Thursday 29 December 2022

கார்த்திக் - சுகன்யா

இருவருக்கும் 23 வயது 

இருவரும் காதலிக்கிறார்கள் 

சொல்லாமலே !

அடிக்கடி பார்க்கும் நபரால் 

நாம் காதலிக்கபடுகிறோம் 

என்ற உணர்வில்லாமல் 

காதலை அவஸ்தையாக 

கழிக்கிறார்கள் !

இருவரும் தமிழை 

சிறப்பாக கையாண்டு 

கவிதை எழுதி வைத்துள்ளார்கள் 

காதலை சொல்ல !

எந்த நாள் நல்ல நாள் 

என்று தவம் செய்கிறார்கள் 

என் காதல் நீ தான் 

என்று எடுத்துரைக்க !

கடற்கரையில் கைகோர்த்து 

நடப்பது போல் 

கனவு காண்கிறார்கள்!

இருவீட்டார்களின் அனுமதி 

எப்படி வாங்குவது என்று 

சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்!

2023 துவக்க நாளில் 

மனதில் இருப்பதை

சொல்ல துணிவு 

கொண்டிருக்கிறார்கள் !!!






கார்த்திக்

கல்லூரியில் எத்தனையோ 

பேரை பார்த்திருக்கிறேன்

கார்த்திக் போல் 

யாரும் கவனம் ஈர்க்கவில்லை!

முகம் பார்த்து காதலை 

சொன்னான் ஒருவன் 

கல்லூரியில்! 

அவனை ஏற்க மனம் 

வரவில்லை!

கார்த்திக்கின் முகம் பார்த்து

காதலை சொல்ல

தைரியமில்லை!

இவனை ஈர்க்க 

வழியும் தெரியவில்லை!

அலுவலகத்தில் அருகில் 

தான் இருக்கிறான் 

காதலை சொல்ல 

நினைத்தால் தொலைவில் 

இருப்பதாக தோன்றுகிறது!

அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் 

அவன் வாகனத்தின் அருகில்

என் வாகனத்தை நிறுத்துவது 

பெருமிதமாக உள்ளது !

அதை புகைப்படம் எடுத்து 

அடிக்கடி பார்த்து கொள்கிறேன் !

மணக்கோலத்தில் அவனோடு 

எடுக்கப் போகும் புகைப்படத்திற்கு

காத்திருக்கிறேன்!!!






சுகன்யா

அலுவலகத்தில் அருகில்
இருக்கிறாள்
தோழியாக
என் மனதில்
காதலியாக !

அவள் வராத நாட்களில்
கணிணித்திரை காலியாக 
தெரிகிறது !
காலியான காப்பி கோப்பையை 
அவளின் கோப்பைக்கு 
அருகில் வைத்து
அழகியலை ரசிப்பவன்
நான் !

அலுவல் ரீதியாக
ஆயிரம் பேசினாலும்
காதல் ரீதியாக
ஒன்றும் பேசமுடியவில்லை
அவளிடம் !

தினசரி கிழிகிறது 
என் வீட்டு காலண்டர் 
அவளிடம் காதலை 
சொல்லும் நாள் 
தெரியாமல் !

தினசரி கழிகிறது
நாட்கள்
என் காதலின் 
வயதை கூட்டிக்கொண்டு!

என்றாவது என் 
மனதை எடுத்துரைப்பேன் 
அவளிடம்!!!

Friday 16 December 2022

கண்ணபிரான்

நான் கண்ணபிரான், அடுத்த வாரத்தில் வயசு 48 ஆக போகுது. எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பொறியியல் படிப்பை முடித்து கேம்பஸில் செலக்ட் ஆகிவிட்டான். போஸ்டிங்க்கு வெயிட்டிங். இரண்டாவது மகன் பொறியியல் இரண்டாம் ஆண்டு.

தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து 2  கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேப்பர் கடைக்கு சென்று பேப்பர் வாங்கி படிப்பது வழக்கம். தினசரி ஒரே பேப்பரை வாங்க மாட்டேன் அன்றன்று எந்த பேப்பர் பிடிக்குமோ அதை வாங்குவேன். தினமலர், தினமணி, கதிரவன்,தந்தி, தமிழ் திசை என மாறி கொண்டே இருக்கும். பேப்பரை வாசித்து விட்டு, குளித்துவிட்டு,  7.45க்கு அலுவலகம் கிளம்பி விடுவேன்.

நான் டிப்ளமோ முடித்ததும் வேலையில் சேர்ந்து இப்போது 5 கம்பெனி மாறிவிட்டேன். முதலில் வேலை பார்த்த கம்பெனியில் பணி, கையால் வரைந்த வரைபடங்களை ஆட்டோகேட் உதவியால் கணினி படுத்தும் பணி. அங்குதான் ஆட்டோகேட் கற்றேன்.

பிறகு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை கிடைத்தது. சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தது. மற்றவர்கள் சனி, ஞாயிறுகளில் பொறியியல் படிக்க சென்றனர். நான் பழைய கம்பெனிக்கு பகுதி நேர வேலைக்கு சென்றேன். திருமணம் ஆனது. சம்பள உயர்வுக்காக சில கம்பெனிகள் மாறினேன். கடைசி கம்பெனியில் 12 ஆண்டுகள் பணியாற்றி விட்டேன். 

என்னை விட வயதில் சிறிய இஞ்சினியர்கள் தான் எனக்கு வேலை தருவது. பெரும்பாலும் என்னை கேபி சார் என்று தான் கூப்பிடுவார்கள். சிலர் கேபி வாங்க, போங்க என்பார்கள். எனது வேலையை நான் திருத்தமாகவும், தெளிவாகவும் செய்வேன்.

திடீரென்று வந்த 3டி தொழில்நுட்பத்தை கற்க முயன்றேன். ஆனால் வேகமாக செய்ய முடியவில்லை. 3டி தொழில்நுட்பத்தில் வேகம் இல்லை, பொறியியல் படிப்பு இல்லை என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.

வேலை நீக்க கடிதம் என் கைகளை நடுங்க வைத்தது. மனைவி மகன்களிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக பணி நீக்கம் அரசல் புரசலாக பேசப்பட்டது. புரளியாக இருக்கும் என்று தான் நினைத்தேன். 

ஒரு வாரத்தில் கணக்கு முடித்து மொத்த தொகையையும் தந்து விடுவார்கள். 

என்றும் போல் பேருந்து விட்டு இறங்கி இயல்பாக நடந்து செல்ல முடியவில்லை. இன்னும் பத்து வருடங்கள் ஓட்டி இருந்தால் ஓய்வு வயது வந்திருக்கும். டீக்கடையில் நின்று டீ குடித்தேன். இரண்டு இளைஞர்கள் வந்து டீ குடித்து கொண்டே புகைப்பிடித்தனர். என் மகன் வயதை ஒத்தவர்கள். 

மனைவியும் இளைய மகனும் வீட்டில் இருந்தார்கள். விவரத்தை சொன்னேன். மனைவி முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து, புன்னகைத்து கொண்டே வேற வேலை தேடி கொள்ளலாம் என்றாள். இத்தனை ஆண்டுகள் என்னோடு பயணித்தவளின் ஆறுதல் வார்த்தைகள்.

அடுத்த நாள் வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கொண்டேன். 7.45க்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. அலுவலக வேலைகளில் ஆழ்ந்து வேலை செய்தவன் முதன் முறையாக மனைவியின் ஒருநாள் அலுவல்களை பக்கத்தில் இருந்து பார்க்கிறேன்.

தெரிந்த நண்பர்களிடம் வேலைக்கு சொல்லி வைத்தேன். ஒரு வாரம் கடந்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே இருந்தா ஒருமாதிரி இருக்கும், வெளியே எங்கேயாவது போய்டு வாங்க என்றாள் மனைவி. எங்கு செல்வது, நண்பர்கள் கூட பணி நிமித்தமாக அலுவலகத்தில் தான் இருப்பார்கள். ஒருநாள் புறநகர் ரயிலேறி கும்மிடிப்பூண்டி வரை சென்று திரும்பி வந்தேன்.

மற்றொரு நாளில் பேருந்தில் ஏறி பேரம்பாக்கம் வரை சென்று வந்தேன். ஒருமாதம் ஆகிவிட்டது. பழைய கம்பெனியின் மேலாளர் ஒரு கம்பெனியில் சிபாரிசு செய்தார். இண்டர்வியூக்கு சென்றேன்.

12 ஆண்டுக்கு பிறகு ரெஸ்யூம் மாற்றி, பைல் எடுத்து கொண்டு பயத்துடன் ஒரு நேர்காணலுக்கு செல்கிறேன். 3டியில் டூல் டெஸ்ட் வைத்தார்கள். முடிந்ததும் காத்திருக்க சொன்னார்கள்.

என்னோடு ஒரு இளைஞனும் இண்டர்வியூக்கு வந்திருந்தான். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம். சின்ன பையன் மூன்றாண்டு அனுபவம் உள்ளவன். 

எச்ஆர் வந்தாங்க, இருவரிடமும் சொன்னாங்க.டூல் டெஸ்ட ரிவிவ்யூ பண்றாங்க, ஒரு பொசிசன் தான் வேகன்ஸி இருக்கு என்று. 

அந்த பையனை பார்த்து உங்களுக்கு ரெபரன்ஸ் யாராவது இருக்காங்களா என்றார். இல்லை என்றான் அந்த பையன்.

காத்திருக்க சொல்லி எச் ஆர் கிளம்பிவிட்டார். அந்த பையன் ரெஸ்ட் ரூம் போக சென்றான். அவனது பைலை பார்த்தேன்.

நான் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். டீக்கடையில் டீ குடித்தேன். எச்ஆர் போன் செய்தார், மிஸ்டர் கண்ணபிரான் எங்கே இருக்கீங்க? என்றார். சார், எனக்கு 3டி செட் ஆகாது, வேகமா வேலை செய்ய முடியாது. அதான் கிளம்பி வந்துட்டேன் என்றேன்.

அந்த பையன் ரெஸ்யூம்மில் பார்த்தேன், என் மகன் பிறந்த ஆண்டில் தான் அவனும் பிறந்திருக்கிறான்.

Saturday 10 December 2022

தேவதைகளின் தேசம்

எல்லா ஆண்களுக்குமே 

தன் மனதை கவர்ந்த 

பெண், தேவதை தான் !

நிறைய தேவதைகள்

ஒரே இடத்தில்

தங்கி இருக்கும்

"லேடிஸ் ஹாஸ்டல்" தான்

இந்த "தேவதைகளின் தேசம்" !

மொத்தமாய் முப்பது

தேவதைகள் !

பதினைந்து அறைகள் !

ஒரு கண்காணிப்பு பெண் !

பாதுகாப்புக்கு வந்து

தூங்கி செல்லும்

இரவு காவலாளி !

சமையல் வேலையில்

கை தேர்ந்த

பார்வதி அக்கா !

கூட்டி பார்த்தால் 

33 பேர்கள் வாசம் 

செய்யும் தேசம் ! 

ஆனால் நாடாளுமன்றத்தில் தான்

இன்னும் 33% கிடைக்கவில்லை !

சென்னை நுங்கம்பாக்கம்

ரயில் நிலையத்தின் 

அருகில் இருக்கிறது

இந்த "தேவதைகளின் தேசம்"!

ராணி, மெய்காப்பாளினி 

சதுரங்க ராணி போல 

மொத்த பவரும்

இவருக்கு தான் !

பார்வதி அக்கா, 

சமையல் ராணி  

சாம்பார் வாசமே 

சாப்பிட தூண்டும்!

எப்போதும் சிரிப்பொலி

நிறைந்திருக்கும் அறைகள் 

தீபாவளி தருணத்தில்

எல்லாரும் ஊருக்கு

சென்று விடுவதால்

சிரிப்பு வெடிகளுக்கு

அப்போது தான் விடுமுறை!

அனைவரும் துக்கத்தில் 

துவண்டு போய் இருந்தனர்!

எல்லாராலும் 'ஜென்னி' என்று

அழைக்கப்படும் ஜெனிபர் 

மரணம் தான் காரணம்!

ஜெனிபர், முப்பது தேவதைகளில் 

முதலாமவள் என்று

சொல்லி விடலாம்!

மாநிறத்தில் களையுடன் கூடிய முகம் 

நெற்றியில் முடி எடுத்து 

விட்டு இருப்பாள்!

தனியார் நிறுவனத்தில் வேலை, 

எந்த ஆணுடனும் 

கூச்சமில்லாமல் பேச கூடியவள் 

அவளுக்கு பெண் தோழிகள்

ஆண் நண்பர்கள்

மட்டுமில்லாது இரு 

திருநங்கைகளுடனும் நட்பு உண்டு!

தைரியசாலி

அந்த விடுதியில்

கரப்பான் பூச்சி கண்டு 

கலங்காத ஒரே 

வீர மங்கை!

எல்லாரையும் துக்கத்தால் 

துவைத்து போட்டிருந்தாள் ஜென்னி!

சுந்தரமூர்த்தி (எ) சுந்தர்

ரொம்பவே துவண்டு போய் 

இருந்தான் !

முந்தைய இரவு அவள் 

தலைவலியால் துடித்த போது 

அவனால் உடனிருக்க முடியவில்லை

ரோஜா பூக்களுக்கு நடுவே 

வதங்கிய மலராய் 

கிடக்கிறாள் !

பக்கத்தில் இருந்து

கதறுகிறான் தனது 

இரண்டாம் தாயை 

தொலைத்த துக்கத்தில்!

கல்லறைத்  தோட்டத்துக்கு

எடுத்துச் சென்றனர் 

நேற்று வரை எல்லாரையும் 

சிரிக்க வைத்து பார்த்தவள் 

இன்று எல்லாரையும் 

அழ வைத்துவிட்டு 

ஓசையில்லாமல் கிடக்கிறாள்!

அனாமிகா, திருநங்கை

மார்பில் அடித்துக் கொண்டு 

அழுகிறாள்

சென்னையில் அவள் மீது 

பாசம் காட்ட வேறு யார் 

கிடைப்பார்!

தேவதைகளின் தேசம் 

சில மாதங்களுக்கு முன்பு 

ராகவிக்கு பிறந்தநாள் 

'பல் காட்டி'க்கு பிறந்தநாள் 

வாழ்த்துக்கள் என்று ஆங்கிலத்தில்

 எழுதப்பட்ட கேக் தயாராக இருந்தது 

12 மணிக்காக காத்திருந்தார்கள்

சத்தமில்லாமல் கொண்டாட 

வேண்டும்!

சத்தம் வந்தால் ராணி வந்து 

சத்தம் போடுவாள் 

கோலாகாலமாக தொடங்கிய

கொண்டாட்டம் 

தூங்கிக் கொண்டிருந்த 

ராணியையும் எழுப்பி விட்டது!

முகம் முழுவதும் கேக்

அப்பிய நிலையில் எத்துப்பல் 

தெரிய நின்றாள் ராகவி !

ஜென்னிதான் சொன்னாள் 

ராகவிக்கு பொறந்தநாள் அதான்...

என்று இழுத்தாள்!

பொண்ணுங்களாடி நீங்க 

என்று திட்டிக் கொண்டே 

சென்று விட்டாள் ராணி! 

அனாமிகா - ஜெனிஃபர் 

பழக்கம் துவங்கியது 

மின்சார ரயிலில் தான்! 

அரவாணிக்கு காசு கொடு என்று

குழுவினருடன் வந்து 

கொண்டிருந்தாள் அனாமிகா 

பெண்கள் எல்லாம் 

ஒதுங்கிக் கொண்டனர் 

ஆண்களில் பலர் பயந்து கொண்டே

பணத்தை எடுத்துக் கொடுத்தனர்

ஜெனிபர் அருகில் 

வந்த போது காசை கொடுத்துவிட்டு

அக்கா அரவாணின்னு 

சொல்லாதீங்க திருநங்கைனு 

சொல்லுங்க என்று 

திருத்தம் செய்தாள் !

கைபேசி கேமராவில் 

அவளோடு சேர்ந்து 

புகைப்படம் எடுத்துக் கொண்டாள்

அன்று தொடங்கியது தான் 

அந்த சிநேகம்!

ஞாயிறு தோறும் தவறாமல் 

சர்ச்சுக்கு சென்று விடுவாள் ஜெனிபர்

சர்ச் போகும் வழியில் தான் 

சுந்தரின் பார்வையில் பட்டாள்

இவள் ஓரவிழி பார்வை 

சுந்தரையும் தவறாமல் 

சர்ச்சுக்கு கூட்டி வந்தது!

பேசினான், பழகினான் 

ஒற்றை ரோஜாவுடன் 

மண்டியிட்டு காதலைச் சொன்னான்!

மறுக்க முடியவில்லை அவளால்

மதங்களைக் கடந்தது 

அவர்களது காதல்! 

ஜெனிஃபர் பூஜைக்கூடையுடன்

 கோவிலுக்கு போக தொடங்கினாள்!

கவிதா, ஜெனிஃபர் அறை தோழி!

உள்ளம் முதல் உடை வரை

அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள்!

கவிதாவுக்கு காதல் வந்தவுடன் 

முதலில் ஜெனிபரிடம் தான் 

சொன்னாள்!

அலுவலகத்தில் உடன் பணிபுரியும்

பிரபாகரன் தன் மனதை 

கவர்ந்து விட்டான் என்று 

அன்று முதல் விடுதியில் உள்ள

அனைவரும் அவளை 

கேப்டன் என்று பட்ட பெயர் சொல்லிக்

கூப்பிட்டனர்

உங்கிட்ட போய் சொன்னேன் 

பாரு ஆல் இந்தியா ரேடியோ 

என்று திட்டுவாள் கவிதா !

என்னைக்குமே ஆம்பளைகள

அலையவிட்டு அப்புறம் தாண்டி

முடிவெடுக்கணும் அவசரப்படாதே

என்றாள் ஜென்னி!

ஆனால் கவிதா 

காதில் ஏறவில்லை!

பிரபாகரனிடம் போய் 

இவள் வழியே பதிலுக்கு 

அவன் வழியே இன்று 

கவிதா பிரபாகரன் ஆகிவிட்டாள்

சார்பதிவாளர் அலுவலகத்தில்

சாட்சி கையெழுத்து போட்டவள்

ஜென்னிதான்!

ஜோதி, பயந்த சுபாவம் 

குறைந்த உயரம் 

குட்டை கத்தரிக்காய் என்பதுதான்

 தேவதைகளின் தேசத்தில் 

இவளது பெயர்! 

இவளது பெயரை தெரிந்து 

கொண்ட ஒருவன் 

ஜோதி போகும்போது 

பின்னால் இருந்து பரங்கிமலை என்று

கிண்டல் செய்தான் 

ஜோதி ஜெனிபரிடம் தான் 

அழுது கொண்டே முறையிட்டாள்

அடுத்த நாள் அவன் சட்டையை 

பிடித்து இவ பரங்கிமலைன்னா 

உங்க அம்மா பல்லாவரமாடா

என்று அதட்ட 

ஊர் திரண்டு அவனை அடித்தது!

அதற்கு பின்னாட்களில் 

நுங்கம்பாக்கம் பகுதியில் 

விவரம் தெரிந்த ஆண்கள் 

விடுதி பெண்களை கண்டு 

தலை குனிந்தே செல்வதாக 

தகவல்!

யாமினி, நல்ல கவிநயம் 

படைத்தவள் !

நாட்குறிப்பை கவிதை நடையில் 

எழுதுபவள் 

தினமும் எழுத 

மாட்டாள் 

ஆனால் அடிக்கடி எழுதுவாள்

அவளின் நாட்குறிப்பை 

திருடி எல்லோரிடமும் படித்துக்

காட்டுவது  ஜென்னியின் 

பொழுதுபோக்கு!

குளியலறைக்குச் சென்று 

கதவை தாளிட்டு திரும்பியவுடன் 

முரட்டு மீசையுடன் என்னை பார்த்து

முறைத்துக் கொண்டிருந்தான் 

அவன் கருப்பு உடம்பும் 

முரட்டு மீசையும் 

என்னை கலவரப்படுத்தியது 

கத்தி விடலாம் என்று 

நினைத்தபோது 

கையில் இருந்த சோப்பு டப்பா 

தவறி விழுந்து விட்டது

அவனும் பயந்து ஒளிந்து கொண்டான்!

இது யாமினி காலையில் 

கரப்பான் பூச்சியுடன் 

ஏற்பட்ட அனுபவத்தை 

நாட்குறிப்பில் எழுதிய வார்த்தைகள்!

ஐஸ்வர்யா, அக்கிரகாரத்து பெண் 

அழகு பதுமை!

அழைப்பில் தயிர் சாதம் 

ஆனால் சிக்கன் 65 

மட்டும் கொள்ளை பிரியம் !

அவளது அசைவ லிஸ்டில் அது

அகற்றப்பட்டு விட்டது

ஜென்னி, ஞாயிறுதோறும் 

சர்ச்சுக்கு போய்விட்டு 

வரும் வழியில் 

சிக்கன் 65 வாங்கி வருவாள் 

ஆனால் சாப்பிடுவது 

தயிர் சாதம் என்று 

அழைக்கப்படும் ஐஸ்வர்யா தான்!

ப்ரீத்தி குண்டு பெண் 

சினிமா நடிகை ஆர்த்தியை

நினைவுபடுத்துபவள்!

பட்டப்பெயர் பன் 

சீரியல் பார்ப்பது, சிண்டு முடிப்பது

இவளது பகுதி நேர வேலை!

முத்துலட்சுமி, தி.நகரில் 

நகை கடையில் பணிபுரிபவள்!

தினமும் புடவை அணிந்து 

செல்ல வேண்டும் என்பது 

கடையின் கண்டிப்பு!

விடுதியில் அனைவரும் 

அவளை ஜெஸ்ஸி என்றே

அழைப்பார்கள் !

புன்னகை தவழும் முகம் 

பொன் நகை தொடும் கரம்!

சில்வியா, நுனி நாக்கில் 

ஆங்கிலம் புரளும் 

ஐடி கம்பெனி வேலை,

யாரிடம் அதிகம்

பேச மாட்டாள்!

எப்போதும் செல்போனில் 

பேசி கொண்டோ, 

பாட்டு கேட்டுக் கொண்டோ இருப்பாள்!

செல்லு பிடிச்சவ கையும் 

சிரங்கு பிடிச்சவ கையும்

சும்மா இருக்காதாம் என்று 

வசை பாடுவார்கள் மற்றவர்கள்

ஆனால் ராணியிடம் இவளுக்கு 

நல்ல பெயர் உண்டு. 

ராணியிடம் ஜென்னிக்கு 

என்றுமே தனி இடம் உண்டு!

அன்னையர் தினத்தன்று ஜென்னி

ராணிக்கு புடவை எடுத்து தந்தாள்

அன்று முதல் ராணி 

ஜென்னியை சொந்த மகள் போல்

பார்க்க ஆரம்பித்து விட்டாள்!

மும்தாஜ், கருப்பாக இருப்பாள் 

தனியார் நிறுவன வேலை

பகுதிநேர படிப்பு என்று 

அலைந்து கொண்டே இருப்பவள்!

இவளுக்கு தனி காதல் கதை உண்டு!

இந்த 10 பேர் தான் 

தேவதைகளின் தேசத்தின் 

ராட்சசிகள்!

ஜெனிபர் -  அணில் 

ராகவி - பல் காட்டி

கவிதா - கேப்டன்

ஜோதி - குட்டை கத்திரிக்காய்

யாமினி - வைரமுத்து

ஐஸ்வர்யா - தயிர் சாதம்

ப்ரீத்தி - பன் 

முத்துலட்சுமி - ஜெஸ்ஸி

சில்வியா - பீட்டர் 

மும்தாஜ் - படிப்பாளி 

விடுதியில் சின்ன சின்ன 

சந்தோசங்கள், சேட்டைகள்,

பாசங்கள், நேசங்கள் 

எல்லாவற்றிலும் இவர்கள் 

யாராவது நிச்சயம் 

இருப்பார்கள்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்!

சின்ன ஈகோக்கள் உண்டு 

நல்ல சினேகிதம் உண்டு! 

நட்புக்காக சென்று 

பல்பு வாங்கிய சம்பவம் உண்டு !

மும்தாஜ் அலுவலகத்தில்

உடன் பணிபுரியும் 

ஜோஸ்வாவை காதலித்தாள்

ஒரு தலை காதல்!

காதலை சொல்லச் சொல்லி 

திட்டம் வகுத்துக் கொடுத்தவர்கள்

ஜென்னியும் சில்வியாவும்

ஆனாலும் சொதப்பிவிட்டாள்

இந்த ஷாஜகானின் காதலி!

 ஜோஸ்வாவை நுங்கம்பாக்கத்திற்கு 

வரச் சொன்னாள் மும்தாஜ்!

ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் 

ஜென்னியும் சில்வியாவும் 

பரஸ்பரம் அறிமுகம் செய்து 

மும்தாஜின் காதலைப் பற்றி

எடுத்துச் சொன்னார்கள் !

அவன் பிடி கொடுக்கவில்லை 

காதலை தைரியமா 

சொல்லத் தெரியாத பெண்ணுக்கு

எதுக்குங்க காதல் என்றான்!

உலகத்தில் கஷ்டமான 

விஷயம் லவ்வ எக்ஸ்பிரஸ்

பண்றது தான் என்றாள் சில்வியா

நீங்க கிறிஸ்டியன் நீங்க

என்ன லவ் பண்றேன்னு சொல்லுங்க

நான் ஏத்துக்கிறேன் என்றான்

ஜென்னியை பார்த்து !

ரெண்டு பேரும் கடுப்பாகி விட்டார்கள்

சரி, என் ஆளு கிட்ட கேட்டு 

சொல்றேன் இந்த கிளம்பினாள் 

ஜென்னி!

ஒரு தலை காதலை இனிப்பாய் 

உணர்ந்து கொண்டிருந்த 

மும்தாஜ் தோழிகளுக்கு ஏற்பட்ட

அவமானத்தால் காதலை 

துறந்து விட்டாள்!

அன்றுதான் ஜென்னி 

முதல் முறை சின்ன தலைவலியால்

 உட்கார்ந்தது!

 தைலம் தேய்த்து அடங்கவில்லை

 மாத்திரை போட்டுக் கொண்டு

 தூங்கிவிட்டாள் !

ஜென்னி எப்போதும் 

ப்ரீத்தி மடியில் படுத்து 

கொண்டு தான் 

சீரியல் பார்ப்பாள் 

சீரியல் பிடிக்காதது தான்

ஆனாலும் சீரியல் 

நடிகைகளை கிண்டல் 

செய்வதற்காக பார்ப்பாள்!  

ஏய் அணிலு மடில 

படுத்துக்கிறதும் இல்லாம 

உனக்கு நக்கல் வேற 

எந்திரி டி என்பாள் பிரீத்தி !

இவர்கள் அனைவரும் 

சந்தோஷத்தையும் துக்கத்தையும்

 கட்டுப்படுத்துவதே இல்லை !

சந்தோஷம் வந்தால் 

கையை விரித்து கத்துவார்கள் !

துக்கம் வந்தால் கண்ணீர் விட்டு 

கதறி அழுவார்கள்! 

சந்தோஷத்தையும் துக்கத்தையும்

சந்தேகிக்க யாரும் இல்லை!

பகிர்ந்து கொள்ள பலமாய் 

நட்பு இருந்தது!

நேற்றைய தினம் 

மழை பெய்து முடித்த 

மாலை நேரம் 

ரசித்துக் கொண்டே அறைக்கு 

வந்தாள் ஜென்னி!

இரவு உணவு முடித்த பின் 

லேசாக தலை வலிக்க 

ஆரம்பித்தது !

அறையில் கவிதா மட்டும் 

இருந்தாள்!

தைலம் தேய்த்தும் கட்டுக்குள்

அடங்கவில்லை தலைவலி,

மாத்திரையின் சூத்திரம் 

பலிக்கவில்லை! 

காதும் வலிக்க தொடங்கியது

வலி அதிகமாகி துடிக்க 

ஆரம்பித்தாள்!

மருத்துவமனைக்கு செல்ல 

முடிவானது!

சுந்தருக்கு போன் போனது 

இரவுப்பணி அவனால் 

அந்த அழைப்புக்கு

தலை சாய்க்க முடியவில்லை!

மூன்று ஆட்டோக்களில் 

பத்து பேரும் கிளம்பினர் 

ராணியும் பார்வதி அக்காவும் 

இருசக்கர வாகனத்தில் 

புறப்பட்டனர்! 

மருத்துவமனைக்குச் செல்லும் முன்

மயங்கிச் சரிந்தாள் ஜென்னி!

மருத்துவர்கள் சோதித்து விட்டு

சோகத்தை விதைத்தார்கள் 

ப்ரைன் டியூடர் அவள் 

உயிரைப் பறித்து விட்டது என்று!

பன்னிருவரும் பதறி கதறி 

அழுதனர்! 

விடை பெற்றுக் கொண்டாள்

ஜென்னி என்னும் தேவதை! 

அதற்கு பின் நாட்களில் 

ஒன்பது பேரும் விடுதியை 

காலி செய்ய முடிவு 

செய்தனர்!

விடுதியில் ஒவ்வொரு பொருளும் 

ஏதோ ஒரு வகையில் 

ஜென்னியை நினைவு படுத்தின!

 ஜென்னியை நினைத்து நினைத்து

அழுவதை விட வேறு 

இடம் வேறு இடம் மாற்றம் தரலாம் 

என்று புறப்பட்டனர்!

ஒன்பது பேரின் இடத்தை

நிரப்ப வேறு பெண்கள் 

வருவார்கள்!

ஜென்னியின் இடத்தை 

யார் நிரப்ப ?

ஜென்னி வாங்கி தந்த 

புடவையில் முகம் புதைத்து 

அழுது கொண்டே 

இருக்கிறாள் ராணி !

ஜென்னியின் நினைவு 

வரும் போதெல்லாம்

கிட்டத்தட்ட தினமும் 

இரவில்! 

யாமினி நாட்குறிப்பு 

கடவுள் கல்நெஞ்சக்காரன் 

வலியால் உன்னை 

எடுத்துச் சென்றான் !

எங்கள் இதயத்தில் 

வலியை கொடுத்து சென்றான்!

கடவுள் நயவஞ்சகன்

வசந்த காலத்தை 

இலையுதிர் காலமாய் 

மாற்றி விட்டான்!

பூங்காவில் இருந்த

பூங்காற்றை பிரித்து விட்டான்

தேவதைகளின் தேசத்தில் 

தேவதையை எடுத்து விட்டான் 

தேசம் மட்டும் இருக்கிறது 

கண்ணீர் தேசமாய் !!!