Monday 29 May 2023

ஐபிஎல் 2023 - சிஎஸ்கே

2023 சிஎஸ்கே அணி மிகவும் சுமாரான அணி, ஜெமிசன் மற்றும் முகேஷ் காயம் காரணமாக வெளியேறி விட வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. தென் ஆப்பிரிக்கா மகளா வந்து வாரி வழங்கினாலும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் காயம் என விலகிவிட, பந்து வீச மாட்டார் என சொல்லப்பட்ட ஸ்டோக்ஸ் ஒரு ஓவர் மட்டும் வீசி மொத்தமாக உட்கார்ந்து கொண்டார்.
சகாரின் காயம் அணியை பாதாளத்தில் தள்ளியது. பதிரானா எழுச்சியால் மீண்டு வந்தது வரலாறு.



ரித்துராஜ் :
சிறப்பான துவக்க ஆட்டம், அணியின் தூண்போல் செயல்பட்டார். பீல்டிங்கிலும் சிறப்பான வெளிப்பாடு.

காண்வே 
நியூசிலாந்து அணியின் சர்வதேச போட்டிகளை புறக்கணித்து விட்டு இங்கு வந்து கோப்பை வென்றுள்ளார். இடது கை - வலது கை பேட்ஸ்மேன் என துவக்க ஆட்டத்திற்கு வலு சேர்த்தார்.

சிவம் துபே :
துபே சிறப்பாக செயல்பட்ட ஐபிஎல் இதுதான். ஒரு ஓவர் கூட பந்துவீச வில்லை. பேட்டிங்கில் புட் ஓர்க் சுத்தமாக இல்லை. ஆனால் பலவீனத்தை காட்டியும் பலமாக ரன் குவித்தார்.

ராயுடு :
வயதாகிவிட்டது, தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடாத வீரர் (தோனி போல்). பேட்டிங் மட்டுமே பலம், பீல்டிங்கிலும் சுமார்தான் (இந்திய அணியின் கம்பீர் போல்). தோனியும் அவரை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தினார். கடைசி சில போட்டிகளில் முழு வீரராக செயல்பட்டார். சில அதிரடி ஆட்டம் ஆடி கோப்பையோடு ஓய்வு பெறுகிறார்.

ரகானே :
ரகானே தேர்வு செய்த போதே சலசலப்பு ஏற்பட்டது. புஜாரா போல் பெஞ்சில் தான் இருப்பார் என பேசப்பட்டது. அதே போல தான் இருந்தார். ஒரு வீரரின் காயம் காரணமாக அணிக்குள் வந்தவர் மும்பை அணியை புரட்டியதில் அணியில் தங்கிவிட்டார். பீல்டிங்கில் டுப்பிளஸ்ஸி இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம். சிறப்பான செயல்பாடு.

மோயின் அலி:
பேட்டிங் அல்லது பவுலிங் ஏதாவது ஒன்றில் கை கொடுப்பார் என்ற ரீதியில் தான் அணியில் இருந்தார். ஆனால் ஒரு சில போட்டிகளில் பந்து வீசினார். கடைசி சில போட்டிகளில் எதுவும் செய்யவில்லை.

ஜடேஜா :
பேட்டிங், ஸ்பின் பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளுக்கு ஒரே துறைத்தலைவர் ஜடேஜா. கொடுத்த பணியை சிறப்பாக செய்தார். சில சறுக்கல்கள் உண்டு (ஆனைக்கும் அடி சறுக்கும்).

தோனி:
வயதாகிவிட்டது, பேட்டிங்கில் பெரிசாக எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்ததால் எட்டாவது பேட்ஸ்மேனாக/கடைசி ஓவர்களில் ரசிகர்களை மகிழ்விக்க இறங்கினார். மாலை போட்டியில் பீல்டிங் செய்ய வராதவர்கள் மத்தியில் அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டவர் (சஞ்சுவும், ராணாவும்). தோனி ஸ்பெஷல் என்று எதையும் சொல்ல முடியாது. அம்பயரிடம் பேசி நேரம் கடத்தியது கிரிக்கெட் அறமல்ல.
ஹேடனை ஸ்ட்ரைட்டில் நிற்க வைத்து பொல்லார்ட் கேட்ச்சை எடுக்க வைத்தது போன்ற சிறப்பு தருணங்கள் எதுவுமில்லை.
லெக் ஸ்பின்க்கு திணரும் தோனி, ஸாம்பா பந்துவீச்சில் அடித்த சிக்ஸர் ஒரே ஆறுதல்.

சகார் :
பந்துவீச்சில் வேகம் கிடையாது, ஸ்விங் மட்டுமே. பவர்பிளேவில் சிறப்பான வெளிப்பாடு. நடுவில் காயமாகி அணியை நட்டாத்தில் விட்டது என சகார் ஸ்பெஷல் நிறைய.

சாண்ட்னர்:
இவரும் சர்வதேச போட்டிகளை தவிர்த்து விட்டு வந்தவர் தான். ஜடேஜாவின் இன்னொரு வடிவம் என்பதால் அணியில் தொடர்ச்சியான இடம் கிடைக்கவில்லை.

ஸ்டோக்ஸ்:
நோ கமெண்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு தான் இவரது பயன்பாடு.

தீக்க்ஷானா :
பந்துவீச்சு மட்டுமே பீல்டிங் சுத்தமாக வராது என்ற சுமையை கேப்டன் தலையில் ஏற்றியவர். அதே சமயம் 15வது ஓவருக்கு பிறகும் பந்து வீச அழைக்கலாம் என்ற நம்பிக்கையை கேப்டனுக்கு தந்தவர்.

தேஷ்பாண்டே: 
ஐபிஎல்லின் முதல் இம்பாக்ட் ப்ளேயர். என்ன தான் வாரி வழங்கினாலும் கேப்டனின் குட் புக்கில் இடம் பெற்று கடைசி போட்டி வரை இடத்தை தக்க வைத்தவர்.

பதிரானா:
பிராவோவின் இடத்தை பிடித்த சின்ன பையன். கேப்டன் மனதிலும் இடம் பிடித்தார்.
பந்துவீச்சு ஆக்ஷ்ன் எதிரணியில் இருந்து பார்ப்பவர்களை நிச்சயம் கேள்வி கேட்க வைக்கும். வளரும் இளைஞர், சர்வதேச போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகாஷ் சிங்: 
இடதுகை வேகப்பந்து வீச்சாளர். சகாரின் இடத்தில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.

மகளா:
உடல் எடை அதிகமாக இருந்தாலும் வேகப்பந்து வீசினார். மாற்று வீரராக வந்து காயம் பட்டது காலக்கொடுமை.

ராஜ்வர்தன்:
போதுமான வாய்ப்பு கிடைக்காத ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர். சென்னை அணியில் இது சாதாரண நிகழ்வு.

சேனாபதி & ரஷீத்:
அவ்வப்போது மாற்று ஆட்டக்காரராக பீல்டிங் செய்தவர்கள்.

மற்றவர்கள் பெஞ்சில் இருந்தார்கள்.

இறுதி போட்டியில் மழை பெய்து ரிசர்வ் தினத்தில் டாஸ் வென்று பீல்டிங் செய்தது கேள்விக்குள்ளானது. இரண்டாம் பேட் செய்பவர்களுக்கு கூடுதல் ரன்களே இலக்காக அமையும். பேட்ஸ்மேன்கள் மீது கொண்ட நம்பிக்கையால் தோனி இதை செய்திருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் தோனியை நம்பிக்கையை வீணாக்கவில்லை.

தோனி அதிர்ஷ்டம்:
தோனிக்கு அதிர்ஷ்டம் உண்டு என்று பரவலான பேச்சு உண்டு. இப்போது அதிர்ஷ்டம் அமைந்தது உண்மை. இரண்டாம் நாளிலும் மழை பெய்திருந்தால் ஐபிஎல் விதிமுறைப்படி கோப்பை குஜராத் அணிக்கு.

Monday 22 May 2023

ஆதவனின் காதல்

ஆதவன், பொறியியல் படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்து விட்டான். பொறியியல் படிப்பின் கடைசி நாளுக்கும் சென்னை வந்த நாளுக்குமான இடைவெளி இரண்டு வாரங்கள்.

இந்த இரண்டு வாரங்களில், பக்கத்து ஊர் அண்ணனின் கண்ணில் பட்டு, அவரின் சிபாரிசில் நேர்முக தேர்வு முடித்து வேலையும் கிடைத்து விட்டது. அவன் எதிர்பார்த்த வேலையில்லை என்றாலும் தினமும் சென்று வந்தான். எந்தவித ஈடுபாடும் இல்லாமல்.

பக்கத்து ஊர் பசங்களோடு அறையில் தங்கி இருந்தாலும் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வே அவனுக்கு இருந்தது.

ஆதவனின் நண்பன் நளனிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. மச்சி எனக்கும் ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடு என்று. நளனுக்காக அண்ணனிடம் பேசினான், நளனுக்கும் வேலை சிபாரிசில் கிடைத்தது, வேறு நிறுவனத்தில்

ஆதவனுக்கு பணி கட்டிட பணிகள் நடைபெறும் இடம், நளனுக்கு அலுவலகத்தில் பணி.

வேளச்சேரியில் ஆதவனும், நளனும் தனியாக அறை எடுத்தனர். ஆதவனுக்கு பணியிடம் தரமணி ரயில் நிலையம் அருகில். நளனுக்கு திருவான்மியூரில் அலுவலகம். இருவரும் காலையில் கிளம்பி சாப்பிட்டுவிட்டு ஒரே பேருந்தில் தான் செல்வார்கள்.

ஆதவனுக்கு இழந்ததை மீட்டது போல் இருந்தது. கல்லூரியில் ஆதவன் சில பெண்களிடம் பேசியது உண்டு. நளன் படிப்பு, விளையாட்டு இதை தவிர வேறேதும் தெரியாது என்கிற ரீதியில் திரிந்தவன்.

வேளச்சேரி செக்போஸ்ட் இவர்கள் தினமும் ஏறும் பேருந்து நிறுத்தம். அங்கு தான் அவளும் பேருந்து ஏறினாள். மாநிறம், கண்ணுக்கு மை தீட்டி காண்பவர்களை கவரும் முகம்.

ஆதவன், நளனிடம் சொன்னான் மச்சி, அந்த பொண்ணு உன்ன பார்க்கதுல என்று. நளனும் பார்த்துவிட்டு இல்ல மச்சி அது உன்ன தான் பார்க்குது என்றான்.

இருவரும் பார்த்தனர் தினமும். நளன் சொன்னான் மச்சி அந்தப் பொண்ணு டைடல் பார்க்கில் இறங்குகிறது என்று. அன்று முதல் அந்த பெண்ணிற்கு டைடல் என்று பேர் வைத்தனர். மனதில் அலையை ஏற்படுத்தியவள் என்று பொருள் கொள்ளலாம்.

பேருந்தில் முன்புற வாசல் வழியாகவே ஏற்றுவார்கள், டைடலை பின்பற்றி. ஒருநாள் டைடலிடம் கொடுத்து பாஸ் பண்ணி டிக்கெட் எடுத்தான் ஆதவன். நளனுக்கு சற்றே வயித்தெரிச்சல் வந்தது.

ஆறு மாதத்தில் இருவரும் பணியிடங்களை மாற்றினர். ஆதவன் வேளச்சேரி விட்டு சைதாப்பேட்டை சென்றான். ஆதவனின் பக்கத்து ஊர் நண்பர்களுடன் பேசும் போது சொன்னார்கள். நளன் பெரிய ஆளாகிவிட்டான் என்று. ஆதவன், "ஆமா நல்லா கம்பெனில நளனுக்கு வேலை, என்னை விட சம்பளமும் கூட" என்றான்.

ஆதவன் பணி நிமித்தமாக வேளச்சேரி செல்ல வேண்டி வந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு வேளச்சேரிக்கு சென்றான். வேலையை முடித்து சைதாப்பேட்டை செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறினான். ஜன்னல் சீட் கிடைத்தது. பேருந்து செக்போஸ்ட் பேருந்து நிறுத்தம் வரும் போது பார்த்தான். 

நளனும் டைடலும் கை கோர்த்து நடந்து வந்து கொண்டிருந்தனர்.

சென்னை (2007 - 2023)

16 ஆண்டுகள் சென்னை வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்.

1. சேப்பாக்கம் கிரிக்கெட்

மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசை அருண் மூலம் நிறைவேறியது. அருண் தான் சேம்பியன்ஸ் லீக் போட்டிக்கு டிக்கெட் புக் பண்ணியது. நான், அருண், தினேஷ் (ஜாகீர்), இன்னொரு நபர் யாரென்று நினைவில்லை. முதல் போட்டி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடந்தது. இரண்டாவது போட்டி சென்னை மும்பை அணிகள் விளையாடியது. சென்னையின் வெற்றி வாய்ப்பை கலைத்தது மலிங்கா பேட்டிங். பொல்லார்ட், ரெய்னா, ரோட்ஸ், ஆன்டாங், வார்னர், பொலிஞ்சர், சகால் ஆகியோரை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெயிலும், வெக்கையும் அதிகம் சேப்பாக்கம் மைதானத்தில்.

2. சைதை மேன்சன் 

மேன்சன் என்றாலே புழுங்கிய துணிகளின் வாடையுடன், ஒற்றை மின்விசிறி கொண்ட ஒடுங்கிய அறை என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் எங்கள் சைதை மேன்சன் மூன்று பேர் தங்க கூடிய அறை. சமயத்தில் 5 பேர் தூங்கினோம். பாதி மொட்டை மாடி எங்கள் வசம். தங்கியிருந்த எல்லாருக்குமே நினைவுகள் நிறைவாக உண்டு. அங்கு தான் நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைத்தது. உலகக் கோப்பை வெற்றி பெற்ற, உணர்ச்சிபூர்வமான நாள் மேன்சனில் தான் அதை கண்டு ரசித்தோம். மொட்டை மாடியில் அமர்ந்து உண்டு, உறங்கி, விளையாடிய நாட்கள் இனியவை.

3. காற்று வெளியிடை

மனைவியுடன் கடைசியாக திரையரங்கில் பார்த்த படம். படம் சூர மொக்கை என்றாலும் இரண்டாம் ஆட்டத்தில் இருந்த திரையரங்க குளிர், காட்சிகளை உயிர்ப்பாக்கியது. பூந்தமல்லி சுந்தர் திரையரங்கில் பார்த்த படம்.

4. வேளச்சேரி அறைகள்

வேளச்சேரியின் அறைகள், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறைகள். எப்போதும் ஓனர்களின் தொல்லை, கொசுக்கடி, பண கஷ்டம் என இருந்தவை. நிறைய நட்புகள், சுவையான அனுபவங்கள் தந்த அறைகள் அவை. மதியழகன் தெருவும், கண்ணகி தெருவும் அதிக நாட்கள் இருந்தவை. அந்த நாட்களை வைத்து நிறைய கதை எழுதலாம்.

5. கையேந்தி பவன் பிரியாணி

சைதை தபால் நிலையம் எதிரில் இருந்த பிரியாணி கடை, கையேந்தி பவன் பிரியாணி தினேஷால் அறிமுகமானது. மிக மெதுவாக பார்சல் கட்டி தருவார். பொறுமையாக இருந்தால் வித்தியாசமான சுவையுடைய பிரியாணி சாப்பிடலாம். அடிக்கடி இரவு உணவு கையேந்தி பவன் பிரியாணி தான்.

6. மழை நாட்கள் 

சென்னையில் எத்தனையோ வெயிலை கடந்திருந்தாலும் மழை நாட்கள் மறக்க முடியாதவை. செல்ப்ல் படுத்து தூங்கிய வேளச்சேரி மழை நாட்கள்.

பூந்தமல்லியில் தனிந்திருந்த போது வெளியே வர அச்சப்பட வைத்த நீலம் புயல் கரை கடந்த நாள்.

பணம் மட்டும் முக்கியமல்ல என்று புரிய வைக்க தகவல் தொடர்புகளை பிடுங்கி எறிந்த டிசம்பர் மழை நாட்கள்.

வர்தா விளையாடி ஓய்வெடுத்து திசை மாறி வீசிய நாள்.

மாண்டஸ் சிதைத்த நாளில் மறவாமல் பால் பாக்கெட் போட்ட தாத்தாவுக்கு நன்றியை தவிர வேறேதும் சொல்லவில்லை.

இன்னும் சென்னையோடு பல நினைவுகள்

-தொடரும்-


Saturday 13 May 2023

2011 - நண்பர்கள் சந்திப்பு

அடிக்கடி மெரினாவில் சந்திப்பது அதிகப்பட்ச சந்திப்பாக இருந்தது. கல்லூரி முடித்திருந்தாலும் கல்லூரியின் வாசம் நாசிக்குள் நிறைந்திருந்த நாட்கள் அவை.



ஜென்னரும் விஜய்யும் மாத்தி யோசித்ததில் உதயமான சிந்தனை ஏற்காடு சுற்றுலா. புத்தாண்டை எல்லாரும் 1 ம் தேதி நள்ளிரவு கொண்டாடுவார்கள்,  நாம் பகலில் கொண்டாடுவோம் என்று முடிவு.

விஜய், ஜென்னர், ஷிபு, பிராவின், ப்ரீஸ், ஜானகி, தர்மா நான் ஒரே காரில் புறப்பட்டோம் சென்னையில் இருந்து. போகிற வழியில் ஒகேனக்கல் சென்றோம்.

ஒகேனக்கல்லில் அருமையான அருவி குளியல் அமைந்தது. மச்சான் தண்ணிக்குள்ளும் புகைப்படம் எடுக்கும் கேமரா கொண்டு வந்திருந்தான். 

தண்ணீரில் ஒவ்வொருவரையும் தூக்கி கீழே போடும் நிகழ்வு மச்சானையும், ஜென்னரையும் தூக்கியாச்சு. ஆனால் பிராவினை தூக்க முயற்சிக்கவில்லை, அத்தனை பேரும் பொறியியல் படிப்பை முடித்திருந்ததால்.

அங்கிருந்து ஏற்காடு சென்றோம். இரவில் ஏற்காடு சில்லென்று இருந்தது. ஜென்னர் விலை குறைவான அறை விசாரித்து தங்க ஏற்பாடு செய்தான். ஜென்னர் முதல் முறையாக மெஸ் கமிட்டி தவிர்த்து இதர கமிட்டி வேலை பார்த்த நாள் 01. 01.2011.



கணபதி அவன் அறைத்தோழர்களோடு காரில் ஏற்காடு வந்து சேர்ந்தான். கூடவே கார்த்தியும். அங்கு ஒரு அருவிக்கு சென்றோம். சற்றே ரிஸ்கான இடம் ஆனால் வாலிப வயசு. பாறை மீதேறி பரவச குளியல் போட்டோம்.

அதற்கு பிறகு வியூ பாயிண்டில் புகைப்படங்கள். மச்சான் வழக்கம் போல் ஸ்கார்பியோ காரின் சக்கரங்களை வேறுவேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தான். எதற்கு என்று கேட்டதற்கு அவன் சொல்லிய பதில், வினோத் பாபு வகுப்பு போல் விளங்கவே இல்லை.



மீண்டும் சென்னைக்கு வந்தோம். அரட்டையும் கும்மாளமுமாக. 

மீண்டும் கிடைக்காத நாட்கள் அவை.

Thursday 11 May 2023

பாஸ்கரன் திருமணமும், பகீர் அனுபவனும்

பாஸ்கரன் சித்தார் வெசலில் எங்களோடு பணிபுரிந்தவன். நாகப்பட்டினம் மாவட்டம், கடற்கரை கிராமம் வெள்ளப்பள்ளம் தான் அவனது ஊர்.

பாஸ்கரன் தான் எங்கள் செட்டில் முதலில் திருமணம் செய்தவன். அதனால் அவன் திருமணத்துக்கு கிட்டத்தட்ட அனைவரும் போய் இருந்தோம். 

சரவணகுமார் தான் ஏற்பாடுகள் பண்ணது. பாஸ்கரன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தோம், படகில் கடலுக்குள் அழைத்து செல்ல வேண்டும் என்று.

சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் பயணித்தோம். பேருந்து கிழக்கு கடற்கரையில் சாலையில் உத்தண்டியை அடைந்த போது பழுதடைந்தது. மாற்று பேருந்து வரும் வரை சாலையில் உட்கார்ந்து உருண்டு புரண்டு பொழுதை கழித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து தான் மாற்று பேருந்து வந்தது. 

காலையில் பாஸ்கரன் ஊருக்கு சென்றோம். பாஸ்கரன் படகில் கடலுக்குள் அழைத்து சென்றான், கூடவே ரெண்டு பேர் துணைக்கு வந்தார்கள். நாங்கள் சென்ற நேரம் கடற்கரை சகதியாக இருந்தது. அதை கடந்து தான் படகேற வேண்டிய சூழல். படகு ஓரளவுக்கு கடலுக்குள் சென்றுவிட்டது. சுற்றிலும் நீல நிறம் கடலில் விழுந்து குளித்தோம், களித்தோம்.

கரைக்கு கிளம்பும் போது எஞ்சினில் இருந்து வெண்ணிற புகை. ஆயில் இல்லை. யார் அலைபேசியிலும் நெட்வொர்க் இல்லை. படகோட்டிகள் சுதாரித்து பாயை கட்டி கடற்கரை நோக்கி செலுத்தினர். காற்றுக்கு பொறுக்க முடியவில்லை எதிர் திசையில் வீசியது, பாயை சுருட்டினர். அதிர்ஷ்டவசமாக (அந்த பயணத்தில் நிகழ்ந்த ஒரே அதிர்ஷ்ட நிகழ்வு) பாஸ்கரன் அலைபேசியில் தொடர்பு கிடைத்தது.

கரையில் இருந்து இன்னொரு படகு காப்பற்ற வந்தது. அந்த படகில் இருந்து கயிறு கட்டி கரைக்கு இழுத்தனர். கரையை நெருங்குகையில் அந்த படகின் மீது எங்கள் படகு மோதி சேதாரம் செய்தது.

பொரித்த மீன் சாப்பிட நினைத்தோம், ஆனால் அது மீன்பிடி தடைக்காலம். சிறிய அளவில் தூண்டில் மீன் சாப்பாடு கிடைத்தது.

அன்றிறவு நாகப்பட்டினத்தில் மண்டபத்தில் தங்கினோம். காலையில் எழுந்து வேளாங்கண்ணி சென்றோம் நானும் வரதனும். வரும் வழியில் பேருந்து பஞ்சர்.
மாலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம். அங்கு யாரோ ஒருவரின் அலைபேசியை தொலைத்து விட்டு மீட்டெடுத்தோம்.

பாஸ்கரன் திருமண பயணம் என்பது தொடங்கியதில் இருந்து இறுதி வரை பீடை.

எங்கள் குழு : 
நான், ரிஸ்வான், சுரேஷ், தங்கம், வரதன், முத்து, பிரகாஷ், பாய், சரவணகுமார், இர்பான், மணிகண்டன் இன்னும் சிலர்.