Monday 15 January 2024

கோரை நாவல் பற்றி

நடுநாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி நான் எப்போதும் எழுதுவேன் என்கிறார் கண்மணி குணசேகரன். இவரின் அஞ்சலை நாவல் வாசித்த பின், வேறு நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பே.

உத்தண்டி, பூரணி இந்த தம்பதியர் நிலம் வாங்கி படும்பாடு தான் நாவல். அந்த எளிய மக்களின் வாழ்க்கையை கோரை எனும் புல்வகை என்ன பாடுபடுத்துகிறது என்று எழுதியுள்ளார்.

அவர்களின் வாழ்வியலில் இணைந்துவிட்ட பேருந்து தடம் எண் 33, முந்திரி காடு வெட்டுதல், பன்றிக்கறி, நிலம் வாங்கிவிட்ட வயித்தெயிரிச்சலில் இருக்கும் ஊர்காரர்கள் என ஒரு கிராமத்து அனுபவம்.

விவசாய அனுபவம் இல்லாதவன் விவசாயம் செய்ய முனைந்தால் என்னவாகும், விவசாய நிலம் இருந்தாலும் சொந்தமாக பம்ப் செட், கிணறு இல்லை என்றால் என்னாகும் என்பதை அனுபவபூர்வமாக எழுதியுள்ளார் கண்மணி குணசேகரன்.

ஒரு திரைப்படம் பார்ப்பது போல காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறது இவரது எழுத்து. அதே சமயம் வட்டார சொல் வழக்கில் எழுதியுள்ளார். மல்லாட்டை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வாசிக்க சிரமமாக இருக்கும்.

முன்னுரை எதுவும் இல்லாமல் அட்டை - அட்டை நாவலே நிறைந்துள்ளது. எழுத்தாளரின் ஊரான மணக்கொல்லை தான் கதைக்களம். கண்ணில் பட்டதை மண்வாசத்தோடு படைத்துள்ளார் கண்மணி குணசேகரன்.

Friday 12 January 2024

நிவாரணம்

பேரனை வரிசையில்
நிறுத்திவிட்டு அங்கும்
இங்குமாக அலைந்து
வியாபாரத்தை பார்த்துக்கொண்டார்
மளிகை கடைக்காரர் !

சேலை மாற்றிவிட்டு
வந்தால் பின்தங்கி விடுவோம்
என நைட்டியில் வந்திருந்தார் மண்டபத்துக்காரர் மனைவி !

காலை மாத்திரை போடாததால்
தலை சுற்றி தரையில்
உட்கார்ந்து கொண்டார்
ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவி !

சித்தப்பாவிற்கு சீக்கிரம்
கிடைக்க சரிபார்ப்புகளை
துரிதப்படுத்தினார்
கவுன்சிலர் !

போட்டோ எடுக்க பொக்கைவாய்
கிழவிகளைத் தேடிக்
கொண்டிருந்தது
தகவல் தொழில்நுட்ப அணி !

நிவாரணத்தால் நிமிர்ந்தோம்
என ஆரம்பித்து எதுகை மோனைகளை
சரிபார்த்து கொண்டிருந்தது
இணைய அணி !

யாருக்கு தேவை என்ற
தரவு அரசிடம் இல்லை
யாருக்கு தந்தால் பலன்
என்ற முழுத்தரவு இருக்கிறது !

நேரில் வந்து உதவியவர்களுக்கு
இருகரம் கூப்பியதை தவிர
வேறொன்றும் செய்யமுடியவில்லை
ஏழை குடியானவனால் !

வடிந்து போன ஆற்றங்கரையில்
செங்கல் ஏதாவது கிடைக்குமா
என்று தேடுகிறான்
சிதிலமடைந்த வீட்டை
சரிசெய்ய !!!

இந்தியா - ஆப்கானிஸ்தான்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 தொடர் மொகாலியில் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் காயத்தில் இருந்து மீண்டு வராததால் இப்ராஹிம் ஷர்தான் கேப்டனானார். 

டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிக பனிப்பொழிவு இருந்ததால் 10 டிகிரி வெப்பநிலை நிலவியது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் மற்றும் முகேஷ்குமார் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். பகுதி நேரமாக பந்து வீச ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா இருந்தனர். 

ஆப்கான் தரப்பில் பரூக்கி, நவீன், ஓமர்சாய் என வேகப்பந்து வீச்சாளர்கள், குல்பதீன் மற்றும் கரீம் ஜெனட் என மித வேகப் பந்து வீச்சாளர்கள், இன்னும் இரு ஸ்பின்னர்கள்.

ஆப்கான் துவக்க வீரர்கள் அடித்து ஆட முயற்சித்தாலும் முடியவில்லை. எங்கு அடிப்பது என்ற டெக்னிக் தெரியவில்லை. துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முன்னணி வீரர் ரஹ்மத் ஷா முதல் டி20 போட்டியில் ஆடினார். சீனியர் வீரர்களான நபி மற்றும் நஜிபுல்லா மட்டுமே ஸ்ட்ரெய்டில் அடித்தால் ரன் வரும் என்று உணர்ந்து ஆடினர்.

பெரிய இலக்கை நிர்ணயிக்கவில்லை என்றாலும் முதல் ஓவரில் ரோகித் அவுட்டானார். 4ம் ஓவரில் ஹில்லை அவுட் ஆக்கினர். அதற்கு பிறகு ஆட்டத்தை ஆப்கான் தனது பக்கமாக இழுக்கவே இல்லை. பீல்டிங் செய்ய கடின சூழல், பந்து வீச கடின சூழல் என்று ஆப்கானுக்கு நிறைய கற்று தந்தது இந்தியா.

நேற்றைய போட்டியில் யார்க்கர் அதிகம் போடமுடியவில்லை. ஒரே ஒரு யார்க்கர் அர்ஷதீப் முதல் ஓவரில் வீசியது மட்டுமே என நினைக்கிறேன். ஸ்டம்புக்கு நேராக பந்து வீசவும் முடியவில்லை. எல்பிடபிள்யூ யாரும் ஆகவில்லை. போல்டு ஆன இருவரும் இன்சைட் எட்ஜில் ஆனார்கள். இந்த கடுங்குளிர் மைதானத்தை பிசிசிஐ ஏன் தேர்வு செய்தது என தெரியவில்லை.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இல்லை, சாம்சன் இல்லை. இந்திய அணி உலகக் கோப்பைக்கு எந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறது என்ற குழப்பமே நிலவுகிறது.

வரும் ஐபிஎல் போட்டிகளில் பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கலாம்.