Saturday 22 October 2022

கிரிக்கெட் நினைவுகள் 8

ரெக்காடோ பவல் 

ஒரே போட்டியில் உச்சத்துக்கு போய் பின் வீழ்ந்துவிட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.



சிங்கப்பூர் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் பவல் களமிறங்கி 93 பந்துகளில் 124 (9x4 8x6) ரன்கள் அடித்தார். இந்திய ரசிகர்கள் அந்த அடியை மறக்க மாட்டார்கள். 

https://www.espncricinfo.com/series/coca-cola-singapore-challenge-1999-61048/india-vs-west-indies-final-66236/full-scorecard

ஏனெனில் அந்த காலகட்டத்தில் 100 ஸ்டைர்க் ரேட் என்பதே சிறப்பான சம்பவம். 100க்கு மேல் என்றால் ருத்ரதாண்டவம். 

அந்த ஒரு போட்டியினால் அன்றைய ரசிகர்கள் சொன்னது, ஒண்ணு பவல சீக்கிரம் அவுட் ஆக்குங்க, இல்லைனா பவலுக்கு முன்னாடி விளையாடுறவங்கள அவுட் ஆக்காதீங்க.

அந்த போட்டிக்கு பிறகு டொராண்டோவில் நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறாமல், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் என தனித்தனியாக நடத்தப்பட்டது. இந்தியாவுடன் ஒரு அரைசதம் அடித்த பவல் பாகிஸ்தானுடன் பெரிதாக ஆடவில்லை.

எட்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார். லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இரண்டாவது போட்டியில் அரை சதம், 5 வது போட்டியில் சதம் என்பது பெரும் சாதனை.

109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 சதம், 8 அரை சதம் உட்பட 2085 ரன்கள் அடித்துள்ளார். அதில் 940 ரன்கள் 6வது வீரராக களம் இறங்கி.

2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.


Friday 21 October 2022

அப்பாவின் காது - புத்தக விமர்சனம்

இளம் எழுத்தாளர் ச. மோகன் எழுதிய சிறுகதை தொகுப்பு.

புதுமுக எழுத்தாளர், இது அவரது இரண்டாவது புத்தகம். டுவிட்டர் சகோதரர் முத்துவால் அறிமுகமானது எனக்கு.

உளவியல் ரீதியாக கதைகளை எழுதியுள்ளார். ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்கியுள்ளார்.

நிறைய கதைகள் கதாபாத்திரம் சொல்வது போன்ற பாணியில் எழுதியுள்ளார்.

 இன்னொரு அப்பா கதையில் ஒரு சிறுவனின் உளவியல் சிக்கலை எழுதி, அதே சமயம் மற்ற இருவரின் எண்ண ஓட்டங்களையும் எழுதியுள்ளார்.

அப்பாவின் காது கதையில் அப்பாவின் உளவியல் சிக்கலை அழகான நடையில் எழுதியுள்ளார்.

ஆதி மனிதனையும் சம கால மனிதனையும் திரைக்கதை போல் காட்சி படுத்தி ஒரு புள்ளியில் இணைத்து ஆ ஊ என்று முடித்திருப்பது சுவாரஸ்யம்.

அஸ்வதாமன் கதையின் கடைசி வரி ஏற்கனவே இன்னொரு கதையில் வாசித்திருக்கிறேன். கடைசிக்கு முந்திய வரி மோகன் ராஜ்ஜியம்.

வெற்று புனைவுகளாக இல்லாமல், ஆய்வுகள் தரவுகள் மூலமாக புனைவுகள் கொடுத்துள்ளார். சம கால அரசியலை பகடியாக சொல்லி இருக்கிறார். திருநங்கைகள் நல்ல பெயர் வைத்துள்ளோம், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோமா என்பது ஒரு சோற்று பதம்.

வானவில் போல பல வண்ண கதைகள் ஒரே தொகுப்பில். இன்னும் இவர் நிறைய எழுத வேண்டும். இதே மொழி ஆளுமையில்.

Sunday 16 October 2022

கிரிக்கெட் நினைவுகள் 7


ஹசன் திலகரத்னே 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர்.

1986ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 1989ல் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக களம் இறங்கினார். பிறகு பேட்ஸ்மேனாக நீடித்தார்.

இலங்கை அணி எழுச்சி பெற்ற போது இருந்த வீரர்களில் இவரும் ஒருவர். 1996 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தார்.

https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/australia-vs-sri-lanka-final-65192/full-scorecard

1999 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்கு 2001ல் திரும்பினார்.

பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், பகுதி நேர பந்து வீச்சாளர் என் முப்பரிமானங்கள் காட்டியவர்.

10 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 2ல் மட்டுமே வெற்றி பெற்றார்.

1986 முதல் 2004 வரை சர்வதேச கிரிக்கெட் ஆடியவர். 

டெஸ்ட்ல் 11 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளார்.

டெஸ்டில் 3 முறை, ஒருநாள் போட்டிகளில் 2 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார்.

2004ல் சுனாமி நிவாரண குழுவின் இயக்குநராக இலங்கை கிரிக்கெட் வாரியம் இவரை நியமித்தது. அதற்கு பிறகு அரசியல் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகன்கள் இரட்டையர்களும் கிரிக்கெட் வீரர்கள் தான்.

Wednesday 12 October 2022

கிரிக்கெட் நினைவுகள் 6

மார்க் ராம்பிரகாஷ் 


ராம்பிரகாஷ் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அவரது அப்பா இந்தோ- கயானீஸ், அம்மா - பிரிட்டிஷ்.

இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியில் நுழைந்தார். இவரும் கிரஹாம் கிக்கும் ஒரே போட்டியில் அறிமுகமானாலும் அவர் அளவுக்கு இவர் சர்வதேச போட்டிகளில் சோபிக்கவில்லை.

52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம் 12 அரை சதம் அடித்துள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 அரை சதம் அடித்துள்ளார்.

10 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும் தொடர்ச்சியாக அணியில் இவரது இடத்தை தக்க வைத்ததில்லை.

அணித் தலைவர்களான கிரஹாம் கூச், ஆடம் ஹோலியோக் போன்றோரோடு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ராம் பிரகாஷ் க்கு.

ராம் பிரகாஷ் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 100க்கு மேற்பட்ட சதம் அடித்த 25 பேர்களில் ஒருவர்.

2014-2016 வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

கிரிக்கெட் தாண்டி நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் மார்க் ராம்பிரகாஷ்.




Saturday 8 October 2022

கிரிக்கெட் நினைவுகள் 5

பால் ஆடம்ஸ் 
தென்னாப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ் வித்தியாசமான பந்து வீச்சு பாணியால் 90களில் மிகவும் பிரபலமானவர். 



தமிழ் செய்தித்தாள்களில் "தவளை குதி" பந்து வீச்சாளர் என்று எழுதினர். 
இடது கை பந்து வீச்சாளரான இவர் பந்து வீசும் போது வானத்தை நோக்கி பார்ப்பது போல் இருக்கும்.

பந்து கையை விட்டு வெளிப்படும் தருணத்தில் பேட்ஸ்மேனை பார்க்கிறார் என்ற சந்தேகம் பேட்ஸ்மேன்களுக்கு இருந்தது.

பெரிய அளவில் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டாததால் பெரிய அளவில் இவர் சாதிக்கவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்கள் மிக அரிதான தென்னாப்பிரிக்கா அணிக்காக 45 டெஸ்டும், 24 ஒருநாள் போட்டிகளும் ஆடி உள்ளார். 

டெஸ்ட்டில் 134 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 29 விக்கெட்டும் வீழ்த்தி யுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒருமுறை ஆடிய 11 பேரும் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பால் ஆடம்ஸ் ஆடியுள்ளார்.
https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-south-africa-1998-99-61892/south-africa-vs-west-indies-5th-test-63823/full-scorecard

Thursday 6 October 2022

பிளாஸ்டிக் அரக்கன்

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அல்வாவை வாழை இலையில் சுற்றி அதற்கு மேல் செய்தித்தாள் கொண்டு சுற்றி தந்தார்கள்.

பூ விற்பவர்கள் பூவரச இலைகள் பறித்து வைத்து அதில் பொதிந்து பூ கொடுத்தார்கள். ஓட்டலில் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு சென்றோம்.

அப்பாவோ, அம்மாவோ கயத்தாறு  தாண்டி சென்றால் ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மிட்டாயும் கார சேவும் வாங்கி வருவார்கள்.

மருத்துவமனைகளில் பரிட்சை பேப்பரில் மடித்து மாத்திரை தருவார்கள். யாரோ எழுதிய விடைத்தாள் என பார்ப்போம்.

பாலிதீன் கவர்கள் மிக அரிது. எப்போதாவது தான் வரும். மழை காலத்தில் நாங்கள் பயன்படுத்தும் கவரை கொங்காணி தாள் என்போம்.

எல்லா வீடுகளிலும் இருக்கும் போத்தீஸ் அல்லது ஆர்எம்கேவி கவர்களில் தான் முக்கியமான பேப்பர்கள் இருக்கும். அதுவும் ட்ரெங்க் பெட்டியில் தான் இருக்கும்.

90களின் இறுதியில் தான் பிளாஸ்டிக் கவர் என்ற அரக்கன் ஆட்சியை பிடித்தான். இன்று வேதாளமாக எல்லார் தோள்களிலும் ஏறிவிட்டான். 

2019 இறுதியில் தடை செய்யப்பட்டாலும் இன்றும் அந்த அரக்கனை ஒழிக்க முடியவில்லை. நீர் வழி சாலைகள் அனைத்திலும் நீங்காது நிரம்பியுள்ளான்.

முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டமாக இருந்தாலும் முழுமையாக செயல்படுத்த விரும்பாத அரசுகள், பிளாஸ்டிக் கவர்கள் தடையை மட்டும் எப்படி செயல்படுத்தும்?

ஒயின் ஷாப் பார்களில் பிளாஸ்டிக் கப் இல்லை என்றால் குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள், அரசின் வருமானம் தடைப்படும்.

அரசினால் மட்டுமே இது சாத்தியம் இல்லை. தனி மனிதனின் பொறுப்புணர்வும் சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். 

திரையரங்கில் திரைப்படம் தொடங்கும் முன் போடப்படும் புகையிலை ஒழிப்பு விளம்பரங்கள் போல் பாலிதீன் கவர் ஒழிப்பு விளம்பரங்கள் போடலாம்.

பாலிதீன் கவர்கள்/கப்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய முன் வர வேண்டும். அவை விற்கப்படும் கடைகளையும் முடக்க வேண்டும்.

நடக்குமா ?



Monday 3 October 2022

கிரிக்கெட் நினைவுகள் 4

ஹாமில்டன் மாசகாட்சா 

ஜிம்பாப்வே அணிக்கு விளையாடியவர்களில் மூன்று மாசகாட்சா உண்டு. ஹாமில்டன் மாசகாட்சா, சிங்கி மாசகாட்சா, வெலிங்டன் மாசகாட்சா. மூவரும் அண்ணன் தம்பிகள், இவர்களில் ஹாமில்டன் மாசகாட்சா ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சில காலம் இருந்தவர்.


அதிரடியாக ஆடக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாமில்டன் மாசகாட்சா. அறிமுகமான முதல் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-zimbabwe-2001-61913/zimbabwe-vs-west-indies-2nd-test-63942/full-scorecard 

கேப்டனாக பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், சமீப காலத்தில் ஜிம்பாப்வேவின் சிறப்பான கேப்டனான பிரண்டன் டெய்லரின்  வெற்றிகளுக்கு துணை புரிந்தவர் ஹாமில்டன் மாசகாட்சா.

அவரது சகோதரர்கள் முழு நேர பந்து வீச்சாளர்கள் என்றாலும் ஹாமில்டன் பகுதி நேர பந்து வீச்சாளர் மட்டுமே.

டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 39 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 2 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

கேப்டனாக 3 டெஸ்ட்டில் ஒரு டெஸ்ட் வென்றுள்ளார். 25 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை. 19 டி20 போட்டிகளில் 5ல் வென்றுள்ளார்.

மசகாட்சாவின் சாதனை என்றால் அறிமுகமான முதல் டெஸ்ட்டில் சதமடித்தவர். ஒரு ஒருநாள் தொடரில் இரண்டு முறை 150க்கு மேல் அடித்தவர் (தற்போது ரோகித் சர்மா வரும் அடித்துள்ளார்). கென்யாவுக்கு எதிரான தொடரில் இந்த சாதனை நிகழ்த்தினார்.

https://www.espncricinfo.com/series/kenya-tour-of-zimbabwe-2009-10-424847/zimbabwe-vs-kenya-5th-odi-426219/full-scorecard

ஜிம்பாப்வே அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நாலாவது வீரர் ஹாமில்டன் மாசகாட்சா.

ஜிம்பாப்வே அணிக்கு மீண்டும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின் நடந்த முதல் போட்டியில் கூட்டு முயற்சியால் ஜிம்பாப்வே வென்றது. அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார் மாசகாட்சா.

https://www.espncricinfo.com/series/bangladesh-tour-of-zimbabwe-2011-504002/zimbabwe-vs-bangladesh-only-test-522245/full-scorecard