Saturday 3 February 2024

திருநெல்வேலி - 1

திருநெல்வேலிகாரர்களுக்கு திரைப்படம் பார்ப்பது உயிரானது. 90களில், ஒரு மத்திய நகரமான திருநெல்வேலியில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததற்கு காரணம் திருநெல்வேலிகாரர்களின் திரைப்பட ஆர்வம் தான்.

கிராமங்களில் இருந்து நெல்லைக்கு வந்து படம் பார்த்து செல்பவர்கள் ஏராளம் உண்டு. ரத்னா தியேட்டரில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எதிரில் இருக்கும் பார்வதி தியேட்டரில் படம் பார்த்து செல்வர்.

பேருந்தை தவற விட்டால் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் பூர்ணகலாவில் படம் பார்த்து வந்து விடுவார்கள். 

அன்றைக்கு திரையரங்க கட்டணம் ₹3 மகளிர் மற்றும் சிறார்களுக்கானது. திரைக்கு முன்னால் இருக்கும் சில வரிசை இருக்கைகள். அதற்கு அடுத்தது ₹6-8, அடுத்தது ₹15. கடைசி இருக்கைகள் ₹20.

பீடி சுற்றும் பெண்கள் தங்கள் தோழிகளுடன் பார்க்க வசதியானது ₹3 கட்டண இருக்கைகள்.

தனியாக படம் பார்ப்பவர்கள் மிக குறைவே. செல்வம் தியேட்டர் வண்ணார்பேட்டை தாண்டி உள்ளது என்று சலித்து கொண்டாலும் அங்கே போய் படம் பார்ப்பார்கள்.

திருநெல்வேலியில் இரண்டு பாக்ஸ் ஏசி தியேட்டர்கள் உண்டு. செல்வம் மற்றும் கலைவாணி. இதில் கலைவாணி ஆபாச படங்கள் திரையிடும் தியேட்டர். பணக்காரர்கள் பாக்ஸ் ஏசியில் செல்வம் தியேட்டரில் பார்ப்பார்கள்.



ஏல ஒடையார்பட்டில ரெண்டு தியேட்டர் கட்டுதான், கீழ ஒண்ணு மேல ஒண்ணு என்று ஊரெல்லாம் பரபரப்பை கிளப்பி உதயமானது தான் ராம், முத்துராம் தியேட்டர்.

பாப்புலர் தியேட்டர், கணேஷ் தியேட்டர் என்று பெயர் மாறினாலும் பெரியவர்கள் பாப்புலர் தியேட்டர் என்றே கூறுவார்கள். முழுக்க ஏசி, பேமிலி தியேட்டர் என அரசு மருத்துவமனை அருகில் தொடங்கப்பட்ட பாம்பே தியேட்டர் தற்போது இயங்கவில்லை.

மாலைமுரசு பேப்பரில் இன்றைய சினிமாவில் நெல்லை தியேட்டர்களுக்கு அடுத்து நாலு தியேட்டர் பெயர்கள் இருக்கும். பாளையங்கோட்டை செந்தில்வேல் மற்றும் அசோக், பேட்டை மீனாட்சி, மேலப்பாளையம் அலங்கார். இந்த தியேட்டர்கள் ஓடிய பழைய படங்களை திரையிடுபவை. அன்றைய தேதியில் நன்றாகவே இயங்கியவை. தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்ட அலங்கார் மற்றும் செந்தில்வேல் தியேட்டர்கள் இயங்குகின்றன.

நெல்லைகாரர்கள் நல்ல படங்களை தவறவிடுவதில்லை. டப்பிங் படமான 'இது தாண்டா போலீஸ்' நெல்லையில் சிறப்பாக ஓடியது.

ஊர்களில் டிவி உள்ளோர் வீடுகளில், பஞ்சாயத்து டிவிகளில் கரண்ட் போய்விடக்கூடாது என்ற வேண்டுதலோடு வெறித்தனமாக பார்ப்பார்கள் ஞாயிறு திரைப்படங்களை. லேட்டாக வருபவர்கள் சிரிப்பு நடிகர் யாரு என்று விசாரித்து தான் உட்காருவார்கள்.

கல்யாணம் மற்றும் சடங்கு என்றால் வசதியானவர்கள் திரைகட்டி படம் போடுவார்கள். மற்றவர்கள் கலர் டிவி டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவார்கள். ஓர் இரவில் நான்கு படங்கள் என்பது தான் கணக்கு. நான்கையும் பார்த்துவிட்டு மறுநாள் சளைக்காமல் பீடி மடக்கும் தாய்மார்கள் ஏராளம்.

கால மாற்றத்தில் கேடிவியில் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் பார்த்தார்கள். இன்றும் யூடியூப்ல் படம் பார்க்கும் மூத்த தலைமுறையினர் ஏராளம். 

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் டிவி வைக்கப்பட்டு திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. மெய் மறந்து படம் பார்க்கும் திருடர்கள் கைவரிசையை காட்டி சென்றதால் அந்த டிவிக்கள் குறுகிய காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.

பராமரிப்பு இன்றி சென்ட்ரல் என்ற பெயர் பலகையே மங்கி உருக்குலைந்து போய் இருக்கும் சென்ட்ரல் தியேட்டர் சொல்லும் உண்மை, திருநெல்வேலிகாரர்களின் வாழ்வியல் முறை மாறிவிட்டது ஆனால் சினிமா ரசனை மாறவில்லை என்பதை.

No comments:

Post a Comment