Tuesday 31 August 2021

தோனி டெஸ்ட் ஓய்வு அறிவிப்பு

தோனி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் நடைபெற்று கொண்டிருக்கும் போது பாதியில் ஓடிவிட்டார் (ஓய்வு) என்று கதறும் ஹேட்டர்களுக்காக இந்த பதிவு.

கும்ப்ளேவில் இருந்து ஆரம்பிப்போம். ஏனென்றால் கும்ப்ளேவும் நாலு போட்டி கொண்ட தொடரில் மூன்றாவது போட்டியில் ஓய்வு பெற்றவர்.

கும்ப்ளே ஓய்வு பெற்ற தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.

மேட்ச் - டிரா 

இரண்டாவது போட்டி மொகாலியில் நடைபெற்றது. காயம் காரணமாக கும்ப்ளே ஆடவில்லை. கும்ப்ளேவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா ஆடினார். அது மட்டுமே அணியில் செய்யப்பட்ட மாற்றம்.

மேட்ச் - வெற்றி

மூன்றாவது போட்டியில் கும்ப்ளே மீண்டும் வந்தார். ஹர்பஜனுக்கு பதிலாக ஆடினார்.

மேட்ச் - டிரா

கேப்டன்சி மாற்றினால் இந்தியா வெல்கிறது என்பதை உணர்ந்து அந்த போட்டியிலே ஓய்வு பெற்றார். அது அவர் 10 விக்கெட் எடுத்த டெல்லி மைதானம் என்பது கூடுதல் சிறப்பு.

நான்காவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

ஹர்பஜன் அணிக்கு திரும்பினார். கம்பீருக்கு பதிலாக முரளி விஜய் ஆடினார்.

முடிவு - வெற்றி.

முடிவுகளை மாற்றி வைப்பது கேப்டன்சி என்று நிருபித்தார் தோனி.

2014ல் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக தோனி ஆடவில்லை. கோலி தலைமை வகித்தார். சகா கீப்பிங் செய்தார்.

முடிவு - தோல்வி

இரண்டாவது போட்டியில் தோனி அணிக்கு திரும்பினார். மூன்று மாற்றங்கள். 

சகா - தோனி 

ஷமி - உமேஷ் 

கரன் - அஸ்வின் 

முடிவில் மாற்றமில்லை. - தோல்வி

மூன்றாவது போட்டியில் ஒரே மாற்றம் ரோகித்துக்கு பதிலாக ராகுல். 

முடிவு - டிரா 

வெற்றி பெற முடியாமல் போவதற்கு கேப்டன்சி காரணமாக இருக்கலாம் என யோசித்து, புதிய ஆண்டில் புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணியை ஆட வைத்தார். தனது ஆட்டத்திறன் டெஸ்ட் போட்டிகளில் குறைந்ததால் ஓய்வும் அறிவித்தார்.

எங்கேயும் ஓடவில்லை, ஆஸ்திரேலியாவில் இருந்து முத்தரப்பு ஒருநாள் தொடரையும் உலகக் கோப்பையையும் வழி நடத்தினார்.

சகா மீது கொண்ட நம்பிக்கையில் தான் டெஸ்ட் போட்டியில் தைரியமாக விலகினார்.

ஒருநாள் போட்டிகளுக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக அம்பதி ராயுடு தான் இருந்தார். அதனால் தான் தோனி தனக்கு குழந்தை பிறந்ததற்கு கூட நாடு திரும்பாமல் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடினார்.









Friday 27 August 2021

மஹி பிறந்தநாள்

அறிமுகமான நாளிலிருந்து

இன்று வரை இவள் 

அன்பு குறையவில்லை !

திட்டுவாள், கோபப்படுவாள் 

பேசாமலிருப்பாள் 

எல்லாமே குறுகிய

காலம் தான் !

ஏழு ரூபாய் பொட்டு 

இருபது ரூபாய் கம்மல் 

இதை தவிர வேறெதுவும் 

கேட்டதில்லை !

புதிதாக கற்றாலும் 

இவள் சமையல் 

கைமணம் மிக்கது !

இவள் வந்த பின்

எங்கள் இல்லத்தில் 

எண்ணற்ற மகிழ்ச்சி !


எழுத வேண்டும் ஆயிரம்

கவிதைகள் இவளை பற்றி !

சுற்ற வேண்டும் ஆயிரம் 

ஆயிரம் இடங்கள் இவள் கரம்பற்றி !

வாழ வேண்டும்

ஆயிரம் ஆண்டு

இவளை என் தோளில் சாய்த்து !


இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் மஹி !!!






Thursday 26 August 2021

18/100 விடுதி நாட்கள்

அதிகாலை ஐந்து மணிக்கு

மணியடிக்கும்.

அவசர குளியல் போட்டு 

அலங்காரம் செய்துவிட்டு

ஆறு மணி ஜெபகூடுகையில் 

நிற்க வேண்டும் !

படிப்பு நேரம்,

தேனீர் நேரம்,

படிப்பு நேரம்,

காலை உணவு !

பள்ளி முடிந்ததும் 

காபியும் வடையும் !

விருப்பம் இருந்தால்

மாலை ஆறு மணி வரை

விளையாடி கொள்ளலாம் !

ஆறு முதல் ஏழரை படிப்பு நேரம்

எட்டு வரை இரவு உணவு !

ஒன்பதரை வரை 

படிப்பு நேரம் !

உறங்கி வழியும் 

கண்களோடு ஜெப கூடுகை !

பத்து மணிக்கு விளக்குகள் 

அணைக்கப்படும் !

கட்டாய தூக்க நேரத்தில்

வீட்டை நினைத்து 

விசும்பல்கள் கேட்கும் !

தம்பி தங்கை என 

உறக்கத்தில் உளறல்கள் 

கேட்கும் !

மீன் தொட்டியில் 

வண்ண மீன்கள் கிடக்கும்,

எங்களை போல போட்டதை 

தின்று கொண்டு !

வெள்ளை சீருடை சட்டையும் 

பள்ளி முத்திரை பதித்த 

பனியன்களும் அடிக்கடி

காணாமல் போகும் !

ஞாயிற்றுக்கிழமை மரத்தடியில் 

குடும்ப உறுப்பினர்களோடு

அரைமணி நேரமோ 

ஒரு மணி நேரமோ 

வாய் நிறைய சிரிப்பு வாய்க்கும் !

அதிகாலையில் ஒலிக்கும் 

அப்பா பிதாவே பாடல் 

எரிச்சலூட்டும் !

ஊருக்கு செல்லும் நாளில் 

உற்சாகமாக உரக்க 

கத்தும் சந்தோசம் பொங்குதே 

பாடல் இனிக்கும் !

வாரம் ஒருமுறை மூன்று

மணி நேரம் வெளியே 

செல்ல அனுமதி !

பண்டத்தை மட்டுமல்ல 

சோகத்தையும் பகிர்ந்து

கொள்வோம் !

கிரிக்கெட், ரசிக சண்டைகள், 

நட்பு குழுக்கள், பட்டப் பெயர்கள், 

வார்டனிடம் வாங்கிய அடி

...

மீண்டும் செல்ல முடியாத 

வண்ணமயமான நாட்கள் அது !!! 












Monday 9 August 2021

15/100. அவள் அருகில்லா நாட்கள்

சுவையில்லா தேநீர் 

ருசியில்லா உணவு 

உறக்கமில்லா இரவு

வெறுமையாய் வீடு 

வழியனுப்ப ஆளில்லா காலை 

வரவேற்க அவளில்லா மாலை 

இயக்கமில்லா தொலைக்காட்சி

நீண்டு செல்லும் தனிமை 

அவளின் காணொளி அழைப்புகள்

இனிமை !!!