11 பி பிரிவு தான் பர்ஸ்ட் க்ரூப் தமிழ் மீடியம் கிளாஸ். முதல் முறையாக 110 பேர் இருந்த வகுப்பில் நானும். 10வதில் ஒன்றாக திரிந்த எங்கள் குழுவில் விஜயகுமார் மற்றும் சதீஷ்குமார் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். சுரேஷ் அக்கவுடன்சி & ஆடிட்டிங் க்ரூப் எடுத்தான்.
விடுதியில் ஏற்கனவே பழக்கமான எஸ் எஸ் முருகன், பிரபு பிளசிங், வேல் முருகன், கிங்ஸ்லீ, சுடலை முத்து, பிரசாத், ஆனந்த ராஜ், ஜோதி ராஜ்,
ஆகியோர் ஒரே வகுப்பில். இதில் பிரசாத் மட்டுமே கம்பியூட்டர் சயின்ஸ். இது போக புதிதாக விடுதிக்கு வந்தவர்கள் மகாராஜன், பன்னீர்செல்வம், பிரேம் குமார், ராபின் ஸ்டீபன், பாலசுப்பிரமணியன், யாசிர் அரபாத், மகேந்திர சிங், ஜெயக்குமார், ஜேம்ஸ் ஆகியோர்.
இதில் மகேந்திர சிங், ஜெயக்குமார், ஜேம்ஸ் ஆகியோர் கம்பியூட்டர் சயின்ஸ். மகேந்திர சிங் தான் எனக்கு ரொம்ப நெருக்கம். 11த்ல் அதிகம் சண்டை போட்ட நாங்கள் 12த் விட்டு கொடுத்து போக ஆரம்பித்தோம்.
முதல் நாளில் எல்லாரும் சுய அறிமுகம் செய்த போது நான் எதிர்பார்த்த ஒரு பெயர் சக்தி பரமேஸ். அவன் விஜயகுமாருக்கு ப்ரெண்ட் என்பதால் ஏற்கனவே தெரியும். ஆனால் பார்த்தது இல்லை. அவனும் என்னை எதிர்பார்த்து இருப்பான்.
பத்தாவது படிக்கும் போதே 11வது நன்றாக விளையாட தோதாதனது என்று நாங்கள் எல்லாருமே முடிவு செய்தது தான். அதனால் 11வது யாரும் பெரிய அளவில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. தமிழாசிரியர் வருவார் போவார் நாங்கள் வகுப்பில் பேசிக்கொண்டே இருப்போம். ஆங்கில ஆசிரியர் கொஞ்சம் கண்டிப்பு, சிகரட் பிடிப்பது போல சாக்பீஸை பிடிப்பது அவரது ஸ்டைல்.
கணக்கு ஆசிரியர் பண்டாரம் சார் நன்றாக நடத்துவார் (இது 12ம் வகுப்பில் வேறு ஆசிரியர் வந்த போது தான் எங்களுக்குத் தெரியும்). ஆனால் அவர் முகத்தில் சிரிப்பு என்பதே வராது. இயற்பியல் ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன் அருமையாக பாடம் நடத்துவார், எல்லாருக்கும் புரியும் படியாக.
வேதியியல் ஆசிரியர் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் ஆசிரியர் (கோரோனாவில் காலமாகிவிட்டார்) நடத்தியது எதுவும் புரிந்தது இல்லை.
நாங்கள் முதலில் NSSல் (நாட்டு நலப்பணித் திட்டம்) சேர்ந்தோம். NSS சார் ஸ்டீபன் அசரியா எங்காவது கூட்டிப் போய் வேலை செய்ய சொல்வார். அதிக வேலை என்றால் டீ, வடை கிடைக்கும். எங்கள் பள்ளியில் தண்ணீர் தேங்கி இருக்கும் வழிபாட்டு மைதானத்தை நாங்கள் மண் நிரப்பி ரோலர் வைத்து சமப்படுத்தி சீர் அமைத்தது. அதற்குப் பிறகு அதில் பால் பேட்மிட்டன் விளையாட ஆரம்பித்தார்கள்.
NSS கேம்ப் மல்லக் குளத்தில் 10 நாட்கள் நடந்தது. எங்கள் பள்ளியும், சங்கர் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய முகாம். மல்லக்குளம் கிராமத்தைப் பொறுத்தவரை மொத்தமே இரண்டு தெருக்கள் தான் இருந்தது. ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு சர்ச் இருந்தது.
அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் காலியாக இருக்க அதில் தங்கினோம். காலை 5.30க்கு எழுந்து கொள்வோம், ஊர் விழிக்கும் முன்பாக எங்காவது காலைக்கடன் முடிக்க வேண்டும். ஊரில் ஒரு அடி பம்ப் இருந்தது. நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு பின்னால் ஒரு கிணறு உண்டு. இதில் எதிலாவது குளியல்.
8.30 மணிக்கு சாலை சீரமைப்பு பணி. மல்லக்குளம் - புதுக்குளம் வரை நாங்கள் தான் சீரமைத்தோம். மாலையில் ஏதாவது நிகழ்ச்சி நடக்கும் அல்லது பஞ்சாயத்து டிவியில் படம் போடுவார்கள். ஒருநாள் வானொலி நிலையத்தில் இருந்து பிச்சுமணி வந்து சொற்பொழிவு ஆற்றினார். சமுத்திரம் படம் ஒருநாள் போட்டார்கள்.
விடிய விடிய... பாடலை கார்த்திக் ராஜா மாத்தி பாட, அதை சங்கர் ஸ்கூல் ஆசிரியர் கேட்க, மறுநாள் எங்களுக்கு கடும் வேலை. சாஸ்தா கோயில் எதிரில் சரிந்திருந்த சாலையை சரி செய்தோம்.
முகாம் நேரத்தில் பண்டாரம் சார் வகை நுண் கணிதம் நடத்தி முடித்து விட்டார். எங்களுக்கு எதுவும் தெரியாது. அதற்குப் பிறகு 10 நாட்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது.
12ம் வகுப்பு வந்ததும் வாலை சுருட்டி படிக்க ஆரம்பித்தோம். பதினொன்றாம் வகுப்பில் கடைசிக்கு முந்தைய பெஞ்சில் இருந்த நான், முதல் பெஞ்சிற்கு மாறிவிட்டேன். வேதியியல், கம்யூட்டர் இரண்டிற்கும் டியூசன் சேர்ந்தேன். மகேந்திர சிங் வெறித்தனமாக படிப்பான். பல நாட்கள் விடுதிக்குள் வராமல் ஸ்டடி வகுப்பறையில் இருந்து விடுவான்.
கணக்கு தான் எங்களுக்கு பெரிய பிரச்சினை புதிய ஆசிரியர் டேனியல் பெரிய அளவில் சொல்லி தருவதில்லை. அதில் மாட்டிக் கொண்டோம். நான், சிங், பிரசாத் மூவரும் தெற்கு பஜாரில் ஒரு கம்யூட்டர் சென்டரில் டியூசன் படித்தோம். விடுதியில் சிறப்பு அனுமதி என்பதால் ஜாலியாக போய் வந்தோம்.
எங்களுக்கு பொது தேர்வு ஆரம்பிக்க உலகக் கோப்பையும் ஆரம்பித்தது. இதில் நாங்கள் நுழைவு தேர்வுக்கு வேறு படிக்க வேண்டும். குறைவான கட்டணத்தில் பயிற்சி அளித்த சேவியர் பள்ளியில் சேர்ந்தோம் நுழைவு தேர்வு வகுப்பு.
நுழைவு தேர்வுக்கு எல்லாருக்கும் ஒரே தேர்வு மையம் வேண்டுமென்று எட்டு பேர் மொத்தமாக போய் விண்ணப்பித்தோம். எல்லாருக்கும் வேறு வேறு மையங்கள் வந்தது. எனக்கும் பிரேம்க்கும் நடக்கும் தூரத்தில் இருந்த சதக் அப்துல்லா கல்லூரி.
டிசி வாங்கிய பிறகு பள்ளிப் பக்கம் போகவே இல்லை. செல்போன் நுழைந்திராத காலம் அது. நான் மகேந்திர சிங்கிற்கு சில கடிதம் எழுதினேன். பதிலில்லை. பிளசிங் எனக்கு சில கடிதங்கள் எழுதினான். பிறகு அவனுக்கும் சூழல் சரியில்லை.
கல்லூரியில் சேர்ந்த பிறகு புது பஸ் ஸ்டான்டில் டேய் பழனி என்று யாரோ கூப்பிட திரும்பி பார்த்தேன் பிளசிங் நின்றான்.


No comments:
Post a Comment