Wednesday 26 April 2023

சச்சின் - சுயநலவாதியா

இந்திய கிரிக்கெட்டின் முகமாக அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் சுயநலவாதி என்று விமர்சனங்கள் உண்டு.

இது உண்மையா, ஒரு கிரிக்கெட் ரசிகனின் பார்வையில்.

சச்சின் நல்ல பார்ம்ல் இருந்த காலத்தில் இந்திய அணி தன்னம்பிக்கை இல்லாத அணி, சச்சின் எனும் செங்கலை உருவினால், ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்துவிடும் என்ற நிலையில் தான் இருந்தது. சச்சின் தனி மனித ராணுவம் போல் செயல்பட்டார். அவர் அவுட்டானால் சுயநல சித்தரிப்பு தொடங்கியது.

உதாரணமாக 1996 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் 252 என்ற இலக்கை துரத்தியது இந்தியா. அன்றைய நாளில் 250 கடின இலக்கு. இந்திய அணி 98 என்ற நிலையில் சச்சின் அரைசதம் அடித்து அவுட் ஆனார். இந்தியா 120/8 என்றாகி, ரசிகர்கள் கொந்தளிப்பால் ஆட்டம் கைவிடப்பட்டது. இலங்கை வென்றது.

சச்சின் முதல் பேட்டிங் என்றால் சதமடிப்பார். இரண்டாம் பேட்டிங்கில் அவுட் ஆகிவிடுவார் என்று விமர்சனங்கள் எழுந்தது. 

1996 உலகக் கோப்பைக்கு பின் கங்குலி, டிராவிட் வந்தாலும் சச்சினை நம்பியே அணி இருந்தது. ஜடேஜா, ராபின் மிடில் ஆர்டரில் தோல்வியை தள்ளி வைப்பார்களே தவிர, தோல்வியை தவிர்க்க வைக்க மாட்டார்கள்.

1999 உலகக் கோப்பையில் சச்சின் இல்லாத போட்டியில் 252 சேஸ் செய்த இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 

கங்குலி தலைமையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட இந்திய அணியில் சேவாக், கைப், யுவராஜ், தோனி, ஜாகிர் என இளைஞர் படை சேர்க்கப்பட்டது. சச்சின் இளம் அணியினரோடு ஒன்றி போனார். அந்த அணி தான் சச்சின் அவுட் ஆனாலும் ஓரளவுக்கு தன்னம்பிக்கையோடு விளையாட தொடங்கியது.

சச்சின் கேப்டனாக இருந்த போது மும்பை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார் என்றொரு விமர்சனம். இந்திய கிரிக்கெட்டில் மும்பை ஆதிக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வருவது. அதில் சச்சின் மட்டும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

சதமடிக்க வேண்டும் என்பதற்காக 85 ரன் தாண்டினால் மெதுவாக ஆடுவார் என்ற குற்றச்சாட்டு.

சதமடிப்பது சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு போதை, 85 ரன்களுக்கு பிறகு மெதுவாக ஆடுவார் ஆனால் ஸ்ட்ரைக் ரேட் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் எல்போ பிரச்சினையில் இருந்து மீண்ட சச்சின் நெர்வஸ் நைன்டீஸ் பிரச்சனையில் சிக்கினார்.

18 முறை 90 - 99 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழக்கவில்லை. அந்த 18ல் இந்திய அணி 11 முறை வென்றுள்ளது. மிகப்பெரிய ஒருநாள் போட்டி கேரியரில் 18 என்பது சாதாரணமே.

சச்சின் சேசிங்கில் சதமடித்த உடன் அவுட் ஆகிவிடுவார். அதற்கு பின் அணி தோல்வியை தழுவும் என்பது.

சச்சின் ஒருநாள் போட்டி சேசிங்கில் 17 சதமடித்துள்ளார். அதில் 14 முறை இந்தியா வென்றுள்ளது.

சச்சின் சுயநலவாதியா என்று சந்தேகிக்க வைக்கும் ஒரு நிகழ்வு.

2007 டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து மும்மூர்த்திகள் விலகிவிட, தோனியை கேப்டனாக்க சிபாரிசு செய்தவர் சச்சின். இந்திய அணியை பொறுத்தவரை ஒரு கேப்டன் விலகினால் அடுத்த சீனியர் பேட்ஸ்மேன் கேப்டனாக நியமிக்க படுவது வழக்கம்.

சேவாக் மற்றும் யுவராஜ், தோனியை விட சீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்திய கிரிக்கெட்டில் பஞ்சாப் மற்றும் டெல்லியின் ஆதிக்கம் ஏற்பட்டுவிட கூடாது என்று சச்சின் நினைத்திருக்கலாம். (2008 ஐபிஎல்ல் சச்சின் ஆட முடியாமல் போன போது ஜெயசூர்யா, பொல்லாக் ஆகியோர் இருந்த போதும் சச்சினின் கேப்டன் சாய்ஸ் ஹர்பஜன்சிங்)

ஆனால் சச்சினின் சிபாரிசு இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது.