Sunday 23 January 2022

எங்கள் ஊர் மார்கழி

மார்கழியில் எந்த விசேச காரியங்களும் நடக்காது என்பார்கள். எங்கள் ஊரில் மார்கழி சிறப்பு என்ன?

மார்கழியில் எல்லா வீட்டிலும் வெள்ளை அடிப்பார்கள். சுண்ணாம்பு வியாபாரம் சூடு பிடிக்கும். சுட்ட சுண்ணாம்பை நீர்த்த சுண்ணாம்பாக்கும் வேதி வினையை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம்.

வெள்ளையடிப்பவர்களுக்கு மாதம் முழுக்க வேலையும் வருமானமும் இருக்கும். வீடு பிடிக்க போட்டி இருக்கும். 

போகி என்று தனி பண்டிகை கிடையாது. வெள்ளை அடிக்கும் நாளில் தேவையில்லாத பொருட்களை கழித்துவிடுவார்கள். அதுவே போகி.

பொங்கலுக்காக பனை மரத்தில் இருந்து புது ஓலை வெட்டுவார்கள். பனிக்கு நடுவே ஓலையை காய வைக்கவும் செய்வார்கள்.

அடுத்து பொங்கலுக்கு அடுப்பு கூட்ட பொங்கல் கட்டி செய்வார்கள். குளத்தில் தண்ணீர் இருந்தால் கரம்பையோ, செம்மண்ணோ கிடைப்பது அரிதாகிவிடும். செம்மண்/கரம்பையை குழைத்து பொங்கல் கட்டி செய்து காய வைத்து விடுவார்கள். பொங்கலுக்கு முந்திய நாள் சாணி வைத்து மொழுகி, வெள்ளை அடித்து செம்மண் கலரில் பட்டையும் அடிப்பார்கள். 

வீட்டு திண்ணைக்கும், படிகளுக்கும் மீண்டும் வெள்ளை அடித்து பட்டை அடிப்பார்கள்.

சிலர் சபரிமலைக்கு மாலை போடுவார்கள். அவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சைவ சாப்பாடு என தொடரும். சிலர் திருச்செந்தூருக்கு மாலை போடுவார்கள் அங்கும் சைவமே. கன்னி பூசை நடக்கும் வீடுகளில் பஜனை நடக்கும். சாதி,வயது பாகுபாடுன்றி மாலை போட்ட அனைவர் காலிலும் விழுந்து கும்பிடுவார்கள் மாலை போட்டவர்கள்.

விரதம் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை செல்வார்கள் பலர். காவடியோடு ஒரு பெருங்கூட்டமே திருச்செந்தூர் செல்லும் பொங்கலுக்கு முந்திய நாட்களில்.

மார்கழி துவக்கத்தில் மழை வேண்டும் என்றும் மார்கழி இறுதியில் மழை வேண்டாம் என்றும் வேண்டி கொள்வார்கள் விவசாயிகள். கெப்பேரி பார்த்து மழை பற்றிய விவாதங்களும் நடக்கும்.

பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு தோண்டும் மாதமும் மார்கழியே.

வீட்டுக்குள் தரையில் சுண்ணாம்பு கோலங்கள் வரைவதும் மார்கழியில் தான்.

மார்கழி கடைசி நாள் இரவில் முற்றம் முழுக்க கோலமிட்டு தையை வரவேற்பார்கள் தாய்க்குலங்கள்.

Saturday 22 January 2022

தமிழக மாவட்டங்கள் - பழைய பெயர்கள்

1. கன்னியாகுமரி
2. திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம்
3. வ.உ. சிதம்பரனார் மாவட்டம் (தூத்துக்குடி)
4. காமராஜர் மாவட்டம் (விருது நகர்)
5. ராமநாதபுரம் மாவட்டம்
6. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் (சிவகங்கை)
7. மதுரை மாவட்டம்
8. தேனி மாவட்டம்
9. நாகை காயிதே மில்லத் மாவட்டம் (நாகப்பட்டினம்)
10. தஞ்சை மாவட்டம்
11. திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம்
12. தீரன் சின்னமலை மாவட்டம் (கரூர்)
13. திண்டுக்கல் அண்ணா மாவட்டம் ( காஞ்சிபுரம் அண்ணா பிறந்த ஊர் என்பதால் செங்கல்பட்டு மாவட்டம் செங்கை அண்ணா மாவட்டம் என்று மாற்றப்பட்டது.)
14. பெரம்பலூர் மாவட்டம்
15. ஈவேரா பெரியார் மாவட்டம் ( ஈரோடு)
16. கோயம்புத்தூர் மாவட்டம்
17. நீலகிரி மாவட்டம்
18. சேலம் மாவட்டம்
19. திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம்
20. விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம்
21. தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்
22. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம்
23. திருவள்ளூர் எம்ஜிஆர் மாவட்டம்
24. செங்கை அண்ணா மாவட்டம் (காஞ்சிபுரம்)
25. சென்னை மாவட்டம்

Friday 21 January 2022

இந்திய நாணயங்களில் தமிழர்கள்


நம் நாட்டின் சிறப்புரைக்கும் நாணயங்களின் தமிழகம் சம்மந்தப்பட்ட நாணயங்கள்.

1. 8வது உலக தமிழ் மாநாடு (திருவள்ளுவர் )

திருவள்ளுவர் உலகறிந்த தமிழ் புலவர். தமிழ் மொழியை இரண்டடி வெண்பாவால் அலங்கரித்தவர்.
8வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் 1995ல்  நடைபெற்றது. அதை முன்னிட்டு 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. நாணயத்தில் 8வது உலக தமிழ் மாநாடு என்று எழுதப்பட்டுள்ளது மற்றும் செயிண்ட் திருவள்ளுவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
எத்தனையோ பேர்களை கொண்ட வள்ளுவரின் பெயர் செயின்ட் திருவள்ளுவர் என்பது தமிழுக்கே ஏற்பட்ட அவமானம்.


2. கர்மவீரர் காமராசர் 

காமராஜர் தமிழக முன்னாள் முதல்வர். அரசியலில் கிங் மேக்கர் என்று போற்றப்பட்டவர். 
காமராசர் நூற்றாண்டை முன்னிட்டு 2004ல் 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.


அதில் கே. காமராஜ் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

3. பேரறிஞர் அண்ணா 

தமிழக முன்னாள் முதல்வர். திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கியவர்.

அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா என்ற வாசகம் எழுதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
அதில் அண்ணாவின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது.


வெளியிட்டவர் - பிரனாப் முகர்ஜி

4. சி. சுப்பிரமணியம் 

சுதந்திர போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர், முன்னாள் கவர்னர்.
பசுமை புரட்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.


1998ல் பாரதரத்னா விருது பெற்றவர்.
இவரது நூற்றாண்டை முன்னிட்டு 2010ல் 5 ரூபாய் வெளியிடப்பட்டது. 

வெளியிட்டவர் - பிரனாப் முகர்ஜி.
புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் என்றாலும் கிடைப்பது அரிதான நாணயம்.

5. தஞ்சை பெரிய கோயில் 

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டு ஆனதை முன்னிட்டு 2010ல் 5 ரூபாய் வெளியிடப்பட்டது. 



வெளியிட்டவர் - கருணாநிதி

Thursday 13 January 2022

பாளையங்கோட்டை பள்ளிகள்

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றி.

பாளையங்கோட்டையில் திரும்பிய திசையெங்கும் பள்ளி கல்லூரிகள் தான்.

மேல்நிலைப்பள்ளிகள் பற்றி சொல்கிறேன்.

1. தூய யோவான் மேல்நிலைப்பள்ளி 

முதல்ல ஜான்ஸ்ல இருந்தே ஆரம்பிப்போம் அது தான் நான் படிச்ச பள்ளி. ஜான்ஸ் ஒரு ரவுடி ஸ்கூல் இது தான் வெளியில் எல்லாரும் சொல்வது. நிஜத்தில் அப்படி இல்லை. நாங்கள் படிக்கும் போது தான் உட்கட்டமைப்பு பலப்படுத்த பட்டது. புது ஸ்டாப் ரூம், தலைமை ஆசிரியர் அறை, கட்டிடங்கள், லேப் என புதிதாக உருவாக்கப்பட்டது. ப்ரேயர் மைதானம் என்எஸ்எஸ் மாணவர்கள் மூலம் சீரமைக்கப்பட்டது. தற்போது மாலை வேளைகளில் அது பேட்மிண்டன் மைதானம்.
ஜான்ஸ்ல் பெரிய மைதானமும் உண்டு.

ஜான்ஸ் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவ அமைப்பான டயோசிசன் நடத்தும் பள்ளி.

குறைகள் என்றால் நாங்கள் படித்து முடிக்கும் வரை (2002) கக்கூஸ் கிடையாது.
தரமான ஆசிரியர்கள் எல்லா பாடத்துக்கும் கிடையாது. குறிப்பாக நாங்கள் படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர் சாத்ராக் (தற்போதைய தலைமை ஆசிரியர்) மற்றும் உயிரியல் அசிரியா திறமையான ஆசிரியர்கள். ஆனால் கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்களால் ரிசல்ட் பாதிக்கும்.

2. கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி 
பாளையங்கோட்டை ஊசிகோபுரம் சர்ச் (கதீட்ரல்) பக்கத்தில் இருக்கும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. டயோசிசன் நடத்தும் பள்ளி.
ரிசல்ட் அடிப்படையில் சராசரி பள்ளி.

3. மேரி ஜார்ஜெண்ட் மேல்நிலைப்பள்ளி
கதீட்ரல் பள்ளியை ஒட்டி இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதுவும் டயோசிசன் நடத்தும் பள்ளி தான்.

ரிசல்ட் அடிப்படையில் சராசரி பள்ளி.

4. சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி

பாளை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. பாளையின் நம்பர் 1 பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

சில மாநில ரேங்க் மாணவிகளை உருவாக்கிய பள்ளி. இதுவும் டயோசிசன் நடத்தும் பள்ளி

5. இக்னிஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி

பாளை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் இன்னொரு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
ஹைகிளாஸ் மாணவிகள் படிக்கும் பள்ளி.
இந்த பள்ளி கத்தோலிக்க கிறித்தவர்களால் நடத்தப்படுகிறது.

ரிசல்ட் அடிப்படையில் சராசரிக்கு மேல்

6. ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி 

பாளையில் இருக்கும் இருபாலர் பள்ளியில் இதுவும் ஒன்று. மெட்ரிகுலேஷன் பள்ளியும் கூட. பாளை நூலகம் மற்றும் தபால் நிலையம் அருகில் உள்ளது.
இதுவும் ஹைகிளாஸ் மாணவ மாணவியர் பள்ளி

7. தூய சேவியர் மேல்நிலைப்பள்ளி 

பாளையின் நம்பர் ஒன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
கத்தோலிக்க கிறித்தவர்களால் நடத்தப்படும் பள்ளி.
ஆசிரியர்கள் தான் இதன் பலம். குறிப்பாக வேதியியல் ஆசிரியர் சந்திரசேகர்.

8. கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி

பாளை கிருஷ்ணா மருத்துவமனை எதிரில் இருக்கும் பள்ளி.
கத்தோலிக்க கிறித்தவர்களால் நடத்தப்படுகிறது.

ரிசல்ட் அடிப்படையில் சராசரி பள்ளி

9. ஏஞ்சலோ மேல்நிலைப்பள்ளி 

ஜான்ஸ் மற்றும் கிறிஸ்து ராஜா பள்ளிகளுக்கு அருகில் உள்ளது. அதிகம் வெளியே தெரியாத பள்ளி.

10. காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி 

பாளை அரசு மருத்துவமனை எதிரில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

ரிசல்ட் அடிப்படையில் வழக்கமான அரசுப்பள்ளி

11. குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி 

பாளை வாட்டர் டேங்க் அருகில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சைல்டு ஜீசஸ் பள்ளி.
கத்தோலிக்க கிறித்தவர்களால் நடத்தப்படுகிறது.
ரிசல்ட் அடிப்படையில் சராசரி பள்ளி.

12. பெல் மேல்நிலைப்பள்ளி 

பாளையின் ஹைகிளாஸ் பள்ளி. பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் பள்ளி.

13. ஐஐபிஇ லட்சுமி ராமன் மேல்நிலைப்பள்ளி

பாளை என்று சொல்ல முடியாது. பாளையங்கோட்டைக்கு வெளியே உள்ளது. புதிதாக 2000ல் தொடங்கப்பட்ட பள்ளி.‌ ரோஸ்மேரியில் படித்த பலரும் போய் சேர்ந்தனர். நல்ல கோச்சிங் என்று. ஆனால் பலன் கிடைத்ததாக தெரியவில்லை.

14. ஜெயேந்திர சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி

மகாராஜநகரில் இருக்கும் இருபாலர் பள்ளி. இதுவும் ஹைகிளாஸ் பள்ளி தான். காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் குழுமம் நடத்தும் பள்ளி.

ரிசல்ட் அடிப்படையில் சராசரிக்கும் மேல்.

இவை தவிர புஷ்பலதா சிபிஎஸ்இ பள்ளி, மேக்தலின் போன்ற பள்ளிகளும் உண்டு.

ஹைகிளாஸ் அல்லாத பள்ளிகளில் மாணவ மாணவியர் பல்வேறு இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வந்து படிக்கிறார்கள்.