Tuesday 18 June 2019

மனசுக்கு பிடிச்ச பாட்டு 1

மனசுக்கு பிடிச்ச பாட்டு

வெள்ளி மலரே - ஜோடி

இந்த பாட்டை நான் கேட்பதற்கு முன்பாகவே எனக்கு
அறிமுக படுத்தியது என் நண்பன் சதீஸ் குமார்.
ஜான்ஸ் விடுதியில் பத்தாம் வகுப்பு நண்பன்.
இந்த பாடலை பாடி காட்டியதோடு பாடல் வரிகளை எனக்கு
எழுதியும் தந்தான்.

" மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில்
மலர்வன காதல் பூக்கள் " இந்த வரிகளை அழகாய் பாடுவான் .

பத்தாம் வகுப்புக்கு பிறகு ஒருமுறை மட்டுமே அவனை
பார்த்தேன். சென்ற ஆண்டு கீழ ஆம்பூர் ரயில் நிலையத்தில்
காத்திருந்த போது நண்பனின் ஊர் இது தானே என்று
நினைவில் வந்தது.

எப்போது இந்த பாடலை கேட்டாலும் நண்பன் சதீஸ் குமார்
நினைவில் வருவான்.

Friday 7 June 2019

பிறிதொரு நாள் சந்திப்பு


வாழ்வில் மாறுதல்களால்
பிறிதொரு நாளில் சந்திப்போம்
என்று சொல்லிவிட்டு
வந்தேன்!

நண்பர்களின்
வாழ்வை அலைபேசியில்
புகைப்படங்களாக பார்த்து
கொள்கிறேன்!

அலைப்பேசியில் அழைப்புகள்
குறுஞ்செய்தி இணையம்
இலவசமாய் இருந்தாலும்
நண்பனை அழைத்து
பேச மனம் வரவில்லை!

பிரிதொரு நாளில்
நண்பனை சந்திக்கையில்
என்ன பேசிக்கொள்வேன்?

Thursday 6 June 2019

உழுதவன் கணக்கு


முதலில் உரம் என்றார்கள்.
உரம் போட்டபின் பயிர்
வளர்ச்சி நன்றாய் இருந்தது!

பிறகு பூச்சிக்கொல்லி
பூச்சியை அழித்தது.
தற்கொலைக்கும் உதவியது!

அப்புறம் ட்ராக்டர்
மாடு ஆறுமணி நேரம்
செய்யும் வேலையை
அரை மணியில் செய்தது!

வாயில்லா சீவனை வஞ்சிக்க
மனமில்லாமல்
வாடகைக்கு இயந்திர உழவு
செய்தான் உழவன்!

நாளடைவில் உரக்கடைக்காரன்
தான் தீர்மானித்தான் என்ன உரம்.
என்ன மருந்தென்று!

விவசாயின் வருமானத்தை
எதுவும் மாற்றவில்லை!

வீரிய விதைகளை விலைக்கு
வாங்கினான் விவசாயி!

விவசாய பொருளுக்கு
விலையை எவனோ
தீர்மானிக்கிறான்!!!