Friday 17 March 2023

பிரகதீஸ் எனும் நண்பன்

இன்றும் நினைவில் நிற்பதால் நீண்ட யோசனைக்கு பின் இவனை பற்றி எழுதுகிறேன்.

கொடிய நோயால் மரித்து போனவன் என்பதை விட, கோரோனா என்னும் பெயரில் அடிக்கப்பட்ட கொள்ளையில் கொல்லப்பட்டவன் என்பதே சரி.

பிரகதீஸை முதன் முதலில் சந்தித்தது பிஎச்ஈஎல்லில் தான். அங்கு அவனும் வாஞ்சியும் தான் ஒன்றாக சுத்துவார்கள். கொஞ்ச காலத்தில் நாங்களே ஒரு குழுவானோம் நான், சங்கர், ஜனா, ரிஸ்வான், பாலா, ஆரோக்கியா, பிரகதீஸ் & வாஞ்சி குழு உறுப்பினர்கள்.

சித்தார் வெசல் இண்டர்வியூ முடிந்த பின் எனக்கு ஜானகியும் பிரகதீஸ்க்கும் சர்புதீனும் இண்டர்வியூ அப்டேட் கொடுத்தார்கள். ஜானி - சர்புதீன் மூலம் நாங்கள் இருவரும் தேர்வாகிவிட்டோம் என்று தெரிந்து கொண்டோம். மற்றவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் அவஸ்தையோடு இருந்தனர். எங்கள் இருவருக்கும் ஆபர் லட்டர் வந்தது.

01-04-2009 அன்று பணியில் சேர 31-03-2009 அன்று நானும் பிரகதீஸ்ம் திருச்சி சென்றோம். அன்றைய இரவு திருச்சி தமிழ் நாடு ஹோட்டலில் மூட்டை கடி வாங்கினோம்.
சித்தார் சென்னை அலுவலகத்தில் சேர்ந்த எட்டு பேரில் எனக்கு செட் ஆனது பிரகதீஸ் மட்டுமே.
கொஞ்ச நாட்களில் (மாதங்களில்/வருடங்களில்) ரிஸ்வான், ஜனா, வாஞ்சி, சங்கர் என பலரும் சித்தார்வாசி ஆனார்கள்.

பிரகதீஸ்க்கு முன் மண்டையில் முடி கொட்டி பின்னால் சிறிய அளவில் பங்க் போல் விட்டிருப்பான். அவனே பங்கி என்று அழைப்போம். சிறிய அளவில் தொந்தி இருந்ததால், கவனமா இருடா பிள்ளையார் சதுர்த்திக்கு கடல் போய் கரைச்சிர போறாங்க என்று கிண்டல் செய்வோம். அவனது பிறந்தநாள் கேக்கில் கூட "பங்கி விநாயகர்" என்று எழுதினோம். அவனும் அக்டோபரில் பிறந்தவன்.

அவனது அறைக்கு சென்ற போது தான் அவன் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளான் என்று தெரிந்து கொண்டோம்.ஆனாலும் தாராளமாக ஏராளமாக சிகரெட் பிடிப்பான். சில நேரங்களில் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுவான், காலை 6 முதல் 10 வரை.

எங்கள் கூட்டத்தில் ஆதியில் இருந்தே பைக்கில் வரும் ஒரே ஆள் பிரகதீஸ் தான். என்னை முதன் முதலாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு கூட்டி சென்றவன் பிரகதீஸ். அன்று விநாயகர் சதுர்த்தி. அடுத்த வாரம் பார்த்தசாரதி கோயில் கூட்டி போனான்.

எங்கள் கூட்டத்தில் பலருக்கும் அஜித் பிடிக்கும் என்பதால் ஆரேழு பேர் அபிராமியில் ஏகன் படம் பார்த்தோம். பிரகதீஸ் தலைமையில் அடுத்தடுத்து ஈசனும், மன்மதன் அம்பும் பார்த்தது கொடூரம்.

சிவகார்த்திகேயன் ஊரான சிங்கம்புணரி தான் பிரகதீஸ் ஊர். காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் படித்தவன். குடும்பத்தில் எல்லாரும் சைவம், இவன் மட்டும் செவத்த சிக்கன் (சிக்கன் பிரை) சாப்பிடுவான்.

ஒருமுறை சைதாப்பேட்டையில் ஒரு பாஸ்ட் புட் கடைக்கு கூட்டி சென்றான். இங்க ப்ரைட் ரைஸ்ல நிறைய சிக்கன் போடுவாங்க என்றான். வாங்கி சாப்பிட்டோம், எத்தனை முறை கடலை மாவை சிக்கன் என்று நினைத்து சாப்பிட்டானோ என்று நொந்து கொண்டோம்.

சித்தாரில் இருந்து வெளியேறி பரிதாபாத் சென்றான். அன்று அவனுக்கு ஜெர்கின் பரிசளித்தோம்.

திருமண அழைப்பிதழை வீடு தேடி வந்து தந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு போன் செய்தவன் ரெம்டிவைசர் மருந்து கிடைக்குமா என்று கேட்டான்.

அடுத்த சில வாரத்தில் பிரகதீஸ் இறந்துவிட்டான் என்ற செய்தி வாட்சப் குழுவில் வந்தது. வாஞ்சியிடம் பேசினேன், கோரோனா என்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் மரணித்து விட்டான் என்று.ஹெவிடோஸ் மருந்துகள் தான் என்றான் வாஞ்சி கனத்த இதயத்தோடு.

சித்தாரில் நாங்கள் சேர்ந்த ஏப்ரல் 1 ம் தேதியை மறக்க முடியுமா என்று பேசி கொள்வோம். இப்போது பிரகதீஸ்ன் நினைவுகளையும்.