Tuesday 28 February 2023

கிரிக்கெட் 10

கிரிக்கெட் நினைவுகள்னு 9 பதிவுகள் போட்டேன். அதிகம் வெளியே தெரியாத சின்ன அணி வீரர்கள் பற்றி பதிவிடலாம்னு இந்த முயற்சி.

அந்த வகையில் ஹாங்காங் அணியின் இஷான் கான். 38 வயதான இஷான் கான் 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2016 ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். ஒருநாள் போட்டிகளில் முதல் பந்திலே விக்கெட் எடுத்து சாதனை படைத்தவர்.



2018ல் ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் எடுத்து ஹாங்காங் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அது தான் ஹாங்காங் அணி பெரிய அணியுடன்(முழு நேர ஐசிசி அணி) பெற்ற முதல் வெற்றி. அந்த போட்டியில் ஆட்டநாயகன் இஷானே.

ஐசிசியின் ரைஸிங் ஸ்டார் விருதையும் பெற்றார்.

அதே 2018ல் ஆசிய கோப்பையில் இந்திய அணியுடனான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதில் ஒன்று தோனியின் டக் அவுட். அந்த போட்டியில் ஹாங்காங் அணி தோற்றாலும் இந்திய அணியை மிரட்டியது.

டி20 போட்டியில் இருமுறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். இவரின் சிறப்பு ஆப் ஸ்பின்னராக இருந்தாலும் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார்.

ஹாங்காங்கில் கிரிக்கெட்டுக்கு சிறிதளவே இடமே இருந்தாலும் அதில் தனித்துவம் காட்டுபவர் இஷான் கான்.

Friday 10 February 2023

ஏலே

தமிழ் சினிமாவில் திருநெல்வேலி காரர்கள் (தூத்துக்குடிகாரர்களும்) என காட்ட வார்த்தைக்கு வார்த்தை ஏலே என்று அழைக்கும் காட்சிகள் இருக்கும். குறிப்பாக இயக்குநர் ஹரி படங்களில்.

பொதுவாக திருநெல்வேலிகாரர்களின் ஏலே பற்றி பார்ப்போம். (எனக்கு தெரிந்த வரையில்). ஏலே என்று அழைப்பது அதிகாரத்தின் குரலாக இருக்கும். நான் உன்னை விட உயர்ந்தவன் என்ற தொனி. பள்ளிகளில் ஏலே என்று அழைத்தால் பதிலுக்கு என்னலே என்று வரும். நானும் உனக்கு நிகரானவன் என்று.

ஏலே உரிமையின் வெளிப்பாடாகவும் இருக்கும். அப்பா மகனை ஏல இங்க வால என்று அழைப்பது. சொக்காரர்கள் (பங்காளிகள்) மகன்களை ஏலே என்று அழைப்பது உரிமையின் வெளிப்பாடு. நண்பர்களே ஏலே என்று அழைப்பதும் உரிமை தான். ஏலே சுருங்கி ஏல் என்றால் அதிகாரத்தின் வெளிப்பாடு.

அப்பா மகள்களை ஏலே என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு. மனைவியை ஏளா என்று வேறு வகை.