Thursday 28 February 2019

கொம்பு வச்ச லாரி

சிறுவனாய் இருந்த போது
வண்டித்தடம் மட்டுமே உள்ள
எங்கள் ஊருக்கு
வருடத்திற்கு ஒரு முறையோ
இரு முறையோ வந்து
செல்லும் கொம்பு வச்ச லாரி!

சிறுவர் மலர் கதைகளில்
வரும் கொடூரர்களில்
முகத்தை போல் இருப்பதாய்
தோன்றும் லாரியின் முகம் !

அதன் பக்கத்தில் போக
பயந்தாலும் பெரியோர்
துணையோடு பக்கவாட்டை
தொட்டு பார்த்திருக்கிறேன் !

இன்று கொம்பு வச்ச லாரியின்
முன்னால் நின்று புகைப்படம்
எடுத்து கொள்ள ஆசை.
கொம்பு வச்ச லாரி தான்
அருகி வரும் உயிரினம்
ஆகிவிட்டது !!!

Wednesday 20 February 2019

காதல் தினம்

முதன்முதலாய் என்னவளின்
கண் பார்த்த தினம்.
வார்த்தை ஏதும் பேசாமல்
அவளுக்கு வாழ்த்து அட்டை
தந்த தினம் !

எங்கள் வீட்டு மாடியில்
உட்கார்ந்து இனியவளுடன்
பேசி மகிழ்ந்த தினம்.
மலர் மாலை அணிந்து
அவளை மணமுடித்த தினம்!

காலையில் எழுப்பி
கருவுற்றிருப்பதை கண்டு
சொன்ன தினம் !

அவள் வயிற்றில் கை வைத்து
எங்கள் மகளின் உதையலை
உணர்ந்த தினம் !

அவள் என் கையில்
செல்லமகளை பெற்று
தந்த தினம் !

கடந்த ஐந்தாண்டுகளில்
என் காதலுடன் காதலுக்கான
பல தினங்களை கடந்துவிட்டேன்.
இன்று காதலோடு காதலுக்காக
ஒரு தினம் !!!

பிறந்த நாள்

பெண்குழந்தை பிறந்துள்ளது
என்று மருத்துவர் வந்து
சொன்னது நேற்று
நடந்தது போல் உள்ளது
ஓராண்டை தொட்டுவிட்டது!

இந்த ஓராண்டில்
மழலையர் பாடல்கள்
மனப்பாடம் ஆகிவிட்டது!

பொம்மைகளுடன் விளையாடும்
வித்தை கற்றுகொண்டோம்!

அலுவலக அலுப்பு
எங்கள் மகளின்
புன்சிரிப்பில் மறைந்துவிடுகிறது!

செல்லமகளுக்கு பிடித்த
பாடல்கள் விளம்பரங்கள்
எங்கள் செல்போனை நிறைத்துள்ளன!

சிறுநீரால் எங்கள் ஆடைகளில்
சித்திரம் வரைந்தவள்
நடக்கும் போது ஒலிக்கும்
கொலுசின் ஓசை கேட்க
எங்கள் வீட்டு அறைகள்
காத்திருக்கின்றன!

அவளின் கிறுக்கல்களுக்காக
வண்ணம் பூசிய சுவர்கள்
காத்திருக்கின்றன!

பிறந்தநாள் வாழ்த்துகள்
ப்ரியமான மகளே!!!

Tuesday 19 February 2019

சாதி

கிராமங்களில் தான் சாதி
பார்க்கிறார்கள்
நகரத்தில் இல்லை என்றார்கள்
உண்மை தான் நகரத்தில்
பக்கத்து வீட்டுக்காரனின்
முகத்தையே சரியாய்
பார்த்ததில்லை பிறகெப்படி
சாதி பார்க்க முடியும் !

நகரத்தில் தான் எல்லா
சாதிக்கும் தலைமை
அலுவலகமும்
திருமண தகவல் மையமும் உள்ளது !

ஒவ்வொரு தொகுதியிலும்
ஒரு குறிப்பிட்ட சாதியினரே
வெல்ல முடியும் என்பது
நடப்பு அரசியல் !

எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம்
என்று சொல்லிக்கொள்ளும்
கட்சிகளில் எல்லாரும்
தலைவராக முதல்வராக
முடியவில்லை !

அப்படியே முதல்வரானாலும்
பதவியை காப்பாற்ற
மக்கள் பிரதிநிதிகளுக்கு
நட்சத்திர விடுதியில்
சகல விருந்தும் அளிக்க வேண்டியுள்ளது !

கல்வியால் சாதி ஒழியும்
என்றார்கள்
கல்வி கற்க கற்பிக்க
சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது !

பன்றிக்கு பூனூல் அணிவித்தால்
சாதி ஒழியும் என்கிறது
பகுத்தறிவுக் கூட்டம் !

சாதியை எப்படியாவது
ஒழிக்க வேண்டும் எனும்
முனைப்பில் ஊடகங்களும்
ஆதிக்க சாதி தாழ்ந்த சாதி என்று
செய்தி வெளியிட்டு சாதிவெறி
எனும் கணல் அணையாமல்
பார்த்துக்கொள்கிறார்கள் !!!

மகளதிகாரம்

வீடு புகுந்து திருடும்
திருடனை போல
காலையில் எந்த சத்தமும்
வந்து விடாமல் அலுவலகம்
கிளம்புகிறேன்.
அலுவலகம் முடிந்து வீடு
திரும்பியதும் குற்றவாளியாய்
அவள் முன் ஆஜர் படுத்தப்படுகிறேன்.

சின்ன பிரண்டல்கள்
செல்ல கடிகள்
நெஞ்சில் உதைகள்
இந்த தண்டனைகள் போதாதென்று
மொழி தெரியாத மொழியில்
வசைகள் வேறு.

அவள் தூங்கிய பின்தான்
நான் தூங்க வேண்டும்
என்ற சட்டம் வேறு.

மகளதிகாரம்!!!