Monday 6 November 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 7 - பாண்டியும் முருகனும்


பால்யத்தில் இருந்து இன்று வரை என் நண்பர்கள் பாண்டி - முருகன். இருவரும் அண்ணன் தம்பி. எனக்கு மச்சான் முறை. நானும் முருகனும் 4வது 5வது ஒரே வகுப்பு.

பாண்டி எங்களைவிட வயதில் மூத்தவன். நான் பாண்டி என்றே கூப்பிட்டு பழக்கம். பள்ளி நாட்களில் நானும் முருகனும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வோம்.பாண்டியிடம் ஒரே முறை தான் சண்டை போட்டுள்ளேன். அதுவும் கிரிக்கெட் சண்டை.

பாண்டி-முருகன் இருவரிடமும் விளையாட்டில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கும். டாக்டர் விளையாட்டு விளையாடினால் சில பேப்பர்களை கிழித்து முள்ளில் குத்தி பிரிஸ்கிரிப்ஷன் பேடு தயாரித்திருப்பார்கள்.குவாரி வைத்து விளையாடினால் லாரியில் கிரியேட்டிவிட்டி இருக்கும். சாமி வைத்து விளையாடினால் பாண்டி, சாமி அலங்காரம் அழகாய் செய்வான்.

டியூஷனில் பாண்டியை யாரும் அதிகம் கேள்வி கேட்கமாட்டார்கள். அவனுக்கு பிடித்த ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சொன்னார்கள் என்ற தமிழ் படத்தை மட்டும் சத்தமாக படிப்பான்.

ஆறாம் வகுப்புக்கு நான் பாளையம்கோட்டை சென்றுவிட கிரிக்கெட் மட்டுமே எங்களை இணைத்தது. நாங்கள் பார்த்த டிவியில் முதல் போட்டி இந்தியா ஜிம்பாப்வே போட்டி. ஆண்டி பிளவர், கேம்பெல் விளையாடியது. முருகன் அதிகம் கிரிக்கெட்விளையாட வரமாட்டான்.
நானும் பாண்டியும் தான் கிரிக்கெட் பார்ப்பதும் விளையாடுவதும். கணபதி தாத்தா எங்களிடம் கேப்பார் "என்ன பேரப்புள்ள இன்னைக்கு கிரிக்கெட் போட்டி உண்டா என்று"
ஆமா என்று நாங்கள் சொன்னால், ஞாயித்துகிழமை படம் போச்சி என்று வருத்தப்படுவார். தாத்தா, உங்களுக்கு நாட்டு பற்றே இல்லை என்று கிண்டல் அடிப்பான் பாண்டி.

பாண்டி ஊரில் பலரையும் கிண்டல் செய்வான். ஒருநாள் பூந்தோட்டத்தில் வைத்து தொந்தி கணபதி தாத்தா எதோ திட்ட, பாண்டி பூ பறிக்க வந்த சின்ன பிள்ளைகளை காட்டி குழந்தை தொழிலாளர் வைச்சிருக்கீங்கனு போலீஸ்ல சொல்லிருவேன் என்றான் கிண்டலாய்.

வளர வளர முருகனை விட(தூத்துக்குடியில் இருந்தான்) பாண்டி எங்கள் வீட்டில் ஒருவனாய் மாறிவிட்டான். சின்ன வயதில் பாண்டியுடன் சேராதே என்று சொன்ன அம்மா, வளர்ந்த பின் பாண்டியை பார்த்து கத்துக்கோ என்று சொல்ல ஆரம்பிசிட்டாங்க.

முருகனுக்கு சினிமா என்றால் உயிர். எந்த பாடல் என்றாலும் ஒரு முறை கேட்டாலே பாடுவான். 5ம் வகுப்பு படிக்கும் போது மகாநதி படத்தின் "ஸ்ரீ ரங்க ரங்கநாதனின்" பாடலை ஞாயிற்று கிழமை டிவியில் பார்த்து விட்டு திங்கள்கிழமை பாடியது எனக்கு இன்னும் ஆச்சர்யம்.

பாண்டி எந்த பாடலையும் சத்தமாக பாடுவான். குறிப்பாய் கேளுங்கள் தரப்படும் பாடல், "தந்தையார் செய்த தச்சு தொழிலையே" அந்த வரியை அடிக்கடி பாடுவான்.

ராணி காமிக்ஸ்ல் ஆரம்பித்த எங்கள் வாசிப்பு ராணி, தேவி, கண்மணி, குமுதம், விகடன்,ராணி முத்து , மாலைமதி, பாக்கெட் நாவல் என வளர்ந்தது. எதாவது புக் கிடைத்தால் வாசித்துவிட்டு பகிர்ந்து கொள்வோம்.

கல்யாணத்துக்கு முன் ஊருக்கு போனால் பாண்டிதான் வண்டியில் மானூரில் கொண்டு வந்து விடுவான். கதை பேசி கொண்டே வருவோம்.

தற்போது, பாண்டி டயர் கம்பெனியில் செட்டில் ஆகிவிட்டான். முருகன் சென்னையில் இளந்தொழிலதிபர்.

செப்டம்பர் 8 பாண்டிக்கு திருச்செந்தூரில் கல்யாணம் நடந்தது. லீவு போட்டு சென்றேன். எனக்கும் அதே மண்டபத்தில் இரண்டாண்டு கழித்து செப்டம்பர் 8 இல் திருமணம். திருமணத்துக்கு முந்தின நாளே என்னுடன் திருச்செந்தூர் வந்து விட்டான் பாண்டி. முருகன் திருமணத்துக்கு போக முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளில் நானும் பாண்டியும் பரஸ்பரம் வாழ்த்தி கொள்வோம்.

பாண்டியுடன் சேர்ந்து தியேட்டரில் படம் பார்த்ததில்லை. ஊரில் தெரு வீதிகளில் படம் பார்த்ததுண்டு.முருகனுடன் மூன்று முறை தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன்.
ஒரு நாள் கல்லூரிக்கு ஊரில் இருந்து போகும் போது முருகனும் சுந்தரும் ரத்னா தியேட்டரில் தவமாய் தவமிருந்து பார்க்க கூட்டி சென்றனர்.

அப்புறம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை, படம் வந்த முதல் நாளில் ராம் தியேட்டரில் பார்த்தோம். ஊரில் நிறைய பேர் கேட்பார்கள், முருகனும் சென்னையில் தான் இருக்கிறான். அடிக்கடி பார்த்து கொள்வீர்களா? என்று. அவசர சென்னை வாழ்க்கையில் ஒரு முறை அவன் வீட்டுக்கு போயிருக்கிறேன்.அன்றிரவு மாரி என்ற உலக தரமான படத்தை வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டரில் பார்த்தோம்.

மழை பெய்த நாளில் முருகன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். பாண்டி ஒருமுறை சைதை மேன்சனுக்கு வந்திருக்கிறான், வந்தவன் என்ன மாப்ள இந்த ரூம்லயா இருக்க என்றான்.

பாண்டியின் மூத்த மகள் சஞ்சு என்னை கண்டு பயந்தாலும் மஹியை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டுக்குள் நுழையும் போதே "பாணி மாமா" வந்திருக்கானா என்று கேட்டுத்தான் வருவாள் சஞ்சு.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது இரவு 11 மணிக்கு போன் முருகனிடம் இருந்து. அவனுக்கு மகன் பிறந்திருப்பதாக சொன்னான்.