Friday 2 November 2012

நீயும் நானும்


நம் கல்யாணத்தன்று குடத்துக்குள் இருக்கும் மோதிரத்தை எடுக்க சொன்னார்கள் .நான் மோதிரத்தை எடுக்க முயற்சிக்காமல் உன் கையை பிடித்து கொண்டேன்.வேடிக்கை பார்ப்பவர்கள் கடுப்பாகிவிட நீ எனக்கும் நான் உனக்கும் விட்டு கொடுத்தோம்.கடைசியில் நீ எடு என்று நான் உன் காதில் சொன்ன போதுதான் நீ எடுத்தாய்.

திருமணமான புதிதில் நீ மட்டும் தனியாய் ஊருக்கு கிளம்பினாய்.நான் ஊருக்கு போனதும் நீ என்ன பண்ணுவ?என்று நீ கேட்டாய்.உன்ன ஸ்டேஷன்ல விட்டுட்டு நேரா ஒயின் ஷாப் தான் என்றேன்.நீ முறைப்பது போல் சிரித்து விட்டு கிளம்பினாய்.

ஊருக்கு போயிட்டு வந்ததும் நீ காலி பாட்டில் எதுவும் இருகிறதா என்று தேடினாய்.டேய் லூசாடீ நீ அதையெல்லாம் தூர போட்டுடுறேன் என்றேன்.நீ தலையணையை எடுத்து என்தலையில் அடித்துவிட்டு இரண்டு நாள் என்னுடன் பேச மாட்டேன் என்றாய். ஆனாலும் அன்றைக்கு இரவு...

ஒவ்வொரு முறையும் ஊரில் இருந்து வந்து பாட்டிலை தேடுவாய் எதுவும் இருக்காது. ஒரு முறை மட்டும் பிரிட்ஜில் பீர் இருப்பதை பார்த்து
கோபத்தின் உச்சிக்கு சென்று அதை உடைக்க பார்த்தாய்.டேய் செவென்ட்டி பைவ் ரூபிஸ் டீ என்று கெஞ்சினேன்.

சரி, போய் எனக்கும் ஒன்னு வாங்கிட்டு வா ஆளுக்கு ஒரு பீர் அடிச்சிட்டு சண்டை போடலாம் என்றாய். KF டீ கிடைக்காது அதனாலதான் ஸ்டாக் வச்சேன். வேணும்னா ஷேர் பண்ணிப்போம் என்றேன். நீ அந்த பீர ஷேர் பண்ணல. ஆனாலும் அந்த பீர் இனிச்சிச்சு.

வளைகாப்பு முடிஞ்சு நீ ஊருக்கு போனப்ப எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்திச்சு. ஆனாலும் நான் ஒயின் ஷாப் பக்கம் போகல .

முதல் பிரசவத்துக்கு நீ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாய். பெண் குழந்தை பிறந்துவிட்டது. தாயும் சேயும் நலம் என வெள்ளுடைகாரி சொன்ன போதே நான் சந்தோஷத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.

பெண் குழந்தை "கடவுளின் வரம்" என்று நான் சொல்லி இருந்ததால் நீயும் மகிழ்ச்சியோடு இருந்தாய். நம் குடும்பத்தினருக்கு பெண் குழந்தை பிறந்ததில் சற்றே வருத்தம் தான். நாம் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தோம்.

எனக்கு மட்டும் தாயாய் இருந்த நீ இன்று இன்னொரு குழந்தைக்கும் தாயாகி விட்டாய்.உன்னையும் நம் மகளையும் நான் முத்தமிட்டேன்.

அப்போது நீ என் காதில் கிசுகிசுப்பாய் சொன்னாய். பையன் பொறந்தா, பொட்ட புள்ள பெத்துகுடுன்னு துரத்தி துரத்தி வருவேன்னு சொன்னல்லா இப்ப என்ன பண்ணுவ என்றாய்.

நம்ம குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நான் சரக்கு அடிப்பதை நிறுத்திவிட்டேன். உன்னால பண்ண முடியாதத உன் (நம்) மகள் பண்ணிட்டாள்.

நம்ம பொண்ணு முதல் நாள் ஸ்கூல்க்கு போனப்ப அவள ஸ்கூல்ல விட்டுட்டு லஞ்ச்ல வந்து கூட்டிட்டு போயிடலாம்னு சொன்ன. நான், முதல் நாளே அவள கெடுத்திடாத எவனிங் நான் அவள கூட்டிட்டு வந்துடறேன் என்றேன்.

உன் தாய் மனசு கேட்காமல் நீ அரை நாள் விடுப்பு எடுத்து அவளுடன் வீட்டில் இருந்தாய், சாயங்காலம் நான் வரும் போது .

என்னால உன்னை ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவ தாண்டி குழந்தை நீயுமா? என்று கேட்ட போது , கொஞ்சம் மூடுறா ? என்று கண்களால் பதில் சொன்னாய். உன் முகத்தில் குழந்தைத்தனம் தெரிந்தது.

நமக்கு பையன் பிறந்து அவனுக்கு கால் முளைத்த பின் ஒரு வெள்ளி கிழமை நீ அவனை உன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றாய். கொஞ்ச நேரத்தில் எனக்கு போன் செய்து,டேய் உன் புத்திரன் தொல்லை தாங்க முடியல நீ வந்து கூட்டிட்டு போ,அப்படியே ஊருக்கு போன் பண்ணி அம்மாவையாவது, அத்தையாவது வர சொல்லு இவன பார்த்துக்க என்றாய்.

நான் என் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு அவன கூப்பிட வந்தேன். என்னை பார்த்ததும் அப்பா என்று என்னை கட்டி கொண்டான். நான் அங்கிருந்து கிளம்பினேன் .

உன்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்பாவ பார்த்ததும் எதுவும் சொல்லாம ஓடுறானே? நான் பாசத்துல எதுவும் குறை வச்சிட்டேனா என்று நீ சிந்தித்து கொண்டிருக்கையில் பிஞ்சு கரங்களால்  உன் கழுத்தை கட்டி முத்தமிடுகிறான் உன் மகன்.நான் தூரமாய் நின்று, நானும் முத்தமிடவா என்று கண்களால் கேட்டேன்.ச்சீ போடா நாயே என்று கண்களால் பதில் சொல்லி குறுநகை புரிந்தது உன் முகம்.

சாயங்காலம் நீ வீட்டுக்கு வரும் போது நானும் நம் மகனும் தூங்குவது போல் நடித்து கொண்டிருந்தோம். மகள் உன் காலை கட்டி கொண்டு அம்மா எதுவும் சாப்பிடல பசிக்குது என்கிறாள்.

என்னங்க ஆபீஸ்க்கு லீவ் போட்டுடீங்கள்லா, பசங்களுக்கு பாலை காச்சியாவது கொடுக்க வேண்டியதுதானே அப்படி என்ன தூக்கம் என்று திட்டி கொண்டே பிரிட்ஜை திறக்கிறாய் பால் இல்ல. வாசலுக்கு சென்று பையை பார்த்துவிட்டு திரும்புகிறாய்.கிச்சனில் நாங்க மூணு பேரும். நாங்க ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டாச்சு.நீங்க முதல்ல கிளம்புங்க வெளிய போகலாம் என்கிறாள் நம் மகள்.

வர வர உங்க சேட்டைக்கு அளவே இல்லாம போச்சு என்று சொல்லிக்கொண்டே புறப்படுகிறாய்.

வெளியே சென்று வரும் வழியிலே தூங்கி விடுகின்றன நம் செல்லங்கள். மகளை நானும் மகனை நீயும் தூக்கி வந்து தூங்க வைத்துவிட்டு ஹாலில் டிவி பார்க்க உட்காருகிறோம்.

டேய் மச்சான் என்கிறாய் நீ (டேய் மச்சான் நம் இருவருக்கும் தனிப்பட்ட கோட் வோர்ட்) ஹால்ல  வச்சேவா என்று நான் கேட்கும் போதே நீ என் கன்னத்தில் முத்தமிட்டு வாயை அடைக்கிறாய் .

ஞாயிற்று கிழமை எனது சமையல் என்பதால் நான் மட்டும் எழுந்து கொண்டே. கடைக்கு சென்று திரும்பி வந்தவுடன், டேய் அப்பா புதுசா ஒரு பிஷ் வாங்கிட்டு வந்திருக்கேன். மீன் தொட்டில இருக்கு என்று சொல்லிவிட்டு சமையல்கட்டில் நுழைந்தேன்.

குழந்தைகள் ரெண்டு பேரும் மீன் தொட்டியை பார்க்க அவர்களுக்கு பின்னால் இருந்து நான் ரொமான்ஸ் மூடில் உன் காதருகே மூக்கை நுழைத்த போது நம் மகள் திரும்பி விட்டாள் . என்ன பண்றீங்க என்று கேட்டவுடன், நான் மீன் பிடிக்கலாம்னு பார்த்தேன் நழுவிடுச்சு என்று மனதுக்குள் சொல்லி கொண்டே கிச்சனில் மீண்டும் நுழைந்தேன்.

பல் தேய்க்க  நீ பாத்ரூமுக்குள் நுழையும் முன் உன்னிடம் ஒரு முத்தம் கடன் கேட்டேன். நீ பல் தேய்க்கவில்லை என்றாய். நான் உனக்கு முத்தம் தந்து உன்னை கடன்காரி ஆக்கிவிட்டு தோசையை புரட்டினேன்.

மீன கொன்னுட்டான் இவன்,இதோட மூணாவது மீனு என கத்தினாய். கையை பின்னால் கட்டி கொண்டு என்னை பார்த்து பயப்பட்டான் நம் மகன்.
அவன் விளையாடுவதற்கு தான் அந்த மீன் தொட்டி என்று அவனை தூக்கி கொஞ்சிவிட்டு சென்றேன்.

அவன திட்ட வேண்டியது தான என்று கேட்டாய் நீ.திட்டறதுக்கு முன்னாலயே அவன் பயந்துட்டான்டி.அவன் நம்ம பையன் நம்மள மாதிரி தானே இருப்பான்  என்றேன். நீ முறைத்தாய்.நான் சிரித்தேன்.


தொடரும்
என்றும் சிநேகமுடன்
 பழனி செல்வகுமார்