Thursday 22 July 2021

14/100. சித்தப்பா

 ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் 

அவர் என் அப்பாவின் தம்பி !

எனக்கு முதன் முதலாக 

நீந்த சொல்லி தந்தவர் !

எனக்கு முதன் முதலாக

வண்டி ஓட்ட கற்று தந்தவர் !

விடுதியில் சேர செல்கையில்

வேட்டியை மடித்து கட்டி 

ட்ரெங்கு பெட்டியை தோளிலும் 

ஈய வாளியை கையிலும் 

தூக்கி வந்தவர் !

சாலை விபத்தில் 

சாமியாகிவிட்ட சம்சாரி !

எங்களை விட்டு எங்கும் 

போகமாட்டார்,

ஐப்பசி மாச மழையில்லை 

என்றால் வரப்பில் இருந்து

வருத்தப்படுவார் !

கத்திரியில் புழு வந்து விட்டால் 

கவலைப்படுவார் ! 

அதிகம் படிக்காதவர் 

அடுத்த தலைமுறைக்கு 

தலைக்கவசத்தின் அவசியத்தை 

உணர்த்தி சென்றிருக்கிறார் !

எங்கள் ஊர் விலக்கில் 

இனியொரு விபத்து நிகழாமல் 

காவல் தெய்வமாய் 

வீற்றிருப்பார் !!!







மாமா - 70

அகவை 70ல் அடியெடுத்து

வைக்கும் என் தோழன்!

வாழ்வியல் அனுபவங்களை

பகிரும் ஆசான் !

நான் செல்லும் பாதையில்

முன்னே நடந்து 

முட்களை விலக்கி செல்லும் 

முன்னோடி !

எட்டு ஆண்டுகளுக்கு முன் 

எனக்கு கிடைத்த சொந்தம் !

என்றும் தொடரும் பந்தம் !

வாழ்த்த வயதில்லை 

வணங்குகிறேன் !!!







Friday 9 July 2021

13/100. ஓர் இரவு ஓர் காதல்

பேருந்தில் ஏறி அமர்ந்தபோதே 

ஏதோ நடக்க போகிறது என்று 

மனதில் தோன்றியது !

பேருந்து நகரத்தை தாண்டியது 

தூரத்தில் தெரியும் 

வெளிச்சப் புள்ளிகளை 

ரசிக்க துவங்கினேன் !

பேருந்து குலுங்கி நின்றது 

ஓட்டுனர் முயற்சித்து பார்த்தார் 

இனி நகராதென்று நடத்துனர்

நவின்றார் !

மாற்று பேருந்து வராது,

வழியில் வரும் பேருந்தில் 

அனுப்பி வைப்பேன் என்றார் !

எல்லாரும் சாலையில் நின்றோம் 

இருக்கை நிரம்பிய இரு 

பேருந்துகளில் எனக்கு 

ஏற விருப்பமில்லை !

அவளும் என் அருகில் 

நின்று கொண்டிருந்தாள் 

அந்த சூழலை ரம்மியமாக்கி கொண்டு !

பனிவிழ தொடங்கி இருந்தது 

கைகளை குறுக்கே கட்டி இருந்தாள் !

சிறு புன்னகை புரிந்தேன் 

பதில் புன்னகை உதிர்த்தாள் 

என்னுள் காதல் உயிர் கொள்ள 

தொடங்கியது !

மனது தேனீர் வேண்டியது

அவள் அருகிலிருப்பதால் !

ஆறாவது பேருந்தில் ஏறினோம் 

அவளருகில் தான் இருக்கை 

கிடைத்தது !

அரைமணி நேரத்தில் பேருந்து 

நெடுஞ்சாலை உணவகத்தில் 

ஒதுங்கியது !

இருக்கை பார்த்து கொள்ள 

சொல்லி அவளுக்கும் 

தேனீர் வாங்கி வந்தேன் !

முதலில் மறுத்தாலும் 

வாங்கி பருகினாள் !

உள்ளங்கையில் கோப்பையை 

வைத்து தொண்டையில் 

இறங்கிய அந்த தேனீர் 

என்னுள் பட்டாம்பூச்சி 

பறக்க வைத்தது !

பனிக்கு பயந்து சன்னல்கள்

இறுக்க சாத்தபட்டன !

சன்னமாக நுழைந்து 

வந்த பனிகாற்று 

என்னோடு பேசியது !

கண்ணாடி சன்னலில் 

சாயந்து கண்களை மூடி 

தூங்கினாள் அவள் !

நீல நிற வெளிச்சம் கசிந்து 

கொண்டிருந்தது 

அவளை ரசித்து 

கொண்டிருந்தேன் !

பேருந்தின் குலுங்கல்களுக்கு 

இசைவாய் ஆடிக் கொண்டிருந்தது

அவள் கேசம் !

இந்த இரவு நீண்டு கொண்டே

இருக்க வேண்டும் என்று 

நினைத்தேன் !!!














Tuesday 6 July 2021

அகவை 40 - தோனி

பதினைந்து ஆண்டுகள்

நீலநிற ஆடை அணிந்து 

வானளாவிய வெற்றிகளை

பெற்றவன் நீ !

நாங்கள் வெறுத்த மஞ்சள்நிற 

ஆடையை ரசிக்க 

வைத்தவன் நீ !

ராஞ்சி நகரை இந்தியர்களுக்கு 

அறிமுகம் செய்தவன் நீ !

கிரிக்கெட்டை நேசிக்கும் 

எங்களுக்கு மீண்டும் 

ஒரு உலகக் கோப்பை

பெற்று தந்தவன் நீ !

தலைமை பண்பால்

மேலாண்மை பாடத்திட்டத்தில் 

இடம்பெற வேண்டியவன் நீ !

பொறுமைக்கும் அமைதிக்கும் 

பேருதாரணம் நீ !

பத்திரிகையாளரை பக்கத்தில் 

வர சொல்லி ஓய்வு பற்றி

பாடம் நடத்தியவன் நீ !

உனது முதல் ரன்அவுட் 

எனது கண்களுக்கு 

எட்டவில்லை !

கடைசி ரன்அவுட் கண்களை 

குளமாக்கி மனதை 

ரணமாக்கியது !

இனி களத்தில் உன்னை 

காண முடியாது 

என்றும் எங்கள் தலைவன் நீ !

வாழ்க பல்லாண்டு !!!

















தோனி 40

1. தோனி ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விக்கெட் கீப்பராக பணியாற்றவில்லை. பேட்டிங் செய்த பின் காயம் காரணமாக பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை. ( 2013ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டி ).

2. ஸ்டம்பிங் கிங்கான தோனியை ஒருநாள் போட்டிகளில் ஸ்டம்பிங் செய்த இருவர் டூவோன் தாமஸ் - வெஸ்ட் இண்டீஸ் & இக்ரம் அலிகில் - ஆப்கானிஸ்தான்.

3. தோனியின் பந்துவீச்சில் அவுட் ஆன ஒரே வீரர் டவுலின் - மேற்கத்திய தீவுகள்.

4. தோனியை முதல் பந்தில் அவுட் ஆக்கியவர்கள் ஜோய்சா, முரளிதரன், ஹேஸ்டிங்ஸ் மற்றும் ஸாம்பா

5. தனது 5வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்தார்.

6. 2007ம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை கீப்பிங் செய்ய சொல்லி பீல்டிங் செய்தார் தோனி. அந்த போட்டியில் கார்த்திக் 2 ஸ்டம்பிங் செய்தார்.

7. சர்வதேச போட்டிகளில் தோனி ஏழு கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளார். (கங்குலி, டிராவிட், சேவாக், ஜெயவர்த்தனே, கும்ளே, கோலி மற்றும் ரோகித்)

8. கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி ஓவர்களில் கங்குலியை கேப்டனாக்கி அழகு பார்த்தார்.

9. ஆசிய கோப்பையில் ஆப்கானுக்கு எதிராக டாஸ் போட வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. அது தோனி கேப்டனாக பணியாற்றிய 200 வது ஒருநாள் போட்டி.

10. தோனி ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் அடித்துள்ளார்.

11. ஐபிஎல் போட்டிகளில் ஐகான் ப்ளேயர் அல்லாமல் கேப்டனான முதல் இந்தியர்.

12. டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 12 அரைசதங்கள் அடித்துள்ளார்.

13. ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரகானே தலைமையின் கீழ் ஆடியுள்ளார்.

14. 100 ஸ்டம்பிங்கள் செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி.

15. தோனி தலைமையில் இந்திய அணி 24 ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது.

16. தோனி டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 16 ஓவர் வீசியுள்ளார்.

17. தோனி 17 அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

18. தோனி தலைமையில் இந்திய அணி 11 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

19. தோனி ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 19 அரைசதம் அடித்துள்ளார்.

20. தோனி சொந்த ஊரில் ஆறு ஒருநாள் (ஜம்ஷெட்பூர் - 2, ராஞ்சி -4) போட்டிகளும் ஒரு டி20 போட்டியிலும் ஆடியுள்ளார்.

21. தோனி 21 ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

22. தோனி தனது 22 வது ஒருநாள் போட்டியில் 183 ரன்கள் அடித்து உலக சாதனை செய்தார்.

23. தோனி தனது 23ம் வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

24. களத்தில் கூலாக இருக்கும் தோனி, களத்திற்கு வெளியே சென்று கோபப்பட்டு களத்திற்குள் ஆக்ரோஷத்துடன் வந்தது ஒரு ஐபிஎல் போட்டியில்.

25. தோனி ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 25 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

26. தோனி தலைமையில் சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், யுவராஜ், லக்ஸ்மன், ஜாகீர், ஹர்பஜன் போன்ற சீனியர் நட்சத்திர வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

27. ஐபிஎல்ல் தோனி தலைமையில் கீழ் விளையாடிய பின் சர்வதேச கேப்டன் ஆனவர்கள் பெய்லி, ரெய்னா, ப்ராவோ, ஹோல்டர், திசரா பெரீரா, கபுகேதரா, டியூ பிளஸ்ஸிஸ்

28. தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 28.

29. தோனி இதுவரை 29 உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

30. அறிமுக டெஸ்ட் போட்டியில் தோனி அடித்த ரன்கள் 30.

31. தோனி தலைமையில் மூன்று ஐபிஎல் கோப்பைகளையும், ஒரு சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

32. பல வெற்றிகளை குவித்த தோனியின் தலைமையிலான முதல் போட்டி டாஸ் போட்டதோடு முடிந்தது. டாஸில் தோனி வெல்லவில்லை.

33. தோனி 33 உலக கோப்பை டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

34. இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் 34 சிக்ஸர் அடித்துள்ளார்.

35. தோனி ஒருநாள் போட்டிகளில் ஏழு முறை தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

36. 2013 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 36 ரன் மட்டுமே அடித்து ஆட்ட நாயகனாகி அசத்தினார்.

37. தனது முதல் சர்வதேச போட்டியிலும் கடைசி சர்வதேச போட்டியிலும் தோனி ரன் அவுட் ஆனார்.

38.டெஸ்ட் போட்டிகளில் 38 ஸ்டம்பிங் செய்துள்ளார் தோனி.

39. தோனி தனது 39ம் வயதில் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

40. 15 ஆண்டு கால கிரிக்கெட் கேரியரில் 2011 ல் மட்டுமே தோனி பிறந்த நாள் அன்று போட்டி நடந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் எதிராக டெஸ்ட் போட்டி.

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி

 தோனி பற்றிய ஏழு சுவாரஸ்ய தகவல்கள்.

1. தோனி ஒருநாள் போட்டிகளில் ஏழு அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

(பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்கா 11, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து).

2. தோனி ஆடிய ஒருநாள் போட்டிகளில் ஏழு பேர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

(கங்குலி, டிராவிட், சேவாக், ஜெயவர்த்தனே, தோனி, கோலி மற்றும் ரோகித்)

3.தோனி இதுவரை உலக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் ஏழு முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார்.

4. தோனி ஒருநாள் போட்டிகளில் ஏழு பொசிசன்களில் களமிறங்கியுள்ளார். 

(2வது முதல் 8வது வரை)

5. நியூசிலாந்து உடனான ஒருநாள் போட்டிகளில் ஏழு முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக ஏழு அரைசதம் அடித்துள்ளார்.

6. ஒருநாள் போட்டிகளில் ஹாங்காங் மற்றும் ஜிம்பாப்வே உடன் தலா ஏழு டிஸ்மிஸல்கள் (கேட்ச் + ஸ்டம்பிங்) செய்துள்ளார்

7. டெஸ்ட் போட்டிகளில் தோனி ஏழு இன்னிங்ஸில் பவுலிங் செய்துள்ளார்.

தோனியின் அசைக்க முடியாத 7 உலகச் சாதனைகள் 

1. ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த விக்கெட் கீப்பர் 183*

2. ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் (120)

3. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட் பேட்ஸ்மேன் (84)

4. ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்கள் அடித்த ஒரே லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்

5. அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடிய விக்கெட் கீப்பர் கேப்டன்.(200)

6. ஒருநாள் போட்டிகளில் 6வது வீரராக களமிறங்கி அதிக ரன்களை குவித்த வீரர். (4164 ரன்கள்)

7. ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டின் அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்.