Wednesday, 17 July 2024

நண்பர்கள்

இறந்துவிட்ட நண்பனின்

அலைபேசி எண்ணை

யாரோ பயன்படுத்தக் கூடும்

மன அழுத்ததோடு

அவன் எண்ணை குழுவில் 

இருந்து நீக்கினேன்.

அவனின் நினைவுகள்

ஆழ்மனதில் கொட்டி

கிடக்கிறது !!!

***

பள்ளி நண்பனின் 

அலைபேசி எண் கிடைத்தது 

பல ஆண்டுகள் கழித்து 

என்ன பேசுவான்

எப்படி பேசுவான்

என்ற தயக்கம் இருந்தது.

எனதழைப்புக்கு சொல்லு மாப்ள 

என்று பதில் சொல்லி

என்கரம் பற்றி‌ பாளையங்கோட்டை 

பள்ளிக்கூடத்திற்கே

கூட்டிச்சென்று விட்டான் !!!

***

கல்லூரி நண்பர்கள் 

ஆண்டு பல கடந்து

சந்தித்தோம்

நரையளவு, தொந்தியளவு 

குறித்து சிரித்து கொண்டோம்.

கல்லூரியின் இருக்கைபோல்

அமர்ந்து புகைப்படம் 

எடுத்துக்கொள்ள முனைந்த போது

ஒரு நண்பன் எழுந்து கொண்டான்.

நான் நடு இருக்கையில் இருந்தது

கிடையாது என...

நட்புக்கேது நரை !!!

***

ஒரு கோப்பை தேனீரோடு

ஒரு மணி நேர சந்திப்பு

கல்லூரி நினைவுகளை 

அசை போட்டு

கண்ணீர் மல்க சிரித்து

மகிழ்ந்தோம் நண்பர்கள் 

அலைபேசியும் மகிழ்ந்திருக்கும் 

அதை மறந்திருந்ததால் !!!

***

அலுவலகம் மாறிய பின்

பழைய அலுவலக நண்பர்களிடம் 

முதல் முறையாக நலம் விசாரிப்பு

தொடங்கியது.

அலைபேசியில் அலுவலக

அரசியல்களம் நீளும்.

என்றாவது சந்திக்க,

பேச்சு எழும்.

அடுத்த தேவை ஏற்படும் போது 

அடுத்த அழைப்பு இருக்கும்

அதுவரை அலைப்பேசி 

குழுவிலும் நிசப்தம் 

தான் நீளும் !!!


1 comment:

  1. நல்லதொரு பதிவு... அலுவலகம் பற்றிய தகவல்கள் மிகவும் கச்சிதமாக பொருந்தும்.

    ReplyDelete