Friday 31 December 2021

ஆதித் சூர்யா அகவை தினம்

எங்கள் அடுத்த

தலைமுறையின் ஆதி நீ !

ஓவியங்கள் பல தீட்டும்

ஓய்வறியா சூரியன் நீ ! 

இல்லத்தில் இன்பத்தை 

விதைக்கும் இனியவன் நீ !

பத்தாம் அகவையில் 

அடியெடுத்து வைக்கும் 

பாலகன் நீ ! 

தோள் வரை வளர்ந்துவிட்ட 

பிரியமான பிள்ளை நீ ! 

வருட துவக்கத்தில் பிறந்த  நீ

வளர்பிறை போல் 

வளர்ந்து வெற்றிகளை 

குவிக்க வாழ்த்துக்கள் !!!


Sunday 26 December 2021

தமிழர்கள்

பணத்தாள்களில் இடம்பெற்ற தமிழர்கள்

புகழ்பெற்ற மனிதர்களை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிடுவார்கள். பெரிய புகழை சேர்ந்தவர்களுக்கு நாணயம் வெளியிடுவார்கள். மாபெரும் புகழ் மிக்கவர்களுக்கு தான் பணத்தாளில் இடம் கிடைக்கும். 

இந்திய பணத்தாளான ரூபாயில் இடம்பெற்ற ஒரே முகம் காந்தி. ஆக தமிழர் யாரும் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு நாடான இலங்கையிலும் தமிழர் முகம் பணத்தாளில் இடம் பெறவில்லை.

பணத்தாளில் இடம் பெற்ற இரு தமிழர்கள் யார்? 

1. ரெங்கநாதன் சீனிவாசன் 

மொரிசியஸ் நாட்டின் அரசியல் தலைவரான இவரது முகம் மொரிசியஸ் நாட்டின் 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது. 
இவரது தந்தை இந்திய தமிழர். தாய் மொரிசியஸ் தமிழர். 


இவர் பிரிட்டிஷ் மொரிசியஸ் (சுதந்திரத்துக்கு முன்) கல்வி அமைச்சராக இருந்தவர். 

2. பி. கோவிந்தசாமி பிள்ளை 

சிங்கப்பூர் நாட்டில் பிஜிபி என்று அறியப்பட்டவர். 1905 ல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்று சீராங்குன் தெருவில் ஒரு கடையில் வேலை பார்த்தவர்.
கடினமான உழைப்பாலும் கடன் வாங்கியும் சொந்த கடை ஆரம்பித்தவர்.

பிஜிபி ஸ்டோர்ஸ் சேலை கடை மிகவும் பிரபலமானது. நவீன சிங்கப்பூரை கட்டமைக்க உதவியவர்களில் ஒருவரான இவரை கௌரவிக்கும் விதமாக சிங்கப்பூர் அரசு 200 ஆம் ஆண்டு நினைவாக வெளியிட்ட சிறப்பு பணத்தாளில் இவரது படத்தை வைத்துள்ளது.



Saturday 25 December 2021

சரக்கொன்றை

1

கத்தரித் தோட்டத்தில்

புழு வந்ததென்று

வாங்கி வந்தான் மருந்தை 

கடன்காரன் வார்த்தைகள் 

ஜீரணிக்க முடிக்காமல்

மருந்தை உள்வாங்கி 

நுரையை வெளிதள்ளி 

கொண்டான் 

நலிந்த விவசாயி !!!


முதல் வாரம் பள்ளி 

சென்றுவிட்டு 

என்னை உட்கார வைத்து

பாடம் நடத்தினாள் 

என்னை சுற்றி எத்தனையோ 

சிறார்கள் இருப்பதாக 

கற்பனை செய்து 

கொண்டாலும் என்னை 

மட்டும் அடிக்கும் 

மோசமான டீச்சர் 

என் மகள் !!! 


3

கண்ணாடி அறையில் 

மாட்டிக் கொண்ட 

பட்டாம்பூச்சி போல் 

இருக்கும் அலுவலக சூழலை 

மறக்க செய்வது

வீடு சேர்ந்ததும் நீ தரும் 

ஒற்றை புன்னகையும் 

ஒரு கோப்பை தேனீரும் !


4

பழைய டைரியை 

புரட்டிய போது 

கரிந்து கிடந்த 

ரோஜாப்பூ சொல்கிறது 

பசுமையான 

பழைய காதலை ! 


தரிசு நிலத்தில்

வளர்ந்து நிற்கும் மரம் 

நெடுஞ்சாலையில் கடக்கும் 

பெயர் தெரியாத ஊர் 

காட்டில் பூத்து கிடக்கும் 

வாசமில்லா பூ 

ஆற்றுக்குள் நனையாமல் 

இருக்கும் பாறை

ஊரடங்கில் உணரப்பட்ட 

தனிமை !


6

இரண்டு தவணை

தடுப்பூசி 

முகக்கவசம் 

கிருமி நாசினி 

எதனாலும் அழிக்க 

முடியவில்லை 

கொரோனாவால் இறந்துவிட்ட 

நண்பனின் நினைவுகளை ! 


அடை மழையால் 

உயர்ந்து விட்ட 

காய்கறி விலையை 

குறைக்க மனம் 

வரவில்லை வியாபாரிக்கு

விவசாயி அலைந்தான் 

கடன் வாங்கி 

மீண்டும் நடுவதற்கு ! 


8

ரோஜா காதலிக்கு 

மல்லிகை மனைவிக்கு 

சாமந்தி சாமிக்கு 

செவ்வரளி நெடுஞ்சாலைக்கு 

எனக்கு தலைப்பு 

தந்தது சரக்கொன்றை !









Wednesday 22 December 2021

மார்கழிபனி பார்வையில் 2021

உருமாறியதில் தொடங்கியது
ஆண்டு.

தடுப்பூசி சுயமிக்கள்
கட்டுபாடுகளற்ற பிரசாரங்கள்
கட்டுபாடுகளுடன் பணியிடங்கள் !

ஹாபா டெஸ்ட் வெற்றி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி
ஐபிஎல் வெற்றி 
பட்டேல் பத்து விக்கெட் !

ஆட்சி மாற்றம்
அடை மழை !

முக கவசமில்லா முகங்கள்
மீண்டு வந்த திரைப்பட துறை
மீளா கடனில் மக்கள் !

பல ஆண்டுகளுக்கு பின்
படையப்பா
பள்ளிகளில் பாலியல்
தொல்லை !

100 கோடி தடுப்பூசி
ஒமிக்ரான் படையெடுப்பு!

பால் விலை குறைப்பு
அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம்!

வைகை புயல் மீண்டும் திரையில்
சின்ன கலைவாணர் இறைவனடியில் !

பெண்களுக்கு இலவச பேருந்து 
மகளிருக்கு மதுபான கூடம் !

மீதியிருக்கும் நாட்கள்
என்ன நடக்க போகிறதோ !!!

Thursday 16 December 2021

மகளதிகாரம்

மார்கழி மாதத்திரவில்
மருத்துவர் என் கையில்
மகளை தந்தது
நேற்று போல உள்ளது.
நான்காண்டு கடந்து விட்டது !
மகளதிகாரத்திற்கு
அகவை நாலாக போகிறது !
சுவரெங்கும் அவள்
தூரிகை வண்ணங்கள் !
அலைபேசி முழுக்க
அவள் புகைப்படங்கள் !
அப்பா என்று என்னை
அழைக்கும் அழகிய
கவிதை அவள் ! 
ஏதேதோ பேசுவாள்
திட்டுவாள், கடிப்பாள் 
எல்லாமே என் மனதை
ஈர்க்கும் குறும்படங்கள் !


Friday 10 December 2021

உடன்பிறப்பின் திருமண நாள்

 அவள் : காட்டு வேலையில் 

கரை கண்டவள்.

அவர் : போல்ட்டு வேலைகளை 

புரட்டி எடுப்பவர்.

அவள் : அதிகம் படிக்கவில்லை 

கைத்தொழில் தெரிந்தவள்.

அவர் : அதிகம் படிக்கவில்லை

தொழில்நுட்பம் தெரிந்தவர்.

அவள் : மானூரை தாண்டியதில்லை 

அதிகபட்சம் பாளையங்கோட்டையை பார்த்தவள் 

அவர் : பல ஊர்களில் பணி செய்தவர் 

ஐந்தாறு வெளிநாடு சென்றவர்.

அவள் : பேசிக்கொண்டே இருப்பவள் 

அவர் : அதிகம் பேசாதவர்.

அவள் : நெல்லும் காய்கறியும் விளையும் 

நஞ்சையில் பிறந்தவள்.

அவர் : எள்ளும் உளுந்தும் விளையும் 

புஞ்சையில் பிறந்தவர்.

அவள் : வீட்டின் இரண்டாவது 

பெண் குழந்தை.

அவர் : வீட்டின் இரண்டாவது 

ஆண் குழந்தை.

இவர்களை இணைத்தது இறைவன் அருள்!

இவர்கள் திருமணம் நடந்தது 2005 ஆண்டு

இந்த தம்பதி வாழ வேண்டும் நூறாண்டு