Monday 28 December 2020

கிரிக்கெட்

 நான் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பில்.

பெரியப்பா வீட்டில் கனிட்கர் வெற்றிக்கான ரன்னை அடித்த அந்த போட்டியை பரபரப்பாக பார்த்து கொண்டிருந்தனர். நானும் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தேன்.

அடுத்த போட்டியில் எனக்கு தெரிந்த ரெண்டு வீரர்கள் சச்சின், கங்குலி முதலில் களமிறங்கியது ஆச்சர்யமூட்டியது. அதற்கு பிறகே கிரிக்கெட் பிடிபட தொடங்கியது.

டெஸ்ட் கிரிக்கெட் பிடிபட சில ஆண்டுகள் ஆனது. 1999ம் ஆண்டு உலகக் கோப்பை ஆர்வமாய் பார்த்தேன்.

சச்சின் இல்லாமல் ஜிம்பாப்வே உடனான போட்டியில் தோற்ற போது மனது கனத்தது.

12ம் வகுப்பு தேர்வின் போது நடந்த 2003 உலக கோப்பை, விடுதியில் எப்போதாவது பார்க்க முடிந்தது. காலையில் எப்படியாவது தினத்தந்தி பேப்பர் வாங்கி கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து விடுவோம்.

நான் பார்க்காமல் இருந்தால் இந்தியா நல்லா விளையாடும் என்று தோன்றவே இறுதி போட்டியில் சச்சின் அவுட் ஆனதும் ரூமுக்குள் அடைந்து கொண்டேன்.

ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியது.

கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டி என்றால் விடுதி அருகில் இருக்கும் தாத்தா கடையில் தஞ்சம் ஆவோம். ஒரு டீயை குடித்து விட்டு முழு போட்டியும் பார்ப்போம். தாத்தா முறைப்பது போல் இருந்தால் யாராவது ஒருத்தர் ஒரு முறுக்கு வாங்கி கொள்வது வழக்கம்.

இர்பான் பதான் ஹாட்ரிக் அங்கு தான் பாரத்தோம். 

2007 உலக கோப்பை போட்டிகள் இரவில் ஆரம்பித்து நள்ளிரவில் முடிந்ததால்  சற்றே சிரமம். பங்களாதேஷ் உடனான போட்டி தூத்துக்குடியில் நண்பன் கார்த்தி வீட்டில் பார்த்தேன். அவன் தூங்கிவிட்டான். கம்பெனி குடுத்த அவங்க அப்பாவும் தூங்கி விட்டார்.

பெர்முடாவுடான போட்டி வீட்டில் இருந்தேன். இலங்கையுடனான போட்டிக்கு வகுப்பு தோழனான வெஸ்லி வீட்டில் போய் பார்த்தேன்.

சென்னைக்கு வந்த பின் எனக்கு கிரிக்கெட் ஸ்சோர்ஸ், கேம்பஸில் செலக்ட் ஆகி வீட்டில் இருந்த கணபதி.

T20 உலக கோப்பை முதல் போட்டி அன்று ஊரில் இருந்து சென்னைக்கு வந்திருந்தேன். செல்வகுமார் கண்ணில் சிக்கினான். அவன் அண்ணன் ரூமில் கிரிக்கெட் பார்க்க ஏற்படானது. அன்று தான் முதல் முறையாக கிரிக்கெட் பார்க்க வேலைக்கு லீவு போட்டது. பலரும் சேர்ந்து பார்த்தோம் அந்த பவுல் அவுட் போட்டியை.

இறுதி போட்டி அன்றும் கணபதி மேசேஜ் அனுப்பி கொண்டிருந்தான். கடைசி ஓவர் சமயத்தில் தரமணியில் இருந்து பேருந்தில் ஏறி இருந்தேன். சிக்ஸ் அடித்த மெசேஜ் வந்தது. பேருந்தில் அவுட் என்று ஒருவர் கத்தினார்‌. மிஸ்பா அவுட் என மெசேஜ் வந்ததும் நானும் கத்தினேன் இந்தியா ஜெயிச்சிட்டு என்று.

சித்தாரில் வேலை செய்யும் போது ஆபிஸ் பாய் பலாய் தான் தகவல் தொடர்பு. அப்புறம் மாற்று திறனாளி ஆபிஸ் பாய் சைகையிலே ஸ்கோர் சொல்வார்.


உலகக்கோப்பை 2011 சைதை மேன்சனில் கோலாகல கொண்டாட்டமாய் பார்த்தோம். குறைந்தது பத்து பேர் பார்ப்போம். டிவி உபயம் அருண்.


வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்புக்கு செல்லவே பார்க்க பிடிக்காமல் சைதை ராஜ்ல் நாடோடி மன்னன் பார்க்க போனோம். பாதிக்கு மேல் பார்க்க முடியாமல் திரும்பி வந்தால் இந்தியா வென்றுவிட்டது.

இரவு உணவை மறந்து இறுதி போட்டியை ரசித்தோம். கொண்டாட்டம் முடிய நல்லிரவானதால் உணவுக்காக நெடும் நேரம் காத்திருக்க வேண்டி ஆனது. சுவையாய் இருந்தது அந்த கல் தோசை.

2015 அரை இறுதி போட்டி அலுவலக டிவியில் ஓடியது. பார்க்க சுதந்திரமும் வழங்கப்பட்டது, பரிதாபமாக முடிந்தது சோகம்.

2019 அரை இறுதி, தலைவனின் ரன்அவுட் மாபெரும் சோகத்தை தந்தது. தலைவனின் கடைசி போட்டி என்பது இன்னும் சோகம்.

இன்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் பார்க்க ஆவலுக்கு காரணம் சச்சின், கங்குலி மற்றும் தோனி விதைத்த விதை.





Wednesday 23 December 2020

கிறிஸ்துமஸ்

சொந்தகாரர்கள் அக்கம்பக்கத்தில் அமைந்து விட, நாலு தெரு 40 வீடுகள் கொண்ட கிராமத்தில் பிறந்தவனுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆறாம் வகுப்புக்கு நகருக்கு வந்தபின் தான் அப்படி பண்டிகை இருப்பதும் அதை மக்கள் கொண்டாடுவதும் தெரியவந்தது. ஏனென்றால் கிறிஸ்துமஸ் விடுமுறை அரையாண்டு விடுமுறை நடுவிலே வந்து விடுவதும் காரணம்.

டிசம்பர் மாதம் தொடங்கி விட்டால் பாளையங்கோட்டை நகரெங்கும் கடைகளில் ஸ்டார் தொங்கும். வீடுகளில் விடிய விடிய ஸ்டார் ஒளிரும்.

பத்தாம் வகுப்பில் விடுதிக்கு சென்ற பின் குடில் அமைக்கிறார்கள், அதை அலங்கரிக்கிறார்கள் என்பது தெரியும்.

டிசம்பர் துவங்கினாலே ஊருக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோசம் வந்துவிடும். விடுதியில் அடிக்கடி "பெத்தலையில் பிறந்தவரை" பாடல் பாடுவார்கள்.

கல்லூரி காலத்தில் நண்பர் ஜெபவீர சிங் ஊரான கீழப்பத்தைக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்றிருந்தேன். களக்காடுக்கு அருகில் இருக்கும் கிராமம் அது.

நள்ளிரவு பண்ணிரெண்டு மணிக்கு தேவாலயம் சென்றிருந்தேன். 

முகத்தில் எந்த தூக்க கலக்கமும் இல்லாமல் அத்தனை மனிதர்கள் ஒரே இடத்தில் கொண்டாடுவது எங்க ஊர் திருவிழா போல் இருந்தது. சர்ச்க்குள் விருப்பமில்லாமல் பலமுறை சென்றிருக்கிறேன்.விரும்பி சென்ற அந்த பனி இரவு அழகாய் இருந்தது.

சென்னைக்கு வந்த பின், சைட் இஞ்சினியர் பணியில் மறுநாள் விடுமுறை என்றால் நள்ளிரவு வரை வேலை தொடரும். அப்படி ஒரு கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவில் எங்கள் சைட்க்கு பைப் கொண்டு வந்து இறக்கினார்கள்‌. நகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் அனுமதி இல்லாததால்  இரவு பதினோரு மணிக்கு தான் வந்தார்கள். பைப் இறக்கி முடிக்க 2 மணியாகிவிட்டது.

டீக்காசு வேண்டும் என்று என்னிடம் இருந்த 300 ரூபாயில் 150 ரூபாயை வாங்கி கொண்டார்கள். நான் ரூம்க்கு போக 150 ரூபாய் பத்தாது என்றேன். அவர்களே ஆட்டோ பிடித்து தருவதாய் என்னை லாரியில் ஏற்றி கொண்டார்கள். 

லாரி எழும்பூர் குழந்தைகள் மருந்துவமனையை கடக்கும் போது ஒருவர் மருத்துவமனையை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். நான் அவரை பார்த்தேன்.

இங்கதான் சார் பல உயிர்கள் ஜணிக்குது அப்போ இது கோவில் தானே என்றார்.

நான் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன். 150 ரூபாய்க்கு ஆட்டோ கிடைத்தது. அன்று கிறிஸ்துமஸ் தினம்.

Tuesday 22 December 2020

2020

 சக மனிதனை பார்த்து

புன்னகைக்க கூட நேரமில்லா

நகர வாழ்க்கையில்

சகலரையும் பார்த்து சந்தேகப்பட

வைத்தது இக்கொடிய நோய்!

வீட்டினுள் பணி செய்யும்

யுக்தியை அறிமுகம் செய்தது!

முடி வெட்ட முடியாமல்

காடாய் வளர்ந்த முடி

இருந்தாலும்

முள்ளு முள்ளாய் இருந்த

தாடியை மறைத்து கொள்ள

முகக்கவசம் உதவியது!

காய்கறி விலை உயர்ந்ததால்

இல்லங்களில் கருவாடு

மணந்தது!

மனித நடமாட்டம் இல்லாமல்

மாசற்ற காற்றை

சுவாசித்தன தெருநாய்கள்!

வீட்டிற்குள் அடைபட்டிருந்த

நாள்கள் பழைய விளையாட்டுகளையும்

புதிய அனுபவங்களையும் தந்தது!

தடை தகர்ந்த பின் 

வெளியே சென்றாலும்

வீடு திரும்பும் போது

வினையை இழுத்து

வந்துவிடக்கூடாது என

மனம் பதறியது!

எல்லாரையும் சமமாக

முடங்க வைத்த இறைவன்

வறுமையை தாறுமாறாய்

பகிர்ந்தளித்தான்!

சிறு குடலுக்கு எட்டிய உணவு 

பெருங்குடலுக்கு கிடைக்கவில்லை

பலருக்கு!

யாரோ செய்த தவறுக்கு

ஆண்டின் மீது பழியை

போட்டு நகர்வோம்

அடுத்த ஆண்டுக்கு.

வடுவாய் இருக்கும்

2020!!!


Wednesday 16 December 2020

சுந்தர் ஜெகன்

 கல்லூரி நண்பர்களில் சுந்தர் ஜெகன் மறக்க முடியாத ஆள். இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருப்பதால் எல்லாருக்கும் பிடிக்கும்.

என்னிடம் முதன் முதலாக பேசிய வார்த்தை "பார்ட்டிகாரனுக்கு எந்த ஊர்". கல்லூரி முதல் நாள் அன்றே பேசினோம். அவனோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தது அந்த நாளில்.

எல்லோரிடமும் பேசி பழக கூடிய ஆள் ஜெகன். அவனை பிடிக்காதவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். அவனுக்கு பிடிக்காத ஒரே நபர் அவனது அறை தோழன் தீபன் மட்டுமே.

எங்கள் கல்லூரி விடுதியில் எல்லார் வாயிலும் ஒரு பாடலை முனுமுனுக்க வைக்கும் திறமை ஜெகனுக்கு உண்டு. ஒரு பாடல் அவனுக்கு பிடித்துவிட்டால் வரிகள் தெரியுதோ இல்லையோ, திரும்ப திரும்ப பாடுவான்.

கல்லூரியில் சேர்ந்த புதிதில் முதன்முதலாக அவன் பாடிய பாட்டு உயிரின் உயிரே...

வாழமீனுக்கும் பாடலில் எல்லாருக்கும் மாளவிகா பிடிக்கும் என்றால் அவனுக்கு மட்டும் காதல் தண்டபாணியை பிடிக்கும் (தலைவரு திமிங்கிலம் தானுங்கோ).

காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துர பாடலை நான் கேட்பதற்கு முன்பாகவே பல வரிகள் எனக்கு தெரியும். உபயம் - ஜெகன்.

கடைசியாக ஜெகனை சைதாப்பேட்டை மேனசனில் சந்தித்தேன். வட இந்தியாவில் இருந்து வந்திருந்தான். அன்று அவன் முனுமுனுத்தது "ராஞ்சோ ராஞ்சோ" காட்டு சிறுக்கியின் இந்தி வடிவம்.

ஜெகன் கில்லி விளையாடியதால் விடுதியை விட்டு வெளியேறினான். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சரி செய்தான்.

ஜெகனின் மொழி வழக்கு இமான் அண்ணாச்சி போல இருக்கும். இமான் அண்ணாச்சி ஊருக்கு பக்கத்து ஊரான ஆத்தூர் தான் ஜெகனுக்கு.

ஜெகன் கதை சொல்வதில் நேர்த்தியானவன். ஒருமுறை நள்ளிரவில் பேய் கதை சொன்னான். 

பனை மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் பேய் இருக்கும் என்பார்கள் என்று ஆரம்பித்து ஹஸ்கி வாய்ஸில் சொல்ல ஆரம்பித்தான்.

ஒருநாள் சாத்தான் குளம் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு குழந்தையுடன் வந்து இறங்கினாள் ஒரு பெண். அவளது கிராமத்துக்கு செல்ல பஸ் கிடைக்காததால் ஆட்டோவில் சென்றாள்.

ஆட்டோ சாத்தான் குள டவுன் பகுதியை தாண்டி பனை மர காட்டுக்குள் பயணித்தது. அப்போது அந்த பெண் கேட்டாள் அண்ணே இந்த பக்கத்துல பேய் இருக்குனு யாரும் 9 மணிக்கு மேல ஆட்டோ ஓட்டுறது இல்லையாமே என்றாள்.

ஆமாமா பயந்தாங்கொள்ளி பசங்க நான் அப்படி கிடையாது என்றார் ஆட்டோகாரர்.

குழந்தையோட செத்து போன ஒரு பொம்பளை ஆவியா அலையுறதா சொல்றாங்களே அண்ணன். 

அதெல்லாம் பொய்மா நீ பயப்படமா வா என்றார் ஆட்டோகாரர்.

நீங்க நம்பலையா அண்ணன் என்றாள்.

எனக்கு அதில நம்பிக்கை இல்ல இருந்தா இப்படி சவாரி வருவனா என்றார் ஆட்டோகாரர்.

"நான் தான்டா அந்த பேய்" என்று கத்தி சொன்னான் ஜெகன். எல்லாரும் பதறிவிட்டோம்.

ஜெகன் எந்த விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அவன் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டுக்கட்டில் கழுத.

தனிமையில் இருந்தால் பலரும் பலசெயல்கள் செய்வார்கள். ஜெகன் தனிமையில் இருந்தால் தலை சீவி கொண்டு இருப்பான்.

எங்கு இருந்தாலும் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி தன் முன் இருப்பதை உறுதி செய்வது ஜெகன் வழக்கம்.

அரியர்ஸ் வைப்பது கெத்து என நினைத்து கொத்தாய் அரியர் வைத்து அதை அசால்டாக கிளியர் செய்து கெத்து காட்டியவன்.

சுந்தர் ஜெகன் என்று பெயரை கேட்டு முகத்தை பார்த்து சுந்தரோ என கிண்டல் செய்த மலையாளி பசங்க நாளடைவில் ஜெகன் கூட நன்றாக பழகினர்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது என நிரூபித்தவன் "சுந்தர் ஜெகன்".


Friday 11 December 2020

தமிழ் - தமிழர்

 திடீரென தமிழ் உணர்வு, ஆளப்போறான் தமிழன் என்று பல வகையான பேச்சுகள், உணர்ச்சி பொங்கல்கள், ஆதி தமிழர் ஆராய்ச்சிகள் என இணையத்தில் பரபரப்பு. அது பற்றிய எனது கருத்துகள் கண்ணோட்டம் இதோ.

ஹிந்தி திணிப்பில் இருந்து வருவோம். இந்தியை பள்ளியில் பாடமாக நடந்த கூடாது. விருப்பம் உள்ளவர்கள் தனியாக படித்து கொள்ளலாம் எனும் போக்கு.

தனியாக இந்தி டியூஷன் சென்று கற்று கொள்ள எத்தனை பேருக்கு வசதி உள்ளது?

நான் தமிழகம் தாண்டி வெளியே செல்ல போவதில்லை வெளியே சென்றாலும் ஆங்கிலம் தெரியும் சமாளித்து கொள்வேன். பிறகெதற்கு இந்தி?

தமிழகத்தில் பல்வேறு வேறு துறைகளில் கூலி வேலை பார்ப்பவர்கள் வட இந்தியர்கள். அவர்களை வேலை வாங்க இந்தி அவசியம். இது எனது அனுபவம்.

நான் கட்டிட துறையில் வேலைக்கு சேர்ந்த போது எனக்கு முதலில் வழங்கப்பட்ட பணி, வேலை செய்யும் வடக்கர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி. அந்த அட்டையில் அவர்களது பெயர், அப்பா பெயர், புகைப்படம் ஆகியவை இருக்கும்.

அப்போது தான் நான் அந்த கூட்டத்திடம் மாட்டிக் கொண்டேன். அப்பா பெயர் பாதர் நேம் என்று கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை. மனைவி பெயர் சொல்கிறான், மகன் பெயர் சொல்கிறான் இன்னும் என்னனவோ சொன்னான்.

பத்து நிமிட சுத்தலுக்கு பிறகு பித்தாஜிகா நாம் என்று அப்பா பெயரை சொன்னான். அப்பப்பா.

அவர்கள் சொன்ன வேலையை செய்வார்கள். அதை தாண்டி துளியும் யோசிக்க மாட்டார்கள். ஒருமுறை நண்பர் ஒருவர் செங்கலை அங்கே போய் போடு என்று கூறினார். அங்கே போய் தலையில் இருந்து செங்கலை டம் என்று போட்டுவிட்டனர். 

அவர்கள் தான் குறைந்த சம்பளத்தில் கூலி வேலைக்கு கிடைப்பவர்கள்.

ஆளப்போறான் தமிழன் - தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? இந்தியாவை ஆள வேண்டுமா? சுயநல தமிழனால் இது சாத்தியமா?

மலையாளிகள் எங்கு சந்தித்தாலும் சகஜமாக பேசி ஒட்டி கொள்வார்கள். பெங்களூரில் இரு தமிழர் சந்தித்தால் யூ ஆர் ப்ரம் சென்னை? என்று பேசி கலைவது வாடிக்கை. பெங்களூரு வேண்டாம் சென்னையில் என்னை பார்த்தால் கதவடைத்து கொள்ளும் பக்கத்து வீட்டுக்காரன் தமிழனே.

முல்லை பெரியாறு பிரச்சினை என்றால் கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும். ஆனால் இங்கு இரு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்வது மட்டுமே நடந்துள்ளது. 

தமிழகத்தில் பேருக்கு பின்னால் சாதி பெயர் போட்டு கொள்வதில்லை. சாதி சண்டை மட்டும் போட்டு கொள்வோம். கிராமத்துக்கு வரும் பேருந்தில் கல் வீசினால் நம் சாதியினரும் பயன்படுத்தும் பேருந்து இயங்காது என்ற அறிவு கூட இல்லாமல் எவனோ சொல்வதை கேட்டு இயங்குபவன் தமிழன்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற காரணம் தலைவன் இல்லாத போராட்டம் என்பதால் மட்டுமே.

மூலப்பொருட்களாக மின்சாரம் மட்டும் தேவைப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சென்னயில் வைத்துவிட்டு ஸ்டெர்லைட்டை தூத்துக்குடிக்கு அனுப்பிய சுயநல கூட்டம் தமிழர் கூட்டம்.

சென்னையில் புயல் கடந்தபின் இரு நாட்களில் சரி செய்யப்படும் மின்சாரம், கன்னியாகுமரி என்றால் இருபது நாட்கள் தேவைப்படும். ஏன் கன்னியாகுமரி தமிழகத்தில் இல்லையா?

ஆட்சி மாறும் போது தமிழ் புத்தாண்டு மாறும் அவலம் எவர்க்கு உண்டு. அறுவடை திருநாளே புத்தாண்டாய் இருக்க வாய்ப்பு என்று ஆய்வு செய்யவர்கள். தமிழன் அறுவடை திருநாளை தனியாகவும் புத்தாண்டை தனியாகவும் கொண்டாடி இருக்கலாமே என்று ஆய்வு செய்ய முன்வருவதில்லை.

காரணம் தான் சார்ந்த தன் கட்சி சார்ந்த தன் இயக்கம் சார்ந்த தன் சாதி சார்ந்த சுயநலம் .

தமிழக ஆட்டோகாரர்கள் தமிழர்களிடம் அடாவடியாய் கேட்பார்கள். வட இந்தியர்களிடம் அவர்கள் பாச்சா பலிக்காது. சேட்டுகள் அதிகம் வசிக்கும் சௌகார் பேட்டையில் கை ரிக்ஷாக்களே உள்ளன. ஏனென்றால் சேட்டுகள் கூடுதல் கட்டணம் தரமாட்டார்கள் என்று ஆட்டோகாரர்களுக்கு தெரியும். ஆட்டோ வாங்க கடன் வழங்குவது சேட்டுகளே.

வரிவிலக்கு என்றால் மாஸ் மாசுவாக மாறும். தமிழில் தலைப்பு வைக்க வரிவிலக்கு அவசியம். தன் படத்துக்கு இதுதான் சிறந்த தலைப்பு என்று பிறமொழி சொல்லை தலைப்பாக வைத்து யாரும் வரிகட்ட முன் வரவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும். தாத்தாவின் பெயரை கொண்டவன் என்பதால் பெயரன் என்று இருந்த காலம் மலையேறிவிட்டது.

சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் தவறு. அரபி, ஆங்கிலம், லத்தீன், ஹீப்ரு போன்ற என்ன மொழியில் பெயர் வைத்தாலும் தவறில்லை.

தமிழில் பெயர் சூட்ட ஆர்வமுள்ளவர்கள் எவரும் தமிழ் கடவுள் முருகன் பெயரை பரிசீலிப்பது கூட இல்லை.

ஆரிய திணிப்பு.

ஆரியர்கள் தமிழ் கடவுள் முருகனை சன்முகன் ஆக்கிவிட்டார்கள். இது எப்போது நடந்தது என்றால் மன்னர்களின் காலத்தில். மன்னர்களின காலத்தில் அரண்மனைக்கு வெளியே உள்ள தமிழர்கள் வரலாறு எழுதப்படவே இல்லை. வரலாற்றில் எழுதப்பட்டவை நகரம் சார்ந்த விசயங்கள் மட்டுமே.

இலங்கேஸ்வரன் என்று புகழப்பட்ட ராவணன் தமிழன். ஆனால் திருமாலும் முருகனும் மட்டுமே தமிழ் கடவுள்கள். ஈஸ்வரன் தமிழ் கடவுளல்ல. கடிவாளம் போட்டு ஆயும் ஆய்வு முடிவுகள்.

தமிழனை தூண்டி விட்டு நீ பாதி நான் பாதி என்று கொள்ளை அடிக்கலாம் என திரியும் திராவிட கட்சிகளை அழிக்க முடியாது ஆனால் பயமுறுத்தலாம் ரஜினியை காட்டி. ஆனால் ரஜினி தமிழரல்ல...

எடப்பாடி பச்சை தமிழர் தான். தமிழுணர்வு பொங்கட்டும்.

யார் தமிழர்?

பண்முக தன்மை கொண்ட இந்தியாவில் எல்லா இனங்களும் கலந்து வாழ்கிறார்கள். அவர்களில் யார் தமிழர் தாய் மொழி தமிழாக கொண்டவர்கள் மட்டுமா? கலப்பு திருமணம் தவறா?

கடைசியாக இணையவெளியில் தமிழ் தமிழர் என கருத்து பதிபவர்களில் எத்தனை பேருக்கு 'ழு' 'ஐ''ஒ' இந்த எழுத்துக்களை பிழை இல்லாமல் பேனாவால் எழுதத் தெரியும்?



Wednesday 9 December 2020

தபால்காரர்

 கட்டு கடிதங்களோடு

மிதிவண்டியில் அவர்

வருவதே தனி அழகு!

பொங்கல் முன்போ

பொங்கல் முடிந்தோ

வரும் வாழ்த்து அட்டைகள் தான்

எங்களுக்கான கடிதங்கள்.

தபால் தலை இல்லாமல்

வந்ததற்கு தண்டம் கட்டி

வாங்கி மகிழ்வோம்.

மாடு மேய்க்கும்

மாடசாமி தாத்தா

எனக்கு எதாவது லட்டர்

வந்திருக்கிறதா என 

நகையாடுவார்.

தபால்காரரின் பதில்

புன்னகை மட்டுமே.

மாடசாமி தாத்தாவின்

முதியோர் உதவித்தொகையை

வீடு தேடி கொடுத்து

புன்னகையை பரிசாக

பெற்றார் தபால்காரர்.

துருப்பிடித்து போன

தபால் பெட்டியை

மோட்டார் சைக்கிளில் வரும்

புது தபால்காரர்

தொடுவதில்லை.

அதற்கான சாவி

தொலைந்திருக்கலாம்.

நாங்கள் எங்கள்

பால்யத்தை அதில் தான்

பூட்டி வைத்திருக்கிறோம்!!!