சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல், மலிவு பதிப்பாக பாரதி புத்தகாலயம் 300 ரூபாய்க்கு வெளியிட்டது. சீர் வாசகர் வட்டம் அது கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அப்படி கிடைத்தது தான் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்.
900 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு நூலுக்கு எத்தனை புத்தகங்கள் வாசித்திருப்பார், எத்தனை ஆண்டுகள் குறிப்பு எடுத்திருப்பார் என்பது வியக்க வைக்கிறது.
ஆய்வு நூல் என்றாலும் சுவராஸ்யம் குறையாமல் வாசிக்க முடிகிறது என்பது தான் இதன் சிறப்பு. வ வே சு ஐயர் தொடங்கி அணைத்து தமிழ் சிறுகதை எழுத்தாளர் கதைகளையும் பற்றி எழுதியுள்ளார். ஒவ்வொரு எழுத்தாளரின் பாணி, அவரது சிறப்பு, நடை ஆகியவற்றை எழுதியதோடு அந்தந்த எழுத்தாளர் தொடாத களங்கள், அவர் குறித்த விமர்சனங்களையும் வைத்துள்ளார்.
கிரா குறித்து அதிகப் பக்கங்கள் எழுதி இருந்தாலும் கிரா தலித் குறித்து எழுதவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ஒவ்வொரு எழுத்தாளரும் எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளனர் என்று ச. தமிழ்ச்செல்வன் சொல்வதில் புரிகிறது அவரது உழைப்பு. எத்தனை கதைகள் கிடைக்கவில்லை என்பதையும் சொல்கிறார்.
சிறுகதைகளின் தடங்கள் முதல் 50 ஆண்டுகள் என்பதால் சமகால எழுத்தாளர்கள் முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெருமாள் முருகன் போன்றோர் இளம் பெறவில்லை.
இந்தக் கட்டுரை நூலில் இடம் பெற்றவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் இலங்கை, மலேஷியா மற்றும் பிற நாட்டு தமிழ் எழுத்தாளர் குறித்து எதுவும் இடம் பெறவில்லை.
பெரிய புத்தகம் நிறைய இடங்களில் ஒரு எழுத்தாளர் குறித்து இன்னொருவர் சொன்னதை "மேற்கோள்" காட்டியுள்ளார். இந்த மேற்கோள் சரியாக அமையவில்லை சில இடங்களில் இவர் சொல்வதா வேறு ஒருவர் சொன்னதா என்பதை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
நிறைய இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளது. அவர் எழுதியதில் பிழை இல்லை, தட்டச்சு செய்ததில் ஏற்பட்ட பிழை என்பது தெளிவாக தெரிகிறது. தட்டச்சு விசயத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் சாராம்சம் குறித்த நுண்ணிய தகவல்களை கூட தரும் தரமான புத்தகம் இது.

No comments:
Post a Comment