Friday 30 June 2023

பொறியியல் படிப்பு

2000 க்கு பிறகு தமிழ்நாட்டில் நிறைய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

AICTE அப்பூருவல் பெற்றது, அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என கல்லூரியின் பெயருக்கு பின்னால் போட்டு கொண்டனர். அரசியல்வாதிகள் தங்கள் பெயரில், தங்களது பினாமி பெயரில் கல்லூரி தொடங்கினர். அரசியலுக்கு வர ஆசைப்பட்டோரும் பொறியியல் கல்லூரி தொடங்கினர். கல்லி தந்தை ஆனார்கள்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் இருந்ததா? உட்கட்டமைப்பு இருந்ததா? என்றால் இல்லை. 'உன்ன தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு' கிண்டல் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் உருவானது. 

தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு தனியார் கல்லூரிகள் அனைத்து சீட்களையும் அரசு கவுன்சிலிங் மூலம் நிரப்பியவை. மற்ற கல்லூரிகள் அனைத்தும் கட்டண கொள்ளை தான்.

பாடத்திட்டத்திற்கு வருவோம். ஏற்கனவே தமிழ்நாட்டின் கல்விமுறை பத்தாம் வகுப்பு வரை இரண்டு மொழி பாடங்கள்+ கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்பது தான். அறிவியலில் நான்கு பிரிவுகள், சமூக அறிவியலில் மூன்று பிரிவுகள். +1 செல்லும் போது மொழி பாடங்கள் 2 + கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ கணிப்பொறி அறிவியல். பத்தாம் வகுப்பு வரை அறிவியலின் ஒரு பகுதியாக படித்த இயற்பியல்/பிற இயல்களை 200 மார்க் தனிப்பாடமாக படிக்க சிரமப்பட்டு, செட் ஆவதற்கு முன்னால் +2 இறுதி தேர்வு வந்துவிடும் சராசரி மாணவனுக்கு.

ஆக இயல்களில் குறுக்குவழி கண்டறிந்து, டியூசன் போய் கற்றால் பொறியியல் கல்லூரி கிடைக்கும். பொறியியல் கல்லூரி போனதும் அந்த பாடங்கள் ஆங்கிலத்தில் (தமிழ் வழி மாணவனின் படும்பாடு). 

நான் 2003ல் பொறியியல் சேர்ந்த போது முதல் செமஸ்டரில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ். அனைத்து துறைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம்.

இதில் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ், சிறப்பான ஆசிரியர் அமையாவிட்டால், அரியர் என்றால் என்ன என்று விளக்கும் பாடம்.

இரண்டாம் செமஸ்டரில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியலோடு துறைசார் பாடங்கள் வரும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு பேசிக் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்ம், எலக்ட்ரானிக்ஸ்க்கு பேசிக் மெக்கானிக்கலும் உண்டு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு தெர்மோ டைனமிக்ஸ் என்ற பாடம் உண்டு.

சிவப்பு நிற அரசு பேருந்து எப்படி கூடுதல் கட்டணம் உண்டு, ஆனால் சாதாரண பேருந்தின் வேகத்தில் தான் செல்லும். அதே போல் தான் தெர்மோ டைனமிக்ஸ்க்கும் சிறப்பான ஆசிரியர் அமைந்தால் கூட புரியாது.

மூன்றாம் செமஸ்டரில் விஜயராகவனும், ஜெயகுமாரும் அறிமுகம் ஆவார்கள். அவர்கள் பிடித்து சென்றால் இஞ்சினியரிங் கடலை கடந்துவிடலாம். அதை போல ஒவ்வொரு பாடமும் ஐந்து யூனிட்கள் இருக்கும். ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் 20 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள். தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் நாலு யூனிட் படிக்க முடிந்தால் பாஸாகி விடலாம்.

பேராசிரியரை பார்க்கும் இடங்களில் வணக்கம் வைத்தால் இன்ட்டேர்நல் மார்க் கணிசமாக கிடைக்கும். இதுதான் 75% இஞ்சினியரிங் மாணவர்களின் வெற்றி சூட்சுமம்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு மூன்றாம் செமஸ்டரில் 5 பாடங்கள் மட்டுமே உண்டு. ஆனால் எட்டாவது செமஸ்டரில் 4 பாடங்கள் உண்டு. (மற்றவர்களுக்கு 2 மட்டுமே). அதில் ஒன்று ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்.

கேம்பஸ் இன்டர்வியூ, எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடக்கிறது என்று சொல்லி கல்லா கட்ட விரும்புவார்கள் கல்வி தந்தைகள். கேம்பஸ் இன்டர்வியூவின் கேள்விக்கென ஒரு புத்தகம் உண்டு. இண்டர்வியூவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், குழு விவாதத்தில் எப்படி பேச வேண்டும் என்ற சொல்லி கல்லா கட்டுபவர்கள் ஏராளம்.

கல்லூரி பேருந்து, கல்லூரி பேருந்துகள் எல்லா ஊர்களுக்கும் செல்லும். பெற்றோர்களை மகிழ்விக்க. சென்னைக்கு மிக அருகாமையில் செங்கல்பட்டு அல்லது மதுராந்தகம் தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் பேருந்துகள் விடிகாலையில் நகருக்குள் வந்து விடும். காலை உணவு கல்லூரி நிர்வாகம் வழங்கும், குறைவான கட்டணத்தில்.

அடுத்த மாவட்டம் வரை கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாவட்டந்தோறும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் பயின்று பொறியாளர்களாக வெளிவரும் 10 சதவீதத்தினருக்கு கூட அந்தந்த மாவட்டங்களில் தொழில்வாய்ப்பு கிடையாது. படித்து முடித்ததும் சென்னையை நோக்கி செல்ல வேண்டும்.


Wednesday 28 June 2023

உலகக்கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை

1. சென்னை - எம்ஏ சிதம்பரம் மைதானம் 

தமிழ்நாட்டில் தலைநகரில் உள்ள மைதானம். மெரினா கடற்கரையில் இருந்தாலும் காத்தோட்டம் இல்லாத மைதானம். சையது அன்வரின் 194 நிகழ்ந்த மைதானம்.

2008ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இரு ஒருநாள் போட்டிகள் விளையாடவில்லை. ஆனால் பாதுகாப்பை பலப்படுத்தி சென்னையில் டெஸ்ட் போட்டியில் ஆடியது. 1987, 1996 & 2011 உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -23

எம்ஏ சிதம்பரம் - சர். அண்ணாமலை செட்டியாரின் கடைசி மகன் தான், முத்தையா அண்ணாமலை சிதம்பரம். இவர் தொழிலதிபர், கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருந்தவர்.

2. பெங்களூரு - சின்னசாமி ஸ்டேடியம் 

கர்நாடக தலைநகரில் உள்ள மைதானம். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி. 1987, 1996, 2011 உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் - 26

சின்னசாமி - வழக்கறிஞர், மைசூர் கிரிக்கெட் கிளப்பை தொடங்கியவர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும் கூட.

3. ஹைதராபாத் - ராஜீவ் காந்தி மைதானம்

தெலுங்கானா மாநில தலைநகரில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி மைதானம் சிறியதாக இருந்ததால், 2005ல் தொடங்கப்பட்டது ராஜீவ்காந்தி மைதானம். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -7

ராஜீவ்காந்தி - முன்னாள் இந்திய பிரதமர்.

4. புனே - மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் 

ஏற்கனவே இருந்த மைதானத்தில் சில பிரச்சினைகள் இருந்ததால் 2013ல் துவக்கப்பட்ட மைதானம். சுப்த்ரா ராய் சகாரா மைதானம் என்ற பெயரில் இருந்தது. சகாரா நிறுவனம் முழுமையாக பணம் கட்டாததால் பெயர் மாற்றப்பட்டது. 

மகாராஷ்டிரா அரசு மைதானத்திற்கு தண்ணீர் தர மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆஸ்தான மைதானமான நாக்பூரில் இந்த ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக புனே மைதானம் தேர்வாகி உள்ளது.

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -7

5. மும்பை - வான்கடே மைதானம்

வான்கடே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செல்லப்பிள்ளை. 2011 பைனல் நடைபெற்ற மைதானம். மும்பையில் பாரபோன் மைதானம் மற்றும் நவி மும்பை மைதானங்களும் உள்ளன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த மைதானம் வான்கடே.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -23

வான்கடே - முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர், வழக்கறிஞர், அரசியல்வாதி.

6. அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானம்.

வல்லபாய் படேல் மைதானம் என்று இருந்தது. உனக்கு சிலை வச்சு தாரேன், எனக்கு மைதானத்தை கொடு என்று டீல் பேசி, மைதானம் சீரமைப்புக்கு பிறகு நரேந்திர மோடி மைதானம் என மாறியது. இந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற உள்ள மைதானம். அதிக பார்வையாளர்கள் இருக்கை வசதி உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -26

நரேந்திர மோடி - பாரத பிரதமர்.

7. டெல்லி - அருண் ஜேட்லி மைதானம் 

ப்ரோஷா கோட்லா மைதானமாக இருந்தது அருண் ஜேட்லி மைதானமாக மாறியுள்ளது. தலைநகரில் உள்ள மைதானம். அனில் கும்ளே பத்து விக்கெட் எடுத்த மைதானம்.

பிட்ச் சரியில்லை என்று ஒருநாள் போட்டி நிறுத்தப்பட்டதும் இந்த மைதானத்தில் தான்.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -26

அருண் ஜேட்லி - முன்னாள் மத்திய அமைச்சர்.

8. தரம்சாலா - இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் வாரிய மைதானம் 

இமாச்சலப் பிரதேசத்தில் பசுமை பொங்கும் மைதானம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆஸ்தான மைதானங்களில் ஒன்றான மொகாலி இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. மொகாலி போட்டிகளை கைப்பற்றியுள்ளது தரம்சாலா. 2015ல் துவங்கப்பட்ட மைதானம். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -4

9. லக்னோ - அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா மைதானம்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 2019ல் துவங்கப்பட்ட மைதானம். 2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த மைதானமாக செயல்பட்டது. இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகிறது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -4

அடல் பிகாரி வாஜ்பாய் - முன்னாள் பாரத பிரதமர்.

10. கொல்கத்தா - ஈடன் கார்டன் மைதானம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் பெரிய மைதானமாக, முக்கிய மைதானமாக இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலியா எதிரான டெஸ்ட் நடைபெற்ற மைதானம்.

1996 ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி ரசிகர்கள் கிளர்ச்சியால் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு ஒரு அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -31


Sunday 25 June 2023

அஜித் விஜய் சண்டை

அஜித் விஜய் சண்டை எப்படி துவங்கியது?

1999ல் விஜய்க்கு துள்ளாத மனமும் துள்ளும் மட்டுமே வெற்றி பெற்ற படம். மற்றவை பாடல்கள் மட்டுமே. பிரசாந்த் நடித்த படங்களும் இதே வகையறா தான். பாடல்கள் ஹிட்டாகும், படம் தேறாது.

அதே சமயம் 99ல் தொடரும் தவிர மற்ற படங்கள் அஜித்தை தூக்கி நிறுத்தின. குறிப்பாக வாலி. 

2000ல் முகவரியும், ஏஆர் ரஹ்மான் இசையமைத்த கண்டுகொண்டேனும் ஹிட் அடித்தது. உன்னை கொடு ஓடவில்லை என்றாலும் அதுவரை ஆசை நாயகனாக இருந்த அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். விஜய்க்கு குஷி மட்டுமே.

2001ல் தீனா- ப்ரண்ட்ஸ் ஒரே நாளில் வெளியானது. ரெண்டுமே வெற்றி என்றாலும் அஜித் தல ஆனது விஜய்க்கு புளியை கரைத்தது. சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம் என மாறுபட்ட படங்களின் வெற்றி அஜித்தை உயரத்துக்கு கூட்டி சென்றது. 

2002ல் வெளியான ரெட், மதுரையை அஜித் கோட்டை என்று மாற்றியது. ஏற்கனவே தூத்துக்குடியில் விஜய் ரசிகர்களை சந்திக்க மறுத்ததால் தூத்துக்குடியும் அஜித் வசம். 

விஜய் யூத் படத்தில் ரெட் படத்தின் 'அது' என்ற வசனத்தை கிண்டல் செய்தார் இதுதான் ஆரம்பம். அஜித் கண்டு கொள்ளவில்லை.

தீபாவளிக்கு வில்லன் - பகவதி போட்டியில் வில்லனுக்கு எளிதான வெற்றி கிடைத்தது. ஏற்கனவே தமிழ் - தமிழன் போட்டியில் பிரசாந்திடம் தோற்றிருந்தார் விஜய்.

இந்நிலையில் கார்த்திக் ரசிகர்கள் பலரும் அஜித் ரசிகர்களாக மாறினர். இது கார்த்திக் சொல்லியோ அஜித் சொல்லியோ நிகழவில்லை. தானாக நடந்த மாற்றம்.

2003ல் வசிகராவில் சற்றே அடிக்கி வாசித்த விஜய், புதிய கீதையில் மீண்டும் சீண்டினார். ரஜினி ரசிகர்கள் ஆதரவை பெற அண்ணாமலை தம்பி என்ற பாடலையும் வைத்தார். விவரம் அறிந்த ரஜினி ரசிகர்கள் குத்திவிட படம் பல்பு வாங்கியது.

தீபாவளிக்கு ஆஞ்சநேயா - திருமலை மோதல். திருமலை தான் வெற்றி. இதிலும் லாரன்ஸை தல என்று அழைத்து சீண்டல் இருந்தது. அடுத்து வந்த உதயா வந்த வேகத்தில் சென்றது. கில்லியிலும் சிறப்பு வசனங்கள் இருந்தது. அஜித் ஜனாவில் தகதமி தகதமி ஆட்டம்இது எப்பவும் ஜெயிக்கிற கூட்டம் என்று பாடல் இருந்தது.

அஜித் தரப்பிலும் பதிலடி குடுக்க நினைக்க, சரண் - வைரமுத்து கூட்டணியில் சரியான பதிலடி நிகழ்ந்தது அட்டகாசத்தில்.

திருப்பாச்சியில் நீயும் நானும் அண்ணன் தம்பிடா என்று பாடல் வைத்து சரணடைந்த விஜய் மீண்டும் சுக்ரனில் வில்லன் பெயர் ஜனா என்று வைத்து சீண்டினார். அடுத்து வந்த சச்சினில் உருவகேலி, ஷாலினினு பேர் வச்சு அப்யூஸ் என்று சென்றார். அதற்கு துணை போன வாரிசு இயக்குநர் அடையாளம் இல்லாமல் போனார்.

2006ல் பரமசிவன் - ஆதி மோதல். ஆதியிலும் வெள்ள தோலு... என்ற வசன சீண்டல்கள் நிறைய இருந்தது. ஆனால் படத்தின் முடிவால் விஜய் ஓராண்டுக்கு படமே வெளியிடவில்லை.

ஏவிஎம்மின் வேண்டுகோளுக்கு இணங்கி விஜய் திருப்பதி பட பூஜையில் கலந்து கொண்டார். ஆழ்வார் - போக்கிரியில் போக்கிரி வெல்ல குருவி, வில்லு என சீண்டல் தொடர்ந்தது. அஜித் பில்லாவில் நடித்து வேறு கட்டத்துக்கு சென்றுவிட வில்லுவில் வடிவேலுவை பில்லா கெட்டப்பில் காட்டும் காட்சிகள் படமாக்கபட்டது. (படத்தில் இடம் பெறவில்லை)

இன்றும் அஜித் மன்றங்களை கலைத்து விட்டு அமைதியான பாதையில் செல்கிறார். விஜய் ரசிகர்களை தூண்டி அஜித் தனக்கு போட்டியாளராக காட்டி கொள்ள நினைக்கிறார்.

நிதி கொடுப்பது கூட அஜித் எவ்வளவு கொடுக்கிறார் என்று காத்திருந்து பார்த்து கொடுப்பது கொடூரம்.

அஜித்துக்கு என்றுமே விஜய் போட்டியாளர் அல்ல. சினிமா துறையில் மட்டுமல்ல. தனி மனித செயல்பாட்டிலும்.

Friday 23 June 2023

வாசிப்பது எப்படி - புத்தக விமர்சனம்

கமலின் புத்தகப் பரிந்துரையில் தான் இந்த புத்தகம் பற்றி தெரியும். டுவிட்டரில் பலரும் பரிந்துரைத்த புத்தகம்.

புத்தகத்தை புரட்டியதும் எங்க ஊர்காரர் என்ற ஈர்ப்பு வந்தது. பதின் பருவத்தினருக்கு என்று சொல்லி இருந்தாலும் இது, அனைவருக்குமான புத்தகம்.

நான் ஏற்கனவே இறையன்பு ஐஏஎஸ் எழுதிய படிப்பது சுகமே வாசித்திருக்கிறேன். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது செல்வேந்திரனின் வாசிப்பது எப்படி?

முதல் பகுதியை வாசிக்கும் போது ரொம்ப ஓவராக பேசி இருக்கிறாரோ என்று தோன்றியது. அதில் இருந்த எதார்த்தம் சுட்டது. ஆய்வுக்கும், அனுபவத்துக்கும் இடையிலான புத்தகம் இது.

ஜெயலலிதா, ஷீலா வாழ்வு மூலமாக சொன்ன உதாரணம் அருமை. ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பதில் கிடைக்கும் பலன் என்ன? என வெவ்வேறு தலைப்புகளில் சுவையான எழுத்து மூலம் சொல்லி இருக்கிறார்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிக்க சிறப்பான புத்தகம். குறைந்த பக்கங்களில் நிறைவான படைப்பு. எளிதில் கிடைக்கும் புத்தகம்.

கடைசியாக, செல்வேந்திரன் பரிந்துரைக்கு புத்தகங்களின் பட்டியலும் உள்ளது.


Wednesday 21 June 2023

தனியார் பேருந்துகள்

விபத்து என்றால் தனியார் பேருந்துகள் தான், தனியார் பேருந்துகளை தாறுமாறாக இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதற்கான காரணங்கள், முதல் காரணம் அரசு. அரசு எப்படி காரணமாக முடியும்? பெட்ரோல் டீசல் விலை ஏறும் போது பேருந்து கட்டணங்களை உயர்த்தாமல், எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கும் என்று பயந்து விட்டு விடுவது. அதே சமயம் அரசு பேருந்துகளில் டீலக்ஸ், டிஎஸ்எஸ், ஒன் டூ ஒன் என கூடுதல் கட்டணத்தில் பேருந்து இயக்கப்படுகிறது.

கட்டணம் உயர்த்தாமல் இருப்பதால், பேருந்து முழுக்க பயணிகள் ஏறினால் தான் பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்த வேண்டிய கட்டாய சூழல். அது மட்டுமில்லாமல் நடத்துநரின் கலெக்ஷன் படி அதில் தான் அடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் நேர விரயத்தை பயணத்தில், வேகத்தால் சரி செய்ய வேண்டிய சூழலில் தான் பேருந்தை இயக்குகிறார்கள் ஓட்டுநர்கள்.

அரசு பேருந்தை விட வேகமாக செல்லும் என்பதால் தான் தனியார் பேருந்துகளுக்கு கூட்டம். கலெக்ஷனுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு டீ வாங்கி கொடுத்து தாமதமாக பேருந்தை இயக்க சொல்லும் தனியார் பேருந்து நடத்துநர்களும் உண்டு.

அதே சமயம் சாலைகளின் தரத்தில் அரசு எதுவும் செய்வதில்லை. ஒரு நெடுஞ்சாலையில் ஒரு கோட்டத்தின் சாலை நன்றாகவும் அடுத்த கோட்டத்தின் சாலை மோசமாகவும் இருக்கும் சாலைகள் உண்டு. தனியார் பேருந்துகள் கிடைக்கும் இடத்தில் அதிகபட்ச வேகத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

இரண்டாவது காரணம், தனியார் பேருந்துகளின் முதலாளிகள். எதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் ஓட்டுனர், நடத்துநர்களை வதைப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைத்து கொண்டு அடிமை போல் நடத்துவது. 

இந்த மொத்த சுமையை தாங்கி கொண்டு முதலாளிக்காக உழைக்கிறார்கள் தனியார் பேருந்து ஊழியர்கள், தங்களில் குடும்ப சுமைக்காக.

தனியார் பேருந்துகளில் இன்வாய்ஸ் என்பது எத்தனை பயணிகள் தற்போது பயணிக்கிறார்கள் என்பதை ஸ்டேஜ் வைஸ் காட்டும். அதில் எத்தனை லக்கேஜ், எத்தனை பாஸ் என்ற தெளிவும் வேண்டும். இதை சோதனையிட சூப்பர்வைசர்கள் வருவார்கள்.

அரசு பேருந்தை (நகர பேருந்து) பொறுத்த வரை எண்களை நிரப்பினால் போதும். செக்கிங் இன்ஸ்பெக்டர் கூட பயணிகளை மட்டுமே செக் செய்வாரா.

ஆம்னி பஸ்கள் நிலை இன்னும் மோசம். உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கும் பஸ்ஸை எடுத்து கொள்வோம். நாகர்கோவிலில் கூடுதலாக அரை மணி நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்டு பக்கத்து ஒயின் ஷாப்பில் குடித்து கொண்டிருக்கும் ரிசர்வேஷன் பயணியை போன் செய்து கூப்பிட வேண்டும். திருநெல்வேலியில் ஏறும் பயணிகளுக்கு டிரைவர் நம்பரை கொடுத்து விடுவார்கள்.

ஒவ்வொரு பயணியின் போனை அட்டெண்ட் செய்து காவல்கிணறு தாண்டிவிட்டது. வள்ளியூர் தாண்டிவிட்டது என்று ஓட்டுனர் பதில் அளிக்க வேண்டி உள்ளது. பிறகு திருநெல்வேலியில் இன்னும் அரை மணி நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்.

இந்த ஒருமணி நேர தாமதத்தை ஓட்டுனர் தன் தலையில் சுமந்து பேருந்தை இயக்க வேண்டும். இது ஓனர்களின் கட்டளை, இல்லை என்றால் இணையத்தில் ரேட்டிங் மோசமாக அமையும்.


Saturday 17 June 2023

வெங்கி என்கிற வெங்கடேஷ்

எங்கள் பள்ளியில் பார்வையற்றோர் படிக்க வசதிகள் உண்டு. ஆனால் சிலர் மட்டுமே படித்தனர். எல்லாருமே விடுதியில் தங்கி இருந்தனர். பத்து பதினைந்து பேர் இருந்தாலும் அதில் வித்தியாசமான ஒரே நபர்/நண்பர் வெங்கடேஷ் மட்டும் தான்.

வெங்கடேஷ்க்கு சொந்த ஊர், நாகர்கோவில் செட்டிகுளம். அக்கா வீடு பாளையங்கோட்டையில். ஒரு வாரத்திற்கான டிரஸ்ஸை கொடுத்து விடுவார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு சென்று விடுவான். எங்கள் செட்டில் (+1 & +2) பளிச் என்ற வெள்ளை சட்டை போடுவது அவன் மட்டும் தான்.

மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்கு உள்ளே பேசி விளையாடி கொண்டிருக்கையில் வெங்கடேஷ் மட்டும் தான் எங்களோடு பேசி கொண்டு இருப்பான்.
எந்த நேரத்திலும் அவனிடம் மணி கேட்கலாம். அவனிடம் இருக்கும் ப்ரைலி வாட்ச் மூலம் பார்த்து சொல்வான். வாட்ச்சை குளிக்கும் போது மட்டுமே கழட்டுவான்.

விடுதி ஸ்டடியில் பார்வையற்றோர்களுக்கு தனி அறை என்பதால் அப்போது மட்டும் அவனிடம் பேச முடியாது. 

கையை பிடித்தே, ப்ளசிங்கா, பழனியா என்று சொல்வான். எப்படிடா என்றால் கையிலுள்ள சூடு தான் கணக்கீடு என்பான்.

வின்னர் படத்தின் தயாரிப்பாளர் அவனது பக்கத்து வீட்டுக்காரர். படத்தை தியேட்டரில் பாருடா, ரொம்ப கஷ்டப்பட்டுட்டார் என சொல்லிக் கொண்டே இருந்தான். நாங்கள் +2 முடிக்கும் வரை அந்த படம் வெளிவந்த சுவடே தெரியவில்லை.

பயாலாஜி தேர்வு நாளில் எனக்கு விடுமுறை இருக்கும். அன்று அவனுக்கு காமர்ஸ் தேர்வு இருக்கும். நீ ஒருவாட்டியாவது வந்து தேர்வு எழுதி கொடு என்று சொல்வான். நானும் தட்டி கழித்து கொண்டே இருந்தேன். இன்று நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது.

+2 பொது தேர்வு எழுத அக்கவுண்ட்ஸ் டீச்சர் யாராவது வந்தால் மற்ற பாடங்களையும் ஓரளவு எழுதி விடுவார்கள். கடவுளை வேண்டிக்கோ என்று சொல்வான். பொது தேர்வு எழுத அக்கவுண்ட்ஸ் ஆசிரியர் வரவில்லை. ஆனால் வெங்கடேஷ் ஓரளவு படிக்க கூடியவன் தான்.

அவனை வீட்டில் வெங்கி என்றே கூப்பிடுவார்களாம், எங்களையும் வெங்கி என்று கூப்பிட சொல்வான். நாங்கள் கூப்பிட்டதில்லை. 
5ம் அறை விடுதி நாட்கள் மறக்கமுடியாதவை.

முகப்புத்தகத்தில் பார்த்த வெங்கடேஷ்ன் போட்டோ பல நினைவுகளை மீட்டு எடுத்தது.
கனரா வங்கியில் வெங்கி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.


Friday 9 June 2023

நல்லக்குமார் ஞானதாஸ்

நான் பத்தாம் வகுப்பில் விடுதியில் சேர்ந்த போது அவரும் விடுதிக்கு வந்தார் வார்டனாக.
ப்ராங்ளின் சார், எபனேசர் சார் இருவரும் விடுதியை விட்டு சென்ற பின் விடுதியின் முழுப் பொறுப்பும் இவர் வசம் வந்தது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள தோப்பூர் தான் நல்லக்குமார் சார் ஊர். கணித பட்டதாரி, சில அரியர்கள் கைவசம் இருந்த நிலையில் ஹாஸ்டலுக்கு வந்தவர்.

அவரது பெயர் பலருக்கும் தெரியாது. அதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய சம்பவம். விடுதியின் சாப்பாட்டுக்கூடத்தின் பெஞ்சில் ஒரு சிறுவன் ஏறி குதித்தான் ஸ்டைலாக. அது வல்லரசு பட விஜயகாந்த் போல இருந்ததால் அந்த சிறுவனுக்கு வல்லரசு என பட்டப்பேர் வைத்தார்கள்.

அந்த சிறுவனை நல்லக்குமார், வா வல்லரசு வா என்று கூப்பிட்ட தொனி வல்லரசு பட வில்லன் போல இருந்ததால் இவருக்கு வாசிம்கான் என பட்டப்பேர் வைத்தனர். அவரது முக வெட்டும் வில்லன் போல தான் இருக்கும் என்பதால் வாசிம்கான் என்ற பேர் செட்டானது.

மாணவர்கள் மத்தியில் வாசிம்கான் ஆனார். அந்த பெயரை யார் வைத்தது என்று புலனாய்வு செய்து கொண்டிருந்தார்.

ஏதாவது கணித ஆசிரியர் ஒரு வாரம்/ பத்து நாள் மருத்துவ விடுப்பு எடுத்தால் இவர் போய் வகுப்பெடுப்பார் தற்காலிக ஆசிரியராக.
மற்றப்படி விடுதி நிர்வாகம் மட்டுமே.

விடுதி நிர்வாகமும் அவரால் சரியாக செய்ய முடியவில்லை. அதனால் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவதாஸ் வார்டனாக இருந்தார். இவருக்கு கீழ், கீழ் படியாத பெரிய மாணவர்கள். தோப்பூரில் விவசாயமே பார்த்திருக்கலாம் என்று புலம்பி கொள்வார்.

விடுதி கட்டண விவரம் அனுப்பும் கடிதத்தில் முகவரி எழுத எப்போதும் என்னையே அழைப்பார். ஒருமுறை மகேந்திர சிங் அவனது முகவரியில் டோனாவூர் என்பதே எழுதாமல் விட்டுவிட சொன்னான். மதிப்பெண்கள் விவரம் அந்த கடிதத்தில் போகும் என்பதால். கடிதம் திரும்பி விடுதிக்கே வந்தது. நான் கவனகுறைவில் விட்டுவிட்டதாக நினைத்தார் நல்லக்குமார்.

குடியரசு தின விழா, சுதந்திர தின விழாவிற்கு வ.உ.சி மைதானம் செல்ல அனுமதி கேட்டால் கொடுப்பார். மற்ற வார்டன்கள் நிச்சயம் தர மாட்டார்கள். 

நக்கல், நையாண்டி கொஞ்சம் அவருக்கு உண்டு. ஒருநாள் விடுதிக்கு வந்த இயற்பியல் ஆசிரியருக்கு வணக்கம் சொன்னேன். அப்போது நல்லக்குமார் சொன்னது "அதான் பிராக்டிக்கலுக்கு 50 மார்க் போட்டு அனுப்பிட்டாரே இன்னும் என்ன வணக்கம்" என்று.

ப்ளஸ் 2 வில் விடுதியை விட்டு வெளியே டியூசன் சென்று வர அனுமதி தந்தார். டியூசன் நேரத்திற்க்கேற்ப சாப்பாடு எடுத்து வைக்க சொன்னார். ஓரளவுக்கு மார்க் எடுக்க உதவியது.

ஆனாலும் விடுதியில் எக்கச்சக்க பிரச்சனைகள் எல்லாமே தலைமை ஆசிரியரிடம் சென்று அவருக்கு கெட்ட பேர் வந்தது.

விடுதி தினத்தில் கூட நாங்கள் போட்ட நாடகம் மண்ணை கவ்வியது. அவருக்கு கெட்டபேரை தந்தது.

மாணவர்கள் யாரும் பெரிதாக அவரை மதிப்பதில்லை. வாசிம்கானுக்கு பிடித்தவர்களில் நானும் ஒருவன் அன்றைய தேதியில். என்னை பொறுத்தவரை அவர் நல்லக்குமார் தான்.

வாசிம்கானுக்கு நிரந்தர வேலை கிடைத்ததா?
விவசாயம் செய்கிறரா? என்னை நினைவில் வைத்திருப்பாரா? 

விடை தெரியாத வினாக்கள்.



கிரிக்கெட் வல்லுனர் பேட்டி

கிரிக்கெட், இந்தியாவை பொறுத்தவரை பலரையும் மயக்கிவிட்ட ஒரு விளையாட்டு.

கிரிக்கெட்டை மேற்கோள் காட்டி கம்பெனி மீட்டிங்களில் பேசப்படுகிறது. மேலாண்மை பாடத்திட்டத்தில் உதாரணமாக சொல்லப்படுகிறது.

கிரிக்கெட்டை நீண்ட காலமாக நேசிக்கும் திரு. ராமசந்திரன் அவர்களின் பேட்டி யூடிபில் வந்துள்ளது. எனது வேண்டுகோளுக்கு இணங்க எனது கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளார்.

திரு. ராம் கிரிக்கெட் ரசிகர், கிரிக்கெட் வீரர், இணைய பண்பலையில் வர்ணனையாளர், எல்லாத்துக்கும் மேல் நண்பர். நான் கேட்டதும் எல்லா கேள்விகளுக்கும் உடனே டைப் செய்து பதில் அளித்துள்ளார். நன்றி.

 கேள்வி: கிரிக்கெட் உங்களை ஆட்கொள்ள தொடங்கியது எந்த ஆண்டில் ?

பதில்: 1997-1998 டாக்காவில் 12 பந்துக்கு 11 ரன் ஹிரிஷிகேஷ் கனித்கர் அடிப்பாரே (அடிப்பாரே என்ற சொல்லாடல் தவறு, ஆனால் கிரிக்கெட் ஆட்கொண்ட விதம் அப்படி, அடித்தாரே என்பதே சரியான சொல்லாடல். இது தான் காட்சி என நடித்து காட்டப்பட்ட சினிமாக்களுக்கு அடிப்பாரே அது சரியான சொல், ஆனால் நேரடியாக ஒளிபரப்பில் தொலைகாட்சியில் பார்த்தாலும் அது ஒரு கடந்த கால நிகழ்வு) அப்பொழுது இருந்து கிரிக்கெட் என்னை முழுதாய் ஆட்கொண்டு விட்டது...

1995 ல இருந்தே சாலை, கொல்லை, மைதானம், வகுப்பறை, மொட்டை மாடி என கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டேன்...

கேள்வி: நீங்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் டெஸ்ட் உலக கோப்பை சாத்தியம் என நினைத்தீர்களா?

பதில்: இப்பவுமே அது சாத்தியமில்லை தான்.... உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் என்று தானே சொல்கிறார்கள்.... 

கேள்வி: நீங்க பார்த்ததில் மனதுக்கு நெருக்கமான போட்டி எது? ஏன்?

பதில்: இந்தியா- ஆஸ்திரேலியா ஈடன் கார்டன் டெஸ்ட்....

அந்த மேட்ச் இப்பவும் ஒரு வாழ்க்கை பாடம் மாதிரி எனக்கு ❤️

கேள்வி: நீங்க பார்க்க முடியாமல் போய் தேடி தேடி ஹைலைட்ஸ் பார்த்த போட்டி எது? எதனால் ?

பதில்: 2002 NatWest தொடர் இறுதி போட்டி... Lords இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி. (கங்குலி சட்டையை கழற்றி சுற்றிய அதே போட்டி)

கேள்வி: இந்திய கிரிக்கெட்டில் எதை இன்னும் மேம்படுத்த வேண்டும்/சரி செய்ய வேண்டும்? (மும்பை லாபி தவிர்த்து)

பதில்: டெஸ்ட் ஆட்டத்துக்கான வீரர்களை அதிகம் உருவாக்க வேண்டும்.... இப்பொழுது இருப்பது போலவே பந்துவீச்சை வலிமையா பார்த்துக்கொண்டு இளம் வீரர்களை உருவாக்க வேண்டும்.... நல்ல சுழற்பந்து வீச்சாளர் தேவை அஸ்வினுக்கு அடுத்து யாரும் தெரியவில்லை. 

கேள்வி: உள்ளூர் போட்டிகள் / மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இவைகளிலும் உங்களுக்கு விருப்பம் உண்டா?

பதில்: இரஞ்சி போட்டிகளை உற்று கவனிப்பேன் நிறைய வியப்புகள் அரங்கேறும்... சையது முஸ்தாக் அலி கோப்பை இது மாதிரி அப்புறம் சமீபத்தில் TNPL கூட பார்க்கிறேன்...

கேள்வி: நவீன கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பது போல உள்ளதா?

ஆமாம் வியாபார நோக்கிற்காக அது போல் மாற்றப்பட்டுள்ளது. 

கேள்வி: இந்த டெஸ்ட் உலகக்கோப்பை சரியான முறையில் உள்ளதா? இந்தியா - பாகிஸ்தான் ஒருமுறை கூட மோதவில்லை?

பதில்: கண்டிப்பா சரியா இல்லை.... எதிர்வரும் காலங்களில் அதை சரி செய்யலாம் சமமான வாய்ப்புகளாக அமைக்க வேண்டும்....

கேள்வி: பேன்டசி லீக் விளையாட்டுகள் கிரிக்கெட்டை அழிவு பாதையில் கொண்டு செல்கிறதா?

பதில்: கிரிக்கெட்டை பாதிக்கிறதானு தெரியவில்லை ஆனால் மக்களை பாதிக்கிறது....

கேள்வி: இந்திய உள்ளூர் போட்டிகளின் (ஐபிஎல் தவிர்த்து) தரம் பற்றி

பதில்: இங்கிலாந்துக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் இந்திய கட்டமைப்பு தரமாக உள்ளது... குறிப்பாக இளம் வயதில் வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்... இலங்கை உள்ளூர் போட்டிகளில் அது நடக்காததாலே இன்று அணி வலுவற்று போய் உள்ளது..

கேள்வி: வருங்காலத்தில் தலா ஒரு இன்னிங்ஸ் மட்டும் வைத்து டெஸ்ட் போட்டி வர வாய்ப்புள்ளதா? வந்தால் ஆரோக்கியமானதா?

பதில்: வர வாய்ப்பு இல்லை... வந்தால் ஆபத்து தான்......

கேள்வி: வெளிநாட்டு வீரர்களில் உங்களை கவர்ந்த வீரர்?

பதில்: காலிஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் அடிப்படையில் அவரை பிடிக்கும்.... அதுக்கு பிறகு கிரிக்கெட்டை பகை கோவம் இல்லாமல் இரசிக்க வைத்த மெக்கல்லம், வார்னர் பிடிக்கும்...

கேள்வி: வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் சிறப்பான அணி எது?

பதில்: ஆப்கானிஸ்தான் நிறைய திறமையான இளம் வீரர்களை உருவாக்கிட்டாங்க. அணியா இணைந்து நல்லா செயல்பட்டால் விரைவில் பெரிய வெற்றி கிடைக்கும்... இதை தாண்டி நேபாள நாட்டின் கிரிக்கெட் ஆர்வம் ஒரு பிரம்மிப்பு. 

கேள்வி: கங்குலி, தோனி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்கள். இதில் யாருடைய அணுகுமுறை சிறப்பானது?

நான் ஒப்பீடை ஒரு போதும் விரும்ப மாட்டேன். இருவரும் அவங்களுக்குனு ஒரு தனிப்பட்ட அணுகுமுறையில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்றார்கள். 

கேள்வி: ஐபிஎல் ஆரம்பித்த பின் இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெல்லவில்லை. இது பற்றி

பதில்: இதுக்கு ஐபிஎல் காரணமில்லை.... இந்தியா இனி இருபது ஓவர் உலககோப்பை வென்றாலும் அதற்கு ஐபிஎல் காரணமில்லை...

கேள்வி: தற்போதைய இந்திய அணியில் பகுதி நேர பந்து வீச்சாளர்களே இல்லை. இது சோம்பேறித்தனம் தானே

பதில்: Work load ஐ குறைக்கிறாங்க ஆனால் இது சரியான முடிவு இல்லை.... சச்சின் சேவாக் ரெய்னானு பந்துவீச்சுல பெரிய பங்காற்றிய பேட்ஸ்மேன்ஸ் இருந்த அணி இப்ப கண்டிப்பா மிஸ் பண்றாங்க அதை...

கேள்வி: சிறிய மைதானங்கள், ரேங்க் டர்னர், ப்ளாட் பிட்ச் கிரிக்கெட்டை சீரழிக்கிறதா ?

பதில்: இல்லை அது ஒரு சவால் தானே...

அதுலயும் ஒரு அணி வெற்றி பெறத் தானே செய்கிறது... அது இல்லைனா சுவாரஸ்யம் குறைந்துவிடும்.



நன்றி வணக்கம்