Tuesday 26 April 2022

சித்திரை அண்ணன்

ஊரில் பலரும் அவனை சித்திரை அண்ணன் என்று தான் அழைப்பார்கள். வயதானவர்களுக்கு சித்திரை.
அவன் நிஜ பெயர் சித்திரை அல்ல. சித்திரை மாதத்தில் பிறந்தவன். சிறு வயதில் சுழிச் சேட்டை செய்ததால் அவங்க அம்மா சித்திரை சுழியன் என்று அழைக்க, அதுவே விரிவடைந்து எல்லாரும் சித்திரை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிறுவயதில் தேன் கூடு எங்கே இருந்தாலும் அதை எடுக்கப் போய் கண் இமையில் குழவி கடி வாங்கி இமை வீங்கியே அலைவான். கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சிறுவர்களை கூட்டி சென்று தேன் கூட்டை கலைத்து விட்டு சாரத்தால் முகத்தை மூடி தப்பித்து கொள்வான்.

அவன் அடிக்கடி செய்த இன்னொரு சேட்டை, ஜட்டி போட்டு குளிப்பவர்களின் பின்னால் சத்தமில்லாமல் சென்று அதை இறக்கி விடுவது.

கொஞ்சம் வளர்ந்த பின் சேட்டைகளை குறைத்து கொண்டான் என்று சொல்லலாம். மூன்று அண்ணன்களோடு பிறந்தவன். அப்பா, அண்ணன்கள் என நால்வரிடமும் அடி வாங்குவான்.

ஊரில் பல காதலர்களுக்கு சித்திரை அண்ணன் தான் தூதுவன். அதற்கு கமிசன் பெற்றுக் கொள்வான். 

18 - 20 வயதிருக்கும் போது அப்பா அடித்ததற்காக கோவித்து கொண்டு பாம்பே போய்விட்டான். போய் லட்டர் கூட போடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவங்க அம்மா இறந்துவிட ஊருக்கு வந்தான். 

அம்மாவின் மரணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டான். தினமும் மரம் வெட்ட, விவசாய வேலை, கல் உடைக்க, கட்டிட வேலை என்று ஏதாவது ஒரு வேலைக்கு போவான். வெட்டியாக இருக்க மாட்டான். 

ஊரில் தாய்குலங்களுக்கு உதவி செய்வான். விறகு உடைப்பது, பால் கறப்பது என. அதற்கு அவன் பெரும் கூலி, ஒரு டம்ளர் காப்பி. காப்பிக்காக எந்த வேலையும் செய்வான். காப்பியின் அடிமை என்றே சொல்லலாம்.

சித்திரை அண்ணனின் அண்ணன்களே காப்பி குடிப்பதற்கும் வேலை செய்வதற்கும் திட்டினர். சித்திரை அண்ணனுக்கு திருமணம் நடந்தது. வெளியூர் பெண்.

ஆனால் அந்தப் பெண் ஆறு மாதத்தில் பிரிந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பஞ்சாயத்து நடந்தது. நான் லேசா ரெண்டு தட்டு தட்டினதுக்கு போலீஸ் அடி பின்னிடாங்க என்று சிரித்து கொண்டே சொன்னான் டீக்கடையில் வைத்து.

அதற்கு பின் அவன் அப்பாவும் தவறிவிட, அவனே சமைத்து சாப்பிட தொடங்கினான். ஒரு போதும் அண்ணன் வீடுகளில் சாப்பிடுவது இல்லை. நன்றாக சமைப்பான், மீன் குழம்பு தான் சித்திரை அண்ணன் ஸ்பெஷல்.

ஆண்டுதோறும் ஆண்கள் குற்றாலத்திற்கு செல்லும் வைபவம் நடக்கும். இந்த குற்றால பயணத்திற்கு எப்போதும் சித்திரை அண்ணன் தான் சமைப்பான். கோழி கறி குழம்பும், கூட்டாஞ்சோறும்.

அருவியை கண்டதும் ஓ வென கத்திக்கொண்டே போய் குளிப்பான். இவனுக்கு கவலையே இருக்காதா என தோன்றும். எல்லாரும் மனைவி, குழந்தைகளுக்கு கடைகளில் ஏதாவது வாங்கும் போது அவன் மட்டும் டீக்கடையில் காப்பி குடித்து கொண்டிருப்பது மனதை ரணமாக்கும்.

சித்திரை அண்ணனுக்கு வயது நாற்பதை கடந்து விட்டது. தலை நரைத்து தாடி மீசையிலும் நரைமுடி வந்து விட்டது. அவனுக்கு நல்லது நினைக்கும் பலரும் சித்திரை ஒரு கல்யாணம் பண்ணிக்கோ, நாளைக்கு உனக்கு கஞ்சி ஊத்த ஒரு ஆள் வேணாமா என்று நச்சரிக்க தொடங்கிய காலம்.

பிப்ரவரி மாதம், சித்திரை அண்ணனை காணவில்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கோ போய்விட்டான். ஊர் பெரிசுகள் பாம்பேக்கு போயிருப்பான் என்று புழுக ஆரம்பித்தனர். அவன் அப்படி செய்யமாட்டான் என்று நம்பிக்கை இருந்தது. 

ஒரு வாரம் கழித்து, ஒரு ஆறு வயது பெண் குழந்தையோடு பேருந்தில் வந்து இறங்கினான். சுனாமியில் தாய், தந்தையை இழந்த அந்த குழந்தையை அதிகார பூர்வமாக தத்து எடுத்து கூட்டி வந்திருந்தான்.

ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் மகளை பேர் சேர்த்தான். ஊரில் யாரும் செய்யாத புதுமையாக.
சித்திரை அண்ணனின் மகள் பெயர் "சுகன்யா கிருஷ்ணமூர்த்தி".

Thursday 21 April 2022

புத்தக பார்வை - மூத்த அகதி

கலாதீபம் லொட்ஜ் வாசித்த போதே நான் வாசு முருகவேல் எழுத்துக்கு அடிமையாகிவிட்டேன். அதற்கு பிறகு வாசித்த ஜெப்னா பேக்கரியும் ஈர்த்தது.

மூன்றாவது நாவலாக மூத்த அகதியை வாசிக்க தூண்டியது. இந்த முறை களம் நயினா தீவோ, கொழும்போ, ஈழப்பகுதிகளோ அல்ல. சென்னை தான் களம்.

சென்னையில் பல காலம் வசிப்பவர்களுக்கு கூட எம்ஜிஆர் நகர் எங்கு இருக்கிறது என தெரியாது. எம்ஜிஆர் நகரை அறிமுகப்படுத்தி ஆரம்பித்துள்ளார்.

கேகே நகர் உயர்குடி மக்களின் கூடாரம் என்றால் எம்ஜிஆர் நகர், நெசபாக்கம் மத்திய தர மக்களின் கோட்டை. இதை எங்குமே இவர் கூறவில்லை என்றாலும் இவர் எழுத்துக்களில் உணர முடியும்.

மேட்டுக்குடி பெண்களின் சுதந்திரத்தை நாசூக்காக சொல்லி உள்ளார். 

அரசியல்வாதி இலங்கை தமிழர் என்று பேசுவதை கேட்டு "இலங்கை தமிழர் அல்ல ஈழ தமிழர்" என கோபப்படும், துவாரகனின் கோபம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் புரியாது. 

சென்னையில் பல காலம் இருந்தாலும் அவர்களின் விருப்ப உணவு பாண், மரக்கறி பணிஸ் என்பதும் அவர்கள் தேவாரம் வாசிப்பதை நிறுத்தவில்லை என்பதும் ஈர்க்கிறது. 

தாய் தமிழ் வாசு முருகவேலின் எழுத்தை என்னிடம் கொண்டு சேர்த்ததற்கு மகிழ்ந்தாலும், நான் வாழும் சென்னையில் அவர் அகதியாக வாழ்கிறார் என்பது மனதை வருத்துகிறது.


Sunday 17 April 2022

புடிச்சதை செய்

சனிக்கிழமை விடுமுறை என்றாலும் அலுவலகத்திற்கு வர சொன்னார்கள். காலையில் போன் செய்த மேனேஜர் நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.

அதற்கு பிறகு தான் போன் வந்தது. சித்தப்பா இறந்துவிட்டார் என்று தகவலை சுமந்து. சித்தப்பா தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 70ஐ தாண்டி விட்டார். இன்னும் பத்தாண்டாவது இருந்திருக்கலாம் என்பது எங்கள் ஆசை. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. 

இன்னொரு சித்தப்பாவின் மகனான சுரேஷிடம் இருந்து அடுத்த போன். அண்ணன், நான் கார்ல போறேன் நீயும் வா என்று. தினேஷ் மச்சானும் வராரு என்றான். 

தினேஷ் வேறு யாருமில்லை எனக்கு நெருங்கிய நண்பன். மாமா மகன். நான் அவனை பேர் சொல்லி அழைப்பேன். அவன் என்னை மாப்ளே என்றே அழைப்பான். 

மேனேஜருக்கு போன் பண்ணிவிட்டு கிளம்ப தயாரானேன். 

அடுத்த சில மணி நேரங்களில் தினேஷ்ன் கார் வந்தது. தினேஷ்ம் சுரேஷ்ம் முட்ட குடித்திருத்திருந்ததால் எங்கள் வீட்டிற்குள்ளே வரவில்லை. நான் காரில் டிரைவர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டேன். 

ஏன்டா, காலையிலே குடிச்சீங்க என்றேன். டிராவல்ல என்ஜாய் பண்ணதான் என்றான் தினேஷ். டிரைவரிடம் நீங்க குடிச்சீங்களா என்றேன்.

இது என் தொழில் சார், ஸ்டீரிங் தொடுற நேரத்தில் நான் தண்ணீ சாப்பிடுவதில்லை என்றார். அவரது வசனமே சொன்னது குறைந்த அளவில் குடித்துள்ளார் என்பதை.

கொஞ்ச நாளாகவே அலுவலக அழுத்தம் காரணமாக எங்காவது பயணிக்க வேண்டும் என்று தோன்றி கொண்டு இருந்தது. 

வேலையை விட்டு விடலாம், வேறு வேலையை தேடிக் கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது.

பெருங்களத்தூரை தாண்டியதும் சித்தப்பாவின் நினைவுகள் வந்தது.  

சித்தப்பா, தாத்தா, அப்பா போல் நல்ல கருப்பு. வெளியே செல்லும் போது வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. வீட்டில் இருந்தால் சாரம். இப்போது கொஞ்ச நாளாக கலர் கலராக டீசர்ட் அணிந்தார். பிடித்திருக்கும் போல.

நல்ல கதை சொல்லி, பேச்சில் கிராமத்துக்கே உரித்தான எள்ளலும் நக்கலும் இருக்கும். தெனாலிராமன் கதைகள் எங்களுக்கு சொன்னது சித்தப்பா தான்.

என்னை மாதிரி படிக்காம இருந்துறாதீங்க. நல்லா படிங்க என்பார். அவருக்கு பேப்பர் வாசிக்க தெரியும். கணக்கு பார்க்க தெரியும். விவசாயமும் வியாபாரமும் தெரியும். 

முப்பாட்டன் காலத்தில் இருந்தே வந்துள்ள மூக்கு பொடி பழக்கத்தின் கடைசி வாரிசு அவர் தான். மூக்கு பொடிக்கென தனி டப்பாவெல்லாம் வைத்திருக்க மாட்டார். ப்ளாஸ்டிக் கவரில் வைத்திருப்பார். ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால் எடுப்பார். விரலிடுக்கு போக மீதி ஒட்டி இருப்பதை உதறிவிடுவார். அது அடுத்தவன் கண்ணில் விழுந்தாலும் கவலைப்படமாட்டார். 

சூப்பர் சிங்கர் போல கண்களை மூடிக்கொண்டு இரண்டு மூக்கிலும் தேய்த்துவிட்டு வேட்டியில் துடைத்து கொள்வார்.

கார் டிரைவர் மதிய உணவுக்கு நிறுத்தவா என்று கேட்டார். பின்னாடி திரும்பி பார்த்தேன் இருவரும் தூங்கி கொண்டு இருந்தனர். எனக்கு பசியில்ல, அவனுக எந்திரிக்க மாட்டானுக. நீங்க சாப்பிடனும்னா சொல்லுங்க என்றேன். எனக்கும் பசியில்ல ஒரேயடியாக சாயங்காலம் டீ குடிக்க நிறுத்தலாம் என்றார் டிரைவர்.

காரின் வேகம் 100க்கு குறையாமல் இருந்தது, விவேகம் அவரது அனுபவத்தை காட்டியது.

மீண்டும் சித்தப்பா, அப்பாவோடு சண்டை போட்டு கொண்டாலும் பாசக்கார அண்ணன் தம்பிகள் இருவரும்.

சித்தப்பா அடிக்கடி பிடிக்காமல் எந்த விசயத்தையும் செய்யாதே என்று சொல்வார். பிடிச்சு செய்யும் வேலையில் நட்டம் வந்தாலும் பரவாயில்லை என்பார். 

என்னை விடுதியில் சேர்க்கும் போது இதை தான் சொன்னார். புடிக்கலைன்னா பத்தாவது நாளே வந்திரு, பார்த்துக்கலாம் என்றார்.

அதே போல் அழுது வடிந்து வெளிநாடு செல்ல இருந்த அண்ணனிடமும் (அவரது மகன்) சொன்னார். புடிக்கலைன்னா ஒரு மாசத்துல வந்துரு. ஊர்ல ஏதாவது பார்த்துக்கலாம் என்று. 

புடிச்சதை செய்ய சொன்னதாலோ என்னவோ அண்ணன் விரும்பி குடிக்க ஆரம்பித்தான்.

மணி நாலரை தாண்டி, என் மனது மாலை தேநீரை எதிர்பார்த்தது. டிரைவரும் அதே மனநிலையில். வண்டியை டீக்கடையில் நிறுத்தினார். சுரேஷ் முகம் கழுவி சிகரட் பற்ற வைத்து டீ குடித்து கொண்டான். தினேஷ்க்கு மோர் தேவைப்பட்டது. லெமன் ஜீஸ் தான் கிடைத்தது. 

சுரேஷ், நீ பின்னாடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் தூங்குன்னே என்று முன்னாடி ஏறிக்கொண்டான். 

ஊரில் இருந்து பக்கத்து வீட்டு சித்திரை அண்ணன் போன் பண்ணினான். ஸ்பீக்கரில் பேசினோம். ஆஸ்பத்திரியில் இருந்ததால இன்னைக்கே தூக்க போறோம் என்றான்.

சனிக்கிழமை என்று இழுத்தான் தினேஷ்.

ஒரு கோழி அடிச்சு பாடையில் கட்டிருவோம் என்று பரபரப்பாக பேசிவிட்டு வைத்தான் சித்திரை அண்ணன்.

இரவு எட்டு மணிக்கு ஒரு ஒயின்ஷாப்பில் நிறுத்தி மறுநாளுக்கான சரக்கை வாங்கி கொண்டனர்.

9.30க்கு ஊருக்கு போனோம். சித்தி சுரேஷை கட்டிபிடித்து அழுதாங்க. நான் சின்ன அண்ணனின் கைகளை பற்றி இருந்தேன். தினேஷ் பெரிய அண்ணனின் கைகளை பிடித்து இருந்தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தினேஷ் வீட்டு மொட்டை மாடியில் நான், தினேஷ், டிரைவர் மூன்று பேரும் தூங்கினோம். 

மறுநாள் ஆத்துக்கு போய்விட்டு கிணற்றில் குளித்தோம். பல ஆண்டுகளுக்கு பிறகு கிணற்று குளியல்.

மாலையில் டீ குடித்து விட்டு சென்னைக்கு கிளம்பினோம்.

திங்கட்கிழமை காலையில் அலுவலகத்திற்கு சென்று முதல் வேலையாக ரிசைன் லெட்டர் டைப் செய்தேன். 


Thursday 14 April 2022

வாசித்தவை

இதுவரை நான் வாசித்த புத்தகங்கள். சில புத்தகங்கள் விடுபட்டிருக்கலாம். 

1. பொன்னியின் செல்வன் - கல்கி

2. கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன்

3. இல்லம் தோறும் இதயங்கள் -சு. சமுத்திரம்

4. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

5. தண்ணீர் தேசம் - வைரமுத்து 

6. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

7. கடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா. விஜய் 

8. அணிலாடும் முன்றில் - நா. முத்துக்குமார்

9. பலா மரம் - பாலகுமாரன்

10. உலோகம் - ஜெயமோகன்

11. அபிதா - லா.ச.ரா 

12. அம்மா வந்தாள் - தி. ஜானகி ராமன் 

13. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 

14. ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேல் 

15. சோளகர் தொட்டி - ச. பாலமுருகன் 

16. கூகை - சோ. தர்மன் 

17. வட்டியும் முதலும் - ராஜு முருகன் 

18. மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ் 

19. மூங்கில் மூச்சு - சுகா 

20. நட்பு காலம் - அறிவுமதி 

21. ஆறாவடு - சயந்தன் 

22. மதுரை கதைகள் - நர்சிம் 

23. கோவேறு கழுதைகள் - இமையம் 

24. ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத் 

25. வந்தார்கள் வென்றார்கள் - மதன் 

26. கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா 

27. அஞ்சு வண்ணம் தெரு - தொப்பில் முகமது மீரான் 

28. உப்பப்பாவுக்கு ஒரு ஆனையிருந்து - வைக்கம் முகமது பஷீர் (குளச்சல் யூசுப்) 

29. காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் 

30. அத்தனைக்கும் ஆசைப்படு - சுவாமி சுகபோதானந்தா 

31. மாதொருபாகன் - பெருமாள் முருகன்

32. கடல்புரத்தில் - வண்ணநிலவன் 

33. கனிவு - வண்ணதாசன் 

34. நீ நான் நிலா - படிப்பகத்தான் 

35. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் - கு. அழகிரிசாமி 

36. கோபல்ல கிராமம் - கி.ரா 

37. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

38. பாக்கு தோட்டம் - பாவண்ணன் 

39. நாளைக்கு மழை பெய்யும் - போப்பு 

40. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் 

41. நிழல்கள் - நகுலன் 

42. தேசாந்திரி - எஸ். ராமகிருஷ்ணன்

43. மழைமான் - எஸ். ராமகிருஷ்ணன்

44. நடந்து செல்லும் நீருற்று - எஸ். ராமகிருஷ்ணன்

45. புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன் 

46. இலக்கில்லாத பயணி - எஸ். ராமகிருஷ்ணன்

47. சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

48. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்

49. பார்த்திபன் கனவு - கல்கி 

50. கலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல் 

51. தாயார் சன்னதி - சுகா 

52. நைலான் கயிறு - சுஜாதா 

53. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா 

54. ஓலை பட்டாசு - சுஜாதா

55. கிடை - கி. ரா

56. இந்த பூக்கள் விற்பனைக்கல்ல - வைரமுத்து

57. கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து 

58. கருவாச்சி காவியம் - வைரமுத்து 

59. படிப்பது சுகமே - வெ. இறையன்பு 

60. பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் - நா. முத்துக்குமார் 

61. ஒன்று - இருவன் 

62. கண்ணிவாடி - க. சீ. சிவக்குமார்

63. தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்

64. ரெய்னீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

65. காலம் - வண்ணநிலவன் 

66. ஒளியிலே தெரிவது - வண்ணதாசன் 

67. நாளை மற்றுறொரு நாளே - ஜி. நாகராஜன்

68. கடலுக்குள் அப்பால் - ப. சிங்காரம் 

69. அறியப்படாத தமிழ் மொழி - கரச 

70. 2 States - Chetan Bhagat

71. One night at call centre - Chetan Bhagat

72. Revolution 2020 - Chetan Bhagat

73. Half Girlfriend - Chetan Bhagat

74. One indian girl - Chetan Bhagat

75. Girl in room 105 - Chetan Bhagat 

76. I too had a love story - Ravinder Singh

77. You are my best wife - Ajay Pandey 

78. (பெயர் நினைவில் இல்லை) - டிஎன். இளங்கோவன்












Saturday 2 April 2022

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம் தான் இன்றைய கால சூழலுக்கு சிறந்தது. 

அந்த காலகட்டத்தில் கூட்டு குடும்பம் சிறப்பாக இருந்தது, காரணம் அன்றைய அம்மாக்கள், பாட்டிகள் தற்சார்பு உடையவர்களாக இல்லை. இன்று அப்படி இல்லை தனக்கென செல்போன் இருக்கிறது வேலைக்கு செல்லவில்லை என்றாலும் சிறிதளவேனும் பணம் கையில் வைத்து சுயசார்பு உடையவர்களாக உள்ளார்கள்.

மேலும் அந்த காலத்தில் குடும்ப தொழில் அல்லது குல தொழில்களையே செய்தனர். அப்பாவிற்கு பிறகு அண்ணன் தம்பிகள் அதே தொழிலை செய்தார்கள். லாபம் நட்டம் அவர்களுக்கு தெரிந்தே இருக்கும். இன்றைய சூழலில் அனைவருக்கும் வேலை என்பதே பெரும்பாடு. இதில் அண்ணன் தம்பிக்கு ஒரே வேலை எப்படி சாத்தியம்.

இன்று சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை அளவில் ஒரு சதவீதம் கூட தொழிற்சாலைகள் கிடையாது. தொழில் வளமும் படு மோசம். ஆகவே சென்னை நோக்கி படையெடுக்கின்றனர்.

அண்ணன் தம்பி இருவரும் சென்னையில் இருந்தாலும் ஒரே இடத்தில் வேலை என்பது சாத்தியமில்லை. பிறகு எப்படி கூட்டு குடும்பம்.

அது மட்டுமில்லாமல் இன்றைய நவீன யுகத்தில் உணவில் அதிக ருசியை எதிர்பார்க்கிறார்கள். ஓட்டலில் சாப்பிட்டால் கூட ஒவ்வொரு உணவுக்கும் வேறு வேறு ஓட்டலை பிடிக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உணவு சமைக்க தற்கால சூழலில் முடியாது. ஒரே உணவை அனைவரும் ஏற்கும் சூழலும் இல்லை.

சென்னையில் முக்கால்வாசி வீடுகளில் சிறிய அளவில் சமையலறை உள்ளது. அதில் இரண்டு பேர்களுக்கு மேல் நின்று வேலை செய்ய முடியாது. கூட்டு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அனைவருக்கும் சமைத்து போடும் எந்திரம் போல் ஆகிவிடுவார். 

வருமான வரியை குறைக்க லோன் போட்டு வீடு வாங்கி, லோனை அடைக்க வேறு வேறு கம்பெனிகள் மாறி கொண்டிருக்கும் நவீன யுகத்தில் இரண்டு மூன்று பேரின் சம்பளத்தை குவித்து ஒருவர் பட்ஜெட் போட்டு குடும்பத்தை கொண்டு செல்வது நடைமுறைக்கு சாத்தியமில்ல. 

அப்பா அம்மாவோடு கூட்டு குடும்பம் சாத்தியம். அவர்களை சமைக்க, குழந்தைகளை பார்த்து கொள்ள வைக்கும் வேலைகாரர்களாக டீல் செய்யாதவரையில்.

Friday 1 April 2022

தத்லி பித்லி

 1. 

தத்லி பித்லி என 

தொடங்கும் 

தொட்டு பிடித்து 

விளையாட்டில் சல் 

வர வேண்டும் என்று

எப்போதும் வேண்டி 

கொள்வேன்.

உப்புக்கு சப்பாணியாக 

விளையாடும் நானும் !!!


2. 

சிறு வயதில் எனக்கு தோன்றியது

வருங்காலத்தில் நமது கிராமத்திற்கு 

நிறைய பேருந்துகள் வரும் என்று,

இரு சக்கர வாகனங்கள் 

நிறைய வந்துவிட்டது !

எல்லா வீடுகளிலும் 

வண்ண தொலைக்காட்சி

இருக்கும் என்று,

எல்லார் கைகளிலும்

அலைபேசி உள்ளது !

விவசாயம் சுருங்கும் 

என்று ஒருபோதும் 

தோன்றியதில்லை !!!

3. 

பொம்மை ஸ்டெதஸ்கோப்பை 

காதில் வைக்க கூச்சமாய் 

இருப்பதால் கையில் வைத்து 

கொண்டே மறுமுனையில் 

என் இதய துடிப்பை 

ஆராய்கிறாள் எங்கள் 

இல்ல தேவதை 

இந்த காட்சியில் 

என்னிதயம் மகிழும் 

என்று அவளுக்கு 

தெரிந்திருக்குமா...


4

அடிக்கடி கடந்தது 

தாம்பரம் சப்வே 

ஒவ்வொரு முறையும் 

ஊருக்கு போகும் 

மகிழ்ச்சி இருக்கும் !

துரைசாமி சப்வே 

அருகில் சுவரேறி

குதித்து கையேந்தி பவனில்

சிற்றுண்டி சாப்பிட்டு 

அலுவலகம் சென்ற 

நாட்கள் ஏராளம் !

சைதாப்பேட்டை மார்க்கெட் 

சப்வே அருகில் 

மேன்சன், கடைகள் என 

இனிமையான நினைவுகள் 

ஏராளம் !

மாலை மங்கும் நேரத்தில் 

மவுண்ட் ரோடு சப்வேயில் 

மங்கை ஒருத்தி கண்ணடித்து 

அழைத்ததாக நண்பன் கூறினான் 

அன்று முதல் மவுண்ட் ரோடு 

சப்வே என்றால் பயம் !

பூங்கா ரயில் நிலைய சப்வேயில் 

நான் கடக்கும் போதெல்லாம்

அடுத்த ரயிலை பிடிக்க 

அவசரமாக எனக்கு எதிரில் 

செல்வார்கள் 

வடசென்னை மக்கள் 

அவர்கள் முகத்தில் 

அசதியை பார்த்ததில்லை !!!