மழை காட்டிய மாந்தர்கள்
அவர்கள் வீட்டில் தண்ணீர்
புகுந்த நிலையில்
நடுராத்திரியில் கருப்பு
தேனீர் தயாரித்த
தந்த வீட்டு உரிமையாளர்
நல்ல மனத்தை காட்டியது
மழை!
புன்னகைக்க மறுத்து
செல்லும் பக்கத்து
வீட்டுகாரனின் குரலை
காட்டியது மழை!
தினமும் பால் வாங்கினாலும்
இன்று கூடுதல் விலை
என்று கூறிய அண்ணாச்சியின்
வியாபார தந்திரத்தை
காட்டியது மழை!
****
மழை நாட்கள்
அக்காவின் திருமணத்தன்று
கொட்டித்தீர்த்ததொரு மழை!
அலுவலகம் முடிந்து
வரும் போது காலணியையும்
காலுறையையும் காலி
செய்ததொரு மழை!
புயல் கரையை
கடக்கும் காட்சிகளை
காட்டியதொரு மழை!
மகளின் பிறந்தநாளுக்கு
அணிச்சல் வாங்க
அலைய விட்டதொரு மழை!!!
****
தேவைகள்
தூறல் ஆரம்பித்தால்
பால், மாவு, மெழுகுவர்த்தி
பிஸ்கட், ரவை வாங்கி
வைக்க வேண்டும்!
வாகனத்தை உயரமான
இடத்தில் நிறுத்த வேண்டும்!
அலுவலக நண்பர்களிடம்
அவர்களின் பகுதியில்
மழை நிலவரம்
கேட்க வேண்டும்!
தண்ணீர் தொட்டியை
நிரப்ப வேண்டும்!
கடையை மூடும் முன்
வாங்கி வைக்க வேண்டும்!!!
****
மழை அறிகுறி
தாத்தா சொல்வார்
நிலவைச் சுற்றி கோட்டை
கட்டியுள்ளது மழை வரும் என்று!
அம்மா சொல்லாங்க
ஈசானி மூலையில்
மின்னல் வெட்டுகிறது
மழை வரும் என்று!
மகள் சொல்கிறாள்
அரசின் ஆரஞ்ச் அலர்ட்
மழை வரும் என்று!!!
****
மாமழை
பள்ளி காலத்தில்
மின் துண்டிப்பு
செய்து நாள் முழுக்க
பொழிந்தது மாமழை!
வீட்டை சுற்றிலும்
தவளைகளின் குரலோசை!
வீட்டிற்கு மேற்கில்
இருக்கும் வேப்பமரம்
எப்போது வேண்டுமானாலும்
விழலாம் என்பது
அம்மாவின் பயம்!
மறுநாள் செந்நிறத்தில்
நுரையோடு சென்றது
சிற்றாறு!
வீட்டு மாடியில் இருந்தே
பார்த்தேன்
தேவையான மணலை
வழங்கிவிட்டு தடமற்று
கிடக்கிறது சிற்றாறு!!!
****
நிவாரணம்
நாள் முழுக்க பெய்த
மழை மேட்டுப் பகுதியை
எதுவும் செய்யவில்லை!
ஆற்றை நம்பி கரையோரம்
இருப்பவர்களின்
ஆடு, மாடுகளுக்கு
கடலை காட்டியது ஆறு!
மேட்டு குடியினரும்
கூச்சமில்லாமல் பெற்றுக்
கொண்டனர்
நிவாரணத் தொகை!!!
****
ரசிப்பு
இளையராஜா பாடல்கள்!
ஒரு கோப்பை தேநீர்!
ஆடையோடு நனைதல்!
கொட்டும் அதன் புகைப்படமென
மழையை ரசிக்கலாம்!
மழை தரும் கோரங்களை
காணாமல் இருக்கும் வரை!!!
No comments:
Post a Comment