Saturday, 13 September 2025

தியேட்டரைத் தேடி

 திருநெல்வேலியில் கண்டுபிடிக்க கடினமான தியேட்டர்கள் என்றால் பேரின்பவிலாஸ், அருணகிரி மற்றும் சிவசக்தி மட்டுமே. ரத்னா & பார்வதி, சென்ட்ரல், ராயல், ராம் & கலைவாணி என்று பேருந்து நிறுத்தங்கள் உண்டு. 

நாங்கள் நாகர்கோவில் சென்ற போது நாகர்கோவிலில் மூன்று தியேட்டர்கள் மட்டுமே உருப்படி. ராஜேஷ் வடசேரி பஸ் ஸ்டாண்ட் அருகில். கார்த்திகை இதுவும் அதற்கு அருகில். ஒரே காம்ப்ளக்ஸில் சக்ரவர்த்தி & மினி சக்ரவர்த்தி இவை தான். 



தங்கம் தியேட்டர் படு மோசமாக இருக்கும். யுவராஜ் பழைய படங்கள் தியேட்டர். பயோனியர் வசந்தம் பேலஸ் அப்போது மூடி இருந்தார்கள். 

முதல் முறையாக படத்துக்கு போனது ராஜேஷ் தியேட்டரில் திருடா திருடி பார்த்தோம். அதை முடித்து விட்டு சக்ரவர்த்தியில் பாய்ஸ் பார்க்க நினைத்தோம். 

வடசேரி பேருந்து நிலையத்தில் நிறைய பேருக்கு சக்ரவர்த்தி தியேட்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கண்டக்டர்களிடம் கேட்டால் மீனாட்சி புரம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என்று மட்டுமே சொன்னார்கள். 

ஒருத்தர் மட்டுமே செட்டிகுளம் ஜங்ஷனில் தியேட்டர் இருப்பதாக சொன்னார். (திருநெல்வேலியில் சொல்லப்படும் விலக்கு தான் நாகர்கோவிலில் ஜங்ஷன் என்பது பின்னாளில் தெரிந்தது). ஒரு வழியாக வடசேரியில் இருந்து பார்வதிபுரம் - பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் போய் படம் பார்த்தோம். 

அடுத்த முறை போகும் போது தக்கலை முத்தமிழ் தியேட்டரில் காக்க காக்க என்று போஸ்டர் பார்த்தோம். ராஜேஷ் தியேட்டரில் பிதாமகன் பார்த்துவிட்டு தக்கலை வந்தோம். தியேட்டரை விசாரித்து போன போது உயிரின் உயிரே பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. ஏழு பேரில் முன்னால் ஓடிய செல்வநாதன் படம் ஆரம்பிச்சுட்டான் என்றான். கவுண்டரில் போய் செல்வநாதன் கேட்டு, பர்ஸ்ட் க்ளாஸ் தான் இருக்கான் என்றான். எல்லாரும் பாக்கெட்டை துழாவ "மச்சி டிக்கெட் 7 ரூபாய்யாம் நானே எல்லாருக்கும் எடுத்துருறேன் என்றான் செல்வா".

உள்ள போய் உட்கார்ந்தால் சாய்வதற்கு வசதியாக இருந்த மர பெஞ்ச் நன்றாக இருந்தது. ஆனால் ஜோதிகா குரல் ஆண் குரலில் இருந்தது. பிறகு தான் தெரிந்தது தியேட்டர் ஸ்பீக்கரில் பாட்டு மட்டுமே நன்றாக கேட்கும் என்று. வசனமாடா முக்கியம் போன்ற படங்களுக்கு ஏற்ற தியேட்டர். வாரத்தில் இரண்டு நாட்கள் வசனம் முக்கியமில்லா படங்கள் ஓடும் தியேட்டர் என்பது பின்னாளில் தெரிந்தது. 

குழித்துறை லட்சுமி தியேட்டர் பஸ் ஸ்டாப் பக்கத்தில் தான். அங்கே ஆட்டோகிராப் படத்திற்கு முதல் முறையாக போன போது பர்ஸ்ட் கிளாஸ் 12 ரூபாய் என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. குறைந்த கட்டணத்தில் படம் பார்க்க நல்ல தியேட்டர் குழித்துறை லட்சுமி. மார்த்தாண்டம் ஆனந்தும். 



அதனால் எங்களது முதல் தேர்வு மார்த்தாண்டம் மற்றும் குழித்துறையே. வரலாறு படம் பார்க்க அதையும் தாண்டி களியக்காவிளை ரிச்சு தம்மின்ஸ் சென்றோம். தீபன் ஏற்கனவே போனதால் வழி காட்டி அவன் தான். 

போபாலுக்குஇண்டர்வியூக்கு போகும் போது காலையிலே சென்னை வந்துவிட்டோம் நானும் முத்து சங்கரும். இரவு 12 மணிக்கு அடுத்த ரயில், பகலில் இரண்டு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது சென்னையில் எங்களுக்கு தெரிந்த இடம் அயனாவரம் மட்டுமே. அபிராமியில் ஒரு படம் பார்த்துவிட்டு அயனாவரம் ராதா தியேட்டரை தேடி அலைந்து அடுத்த படம் பார்த்தோம். 

வேளச்சேரியில் பக்கத்து ரூம் வக்கீல் முருகனோடு அலைந்து கண்டுகொண்டது ஆலந்தூர் எஸ்கே தியேட்டர். பக்கத்து ரூம் கார்த்தி பில்லா முதல் காட்சிக்கு கூட்டிச் சென்றது ரெட்ஹில்ஸ் லட்சுமி தியேட்டருக்கு. 

சென்னையில் தியேட்டர் கண்டுபிடிப்பது அதற்கு எந்த பஸ் போகும் என்று கண்டுபிடிப்பதில் சன்குமார் கில்லி. அடையார் கணபதி ராம் தியேட்டருக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் கூட்டி சென்றவன் அவனே. 

சத்யம் தியேட்டரில் டிக்கெட் எடுப்பது குதிரை கொம்பு என்பதால் உட்லண்ட்ஸ் தியேட்டரில் பில்லா போனோம். படம் முடிந்து வரும் போது தி. நகரில் சன் குமாருக்கு ஒரு அவசர அலுவல் இருந்ததால் உட்லண்ட்ஸ் தியேட்டர் எதிரில் தி. நகர் பஸ் ஏறினோம். அது திருவல்லிக்கேணி போகும் பஸ் என்பதால் இறக்கி விடப்பட்டோம்.  சென்னையில் வழி மாறுவது இரண்டாவது முறை. 







No comments:

Post a Comment