மார்கழி பனி
Saturday, 8 March 2025
மொழிக் கொள்கை
Sunday, 16 February 2025
6ம் வகுப்பு டி பிரிவு
ஆறாம் வகுப்பிற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால் ஐந்தாம் வகுப்பு வரை நான் எங்கள் கிராமத்து பள்ளிகளில் (மூன்றாம் வகுப்பு வரை - செழியநல்லூர், 4& 5 - கீழப்பிள்ளையார்குளம்) படித்தேன். ஆறாம் வகுப்பிற்கு பாளையங்கோட்டை நகருக்கு வந்தேன். பாளையங்கோட்டை என்பது பள்ளிகளின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிறைய பள்ளிகள் நிறைந்த இடம்.
என்னை சேவியர் பள்ளியில் சேர்ப்பதாக தான் பேச்சு. ஆனால் சேவியர் பள்ளியில் ஏப்ரல் மாதமே சேர்க்கை முடிந்ததால் அடுத்த தேர்வாக ஜான்ஸ் பள்ளி வந்தது. மே 15ம் தேதி டோக்கன் கொடுப்பதாக சொன்னார்கள்.
மே 18ம் தேதி டோக்கன் கொடுத்தார்கள், அதற்குப் பிறகு நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் கணக்கில். ஆங்கிலத் தேர்வில் முதல் கேள்வி வாட் இஸ் யுவர் நேம் - மை நேம் இஸ் பழனி செல்வகுமார் என்று எழுதினேன். அடுத்த கேள்வி வாட் இஸ் யுவர் நேட்டிவ் ப்ளேஸ். - கீழப்பிள்ளையார்குளம் என்று எழுதினேன். அடுத்தடுத்த எட்டு கேள்விகளுக்கும் இதை பதிலை எழுதினேன்.
நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பள்ளியில் நுழைந்தேன். பின்னணியில் மாமாவின் உழைப்பு. அட்மிஷன் முடிந்து விடுதியில் சேர்க்க விடுதியில் வாசல் வரை சென்ற பிறகு அங்கு வார்டன் இல்லை. பெரியம்மா, எங்க வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு போகட்டும் என்று கேட்டாங்க.
எனக்கு ஓர் இரவு முழுக்க யோசிக்க வீட்டில் டைம் கொடுத்தார்கள். நான் நன்றாக தூங்கி விட்டு பெரியம்மா (சற்றே தூரத்து சொந்தம்) வீட்டில் இருந்து போறேன் என்றேன். அதுவே முடிவானது. ஜூன் 3ம் தேதி ஸ்கூல் தொடங்கியது. முதல் நாள் சுரேஷ் அண்ணன் தான் ஸ்கூலில் கொண்டு போய் விட்டாங்க. 6ஆம் டி பிரிவு தான் எனது வகுப்பு. வெஸ்டர்ன் பிளாக்கில் மாடியில் கடைசியாக இருந்த வகுப்பு தான் டி செக்சன்.
நேரம் தவறாமை ரயில்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் என்று கரும்பலகையில் பெரிதாக எழுதி இருந்தார்கள். முதல் நாள் மதியம் வரை தான் பள்ளி இயங்கும் என்று சொல்லி இருந்தார்கள். மதியம் உணவு இடைவேளையின் போது நல்ல மழை, நான் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டேன். மழை தண்ணியில் டிபன் பாக்ஸ் கழுவிவிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன். என்னை கூப்பிட வீட்டை விட்டு கிளம்பிய சுரேஷ் அண்ணனுக்கு நான் வீட்டை கண்டுபிடித்து வந்தது ஆச்சர்யம்.
இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு முதல் வகுப்பு அறிவியல். மலையப்பன் சார் வந்தார். நேத்து மத்தியானமே ஓடியது யார் என்று விசாரித்தார், என் பக்கத்தில் இருந்த பேச்சி முத்து இவன் இவன் என்று என்னை கோர்த்து விட்டான். திட்டினார். பிறகு நான் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்ததற்கு திட்டினார். எனக்கு ஏன்னு தெரியல. பேச்சி முத்து தான் சொன்னான், வாத்தியார் பாடம் நடத்தும் போது தண்ணி குடிப்பது மரியாதை குறைவு என்று.
அதற்குப் பிறகு எங்கள் வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேல் வந்த பிறகு உயர அடிப்படையில் உட்கார வைத்தார். எனக்கு கிரவுண்ட் பக்கம் கடைசிக்கு முந்தைய பெஞ்சில் இடம் கிடைத்தது. எனக்கு பக்கத்தில் பரமசிவனும் சீனிவாசனும். பிரின்ஸ்ம் எங்க பெஞ்ச் தான்.
எங்களுக்கு முந்தைய பெஞ்சில் முதல் ரேங்க் எடுக்கும் அய்யம் பெருமாள் இருந்தான். அபுபக்கர் சித்திக்கும் அதே பெஞ்ச் தான். எங்களுக்கு பின் பெஞ்சில் ஐயன்ராஜ், ராஜேஸ்வரன். எனக்கு பரமசிவனை பார்த்தால் சற்றே பயம், அவன் ஆறாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்ததால். பழக இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. இன்று அவன் உயிரோடு இல்லை என்பது நம்ப முடியவில்லை. நல்ல நண்பன், இளம்வயது மாரடைப்பு.
அதே போல் பாபுவை பார்த்தாலும் பயம். அவன் அதை பயன்படுத்தி என்னை மிரட்டுவான். விடுதி மாணவர்களில் கோமதி நாயகம் வீட்டுக்கு போகனும்னு அழுது கொண்டே இருப்பான். தமிழன் வகுப்பு நடக்கும் போது தூங்கி மாட்டிக் கொள்வான். நாக்கில் முட்டை விட்டு திரியும் செந்தில்நாதன் தூங்குவான், மாட்ட மாட்டான்.
ஜான் எட்வர்ஸ் கீ செயினை டவுசர் லூப்பில் மாட்டி சாவியை டவுசர் பாக்கெட்டில் போட்டிருப்பான். மகாலிங்கம், பால விநாயகம், ஆறுமுக குமார், குமார், மணிகண்டன், ராஜா, ரமேஷ், ஆலன் ஜெபக்குமார் ஆகியோர் நினைவில் நிற்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்.
நான் வராண்டாவில் உட்கார்ந்து தனியாக தான் சாப்பிடுவேன். ஹரி ஹர சுதன், அருண்குமார் ரெண்டு பேரும் என்னை சேர்ந்து உட்கார கூப்பிட்டு சேர்த்து கொண்டார்கள். எப்போதாவது உணவை பரிமாறி கொள்வோம். அவர்கள் இருவரும் டிபன் பாக்ஸ் கழுவ மாட்டார்கள். பரமசிவனிடம் கேட்டு டேப் எங்கே இருக்கிறது என தெரிந்து கழுவி கொண்டேன். அதுவரை வாட்டர் பாட்டில் தண்ணியில் கழுவினேன்.
ஆறாம் வகுப்பு வாத்தியார் என்றால் செல்வின் சார் தமிழாசிரியர் வந்தாலே சிகரெட் வாடை தூக்கும். வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேலும் புகைப்படிப்பார். அறிவியல் ஆசிரியர் மலையப்பன் சார் பெரிய பை கொண்டு வருவார். ஆறாம் வகுப்பிற்கே பத்தாம் வகுப்பு போல கடுமையாக படிக்க சொல்வார். பாலசிங் சார் சமூக அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே அவருக்கு குரல் மாறும்.
வி.ஈ வகுப்பிற்கு ஒரு பிடி சார் வந்து பைபிள் கதைகள் சொல்வார். எல்.ஓ.ஈ வகுப்பிற்கு வரும் செல்வராஜ் சார் ஓரமாக உட்கார்ந்து விடுவார். ஏல பேசாதே என்று எப்போதாவது சத்தம் போடுவார். எங்கள் பள்ளியில் வேட்டி கட்டி வரும் ஒரே ஆசிரியர் அவர் தான். கிராஃப்ட் சார் அதிசய ராஜ் அழகாக கதை சொல்வார். ஏதாவது கைவினை பொருள்கள் செய்ய சொல்லி தருவார்.
டிராயிங் சார் பிரின்ஸ், அவரை பார்த்தாலே எனக்கு பயம். வியாழக்கிழமை ஐந்தாவது பிரியட் டிராயிங். படம் வரைய சொல்லி திருத்தி டார்ச்சர் செய்வார். ஆண்டு முழுக்க ஒரு மாம்பழம் மட்டுமே வரைய சொல்லி தந்தார். அட்டென்ஸ் எடுக்கும் போது பெயரை பெண் பெயராக வாசித்து கிரிஞ்ச் பண்ணி சிரிப்பார். நாங்களும் அதை முரட்டு காமெடியாக நினைத்து சிரிப்போம்.
ஆறாம் வகுப்பில் முதல் மிட் டெர்ம் தேர்வில் நான் நான்காவது ரேங்க். தேர்வு முடிந்த பிறகு தான் தெரியும். ஆங்கில தேர்வில் டிரான்லேசனுக்கு தமிழில் எழுத வேண்டும் என்பது. ஆனாலும் நாலாவது ரேங்க்கை இறுக பிடித்துக் கொண்டேன். ஒருமுறை ஆறாவது ரேங்க்கை தொட்டு பார்த்தேன்.
காக்கி டவுசர் போட்டு அந்த வெஸ்டர்ன் ப்ளாக்கில் பயத்துடனே நுழைந்து வந்த நாட்கள் பசுமையாக மனதில் உள்ளது.
Saturday, 25 January 2025
பத்மபூசனுக்கு
அமராவதியில் ஆரம்பம்
குட் பேட் அக்லி வரை
கலைத்துறையில் நீ படைத்த
வரலாறுக்கு உன்னைத்தேடி
வந்துள்ளது பத்மபூசன்.
விருது பெற இருக்கும்
ஆசை நாயகன் அஜித்ஜிக்கு
விஸ்வாசம் மிக்க ரசிகனின் கடிதம்!
ராஜாவின் பார்வையிலே பட்டுவிட
கல்லூரி வாசலில்
வான்மதி, பவித்ரா என
ரெட்டை ஜடை வயசு பெண்களை
காத்திருக்க வைத்த
மைனர் மாப்பிள்ளை நீ !
காதல் கோட்டையில்
காதல் மன்னாக பிரேம புஸ்தகம்
படித்தவன் நீ !
அவள் வருவாளா
என்னை தாலாட்ட வருவாளா,
என்று காத்திருந்த உன்னிடம்
ஷாலினி சொன்னது,
உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்று
உனது பதில்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று
அன்று முதல் ஷாலினி வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம் உன் வாசம்,
என் வீடு என் கணவர் என்று
பெருமிதம் கொண்ட ஷாலினி
வாழ்வெல்லாம் ஆனந்த பூங்காற்றே !
உனது பகைவன்கள், வில்லன்கள்
உன்னை பழித்த ஊடகங்களுக்கு
ஆஞ்சநேயாவாக வலிமையை
காட்டியது உன் துணிவு !
தெரிந்த கதையை வைத்தே
மாஸ் காட்டியது பில்லா
ராஜா, ஜனா, தீனா, அசோகா, வாலி
பரமசிவன், ஆழ்வார், திருப்பதி
என்ற அடைமொழியுடன்
திரியும் ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம் பெற்றது
பில்லா II !
தொழிலாளர் நலனில்
நீ காட்டுவது நேர்கொண்ட பார்வை
தீங்கான விளம்பரங்களுக்கு
நீ காட்டியது ரெட் கார்டு !
அட்டகாசமாக அமர்க்களமாக
சென்ற நேசம் மிகுந்த
உன் வாழ்வில் உயிரோடு உயிராக
பிறந்த அசல் வாரிசுகள்
அனோஷ்கா & ஆத்விக் !
மற்றவர்கள் உல்லாசமாக
மங்காத்தா விளையாட
நீ தேர்வு செய்து சாதித்தது
துப்பாக்கி சுடும் போட்டியில் !
நீ வருவாய் என
நிறைய தயாரிப்பாளர்கள்
காத்திருக்க உன் சிறுவயது
கனவான ரேஸ்
வேதாளமாய் உன் தோளில்
களத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்றாய்
விடாமுயற்சியால் 53 வயதில்
வென்றாய்
இந்திய சிட்டிசனாய்
பெருமை சேர்த்தாய் !
ஏகன் இறைவன் ஆசியால்
இந்த ஆண்டு உனக்கு
ராசியான ஆண்டு
இங்கிலீஷ் விங்கிலீஷ் நாடுகளில்
இன்னும் பல கிரீடம் சூட போகிறாய் !
என்னை அறிந்தால் உன்
குடும்பத்தை முதலில் கவனி
அதுவே வீரமான விவேகம் என்றாய் !
அதற்காகவே இந்த
பாசமலர்களின் அன்பு
என்றும் தொடரும் !!!
Monday, 13 January 2025
சொந்தங்கள்
அடிக்கடி கோபப்பட்டு
வீட்டை விட்டு செல்லும் தம்பி
ஒசூரிலோ, திருப்பூரிலோ
மும்பையிலோ சென்று
கஷ்டப்பட கூடாதென்று
சாமி உண்டியலில் காசு
போட்டு வைத்திருப்பார்
சித்தப்பா !!!
****
கையில் காசு இல்லை
என்றாலும் கடன் சொல்லி
தங்கச்சி மகனுக்கு
காப்பியோ, கலரோ வாங்கித்
தர முற்படுகிறார்
தாய் மாமா !!!
****
என்ன கேட்டாலும்
அப்பா வாங்கி தருவார்
என்ற நம்பிக்கையில்
பாராசுட் கேட்கிறாள்
மகள் !
எங்கள் இளவரசிக்கு
சிறகு முளைக்க
தொடங்கிவிட்டது !!!
****
புத்தகங்கள் வாசிக்கும் போது
நம் மனைவியும் பெண்
எவ்வளவு கஷ்டங்களை
தாங்கிக் கொள்கிறாள்
என்று சஞ்சலப்படும் மனசு,
பாலை காய்ச்சி தரச்
சொல்லும் போது
புத்தகத்தை தூக்கி எறிகிறது !!!
****
விருப்பு, வெறுப்புகள்
வேறுபட்டாலும் ஏதோ ஒரு
புள்ளி இணைக்கிறது.
சாதி, அரசியல், மதம், கிரிக்கெட், சினிமா
என சண்டையிட சரியான
களம் தான் சந்து !
நேரில் பார்த்திராவிட்டாலும்
அண்ணனாய், நண்பனாய்
நினைத்து மகிழ்ச்சி தருகிறார்கள்
சந்து வாழ் சொந்தங்கள் !!!
****
Tuesday, 7 January 2025
மாறிப் போன திருநெல்வேலி
திருநெல்வேலி நகரில் முக்கிய இடம் சந்திப்பு பேருந்து நிலையம். திருநெல்வேலி காரர்களுக்கு ஜங்ஷன். ஜங்ஷன் என்பது பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே இருக்கும் இடம். அது போக நிறைய புத்தகக் கடைகள், சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி லாலா கடை, இளங்கோ, ருசி புரோட்டா கடை, சாமானியர்களுக்கான பாரதி, வசந்த பவன், அசோகா ஓட்டல்கள். உயர்தர பரணி, ஜானகிராம், ஆர்யாஸ் ஓட்டல்கள், பாரதி, செயின்ட் மேரிஸ் மெடிக்கல்கள் என சகலமும் நிறைந்த இடம். இது ஒரு காலத்தில்.
பேருந்து நிலையத்தை இடித்து மறு கட்டமைப்பு செய்ய போகிறார்கள் என்றதும் மக்கள் நினைத்தது ஆறு மாதத்தில் முடித்து விடுவார்கள் என்று. தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் பொருட்காட்சி திடல் மற்றும் வண்ணார்பேட்டையில் உதயமானது. அதிக பேருந்துகளை கையாண்ட வண்ணார்பேட்டையில் கழிவறை வசதி இல்லை.
பெரிய கஷ்டத்திற்கு உள்ளானது தச்சநல்லூர், தாழையூத்து செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் மக்கள். மாலையில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த பேருந்துகளை நிறுத்த வேண்டி இருந்ததால் ஆம்னி பஸ்களின் அராஜகம் அதிகமாக இருந்தது.
சரி பேருந்து நிலைய கட்டிடத்திற்கு வருவோம். புதிய கட்டிடத்திற்கு தோண்டிய போது அள்ள அள்ள ஆற்று மணல் மற்றும் கனிமங்கள். கட்சி பாராது அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி அள்ளினார்கள் பணத்தை. ஆறு ஆண்டுகளுக்கு பிறகே பேருந்து நிலையம் தயாரானது, பொறியியல் கல்லூரிகளுக்கு உரித்தான கட்டட அமைப்புடன். நிறைய கடைகள், குறைவாக பேருந்து நிறுத்தும் இடம் என்ற அடிப்படையில்.
மக்களே ஜங்ஷனை பயன்படுத்த மறந்த பிறகு ஜங்ஷன் பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் பாளையங்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்த இட வசதி இருந்தாலும், மானூர், தாழையூத்து, பேட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தி செல்ல போதுமான இடவசதி இல்லை. ஆனாலும் சில சேரன்மகாதேவி பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையமான வண்ணார்பேட்டை வரை செல்கின்றன.
பாளையங்கோட்டையில் ஒரு பேருந்து நிலையம் இருந்தது. பேருந்து நிறுத்தம் போல செயல்படும் இந்த நிலையத்தில் ஆற்றுமணல் இல்லை என்றாலும் வேறு ஏதாவது கிடைக்கும் என்று அரசும் அந்தப் பேருந்து நிலையத்தை உடைத்தது.
பொதுவாக அதிக பேருந்துகள் இயக்கப்படும் இடம் அரசு மருத்துவமனைக்கு. அதில் மார்க்கெட் வழி, பாளை பஸ் ஸ்டான்ட் வழி என பேருந்துகள் செல்லும். பாளை பஸ் ஸ்டான்டை உடைத்ததும் அனைத்து பேருந்துகளும் மார்க்கெட் வழி இயக்கப்பட்டன. சவேரியார் கல்லூரிக்கு பேருந்தே இல்லை என்ற நிலை. பாளை பேருந்து நிலையம் திறக்கப்பட்டது, ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகள் நிற்கும் வசதி கொண்ட பேருந்து நிலையம், ஒரே ஒரு பேருந்து நிற்கும் வசதியுடன், புதுப்பொலிவுடன்.
ஆனாலும் அரசு மருத்துவமனைக்கு பாளை பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் மாற்றப்படவில்லை. யாரும் கண்டுகொள்ளவுமில்லை. தனியார் பேருந்துகளுக்கு சமாதானபுரம் ஒரு முக்கிய நிறுத்தம், தூத்துக்குடி, திருச்செந்தூர் பேருந்துகளில் வருபவர்கள் நகரத்துக்குள் செல்ல சமாதானபுரம் முக்கிய இடம். அதனால் அவர்கள் பாளை பஸ் ஸ்டான்ட் வழிக்கு மாறவே இல்லை.
தனியார் பேருந்துகள் இன்னொரு மாற்றமும் செய்துள்ளனர். அது என்னவென்றால் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 10 ரூபாய், யாராவது விளக்கம் கேட்டால் 8 ரூபாய். அரசு நிர்ணயித்த 6 ரூபாய் கட்டணம் கிடையாது.
அரசு போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா? ஜங்ஷன் பேருந்து நிலையம் இயங்கவில்லை என்றதும் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள் மட்டுமே. பாளை பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள்.
நிறைய கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் காலியாக சென்றன. இதில் மகளிர் இலவசமும் சேர்ந்ததில் திக்குமுக்காடியது போக்குவரத்து கழகம். புதிதாக ஒரு வியூகம் செய்தது. அனைத்து பேருந்துகளின் தடம் எண்ணும் மாற்றப்பட்டது (2-o, 1-i போன்ற தடம் எண்கள் யார் சிந்தனையில் உதயமானது என்று தெரியவில்லை). டிஜிட்டல் பெயர் பலகை வந்தது. ஒரு பேருந்து ஒருமுறை ஒரு கிராமத்திற்கு சென்று வந்த பின் வேறு இடத்திற்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டது. கிராமங்களுக்கு வேறு வேறு பேருந்துகள் செல்லும் எத்தனை முறை என்பதில் தான் டுவிஸ்ட். 5 முறை இருந்த பேருந்துகள் 3-4 என்று ஆனது.
இதில் முக்கியப் பிரச்சினை எல்லா பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டனர். ஸ்டிக்கர் வேறு பெயர் பலகை வேறு என்பதில் பெரும் குழப்பம். நெல்லை சந்திப்பு - முத்தாலங்குறிச்சி என்று ஸ்டிக்கர் இருக்கும் பேருந்து எஸ்டிசி கல்லூரி செல்லும்.
நகரும் எழுத்துகள் இருப்பதால் குறுகிய நேரத்தில் பெயர்ப்பலகையை படிப்பது சிரமம். மகளிர்க்கு பிரச்சினை இல்லை அடுத்த நிறுத்தி இறங்கி கொள்ளலாம். இலவச பேருந்து தானே. ஆண்கள் நிலைமை பாவம்.
திருநெல்வேலி நகரில் முக்கிய இடமாக இருந்த ஜங்ஷனும், பாளை பஸ் ஸ்டான்ட்டும் போய் முக்கிய இடமாக வண்ணார்பேட்டையும், சமாதானபுரமும் மாறிவிட்டது.
இருசக்கர நான்கு சக்கர வாகன பெருக்கத்தால் பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. அதற்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வியூகத்தை மாற்றியுளனர்.
Friday, 18 October 2024
அழகானவன்
X தளத்தில் உங்களை பின்தொடர்பவர்களில் அழகானவர் யார் என்று ஒருவர் கேட்டு இருந்தார். சட்டென்று என் மனதில் உதயமானது சரண் மாம்ஸ் தான்.
சரண் மாம்ஸ் அழகானவரா?
ஆண்களில் அழகென்பது முகவெட்டில் அல்லது சிவப்பு தோலில் இல்லை. ஆண்களின் அழகு அவர்களின் பர்சனாலிட்டியில் தான் உள்ளது. அதனால் தான் கருப்பாக இருந்தாலும் ரஜினிகாந்த்தும், விஜயகாந்த்தும் அழகானவர்கள் என்று நண்பன் தினேஷ் கல்லூரி காலத்தில் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.
ஆணழகன் போட்டியில் உடல் வலிமையை காட்டி வெல்லலாம். ஆனால் மனவலிமை உடையவர்கள் தான் உண்மையான ஆணழகன்.
சரி சரண் மாம்ஸ்க்கு வருவோம். திருநெல்வேலி மழைகாலத்தில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். முதலில் பார்த்தப்ப "யார்டா இவன்" என்று நினைத்தேன். "யார் சாமி இவன்" என்று நினைக்க வைத்தார் மனுசன்.
அவருடைய சந்திப்புக்கு வருவோம். போன் நம்பர் வாங்கியவர், திடீரென ஒருநாள் போன் பண்ணி மீட் பண்ணலாமா என்றார். அன்றே மீட் பண்ணோம்.
கருப்பு நிறம், முடி கொட்டிய தலை, வெள்ளை மனசுடைய ஒருவருடன் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நிறைய பேசினோம், எனக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்தார்.
சமூகப் பணிகளில் முழு ஈடுபாடு, பயணங்கள், குடும்பம் என நிறைய பேசி புத்தகங்களில் வந்து நிறுத்தினோம்.
தனது நேரத்தில் பாதியை சமூக பணியில் ஈடுபடுத்தி, அதற்காக பலரையும் தொடர்பு கொண்டு உதவிகளை செய்து வரும் சரண் மாம்ஸ் அழகானவர் என்பதில் என்ன சந்தேகம்.