லாத்தையும்  கொடுத்து  விட்டோம், அவன்  5 ருபாய் 50 பைசா  தான்  இருக்கு  டீ 6 ரூபா.
6 ரூபா  இல்ல  என்று  எங்கள்  இருவரிடமும்  திரும்ப திரும்ப  கேட்கிறான்  . 

சம்பவம்  4

கோடம்பாக்கம்  ரயில்  நிலையம், தினமும்  ஒரு  பெரிசு  ட்ரெயின் விட்டு  
இறங்கும் போது யாரிடமாவது  ஒரு   5 ருபாய்  அடித்து {பிச்சை}  சென்று  விடுகிறது .

எடுக்கிறது  பிச்சைனாலும்  இவங்க  பன்ற  ரவுசு  தாங்க முடியல .

ட்ரெயினில்  எத்தனையோ மாற்று திறனாளிகள் எதையாவது  வியாபாரம் செய்துபிழைகிறார்கள்.ஆனால் திருநங்கைகள் கறாரா காசு கேட்கிறாங்க .

இவர்கள்  எல்லாருமே  அடித்தட்டு  மக்கள்  இவர்கள்  எப்படி  ஹைடெக்  பிச்சைகாரர்கள்  ஆக முடியும் ?

சென்னைன் டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள்  லிஸ்ட்

நம்பர்  10

கோயம்பேடு  தனியார்  பேருந்து  நிலையம் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில்தரமற்ற  உணவையும்  தண்ணீர்  பாட்டில்களையும்  விற்கும்  ஹோட்டல்  
நிர்வாகத்தினர். [பசியாற்றுவதை   விட  பணம்  பறிப்பதே  இவர்கள்  குறி / வெறி ]

நம்பர்  9

அரசு  அலுவலகங்களில்  எதாவது  வேலை  நடக்க  வேண்டும்  என்றால் எனக்கு  டீ வாங்கி சிகரட்  வாங்கி தா  என்று  உயிரை வாங்கும்  அரசு  அலுவலக  சிப்பந்திகள். [அரசு  பள்ளியில்  முன்னாள்  மாணவர்  TC வாங்க கூட  இவர்களுக்கு  காசு 
கொடுக்க  வேண்டி  உள்ளது ]

நம்பர்  8

சென்னையில்  வீடு  தேடுவோரிடம்,24 மணி  நேரம்  தண்ணீர்  வரும், கதவை  
திறந்தால்  காற்று வரும் (திருடனும்  கூடவே  வருவான்), இருண்ட  வீட்டில்  லைட் போட்டால் வெளிச்சம் பயங்கரமா  வரும் (கரண்ட்  பில்  அவங்க  அப்பனா 
கட்டுவான்)என்று  பொய்  புளுகி, ஒரு  மாத வாடகையை  கமிஷன்  ஆக  பெற்று  கொள்ளும்  ப்ரோகர்கள்

நம்பர்  7

பண்டிகை  காலங்களில் போதுமான  வசதி  இல்லாத  பேருந்துகளுக்கு  கூட 1000 ருபாய்  1500 ருபாய்  வசூல்  செய்யும்  தனியார்  பேருந்து  நிர்வாகத்தினர்  மற்றும்  மூட்டை  பூச்சியை  கூட  ஒழிக்க  முடியாத  அரசு  பேருந்து  நிர்வாகத்தினர்.

நம்பர்  6

தாங்கள்  மட்டும்  வேலை  செய்வதாக  நினைத்து  கொண்டு  இந்த  டேபிளில்  
இருக்கும்  பைலை  அடுத்த  டேபிள் ளுக்கு நகர்த்த  கூட காசு  கேட்டும்  அரசு  உழியர்கள்  [ சனிக்கிழமைகளில்  ரொம்ப  மோசம்  
பண்றாங்க ]

நம்பர்  5

நான்  நடிச்ச  படம்  ரொம்ப  நல்லா இருக்கு  தியேட்டர்ல  போய் பார்  என்று  TV ல்  சேர் போட்டு  உட்கார்ந்து  மொக்க  போடும்  சினிமாகாரர்கள்  [படம்  நல்லா  இருக்குனு  நாங்க  (ரசிகர்கள்) சொல்லணும்டா  நாயே ]

நம்பர்  4

இளம்  தலைமுறையினரின்  சான்றிதழ்களை  வாங்கி  வைத்து  கொண்டு, 
கம்பெனி  விட்டு  செல்வதென்றால்  பணம் கொடு  (லட்சங்களில் ) என்று  மிரட்டி  இளம்  தலைமுறையினரின் உழைப்பை  / அறிவை* உறிஞ்சும்  தொழில்  அதிபர்கள்  (*conditions apply)

நம்பர்  3

சாதாரண   காய்ச்சலுக்கு  கூட  இந்த  டெஸ்ட்  எடு  அந்த  டெஸ்ட் என்று  பணத்துக்கு  மாரடிக்கும்  மருத்துவமனை  நிர்வாகம்  மற்றும்  அதற்கு 
துணை  போகும்  மருத்துவர்கள்.

நம்பர்  2

வாக்குறுதிகளை  வசனங்களாக   படித்து  ஒப்பித்து  விட்டு  ஓட்டுக்கு  1000 
கொடுத்து  விட்டு  கோடிகளில் கொள்ளை  அடிக்கும்  அரசியல்வாதிகள்.

நம்பர்  1

இன்ஜினியரிங்  சீட்க்கு  10, மெடிக்கல்  சீட்க்கு  40 என்று  கல்வியை  கூட காசாக்கும் கல்வி  தந்தைகள்(?!).

இன்னும்  பல  ஹைடெக்  பார்ட்டிகள்  இருக்கிறார்கள்  கோவிலில்  சாமி தரிசனத்துக்கு  காசு … etc,

மேற்  குறிப்பிட்டவர்களில்  நல்ல மனிதர்கள்  இருக்கிறார்கள், இன்னும்  பலர் 
சூழ்நிலை  காரணமாக  தவறு  செய்கிறார்கள் . 

Monday 16 April 2012

விவசாயி


ஒரு  மருத்துவரின்  மகன்  மருத்துவர்  ஆகிறான்
ஒரு  விளையாட்டு  வீரரின்  மகன்  விளையாட்டு  வீரன்  ஆகிறான்
ஒரு  ஆசிரியரின்  மகன்  ஆசிரியன்  ஆகிறான்
ஆனால்
விவசாயின்  மகன்  விவசாயி  ஆக்கபடுவதில்லை  ஏன்?

என்  தாத்தா முழு  நேர  விவசாயி . என்  அப்பா  ஆசிரியர்  பகுதி  நேர  விவசாயி நான் பொறியாளன்  (No comments)
எல்லா  கூலி  தொழிலாளியும்  தனது  மகனை  நல்ல  வேலையில்  சேர்க்க  ஆசை  படுவது  இயற்கை.
விவசாயம்  என்பது  கூலி  தொழில்  அல்ல ஆதி மனிதன்  முதல்  இன்று  வரை  உணவளிக்கும்  தொழில் .
தொழில்  என்பதை  விட  சேவை  என்றே  சொல்லலாம் , மருத்துவர்  காசை  வாங்கி கொண்டு  செய்வது  சேவை  என்றால் விவசாயமும்  
சேவை  தான்

விவசாயின்   தோல்விக்கு  காரணம் என்ன ?

பருவமழை  பொய்த்து  விட்டது . முன்பு   போல்  மழைக்காலம்  கிடையாது. ஆடி பட்டம்  தேடி  போய் விதைக்க. 
ஐப்பசியில்    மழை பெய்கிறது, அந்த  நீர்  தை  மாதம் வரை  தாங்கும். அதனால்  விவசாயி  3 மாதங்களில் விளைய  கூடிய  வீரிய  ரகத்திற்கு  செல்கிறான்.

பூச்சி  கொல்லி  மருந்தை  அடித்து  மண்ணை  கெடுத்து  விட்டதா  குற்றம்  சாட்டுகிறார்கள்  இயற்கை  விஞ்ஞானிகள். மண்ணை  தொழிலாய்  கொண்டவன்  
எப்படி  தெரிந்தே  மண்ணை  கொல்வான்  அவனது  அறியாமையை  விளக்க  
வக்கிலாத   இந்த  விஞ்ஞானிகள் குறை  மட்டும்  கூறுகிறார்கள்

அரசின்  100 நாள்  வேலைவாய்ப்பு  திட்டத்தால்  விவசாயத்திற்கு  ஆள்  கிடைக்கவில்லை. அப்படி  கிடைத்தாலும்  கூலியும்  அதிகம். கூலியோடு   குவாட்டரும்  கொடுக்க  வேண்டும்  என்பது  இப்போதைய  நியதி.

3 மாதம் நீர்  விட்டு (உரம், பூச்சி  கொல்லி, களை எடுத்தல்) நெற் பயிரை  
காப்பாற்றினால் தான்  அவன்  குடும்பத்தை  காப்பற்ற  முடியும். ஆனால்  நெல்  கொள்முதல்  விலை  80-100 கிலோ  மூட்டைக்கு 400 முதல்  450 ருபாய். அரிசியாக்கி  தொழில்  அதிபர்கள்  விற்கும்  விலை  2000 ருபாய்  (45-50 கிலோ  மூட்டை).

எந்த  விவசாயிக்கும்    சொந்தமாய்  ரைஸ்  மில்  வைத்து அரிசியாக்கும்   வசதி  
இல்லை . கடன்காரன்  விரட்டும்  போது குடித்து   சாக   மருந்து இருக்கிறது .


விவசாயிகளுக்கு  அரசு  4000௦௦௦ கோடி  ஒதுக்கினால்  கண்டிப்பாய்  4 ருபாய்  விவசாயியை  வந்தடையும். என்னனா இது  ஜன  (பண) நாயக  நாடு. 
விஞ்ஞானிகளும்  வல்லுனர்களும்  TV இலும்  பத்திரிக்கைகளிலும்  அழகாய் 
பேட்டி கொடுகிறார்கள் .

எந்த  வல்லுனரும்  ஒரு  விவசாய  கிராமத்திற்கு  சென்று  இரங்கி  வேலை 
செய்வதில்லை .
விவசாயியும்  விளைநிலத்தை  விற்று  மகனையும்   மகளையும்  படிக்க 
வைக்கிறான். இன்னும்  நிறைய  விவசாயிகள்  விற்கவில்லை  ஆனால்   நல்ல  
விலைக்கு  காத்திருகிறார்கள்  . 
முப்பாட்டன்  சந்ததியினருக்காக   பாடுபட்ட  நிலத்தை  காற்றாலைகாரனும் ரியல்  எஸ்டேட்காரனும்  எடுத்து  சென்று  விட்டான்.
முப்பாட்டன்  மூச்சு  காற்று கண்டிப்பாய்  கலந்திருக்கிறது  இந்த  ரசாயன  காற்றில்.. இந்த  மாசு  பட்ட  
மண்ணில்  முப்பாட்டனின்   வியேர்வையும் கலந்திருக்கிறது



விவசாயி    மகன்  பேரன்
பழனி  செல்வகுமார் 

Wednesday 4 April 2012

தறி கெட்டு போன தமிழ் சினிமா

தற்போதைய தமிழ் சினிமா  நம்  கலாசாரத்தை வேரறுத்து கொண்டிக்கின்றன என்பதே இந்த பதிவு
தமிழில் ராப்பு கூத்து என்ற பெயரில் ஆத்திசூடியை  கூட அசிங்கமாய் 
பாடிவிட்டனர்.
SJ சூர்யா  “காலையில் தினமும்  கண்விழித்தால்” என்று  தாயை போற்றும்  ஒரு  பாடலை  மட்டுமே  வைத்து  விட்டு  படம்  முழுக்க  இரட்டை  அர்த்த வசனங்கள் பேசினார் இப்போது  அவரை  ஓரளவுக்கு  ஓரங்கட்டி  விட்டனர்  ரசிகர்கள்

உச்ச  நட்சத்திரம்  என்று  நாம் போற்றும்  ரஜினிகாந்த்  கூட  தன் படங்களில்   இரட்டை  அர்த்த  வசனங்கள் தான் பேசுகிறார் உதாரணம்  சந்திரமுகி.

இளைய  தளபதி , மழலைகள்  கொண்டாடும்  ஹீரோ , நன்றாக நடமாடுபவர் , ஆனால்  அவரது  பாடல்கள்
“டாடி  மம்மி   வீட்டில்  இல்லை ”
“இலந்தபழம் இலந்தபழம் உனக்கு  தான் ”
 “பலானது பலானது ”

மற்ற  நடிகர்கள்   எல்லாம்  நல்லவர்கள்  அல்ல, அவர்களது  பாடல்களில் நாராசமான  வார்த்தைகள்  ஒலிக்க தான்  செய்கின்றன

அடுத்து, தமிழ்  தெரியாதவர்கள்  தமிழ்  பாடல்கள்  பாடுவது, அதாவது  ஆங்கிலத்திலோ  அல்லது  அவர்களது  தாய் மொழியிலோ  எழுதி  அதை  அப்படியே 
வாசிப்பது. 
மதராசபட்டினம்  படத்தில்
ஒரு  பாடல் சென்னையை  சுற்றிக்காட்டும்  கதாநாயகன்  வெள்ளைக்கார  கதாநாயகிக்கு  சென்னையின் பெருமைகளை  சொல்லும்  பாடல்  பாடலை  பாடியவர்  மும்பையை  சார்ந்த  உதித்  நாராயணன். 
ஏன் தமிழ் நாட்டுல  ஆள்  இல்லையா ?

அந்த  கால சினிமாக்களில்  வீட்டில்  நடக்கும்  விஷேசங்களுக்கு  குடும்பத்தினர்  
மகிழ்ச்சியுடன்  பாடுவதாய் பாடல்  வைத்தார்கள் . தற்போது  வீட்டை 
  விட்டு  ஓடி  போகும்  பெண்  படுகிறாள்  “ஓடோ  ஓடோடி  போறேன்”. 
இன்னொரு  பாடல்  “வீதி  எங்கும்  வாசனை வருதே” எத்தனை   வக்கிர  புத்தி  இருந்தால்  இப்படி  
பாடல்  எழுத  தோன்றும் ?

சதையை  நம்பாமல்  கதையை  நம்பி  ஒரு  சில  சினிமாக்கள்  வருகின்றன 
உதாரணம்   “மொழி , எங்கேயம்  எப்போதும் ”, தோனி அங்காடி  தெரு”  இன்னும்  சில …..

தணிக்கை  துறையில்  இருப்பவர்களுக்கு  தமிழ்  கெட்ட வார்த்தைகள்  தெரிவதேயில்லை . 
மயிர்  என்பது  அவர்களை  பொறுத்தவரை  கெட்டவார்த்தை  ஆனால்  வேறு  பல  கெட்ட  வார்த்தைகள்  அவர்களுக்கு  தெரியவில்லை   உதாரணம்   “வின்னர்   படத்தில்  வரும்  ஒரு  மோசமான  கெட்ட  வார்த்தை ”.

விருதுகளை  பற்றி  சொல்ல  தேவையே  இல்லை. உடல்  மொழியாலும்  முக  மொழியாலும்  நகைசுவை  செய்த  நாகேஷ்க்கு  எந்த  விருதும்  (பத்ம விருதுகள் ) இல்லை.

பிரம்மாண்டம்  
தமிழ்  சினிமாவின்  பிரம்மாண்டம்  என்பது  சாலைக்கும், நடன  கலைநர்கள்  
தொந்தியிலும்  பெயிண்ட்  அடித்து  தயாரிப்பாளர்கள்  வயிற்றில்  அடிப்பது  . “பிறக்கும்  போது ஏழையாய் பிறந்தாலும்  சாகும்  போது  ஏழையாய்  சாகதே” என்பது  பொன்மொழி .
தயாரிப்பாளர் களுக்கான  பொன்மொழி  “பிறக்கும்  போது  பணக்காரனாய்   பிறந்தாலும்  சாகும்  போது  பிச்சைகாரணாய்   சாகு”

தமிழ் தாக்கம்  

வரிவிலக்கு என்பதற்காக இவர்கள் வைத்த புற நானூற்று(வாரணம் ஆயிரம் ) 
பெயர்களுக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 
ரீ மேக் என்ற பெயரில் இவர்கள்  படங்களில் ஹிந்தி நாயகர்களின் சட்டை கலரை கூட காப்பி அடிக்கிறார்கள் .
காசுக்காகபடம் எடுப்பதால் ஆந்திராவிலும் இலங்கையிலும் போதிதர்மன் தமிழர் என்று கூட இவர்களால் சொல்ல முடியவில்லை என்ன தமிழ் பற்று?

அந்த கால கர்ணனிடம் இந்த கால நந்தா நந்திதாகளும் யுவன் யுவதிகளும் நிற்க 
முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை .

குறை கூற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல அதையும் தாண்டி என் அடி மனதின் தமிழ் உணர்வுகளே இந்த பதிவின் காரணம்.

தங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

என்றும் சிநேகமுடன்
உங்கள் நண்பன் 
பழனி செல்வகுமார்