Monday 13 June 2022

சார்மினார் எக்ஸ்பிரஸ்

டுவிட்டரில் சார்மினார் எக்ஸ்பிரஸ் என்று பெயரை பாரத்த உடனே ஈர்த்தது. கொஞ்ச காலமாக அச்சு பிரதி கிடைக்காததால் நர்சிம் அவர்களின் மதுரை கதைகளை வாசித்த பின்பே இதை வாசிக்க முடிந்தது.

நாவல் என்றாலே எளிய மனிதர்களின் வலிமிகு வாழ்க்கை தான் என்ற இலக்கணத்தை உடைத்து, தொட்டது எல்லாம் துலங்கும் ஒரு இளைஞனின் இயல்பான வாழ்க்கையை எழுதியுள்ளார் (மற்றவைகளை மறைத்துள்ளார் எனவும் கொள்ளலாம்).

இது போல் ஆங்கிலத்தில் சேட்டன் பகத் போன்றோர் செய்தாலும் தமிழுக்கு நர்சிமே முதன்மை என நினைக்கிறேன். நர்சிம் சேட்டனை விட கொண்டாடப்பட வேண்டியவர். ஏனென்றால் எழுத்து நடை அப்படி. சின்ன சின்ன உவமைகள். கவித்துவமான சொற்கள் என ராஜாங்கம் செய்துள்ளார்.

கல்கியின் நந்தினிக்கு பிறகு நாலே வரிகளில் ஒரு பெண் கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறார். இது போல் இன்னும் இவர் நிறைய படைப்புகளை தர வேண்டும் என எண்ண வைக்கிறது.

பாலாவின் அரைகுறை உருது, பாபுவின் கன்னடம், மதுரக்கார பயலுக கேடிங்க சத்தமில்லாமல் மூன்றாவது மொழி தெரிந்து வைத்துள்ளனர்.

அப்பா கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும், காபியிலே ஈர்க்கிறார் ரத்னாம்மா.

உசேன் சாகர் ஏரி, புத்தர் சிலை சரோஜா படத்தில் வந்துள்ளதால் காட்சி படுத்துதல் நமக்கு எளிதாகுகிறது.

கதைக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் எஸ்கேபி கருணா, எனது அரசியல் பதிலீடுகள் பிடிக்காமல் ப்ளாக் செய்தவர்.

அதே சமயம் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகளை புகழ்ந்து, தமிழக ஆட்சியாளர்களை சாணியால் அடித்துள்ள நர்சிம்க்கு என்ன பதில் சொல்லி இருப்பார். ஒருவேளை புரிதல் உள்ள நட்பாய் இருக்கலாம் அவர்கள் நட்பு.

மிர்ணாளினி என்ற வார்த்தை உபயோக படுத்தாமல் எப்படி எழுத முடியும். ஆம் எக்ஸ்பிரஸின் வேகத்தை அதிகரிப்பதே மிர்ணாளின் பாத்திரம் தான்.

அட்டைப்பட வடிவமைப்பு இந்தி எதிர்ப்பை முன்னிட்டு நிலையத்தின் பேர் எழுதும் பலகையில் ரயிலின் பெயர் அதுவும் நன்றாகவே இருக்கிறது.

Friday 3 June 2022

பார்த்தீனியம்

பார்த்தீனியம் ஒரு நச்சு செடி, அது வளர்ந்தால் மற்ற செடிகளை வளரவிடாது என்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்துள்ளார் தமிழ்நதி.

இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்கள், அராஜகங்கள், சொந்த நாட்டில் அகதி வாழ்க்கை, ஏழ்மை, காதல் என அழகாக பயணிக்கிறது நாவல்.

பெண் எழுத்தாளர் நாவலை வாசிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. தேர்வு செய்தது பார்த்தீனியத்தை. விலை சற்றே அதிகம் என்பதால் தாமதமாகிவிட்டது.

அள்ளி பருகும் தெளிந்த நீரோடை போல் உள்ளது எழுத்தாளரின் தமிழ். அவரது பெயரே தமிழ்நதி என்பதாலோ என்னவோ.

500 பக்க நாவலில் எந்த இடத்திலும் விரசமோ, கெட்ட வார்த்தைகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கதை மாந்தர்கள் கெட்ட வார்த்தை பேசாதவர்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முடிந்த அளவு ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கிறார் தமிழ்நதி. புகையிரதம், பகடிவதை, உழவியந்திரம் என அழகான தமிழ் சொற்கள் மனதை ஈர்க்கிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா கிளம்புவதாக தொடங்கும் நாவல் அதே போல் முடிவதும் சிறப்பு.

தெரியாத இலங்கை பகுதிகள் என்றாலும் வாசித்து முடித்த பின் வவுனியா, யாழ்ப்பாணம், மாதகல், சல்லி, பாவற்குளம், நல்லூர் என கூகுள் மேப்பில் போய் பார்க்க வைக்கிறது.

பயிற்சி நடக்கும் களங்களை விவரிக்கிறார் எழுத்தாளர், அவர் நேரில் சென்று பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் விவரணைகள் அபாரம்.

ராஜீவ் கொலைக்கு முன்னதாக இலங்கை தமிழர்கள் பட்ட பாடுகளை வார்த்தைகளாய் பார்க்கும் போதே மனது பதறுகிறது. 

பரணி - வானதி காதலை அழகாக சொல்லி உள்ளார். அதே  சமயம் தனஞ்செயனின் ஒரு தலை காதலையும் சொல்லி உள்ளார். கீதபொன்கலனின் கடிதம் மனதை வருத்துகிறது.

இன்னும் பல விசயங்கள் பொதிந்துள்ள நாவல். வாசிக்க சிறந்தது. மறுவாசிப்பிற்கும் சிறந்தது.

இந்த படைப்பிற்காக தமிழ்நதி சகோதரியை வாழ்த்துகிறேன் !!!

Wednesday 1 June 2022

வாசிப்பு பழக்கம்

சிறு வயதில் முத்தக்கா ராணியில் வந்த சிறுவர் தொடர்கதையான புதையல் வேட்டையை வாசித்து காட்டுவாள். அதில் வரும் சின்ன ஓவியம் கதையை காட்சியாக விரிக்கும். அதற்கு பிறகு நானே ராணியை வாசிக்க துவங்கினேன்.

காலில் அடிபட்டு மருத்துவமனையில் நாலு நாட்கள் இருந்த போது ராணியை வாசித்ததை பார்த்து ஜெயா டீச்சர் வாசிக்க தந்தது மீராபாய் பற்றிய புத்தகம்.

அதற்கு பிறகு ஆனந்த விகடன், குமுதம், ராணிமுத்து, மாலைமதி என எது கிடைத்தாலும் வாசித்தேன். ராணி காமிக்ஸ் தான் வாசிக்க தூண்டும். பாண்டி, முருகன், கார்த்தி அண்ணன் என யாராவது கொண்டு வருவார்கள். யார் வாங்குவார்கள் என்பது தெரியாது. ஒருமுறை பாலமித்ரா கிடைத்தது, வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் அதில் இருந்த தொடர்கதையை கூட வாசித்தோம்.

ஆறாம் வகுப்புக்கு பாளையங்கோட்டை வந்த பின் அங்கு சுரேஷ் அண்ணன் வாங்கும் இந்தியா டுடே, தி வீக் என ஆங்கில இதழ்கள் தான் இருக்கும். படம் பார்ப்பதோடு சரி. சுரேஷ் அண்ணன் வாங்கிய ஹெல்த் அவ்வளவு சுவாரஸ்யம் தருவதில்லை. என்றாவது சுரேஷ் அண்ணன் முத்தாரம் வாங்கி வருவதுண்டு. அது போல் குறைவான விலையில் சிறப்பான மாணவர்களுக்கான வார இதழ் வேறெதுவும் கிடையாது. பிறகு விஸ்டம் ஆங்கில இதழை எழுத்து கூட்டி வாசிக்க பழகினேன்.

கிரிக்கெட் ஆர்வம் வந்தபின் என் கண்ணில் பட்டது சாம்பியன் வார இதழ். விளையாட்டு இதழ் என்றாலும் கிரிக்கெட்டுக்கே அதிக பக்கங்கள். குறிப்பாக வர்ணனைகள் தரமாக இருக்கும். காசு இருந்தால் அந்த வாரம் வாங்கி விடுவேன். 2.75 ரூபாயில் இருந்து 3 ரூபாய் ஆகி 3.50 ரூபாய் ஆகி 4 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு பின் பிரசுரிக்கப்படவில்லை.

அதை மையப்படுத்தி நானும் ஒரு பத்திரிகை பிடிஎப் வடிவில் ஆரம்பிக்க நினைத்தேன். ஒரு முயற்சியும் செய்தேன். கடந்த மாதத்தில் நடந்த சர்வதேச போட்டிகளின் முடிவு. ஆட்டநாயகன் விபரம். அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியல். 

அதிகம் பிரபலமாகாத இந்திய வீரர் பற்றிய தகவல் (முதல் மாதத்திற்கு எம்எஸ்கே பிரசாத்). அதிகம் பிரபலமாகாத வெளிநாட்டு வீரர் பற்றிய விபரங்கள் (முதல் மாதத்திற்கு ஹாமில்டன் மாசகாட்சா). இது தான் எனது பிடிஎப் இதழின் சாராம்சம்.

கல்லூரியில் ஆனந்த விகடன் வாரம் தவறாமல் கிடைக்கும். செல்வநாதன் தான் ஆனந்த விகடன புழக்கத்தில் விடுபவன். சேகர் வாசிக்க நிறைய புத்தகங்கள் கொண்டு வருபவன், பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தியவன். ஆறு தொகுதியும் அவன் வாசித்த பின் எனக்கு வந்து சேர்ந்தது.

சேகர் தான் துணை எழுத்து, கதாவிலாசம் வாசிக்க நல்லா இருக்கும் என்று சொன்னவன். சென்னைக்கு வந்த பின் சைதாப்பேட்டையில் வாரம் தவறாமல் விகடன் வாங்கிவிடுவேன். விகடனின் தரம் குறைந்த இந்நாட்களில் தான் வாங்குவதில்லை. மறக்கவே நினைக்கிறேன் கடைசியாக விகடனால் ஈர்த்தது.

திடீரென இலக்கிய இதழ்கள் மீது ஆர்வம் வர தொடங்கியது காரணம் விகடன் குழும தடம் இதழ். தடம் இதழுக்கு ஆண்டு சந்தா கட்டி வாங்கி வந்தேன். ஊருக்கு செல்லும் போது எழும்பூரில் கிடைக்கும் காலச்சுவடு வாங்குவேன். தடம் நிறுத்தப்பட்டது எனக்கு பேரிழப்பு.

விவசாய இதழான மண்வாசனைக்கு நான் அடிமை. அதுவும் கொரோனாவுக்கு பிறகு வாங்குவதில்லை.

வாய்ப்பு கிடைத்தால் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன். அது பொங்கல் விடுமுறையில் அமைவது பெரும் சிரமம், பொங்கலுக்கு ஊருக்கு செல்வதால்.

பிடிஎப் வடிவில் வாசிக்க எனக்கு பிடிக்கவில்லை. வாசித்தது லா.ச.ரா வின் அபிதா மட்டுமே.

நூலுலகம், பனுவல், காமன் போக்ஸ், அமேசான் தளங்களில் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது தான் இப்போதைய நிகழ்வு. மனைவி எனது பிறந்த நாளுக்கு புத்தகம் வாங்கி தருவதுண்டு.